Thursday, November 21, 2019

ஜோக்கர் - அறத்தின் உதிரி நாயகன்






பழைய தமிழ் சினிமாக்களில், குறிப்பாக எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் இப்படிப்பட்ட காட்சி ஒன்று கண்டிப்பாக வரும். எளிய சமூகத்தைச் சார்ந்த சிலர் வில்லனால் பயங்கரமாக கொடுமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களில் ஒருவர் துயரம் தாங்காமல் 'இதையெல்லாம் கேட்கறதுக்கு ஒருத்தன வராமயா போயிடுவான்' என்று கழிவிரக்கத்துடன் சொல்லும் போது நாயகனின் ஆரவாரமான வருகை நிகழும். அவன் வந்து வில்லனையும் அவனது ஆட்களையும் அடித்து வீழ்த்துவான். ஹீரோவின் அறிமுகக்காட்சியே பெரும்பாலும் இவ்வாறுதான் உருவாகும்.

இவ்வாறான தேய்வழக்கு காட்சிகள் இப்போது பெரும்பாலும் இல்லையென்றாலும் வேறு வேறு வகைகளில் அவதார நாயகர்களின் மிகையான அலட்டல்கள் இந்த பாணியில்தான் நீடிக்கின்றன. 'இதையெல்லாம் கேட்க யாராவது வர மாட்டாரா' என்பது திரையில் மட்டுமே ஒலிக்கும் குரல் அல்ல. அதிகார வர்க்கங்களால் நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எளிய சமூகத்தைச் சார்ந்த பார்வையாளர்களின் குரலும் கூட. ஏறத்தாழ எல்லோரின் மனதிலும் தம்மை இப்படி துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கான அவதார நாயகர்களுக்கான தேடல் அரசியல், ஆன்மீக நோக்கில் இருந்து கொண்டேயிருக்கிறது. இந்த ஏக்கத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில நடிகர்கள் குறுக்குவழியின் மூலம் அதிகார தளங்களை அடைவதற்கான கனவுகளில் ஈடுபடுகிறார்கள். அதில் சிலர் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள்.

இவ்வாறு எளிய மக்களை காப்பாற்ற வருவது புஜபலபராக்கிரமுள்ள ஆக்ஷன் நாயகர்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அந்த சாகசங்கள்  பெரும்பாலும் புனைவு சார்ந்த கதையாடல்களாகத்தான் இருக்கும். ஆனால் உடல் வலிமையால்  அல்லாது தன்னுடைய கோமாளித்தனம் கலந்த  சாதுர்யத்தாலும் புத்திசாலித்தனத்தாலும் போராட்டக் குணத்தினாலும், தலைமைப் பண்பினாலும்  சிலர்  நிஜத்தில்  மக்களின் துயரங்களுக்காக போராட முன்வருவார்கள். அஹிம்சை எனும் புதிய கோண போராட்டத்தைக் கண்டுபிடித்த காந்தி மாதிரியான அரசியல் போராளிகள் ஆளுமைகள் ஒருவகை.

இந்தப் போராட்டங்களை நகைச்சுவை எனும் ஆயுதத்தைக் கொண்டு கையாள்பவர்கள் வேறு வகையாக இருப்பார்கள். மன்னர் காலங்களில் அரசவைகளில் இப்படியான புத்திசாலியான கோமாளிக்ள் இருந்தார்கள்.  அரசருக்குப் பயந்து கொண்டு இதர அமைச்சர்கள் சொல்லத் தயங்கும், மழுப்பும் விஷயங்களை இவா்களை புத்திசாலித்தனமான நகைச்சுவையுடன் சாதுர்யமாக மன்னருக்கு எடுத்துரைப்பார்கள். தெனாலிராமன், பீர்பால் என்று வெவ்வேறு காலக்கட்டங்களில், பிரதேசங்களில் இம்மாதிரியான நபர்கள் இருந்தார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, ஐரோப்பாவின் முதல் நவீன நாவலான, செர்வான்ட்டிஸ் எழுதிய டான் க்யோடே என்கிற புதினம் இவ்வகைப்பட்டது. தாம் வாசித்த புனைவுகளைக் கொண்டு மாறிவரும் உலகின் யதார்த்தத்தை உணராமல்  டான் க்யோடே செய்யும் பயணங்களின் நகைச்சுவைக் கதைகள் யதார்த்தத்திற்கும் கற்பனாவாத லட்சியங்களுக்கும் இடையில்  அல்லாடும்  மனதின் அவஸ்தைகளை விவரிக்கிறது. ஜார்ஜ் ஆர்வெல்லின் 'விலங்குப் பண்ணை'' போன்று பல அரசியல் அங்கதப் புனைவுகள் பிறகு உருவாகின. அரச பயங்கரவாதத்தின் கொடுங்கோல்களை இவை பூடகமான நகைச்சுவையில் கடுமையாக விமர்சித்தன.

***

சினிமா எனும் ஊடகத்தின்  துவக்க காலக்கட்டத்தில் இந்த வகையிலான சிறந்த உதாரணமாக சார்லி சாப்ளினை சொல்லலாம். ஹிட்லர்,  முஸோலினி போன்ற கொடூரமான சர்வாதிகாரிகளின் ஃபாஸிஸ செயல்களைக் கண்டு உலகமே நடுங்கிக் கொண்டிருந்த வேளையில் ஹிட்லரை பகடி செய்து அவர் இயக்கிய The Great Dictator பலத்த வரவேற்பைப் பெற்றது. ஃபாஸிஸத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட முதல் நகைச்சுவைத் திரைப்படம் இது.

தமிழ் திரைப்படயுலகில் சோ இயக்கிய 'முகம்மது பின் துக்ளக்', பாலச்சந்தரின் 'அச்சமில்லை, அச்சமில்லை, போன்ற திரைப்படங்களைச் சொல்லலாம். 'இந்தியன் தாத்தா' வணிக மசாலாவின் தளத்திற்குள் இயங்கிய ஒரு படைப்பு. அமீர்கானின் PK  மற்றும் Peepli Live என்று சமகால  இந்தி திரைப்பட உதாரணங்களும் உள்ளன.இவ்வாறான அரசியல் அங்கதப் புனைவுகள், திரைப்படங்கள்  அதிகார தளத்தில் எரிச்சலோடும் வெறுப்போடும் பார்க்கப்பட்டாலும் இதன் உள்ளர்த்தம் உணர்ந்த பொதுமக்களால் ஆரவாரமாக வரவேற்கப்படுகிறது. அதிகாரத்திற்கு எதிராக எவ்வித குரலையும் எழுப்ப முடியாத, அதற்கான வெளிகள் கிடைக்காத சாமான்ய மக்களின் மனப்புழுக்கங்களை இது போன்ற புனைவுகள்தான் ஆற்றுப்படுத்துகின்றன; எதிரொலிக்கின்றன. இன்னொரு வகையில் அதிகாரத்தின் மீதான இவர்களின் சமூகக் கோபங்கள் சற்று தணிந்து போகும் விபத்துக்களும் இவ்வகை புனைவுகளால் உருவாகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். அது சமூக மனங்களில் உள்ள பலவீனங்களின் குற்றமே ஒழிய படைப்புகளின் குற்றமல்ல.

இந்த வகையில்  தமிழ் சினிமாவில் சமீபத்தில் உருவாகியிருக்கும் அரசியல் அங்கத திரைப்படம் 'ஜோக்கர்'. தமிழ் கலாசாரத்தை வளர்க்க தமிழக அரசு ஏற்படுத்தியிருக்கும் உன்னதமான ஏற்பாட்டின் படி ஆங்கிலத் தலைப்பை தவிர்த்திருந்தால் இத்திரைப்படம் சாமர்த்தியமாக வரிவிலக்கு பெற்றிருக்கலாம். இயக்குநர் தலைப்பிலேயே தம் கலகத்தை துவங்கி விட்டார் போலிருக்கிறது.

இதில் வரும் பிரதான பாத்திரமான 'மன்னர் மன்னர்' தன்னை இந்திய நாட்டின் ஜனாதிபதியாக உருவகித்துக் கொண்டு பல சமூக அநீதிகளை தட்டிக் கேட்கிறது. அதற்காக பல விநோதமான போராட்டங்களை நிகழ்த்துவதன் மூலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க முயல்கிறது. ஆனால் வழக்கம் போல் பெரும்பான்மை சமூகம் இவரை கேலியாக அணுக, அதிகார தளங்கள் இவரது போராட்டங்களை எரிச்சலுடன் இடதுகையால் அப்புறப்படுத்துகின்றன. மன்னர் மன்னர் என்கிற பாத்திரம் முற்றிலும் புனைவானதல்ல.

இதற்கு யதார்த்தத்தில் சமகால உதாரணங்களாக சில நபர்களைச் சொல்லலாம். நெடுங்கால மதுவிலக்குப் போராட்டத்தில் இறந்து போன சசிபெருமாள் முதற்கொண்டு பல்வேறு வகை அரசியல் போராட்டங்களை களத்தில் நிகழத்திக் கொண்டிருக்கும் டிராஃபிக் ராமசாமி வரை ஒவ்வொரு பிரதேசத்திலும் இவ்வகையான பரவலாக அறியப்படாத தனிநபர் போராட்ட வீரர்கள் இருப்பார்கள்.  தன்னுடைய  அரசு ஊதியத்தில் கிடைத்த வாழ்நாள் பணத்தை நூலகங்களுக்காகவும் பள்ளிப்பிள்ளைகளின் கல்விச் செலவிற்காகவுமே செலவிடும் 'பாலம்' கல்யாணசுந்தரம் போன்ற நபர்களின் சேவை இன்னொரு வகை.  ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று  தொடர்ந்து 16 ஆண்டுகாலம் உண்ணாவிரதப் போராட்டம் இருந்த ஐரோம் சர்மிளா வேறுவகையான உதாரணம்.


இவர்கள் போராட்டக் களத்திற்குள் வருவது பெரும்பாலும் தற்செயலானதாக இருக்காது. ஏதாவதொரு தனிமனித சோகம் அல்லது சமூகக் கலவரத்தின் துயரம் இவர்களைத் தாக்கியிருக்கும், அல்லது ஏதாவது ஒரு ஆளுமையினால், முன்னோடியின் தியாகத்தினால் பெரிதும் கவரப்பட்டு தாங்களும் சமூகப் போராட்டத்தில் குதித்திருப்பார்கள். விளம்பரக் கவனத்திற்காக போராட்ட பாவனை செய்பவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. அதிகாரத்தின் அச்சுறுத்தல்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல் தொடர்ந்து போராடக்கூடிய தன்மை இவர்களிடம் இருக்கும். இப்படியான ஒரு பிரதிநிதியின் கலவைதான் 'மன்னர் மன்னன்'

படத்தின் இறுதிக்காட்சியில் பொன்னூஞ்சல் புலம்புவது போல எந்த சமூகத்தின் மக்களுக்காக இவர்கள் போராடுகிறார்களோ, தங்கள் உயிரையும் வாழ்நாளையும் பணயம் வைக்கிறார்களோ, அவர்களே இவர்களை கோமாளிகளாகவும் பிழைக்கத் தெரியாதவர்களாகவும் காணும் அவலம் தொடர்ந்து நடக்கிறது. அதிகார தளங்களில் தாங்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுவதால், அதிகாரத்தின் சிறுபகுதியை கைப்பற்றினாலாவது அதன் மூலம் தங்களின் சேவையைச் செய்யலாம் என்கிற இவர்களின் கனவும் நோக்கமும் எளிதில் நிறைவேறுவதில்லை. அவ்வாறு தேர்தலில் பங்கெடுத்த  சில போராளிகள் டெபாசிட் கூட கிடைக்காமல் தோற்றுப் போன அவலம் இங்கு நிகழ்ந்துள்ளது. அவதார நாயகர்கள் ஏற்றுக கொள்ளப்படும் அளவிற்கு இவர்கள் ஏற்கப்படுவதில்லை.

உலகமயமாக்க காலக்கட்டத்திற்குப் பிறகு பெரும்பான்மையான அளவுகோல்கள் மேலதிகமாக பொருளாதார  பின்னணியில்தான் நிகழ்கின்றன. அறத்தின் குரலை விட பணத்தின் குரலே ஓங்கிக் கேட்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள், செல்வந்தர்கள்தான்  நம்மை மறைமுகமாக ஆளக்கூடிய அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இவர்களின் கொள்ளை லாபத்திற்கும் வணிக மோசடிகளுக்கும் துணை போகிற அவலத்தைதான் பெரும்பாலும் பார்க்க முடிகிறது. பல கோடிகளை ஊழல் செய்த ஒரு அரசியல் நபர் பொதுமக்களின் அவமதிப்பை ஒரு புறம்  தற்காலிகமாக பெற்றாலும் இன்னொரு புறம் அவர்தான் சூப்பர் ஹீரோவாக கருதப்படுகிறார். அதிக ஊழலுக்கேற்ப அதிக மதிப்பு. ஊழல் செய்யாதவர்கள் 'பிழைக்கத் தெரியாதவர்கள்'  இந்த மனோபாவம் பெரும்பான்மையான சமூக மனங்களில் படிந்திருக்கிறது.

சமூக விழுமியங்கள் பெரும்பாலும் கவிழ்ந்திருக்கும் இது போன்ற சூழலில் 'மன்னர் மன்னர்' போன்ற பாத்திரங்கள் கேலிகளின் அடையாளமாக பார்க்கப்படுவதில் ஆச்சரியமில்லை. அவர்களின் சமூகத்தின்  மனச்சாட்சிகளாகவும் அறத்தின் அடையாளங்களாகவும் விளங்குவதால் அந்த உண்மையின் பிரகாசத்தைக் கண்டு நம்முடைய அழுக்கடைந்த அகம் கூசுகிறது. ஏனெனில் நம்மால் அடைய முடியாத இடம் அது. எனவே அந்தக் கூச்சத்தை கேலியாக மாற்றி அவர்களின் மீதே எறிவதில் நமக்கு பெரும் ஆறுதல் கிடைக்கிறது. அதுதான் இந்த திரைப்படத்தின் மையமாக சுற்றிக் கொண்டேயிருக்கிறது.

***

மன்னர்  மன்னர் மனம்பிறழ்ந்த ஒரு கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டதே பகடியின் அடையாளம்தான்.  அநீதிக்குத் துணை போகிற, அவைகளை கண்டும் காணாமல் இருக்கிற  சராசரி நபர்கள் புத்திசாலிகளாக கருதப்படும் போது அதை  எதிர்த்து போராடுகிற இவர்கள் 'மனம் பிறழ்ந்தவர்களாகத்தானே இருக்க முடியும்? அங்கத நகைச்சுவையின் மூலம் சமூக அவலங்களை எடுத்துரைப்பது ஒரு பாணி. அதைத்தான் இத்திரைப்படத்தில் இயக்குநர் ராஜூ முருகன் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

மன்னர் மன்னன் சராசரியான நபராக,  இயல்பான மனநிலையில் இருக்கும் போது இங்கு ஏற்பட வேண்டிய சமூக மாற்றங்களைப் பற்றி செக்யூரிட்டி தாத்தா போகிற போக்கில் சொல்லும் விஷயங்கள் எல்லாமல் அவன் ஆழ்மனதில் அடுக்குகளாக பதிந்து, பிறழ்ந்த நிலையில் அவை அமல்படுத்தப்பட வேண்டிய சாத்தியங்களாக வெளிப்படுவது பாத்திர வடிமைப்பின், திரைக்கதையின்  நல்ல கட்டுமானம்.  இது ஒருவகை கதையாடல் பாணி. 'ஒரு பைத்தியத்தால் எப்படி இப்படில்லாம் சிந்திக்க முடியும்?' என்கிற தர்க்கம் சார்ந்த கேள்விகள் இதன் முன் செல்லுபடியாகாது.

சமூகத்தின் எளிய மனிதர்களின் துயரங்களை, வாழ்வின் அவலங்களை, அவர்களின் மெல்லுணர்வுகளை தம் படைப்புகளில் சித்தரிப்பதை தொடந்து கையாள்வதை ஒரு வழக்கமாகவே ராஜூ முருகன் கொண்டிருக்கிறார் என்பதை ஒரு வெகுசன இதழில் வெளிவந்த தொடரான 'வட்டியும் முதலும்' கட்டுரைகளின் மூலம் அறிகிறோம். இவர் இயக்கிய 'குக்கூ'வும் இவ்வகையாக எளிய மனிதர்களின் சித்தரிப்பே. ஜோக்கரில் வரும் மன்னர் மன்னனும், பொன்னூஞ்சலும், இசையும், கழிப்பிட கனவுடன் இறந்து போகும் மல்லிகாவும், செக்யூரிட்டி தாத்தாவும் அவ்வகையான மனிதர்களே.

***

இந்தியாவின் 53 சதவீத வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாததால் சுமார் 60 கோடி பேர் திறந்தவெளியைப் பயன்படுத்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ள ஒரு புள்ளி விவரம் உள்ளது. பெருநகரத்தின் சேரிகளிலும் கிராமப்புறங்களிலும் பெண்கள் சூரிய வெளிச்சத்திற்கு முன்போ இருட்டியதிற்கு பின்போதான் குளியலையும் இயற்கை உபாதைகளைக் கழித்தலையும் செய்ய முடிகிறது. ரயில் பயணங்களின் போது,  மலம் கழிக்க தண்டவாளங்களில் அமர்ந்திருக்கும் பெண்கள், ரயில் வரும் போது சட்டென்று  எழுந்து திரும்பி நிற்கும் பெண்களை பார்க்க நேரும் அலவக் காட்சிகள் அனுதினமும் நிகழ்கின்றன. ஒரு சராசரி நபரின் அடிப்படையான தேவை அவனின் வாழ்நாள் கனவாகவும் ஏக்கமாகவும் இருக்கும் அவலம் இன்னமும் நீடிக்கிறது. கழிப்பறை அவசியத்தைப் பற்றிய பரப்புரைகளும் செயல்திட்டங்களும், இந்தியா  சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுதான் சற்று உயிர்பெறுகின்றன. பெரும்பாலான அரசுக் கட்டிடங்களில், அரசுப் பள்ளிகளில் இன்னமும் கூட சுகாதாரமான கழிப்பிட வசதிகள் கிடையாது. தலித் இலக்கியம் என்பது உருவானபிறகுதான் 'இப்படியும் கூட பிரச்சினைகள் உள்ளன' என்பதை இதர வர்க்கங்கள் உணரத் துவங்கியிருக்கின்றன.

போலவே இந்த நோக்கிலான குரல்களை இப்போதுதான் தமிழ் சினிமா உரையாடத் துவங்கியிருக்கிறது. 'ஆடாம ஜெயிச்சோமடா' என்கிற 2014-ல் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் நாயகன் தன் திருமண விருப்பத்தை தன் காதலியிடம் முன் வைக்கும் போது 'உங்கள் வீட்டில் கழிப்பறை இருக்கிறதா?' என்கிற கேள்வியைத்தான் அவள் முதலில் கேட்கிறாள். சாலையோரத்தில் உணவகம் நடத்தும் அவளுக்கு கழிப்பறை உள்ள வீடென்பது பெரும் கனவாக உள்ளுக்குள் நிறைந்திருக்கும் அளவிற்கு நடைமுறைச் சிரமங்களினால் பாதிக்கப்பட்டிருப்பாள். பெரும்பாலான சேரிப் பெண்களின் பிரதிநிதிதான் அவள். இந்த திரைப்படத்திற்குப் பிறகு கழிப்பறை கனவுடனும் ஏக்கத்துடனும்  உருவாகியுள்ள எளிய நாயகியின் சித்திரம் பிரதானமான அளவில் 'ஜோக்கரில்'தான் சாத்தியப்பட்டிருக்கிறது.

உயிருடன் வாழ விடாத அரசு இயந்திரம்  நிம்மதியாக  சாகவும் விடாது என்கிற நோக்கில் நிகழும் மல்லிகாவின் மரணம் தொடர்பான காட்சிகள் அவல நகைச்சுவையோடு சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதியின் வருகை காரணமாக மன்னர் மன்னரின் வீட்டில்  கட்ட திட்டமிடப்படும் கழிவறை, அதிகாரிகளின் குளறுபடிகளால் மாற்றப்படுவது மல்லிகாவிற்கு பெருத்த ஏமாற்றத்தை மட்டுமல்லாமல் மரணத்தையும் வழங்குகிறது.

The Pope's Toilet என்கிற உருகுவே நாட்டுத் திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் அவலத்தை இந்தக் காட்சிகள் நினைவுப்படுத்துகின்றன. பிரேசிலின் எல்லையில் உள்ள அந்த சிறிய கிராமத்திற்கு போப் வருகிறார் என்கிற அறிவிப்பைக் கேட்டு கிராமத்தின் எளிய மக்கள் அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வரவிருக்கும் திரளான மக்களின் மூலம் வணிக வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம் என திட்டமிடுவார்கள். படத்தின் நாயகனும் தானும்  அவ்வாறே 'ஒரு கழிப்பறையை' கட்டினால் வரும் கட்டணத்தில் தன்னுடைய வறுமை நீங்கும் என கனவு காண்கிறான். அதற்காக அவன் பல சிரமங்களை எதிர்கொண்டு நிறைவேற்ற முயலும் இறுதிக் கட்டத்தில் ஊழல் அதிகாரிகள் செய்யும் இடைஞ்சல்களால் அவனுடைய கனவு கலைந்து இன்னமும் மோசமான வறுமையில் அவனுடைய குடும்பம் புதைந்துப் போகும் துயரத்தை அந்த திரைப்படம் சித்தரிக்கிறது.

***

வாழ்ந்து கெட்ட  ஜமீனாக 'ஆரண்ய காண்டம்' படத்தில் சோமசுந்தரத்தின் அபாரமான நடிப்பைக் கண்டு பிரமித்துப் போனேன். ஹாலிவுட்டில் ஜாக் நிக்கல்சன், ராபர்ட் டி நீரோ போன்று நம் ஊரிலும் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை நிகழ்த்திய தியாகராஜன் குமாரராஜாவை எத்தனை பாராட்டினாலும் தகும் என்று தோன்றியது. ஆனால் அதற்குப் பிறகு தமிழ் சினிமா இயக்குநர்கள் இவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்களா என்கிற சந்தேகம் தோன்றியது. அதை நிரூபிக்கும் விதமாக சில முக்கியமல்லாத துணைப் பாத்திரங்களில் மட்டுமே இவர் வந்து போகும் அவலம் நீடித்தது. அந்தக் குறையை ராஜூ முருகன்தான் நீக்கியிருக்கிறார்.

எவ்வித அடையாளமும் அல்லாத ஒரு சராசரி நபருக்கும், தன்னை ஜனாதிபதியாக கற்பனை செய்து கொள்ளும் மிடுக்கிற்குமான அபாரமான உடல்மொழியின் மாற்றத்தை சோமசுந்தரம் நுட்பமாக பயன்படுத்தியுள்ளார்.  ஜெயகாந்தனை நினைவுப்படுத்தும் தோற்றத்தில் நடித்திருக்கும் மு.ராமசாமியின் ஆவேசமான நடிப்பு உத்வேகம் அளிக்கக்கூடியது. இத்தனை எளிய, இயல்பான தோற்றத்தில்  ஒரு தமிழ் சினிமா நாயகியைக் கண்டு பல வருடங்களாகிறது.

இத்திரைப்படம் வசனங்களால் நிரம்பியிருப்பதாகவும் நாடகத்தன்மையுடன் இருப்பதாகவும் பிரச்சாரத் தொனியுடன் எரிச்சலூட்டுவதாகவும் 'உலக சினிமா வல்லுநர்களால்' சில பல கருத்துக்கள் வெளிப்படுவதை இணையத்தில் காண்கிறேன். அறியாமையிலிருந்து உற்பத்தியாகும் முதிராத எண்ணங்களாகவே இவற்றைப் பார்க்கிறேன்.

ஒரு சிறந்த சினிமா என்பது எப்போதுமே அதன் இலக்கணத்தை, விதியை கறாராக பின்பற்றும் படம் மட்டுமே அல்ல. அது மக்களுக்கான, எளிய முறையிலான சினிமாவாகவும் இருக்கலாம். எந்தவொரு திரைப்படம் மக்களின் பிரச்சினைகளை, துயரத்தை எவ்வித வணிக நோக்கமும் அல்லாமல் யோக்கியமான ஆதாரத்துடன் உரையாட முயல்கிறதோ அதுவும் சிறந்த சினிமாதான். அரசியல் விழிப்புணர்வு சார்ந்த அறியாமை நிறைந்திருக்கும் இந்தியா போன்ற தேசங்களில் அதன் சுரணையை தட்டியெழுப்பும் இம்மாதிரியான பிரச்சார இலக்கிய அழகியலும் தேவைதான்.

மக்களுக்காகத்தான் கலை என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை. இது சர்வதேச அரங்கில் எவ்வித விருதும் பெறாமல் போகலாம். ஆனால் பொதுச்சமூகத்தின் மனச்சாட்சியை எழுப்ப முயல்கிற நோக்கிலும், அதிகார தளங்களை நோக்கி முன்வைத்த கூர்மையான கேள்விகளின்  முக்கியத்துவத்தினாலும் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்படமாக ஆகி நிற்கிறது. சமகால சூழலில் இவ்வகையான படைப்புகளே நமக்கு அதிகம் தேவைப்படுகின்றன.  கேலியாகவும் கையாலாகாதவர்களாகவும் பார்க்கப்பட வேண்டியது 'மன்னர் மன்னன்கள்' அல்ல. அவர்களின் பொதுநலத்தை எள்ளி நகையாடும் நாம்தான் உண்மையான 'ஜோக்கர்கள்'.

(உயிர்மை இதழில் பிரசுரமானது) 




suresh kannan

No comments: