'தமிழ் சினிமா ஒரு ஸ்ட்ரெச்சர் கேஸ். நான் இப்போதைக்கு படம் தயாரிப்பதாக இல்லை' என்று ஒருமுறை கணையாழியில் எழுதினார் சுஜாதா. ஆனால் அவரே பிற்காலத்தில் ஸ்ட்ரெட்ச்சரை நகர்த்திச் செல்ல முயன்று இயலாமல் ஆகியது வேறு விஷயம். ஆனால் அந்த வாக்கியம் எழுதப்பட்டு எத்தனையோ வருடங்கள் கடந்தாலும் இன்றும் சாஸ்வத தன்மையுடன் இருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் வந்த சமீபத்திய படங்களில் ஒன்று 'ரெமோ'. இதுவொரு சாதாரண கேளிக்கைத் திரைப்படம். 'அவ்வை சண்முகியின்' மோசமான நகல். அவ்வை சண்முகியே ஓர் ஆங்கிலப்படத்தின் சுமாரான நகல் என்பது வெளிப்படை.
ஆனால் 'அவ்வை'யில் இருந்த சுவாரசிய மெனக்கெடல்கள் கூட அதற்கு பல வருடங்கள் கழித்து வந்த 'ரெமோ'வில் இல்லை. 'தமிழ் ரசிகர்களுக்கு இது போதும்' என்கிற அசிரத்தையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. 'கடல்கன்னி', 'இரட்டைத்தலை பாம்பு' போன்றவற்றை பார்க்கும் ஆர்வத்துடன் 'சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்திருக்கிறாராமே' என்று மக்கள் வண்டியைக் கட்டிக் கொண்டு கூட்டம் கூட்டமாக செல்ல, படத்தின் வணிகம் பல கோடிகளில் புரள்வதாக சொல்கிறார்கள். 'இப்பல்லாம் எங்க நல்ல படங்கள் வருது?'' என்று அலுத்துக் கொள்ளும் அதே தமிழ் சமூகம்தான் இது போன்ற வழக்கமான தேய்வழக்கு மசாலாக்களை தொடர்ந்து ஆதரித்துக் கொண்டேயிருக்கிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த சாதாரண, அசட்டு நகைச்சுவைப்படம் பத்தோடு பதினொன்றாக அப்படியே கடந்து போயிருந்தால் இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது. ஆனால் 'ரெமோ'வை முன்னிட்டு பொதுவெளியில் நிகழ்ந்த அசாதரணமான திடீர் சலனங்கள்தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இத்திரைப்படத்தில் இருந்த சமூகநீதிக்கு எதிரான 'ஆபத்தான' விஷயங்களை கண்டித்து சில ஊடகங்களிலும் சமூகத்தின் சில தரப்பினரிடையேயும் ஆவேசமான கண்டனங்களும் எதிர்ப்புகளும் வந்தன. பல தனிநபர்கள் இணையத்தில் கொதித்தெழுந்தார்கள். நடிகைகளின் கவர்ச்சிப்படங்களை தவறாமல் பிரசுரிக்கும் ஒரு வெகுசன வார இதழ், இதுவொரு சமூக விரோத திரைப்படம் என்று ஆவேசமாக விமர்சனம் எழுதியது,
பல வருட கோமாவில் இருந்தவன் ஒருநாள் கண்விழித்து வாயைத் திறந்து 'சிக்கன் பிரியாணி' கேட்ட கதையாக, இதை விடவும் ஆபத்தான கருத்தியலைக் கொண்ட திரைப்படங்கள் வந்த போதெல்லாம் பெரும்பாலும் அமைதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல், அதை வணிகரீதியான வெற்றியாகவும் மாற்றிய பொதுச்சமூகம், ஏன் திடீரென்று இந்த சாதாரண திரைப்படத்திற்கு ஏன் இத்தனை பதட்டம் கொள்கிறது? ரெமோவில் அப்படி என்ன 'ஆபத்தான' விஷயங்கள் உள்ளன? பார்க்கலாம்.
***
அதற்கு முன் சம்பிரதாயத்திற்காக இத்திரைப்படத்தில் உள்ள சில நல்ல விஷயங்களை மட்டும் பார்த்து விடலாம்.
திரையைத் தாண்டி வெளியே உள்ள பிம்பமும் ஒரு நடிகனின் வெற்றிக்கு முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில் 'நம்ம வீட்டுப் பையன்'' என்கிற அபிமானம் சிவகார்த்திகேயனின் மீது உள்ளது. ஒரு தொலைக்காட்சியின் நகைச்சுவைப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஒரு சாதாரண பின்புலத்திலிருந்து வந்த இளைஞன், இன்று தமிழ் சினிமாவின் சில கோடிகளுக்கான வர்த்தகத்தை தீர்மானிக்கும் அளவிற்கு உயர்ந்திருப்பதும் மக்களின் பரவலான அன்பையும் வரவேற்பையும் சம்பாதித்திருப்பதும் சாதாரண, தற்செயலான விஷயமாக சொல்லி விட முடியாது. அதற்குப் பின் அவருடைய கடுமையான உழைப்பும் திறமையும் உள்ளது.
பெருந்திரளை வசீகரிக்கக்கூடிய சாகச நாயகனுக்கும் நகைச்சுவை நடிகனுக்கும் உள்ள இடைப்பட்ட புள்ளிதான் சிவகார்த்திகேயனின் இடம். அதை அவர் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ற திரைக்கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து வருவது அவருடைய வெற்றிக்கு ஒரு காரணமாக அமைகிறது. குழந்தைகள் விரும்பும் ஒரு நடிகனின் வெற்றிக்கு குறைந்தபட்ச உத்தரவாதம் உண்டு. கூடுதலாக இளம்பெண்களும் அவரைக்கண்டு பெருமூச்சு விடுகிறார்கள். ஏறத்தாழ பாக்யராஜ், பாண்டியராஜன் வகையறா நடிகர்களின் நவீன வடிவம்தான் சிவகார்த்திகேயன்.
'ரெமோ' திரைப்படத்திற்காக முழுக்கவனத்தையும் செலுத்தி இரண்டு வருடத்திற்கும் மேலாக உழைத்திருப்பதாக சொல்கிறார்கள். பெண் வேடத்திற்கான ஒப்பனைக்காகவும் உடல்மொழிக்காகவும் அவர் கூடுதலான சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது படத்தைப் பார்த்தால் தெரிகிறது. படத்தின் உள்ளடக்கம் வழக்கமானதாக இருந்தாலும் அந்த அர்ப்பணிப்பு உணர்வு ஒருவகையில் பாராட்டப்பட வேண்டியது.
தமிழ் சினிமாவில் ஆண் நடிகர்கள், பெண் பாத்திரங்களில் நடிக்கும் போது அதில் பெரும்பாலும் நிகழும் ஒரு முரணைப் பற்றி திருநங்கை ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். 'பெண் பாத்திரங்களில் நடிக்கும் ஆண்கள், ஏன் பெண்களைப் போல நடிக்க முயலாமல், திருநங்கைகளைப் போல தங்களின் உடல்மொழியை அமைத்துக் கொள்கிறார்கள்?' என்பதே அது. இது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. காவல்துறை அதிகாரி உள்ளிட்ட வேறு எவ்வித பாத்திரமென்றாலும் அதற்காக தங்களின் உடலை வருத்தியும் மெனக்கெட்டும் உருமாற்றிக் கொள்ளும் நாயகர்கள், பெண் வேடத்தில் நடிப்பதென்றால் மட்டும் அதை மிக எளிதாக, தன்னிச்சையாக திருநங்கையின் உடல்மொழியாக மாற்றிக் கொள்ளும் அபத்தத்தை அவர் சரியாக சுட்டிக் காட்டியிருந்தார். இது மட்டுமன்றி, அவ்வாறான உடல்மொழியை ஆபாசமான கொனஷ்டைகளாக கையாளும் முறையற்ற போக்கே மிக அதிகம்.
ரெமோவிலும் அவ்வாறான ஆபாச கொனஷ்டகளைக் கொண்ட காட்சிகள் இருந்தாலும் பெண் வேடத்தில் வரும் காட்சிகளை அதற்கான நளினத்துடன் சிவகார்த்திகேயன் கையாண்டிருந்தது சற்று ஆறுதலான விஷயம். இதற்கு முன் அவ்வை சண்முகியில் நடுத்தரவயதுப் பெண் பாத்திரத்தில் கமல்ஹாசன் இந்த விஷயத்தை சில காட்சிகளில் சரியாக செய்திருந்தார்.
'ரெமோ'வில் உள்ள மாறுதலான விஷயம் 'பெண் வேட' பாத்திரம் மட்டுமே. மற்றபடி ஒரு வழக்கமான தமிழ் சினிமாவின் வடிமைப்பிற்குள் உழலும் கதை. தான் காதலிக்கும் பெண்ணை எப்படியாவது அடைந்து விட வேண்டுமென்கிற உயர்ந்த லட்சியத்தோடு பெண் வேடத்தில் சென்று பல்வேறு வகைகளில் அவளுடைய கவனத்தைக் கவர்வதும் இறுதியில் அதில் வெற்றி பெறுவதுமே இதன் மையம்.
***
எனில் இத்திரைப்படத்தில் உள்ள எந்த விஷயங்கள் சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கின்றன?
இதில் உள்ள நாயகன் வேலைவெட்டியில்லாமல் திரைப்பட நாயகனாவதற்காக முயற்சிக்கிறான். இந்த லட்சணத்தில் இவனுக்கு காதல் ஒரு கேடு. இதெல்லாம் இளைஞர்களுக்கு மோசமான முன்னுதாரணங்களாக அமையாதா?
பொதுவாகவே தமிழ் சினிமாவின் நாயகர்களின் பாத்திர வடிவமைப்பிற்கென்று நீண்டகாலமாகவே சில அசட்டு தேய்வழக்கு மரபுகள் உள்ளன. அவன் பெரும்பாலும் அநாதையாக இருப்பான். அவனுடைய பின்புலத்தைப் பற்றிய தெளிவான சித்திரம் இருக்காது. 'ராஜா' 'ராமு' என்பது போன்ற சிக்கனமான, கவர்ச்சிகரமான பெயர்கள் இருக்கும். சமூக அநீதிகளுக்கு கண் சிவக்க உணர்ச்சிவசப்படுவதும் வில்லன்களைப் போட்டு பந்தாடவும் அது அல்லாத நேரத்தில் காதல் காட்சிகளில் ஆடிப்பாடவுமே அவனுக்கு நேரம் சரியாக இருக்கும். அவனுடைய குடும்பப் பின்னணி என்ன, அவனுடைய பணி குறித்தான தெளிவான விவரங்கள் இருக்காது. தாய், தங்கை சென்ட்டிமென்ட்டிற்காக சில பாத்திரங்கள் உதவுவார்கள். அவ்வளவே.
ரெமோவின் நாயகப் பாத்திரம் ஒருவகையில் சமகால இளைஞர்களின் மனோபாவத்தை சரியாக பிரதிபலிக்கிறது. இன்று பெரும்பாலான இளைஞர்கள் திரைத்துறையில் நுழைந்து விடும் கனவுடன் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களின் வலியுறுத்தல் காரணமாக நிறைய செலவழித்து படித்த பொறியியல் போன்ற படிப்புகளை ஒருபுறம் மூட்டை கட்டி வைத்து விட்டு நடிகராகவும், இயக்குநராகவும் ஆவதற்கான விஷயங்களை தொடர்ந்து செய்கிறார்கள். குறுகிய காலத்தில் பெரிய அளவிற்கான பணத்தையும் புகழையும் ஒருசேர திரைத்துறையில் பெற்று விட முடியும் என்கிற பேராசையே அவர்களை உந்தித்தள்கிறது. அணுஉலை தொடர்பான தீவிரமான பிரச்சினைகளுக்கு கூட நடிகர்களிடம்தான் பிரதானமாக இன்று கருத்துகள் கேட்கப்படுகின்றன. அந்தளவிற்கு சினிமா மோகம் சூழ்ந்துள்ள ஒரு சமூகத்தில் இளைஞர்களின் கனவும் அதை நோக்கி அமையும் அவலம்தான் நிகழ முடியும்.
***
இதன் நாயகன், தான் காதலிக்கும் பெண்ணை துரத்திக் கொண்டேயிருக்கிறான்? பெண் வேடத்தில் சென்று அவளை ஏமாற்றுகிறான்? பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் இவை ஆபத்தான விஷயங்கள்தானே?
தமிழ் சினிமாவின் நாயகன், நாயகியை துரத்தி துரத்திச் சென்று காதலிப்பதும் பலவகைகளில் அவளுடைய கவனத்தை ஈர்க்க முயல்வதெல்லாம் 'காதலிக்க நேரமில்லை' போன்ற திரைப்படங்கள் வழியாக தொடர்ந்து நிகழும் ஆதிக்காலத்து சமாச்சாரம். இதில் எம்.ஜி.ஆர் மட்டுமே விதிவிலக்கு. அவராக எந்தப் பெண்ணையும் காதலிக்க மாட்டார். மாறாக பெண்கள்தான் அவர் மீது வந்து கும்பலாக விழுவார்கள். கற்புநெறியுடன் அவர்களை மறுதலிப்பார். ஆனால் இவருக்காக அந்தப் பெண்கள் ஏங்கி காணும் பகற்கனவுகளில் வட்டியும் முதலுமாக அவர்களை தொட்டுத் தழுவி அதை சமன் செய்து விடுவார். எம்.ஜி.ஆர் மாதிரியான ஒரு நாயகனை இன்று சித்தரித்தால் எல்.கே.ஜி. படிக்கும் சிறுவன் கூட ஒப்புக் கொள்ள மாட்டான்.
தான் விரும்பும் பெண்ணைக் கவர்வதற்கான பல்வேறு கவனஈர்ப்பு சேஷ்டைகள் செய்யும் விஷயம் விலங்குகள் முதற்கொண்டு ஏறத்தாழ எல்லா உயிரினங்களிலும் இருக்கின்றன. இம்மாதிரியான சித்திரிப்புகள் திரையில் மிதமான நகைச்சுவையுடன் செய்யப்படும் வரை நாம் ரசிக்க முடியும். நம்முடைய இளம் வயதிலும் அம்மாதிரியான குறும்புகளை நாம் நிகழ்த்தியிருப்போம். அதை திரையில் நாயகன் சினிமாவிற்கேயுரிய மிகையுடனும் நாடகத்தனத்துடனும் செய்யும் போது ரசிக்கிறோம். ரெமோ அந்த வகை.
ஆனால் எங்கே இவை ஆபத்தான விஷயங்களாக மாறுகின்றன? விளையாட்டு கலந்த இந்த மிதவாத காதல் கவன ஈர்ப்புகள், தீவிரவாதமாக மாறும் போதுதான். ஒரு பெண் தம்மை நிராகரிக்கும் போது அது தன் ஆண்மைக்கு விடப்பட்ட சவாலாக, தன் உடமைப் பொருள் கைவிட்டுப் போவது போன்ற பதட்டமாக உருமாறி அந்தப் பெண்ணின் மீது பல்வேறு வன்முறையாக மாறும் போதுதான்.
'எங்கிருந்தாலும் வாழ்க' என்ற தேவதாஸ்களின் துயரம் ஓய்ந்து 'அடிறா அவளை வெட்ரா அவளை' என்கிற வன்முறை பரிணாம வளர்ச்சியில் வந்து நிற்கிறது தமிழ் சினிமா. உதாரணத்திற்கு 'சேது' மாதிரியான திரைப்படங்களை சொல்லலாம். ஊரே பயப்படும் ஒருவனுக்கு ஒரு பெண்ணின் மீது திடீரென்று காதல் வந்து விடுகிறது. அதை பலவிதமாக சொல்லிப் பார்க்கிறான். அவள் ஏற்றுக் கொள்வதில்லை. பிறகு அவளை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று பாறாங்கல்லை தலையின் மீது போட்டு மிரட்டி தன் காதலைச் சம்பாதிக்கிறான். இது போன்ற ஆபத்தான கருத்தியல்களை விதைக்கும் திரைப்படங்களே பிரதானமாக கண்டிக்கப்பட வேண்டும். இதன் பிற்பாதி திரைக்கதையில் நாயகனின் வீழ்ச்சியடையும் துயரம் உருக்கத்தோடு சொல்லப்படுவதால் அந்தப் பரிதாபத்தோடு பார்வையாளர்கள் இதை மறந்து விட்டார்கள்.
***
காதலுக்காக, காமத்திற்காக பெண்ணுடல்கள் பறிக்கப்படுவது, சிதைக்கப்படுவது, இழிவு செய்யப்படுவது ஏதோ இந்த நூற்றாண்டு சமாச்சாரம் அல்ல. எத்தனையோ நூற்றாண்டுகளாக வாளின் முனையில் ஆணுடலின் வலிமையின் முன்னால் பெண்கள் பல்வேறு வகையான துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். அதாவது, சினிமா என்கிற நுட்ப வளர்ச்சி நிகழ்வதற்கு முன்னாலிருந்தே நிகழ்ந்து வரும் சமாச்சாரம். ஆண்மைய சிந்தனையும், நிலவுடமை மதீப்பீடுகளும் சமூகத்தில் நிலைபெற்று விட்ட பிறகு 'பெண்' என்பவள் சகஜீவியாக அல்லாமல் பறிக்கப்பட வேண்டிய, கைமாற்றக்கூடிய உடமையாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கிறாள்.
இந்த மாபெரும் வரலாற்றுப் பிழையை தன் வசம் வைத்திருக்கக்கூடிய சமூகமானது, தப்பித்தல் மனோபாவத்தோடு இன்று சினிமாவை நோக்கி கைகாட்டி தன் குற்றத்தை உணராமலிருப்பதும் மறைக்க முயல்வதும் நகைப்பிற்குரியது. உயர்வுமனப்பான்மையோடும், ஆண்-பெண் பாகுபாட்டோடும் ஆண் குழந்தைகளை வளர்ப்பது இந்தச் சமூகம்தான். பெண்ணைப் பற்றிய, பெண்ணுடல்களின் பிரத்யேகமான சிக்கல்களை, வலியைப் பற்றிய எந்தவொரு அறிவையும் ஆணுக்குத் தராமல் இரு பாலினர் இடையேயும் ஒரு பிரம்மாண்டமான சுவர் இருப்பதால், எல்லாத் தலைமுறை ஆண்களும் ஆணாதிக்கத்தன்மையோடே இயங்குகிறார்கள். குற்றத்தின் ஊற்றுக்கண்களை அடைக்க முயலாமல், அதைப் பற்றி பிரதானமாக உரையாடாமல், தன் நிழலைப் பார்த்து தானே அஞ்சுவது போல, சமூகத்தின் கூறுகளை தன்னிச்சையாக பிரதிபலிக்கும் சினிமா போன்ற ஊடகங்களை மட்டும் குற்றஞ்சாட்டுவது அறிவுடமை ஆகாது.
மோசமாக உருவாக்கப்பட்ட சினிமாக்கள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதா என்றால் அந்தக் கோணமும் ஒருவகையில் சரிதான். சமூகத்தின் வன்முறை நிகழ்வுகளுக்கு சினிமாவின் கீழ்மை கலாச்சாரம் ஒரு வகையில் காரணமாக இருக்கக்கூடும். ஆனால் அதன் சதவீதம் மிகக் குறைவு. சினிமா என்கிற ஊடகம் தம்மிடம் இத்தனை செல்வாக்கு செலுத்த ஒரு சமூகம் அனுமதிக்குமானால் அது அத்தனை பலவீனமாக இருக்கிறது என்றே பொருள். பகற்கனவுகளுக்கும் யதார்த்த்திற்கும் வேறுபாடு அறியாத மடமையில் மூழ்கியிருக்கிறது என்றே அர்த்தம். சினிமாவிற்கும் அதிகாரத்திற்கும் இடையே ஓர எளிய குறுக்குப் பாதை இருக்கிறது என சில நடிகர்கள் நம்புவதும் அதற்கான கோணங்கித்தனங்களை செய்வதும், அது முன்னா் சாத்தியமாகியிருப்பதும் இத்தகைய அறியாமையினால்தான் நிகழ்ந்து கொண்டு வருகின்றன.
***
ஆணாதிக்க சிந்தனையை பல்வேறு விதமாக உறுதிப்படுத்தும் வசனங்கள், பெண்களின் மீதான வன்முறையைத் தூண்டும் காட்சியமைப்புகள், பெண் தன்னைக் காதலிக்காமல் போவதற்கு கழிவிரக்கத்துடன் அவளையே குற்றஞ்சொல்லும் அசட்டுத்தனங்கள் போன்றவை சமீப கால திரைப்படங்களில் அதிகரித்து விட்டன என்பது உண்மைதான். பழைய திரைப்படங்களில் நாயகன், நாயகியை வலுக்கட்டாயமாக அடைவதை ஓர் அவமானமாக, தன் ஆண்மைத்தனத்திற்கு இழுக்கானதாக கருதுவான் என்கிற வரையில் பிரச்சினையிருக்காது என்றாலும் பெண்களுக்கு உபதேசிப்பதை ஒரு வழக்கமாக கொள்ளும் பிற்போக்குத்தனம் இருந்தது. குறிப்பாக அவளின் உடையைப் பற்றி, குணாதிசயங்களைப் பற்றி ஆண்மைய சிந்தனையோடு பல்வேறு புத்திமதிகள் சொல்வான். 'இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை' என்று பாடின எம்.ஜி.ஆரில் இருந்து 'பொம்பளைன்னா அடக்கமாக இருக்கணும்' என்று வசனம் பேசிய ரஜினிகாந்த் வரை தமிழ் சினிமா இம்மாதிரியான பிற்போக்குத்தனங்களால் நிறைந்திருந்தது.
இது போன்ற விஷயங்கள் பொதுச்சமூகத்தில் அதிகம் கவனிக்கப்படாவிட்டாலும், மாறாக இவை ரசிக்கப்பட்டாலும், அறிவுசார் வட்டத்தில், பெண்ணியம் பேசப்படும் இடங்களில், சிற்றிதழ்களில் இவை பற்றிய கவலையுடன், கண்டிப்புடன் நிறைய உரையாடல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இப்படி குறுகிய வட்டத்தில் மட்டுமே இந்த உரையாடல், 'ரெமொ' திரைப்படத்தை முன்னிட்டு பொதுச்சமூகத்தில் திடீரென்று நிகழ்ந்திருப்பது எப்படி? 'திடீர் சாம்பார்' மாதிரி இந்த 'திடீர் விழிப்புணர்வு' நிகழ காரணம் என்ன?
சென்னையில் நிகழ்ந்த ஸ்வாதியின் கொலை உட்பட சமீபகாலமாகவே காதல் விவகாரங்களில் பெண்கள் தாக்கப்படுவதும் கொலைசெய்யப்படுவதுமான சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. இவை அடுத்தடுத்து தொடர்ச்சியாக நிகழ்வதால் ஊடகங்கள் அவற்றிற்கேயுரிய கிளர்ச்சியுடன் இதை பரபரப்பாக விவரிக்கின்றன. எனவே இது சார்ந்த கோபமும் கவலையும் பொதுச்சமூகத்திடம் திடீரென்று தோன்றியிருக்கிறது. அந்தக் கோபமே 'ரெமோ' என்கிற திரைப்படத்தின் மீது பாய்ந்திருக்கிறது. கோடிக்கணக்கில் ஊழல் செய்த அரசியல்வாதிகளை மீண்டும் அதிகாரத்தில் அமர வைக்கும் சமூகம், பேருந்தில் மாட்டின ஒரு சாதாரண பிக்பாக்கெட் ஆசாமியை பிடித்து ஆவேசமாக தர்மஅடி போடுவது போல, இதை விடவும் ஆபத்தான திரைப்படங்கள் வரும்போதெல்லாம் உறக்கத்தில் இருந்து விட்டு 'ரெமோ' போன்ற மென்நகைச்சுவை படைப்பின் மீது இத்தனை கோபத்தைக் காட்டுவது நகைப்பாக இருக்கிறது.
'அவள் அப்படித்தான்' திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். கமலும் ஸ்ரீபிரியாவும் ஒரு சமூகநல சேவகியை நேர்காணல் செய்வார்கள். 'வழுக்கி விழுந்த பெண்களுக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். இதில் எனக்கொரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது' என்று நாடகத்தனத்துடன் சொல்வார் சமூகநல சேவகி. அவருடைய நாடகத்தனத்தை சகித்துக் கொள்ள முடியாமல் ஸ்ரீபிரியா குதர்க்கமாக கேட்பார். "அப்போ உங்களுக்கு ஆத்ம திருப்தி ஏற்பட்டுக்கிட்டே இருக்கணும்னா, பல பெண்கள் வாழ்க்கைல வழுக்கி விழுந்துக்கிட்டே இருக்கணும் இல்லையா?". இதைப் போலவே சமூகத்திடம் இந்த திடீர் சமூகஉணர்வு ஏற்படுவதற்கு சில இளம்பெண்கள் அடுத்தடுத்து பலியாக வேண்டியிருக்கிறது. மோசமான சினிமாவை எதிர்ப்பதும் நிராகரிப்பதும் ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால் அது ஒரு தொடர்ச்சியான இயக்கமாக நிகழ வேண்டும். இப்படி திடீரென்று ஏற்படும் பாசாங்கான விழிப்புணர்வு அதே போல உடனடியாக மறையக்கூடிய வாய்ப்பே அதிகம். இந்த சமநிலையின்மைதான் இதிலுள்ள பெரிய பிரச்சினை.
***
ஆணாதிக்க கூறுகளை விதைப்பதோடு, நிலைநாட்டுவதோடு நின்று விட்ட பல ஆபத்தான படங்களைப் பற்றி கவலைப்படாமல் இருந்த, அவற்றை வணிகரீதியாக வெற்றி பெறச் செய்ததின் மூலம் வரவேற்பும் அளித்த பொதுச்சமூகம் தனது தாமதமான கோபத்தை இலக்கின்றி ஒரு சாதாரண திரைப்படத்தின் மீது செலுத்துவதிலுள்ள அறியாமையைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது. 'ரெமோ'விலும் அப்படியான காட்சியமைப்புகள் இருந்தாலும் அதை சமன் செய்யும் விதமாகவும் திரைக்கதையை அமைத்துள்ள இயக்குநரின் மீது சற்று கருணை காட்டுவது நல்லது.
காதல் வன்முறையால் 'ஆசிட்' வீசி தாக்கப்பட்ட பெண்ணைப் பற்றி நாயகி ஆவேசமாக பேசும் காட்சி இதில் வருகிறது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் எத்தனை சதவீதம் மணமகளுடைய தேர்வின் பங்களிப்பும் மனப்பூர்வமான ஒப்புதலும் இருக்கிறது என்பது போன்ற கேள்விகளையும் இத்திரைப்படம் எழுப்புகிறது. எத்தனை கல்வி கற்ற பெண்ணாக இருந்தாலும் தன்னுடைய பெற்றோர்களின் தற்செயலான தேர்வை பாசத்திற்கு கட்டுப்பட்டு கண்மூடித்தனமான ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமே பெரும்பாலான பெண்களுக்கு அமைகிறது. அவளின் ரசனை, விருப்பம், உள்ளார்ந்த தேர்வு, குழப்பம் ஆகியவை குறித்து அவள் உட்பட எவருமே யோசிக்கிறார்களா என்கிற கேள்வியையும் இத்திரைப்படம் எழுப்புகிறது.
ஒரு சாதாரண நகைச்சுவை திரைப்படத்திற்காக இப்படி வலிந்து எழுத வேண்டியிருப்பது ஒருவகையில் துரதிர்ஷ்டம்தான். இதன் மீது உற்பத்தியாகும் பாசாங்கான கோபமே இதற்கு காரணமாக அமைந்தது. தன் மீதுள்ள பிழைகளை ஒரு சமூகம் கறாரான சுயபரிசீலனையோடு அணுகுவதே அதைக் களைவதற்கான ஆக்கப்பூர்வமான செயலாக இருக்கும். ஆனால் அதை திசை மாற்றி உதிரியான காரணங்களை திடீர் தர்ம ஆவேசத்தோடு சொல்லிக் கொண்டிருப்பது பிரச்சினைக்கு தீர்வு அல்ல.

(உயிர்மை இதழில் பிரசுரமானது)
suresh kannan
No comments:
Post a Comment