Friday, November 15, 2019

அசோகமித்திரன்: சராசரிகளின் எழுத்தாளன்



அசோகமித்திரன் மறைந்து விட்டார். நவீன தமிழ் இலக்கியத்தின் பரப்பில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வெற்றிடம் என்றுதான் இதற்குப் பொருள். அவருடைய எழுத்தின் தன்மையை பொதுமைப்படுத்தி  ஒருவரியில் சொல்ல வேண்டுமானால்  ' நகர்ப்புறம் சார்ந்த கீழ்நடுத்தர வர்க்கத்தின் அத்தனை துயரக் கசப்புகளையும் உருட்டித் திரட்டி செய்த நகைச்சுவை மாத்திரை' என்று வரையறை செய்ய முயலலாம். ஆனால் இது அவரது படைப்புலகின் ஒரு பக்க பரிமாணம் மட்டுமே. அவருடைய படைப்புகளில் பெரும்பாலும் வெற்றியாளர்களோ சாதனையாளர்களோ இல்லை. மாறாக  தங்களுடை வாழ்வின் மிக அடிப்படையான விஷயத்திற்கு கூட அல்லறுரும் சாதாரண மனிதர்களே இருந்தார்கள்; எளிய சமூகத்தின் வாழ்க்கைச் சம்பவங்களே இருந்தன.

சைக்கிள செயின் எப்போது கழன்று விடுமோ என்கிற பதட்டத்துடன் பாலத்தின் மீது சைக்கிளை செலுத்திச் செல்பவர்கள், அதைச் சரிசெய்ய முயன்ற மசிக்கறையுடன் உள்ளவர்கள், குழந்தையின் சுரம் காரணமாக மருத்துவத்திற்கு  நண்பனிடம் இரண்டு ரூபாய் கடன் வாங்கச் சென்று கேட்கத் துணிவில்லாமல் கூசி மழுப்பலாக இலக்கியம் பேசி விட்டு தயங்கி வெறும் கையைப் பிசைந்து  திரும்பி வரும் கையாலாகாதவர்கள், ரேசன் சர்க்கரைக்காக வரிசையில் நின்று 'இல்லை' என்று திருப்பியனுப்பப்பட்டவுடன் உள்ளுக்குள் முனகிக் கொண்டே வரும் கோழைகள் ஆகியோர்களே இருந்தார்கள். அவர்கள் வேறு யாருமல்ல. நம்முடைய சித்திரங்கள்தான் அவை.

ஆனால் இவை அனைத்தையும் அசோகமித்திரன் புகார்களாகவோ புலம்பல்களாகவே சொல்லவேயில்லை. மாறாக தன்னையே பார்த்து புன்னகைத்துக் கொள்ளும் சுயஎள்ளல்களுடன்தான் இந்தக் கசப்புகளை தன் படைப்புகளில் பதிவு செய்கிறார். ஞானத்தின் ஒருவகையான எளிமை என்றுதான் இதைச் சொல்ல முடியும். 'மனிதர்களுக்கு இத்தனை துயரங்களைத் தரும் கடவுள் நிச்சயம் ஒரு குரூரமான ஆசாமியாகத்தான் இருக்க முடியும்' என்று சிலர் ஆத்திரத்தில் புலம்புவதுண்டு. அது உண்மையென்று ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டால் கூட அப்படிப்பட்ட கடவுளே ஒருவேளை அசோகமித்திரனின் எழுத்தை வாசிக்க நேர்ந்தால், தன் எள்ளல்களால் அந்த துயரங்களை ஒன்றுமில்லாமல் கசக்கிப் போடும் அசோகமித்திரனின் எளிமையான திமிரையும் சிரிப்பையும் கண்டு திகைத்து மனம் கூசி நிற்கக்கூடும்.

உலகின் எந்தவொரு சிறந்த எழுத்தாளருக்கும் இணையாக வைத்துப் போற்றக்கூடிய எழுத்தாளுமை அசோகமித்திரன். ஆனால் தம்முடைய எழுத்து குறித்து அவருக்கு எந்தவித அகங்காரமும் தற்பெருமையும் இருந்ததாகத் தெரியவில்லை. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் எழுதுவதின் சவால் குறித்து  அவரிடம் கேட்கப் பட்ட போது 'எழுதறதுல என்ன சவால் இருக்கு, செல்லாத ஆயிரம் ரூபாயை மாத்தறதும் ஆதார் கார்டு வாங்கறதும்தான் உண்மையான சவால்' என்பது போல அவரது பாணியில்  பதில் சொல்கிறார். மேற்பார்வைக்கு அது ஏதோவொரு எளிய புலம்பல் போல் தோன்றினாலும் அதனுள் பொதிந்துள்ள அரசியல் அங்கதம் மிகக்கூர்மையானது. நினைத்து நினைத்து சிரிக்கவும் அதற்குப் பிறகு கசப்படையவும் வைப்பது.

ஓர் இலக்கியக்கூட்டம். உயிர்மை சார்பில் நடத்தப்பட்டது என்பதாகத்தான் நினைவு. தம்முடைய கணையாழி கால அனுபவங்களைப் பற்றி மெல்லிய குரலில் தனக்கேயுரித்தான அவல நகைச்சுவையுடன்  விவரித்துக் கொண்டிருந்தார் அசோகமித்திரன். 'அங்க பார்த்தீங்கன்னா...இந்த புஸ்தகங்களை கயிறு போட்டு பார்சல் கட்டறதுதான் எனக்கு பெரிய சவால். இறுக்கமா கட்டவே எனக்கு வராது. எப்படித்தான் சிலர் அதை திறமையா கட்டறாங்கன்னே தெரியல. அவங்களுக்கு .இதுக்காக ஏதாவது விருது குடுத்தா கூட தகும்' என்பது மாதிரியாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு கூட்டம்  விழுந்து விழுந்து சிரிக்கிறது. அசோகமித்திரனை தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்குத்தான், அவருடைய ஆளுமையை அறிந்தவர்களுக்குத்தான் அவர் சொல்லுவதில் உள்ள எளிமையான தன்மையை மீறி அதனுள் இருக்கும் ஆழமான அவல நகையை புரிந்து கொண்டு ரசிக்கவும் கசப்படையவும் முடியும். மாறாக அவருடைய எழுத்தைப் பற்றி எந்தவோரு அறிமுகமும் இல்லாமல் அந்தக் கூட்டத்திற்கு ஒருவர் ஒருவேளை வந்திருந்தால். ... ' என்னய்யா.. இது அந்தப் பெரிசு .. ஏதோ சாதாரண விஷயத்தை சொல்றாரு. இந்த பைத்தியக்காரக் கூட்டம் இப்படிச் சிரிக்குதே'.. என்று புரியாமல் திகைத்து அமர்ந்திருக்கக்கூடும்.


இதைப் போலவே அசோகமித்திரனின் படைப்புகளை பற்றிய முறையான அறிமுகம் இல்லாமல் ஆனால் அவருடைய ஆளுமையைப் பற்றிய புகழுரையை மட்டும் எங்காவது கேள்விப்பட்டு அவரது சிறுகதைக்குள் நுழையும் எந்தவொரு துவக்க நிலை வாசகனும் 'இந்தச் சாதாரணக் கதையையா இப்படிப் புகழ்ந்தார்கள்' என்று திகைக்கவோ தனக்குள் புன்னகைக்கவோ கூடும். பாராட்டப்பட வேண்டியவை என்றால் அது அதிக பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் சிக்கலானதாகவும் இருக்க வேண்டும் என்கிற மயக்கம் நம்மிடம் இருக்கிறது. 'உலகத்தின் எல்லாச் சிக்கலான விஷயங்களும் அடிப்படையில் எளிமையானவை' என்றொரு கருத்து இருக்கிறது. அசோகமித்திரனின் எழுத்தும் இவ்வகையான எளிமையையே கொண்டிருக்கிறது.

***

லெளகீக வாழ்வின்  ஓர் எளிய சிக்கலுக்காக கூட பேனாவை தூக்கிப் போட்டு விட்டு சுயசெளகரியங்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் முதற்கொண்டு எழுத்தை தம்முடைய பிழைப்புவாதத்திற்காக மலினமாக கையாள்பவர்கள் வரை பலர் இருக்கிறவர்களின் மத்தியில்  தம்முடைய எளிய வாழ்வின் பல்வேறு விதமான துயரங்களுக்கிடையேயும் எவ்வித முணுமுணுப்பும் புகாரும் இல்லாமல், மிக குறிப்பாக அதற்கான அங்கீகாரத்தையும் பொருளியல் மதிப்பையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து எழுதி வந்தவர்களுள் மிக முக்கியமானவர் அசோகமித்திரன்.  சினிமாவுலகில் எப்படியாவது புகுந்து விட முடியாதா என்கிற தவிப்புடன் முட்டி மோதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் இடையில், அந்தத் துறையில் நீீண்ட காலம் பணிபுரிந்திருந்தாலும், அத்துறை சார்ந்த அறிவு கொண்டிருந்தாலும், ஒரு நிலையில் எழுத்தாளனுக்கேயுரிய சுயமரியாதையுடன் வெளியேறியவர். கணையாழி போன்ற பொருளியல் ஆதாயம் அதிகம் கிட்டாத பத்திரிகைகளில் பல காலமாக உழைத்திருக்கிறார். ஒருவகையில் வாழ்க்கையின் சிக்கல் சார்ந்த துயரங்களுக்கு விரும்பியே தம்மை ஒப்புக் கொடுத்து விட்டாரோ என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் உயரமான திண்ணையில் அமர்ந்து காலாட்டிக் கொண்டே தெருவை வேடிக்கை பார்க்கும் சிறுவனின் எளிமையையும் அவரது ஆளுமை கொண்டிருக்கிறது.

ஏழு நாவல்கள், நான்கு குறுநாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நுால்கள், தொகுத்த நூல்கள் என ஏராளமானவற்றை தமிழின் சொத்துக்களாக விட்டுச் சென்றிருக்கிறார். இந்தியாவின் முக்கியமான ஆங்கில தேசியப் பத்திரிகைகளில் இவருடைய கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. ஆங்கிலத்திலேயே தொடர்ந்து முழுவதுமாக எழுதியிருந்தால் இன்னமும் அதிக உயரத்திற்கு சென்றிருப்பாரோ, என்னவோ. தமிழக சூழலும் குழு அரசியல்  உள்ளிட்ட இன்ன பிற அரசியல்களும் அவரை குரூரமாக உதாசீனப்படுத்தியது. பாரதி, புதுமைப்பித்தன், கோபிகிருஷ்ணன் என்று இந்த வரிசை என்று ஓயுமோ என்று தெரியவில்லை.

தாம் பணிபுரிந்த ஜெமினி ஸ்டுடியோ அனுபவங்களைக் கொண்டு எழுதிய 'Fourteen years with boss' உள்ளிட்ட நூல் முதற்கொண்டு அசோகமித்திரன் ஆங்கிலத்தில் எழுதிய பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. தொகுக்கப்படாத கட்டுரைகள் இன்னமும் கூட இருப்பதாக ஒரு நேர்காணலில் கூறுகிறார். ஆங்கில உரைநடையில் மானசீக குருக்களில் முக்கியமானவராக,  'பிலிம் இண்டியா' பத்திரிகை ஆசிரியரான பாபுராவ் படேலை ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

அசோகமித்திரன் இதுவரை எழுதிய அனைத்துச் சிறுகதைகளும் ஒரு முழு தொகுப்பாக சமீபத்தில் வெளிவந்துள்ளது. (காலச்சுவடு பதிப்பகம்). மொத்தம் 274 சிறுகதைகள். பொதுவாக எந்தவொரு எழுத்தாளரின்  சிறுகதை தொகுப்பையும் கால வரிசையில் கவனித்தால் எழுத்தின் நடையிலும் தன்மையிலும் இன்ன பிற வகைகளிலும் மாற்றத்தை உணர முடியும். ஆனால் அசோகமித்திரனின் சிறுகதைகள் துவக்கம் முதலே ஓர் ஒழுங்கையும் கலை அமைதியையும் சாதாரணத்துவத்தையும் கொண்டிருக்கிறது. எந்தவொரு பக்கத்தையும் பிரித்து இது இந்தக் குறிப்பிட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கவே முடியாது. இதை அவர் பிரக்ஞையுடன் நிகழ்த்தினாரா அல்லது அவரே எழுத்து இயல்பே அவ்வாறுதானா என்பது ஆய்வுக்குரியது. கலாசார எல்லைகளைத் தாண்டி உலகத்தின் எந்தவொரு எளிய மனிதரும், நுட்பமான வாசகரும் அசோகமித்திரனின் எழுத்தோடு தம்மை நெருக்கமாக உணர்வார்கள்.

இதைப் போலவே அவருடைய பெரும்பாலான சிறுகதைகள் எந்தவொரு இதர மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்வதற்கு தகுதியானது. காலம், இடம், கலாசாரம் போன்ற கற்பித எல்லைகளைத் தாண்டி நிற்கிற உன்னதத்தன்மையை அசோகமித்திரனின் எழுத்து கொண்டுள்ளது. 'கதைகளிலிருந்து 'கதையை' வெளியேற்றுவதே தாம் எழுதும் கதைகள்' என்று சா.கந்தசாமி சொல்வதை அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கும் கச்சிதமாக பொருத்திப் பார்க்கலாம். பலராலும் குறிப்பிடப்படும் 'புலிக்கலைஞன்' 'பிரயாணம்' 'காந்தி' போன்றவை  இவருடைய அபாரமான சிறுகதைகள். 'இன்ஸ்பெக்டர் செண்பகராமன்' போன்ற சிறந்த குறுநாவல்கள்.


அவரது சிறுகதைகளுள் பொதுவாக அதிகம் மேற்கோள் காட்டப்படாததும், என்னளவில் மிகச் சிறந்தவைகளில் ஒன்றாக கருதுவதுமான 'குருவிக்கூடு' எனக்கு அதிகம் பிடித்த சிறுகதை. வழக்கம் போல் எளிமையானதுதான். குருவிக்கூடு ஒன்றைப் பாதுகாக்க ஒரு சிறுவன் தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்வான். ஆனால் அது தோற்றுப் போகும். சிறுவன் வருத்தப்படுவான். அதன் பிறகு குருவிக்கும் சிறுவனுக்கு நிகழும் உரையாடல்தான் அந்தக் கதையின் அற்புதமே.  இன்ன பிற உயிரனங்களின் மீது மானுட குலம் கொண்டிருக்கும் கருணையின் மீதான போலித்தனத்தை இரக்கமேயில்லாமல் குரூரமாக பரிகாசம் செய்வார் அசோகமித்திரன். பொதுவாக 'மென்மையான எழுத்து' என்று அறியப்பட்டும் நம்பப்பட்டும் கொண்டிருக்கிற அசோகமித்திரனது படைப்புகள் பல சமயங்களில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் நெருப்பு போல மூர்க்கமான வேறு பக்கத்தையும் சித்தரிக்கும். நுட்பமான வாசிப்பின் வழியாக அறிய முடிவது இது.

***

சினிமாவைப் பற்றிய தகவல்கள், அபிப்பிராயங்கள் நிரம்பிய அசோகமித்திரனின் எழுத்தை மட்டும் தொகுத்தாலே பெரிய தொகுதியாக வந்து விடும். அந்த அளவிற்கு இந்திய மொழிகளில் வெளியான சினிமாக்களைப் பற்றிய பல்வேறு கட்டுரைகளை தனது பாணியில் எழுதிக் குவித்துள்ளார். பெரும்பாலானவற்றில் அவருக்கேயுரிய அங்கதமும் தனித்துவமும் இருந்தது. 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் பற்றி அவர் எழுதிய கட்டுரையொன்றை என்னால் மறக்கவே முடியாது. அந்த திரைப்படத்தில் வரும் விஜயன் பாத்திரத்தை வெறுக்காதவர்களே இருக்க முடியாது. ஆனால் அசோகமித்திரன் இதற்கு முற்றிலும் வேறு பரிமாணத்தையும் பார்வையையும் முன்வைக்கிறார். 'அந்தச் சூழலில் அந்தப் பாத்திரம் ஆற்றும் எதிர்வினைகள் இயல்பானவைதானே' என்று அ.மி. முன்வைக்கும் நியாயங்களின் மூலம் 'அதோனே' என்று ஒருகணம் நமக்கும் தோன்றி விடுகிறது.

சினிமாவின் பல்வேறு விதமான பளபளப்புகளுக்குப்  பின்னே மறைந்திருக்கும் இருள் உலகத்தைப் பற்றிய அற்புதமான நாவல் 'கரைந்த நிழல்கள்'. துணை நடிகைகளின் உடைகளில் வீசும் வியர்வை நாற்றம் முதற்கொண்டு துல்லியமான விவரணைகளுடனும் அற்புதமான கட்டுமானத்துடனும் அமைந்த நாவல் அது. நீர் அரசியலும் அது சார்ந்த ஊழல்களும் பற்றாக்குறையும் உக்கிரமாக மேலெழுந்து வந்து கொண்டிருக்கும் சமகால சூழலில் 'தண்ணீர்' நாவலின் மையம் இன்னமும் அர்த்தபூர்வமானதாகிறது.


அவரது படைப்புகளின் உன்னதங்களைப் பற்றி இன்னமும் எவ்வளேவோ உரையாடிக் கொண்டேயிருக்கலாம். தம்முடைய சீரான, தொடர்ச்சியான இயக்கத்தின் மூலம் பல்வேறு விதமான ஆக்கங்களை நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார் அசோகமித்திரன். சர்வதேச அளவில் நோபல் பரிசு பெறுவதற்கு கூட  தகுதி பெற்ற எழுத்தாளருக்கு, இந்தியாவின்  ஞானபீட பரிசு கூட வழங்கப்படாமலிருப்பதின் பின்னுள்ள அரசியல் வருத்தப்பட வைக்கிறது. ஆனால் இதற்காகவெல்லாம் அவர் வருந்தியவர் அல்ல. இயற்கையைப் போல எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தவர் இயற்கையுடன் சென்று கலந்து விட்டார். விருதுகள்தான் அவர் முன்னால் வந்து நிற்பதற்கு கூச வேண்டும்.

மகத்தான அந்தக்  கலைஞனுக்கு இந்த எளிய வாசகனின் ஆத்மார்த்தமான அஞ்சலி. 

(உயிர்மை இதழில் பிரசுரமானது) 

suresh kannan

No comments: