Monday, November 25, 2019

இறைவி : ஆண் விளையாட்டின் பகடைக்காய்






இத்திரைப்படத்தை விடவும் இதை தமிழ் இணையச் சமூகம் பதட்டத்துடன் எதிர்கொண்ட விதம்தான் அதிக சுவாரசியமாக இருந்தது. படத்தின் முதல் காட்சி முடிந்த அடுத்த நொடியிலிருந்தே பல்வேறு விதமான எதிர்வினைகள் இணையத்தில் கொட்டத் துவங்கின. 'இது ஒரு சமூக விரோத திரைப்படம்' என்பதில் துவங்கி இது பெண்ணியப்படமா அல்லவா என்கிற ஆராய்ச்சி முடிவுகள் வரை பல்வேறு பார்வைகள். நிறைய எதிர்மறை விமர்சனங்கள். ஒரு திரைப்படம் இத்தனை விவாதங்களை கிளப்புகிறதென்றால் அது ஏதோவொரு வகையில் குறிப்பிடத்தக்க வகையான படைப்பு என்றுதானே பொருள்? அந்த சாதகத்தின் பலனைக் கூட தர பலர் தயாராக இல்லை. யார் அதிக சத்தத்துடன் அடிக்கிறார்களோ அந்தப் பக்கம் அதிக கவனம் திரும்பும் என்பதால் குண்டாந்தடியால் அடித்து வீழ்த்துவதற்கு பலத்த போட்டி நிலவியது.

நான் இறைவி திரைப்படத்தை சமகாலத்தில் உருவான மிகச்சிறந்த தமிழ் சினிமா என்று கொண்டாட முயலவில்லை. அப்படி மற்றவர்களையும் வற்புறுத்தவில்லை. மையத்தை விட்டு விலகிச் செல்லும்  கிளைக்கதை கோளாறுகளுடனும் தவறுகளுடனும் உருவான திரைப்படம்தான் இது. ஆனால் ஒரு கோணத்தில் இதன் சில பகுதிகள் அதுவரையான தமிழ் சினிமா தவற விட்ட கோணத்தில் உரையாடுபவை. பெண்களின் பிரத்யேக சில அகச்சிக்கல்கள், ஏக்கங்கள் போன்ற இருண்மைப் பிரதேசங்களின் மீது சிறிது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிற திரைப்படம் இது.  குறிப்பாக  அஞ்சலியின் பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் மிக நுட்பமாக உருவாகி வந்துள்ளது.

இது போன்ற காரணங்களை குண்டாந்தடி விமர்சகர்கள் சற்று கருணையோடு பரிசீலித்துப் பார்க்கலாம். ஏனெனில் சராசரி பார்வையாளர்களால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சி அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது விமர்சகர்களின் அடிப்படையான கடமை. விமர்சனங்களால் ஒரு திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றி தொல்வியை நிர்ணயிக்க முடியாதென்றாலும் பகுதியளவிலாவது நிறைவடைந்திருக்கும் ஒரு நல்ல முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டியது விமர்சகர்களின் கடமை. ஏற்கெனவே தமிழ் சினிமா மசாலாத்தனமான கழிவுகளால் நிரம்பியிருப்பது நமக்குத் தெரியும். அது குறித்த புகார்களும் நமக்கிருக்கின்றன. இது போன்ற சூழலில் அவைகளிலிருந்து சற்று விலகி ஆர்வத்துடன் மேலெழுந்து வரும் படைப்பை கருணையோடு அணுகாமல் அதன் தலை மேலேயே ஆவேசத்தோடு அடிப்பதால் எவருக்கு உபயோகம்?

***

என்னளவில் இறைவி திரைப்படத்தை மூன்று காரணங்களுக்காக குறிப்பிடத்தக்க படைப்பாக நினைக்கிறேன்.

ஒன்று, பெண்ணுரிமையைப் பேசும் இதுவரையிலான திரைப்படங்களை  சற்று பொதுவாக நினைவுகூருங்கள். குடும்பத்தாலும் கணவனாலும் சமூகத்தாலும் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு அடக்கி வைக்கப்பட்ட ஒரு பெண் பாத்திரம் அந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை உடைத்து மீறிக்  கொண்டு ஆவேசமாக வெளியே வரும். 'ஓ.. ஒரு தென்றல் புயலாகி வருதே' என்பது போல. அல்லது முதலில் இருந்தே தன் உரிமைகளைப் பற்றிய பிரக்ஞையுடன் உரையாடிக்  கொண்டே இருக்கும். 'அவள் ஒரு தொடர்கதை' சுஜாதா போல. பெண்களின்  கோணத்தில் பெண்களின் பிரச்சினைகள் -சற்று மிகையான, நாடகத் தொனியில் இருந்தாலும் - உரையாடப்பட்டு வந்தன.

ஆனால் இறைவி திரைப்படம் இதிலிருந்து வித்தியாசப்பட்டு நிற்கிறது. ஆண்களின் உலகம் வழியாக பெண் இனம் எதிர்கொள்ளும் அவதிகள் நமக்கு உணர்த்தப்படுகின்றன. முந்தைய பாணியின் எதிர்பிம்பம் இது. ஆண்மைய சிந்தனையுலகின் கண்ணாடியின் வழியாக பெண் உலகத்தை இதில் காண்கிறோம். பெண்களின் வழியாக காட்டப்பட்ட முந்தைய பாணி ஆணாதிக்க சிந்தனையுள்ள பார்வையாளர்களுக்கு எரிச்சலைக் கூட தந்திருக்கலாம். ஆனால் அவர்களின் முகத்தை அவர்களே கண்ணாடியில் பார்க்கும் விதமாக அவர்களின் நோக்கில் பெண்களின் பிரச்சினைகளை ஆராயும் போது அது ஆணின் சிந்தனையைக் கிளறி தன்னை சுயபரிசீலனை செய்து கொள்ளும் ஒரு வாய்ப்பு நிகழக்கூடிய சாத்தியம் 'இறைவி'யில் உள்ளது. இத்திரைப்படத்திற்கு வந்த சில நேர்மையான, உணர்வுபூர்வமான எதிர்வினைகள் அவ்வாறுதான் அமைந்திருந்தன என்பதைக் கவனிக்க வேண்டும்.

இரண்டாவது. முந்தைய பாணி திரைப்படங்களில் பொதுவாக ஆண்கள் அயோக்கியர்களாக, பெண்கள் குறித்து சிறிது கூட அனுதாபமோ, அன்போ, இரக்கமோ கொள்ளாத அரக்கர்களாக சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். அல்லது நல்லவர் போல் நடித்து ஏமாற்றும் கயவர்களாக. கதை சொல்லும் பாணியில் அது இயல்பானதும் கூட. அப்போதுதான் பார்வையாளர்களின் முழு அனுதாபத்தையும் பெண்களின் மீது பாய்ச்ச முடியும். அவர்களின் ஆவேசமான மீறலில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள முடியும். ஆனால் இறைவியில் வரும் ஆணகள் எவரும் பெண்கள் மீது அன்பில்லாதவர்களாக, கொடூரர்களாக சித்தரிக்கப்படவில்லை. பெண்களின் அன்பிற்கு ஏங்குபவர்களாக, அதற்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர்களாக இருக்கிறார்கள். சந்தர்ப்ப சூழல்களால், கட்டுப்படுத்த முடியாத கோபத்தால் அவர்கள் விழும் படுகுழிகள், அனிச்சை செயலாக அவர்கள் குடும்பத்து பெண்களையும் பாதிக்கும் விஷயத்தைதான் இயக்குநர் மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

மூன்றாவது, பெண்ணியம் என்றால் அது பற்றி பேசும் பெண்கள் சிலரிடையே கூட தவறான புரிதல்கள் உள்ளதாக தோன்றுகிறது. ஆண்களின் புற அடையாளங்களை,  கீழ்மைகளை தாங்களும் போட்டிக்கு, வீம்பிற்கு நகலெடுப்பது, அவர்களை வெறுத்து ஒதுக்குவது,  எளிதில் சரிசெய்யக்கூடிய எந்தவொரு பிசிறையும் உயர்வு மனப்பான்மையுடன் பூதாகரமாக்குவது, கட்டற்ற பாலியல் சுதந்திரம் அல்லது அதிலிருந்து முழுவதுமாக விலகுவது போன்றவைகள்தான் பெண்ணியத்தின் அடையாளங்கள் என்பதாக சிலரால் நம்பப்படுகிறது.  ஆணைச் சார்ந்து, சகித்துக் கொண்டு அவனுக்கு அடிமையாக இருக்கத் தேவையில்லைதான், ஆனால் அவனை உதறுவதுதான் பெண் உரிமையை நிறுவுவதற்கான எளிய குறுக்கு வழியா?

தங்களின் இருப்பின் முக்கியத்துவத்தை ஆண்களுக்கு உணர்த்துவது, சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் தங்களின் அடையாளங்களை, உரிமைகளை நிறுவுவது, அதற்கான போராட்டங்களை நிகழ்த்தியபடியே இருப்பது, ஆணைச் சாராமலிருக்கும் தன்னிறைவுகளை அடைவது, அறியாமையில் வீழ்ந்திருக்கும் பாமரப் பெண்களிடம் பெண்ணுரிமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்புவது போன்றவைதானே பெண்ணுரிமைப் போராட்டங்களின் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளாக இருக்க முடியும்? ஆணாதிக்க உலகின் அடிமையாகவே வளர்ந்த பழக்கத்தில் 'அதுதானே யதார்த்தம்' என்று தன்னிச்சையாக நம்பி அந்த பாரபட்சத்தோடு ஆண் பிள்ளைகளை வளர்க்கும் பெண்களும் இந்த சூழலுக்கு ஒருவகையில் காரணம். வளரும் போதே ஆண்மைய சிந்தனைகளுக்கான விதைகளுடன் வளரும் ஆண் பிள்ளைகளின் உயர்வு மனப்பான்மையை முளையில் கிள்ளி எடுப்பது ஒரு முக்கியமான வழியல்லவா? ஆணும் பெண்ணும் தங்களின் சமத்துவ உலகத்தில் இணைந்து இயங்குவதும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும்தானே யதார்த்தமான, ஆக்கப்பூர்வமான வழிமுறையாக அமைய முடியும்?

இத்திரைப்படத்தில் வரும் பெண்கள் அப்படித்தான் முட்டி மோதுகிறார்கள். தங்களின் சகிப்புத்தன்மையின் சாத்தியமான எல்லைவரை போராடுகிறார்கள். ஆண்களின் அன்பை வெல்வது, தங்களின் அன்பை புரிய வைப்பது அவர்களுக்கு பெரிய போராட்டமாக இருக்கிறது. அது ஓரெல்லையில் முறிந்து போகும் போதுதான் விலகலைப் பற்றி யோசிக்கிறார்கள். மழை என்பது இதில் சுதந்திரத்தின் குறியீடாக சித்தரிக்கப்படுகிறது. 'மழையில் நனைவதுதான்' அவர்களின் நெடுங்கால விருப்பமாக இருக்கிறது. ஆனால் அதில் கை நனைக்கத்தான் முடிகிறது. முட்டி மோதிய அத்தனை முயற்சிகளிலும் தோற்றுப் போன ஒருத்தி மட்டுமே  மழையில் நனைகிறாள். மழைக்குப் பின் வெயில் வரும் என்பதுதானே இயற்கையின் நியதி?


***

வெவ்வேறு வயதில், சூழலில் உள்ள மூன்று பெண்களின் உலகங்கள் இதில் சித்தரிக்கப்படுகின்றன. மூவருமே குடும்ப வன்முறையில் சிக்கி தவிப்பவர்கள். கடந்த தலைமுறை பெண்  தன் வாழ்நாள் முழுதும் அதை  சகித்து புழுங்கிக்  கொண்டு வாழ அடுத்தடுத்த தலைமுறைப் பெண்கள் தங்கள் சகிப்புத்தன்மையை நீட்டிக்கவும் அதிலிருந்து விலகவும் முடியாமல் தத்தளிப்பவர்களாக இருக்கிறார்கள்.

காலம் பூராவும் ஆணாதிக்க கொடுமையை அனுபவித்து மெளன சாட்சியாய் விளங்கும் வடிவுக்கரசி, பெரும்பாலான ஆண்களைப் போல தங்களின் வயோதிக காலத்தில் மனைவியின் அன்பை, சகிப்புத்தன்மையை புரிந்து கொண்டு மனம் திரும்பும் ராதாரவி, தனது வருங்காலத்தைக் குறித்து நிறைய கனவுகளுடன் திருமண வாழ்க்கையில் நுழையும் கமலினி, குடிகார கணவனான சூர்யாவிடம் தன் சகிப்புத்தன்மையின் எல்லை வரை நீடிக்க முயல்கிறாள். என்றாலும் அவனுடைய திரைப்படம் வெளிவராததால் உண்டான அதீத குடிப்பழக்கத்தின் பின்னணியை அனுதாபத்துடன் நோக்கி அவனைப் பிரிய முடியாமலும் தத்தளிக்கிறாள். நடிகர்களுக்கான சாயலுடன் உள்ள கணவனை எதிர்பார்க்கும் அஞ்சலி, ஒரு சராசரியான ஆணை திருமணம் செய்து கொண்டு முதலிரவிலேயே தன் கணவனின் மனவிலகலைக் கண்டு அதிர்ச்சியடைந்து  'ஆம்பளைங்கன்னா அப்படி இப்படித்தாண்டி இருப்பாங்க' என்கிற மூத்த பெண்களின் உபதேசத்தின் மூலம் அவனுடன் வாழ முயற்சிக்கிறாள். முட்டி முட்டி மோதி ஒரு கணத்தில் 'நான் என்ன உன்ன திருத்தி வாழ வெச்சு குழந்தை பெத்து அதை வளர்க்கற மெஷினா?' என்று வெகுண்டெழுகிறாள்.

இதில் மிக நுட்பமாக பதிவாகியிருப்பது அஞ்சலியின் அகம் சார்ந்த பகுதி. படம் துவங்குவதற்கு முன் திரையில் காட்டப்படும் திரைப்பட முன்னோடிகளான பாலச்சந்தர் மற்றும் பாலுமகேந்திராவின் பயணத்தில் தாவி ஒருபடி முன்னேறும் சாதனையை கார்த்திக் சுப்புராஜ் சாதித்திருக்கிறார்.

அஞ்சலிக்கு தன் வருங்கால வாழ்வு குறித்து பெரிதான கனவுகள் ஒன்றுமில்லை. ஒரு சராசரியான பெண்ணின் கனவுகள் மாத்திரமே. திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும், தன் கணவன் தன் மீது தொடர்ச்சியான அன்பு செலுத்த வேண்டும் என்பது மட்டுமே. ஆனால் முதலிரவில் மீது அவள் மீது பாய்ந்து முடிக்கும் விஜய்சேதுபதி, பிறகு 'என் விருப்பத்துடன் இந்த திருமணம் நடைபெறவில்லை' என்கிறான். கணவனை இழந்த ஒரு பெண்ணுடன் அவனுக்கு தொடர்பிருக்கிறது. அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பி அது மறுக்கப்பட்டு பிறகுதான் அஞ்சலியை மணக்கிறான். மூத்த பெண்களின் வழக்கமான ஆலோசனைப்படி இதை சகித்துக் கொள்ளும் அஞ்சலி அவன் மனம் மாற காத்திருக்கிறாள்.

தன்னுடைய காதலியால் துரத்தப்பட்டு வெறுப்புடன் வரும் விஜய்சேதுபதி தன் மனைவிக்கு குழந்தை பிறக்கவிருப்பதை அறிந்தவுடன்தான் அந்த மனம்மாற்றம் நிகழ்கிறது. ஆனால் அதற்குள் நிகழும் சம்பவங்களின் எதிர்வினையாக சிறைக்குப் போகிறான். மனைவியின் அன்பு அப்போதுதான் அவனுக்கு புரியத் துவங்குகிறது. இந்த திரைப்படத்தில் வரும் எல்லா ஆண்களுமே மிக மிக தாமதமாகவே தங்கள் துணையின் அன்பை உணர்கிறார்கள். அஞ்சலியிடம் அதுவரை யாருமே  தன் அன்பை சொன்னதில்லை. அவளை ஆராதித்ததில்லை. விஜய்சேதுபதி சிறை சென்றிருக்கும் சமயத்தில் பாபி சிம்ஹா அவளிடம் தன் காதலை சொல்கிறான். முதன்முறையாக ஓர் ஆணிடமிருந்து வெளிப்படும் காதல் சொல். அஞ்சலி சற்று தடுமாறினாலும் அவனிடமிருந்து விலகி ஊருக்குச் சென்று விடுகிறாள். மனதிற்குள் மட்டுமே இந்தக் காதல் புகுகிறது. 'நீ ஒருத்தியை இச்சையுடன் பார்த்தாலே அவளுடன் விபச்சாரம் செய்ததற்கு சமமானது' என்கிற வேதாகமம். அவள் ஒரு கிறிஸ்துவப் பெண்.

பிறகு இந்த விஷயங்களை அறிந்து கொள்ளும் விஜய்சேதுபதி ஆத்திரம் கொள்கிறான். 'அவன் கூட படுத்தியா?' என்கிறான். இந்தக் கேள்விக்கு விடையறிவதுதான் அவனுக்கு பெரிய விஷயமாக இருக்கிறது. பெண்ணின் உடலுக்குள் புகுவதை விட மனதிற்குள் புகுவது மிக முக்கியமானது என்பது அவனுக்குப் புரியவில்லை.

தன் கணவன் புரியும் அதுவரையான குற்றங்களுக்காக, விலகலுக்காக, திருமணத்திற்கு முன்பான தொடர்பிற்காக இந்தக் கேள்வியை ஒரு நிராகரிப்பின் மூலம் அஞ்சலி அவனை சரியான படி தண்டிக்கிறாள். 'ஆமாம். அவனை நானும் லவ் பண்ணேன். ஆனா விவரமால்லாம் சொல்ல முடியாது. விருப்பம் இருந்தா என் கூட வா". இந்த ஆண்-பெண் சதுரங்க விளையாட்டில் மிக நுட்பமான அசைவின் மூலம் அஞ்சலி வெற்றி பெறும் இடம் இது. ஓர் அபாரமான செக் மேட்.

தமிழ் பார்வையாளர்களின் ஆசார மனங்களை குறித்து கவலை கொள்ளும் இயக்குநர் இந்தப் பகுதிகளை எல்லை தாண்டாமல் மிக நுட்பமாக கையாண்டிருக்கிறார். சுஜாதா எழுதிய 'ஜன்னல் மலர்' என்கிற குறுநாவலுக்கு இயக்குநர் தார்மீக அறத்துடன் கிரெடிட் தந்திருப்பதை பாராட்ட வேண்டும். விதம் விதமாக கதைகளை உருவும் உலகில், அவர் சொல்லியிருக்கா விட்டால் இது பெரும்பாலோனோர்க்கு தெரிந்திருக்கப் போவதில்லை. குறுநாவலை மிக நுட்பமாக கலைத்துப் போட்டிருக்கிறார். குறுநாவலில் வரும் பெண் பாத்திரம் கணவன் சிறைக்குப் போயிருக்கும் சமயத்தில் வேறு வழியில்லாமல் இன்னொரு ஆணுடன்  சோரம் போகும். கணவனின் நண்பனே அவனை சட்டத்திடம் மாட்டி விட்டு அந்த இடைவெளியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வான். இது திரைக்கதையில் கலாசாரக் காவலர்களுக்காக மாற்றப்பட்டு  சரியாகப் பொருத்தப்பட்டிருக்கிறது.

***

இதைப் போலவே விஜய்சேதுபதியின் தோழியாக வரும் பூஜா தேவரியாவின் பாத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தன் கணவனுடன் இன்பமான வாழ்க்கை நிகழ்த்திய இவர், அவருடைய மறைவிற்கு பிறகு விஜய்சேதுபதியுடன் நெருங்கிப் பழகுகிறார். தங்களுடைய தொடர்பு உடல் சார்ந்தது மட்டுமே, காதல் என்பதெல்லாம் கிடையாது என்பதை விஜய்சேதுபதிக்கு தொடர்ந்து தெளிவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். ஆனால் அவரோ 'உடலின்பத்தைத் தாண்டி தான் உண்மையாகவே காதலிப்பதாகவும் திருமணம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறார். பூஜாவிற்கு திருமணம் என்கிற நிறுவனத்தில் நம்பிக்கையில்லை. எனவே அந்த உடன்பாட்டை வலுவாக மறுக்கிறார். 'வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்' என்கிறார்.

விஜய்சேதுபதி - அஞ்சலி திருமணம் முடிந்தவுடன் விஜய்யின் 'வருகையை' பூஜா விரும்புவதில்லை. அப்போது தற்செயலாக வரும் ஓர் ஆணை (கணினி பழுது பார்ப்பவர்) தன்னுடைய புது நண்பராக சித்தரிப்பதின் மூலம் விஜய்யின் வெறுப்பை வேண்டுமென்றே சம்பாதிக்கிறார். அப்போதுதான் அவர் தன் மனைவியுடன் இணைந்து வாழ வேண்டுமென. இந்த திட்டம் சரியாக வேலை செய்கிறது. ஆனால் விஜய் கோபத்துடன் கிளம்புவதைப் பார்த்து பூஜா ஏன் அழ வேண்டும்? அது செயற்கையான மெலோடிராமாவாக இருக்கிறதே என்பது பலரின் எண்ணமாக இருந்ததை இணையப்பதிவுகளின் மூலம் உணர முடிந்தது.

இதனால்தான் இந்தப் பாத்திரமும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறேன். ஜெயகாந்தனின் 'புது செருப்பு கடிக்கும்' என்கிற சிறுகதையை மிகப் பொருத்தமாக இங்கு நினைவுகூரலாம். மிக அபாரமாக எழுதப்பட்ட சிறுகதையது. புதிதாக திருமணமான ஒருவன் புது மனைவி செய்யும் சண்டித்தனத்தை வெறுப்புடன் உணர்ந்த ஓர் இரவில் தாம் பழகிய 'முன்னாள் காதலியின்' இல்லத்திற்கு ஆறுதல் தேடி செல்வான். இவன் அவளுடன் பழகிய முந்தைய காலம் பற்றிய விவரணைகள் சிறுகதையில் நன்கு  விவரிக்கப்பட்டிருக்கும். முன்னாள் காதலி புதிதாக திருமணமான பெண்ணின் உணர்வுகளை, மிரட்சிகளை எடுத்துச் சொல்லி உபதேசம் செய்து இவனை திருப்பி அனுப்புவாள்.

ஏறத்தாழ பூஜாவின் பாத்திரமும் இத்தகையதே. அவள் ஆணின் உடலை மட்டுமே விரும்பும் பாலியல் துய்ப்பு இயந்திரம் அல்ல. ஒரு பெண் பாலியல் தொழிலாளியாகவே இருந்தாலும் கூட தன் மனதிற்கு பிடித்த ஆடவனுடன் பாலுறவு கொள்ளும் போது மட்டுமே உயிர்ப்புடன் இருப்பாள். பூஜாவிற்கு விஜய்சேதுபதி மீது அன்பிருந்தாலும் அவன்  இன்னொரு பெண்ணுடன் ஒரு புது வாழ்க்கை வாழ துவங்க வேண்டும் என்று விரும்புகிறாள்.  முந்தைய திருமணத்தின் மூலம் நிகழ்ந்த கசப்புகள் அவள் இன்னொரு திருமணத்தை நாடாமலிருக்கும் மனநிலையை உண்டாக்கியிருக்கலாம். எனவேதான் விஜய்சேதுபதியை செயற்கையான தருணத்தில் விலக்கி விட்டாலும் அவனின் மீதுள்ள அன்பை நினைத்து ரகசியமாக அழுகிறாள். மனித மனதின் சிக்கல் வெளிப்படும் நுட்பமான ஒரு தருணம் இது.

***

எஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, அஞ்சலி, கமலினி என்று ஏறத்தாழ எல்லோருமே அவரவர்களின் நட்சத்திர அடையாளங்களைக் கழற்றி விட்டு பாத்திரத்தின் வார்ப்பிற்குள் கச்சிதமாக இயங்கியிருக்கிறார்கள். வடிவுக்கரசியால் ஒரு முழு வாழ்க்கையின் துயரத்தை ஒரே ஷாட்டில் சொல்லி விட முடிகிறது. ராதாரவி, சீனு மோகன் போன்றவர்களின் இயல்பான நடிப்பு பாராட்டத்தக்கது. குறிப்பாக ராதாரவி பெரிய ஆச்சரியம்.

பாபிசிம்ஹாவின் பாத்திர வடிவமைப்பும் நுட்பமானதே. ஆண் உலகத்தில் சீீரழியும் பெண்கள் மீது அவனுக்கு அனுதாபம் இருக்கிறது. அவர்களைக் காப்பாற்ற வேண்டுமென்கிற ஆதாரமான உணர்விருக்கிறது. அதற்காக நடைமுறை விழுமியங்களைக் கூட இயல்பாக தாண்டத் தயாராக இருக்கிறான். திருமணப் போகும் நண்பனின் மனைவி மீது அவனுக்கு ஈர்ப்பு வருகிறது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். ஆனால் விஜய்சேதுபதி முன்கோபத்தில் ஒரு கொலையைச் செய்து விட்டு சிறைக்குப் போய் மனைவியை தவிக்க விடும் போது அந்த அனுதாபம் மீண்டும் காதலாக பெருக அந்தச் சமயத்தில் தன்னை வெளிப்படுத்துகிறான். அவன் சொல்லும் முறையின் நாகரிகத்தால் அஞ்சலி ஈர்க்கப்படுகிறாள். ஆனால் மனதளவில் மட்டுமே. இறுதிக் காட்சியில் கூட வேறு ஊருக்குச் செல்லும் விஜய்சேதுபதியிடம் 'உன் மனைவியை பார்த்துக் கொள்' என்று பாபி சிம்ஹா எச்சரிக்கை செய்கிறான். அது வரை ஆத்திரத்தைக் கட்டுக்குள் வைத்திருந்த விஜய்சேதுபதிக்கு இந்த ஒரு புள்ளி கரையைக் கடக்கும் பொருளைத் தருகிறது.

சந்தோஷ் நாராயணின் சில பாடல்கள் இடையூறாய் அமைகின்றன. கதை சொல்லும் பாணியும் எடிட்டிங்கும் இத்திரைப்படத்தில் அற்புதமாக உள்ளன. என்றாலும் சில காட்சிகளைக் கத்தரித்திருந்தால் இதுவொரு செம்மையான திரைப்படமாக உருவாகியிருக்கக்கூடும். எஸ்.ஜே. சூர்யாவின் குடிதொடர்பான காட்சிகள், சிலைக்கடத்தல் போன்ற நம்பகத்தன்மையற்ற காட்சிகள் போன்றவை மையத்திலிருந்து விலகியிருக்கின்றன. என்றாலும் 'எவராலும் ஆராதிக்கப்படாமலிருக்கும் இறைவி சிலைகளை அவை போற்றப்படும்  இடத்திற்கு நகர்த்திச் செல்வது ஒருவித அறம்' என்கிற பொருளை பெண்களுக்கும் பொருத்திப் பார்க்க இயக்குநர் நினைப்பது நுட்பமானதொன்று.

***

படத்தயாரிப்பாளர் என்கிற நபர் இதன் இயக்குநருக்குள் ஒரு கசப்பான, வன்மமாக படிமமாக உறைந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. முந்தைய திரைப்படமான 'ஜிகர்தண்டாவிலும்' படத்தயாரிப்பாளர் குறித்தான பகடி இருந்தது. இதிலும் ஒரு குரூரமான,அகங்காரமுள்ள தயாரிப்பாளர் வருகிறார். 'உன்னுடைய கோபத்தை உன் படைப்பில் காட்டு்' என்றொரு வசனமும் இத்திரைப்படத்தில் வருகிறது. தயாரிப்பாளரின் கோபத்தினாலும் அவருடைய குடும்பம் பாதிக்கப்படுகிறது. இயல்பான நற்குணங்களைக் கொண்டாலும் ஓர் ஆணின் அதீதமான கோபம் அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை பல்வேறு பாத்திரங்கள் மீண்டும் மீண்டும் இயக்குநர் வலியுறுத்துகிறார்.

இத்திரைப்படத்தில் படத்தயாரிப்பாளர் பாத்திரம் குரூரமாக காட்சிப்படுத்தப்பட்டதற்காக தயாரிப்பாளர் சங்கம் இயக்குநரை கண்டித்தது மோசமான போக்கு. அதுவரையான தமிழ் திரைப்படங்களில் அரசியல், காவல்துறை,  என்று சமூகத்தின் பெரும்பாலான தரப்பினர் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள், கிண்டலடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன், சினிமா நாயகர்கள் கூட பகடி செய்யப்பட்டிருக்கிறார்கள். சுய துறை விமர்சனம் செய்யப்பட்டதற்கு ஏன் தயாரிப்பாளர் சங்கம் கோபப்பட வேண்டும்? அவ்வாறான தயாரிப்பாளர்களே இல்லையா என்ன, அவர்களும் நிறை, குறையுமுள்ள மனிதர்கள்தானே?.

முதல் திரைப்படத்தில் திரில்லர், இரண்டாம் திரைப்படத்தில் இருண்மை நகைச்சுவை, மூன்றாம் திரைப்படத்தில் டிராமா என்று வேறு வேறு வகைமைகளைக் கையாளும் இயக்குநரின் ஆர்வம் பாராட்டப்பட வேண்டியது. கிளைக்கதைகளைக் குறைத்து மையத்தில் இன்னமும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் 'இறைவி' தமிழில் ஒரு முக்கியமான படமாகியிருக்கக்கூடும். இதன் சில பகுதிகளில் அதற்கான அழுத்தமான தடயங்களைக் காண முடிகிறது. கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படைப்பில் அந்த எல்லையைத் தொடுவார்  என நம்புவோம். 


(உயிர்மை இதழில் பிரசுரமானது) 

suresh kannan

No comments: