மனித உரிமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாடுகளுள் ஒன்று இந்தியா. இஸ்லாமிய நாடுகளைப் போன்று இதையும் விட கடுமையான அடக்குமுறைகளும் கட்டுப்பாடுகளும் உள்ள பிரதேசங்களும் உண்டுதான். அங்கெல்லாம் டன் விலையைக் கேட்பார்கள் என்பதுதான் வித்தியாசம். இந்தியாவை விடவும் கருத்துச்சுதந்திரமும் தனிநபர் உரிமையும் அதிகமாக உள்ள மேற்கத்திய பிரதேசங்களையே நாம் உதாரணமாக கொள்ள வேண்டும்.
மானுட குலம் கூடிவாழத் துவங்கி நாகரிக சமுதாயமாக மலர்ந்ததின் அடிப்படைகளில் ஒன்று, ஒவ்வொரு தனிநபரின் சுதந்திரமும் உரிமையும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே. ஆனால் உலகின் பெரும்பாலான அரசதிகாரங்கள் இதன் எதிர்துருவங்களில்தான் இயங்குகின்றன. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையுடன் அறியப்படும் இந்தியாவும் அதில் ஒன்று.
1950-ல் குடியரசு மலர்ந்த போதே ஒவ்வொரு குடிமகனுக்கும் எழுத்துரிமையும் பேச்சுரிமையும் வழங்கப்பட்டு விட்டதே, இங்கு என்ன குறை? என்று ஐந்தாம் வகுப்பு பாடத்தில் வாசித்ததை இன்னமும் நினைவில் வைத்துக் கொண்டு அந்த அறியாமையுடன் எவராவது கேள்வி கேட்பார்கள் எனில் அவர்களுக்கு நடைமுறை பயங்கரங்களைப் பற்றிய எவ்வித புரிதலோ அல்லது அனுபவமோ இல்லை என்பதே பொருள். அரசதிகாரம் நினைத்தால் ஒரு தனிநபரின் பாதுகாப்பை அழித்து எந்நேரமும் அவரின் வாழ்வை தலைகீழாக திருப்பிப் போட்டுவிட முடியும் என்பதே கசப்பான உண்மை. சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கருத்திற்காக விருப்பக்குறி இட்டவர்கள் கூட காவல்துறையின் கைதை எதிர்கொண்ட அவலம் இந்தியாவில்தான் நிகழ்ந்தது என்பது பனிப்பாறையின் நுனி போல ஒரு சிறிய உதாரணம்.
எந்தவொரு அரசும் தன் குடிகளின் கருத்துரிமையை, சமூகக் கோபங்களை ஓரெல்லை வரைதான் அனுமதிக்கும். குக்கரின் மூடியை அவ்வப்போது திறந்து அதன் அழுத்தத்தை சற்று விடுவிப்பது போல தனிநபர்களின், அமைப்புகளின் கோரிக்கைகளும் போராட்டங்களும் எதிர்ப்புகளும் அவரவர்களின் செல்வாக்கின் பலத்தைப் பொறுத்து அனுமதிக்கப்பட்ட எல்லை வரைதான் நகர முடியும். முழுக்கவும் மூடிவிட்டால் அதன் அழுத்தம் தாங்காமல் வெடித்து விடும் என்பது அதிகாரத்திற்கு தெரியும். இது போன்ற அனுமதிக்கப்பட்ட எல்லைகூட பெரும்பாலும் சமூகத்தில் செல்வாக்கு பெற்ற உயர் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கே பொருந்தும். சமூகத்தின் அடித்தட்டு மக்கள், விளிம்புநிலை சமூகத்தினரின் உதிரி மனிதர்களுக்கு இந்த அடிப்படையான வாய்ப்பு கூட கிடைக்காது. அவர்களின் அறியாமை மற்றும் எவ்வித பின்புலமும் இல்லாத காரணத்திற்காக அற்பமான விஷயங்களுக்கு அல்லது சமயத்தில் அது கூட தேவைப்படாமல் அதிகாரத்தினால் நசுக்கப்படும் அப்பாவி பலியாடுகளாக அவர்கள் அல்லல்பட நேரிடும்.
சமூகம் மற்றும் அரசியல் காரணங்களால் பொருளாதார நிலையிலும் சாதியபடி நிலையிலும் விளிம்புகளில் நின்று ஏற்கெனவே துன்புறும் அச்சமூகத்து மக்களை காவல்துறை உள்ளிட்ட அதிகார வட்டமும் சேர்ந்து நசுக்கும் நிதர்சனமான உண்மையின் அவலத்தை தன் ‘விசாரணை’ திரைப்படத்தின் மூலம் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.
***
ஒரு சாமானியன் தம்முடைய அடிப்படையான உரிமையைப் பெறுவதற்காக கூட எந்தவொரு அரசு அலுவலகத்திலும் கூனிக்குறுகி நிற்க வேண்டியிருப்பதை அன்றாட நடைமுறையில் காண்கிறோம். அரசு அதிகாரிகள் தம்முடைய அடிப்படையான கடமையை செய்வதற்கு கூட குடிமக்களை அலட்சியமான மெத்தனத்துடன் பலமுறை அலைய வைப்பதையும் ஏழை எளியவர்களிடம் கூட வாய் கூசாமல் லஞ்சம் கேட்பதையும் அன்றாடம் காண முடிகிறது. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அமைப்புகள், அதில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் அந்த அடிப்படைகளையெல்லாம் மறந்து விட்டு மக்களை அலட்சியமாக நடத்துவதை தினசரி பயணிக்கும் பேருந்தின் நடத்துநர்கள் முதல் அரசு இயந்திரத்தின் எந்தவொரு உதிரிப்பாகத்தின் முன்னாலும் அனுபவிக்கிறோம்.
இது போன்ற அரசு அமைப்புகளில் நாம் வழக்கமாக எதிர்கொள்ளும் அலட்சியத்தையும் லஞ்சத்தையும் தவிர கூடுதலாக அச்சத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பது காவல்துறை என்னும் அமைப்பிடமிருந்து. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களுக்கு நம்பிக்கையையும் ஆசுவாசத்தையும் அளிக்க வேண்டிய காவல்துறை அதற்கு எதிர்மாறான எண்ணங்களை உற்பத்தி செய்வது துரதிர்ஷ்டமானது. ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்கிற சம்பிரதாயமான அறிவிப்பைத் தாண்டி காவல்துறையை அணுக வேண்டிய சந்தர்ப்பங்களை நடைமுறையில் எவ்வாறெல்லாம் நாம் தவிர்க்கிறோம், அச்சப்படுகிறோம் என்பதிலிருந்தே அதன் இயங்குமுறையின் அவலம் உறுதியாகிறது. ‘இந்த அறுபது வருஷத்துல ஒருமுறை நான் போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிச்சதில்ல’ என்று பெருமையுடன் சொல்வதிலிருந்து அங்கு அவசியமான காரணத்திற்கு செல்வதென்பது கூட ஒழுக்கத்திலிருந்து பிறழும் செயலாகவே சமூகத்தில் எண்ணப்படுகிறது.
என்னுடைய தனிப்பட்ட அனுபவம் இது. நண்பருக்காக ஒரு முறை அவருடன் காவல்நிலையம் செல்ல வேண்டியிருந்தது. குடும்ப சச்சரவு காரணமாக அவருடைய மனைவி எவருக்கும் தகவல் தராமல் எங்கோ சென்று விட்டார். எங்கு தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. நண்பர்களின் யோசனைப்படி காவல்துறையில் புகார் தந்து விடலாமென்று முடிவெடுக்கப்பட்டது. தயங்கிக் கொண்டிருந்த நண்பருக்கு தைரியம் தந்து அழைத்துச் சென்றேன். காவல் நிலையத்தில் நுழைந்து தயக்கத்துடன் வந்திருக்கும் விஷயத்தைச் சொன்னவுடன் காவல்துறையின் இளநிலை அதிகாரி அலட்சியத்துடன் கொச்சையான வார்த்தைகளால் கேட்ட முதல் கேள்வி. “அவ எவன் கூடயாவது ஓடிப் போயிருப்பா. நல்லா விசாரிச்சுப் பார்த்தியா?…
எதிர்பாராத இந்த அதிரடியால் நண்பர் அவமானத்தினால் கூசிக் குறுகிப் போனார். நான் அவரை சைகை காட்டி வெளியே அழைத்து வந்தேன். பிறகு வழக்கறிஞருடன் சென்றுதான் அந்தப் புகாரை பதிவு செய்ய முடிந்தது. இத்தனைக்கும் நண்பர் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறுப்பான பதவியை வகிப்பவர். அவருக்கே இந்த நிலைமை என்றால் ஓர் அடித்தட்டு ஆசாமி இன்னமும் எத்தனை அவலமான நிலைமையை சந்திக்க வேண்டும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்கத் தேவையில்லை. வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகி விடக்கூடாது என்பதற்காக எந்தவொரு புகாரையும் எழுத்துப்பூர்வமாக அங்கீகரிக்காமல் தவிர்ப்பதே காவல்துறையின் பாலபாடம்.
இன்னொரு புறம் ஒரு காவல் நிலையத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாவதும் அது தீர்க்கப்படுவதுமான ‘கணக்குகள்’ உருவாக்கப்பட வேண்டிய அவசியமிருக்கிறது. இந்த வழக்குகளை தீர்ப்பதற்காக அவர்களுக்கு சாதகமான பல உண்மைகளை ‘உருவாக்கி” எதற்கு எது சரியாகப் பொருந்துமோ அந்த உண்மையைப் பொருத்திக் கொள்கிறார்கள். காவல்துறை தங்களின் ‘இருப்பை’ நியாயப்படுத்துவற்கான உபாயங்கள் இவை.
‘நாலு போலிஸூம் நல்லா இருந்த ஊரும்’ என்றொரு தமிழ் திரைப்படம் சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. எந்தக் குற்றமுமே நிகழாத ஒரு கிராமத்தில் (?!) அங்குள்ள காவலர்கள் நிம்மதியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அங்கு எந்தக் குற்றமுமே பதிவாகாத நிலையில் காவல்நிலையம் எதற்கு என்கிற கேள்வி உயர்மட்டத்தில் எழுவதால் அந்தக் காவல் நிலையத்தை மூடி விட்டு அந்தக் காவலர்களை குற்றம் அதிகம் நிகழும் ஆபத்தான இன்னொரு பகுதிக்கு மாற்றம் செய்யவிருப்பதாக தகவல் வரும். பதறிப் போகும் அவர்கள் அந்தக் கிராமத்திலேயே தங்குவதற்கான உபாயமாக அவர்களே அங்கு ‘குற்றச் சம்பவங்களை’ உருவாக்கிவிட்டு பின்பு அவர்களே தீர்க்க முயல்வார்கள். இது ஒரு நகைச்சுவை திரைப்படம் என்றாலும் கூட நடைமுறையில் நடப்பதுவும் இதுவே.
‘திருடன் மணியன் பிள்ளை’ என்கிற மலையாள மொழிபெயர்ப்பு நூலை வாசித்தால் உதிரிக்குற்றவாளிகளுக்கும் காவல்துறைக்குமான விநோதமான, பிரிக்கமுடியாத அழுத்தமான நடைமுறை உறவை உணர முடியும். தாழ்விலிருந்து உயர்ந்தெழுந்து மறுபடியும் அடங்கும் ஒரு கிராஃபை போல சந்தர்ப்பத்தால் சில்லறைத் திருடனாகி பிறகு அதையே தொழிலாக்கி அரசியல்வாதியாகி வெற்றி பெற்று ஓர் அபத்தமான சறுக்கலால் மீண்டும் துவக்க நிலையை நோக்கி வீழ்ச்சியடைந்த தன் சுய அனுபவங்களை அந்த நூலில் எள்ளலான கசப்புடனும் நகைச்சுவையுடனும் விவரித்திருப்பார் மணியன் பிள்ளை.
ஒரு சில்லறை வழக்கில் பிடிபட்டு விட்டால் அவர் மீது நிலுவையில் இருக்கும் நாலைந்து வழக்குகளையும் சேர்த்துப் போடுவது காவல்துறையின் வழக்கமான நடைமுறை. அடிவாங்க விரும்பாமல் அவற்றை ஒரு ராஜமரியாதையுடன் ஏற்றுக் கொண்டு சிறை சென்ற அவருடைய அனுபவங்கள் அந்த நூலில் நிரம்பி வழியும். அடித்தட்டு சமூகத்தைச் சார்ந்த ஒருவர், அது பொய் வழக்காக இருந்தாலும் கூட, ஒரு முறை திருட்டு வழக்கில் பதிவாகி விட்டால் போதும், அவர் ஒருபோதும் மீள முடியாத படியான ஒரு பாதைக்குள் செல்ல நேரிடும். காவல்துறை அவரை செய்த அல்லது செய்யாத ஏதாவதொரு வழக்கில் தொடர்புபடுத்திக் கொண்டேயிருக்கும். ஒரேயொரு முறையான இந்தக் குற்றத்தின் நிழல் அவர் வாழ்நாள் முழுக்க அவர்மீது கவிழ்ந்து அவரைத் துரத்திக் கொண்டேயிருக்கும்.
காவல்துறையும் சிறைச்சாலைகளும் குற்றங்கள் உருவாகாமல் தடுக்கவும் குற்றவாளிகள் மனந்திருந்தி மையநீரோட்டத்தில் மறுபடி இணைந்து வாழ்வதற்காக உருவான அமைப்புகள் என்கிற அடிப்படையிலிருந்து முற்றிலும் எதிர்விதமாக அவையே குற்றங்களின் ஊற்றுக்கண்களாகவும் அதிகார வட்டத்தின் குற்றங்களுக்கு உடந்தைகளாகவும் இருக்கும் அவலத்தை வெற்றிமாறனின் ‘விசாரணை’ இயன்ற அளவிற்கான யதார்த்தத்துடன் பதிவு செய்திருக்கிறது.
***
சிறைச்சாலை என்றாலே வெள்ளை சீருடை அணிந்த குற்றவாளியுடன் கம்பி போட்ட சிறைக்குப் பின்னால் அவருடைய தாயாரோ அல்லது காதலியோ சாவகாசமான நேரத்து உருக்கமான வசனங்களுடன் கண்ணீர் சிந்தி விட்டு வரும் இடம் என்கிற அபத்தமான கற்பனையை ‘மகாநதி’ திரைப்படம் அதிஉக்கிரமாக உடைத்துப் போட்டது. காவலர்களுக்கும் வலிமையான கைதிகளுக்கும் இருக்கும் வணிக ஒப்பந்தங்களையும் அங்குள்ள விநோதமான முரட்டு நடைமுறைகளையும் முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் விவரணைகளுடன் பதிவு செய்திருந்தது. அதைப் போலவே லாக்கப்பில் அடைத்து வைத்திருக்கும் விசாரணைக் கைதிகளை ஏதோ செட் பிராப்பர்ட்டி மாதிரியே இதுவரை பெரும்பாலும் சித்தரித்துக் கொண்டிருந்த சினிமாக்களிலிருந்து விலகி காவல்துறையின் லட்டிகளின் மூலம் எவ்வாறு அந்த அப்பாவி மனிதர்கள் குற்றவாளிகளாக ‘உருமாற்றம்’ செய்யப்படுகிறார்கள் என்கிற அவலத்தின் இருண்மையை சிறப்பாக பதிவாக்கியிருக்கிறது ‘விசாரணை’ திரைப்படம்.
பெரும்பாலான தமிழ் சினிமாவின் நாயகர்கள் காவல்துறை அதிகாரிகளாக நடித்த திரைப்படங்களில் ஆக்ரோஷமான உரத்த குரலில் நிறைய வசனம் பேசி நீதியை நிலைநாட்ட வந்த அவதார புருஷர்களாகவும் எவ்வித விதிமுறைகளுக்கும் இணங்காமல் குற்றவாளிகளை விரட்டி விரட்டிக் கொல்லும் மிகைத்தன்மையிலான நாடகங்களையே இதுவரை கைத்தட்டி பார்த்து வந்திருக்கிறோம். அந்தக் காட்சிகளில் ‘குற்றவாளிகள்’ அல்லது குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுபவர்கள், வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல என்பதும் அவர்கள் உருவாவதற்கான சமூகவியல் காரணங்களையும் இந்தச் சமூகமும் குற்றவாளிகள் உருவாவதற்கான ஒரு காரணி என்கிற பிரக்ஞையை பற்றி கவலைப்படாமல் குற்றவாளியைக் கொன்று விட்டால் குற்றங்களும் இறந்து விடும் என்று அப்பாவித்தனமான நம்பிக்கையை அந்தத் திரைப்படங்கள் வளர்த்தன. சாகடிக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தானா, அவர்களுக்கு பின்னால் இருந்து இயக்கும் அதை விடவும் பெரிய குற்றவாளிகளும் பங்கு என்ன என்பதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.
காவல்துறையிலேயே உள்ள பல குற்றவாளிகள் தங்களின் சுயநலத்திற்காகவும் ஆதாயங்களுக்காகவும் தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அப்பாவிகளை பிடித்து வந்து வன்முறை பிரயோகங்களின் மூலம் குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்பவர்களாக இருப்பதையும் அத்துறையில் அவர்களுக்கென்று உள்ள விநோதமான சடங்குகளையும் ஒப்பந்தங்களையும் ‘உள்வட்ட’ ரகசியங்களையும் பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது இத்திரைப்படம்.
***
ஆந்திர மாநிலம், குண்டூரில் பிழைப்பு தேடி சென்ற நான்கு அப்பாவி தமிழக இளைஞர்கள் காவலர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்குத் தொடர்பேயில்லாத ஒரு வழக்கின் குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி நையப்புடைக்கப்படுகிறார்கள். மறுக்க மறுக்க அடியும் உதையும் அதிகமாகிறது. “உங்களை திருடனையா பிடிக்கச் சொன்னேன், வழக்கைத் தானே முடிக்கச் சொன்னேன். அதுக்கு கூட துப்பில்லையா?” என்று உயரதிகாரி, கீழ்நிலை அதிகாரிகளை மிரட்டுகிறார். மேலதிகாரிகளிடமிருந்து அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க அப்பாவிகளுக்கு அடி உதையும் அதற்கேற்ப அதிகமாகிறது.
இன்னொரு வழக்கிற்காக அங்கு செல்லும் தமிழக காவல்துறை அதிகாரி ஒருவர் உதவி செய்வதால் அந்த இளைஞர்கள் விடுவிக்கப்படுகின்றனர். அதிகாரியின் மீது உண்டாகும் நன்றியுணர்ச்சிக்காக ஓர் அரசியல் கட்சி தொடர்பான முக்கிய புள்ளியை கடத்துவதற்காக அவருக்கு உதவுகின்றனர். கதை பின்பு தமிழகத்திற்கு இடம் மாறுகிறது. அரசியல் ஆசாமி லாக்அப்பில் உயிர்விட்டு விட மேலிடத்திலிருந்து காவல்துறையினருக்கு ரகசிய உத்தரவுகளும் அதற்கேற்ப பேரங்களும் நிகழ்கின்றன. இந்த உரையாடலின் ரகசியத்தை இளைஞர்கள் கேட்டுவிட்டார்களோ என்கிற சந்தேகத்தின் பேரில் அவர்களை இன்னொரு வழக்கில் தொடர்புப்படுத்தி என்கவுண்ட்டரில் போட்டுத்தள்ள உத்திரவிடுகிறார் உயர்காவல்அதிகாரி. அந்த இளைஞர்களை காப்பாற்றி அழைத்து வந்த இளநிலைஅதிகாரி நடைமுறை உண்மைக்கும் மனச்சாட்சியின் குரலுக்கும் இடையே தத்தளிக்க இந்தக் காரணத்திற்காகவே அவரும் இளைஞர்களோடு பலியாக்கப்படுவதோடு நிறைகிறது திரைப்படம்.
மு.சந்திரகுமார் என்பவர் இது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தாம் எதிர்கொண்ட காவல்துறை விசாரணை அனுபவங்களின் கதறல்களை ‘லாக்கப்’ என்கிற நூலாக பதிவு செய்திருக்கிறார். அந்த நூலில் இருந்து முன்பாதி திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. பின்பாதி திரைக்கதை அதனுடைய நுட்பமான, பொருத்தமான நீட்சி என்றாலும் பின்னிணைப்பு என்பது தெளிவாகத் தெரியும்படி ஆகியிருப்பது திரைக்கதையின் ஒரு சறுக்கல்.
இந்தியாவெங்கிலும் காவல்துறையானது ஏறத்தாழ ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகிறது என்பதை ஆந்திராவிலும் தமிழகத்திலும் நிகழும் காட்சிகள் தெரிவிக்கின்றன. உதிரிக்குற்றவாளிகள் எவ்வித விளக்கத்திற்கும் வாய்ப்புத் தரப்படாமல் எடுத்த எடுப்பிலேயே இருட்டறையில் அடி, உதையை சந்திக்கும் போது அரசியல் புள்ளிகளுடன் தொடர்புள்ள வொயிட் காலர் கிரிமினல்கள் ஏஸி அறையில் மரியாதையுடன் விசாரிக்கப்படுகின்றனர். இரண்டு விசாரணைகளுக்கும் உள்ள வித்தியாசம், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிற சம்பிரதாய வாக்கியங்களை கேலிக்கூத்தாக்குகின்றன.
ஆனால் ஏஸி அறையில் மரியாதையாக விசாரிக்கப்பட்டவரும் மேலிடத்திலிருந்து அதற்கான சமிக்ஞை வந்தவுடன் அவருமே உதிரிக்குற்றவாளிக்கான வன்முறையை எதிர்கொள்ள நேரிடுகிறது. சில நிமிடங்களில் ஒருவரின் மரியாதையும் நிலைமையும் தலைகீழாகி விடுகிறது. இந்த அபத்தங்களையும் இதன் பின்னால் உள்ள அரசியல் காரணங்களையும் பேரங்களையும் வெற்றிமாறன் மிக நுட்பமாக பார்வையாளர்களுக்கு உணர்த்திச் செல்கிறார்.
**
தண்டனை பெற்ற கைதிகளைத் தவிர சிறைச்சாலைகளிலும் காவல்நிலைய லாக்கப்களிலும் இருக்கும் விசாரணைக் கைதிகளே அதிகம் என்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஜாமீன்தொகையை கட்டுவதற்கு வசதியில்லாத நபர்கள், அதற்கான வழிகாட்டுதல்களைப் பெற முடியாத நபர்கள் பெரும்பாலான காலத்தை விசாரணக் காலத்திலேயே கழிக்க வேண்டிய அவலத்தை மனிதஉரிமை ஆணையம் பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் எந்தவித பின்புலமும் அல்லாத அப்பாவி அடித்தட்டு மக்கள் என்பதை தனியாக குறிப்பிடத் தேவையில்லை.
உண்மையான குற்றவாளிகளை தேடிப்பிடிப்பதை விட வழக்குகளை முடிக்க வேண்டும் என்கிற அழுத்தத்தின் காரணமாகவே அப்பாவி நபர்கள் ‘குற்றவாளி’யாக்கப்படுகின்றனர். சிறைக்குச் சென்று வருவதின் மூலம் இவர்களும் தேர்ந்த குற்றவாளியாகவே மறுபடி சமூகத்தினுள் நுழைகின்றனர். இவ்வாறானவர்களை அவர்களின் குற்ற அடையாளத்திற்காக சமூகம் ஒருபுறம் புறக்கணிக்க, காவல்துறையினரும் இவர்களை திருந்தி வாழ அனுமதிப்பதில்லை. காவல்துறையும் சிறைச்சாலையும் குற்றங்களை தடுப்பதற்கு பதிலாக புதிய புதிய குற்றவாளிகளை மேலதிகமாக உற்பத்தி செலவும் அவலமே நடைபெறுகிறது. ‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது’ என்கிற நீதி சார்ந்த கேட்பாடு வெற்று முழக்கமாக அல்லாமல் உண்மையிலேயே நடைமுறைபடுத்தப்படுகிறதா என்பதை நீதித்துறையும் அரசாங்கமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கணக்கு காட்டுவதற்காக வழக்குகள் பதியப்பட்டும், முடிக்கப்படுவதுமான கொடூரமான சம்பிராதயங்கள் களையப்பட்டு ஒட்டுமொத்த அமைப்புமே சீர்திருத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு மனித உறுப்புக்கான சிறப்பு மருத்துவர்கள் இருப்பதைப் போலவே லாக்கப் மரணங்களை திறமையாக மூடி மறைக்கவும் சாட்சியங்களை அதற்கேற்ப திறமையாக கலைக்கவும் கையாளவும் என்கவுண்ட்டர் மரணங்களை நிகழ்த்துவதற்கும் அந்தச் சம்பவங்களை தங்களுக்குச் சாதகமான வகையில் ஊடகங்களில் செய்தி வரவழைப்பதற்கும் அதற்கான சிறப்பு அனுபவம் உள்ள காவல்துறை நபர்கள் பயன்படுத்தப்படும் கறுப்பு நகைச்சுவையையும் இத்திரைப்படம் பதிவு செய்திருக்கிறது. கசாப்புக் கடைக்காரர்கள் விலங்குகளை கையாளும் அதே லாவகத்தோடு மனச்சாட்சியின் எவ்வித உறுத்தலும் அன்றி இவர்கள் மனித உடலைக் கையாளுகின்றனர். அரசியல் புள்ளியின் லாக்கப் மரணத்தை தற்கொலையாக மாற்றும் நோக்கத்துடன் உடலைத் தொங்க விடும் காட்சியில் சிறப்பு அனுபவம் உள்ள அதிகாரி, இன்னொருவரிடம் ‘தொழிலைக் கத்துக்கடா’ (?!) என்கிறார்.
இறுதிக்காட்சியில் இளைஞர்களை என்கவுண்ட்டரில் சாகடிப்பதில் ஏற்பட்ட சறுக்கலை “அரை மணி நேரத்துல ஈசியா முடிச்சிருக்க வேண்டிய விஷயம். வேலை தெரியாம இப்படி இழுத்தடிக்கறீங்க” என்கிறார் ஏதோ டிவியை ரிப்பேர் செய்வது போல. குற்றங்களுடன் பழகிப் பழகி உணர்ச்சிகள் முற்றிலும் மரத்துப்போன இயந்திரங்களாக அவர்களை மாற்றியிருக்கிறது அரசு இயந்திரம்.
இதில் பலியாகும் அரசியல் புள்ளியின் மரணமும் காவல் அதிகாரியின் மரணமும் அப்பாவி இளைஞர்களின் மரணமும் தமிழகத்தில் இதற்கு முன் நிகழ்ந்த பல உண்மை சம்பவங்களின் கசப்பை மீண்டும் நினைவுப்படுத்துகின்றன, சமீபத்தில் நிகழந்த டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியாவின் மரணம் உட்பட.
உதிரிக்குற்றவாளிகளை, நிரபராதிகளை பலியாக்கும் காவல் அதிகாரிகள், அவர்களுக்கு மேலே அழுத்தம் தரும் மேல்நிலை அதிகாரிகள், அவர்களை பின்னிருந்து இயக்கும் அரசியல்வாதிகள், அதிகார வட்டங்கள், அரசாங்கத்தை மறைமுகமாக இயக்கும் தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவன முதலாளிகள் என்று இந்தப் படிநிலைகளில் நிகழும் பேரங்கள், ஆதாயங்கள், துரோகங்கள், அந்தந்த சூழலில் அரசியல் மேகங்களின் நகர்வுகளுக்கேற்ப மாறும் நடவடிக்கைகள் என்று இந்த ஒட்டுமொத்த விஷப்பின்னல் எங்கே துவங்கி எங்கே முடிகிறது என்பதை கண்டுபிடிக்கவே முடியாதபடியான இடியாப்ப சிக்கலாக இருக்கிறது.
ஒவ்வொருவருமே அவரவர்களின் நிலைகளில் பலியை நிகழ்த்துபவர்களாகவும் பலியாபவர்களாகவும் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். அரசியல் புள்ளி சாகும் தறுவாயில் தன்னைக் கைது செய்த காவல் அதிகாரியிடம் ‘உன்னை வெச்சு என்னைத் தூக்கின மாதிரி வேறு எவனையாவது வெச்சு உன்னைத் தூக்கிடுவாங்க” என்று அருள்வாக்கு சொல்கிறார். இறுதியில் அப்படியேதான் ஆகிறது. இந்த ஆடுபுலி ஆட்டத்தின் இடையில் நீதி, அறம், விசாரணை போன்ற விழுமியம் சார்ந்த சொற்களெல்லாம் எவ்வித பொருளும் அன்றி கேலிக்கூத்தான விஷயங்களாக நிற்கின்றன.
***
பொருட்பொதிந்த காட்சிகளின் அழகியலோடும் நுண்ணுணர்வோடும் தமது படைப்புகளை இயக்குபவர்களில் வெற்றிமாறன் தனித்துத் தெரிகிறார். இதுவரையில் மிக குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்களை அவர் உருவாக்கியிருந்தாலும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இடையே அதை விட அதிகமான உயரத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை மெய்ப்பிக்கிறது ‘விசாரணை’யின் உருவாக்கமும் செய்நேர்த்தியும். ஆந்திர மாநிலத்தின் லாக்கப் காட்சிகள் பெரும்பான்மையான இருளோடும் கசியும் வெளிச்சத்தோடும் நிகழ்வுகளின் பயங்கரத்தை எதிரொலிப்பதாக இருக்கின்றன.
தினேஷ், கிஷோர், முருகதாஸ் போன்றவர்கள் சிறப்பாக நடித்திருந்தாலும் அதிக அளவிலான கவனிப்பைப் பெறுவராக சமுத்திரக்கனியைச் சொல்ல வேண்டும். காவல்துறையின் உணர்ச்சியற்ற, கொடூரமான நடைமறை கசப்புகளுக்கும் தம்முடைய மனச்சாட்சியின் குரலுக்கும் இடையே தத்தளிப்பவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மனித உடல் வதைபடும் காட்சிகளில் பார்வையாளர்களிடம் அதன் இரக்கத்தைக் கோரும் பொருட்டு கதறியழும் இசை அதன் நோக்கத்திற்கு மாறாக எரிச்சலையே கூட்டுகிறது. சர்வதேச திரையிடல்களில் பின்னணி இசை உள்ளிட்ட இதர மசாலாக்கள் இல்லைனயென்று கூறப்படுகிறது. தரம் வாய்ந்த தேயிலையை மேலை நாடுகளின் ஏற்றுமதிக்கும் அதன் சக்கையை உள்ளுரில் சந்தைப்படுத்தும் வணிக ஏற்பாட்டின் அப்பட்டமான மோசடியைப் போன்று இத்திரைப்படமும் ஆக நேர்ந்தது தயாரிப்பாளர்களின் கட்டாயத்தினாலா அல்லது இயக்குநரின் தேர்வா என்பது தெரியவில்லை.
அதிகாரம் எனும் பிரம்மாண்ட இயந்திரத்தின் முன் சாமானிய நபர்கள் எவ்வித விசாரணையும் அன்றி தண்டிக்கப்படும் நடைமுறை அவலத்தை மிக நுட்பமாகவே காட்சிப்படுத்தியிருக்கிறது இத்திரைப்படம். இதைப் பார்த்து விட்டு ஒரு சாமானியன் காவல்துறை மீது மேலதிகமாக பயங்கொள்ளும் விதத்தை விட மீறப்படும் தம்முடைய அடிப்படையான மனித உரிமையை போராடியாவது கோரிப்பெறும் நம்பிக்கை விதைகளுக்கான சங்கேதங்களையும் கற்றல்களையும் இத்திரைப்படத்தில் இணைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. என்றாலும் சமகால உண்மையின் கசப்பை நேர்மையாக பதிவு செய்திருப்பதின் மூலம் ‘விசாரணை’ இதுவரையான தமிழ் திரையின் ஒரு முக்கியமான, கவனிக்கத்தக்க பதிவு என்கிற பெருமையைப் பெறுகிறது.

(உயிர்மை இதழில் பிரசுரமானது)
suresh kannan
No comments:
Post a Comment