கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு 'சபாஷ் நாயுடு' என்று அறிவிக்கப்பட்டதுதான் தாமதம், அது குறித்த சாதிய நோக்கிலான விமர்சனங்களும் கண்டனங்களும் நுண்ணரசியல் தேடும் பதிவுகளும் குவியத் துவங்கி விட்டன. படத்தின் தலைப்பில் சாதியின் பெயரை கமல்ஹாசனால் தவிர்க்க முடியாதா என்று கேள்விகளும் உள்நோக்கத்துடன்தான் அவர் இது போன்ற தலைப்புகளை தொடர்ச்சியாக வைக்கிறார் என்கிற கோபங்களும் கிளம்புகின்றன.
இத்திரைப்படத்தின் உள்ளடக்கம் எதைப் பற்றியது என்பதையறியாமல் வெறும் தலைப்பை வைத்தே விமர்சனம் செய்வது எம்மாதிரியான நெறி என்பது தெரியவில்லை. முன்னர் தென்மாவட்டங்களில் நிகழ்ந்த சாதியக் கலவரங்களுக்கும் வன்முறைகளுக்கும் கமல்ஹாசனின் 'தேவர் மகன்' திரைப்படமும் அதன் பாடலும் காரணமாக இருந்தது; துணை போனது என்கிற கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக 'தேவர் காலடி மண்ணே' என்று துவங்கும் திரைப்பாடல் தேவர் சமூகத்தினருடைய சாதியப் பெருமிதங்களின் ஒரு நிரந்தர அடையாளமாகி தலித் சமூகத்தினரின் மீது ஒரு வெறுப்பேற்றும் ஆயுதமாகவே எறியப்பட்டு கலவரங்களுக்கு காரணமாகின என்கிறார்கள்.
இந்த விஷயங்கள் குறித்து சற்று நிதானமாகவும் சமநிலையோடும் உரையாட முயல்வோம். இந்தக் கட்டுரை எந்தவொரு தனிநபருக்கும் அமைப்பிற்கும் சமூகத்திற்கும் ஆதரவான அல்லது எதிரான நோக்கில் எழுதப்பட்டதில்லை என்பதை மாத்திரம் மனதில் இருத்திக் கொண்டு வாசிப்பை தொடர வேண்டுகிறேன்.
***
தமிழ் சினிமா உருவாகத் துவங்கியதிலிருந்தே சாதி, மதம் தொடர்பான சர்ச்சைகளும் கூடவே இணைக்கோடாக பயணிக்கத் துவங்கின. தமிழ் படவுலகின் தந்தை என கருதப்படும் கே.சுப்பிரமணியம் 'பாலயோகினி' என்கிற திரைப்படத்தை 1937-ல் உருவாக்கினார். சாதிய வெறியை சாடும் சமூக சீர்திருத்த கதை இது. படத்தில் விதவைப் பெண் பாத்திரத்திற்கு பிராமண விதவைப் பெண் ஒருவரையே நடிக்க வைத்தார். வைதீக பிராமணர்களிடமிருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.1952-ல் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதி எழுதிய 'அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?' என்பது போன்ற நாத்திக பிரச்சார கருத்துக்கள் ஆத்திகர்களால் கடுமையாக ஆட்சேபிக்கப்பட்டன. 1954-ல் வெளியான சொர்க்கவாசல் திரைப்படத்திற்காக மூட நம்பிக்கையின் மீது அமைந்த வைதீகச் சடங்குகளை விமர்சித்து அண்ணாதுரை எழுதிய வசனங்கள் கடுமையான சர்ச்சைக்குள்ளாகி சென்சாரில் பிறகு வெட்டப்பட்டன.
திரைப்படங்களில் தங்கள் சமூகத்தினர் தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்று பிராமணர்கள் துவங்கிய இம்மாதிரியான எதிர்ப்புகள் பிறகு மெல்ல மற்ற சமூகத்தினர் இடையேயும் பரவியது. 'கரை கடந்த குறத்தி' என்கிற திரைப்படத்தின் தலைப்பு காரணமாகவே அச்சமூகத்தினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தமையால் 'கரை கடந்த ஒருத்தி'யாக மாற்றப்பட்டது. பின்பு இடைநிலைச் சாதிகளின் பெருமைகளை விதந்தோதும் திரைப்படங்கள் வரிசையாக வந்து குவியத் துவங்கின. அது குறித்த சர்ச்சைகளும் எழுந்தன. இந்தக் குவியல்களில் எவை சாதியப் பெருமிதங்களை நிலைநாட்டுகிறது, எவை அதன் எதிர்திசையில் இயங்குகிறது என்று சமநிலையோடு களைந்து பார்க்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.
***
எந்தவொரு படைப்பையும் கீழிறக்கி அதை சர்ச்சைக்குள்ளாக்குவதற்கு மிக எளிமையான வழி ஒன்றுண்டு. அந்த படைப்பின் ஒரு பகுதியை தங்களுக்கு சாதகமாக ஏற்றவாறு ஒடித்து துண்டித்து அதை உள்நோக்கமுடைய பரப்புரை வாசகங்களுடன் மீண்டும் மீண்டும் பதிவு செய்து கொண்டேயிருப்பது. இது போன்று 'உருவாக்கப்படும்' சர்ச்சைகள் எளிதில் கவனத்திற்கு உள்ளாகும் வாய்ப்பிருப்பதால் அவை உடனே பரவி அந்த துண்டிக்கப்பட்ட கருத்து மிக எளிதாகவே தொடர்புடைய படைப்பிற்கு எதிரானதொன்றாக நிலைபெற்று விடும். இது மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு, மேற்கோள் காட்டப்பட்டு வரலாற்றின் ஒரு பகுதியாகவே மாறி விடும். பிறகு சம்பந்தப்பட்ட படைப்பாளியோ அல்லது அவரது பிற்கால ஆதரவாளரோ நினைத்தால் கூட இந்த எதிர்பரப்புரையை உடைத்து அத்தரப்பு நியாயத்தை நிலைநிறுத்துவது கடினமாகி விடும்.
இவ்வகையான எதிர்பரப்புரைகள் உள்நோக்கமல்லாமல் கவனக்குறைவாக கூட தவறாக நிலைநிறுத்தப்படும் வழக்கமுண்டு. உதாரணமாக பாரதியின் 'மெல்ல தமிழினி சாகும்' என்ற ஒற்றை வரி மாத்திரம் தவறாக பலமுறை மேற்கோள் காட்டப்பட்டு பாரதியே தமிழ் மொழியின் அழிவை யூகமாக சொல்லி விட்டார் என்று சிலர் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக அவரைத் திட்டுபவர்களும் உண்டு. அந்தக் கவிதையின் தொடர்ச்சியாக 'என்றந்தப் பேதை யுரைத்தான்' என்பதை அவர்கள் அறிவதில்லை. மீண்டும் மீண்டும் இது தவறு என்று பாரதி அன்பர்களும் தமிழறிஞர்களும் விளக்கிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. தமிழ் மொழியின் முன்னோடியான பாரதி அப்படி சொல்லியிருப்பாரா என்பதை சரிபார்த்துக் கொள்ளக் கூட பலருக்குத் தோன்றுவதில்லை. எதிர்பரப்புரையில் உள்ள வசீகரத்தின் பலமே இதுதான்.
ஓரு திரைப்படத்தின் தலைப்பு அல்லது அதன் சில வசனங்களைக் கொண்டே அது சாதியத்திற்கு ஆதரவான திரைப்படம், வன்முறையைத் தூண்டுகிற படம் என்கிற அவசர முடிவிற்கு வருவது முறையற்றது. தீய நோக்குடன் தங்களுக்குச் சாதகமாக சில சாதிய வெறியாளர்கள் செய்யும் அல்லது புரியாதவர்கள் நிகழ்த்தும் இந்த எதிர்பரப்புரைகளுக்கு பாமரர்கள் வேண்டுமானாலும் உணர்வுரீதியாக ஒருவேளை மயங்க நேரலாம். ஆனால் சமநிலையுணர்வுடன் அறிவுசார்ந்து சிந்திப்பவர்களும் பலியாவதுதான் வேதனையானது. ஒரு திரைப்படத்தின் மையம் எதை நோக்கி பயணிக்கிறது; எந்தக் கருத்தை அழுத்தமாகச் சொல்கிறது; அதன் நோக்கம் என்ன என்பதைத்தான் மிக முக்கியமாக கவனிக்க வேண்டும். அது பயணிப்பதற்கு இடையிலான விஷயங்களை துண்டித்து மேற்கோள் காட்டி எதிர்ப்பது அறிவுடைமை ஆகாது.
தென்மாவட்டங்களில் நிகழ்ந்த சாதியக் கலவரங்களுக்கு 'தேவர் மகன்' காரணமாக அமைந்தது என்பது பல சினிமாக்கட்டுரைகளில் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. இதன் காரணமாக அத்திரைப்படம் சாதியத்திற்கு ஆதரவானதொரு பலமான அடையாளமாக நிலைநிறுத்தப்பட்டு கடுமையாக எதிர்க்கப்படுகிறது. இதை சற்று பார்ப்போம்.
தேவர் திரைப்படத்தின் திரைக்கதை என்ன?
சாதியப் பாகுபாடுகளும் பகைமைகளும் சச்சரவுகளும் நிறைந்திருக்கும் ஒரு வழக்கமான தமிழக கிராமம். அந்தச் சூழலில் இருந்து இடையில் விலகியிருந்த ஒரு நவீன மனம் கொண்ட இளைஞன் அங்கு திரும்பி வருகிறான். முற்போக்கு மனோபாவம் கொண்ட அவனுக்கு அங்குள்ள சாதிய மோதல்களும் அதன் தொடர்பாக நிலவும் வன்முறை பதட்டங்களும் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன.பழமைவாத மனநிலை கொண்ட தந்தையிடம் இதையெல்லாம் 'காட்டுமிராண்டித்தனம்' என விவாதிக்கிறான். அங்கிருந்து மறுபடி விலகி விட நினைக்கிறான். ஆனால் அங்கு நடைபெறும் சம்பவங்களும் சூழலும் அந்த வன்முறைக்குள் அவனையும் உள்ளிழுத்துக் கொள்கின்றன. தொடர்ந்து அதனுடன் போராடுகிறான். இதற்காக தன் கனவுகளையும் காதலையும் கூட அவன் இழக்க நேர்கிறது. தேவர் சமூகத்தின் இரு சகோதரர்களுக்குள் நிலவும் பகைமையின் இடையில் நசுக்கப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் துயரத்தையும் இழப்பையும் அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. இறுதியில் தன்னுடைய சமூகத்தைச் சார்ந்த ஒரு பிரதானமான சாதிய வெறியாளனை தற்செயலாக கொன்று விட்டு சிறைக்குச் செல்கிறான். 'சண்டையெல்லாம் போதும்டா.. புள்ளகுட்டிங்கள படிக்க வைங்கடா" என்று கடந்த அனுபவங்களின் வலி காரணமாக கதறுகிறான். கல்வி அவர்களை முன்னேற்றும் என்கிற நம்பிக்கையால் அவன் செய்யும் உபதேசம் அது.
ஆக படத்தின் பிரதான நாயகன், படம் முழுவதுமே சாதியத்திற்கு எதிராகவே தொடர்ந்து உரையாடுகிறான். படத்தின் இறுதிச் செய்தியும் சாதிய வன்முறைக்கு எதிரானதுதான். ஆனால் இத்திரைப்படம் சாதியத்திற்கு ஆதரவானதாகவும் வன்முறையின் ஊற்றுக் கண்ணாகவும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. மஞ்சள் கண்ணாடி அணிந்திருப்பவனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போல சாதியப் பதட்டம் கொண்டவர்களால் இத்திரைப்படம் தவறாக அணுகப்படுகிறது என்பது வெளிப்படை.
பின்பு ஏன் இந்தப் படம் சாதியத்திற்கு ஆதரவானதாக புரிந்து கொள்ளப்பட்டது. பார்ப்போம்.
***
எந்தவொரு கலைப்படைப்பும் மேன்மையுறுவது அதன் நுண்மைகளினாலும் அதன் நேர்மறையான மையத்தினாலும். ஒரு கதாபாத்திரமோ அல்லது சூழலோ அதன் சரியான நுண்மைகளுடன் சித்தரிக்கப்பட்டால்தான் நம்பகத்தன்மையைப் பெறும். கலை நோக்கிலும் மேம்பட்டதான நிலையை நோக்கி உயரும். மொண்ணையாக உருவாக்கப்படும் களிமண் சித்திரங்களால் அல்ல.
முன்பெல்லாம் சமூகத் திரைப்படங்களில் நாயகனின் சாதியைக் கண்டு கொள்வது சிரமம். வெளிப்படையாக சித்தரிக்கப்பட்டிருக்காது. உணர்ச்சிகரமான கதையும் சூழலும் வசனங்களுமே பார்வையாளர்களுக்கு போதுமானதாக இருந்தன. ஆனால் திரைப்படங்களின் உருவாக்க முறை மெல்ல முன்னேறும் போது நாயகன் பாத்திரம் முதற்கொண்டு ஒவ்வொன்றிற்கும் அவைகளுக்கான பின்னணிகளுக்கு நம்பகத்தன்மையுடன் கூடிய நுண்தகவல்களைத் தர வேண்டியிருந்தது. அப்போதுதான் அவை யதார்த்தமான படைப்புகளாாக உருமாற முடியும் என்கிற கவனம் இயக்குநர்களுக்கு ஏற்பட்டது.
தேவர்மகன் திரைப்படத்தில் நாயகனின் தந்தையாக வரும் பெரிய தேவர், அடிப்படையில் நல்லியல்புகள் கொண்டவராக இருந்தாலும் பழமைவாத மனம் உள்ளவராக, சாதிய பெருமிதம் கொண்டவராக இருக்கிறார். எனவே அது தொடர்பான பெருமிதப் புகழுரைகள் அவரை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. இந்தச் சூழலை பார்வையாளர்களுக்கு கச்சிதமாக உணர்த்த என்ன செய்ய வேண்டியிருக்கிறது? அவர் சமூகத்தின் புகழ்ச்சிப் பாடலை சித்தரிக்க வேண்டியிருக்கிறது. பொதுவாகவே கிராமத்திலுள்ள கூத்துக்கலைஞர்கள் அந்தந்த ஊர் பெரியவர்களின், சமூகங்களின் அருமை பெருமைகளை மிகையாக புகழ்ந்து பணம் பெறும் வழக்கம் இன்றும் கூட உள்ளது. (பருத்தி வீரனில் வரும் ஒரு காட்சியை நினைவு கூறலாம்). ஆனால் சாதியத்தின் பெயரால் நிகழும் வன்முறை, பகைமை குறித்த புழுக்கமும் பெரிய தேவருக்குள் உள்ளது. எனவேதான் தன் மகன் இதை காட்டுமிராண்டித்தனம் என்று ஆத்திரப்படும் போது 'நாகரிக உலகத்தை நோக்கி அவன் மெல்லத்தான் வருவான்' என்கிறார்.
ஒரு திரைப்படத்தின் நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கான நோக்கில் சித்தரிக்கப்பட்ட ஒரு திரையிசைப்பாடலை தொடர்புள்ள அந்த சாதியச்சமூகம் தன்னுடைய பெருமைகளை விதந்தோதுவதற்காக எடுத்து பயன்படுத்திக் கொண்டால் அது எவருடைய குற்றம்? சமநிலையுடன் அத்திரைப்படத்தை கவனிக்கும் எந்தவொரு நடுநிலையாளரும் அதிலுள்ள வன்முறையின் குரூரத்தை உணர்ந்திருப்பார். இறுதியில் நாயகன் கதறும் கதறலால் துளியாவது அசைக்கப்பட்டிருப்பார். ஒருவேளை அவர் அழுத்தமான சாதி நம்பிக்கையாளராக இருந்திருந்தாலும் கூட அது குறித்த பரிசீலனை அவருக்குள் ஒரு துளியாவது ஏற்பட்டிருக்கும்.
ஆனால் இவற்றையெல்லாம் வசதியாக கைவிட்டு விட்டு அதில் சித்தரிக்கப்பட்டிருக்கும் வன்முறைகளை பெருமையாகவும் அதன் பாடலை தங்களுக்குச் சாதகமானதாகவும் மாற்றிக் கொண்டால் அந்த மனம் சாதியப் பெருமிதத்திற்குள் எத்தனை ஆழமாக மூழ்கியிருக்கும்? தவறு படத்தின் மீதா அல்லது அந்த சாதியக் கொடுர மனதின் மீதா?
சமீபத்தில் விக்ரம் சுகுமாரன் இயக்கி வெளியான 'மதயானைக்கூட்டம்' என்கிற திரைப்படம் சாதியத்திற்கு ஆதரவானதாக பெரும்பாலான விமர்சகர்களால் கருதப்பட்டது. உண்மையில் அத்திரைப்படம் சாதியத்திற்கு எதிரானது. அந்த வன்முறையில் ஈடுபடுபவர்களை முட்டாள்களாக, கொடூரர்களாக சித்தரித்த திரைப்படம் அது. அறிவுஜீவிகளாலேயே ஒரு திரைப்படத்தின் மையத்தை சரியாக கணிக்க முடியவில்லையெனும் போது பாமரர்களை நினைத்தால் பரிதாபமாகவே உள்ளது. இத்திரைப்படத்தைப் பற்றிய ஒரு விமர்சனக் கட்டுரையை 'மதயானைக் கூட்டம் - சாதியக் கொடூரத்தின் ஆவணம்' என்கிற தலைப்பில் பிப்ரவரி 2014 உயிர்மை இதழில் எழுதினேன். அதுவரை அத்திரைப்படத்தை சாதியத்திற்கு ஆதரவானதாக கருதிய சிலர், இந்தக் கட்டுரையை வாசித்தவுடன் தங்களது கருத்தை மாற்றிக் கொண்டதாக எனக்கு தெரிவித்திருந்தார்கள். அத்திரைப்படத்தின் தலைப்பே அச்சமூகத்தில் உள்ள சாதிய வெறியாளர்களை கடுமையாக விமர்சிக்கிறது என்கிற அடிப்படையை, எளிமையான உண்மையைக் கூட பலரால் உணரமுடியவில்லை.
தேவர் சமூகத்தின் ஒரு பிரிவைச் சார்ந்த சாதியமைப்பு ஒன்று தங்களின் பேனர்களில் 'மதயானைக்கூட்டமே' என்று தங்களை சுயபெருமித்துடன் வர்ணித்துக் கொண்டது என்ற செய்தியை நண்பரொருவர் கூறினார். தேவர் மகனின் பாடலை தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொண்ட அதே சிறுமைத்தனம்தான் இதுவும். மதயானைக்கூட்டம் என்ற சொல்லின் பின்னால் உள்ள விலங்குகளின் மூர்க்கத்தனமான பொருளையுணரால் அதையும் பெருமையாக நினைக்கும் கூட்டத்தை என்னதான் சொல்வது? இந்த சிறுபிள்ளைத்தனங்களுக்கு கலைஞர்கள் என்ன முடியும்?
திரைப்படங்கள் என்று மட்டுமல்ல. சாதியப் பெருமிதங்களை பறைசாற்றும் சமூகங்கள் எந்தவொரு பழைய அடையாளங்களையும் அதன் உண்மையான பொருள் உணராமல் தங்களின் பெருமைகளாகவே நினைத்துக் கொள்கிறார்கள். சிங்கம் என்கிற விலங்கு ஒரு சமூகத்தின் பெருமை மிக அடையாளமாக, புளகாங்கிதமாக கருதப்படுகிறது. சிங்கத்தின் வாழ்வு முறையைக் காணும் போது உண்மையில் அரிமா எனப்படும் ஆண் சிங்கம் என்பது சோம்பேறித்தனமானது. தன் உணவிற்காக பெண் சிங்கத்தை சார்ந்திருக்கக்கூடியது. பெண் சிங்கங்கள் கூடி வேட்டையாடும் உணவை வெட்கமில்லாமல் சென்று முதன்மையாக தின்னக்கூடியது. ஒரு சிங்கக்கூட்டத்தில் பெண் சிங்கங்களுக்கே அதிக முக்கியத்துவம் உண்டு. பெண் சிங்கத்தை விட ஆண் சிங்கத்திற்கு ஆயுள் குறைவானது. இந்த உண்மைகளை அறியும் எந்தவொரு நபராவது தம்மை இந்த விலங்குடன் ஒப்பிட்டு பெருமையடைவாரா?
ஆக சாதியப் பெருமிதங்களைக் கொண்ட நபரால் எந்தவொரு அடையாளத்தின் உண்மையான பொருளை உணராமல் மேம்போக்காக தங்களுக்கு சாதகமாக ஸ்வீகரித்துக் கொள்ளும் அற்பத்தனங்களுக்கு அதன் எதிர்திசையில் இயங்கும் ஆக்கப்பூர்வமான படைப்புகளை உருவாக்கும் கலைஞர்கள் பலியாக்கப்படலாமா என்பதை யோசிக்கலாம்.
***
கல்வியறிவின் சதவீதம் குறைவாக உள்ள , பழமைவாத மனங்கள் இன்னமும் மாறாத ஒரு சமூகத்தில் உருவாகும் படைப்புகள் அது குறித்த ஜாக்கிரத்தனத்துடன், அந்தச் சூழலை உசுப்பேற்றாத அளவில் உருவாக்கப்பட வேண்டும் அல்லவா? இது கலைஞர்களின் கடமையும் பொறுப்பும் அல்லவா என்றொரு கேள்வி எழலாம். இது ஒருவகையில்தான் சரியானது. கலைஞர்களின் படைப்புச் சுதந்திரத்தில் தலையிடாத சமூகம்தான் நாகரிகத்தை நோக்கி முன்னேறுகிற சமுதாயமாக கருதப்படும். துணைத் தகவல்களால் திசை திரும்பாது ஒரு படைப்பின் மையத்தை சரியாகப் புரிந்து கொள்கிற அளவிற்கான பயிற்சியை நாம் பெற வேண்டும் என்பதே இதிலுள்ள செய்தி. 'ஒரு திரைப்படத்தை எவ்வாறு அணுகுவது என்கிற பயிற்சியை கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என்று இயக்குநர் பாலுமகேந்திரா பல காலமாக சொல்லிக் கொண்டிருந்ததை இந்த நோக்கில் புரிந்து கொள்ளலாம்.
அப்படியொரு முன்னேற்றமான சூழல் சமூகத்தில் மலரும் வரை பாமரர்களுக்கு இதைச் சரியாக சுட்டிக் காட்ட வேண்டிய பணி விமர்சகர்களுக்கு உண்டு. சாதிய வன்முறைச் சமூகத்தை நோக்கி உபதேசிக்க வேண்டிய கடமையை விட்டு கலைஞர்களை நோக்கி விமர்சிக்கும் விஷயமானது சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் தன்மையையே ஏற்படுத்தும்.
தேவர் மகனுக்குப் பிறகு தலைப்பிடப்பட்ட கமல்ஹாசனின் 'சண்டியர்' என்கிற திரைப்படமும் துவக்க நிலையிலேயே பலத்த ஆட்சேபத்திற்கு உள்ளானது. தேவர்மகன் திரைப்படத்தின் சில கூறுகளை சாதிய வெறியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காரணத்தினால் ஏற்பட்ட வன்முறைகளையும் அந்தக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட தலித் சமூகத்தின் துயரங்களை கருத்தில் கொண்டாவது, அதன் நடைமுறை பாதிப்புகளை உணர்ந்தாவது கமல்ஹாசன் இந்த எதிர்ப்பை புரிந்து கொண்டிருக்கலாம். ஒரு தற்காலிக சமரசமாக தலைப்பை உடனடியாக மாற்றியிருக்கலாம். அதே சமயத்தில் இது படைப்புச் சுதந்திரத்தில் தலையிடும் விஷயம் என்கிற அவர் தரப்பும் அதற்கான நியாயம் கொண்டதுதான். சிலபல போராட்டங்களுக்குப் பின் தலைப்பை அவர் கசப்புடன் மாற்றிக் கொண்டது தவிர்த்திருக்கப்பட வேண்டியது. ஆனால் 'விருமாண்டி' என்று மாற்றப்பட்ட தலைப்பில் வந்த இந்த திரைப்படமும் இரு சாதியச் சமூகங்கள் முட்டாள்தனமாக மோதிக் கொண்டு மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அவலத்தை சித்தரிப்பதுதான். ஆனால் இத்திரைப்படமும் அதன் உள்ளடக்கத்தை தவறாகவே புரிந்து கொண்டு பரப்புரை செய்யப்பட்டது.
தம்முடைய திரைப்படத்திற்கு உடனடி கவனம் கிடைக்க வேண்டும் என்கிற காரணத்திற்காகவே இது போன்ற சர்ச்சையான விஷயங்களை கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கிறார் என்கிற வாதம் எந்தளவிற்கு உண்மையானது? சண்டியர் சர்ச்சைக்குப் பிறகு வேறொரு நடிகரால் 'வர்றார் சண்டியர்' என்கிற திரைப்படம் வெளியான போது அது சார்ந்த பலத்த எதிர்ப்பும் உருவாகவேயில்லை. புகழ் பெற்ற நடிகர் என்பதாலேயே அவர் தொடர்பான விஷயங்களை எதிர்த்து தாங்கள் புகழடைய நினைக்கிறார்கள் என்று இந்த எதிர்ப்பாளர்களின் மீதும் இது போன்ற குற்றச்சாட்டை வைக்க முடியும்தானே?
***
உண்மையில் 'தேவர் காலடி மண்ணே' திரைப்பாடலை விட அதிக ஆபத்தைக் கொண்டது 'எஜமான் காலடி மண்ணே' வகைப் பாடல்கள். ஏனெனில் தேவர்மகன் போன்ற திரைப்படங்களின் இடையில் சித்தரிக்கப்படும் காட்சிகள் சாதியத்திற்கு ஆதரவானதாக தவறாகப் புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு இருந்தாலும் அதன் ஒட்டுமொத்த மையம் சாதியத்திற்கு எதிரானதாக உள்ளது என்பதை நிதானமாக யோசித்தால் உணர முடியும். ஆனால் 'எஜமான் காலடி மண்ணே' வகையறா திரைப்படங்களில் இது போன்ற ஆபத்தான இடைத்தகவல்கள் அல்லாமல் நாயகன் நல்லவன், அதன் எதிர்நாயகன் கெட்டவன் என்கிற கறுப்பு -வெள்ளை சித்திரங்களாக உருவானாலும் ஒட்டுமொத்த நோக்கில் அவை ஆண்டை -அடிமை கலாசாரத்தை மறைமுகமாக மிக வலுவாக முன்வைக்கின்றன.
இதில் வரும் நாயகர்கள் அடிப்படையில் நல்லியல்புகளைக் கொண்டிருந்தாலும் அந்தப் பிரதேசத்தின் எல்லாப் போக்கையும் தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைச் சார்ந்தவர்கள் இவரை அண்டிப் பிழைப்பவர்களாகவும் இந்த நாயகர்கள் அவர்களை கடவுள் நிலையிலிருந்து கருணை காட்டுவதான காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும். குறுநில மன்னர்களாக, நிலச்சுவான்தாரர்களாக இருந்த காலக்கட்டத்தின் நிலப்பிரபுத்துவ தன்மையின் நீட்சிகளாக இவர்கள் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அனைத்துச் சமூகங்களும் அதன் மையத்தில், அதிகாரத்தில் பங்கேற்கும் ஜனநாயக வெளியை உறுதிப்படுத்த வேண்டிய காலக்கட்டத்தில் இது போன்ற சித்தரிப்புகள் பிற்போக்குத்தன்மைகளை வலியுறுத்துவதான அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஒட்டுமொத்த தன்மையில் தேவர்மகன் வகை திரைப்படங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுவதைப் போல இவ்வகைத் திரைப்படங்களின் ஆபத்துகள் சரியாக கூட புரிந்து கொள்ளப்படுவதில்லை. முன்னதை விட இவ்வகையான திரைப்படங்கள் சமூகத்தில் விதைக்கும் ஆபத்தே அதிகம்.
ஒருகாலக்கட்டத்திற்குப் பிறகு தமிழ் திரையில் இடைநிலைச்சாதிகளின் சாதியப் பெருமிதங்களை அழுத்தமாக முன்வைக்கும் திரைப்படங்கள் உருவாகத் துவங்கின. ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், ஹரி போன்றவர்கள் இவ்வகையான திரைப்படங்களை தொடர்ச்சியாக உருவாக்கத் துவங்கினார்கள். இடைநிலைச்சாதி சமூகங்களை பெருமையாக சித்தரிப்பது என்பது ஒரு போக்காகவே மாறி அதுவே ஒரு வணிகச் சரக்காக மாறிற்று. தொடர்ச்சியான முற்போக்கு பிரச்சாரங்களால் சமூகத்தில் அமுங்கியிருந்த சாதியுணர்வு மீண்டும் வீறு கொண்டு புது வேகத்துடன் சாதிய அமைப்புகளாகவும் அரசியலாகவும் மாறுவதற்கு இவ்வகை திரைப்படங்களும் ஒருவகையில் காரணமாக இருந்தன. ஏனெனில் ஒட்டுமொத்த நோக்கில் இவை அந்த நாயகர்களின் சாதியப் பெருமிதங்களுக்கு ஆதரவாக இயங்கின; அதன் வன்முறைகளை நேரடியாக, மறைமுகமாக நியாயப்படுத்தின.
ஆனால் இவ்வகை திரைப்படங்களின் ஆபத்துகள் பரவலாக உணரப்படுவதில்லை, எதிர்ப்புகள் பரவலாக ஆவதில்லை. ஆனால் இதன் நேர்திசையில் இயங்கும் தேவர்மகன் வகை திரைப்படங்கள் பெரிய ஆபத்தாக முன்நிறுத்தப்படுகின்றன. நாம் எவ்வகை புரிதலில் இயங்குகிறோம் என்கிற அறியாமையை இந்தப் போக்குகள் தெளிவாகவே சுட்டிக் காட்டுகின்றன.
சமீபத்தில் வெளியான 'மருது' என்கிற திரைப்படத்தைப் பார்த்தேன். இந்த இயக்குநரின் முந்தைய திரைப்படங்களான குட்டிப் புலி, கொம்பன் ஆகிய திரைப்படங்களோடு இந்த திரைப்படமும் ஒரு குறிப்பிட்டட சமூகத்தின் சாதியப் பெருமிதங்களை, அதன் வன்முறைகளை, கொலைகளை பெருமைமிகு அடையாளத்துடன் பதிவு செய்கிறது. இதன் சமூக அடையாளங்கள் மிகத் தெளிவாகவே படத்தில் சித்தரிக்கப்படுகின்றன. இந்தப் பிரதேச மனிதர்கள் அல்லது இந்தச் சமூகத்து மனிதர்கள் வன்முறையாளர்கள் என்கிற செய்தியை இவ்வகைத் திரைப்படங்கள் விஷம் போல் பொதுப்புத்தியில் ஏற்றிக் கொண்டேயிருக்கின்றன. இது தொடர்பான சமூக உணர்வோ அல்லது கூச்சமோ இந்த இயக்குநர்களுக்கு இருப்பதில்லை. தற்செயலாக வன்முறைக் கூட்டத்தில் விழ வேண்டிய குற்றவுணர்வோடு தேவர்மகன் நாயகன் கதறுவதைப் போல இவர்களுக்கு எந்தவொரு நெருடலும் இருப்பதில்லை. மாறாக அந்த வன்முறைகளை தங்கள் கலாசாரத்தின் பெருமையாக நினைப்பதுதான் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது. இது போன்ற திரைப்படங்கள்தான் மிகவும் ஆபத்தானவை. இந்த வித்தியாசத்தை தெளிவாக உணரும் நுண்ணுணர்வு நமக்குள் வளர வேண்டும்.
மேலும் ஒரு சாதியின் பெயரை உச்சரிப்பதற்கே தயங்கும், அச்சப்படும் போக்கும் ஆபத்தானது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய ஒரு அணுகுண்டை எவருக்கும் தெரியாமல் ஒளித்து வைப்பதைப் போன்ற ஆபத்து இது. சாதி சார்ந்த நகைச்சுவைகளால், பகடிகளால் அதன் தீவிரத்தன்மை மெல்ல மழுப்பப்பட வேண்டும். இதைப் பற்றிய மிகையுணர்வுடன் அல்லாத வெளிப்படையான அறிவுசார் உரையாடல்கள் சமநிலையுடன், திறந்த மனதுடன் சமூகத்தில் நிகழ வேண்டும்.
பழங்குடிகளின் தொடர்ச்சியாக உருவாகி வந்த இனக்குழுக்களில் இருந்து சாதி என்கிற அமைப்பும் அதன் உட்பிரிவுகளும் உருவாகின. ஒவ்வொரு இனக்குழுவிற்கு பின்னாலும் பல்லாண்டுக்கணக்கான வருடத்தில் இறுகி வந்த பண்பாட்டு அடையாளங்களும் அதன் நுண்மைகளும் உள்ளன. அவற்றில் உள்ள பிற்போக்குத்தனங்கள் மெல்ல களையப்பட்டு தன்னைச் சுத்திகரித்துக் கொண்டே முன்னகர்வதே நாகரிக சமூகத்தின் அடையாளம். மாறாக அதனுள் திணிக்கப்படும் உயர்வு தாழ்வுகளும் பாகுபாடுகளுமே சர்ச்சைகளையும் வன்முறைகளையும் உண்டாக்குகின்றன. சாதி அரசியல் இதனை வளர்த்து தங்களுக்கு சாதகமானதாக பயன்படுத்திக் கொள்கிறது.
***
மீண்டும் கமல்ஹாசனின் சமீபத்திய திரைப்படத்தின் சர்ச்சைக்கே திரும்புவோம். 'சபாஷ் நாயுடு' என்பதில் உள்ள சாதியப் பெயருக்காக படம் வெளிவருவதற்கு முன்பே ஏன் இத்தனை பதட்டப்பட வேண்டும்? இந்தப் படத்தின் தலைப்புடன் வெளியான நடிகரின் புகைப்படம் இதுவொரு நகைச்சுவைத் திரைப்படம் என்பதை வெளிப்படையாகவே உணர்த்துகிறது. இதற்கு முன்னர் வெளியான 'தசாவதாரம்' என்கிற திரைப்படத்தின் ஒரு பாத்திரமான 'பலராம் நாயுடு' பலரால் கவனிக்கப்பட்டது; ரசிக்கப்பட்டது.
கமல்ஹாசன் ஒரு திறமையான கலைஞர் என்பதன் கூடவே திறமையான வணிகர் என்கிற தன்மையையும் கொண்டவர். எனவே முன்னர் ஒரு பாத்திரத்தின் மூலம் நிறுவப்பட்ட அடையாளத்தை சாமர்த்தியமாக உபயோகப்படுத்திக் கொள்ளும் விதமாக அதை இன்னமும் விரிவாக்கம் செய்து முழு திரைப்படமாக உருமாற்றுகிறார். எனவே பார்வையாளர்களிடம் அது எளிதில் சென்று பதிய ஏதுவாக அந்தப் பெயரையே மறுபடியும் பயன்படுத்திக் கொள்கிறார் என்கிற நோக்கில் நம்மால் ஏன் புரிந்து கொள்ளப்படவில்லை?
தசாவதாரம் 'பலராம் நாயுடுவை' நினைவுகூர்ந்தால் அது எத்தனை சுவாரசியமாக வடிவமைக்கப்பட்ட பாத்திரம் என்பதை உணர முடியும். பலராம் நாயுடு, காவல்துறை அதிகாரிக்குரிய அடிப்படையான அறிவைக் கொண்டிருந்தாலும் ஓர் அரசாங்க இயந்திரத்தின் அபத்தமான தன்மையையும் கொண்டவர். ஒரு சிக்கலான சூழலை அவரால் உடனடியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னை உயர்ந்த இடத்தில் கற்பனை செய்து கொண்டு அந்த அதிகாரத்தை தொடர்ந்து நிலைநிறுத்தும் அவர், அவரை விடவும் உயர்ந்த அதிகாரியின் முன்னால் அடிமை போல பதறவும் செய்கிறார். அதீதமான மொழிப்பற்று கொண்டவர். அம்மாஞ்சியான ஒருவரைக் கூட தன் மொழி சார்ந்தவர் என்பதால் வரவழைக்கப்பட்ட பாசத்துடன் சகித்துக் கொள்கிறார்.
இப்படியொரு பாத்திரம் முழு திரைப்படத்திலும் வந்தால் அது எத்தனை சுவாரசியமான படைப்பாக இருக்கும்? ஆனால் அது வெளிவருவதற்கு முன்னாலேயே அதனுள் உள்ள சாதியின் பெயரைக் காரணம் காட்டி நாம் பதறுகிறோம், எதிர்க்கிறோம். நம் எல்லோருக்குள்ளும் ஒரு கோமாளித்தனமான 'பலராம் நாயுடு" என்கிற உண்மையைத்தான் இம்மாதிரியான பதட்டங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

உயிர்மை - ஜூன் 2016-ல் வெளியான கட்டுரை.
suresh kannan
No comments:
Post a Comment