Tuesday, November 02, 2010

ராஜாவின் பரிசோதனைப் பாடல்

கடந்த சில நாட்களாக இளையராஜாவின் தேர்ந்தெடுத்த பாடல்களை மாத்திரமே கேட்டுக் கொண்டிருக்கிறேன். கவனிக்கவும், தேர்ந்தெடுத்த பாடல்கள். ஏனெனில் ராஜாவின் பாடல்களிலேயே பல மொக்கையான பாடல்களும் உள்ளன. உதாரணம் தரவேண்டுமெனில் மறுபடியும் அவைகளை கேட்கும் தொந்தரவிற்கு ஆளாக வேண்டும். ஆனால் அப்படியும் தீர்மானமாக சொல்லி விட முடியாது. ஹிட் ஆகாத காரணத்தினாலேயே நான் சரியாக கவனிக்காத பல ரத்தினங்களும் உண்டு. சமீபத்தில் மறைந்த திரையிசைப்பாடகி சுவர்ணலதா குறித்து சொல்வனத்தில் நண்பர் சுகா எழுதியிருக்கும் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் பல பாடல்களில் குரு சிஷ்யனில் வரும் 'உத்தமபுத்திரி நானு'-ம் ஒன்று. எப்படி இந்த அற்புதத்தை தவறவிட்டேன் என்று தெரியவில்லை.

மற்ற மொழிகளில் சிறப்பாக உபயோகித்த மெட்டுக்களை ராஜா தமிழில் சிதைத்ததற்கான உதாரணங்களும் உண்டு. பாலுமகேந்திராவின் மலையாளத்திரைப்படான 'ஓலங்கள்' -ல் 'தும்பே வா' என்றொரு அருமையான பாடல் உண்டு. நான் எந்தவொரு மன உளைச்சலிலும் எரிச்சலிலும் இருந்தாலும் இந்தப் பாடலை கேட்கும் போதே, யாரோ என் ஆன்மாவை ஆதரவாகத் தடவிக் கொடுக்கும் உணர்வில் அத்தனையும் வடிந்து விடும். ஆனால் இதையே தமிழில் கொண்டு வரும் போது  சங்கத்தில் பாடாத கவிதை (ஆட்டோ ராஜா) என்று ரோஜா பூவை பிய்த்துப் போட்டது போல் போட்டார்.

சரி. விஷயத்திற்கு வருவோம்.

ராஜா தன் திரையிசை உருவாக்கங்களில் பல பரிசோதனை முயற்சிகள் செய்து பார்த்ததை நாமறிவோம். ராஜாவின் தீவிரமான ரசிகர்களும் இசை ஆர்வலர்களும் இதைப் பற்றி பக்கம் பக்கமாக இணையத்தில் எழுதியிருக்கிறார்கள்; எழுதிக் கொண்டிருக்கிறார்கள் ; எழுதுவார்கள்.

இசை பற்றிய எந்தவிதமான பயிற்சியற்ற நான், சிலவற்றை தொடர்ச்சியாக கேட்ட போது இந்தப் பாடலிலிருந்த வித்தியாசத்தை கண்டேன். இதை எத்தனையோ முறை முன்பு கேட்டிருந்த போதும் இதிலுள்ள வித்தியாசம் இப்போதுதான் எனக்கு உறைத்தது. இயக்குநர் பாசில் உருவாக்கத்தில் பிரபு,ரேவதி நடித்து வெளிவந்த 'அரங்கேற்ற வேளை'. ஏதோவொரு மலையாளத் திரைப்படத்தின் ரீமேக் என்று நினைக்கிறேன். படம் நெடுக வரும் மெலிதான ஹ்யூமருக்காகவே இதை பல முறை பார்த்துள்ளேன். (சமயங்களில் இந்த மொக்கைப் படத்தை இத்தனை ரசிக்கிறோமே என்று எனக்கே நெருடலாக இருக்கும்). ரேவதியின் சிறப்பான நடிப்பில் இந்தப்படம் அவருக்கொரு மைல்கல் என்று கூட சொல்லலாம்.

இந்தப் படத்தின் ஆகச்சிறந்ததாக கருதப்பட்டு புகழ்பெற்றது 'ஆகாய வெண்ணிலாவே'. அருமையான மெலடி. விகேராமசாமி வைத்திருக்கும் பழைய நாடக செட்டு பிரார்ப்பட்டிகளின் பி்ன்னணியில் பிரபு -ரேவதியின் டூயட். இதில் பிரபுவின் நடன அசைவுகள் சற்றே விநோதமாகவும் ஸ்டைலிஷாகவும் தெரிவது எனக்கு மாத்திரம்தானா?

 

சரி. நான் எழுத வந்தது இந்தப் பாடலை பற்றி அல்ல.

தாயறியாத தாமரையே
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே

யார் பறித்தாரோ, யார் அறிவாரோ
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ


குழலின் வருடலோடு மனோவின் குரலில் மிக அருமையாக மெல்லிசையுடன் துவங்கும் இந்தப் பாடல், பல்லவிக்குப் பிறகு சட்டென்று தடம் மாறி வேகமான தாளயிசைக்கு மாறும். மீண்டும் பல்லவியில் மெல்லிசைக்கு திரும்பும். இப்படி பல்லவியிலும் சரணத்திலும் வெவ்வேறு தாளஇசையைக் கொண்ட பாடல் தமிழ்த் திரையில் எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. வேறெதுவும் சட்டென்று நினைவுக்கும் வரவில்லை. அவ்வகையில் இதுவொரு தனித்தன்மையுடன் கொண்ட பொதுவாக அதிக கவனத்திற்கு வராத பாடல் என்று நினைக்கிறேன்.

பொதுவாக வேகமான தாளயிசையைக் கொண்டு பாடலை உருவாக்க விரும்பும் இசையமைப்பாளர்கள் அதற்கு முரணாக முதலில் மிக மெதுவான மிருதுவான இசையைத் துவங்குவார்கள். அப்போதுதான் சில நொடிகள் கழித்து வரப்போகும் வேகமான தாளயிசை அதிக அழுத்தத்துடன் கேட்பவர்களைக் கவரும். ஆனால் இப்படி பல்லவியிலும் சரணத்திலுமாக வித்தியாசப்பட்டதில்லை.

கதையின் போக்கிற்கு ஏற்ப இயக்குநர் பாசிலின் விவரிப்பின் படி ராஜா இதை உருவாக்கியிருப்பார் என்று யூகிக்கிறேன். ஏனேனில் காட்சிச் சூழலுடன் அத்தனை அருமையாக இந்தப் பாடல் பொருந்திப் போகும்.

அருமையான பாடல். கேட்டுப் பாருங்கள்.

suresh kannan

24 comments:

Ashok D said...

//பிரபுவின் நடன அசைவுகள் சற்றே விநோதமாகவும் ஸ்டைலிஷாகவும் தெரிவது எனக்கு மாத்திரம்தானா?//
:)

சித்தன்555 said...

சித்திக்-லால் இயக்கிய ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்கின் ரீமேக் தான் அரங்கேற்ற வேளை.

Ashok D said...

எனக்கு தெரிந்து ஆட்டோ ராஜாதான்(சங்கத்தில்) முதலில் வந்தது... இது அவரே அவரது ஜெயா டீவி கான்சர்டீல் கூறியது...

அதன்பிறகு தும்பே..வா..வில் மெறுகூட்டியிருக்கலாம்

(நல்லா மாட்னாரய்யா சுரேஷ் கண்ணன்)

பிச்சைப்பாத்திரம் said...

அசோக்:-)

இரண்டுமே 1982-ல் வெளிவந்ததாக இணையத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் அல்லது மலையாளம் எது முதலில் வந்தது என்று தெரியவில்லை. அது பிரச்சினையில்லை.

ஆனால் 'தும்பே வா'வையும் 'சங்கத்தில் பாடாத'வையும் அருகருகே நிறுத்தினால் எத்தனை வித்தியாசம்? இதே மெட்டை சமீபத்திய இந்தி படமான 'சீனி கம்மில்' கேட்கலாம். அது அத்தனை மோசமில்லாததாக உருவாக்கப்பட்டிருந்தது. விஜயகாந்த்துக்கு இது போதும் என்று ராஜா நினைத்து விட்டாரோ, என்னவோ? :-)

கானா பிரபா said...

தாயறியாத தாமரையே பாட்டில் வரும் சந்தோஷம்/சோகம் இரண்டுங்கெடாதான் ரக மெட்டை ரசித்துக் கேட்பதுண்டு.
இதே மாதிரி ராஜா இன்னொரு பாட்டு ஹானஸ்ட் ராஜ் படத்தில் போட்டிருக்கிறார்.
"வானில் விடிவெள்ளி மின்னிடும்" என்ற அந்தப் பாடலில் சந்தோஷ சங்கீதத்தில் பெண் ஆனந்தமாகப் பாட அதே பாட்டில் ஆணின் மனத்தவிப்பை சோகம் கலந்த இசையில் சொல்லியிருப்பார்

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR1004%27&lang=en

கானா பிரபா said...

தும்பி வா பாடல் தான் முதலில் வந்தது.
அறிவுமதியை நான் பேட்டி கண்ட போது அவர் சொன்னது

"மூன்றாம் பிறை" படத்தில் வரும் பின்னணி இசையை பாடலாக்கித் தருமாறு ராஜாவிடம் பாலுமகேந்திரா கேட்க அது தும்பி வா ஆனதாக

கானா பிரபா said...

சங்கத்தில் மேலதிக தகவல் ;0

http://videospathy.blogspot.com/2008/09/blog-post_24.html

Anonymous said...

//இப்படி பல்லவியிலும் சரணத்திலும் வெவ்வேறு தாளஇசையைக் கொண்ட பாடல் தமிழ்த் திரையில் எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை//

இசையில் எந்தப் பயிற்சியுமற்ற நான் என்று சொல்லிக் கொண்டே இவ்வளவு விவரமாக எழுதியிருக்கிறீர்களே! ஆச்சரியம்தான்.

கே.சிவராமகிருஷ்ணன்

Indian said...

//பொதுவாக வேகமான தாளயிசையைக் கொண்டு பாடலை உருவாக்க விரும்பும் இசையமைப்பாளர்கள் அதற்கு முரணாக முதலில் மிக மெதுவான மிருதுவான இசையைத் துவங்குவார்கள். அப்போதுதான் சில நொடிகள் கழித்து வரப்போகும் வேகமான தாளயிசை அதிக அழுத்தத்துடன் கேட்பவர்களைக் கவரும். ஆனால் இப்படி பல்லவியிலும் சரணத்திலுமாக வித்தியாசப்பட்டதில்லை. //

அது ராஜாவின் ஸ்பெஷாலிட்டி என எங்கோ படித்ததாக நினைவு. அதாவது, பாடல் உருவாக்கத்தின்போதே, இடையில் முக்கிய திருப்புமுனைக் காட்சிகள் வருகின்றனவா என இயக்குநரைக் கேட்பாராம். பின்னர் பாடலுக்கு இசையமைக்கும்போது, படத்தொகுப்பிற்கு துணை சேர்ப்பது போல் இடையிடையே வேகமான தாளகதியில் இசையமைத்து விடுவாராம்.

இதனால் பாடலின் இடையே வில்லன் துரத்தல், குடும்ப மர்டர், தங்கை ரேப், அம்மா டையிங் போன்ற காட்சிகளை தொகுப்பாளர் எளிதில் இணைத்து விடலாம்.

சட்டென்று தோன்றும் காட்டுகள், இதயக்கோவில் மற்றும் கேப்டன் பிரபாகரன் படப் பாடல்கள்.

Indian said...

//மற்ற மொழிகளில் சிறப்பாக உபயோகித்த மெட்டுக்களை ராஜா தமிழில் சிதைத்ததற்கான உதாரணங்களும் உண்டு. //

இன்னொரு காட்டு நூறாவது நாள் படப் பாடல் 'விழியிலே மணி விழியிலே' மற்றும் அதன் கன்னட மூலம் கீதா படப் பாடல் 'ஜொதெயல்லி ஜொதெ ஜொதெயல்லி'.

Anonymous said...

விஜயகாந்த்துக்கு இது போதும் என்று ராஜா நினைத்து விட்டாரோ, என்னவோ? :-)

அப்படி சொல்லமுடியாது , ஆரம்ப கால விஜயகாந்தின் பெரும்பாலான வெற்றிப்படங்களின் பாடல்கள் ராஜாவின் இசையில் வந்ததுதான் .

ராம்ஜி_யாஹூ said...

http://www.muziboo.com/adithi100/music/oru-kili-uruguthu-with-sowmyar/



ஒரு கிளி உருகுது - பாடல் எனக்கு சமீப காலமாக பிடித்த பாடலாக உள்ளது.

அதில் ஒரு கவிதை வரி- வயல் வெளியில் பல கனவை விதைக்கின்றதே சிறு பறவை.


இதே நடையில் ஒரு பாடல் - ஈரமான ரோஜாவே படத்தில்- சல சலக்கும் மணி ஓசை, கொடி கொடியாம் பூன்கொடியாம்.

இந்த பாடல்கள் எல்லாம் படைத்த இளையராஜாவின் புகழ், மரியாதை சூரியனும், சரயு ஆறும் உள்ள வரை இருக்கும் என்பதில் நெல் முனை அளவும் ஐயமில்லை.

M.SANKAR said...

இதே போல ஹானஸ்ட் ராஜ் படத்தில்
"வானில் விடிவெள்ளி வந்திடும் நேரம்"பாடலும் மெதுவாகவும் வேகமாகவும் ஒலிக்கும். ம.சங்கர் திருநெல்வேலி

Krubhakaran said...

சங்கத்தில் பாடத கவிதை பாடல் பற்றிய உங்கள் கருதுடன் மாறுபடுகிறேன். காதலும் காமமும் இழைதோடும் நல்லதொரு மெலடி, அருமையான வரிகள் கவிஞர் யார் என தெரியாது, வர்தைகளில் விளையாடி இருப்பார், அது போலவே ஜானகி அம்மாவும் கொஞ்சி குழைந்திருப்பார். இன்னொரு முறை கவணித்தி கேட்டு பாருங்கள், தும்பி வா வுடன் ஒப்பிடாமல், ஏனெனில் இது வேறு சுவை அது வேறு சுவை, இதே பாடல் “Aur Ek Prem Kahani" ஹிந்தி படத்திலும், PAA(சீனி கம் அல்ல) ஹிந்தி படத்திலும் வெவ்வேறு இசை வடிவங்களில் கேட்கலாம். நன்றி.

Anonymous said...

/பிரபுவின் நடன அசைவுகள் சற்றே விநோதமாகவும் ஸ்டைலிஷாகவும் தெரிவது எனக்கு மாத்திரம்தானா?//
not to you only..it is really stylish and very different ,attractive.Prabhus dance movements are wonderful.

கோபிநாத் said...

மிக நல்ல பாடல்கள். தும்பி வா இந்த பாடலை இசைஞானி மேடையில் வேறு மாதிரியாக இசைமைத்து அசத்தியிருப்பார்...

தல கானா கொடுத்த லிங்கில் இருக்குமுன்னு நினைக்கிறேன்...அதையும் கேளுங்கள் ;)

தல...மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு ;))

bandhu said...

With great difficulty, i came out of the haunting Thumbi Vaa song kept me in for days! You just put me right in the middle of that again! Is this the gift you give to your readers?

The song is again playing in constant loop in my laptop..

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு நன்றி.

மற்ற உதாரணங்களை சுட்டிய கானா பிரபுவிற்கும் இந்தியனிற்கும் (Indian) நன்றி. வேறெந்த தனித்தன்மை கொண்ட பாடல்களையும் கூட இங்கு பகிரலாம்.

ஹரன்பிரசன்னா said...

மெல்ல வந்து பின்பு வேக தாள கதிக்கு மாறும் பாடல் ஒன்றை, இதே ‘தாயறியாத தாமரையே’ ஸ்டைலில் தேவா போட்டார். வேடன் படத்துக்காக. வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் பாடல். கேட்டுப்பாருங்கள். நன்றாக இருக்காது, இருந்தாலும் கேட்டுப்பாருங்கள்.

இன்னும் ஒன்றிரண்டு பாடல்கள் உள்ளன, யோசித்துச் சொல்கிறேன்.

ஹரன்பிரசன்னா said...

சூரியன் படத்தில் வரும் ‘தூங்குமூஞ்சி மரங்களெல்லாம்’ பாடல், வேகமாக ஆரம்பித்து, மெல்ல தொடர்ந்து, மீண்டும் வேகத்துக்கு வரும். :-)

Thamiz Priyan said...

\\\பாலுமகேந்திராவின் மலையாளத்திரைப்படான 'ஓலங்கள்' -ல் 'தும்பே வா' என்றொரு அருமையான பாடல் உண்டு. நான் எந்தவொரு மன உளைச்சலிலும் எரிச்சலிலும் இருந்தாலும் இந்தப் பாடலை கேட்கும் போதே, யாரோ என் ஆன்மாவை ஆதரவாகத் தடவிக் கொடுக்கும் உணர்வில் அத்தனையும் வடிந்து விடும்.\\\
athe...

மாரிமுத்து said...

அக்னிசாட்சி திரைப்படத்தில் வரும் "கனா காணும் கண்கள் மெல்ல" பாடல் வெவ்வேறு தாள கதிக்கு உதாரணமாக சொல்லலாம்.
அதிகம் கண்டுகொள்ளப்படாத கீழ்வரும் பாடல் உங்களுக்கு பரிசு!
http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR1079'&lang=undefined

D. Chandramouli said...

Yes, the song "Aghaya Vinnilavey" was super. Prabhu with a dimple on his cheek showing a variety of facial expressions, and Revathi's steps were a sight to watch. Excellent tune. I immediately wrote a letter to Vikatan appreciating this particular song. When I watched Prabhu's steps for this song, it took me to nostalgic memories of Sivaji - like the one he danced in Uthamira Puthiran. Whenever this Prabhu's song is shown on TV now, I just sit back and really enjoy. Undoubtedly, a "kattipotta" song, in every respect.

Unknown said...

i enjoyed "sangathil padatha" than "thumbi vaa".I think the difference is the tamil lyrics base on some sangam verses. since "sangathil" was made second it was lyrics to the tune arrangement,where as the "thumbi vaa" lyricist might have had little freedom.