Monday, November 01, 2010

புதிய பாதை


சேகரிப்புகளின் அடுக்குகளில் வேறு எதையோ எதையோ தேடிக் கொண்டிருந்த போது, ராஜ் வீடியோ விஷனில் வாங்கின திரைப்படமொன்று நீண்ட நாட்களாக பிரிக்கப்படாமலேயே இருந்ததை கண்டேன். (ராஜ் வீடியோ விஷனில் பாலுமகேந்திராவின் வீடு, ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" போன்ற திரைப்படங்கள் கிடைக்கின்றன என்பது ஒரு தகவலுக்காக இங்கே). குறைந்த பட்சம் பிரித்து்க்கூட பார்க்கப்படாமலேயே வைத்துக் கொண்டிருக்கப்படும் புத்தகம், என்னைப் பொறுத்தவரை கொலைக்குற்றத்திற்குச் சமம். பிரிக்கப்படாமல் வைத்திருந்த அந்த திரைப்படம் பார்த்திபனின் இயக்கத்தில் முதல் திரைப்படமான 'புதிய பாதை'.

அரங்கத்திலும் தொலைக்காட்சிகளிலும் இதை சிலபல முறை ஏற்கெனவே பார்த்திருந்தாலும், இம்மாதிரியான படங்களை ஒர் அவதானிப்பிற்காக என்னுடைய சேகரங்களில் இணைத்துக் கொள்வது வழக்கம். தமிழ் சினிமாவின் பொதுவான வணிக நோக்கையொட்டி, இத்திரைப்படத்தின் திரைக்கதை மிகக் கச்சிதமான வடிவத்தில் அமைந்திருக்கிறது என்பது என் அவதானிப்பு. 1989-ல் வெளிவந்த இத்திரைப்படம், மாநில அளவில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது.

ஏதோவொரு பண்டிகை நாளில் இத்திரைப்படம் வெளியான முதல் நாளன்றே திரையரங்கில் (சென்னை தண்டையார் பேட்டையிலுள்ள பாண்டியன் திரையரங்கம்) இதைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. உண்மையில் அப்போது நான் பார்க்கத் திட்டமிட்டிருந்தது வேறொரு படத்திற்கு. அதற்கு அனுமதிச்சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காக சுமாரான கூட்டமேயிருந்த இத்திரைப்படத்திற்கு எவ்வித முன்தீர்மானமும் இல்லாமல் சென்றேன். பார்த்திபன் என்ற நடிகர், இயக்குநரைப் பற்றி யாருக்குமே தெரிந்திருக்காத நிலை. ஆனால் எவ்வித அறிமுகமே அல்லாத இத்திரைப்படத்தை பார்வையாளர்கள் - பெண்கள் உட்பட-  காட்சிக்கு காட்சி கைத்தட்டி  ரசித்தார்கள் என்பதை நினைக்க இப்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நானும் அவ்வாறே ரசித்தேன். பார்த்திபன் பெண் கதாபாத்திரங்களை கொச்சையாக, ஆபாசமாக திட்டுவதை பெண் பார்வையாளர்கள் விரும்பவில்லை என்றொரு பேச்சு பின்னால் எழுந்தது. ஆனால் அதில் உண்மையில்லை என்றே நினைக்கிறேன். அந்த ரடிவு பாத்திரத்திற்கும் பின்னால் திருந்தி வாழ்கிற, மனைவியை மிகவும் நேசிக்கிறவனவாகவுமான பாத்திரத்திற்கும் பார்த்திபன் மிகச் சரியாக பொருந்தியிருந்தார். குறிப்பாக அவருடைய வசன ஏற்ற இறக்கங்களுக்கு (மாடுலேஷன்) நல்ல வரவேற்பிருந்தது. பார்த்திபன் இந்த அபாரமான முதல் வரவேற்பை பின்வருடங்களில் சரியான முறையில் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.

அவருடைய அடுத்த படமான 'பொண்டாட்டி தேவை' கூட எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பெண்களுக்கு ஏற்படும் மிக அரிதான உடற்குறைபாடான பருவமடைய முடியாத அதன் தொடர்ச்சியாக தாயாக முடியாத காரணத்தினால் உள்ள பெண்ணுடன் ஏற்படும் காதலை அத்திரைப்படத்தில் கையாண்டிருப்பார். தமிழ் சினிமா அதுவரை கையாண்டிருக்காத பிரச்சினை அது என நினைக்கிறேன். ஆனால் அதிலும் முதற்படத்தின் தொடர்ச்சியாக அதே போன்றதொரு அடாவடியான பாத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டது ஒரு பின்னடைவே. (பருத்தி வீரன் 'கார்த்தியும்' இதே போன்றதொரு அபாயக் கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்). மிகக் கவனமாக தன் பாத்திரங்களை உருவமைத்துக் கொண்டு இயக்குநர் -கம் - நடிகர் பணியை மாத்திரம் செய்திருந்தால், வித்தியாசமாக பேசுகிறேன் பேர்வழியென்று அசட்டுத்தனமாக பேசிக் கொண்டு இசை வெளியீட்டு விழாக்களில் மாத்திரமே பார்த்திபனை காணக்கூடிய இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது. பின்னாட்களில் அவர் 'ஹவுஸ்புல்' போன்ற off-beat படங்களை தயாரித்தாலும் பிரதான பாத்திரத்தில் தானே நடிக்க வேண்டும் என்கிற உந்துதலாலும் அதிலுள்ள அதீதத்தன்மை காரணமாகவே எடுபடாமற் போய்விட்டது.

()

இப்போது 'புதிய பாதைக்கு' வருவோம். முன்பே சொன்னது போல் வணிகச் சினிமாவின் மிக கச்சிதமான வடிவம். "ஏன்? எதற்கு?,எப்படி?' போன்ற ஆவலைத் தூண்டும் கொக்கிகளை முதலிலேயே பார்வையாளனின் மூளையில் மாட்டிவிடுவது திரைக்கதையின் பாலபாடம்.

பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவன் என்கிற பாத்திர வடிவமைப்பை ஆரம்பக் காட்சிகளிலேயே அழுத்தமாக பார்வையாளர்களிடம் பதித்து விடுகிறார் பார்த்திபன். பின்பு சீதாவின் எண்ட்ரி. அவர் யார் என்பது மனோரமாவின் பிளாஷ்பேக் மூலம் தெரிகிறது. (அந்த பிளாஷ்பேக் உள்ளேயே சீதாவின் இன்னொரு பிளாஷ்பேக்கும் அடங்கியுள்ளது). ஆனால் அவர் எதற்காக பார்த்திபனைச் சுற்றி வர வேண்டும் என்கிற கேள்வி அப்படியே உள்ளது.

இன்னொரு கதாபாத்திரத்தின் மூலம் அதற்கான முடிச்சை (இதுவும் பிளாஷ்பேக்கே!) அவிழ்க்கிறார் இயக்குநர். பின்பு அவர்களுக்குள் நிகழும் திருமணத்தோடு நிறுத்தியிருந்தால் இது ஒரு சாதாரணமான படமாகக் கூட போயிருக்கலாம். ஆனால் அதை இன்னும் வளர்த்தி, தான் ஒரு அநாதையாக பிறந்த காரணத்தினாலேயே சமூகத்தின் கோபமுள்ள அவன், தன்னால் இன்னொரு குழந்தை அநாதையாகி விடக்கூடாது என்பதற்காக கடைசியில் வன்முறையை கைவிடுவதன் மூலம் படத்திற்கு நல்லதொரு அழுத்தமான முடிவு கிடைக்கிறது.

இந்தப் படத்தின் மிகப் பெரிய பலவீனம் அல்லது பிற்போக்குத்தனமான கருத்து 'தன்னைக் கற்பழித்தவனையே ஒரு பெண் தேடிச் சென்று திருமணம் செய்து கொள்வது'. இந்தக் குறைபாட்டை இயக்குநரே சரியாக உணர்ந்திருக்கிறார் என்பது மனோரமாவிற்கும் சீதாவிற்கும் நிகழும் ஓர் உரையாடலில் நமக்குத் தெரிகிறது. என்றாலும் சாமர்த்தியமான வசனங்களின் மூலம் அதை மழுப்ப முயன்றிருக்கிறார். (இந்தக் காரணத்தினாலேயே இதற்கு எப்படி தேசியவிருது கொடுத்தார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. அரசு இயந்திரங்களின் அசிரத்தைகளில் இதுவுமொன்று.) என்றாலும் ஒருமுறை கற்பழிக்கப்பட்டவுடனே மிகச்சரியாக கருவுற்றுவிடும் வழக்கமான தமிழ் சினிமாவின் பெண் பாத்திரங்களுக்கான விபத்து இதில் நிகழவில்லை என்பது ஓர் ஆறுதல். இந்தப் புள்ளியை ஒரு சமயத்தில் தன்னுடைய துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொண்டு தன் நோக்கத்தை அடைகிறாள் நாயகி.

இந்தப் படத்தின் இன்னொரு பெரிய பலம் வசனங்கள். மேலும் பார்த்திபன் அதை தன்னுடைய பிரத்யேக பாணியில் பேசும் போது அந்தக் கதாபாத்திரத்தின் மீது இயல்பாக ஏற்பட வேண்டிய வெறுப்பையும் மீறி  நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதில் வரும் ஒரு வசனம் எனக்கு நீண்ட ஆண்டுகள் நினைவில் நிற்கும்.

சில்லறை ரவுடியான பார்த்திபனுக்கு வேலை தரும் அரசியல்வாதியாக நாசர். அவருக்கு முன்பாக கால்மீது கால் வைத்து அமர்வார் பார்த்திபன். நாசருக்கு அருகிலிருக்கும் விகேராமசாமி சொல்வார். "தொகுதி என்னை விட சின்னபையன்தான். இருந்தாலும் நானே மரியாதையா உக்காந்திருக்கேன். இவன் என்னமோ மரியாதையில்லாம கால் மேலே கால் போட்டிருக்கானே?"

பதிலுக்கு நெத்தியடியாக பார்த்திபன் சொல்வார்.

'அவருக்கு நான் சம்பாரிச்சுக் கொடுக்க வந்திருக்கேன். மரியாதை கொடுக்க வரலே'

முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பணிநடைபெறும் பொருட்டு எற்படுத்திக் கொள்வது ஓர் ஒப்பந்தமே. இதற்காக முறையே முதலாளி லாபமும் தொழிலாளி சம்பளமும் பெறுகிறார்கள். இரு ஒப்பந்தக்காரர்களிடையே எவ்வித போலி சம்பிதாயங்களும் மரியாதைகளும் இருப்பதற்கு வியாபாரத்தைத் தாண்டி எவ்வித நியாயமுமில்லை. ஆனால் வேலை தருகிற முதலாளி என்கிற காரணத்திற்காகவே அவரை கண்டவுடன் எழுந்து நிற்க வேண்டும், சலாம் போட வேண்டும், பணிவாக நடந்து கொள்ள வேண்டும், சரிசமமாக அமரக்கூடாது என்பதெல்லாம் நம் சமுகத்தின் பொதுப்புத்தியிலேயே உறைந்து போயுள்ளது. ஆண்டைகளும் முதலாளிகளும், தொழிலாளிகள் நம்மிடம் இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரு தொழிலாளி தனக்கு நியமிக்கப்பட்ட பணியை முறையாக செய்து முடித்தாலே போதுமானது, மற்றெந்த சம்பிரதாயமும் தேவையில்லை என்பது நடைமுறையில் இல்லை. இதனை இக்காட்சி மிகச் சுருக்கமாக ஆனால் அழுத்தமாக வெளிப்படுத்தி விடடது.

'வாடி-ன்னு வேணா சொல்வேன். 'போடி-ன்னு சொல்ல மாட்டேன்' போன்ற நெகிழ்வை ஏற்படுத்தும் வசனங்களும் பார்த்திபனின் நையாண்டித்தனமான வசனங்களும் இத்திரைப்படத்தை அதிசுவாரசியமாக்குகின்றன.

இத்திரைப்படத்தின் போதுதான் பார்த்திபனுக்கும் சீதாவிற்கும் உண்மையாகவே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர் என்று ஞாபகம். மீடியாக்களிலும் இது அதிபுனிதப்படுத்தப்பட்டு இருவருக்குமான அன்னியோனங்கள் சற்று மிகையாகவே பகிரப்பட்டன. அதனாலேயே இவர்களின் விவாகரத்து நிகழ்ந்த போது அது எனக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. அது பற்றி எழுதின பழைய பதிவு இது.


பார்த்திபன், நீங்க இப்படி செஞ்சிருக்க வேண்டாம்.....

image courtesy: original uploader

suresh kannan

10 comments:

சென்ஷி said...

//ஒருமுறை கற்பழிக்கப்பட்டவுடனே மிகச்சரியாக கருவுற்றுவிடும் வழக்கமான தமிழ் சினிமாவின் பெண் பாத்திரங்களுக்கான விபத்து இதில் நிகழவில்லை என்பது ஓர் ஆறுதல்./

:)))

மணிஜி said...

இத்திரைப்ப்டம் வெளியான போது பார்த்திபன் கொடுத்த விளம்பரம் . யானைக்கு போகும் ஒரு கவளம் சோற்றிலிருந்து சிதறும் பருக்கைகள் எனக்கு கிடைத்தால் போதும்

dondu(#11168674346665545885) said...

//இந்தப் படத்தின் மிகப் பெரிய பலவீனம் அல்லது பிற்போக்குத்தனமான கருத்து 'தன்னைக் கற்பழித்தவனையே ஒரு பெண் தேடிச் சென்று திருமணம் செய்து கொள்வது'.//
இந்த கான்சப்டின் கேலிக்கூத்தை சாடியே நான் எனது ஆண் பெண் கற்புநிலை -2 பதிவில் இவ்வாறு எழுதினேன்:
“ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்”.
பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/2_14.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நான் திரும்பினா நீ ஒதப்பியே....
நீ திரும்பாட்டியும் நான் ஒதப்பனே..

இன்னிக்கும் நெனச்சு நெனச்சு சிரிக்கற குசும்பு :)

chandramohan said...

அருமையான பதிவு சுரேஷ்.
நல்ல அவாதானிப்பு உங்களுக்கு.
திரைக்கதையில் வல்லவரான பாக்யராஜின் வாரிசல்லவா ..அதனாலேயே பார்த்திபனுக்கு அந்த கலை கைகூடி வந்திருக்கும். ஆனால் தன் முழு stuff ஐயும் முதல் படத்தில் தந்து விட்டு அடுத்து என்ன செய்து கிடைத்த வெற்றியை தக்க வைத்துக்கொள்வது என்று குழம்பி திரியும் பல இயக்குனர்களில் ஒருவராய் பார்த்திபன் ஆனதற்கு தன்னை பற்றிய அதீத நம்பிக்கை ஒரு பெரிய காரணம் என்று நினைக்கிறேன். மிக சரியாக நீங்கள் சொன்னது போல் ஆடியோ விழாக்களில் நடிகைகளை புகழ்வதன் மூலம் தான் இருப்பை தக்க வைக்கும் மோசமான நிலையில் தான் பார்த்திபன் இருக்கிறார். பாக்யராஜ் ஒரு முறை ஒரு பெண் தாய்மை அடைவதன் மூலமே 'முழுமை' அடைகிறாள் என்று ஒரு படத்தில் 'கருத்து' கூறி பெண்ணியவாதிகளிடம் வாங்கிக்கட்டிக்கொண்டது நினைவுக்கு வருகிறது.

PRABHU RAJADURAI said...

லட்சுமி ராஜேஷ் நடித்த சிறை என்ற படமும் இதே போன்றாதொரு கதைதானே...எது முதலில் வந்தது. இரண்டும் தொடர்பு படுத்தப்பட்டதா?

நான் இரண்டும் பார்க்கவில்லை எனினும், கேள்விப்பட்டிருக்கிறேன்

ராம்ஜி_யாஹூ said...

இம்மாதிரியான படங்களை ஒர் அவதானிப்பிற்காக என்னுடைய சேகரங்களில் இணைத்துக் கொள்வது வழக்கம்.

தமிழ் சினிமாவின் பொதுவான வணிக நோக்கையொட்டி, இத்திரைப்படத்தின் திரைக்கதை மிகக் கச்சிதமான வடிவத்தில் அமைந்திருக்கிறது என்பது என் அவதானிப்பு.



இந்த இரண்டு வாக்கியங்களிலும் வரும் அவதானிப்பு என்ற வார்த்தைக்கு என்ன பொருள்.

அவதானிப்பு என்ற வார்த்தையை இரு இடங்களிலும் எடுத்துவிட்டு வேறு என்ன மாற்று வார்த்தை எழுதலாம்.

எனக்கு இந்த வார்த்தை இன்னமும் சரியாக புரிவதில்லை.

Ashok D said...

முதல் முறையாக வீடியோ டெக் வாங்கியவுடன்... ஒரு சினிமா படம் வாங்கவேண்டுமென ராஜ்வீடியோ விஷனுக்கு போனபோது நான் செலக்ட்செய்த படம் ‘புதிய பாதை’... என் அப்பா ’ஏதாவது சாமி படம் வாங்குப்பா’ என்றபோது... நான் வாங்கியது ’திருவிளையாடல்’.

(அப்பொழுது என் வயது 15 என்பதுதான் விஷேஷம்)

மிகவும் பிடித்த படமிது.. புதியபாதை

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு நன்றி:

பிரபு ராஜதுரை: ஆர்.சி.சக்தியை 'சிறை'யை பல வருடங்களுக்கு முன்பு பார்த்தது மங்கலாக நினைவிலுள்ளது. தன்னைச் சந்தேகப்படும் கணவனை விட தவறாக நடந்திருக்கக்கூடிய சூழ்நிலையிலும் யோக்கியமாக நடந்து கொண்ட ரவுடியே மேல் என்று நாயகி முடிவு செய்வதான கதை என்று ஞாபகம். கதைப் போக்கு என்ற ரீதியில் ஆராய்ந்தால் இதற்கும் புதியபாதைக்கும் ஒருவகையில் தொடர்பிருக்கலாம்.

ராம்ஜி_யாஹூ: Observation என்பதன் தழிழாக்கமாக 'அவதானிப்பு' என்ற சொல்லைச் சொல்லலாம். கவனித்தல் என்பதை அவதானிப்பு என்கிற சொல்லில் அழுத்தம் கூடுகிறது. ஒரு விஷயத்தை தொடர்ந்து கவனித்து அதன் மூலம் ஒரு புரிதலுக்கு வந்து சேர்வதும் அதை இன்னும் தெளிவுப்படுத்திக் கொள்வதற்காக இன்னும் தொடர்ந்து கவனிப்பது என்று... இத்தனை விஷயங்களை அந்த ஒற்றைச் சொல் உணர்த்துவதாக எனக்குப் படுகிறது. எனவேதான். இப்படிப்பட்ட சொற்களும் புழக்கத்தில் வரவர நமக்குப் பழகிவிடும்தானே?

Kaarthik said...

அருமையான பதிவு. அற்புதமான படம். பார்த்திபன், சீதா, மனோரமா முதல் அந்தச் சிறுவன் வரை அனைவரும் சிறப்பாக நடித்துள்ள படம்.

அனுராதா ரமணனின் 'சிறை'-க்கு முன்பே ஜெயகாந்தன் இது போன்றதொரு கருவை 'சில நேரங்களில் சில மனிதர்கள்'-ல் கொண்டுவந்துள்ளார். ஆனால் அதில் கற்பழிக்கப் பட்டவனைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்றெண்ணாமல், மாமாவின் சவாலுக்காக அவனை ஒருமுறை சந்திக்க வேண்டும் என்றே நினைக்கிறாள் கங்கா. இவ்விரண்டிலும் கூட கற்பழிக்கப் பட்ட பெண்கள் கருத்தரிக்காமல் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்று!