Saturday, November 20, 2010

சிடுமூஞ்சி நூலகர்களும் விதிவிலக்குகளும்



 'வருங்காலத்தில் என்னவாகப் போகிறேன்?' என்று பதின்ம வயதுகளில் தோன்றும் கேள்விக்கு சினிமா, பத்திரிகையாளன் எனும் பதில்களோடு இன்னொன்றும் உண்டு. 'நூலகர்'.

புத்தக வாசிப்பிலும் சேகரிப்பிலும் பித்துப் பிடித்து திரிந்த காலம். நூலகராய் பணிபுரிய நேர்ந்தால்  எப்போது வேண்டுமானாலும் எந்த நூலை வேண்டுமானாலும் ஆசை தீர வாசித்துக் கொண்டேயிருக்கலாம் என்பதே அந்த இளவயதுக் கனவுக்கு அடிப்படையாய் இருந்தது. என் தனிப்பட்ட அனுபவத்தைப் பொறுத்தவரை சிடுமூஞ்சித்தனத்திற்கும் நூலகப் பணிக்கும் பல ஜென்ம பந்தம் இருப்பதை உணர முடிகிறது. இது ஏனென்று தெரியவில்லை.

பள்ளிக் கூட சமயங்களில், ஆண்டுக்கொரு முறை நூலகக் கட்டணம் வசூலித்தாலும் நூலகத்தின் பக்கம் மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்பது பொதுவிதியாக இருந்தது.  இன்று என் மகள் படிக்கும் காலத்திலும் அதே நிலை நீடிப்பது துரதிர்ஷ்டம்தான். நான் படித்த சமயத்தில் 'அரும்பு' என்கிற கிருத்துவ வாசனையடிக்கும் மாத இதழை மாதாமாதம் வாசிக்கத் தருவார்கள். அவ்வளவுதான். அதைத்தவிர நூலகத்தின் பக்கம் சென்றால், நூலகர் மிளகாய்த்தூள் விழுந்த ஆணுறையை தவறுதலாக உபயோகப்படுத்தி விட்டவர் போல பதறி எரிச்சலுடன் எங்களை துரத்தி விடுவார். ஒன்பது இடங்களும் குளிர்ந்திருக்கும் சமயத்தில் நைந்து போயிருக்கும் 'நன்னெறிக் கதைகளை' அரை மனதுடன் தருவார். தடித்தடியாக கைபடாத அகலிகையாய் கண்ணாடி அறைகளில் அமர்ந்திருக்கும் புத்தகங்களை ஏக்கத்துடன் பார்த்து விட்டு திரும்புவேன். நூலகர் பணி என்றால் புத்தகங்களை யார் கையும் படாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே இவர்களின் புரிதலாக இருக்குமோ என்று தோன்றும்.

பெரும்பாலான அரசு நூலகங்களில் இருப்பவர்களுக்கு அங்கிருக்கும் நூற்களைப் பற்றிய விவரங்களோ, அறிவோ, வாசிப்போ இருக்காது. ஆனால் நூலகத்திற்கான பட்டப் படிப்பு படிக்காமலேயே, பழைய புத்தகக் கடைக்காரர்கள் நுட்பமான துறை சம்பந்தமான புத்தகங்களைக் கூட தெளிவாக அறிந்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தினால் ஏற்படும் தேடலுக்கும் கடமையே என கூலிக்கு மாரடிக்கும் சலிப்பிற்கும் உள்ள இடைவெளியை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சென்னையின் பல அரசு நூலகங்களில் நான் கசப்பான அனுபவங்களையே சந்தித்திருக்கிறேன். குமுதம், ஆனந்த விகடன் போன்ற பிரபலமான வணிக இதழ்கள் கண்ணில் பட்டால் அன்று உங்கள் அதிர்ஷ்ட தினம். பெரும்பாலும் அவை பழைய இதழ்களாகவே இருக்கும். புதிய இதழ்கள் நூலகரின் வீட்டில் அல்லது அவர்களது நெருங்கிய நண்பர்களின் வீட்டில் இருக்கும். 'யுனெஸ்கோ கூரியர்' போன்ற கனமான சமாச்சாரங்களை அடங்கிய இதழ்கள் யாராலும் சீந்தப்படாமல் இருக்கும். காலத்தை கலைத்துப் போடும் பின்நவீனத்துவ மாயம் போல நேற்றைய இன்றைய செய்தித்தாள்கள் சிதறி பக்கங்கள் மூலைக்கொன்றாக இருக்கும்.

புத்தகங்களை இரவல் வாங்குவதற்கான அனுமதிச் சீட்டை நூலகரிடமிருந்து பெறுவது அத்தனை சுலபமல்ல. நாம் ஏதோ புத்தகங்களை செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச் செல்வது போன்ற தோரணையுடனே அவர் நம்மை கடுகடுவென்று அணுகுவார். எடுத்துச் செல்லப்படும் புத்தகங்களைப் பற்றிய விவரங்களையும் திரும்பி வரும் புத்தகங்களையும் பேரேட்டில் பதிவது குறித்தான பணிச்சுமை கருதியே அந்தச் சலிப்பு. நூல் தாமததிற்கான அபராதத் தொகை ஏதேனும் வந்தால் அதை தலைமை நூலக அலுவலகத்தில் போய் கட்டி விட்டு வர வேண்டும். இதற்காகவே அபராதத் தொகையை வசூலிக்காத நூலகர்களும் உண்டு. புதிய அனுமதிச் சீட்டுக்காக நூலகர் பெரும்பாலும் நமமை தவிர்க்கவே விரும்புவார். ஏரியா விட்டு ஏரியா வந்த நாயே சமயங்களில் ஒற்றுமையாகப் போய் விடுகிற நிலையில் "ஏன் அந்த ஏரியாவுல இருந்து இங்க வந்து புத்தகம் எடுக்கறீங்க' என்பார். ஒரு நபரே இரண்டு மூன்று நூலகங்களை கட்டியழும் நூலகர்களும் உண்டு.

இது ஒருபுறமென்றால் வருபவர்களின் வாசிப்பு ரசனையும் அபாரமானது. லஷமிகளும், ரமணிசந்திரன்களும், பாலகுமாரன்களுமே ஓய்வு ஒழிச்சலின்றி சுழற்சியில் இருப்பார்கள். அசோகமித்திரன்களும், புதுமைப்பித்தன்களும், ஜெயமோகன்களும் தூசு படிந்து கேட்பாரின்றி மூலையில் பரிதாபமாக அமர்ந்திருப்பார்கள். பல அரிய நல்ல நூல்கள் மாதவிலக்குப் பெண்கள் போல புழக்கடைகளில் மறைவாக போடப்பட்டிருக்கும்.

அதியமான் சார்பாக தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவை வஞ்சப் புகழ்ச்சி அணியாக (சொளையா 10 மார்க்) பாடிய ஏழாம் வகுப்பில் வாசித்த பாடல்தான் நினைவுக்கு வரும்.
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்யணிந்து,
கடியுடை வியன்நகர் அவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல் எம்கோமான் வைந்நுதி வேலே

(புறநானூறு, 95)
 (இப்படியெல்லாம் பழம் பாடல்களை எடுத்துப் போட்டால் பதிவின் வெயிட் கூடுமா என பார்க்கிறேன்).

மேலும் புத்தகங்களும் அந்தந்த வகைமைகளில் ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்காது. நகைச்சுவை என்கிற தலைப்பில் விரைவீக்கத்திற்கான மருத்துவக் குறிப்புகளும் அறிவியல் என்னும் அடுக்கில் அப்புசாமி சீதாப்பாட்டியும் இருப்பார்கள். தம்முடைய வருங்கால தேவைக்காக சம்பந்தமில்லாத அடுக்குகளில் நூற்களை ஒளித்து வைக்கும் குதர்க்கமான வாசகர்களும் உண்டு. தமக்குத் தேவையான பகுதியை புத்தகத்திலிருந்து அப்படியே கிழித்து எடுத்துக் கொள்ளும் வன்முறையாளர்களையும் அறிவேன். 'இந்த நாவலை எழுதின இருகூரானை இரு கூறாக பிளக்க வேண்டும்' என்று நூலட்டையில் தம்முடைய கறாரான விமர்சனத்தை முன்வைக்கும் குதர்க்கவாதிகளின் குறிப்புகளையும் கண்டிருக்கிறேன்.

இப்படியாக நூலகர்களுக்கும் நூலகங்களுக்கும் குறைந்த பட்சம் எனக்கும் தொடர்நது ராசியில்லாத நிலையில் இந்தக் கட்டுரையை வாசித்ததும் இயல்பாக கண்ணீர் மல்கியது. கட்டுரையா, அல்லது புனைவா என்று ஒரு முறை நிச்சயப்படுத்திக் கொள்ளத் தோன்றியது. மற்றவர்களும் வாசிக்கும் பொருட்டு இங்கே அதை பகிர விழைகிறேன்.

இதற்காகவே என் இல்லத்தை சாந்தோம் பகுதிககு மாற்றிக் கொள்ளலாமா என்று கூட தோன்றுவது சற்று அதீதம்தான்.

தொடர்புடைய பதிவுகள்:

சரோஜாதேவி புத்தகமாவது வேண்டும்...   

நூலகங்கள்... பதிப்பகங்கள்... அரசு... 

கன்னிமையை இழக்காத நூலகம்


suresh kannan

12 comments:

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

ஆம். எனக்கும் என் சிறுவயதில் நூலக பயனர் அட்டை மறுக்கப்பட்ட வலி இன்றும் ஆறாத வடுவாகவே உள்ளது.

Anonymous said...

மிக நல்ல பதிவு. என் மாணவப் பருவத்து நூலக அனுபவங்களை நினைவுகூற முடிந்தது. சிரித்தபடியே இதை எழுதுகிறேன். தமிழகத்தின் எந்த ஊரிலும் அரசு நூலகங்கள் ஒன்றுபோலவே இருக்கின்றன போலும். ஆனால் வாசிக்க விருப்பமுள்ளவர்கள் எப்படியும் வாசித்துவிடுகிறார்கள். இன்று பிள்ளைகள் 'மால்'களை பிரமித்துப் பார்ப்பதைப் போல, அன்று நூலகத்தைப் பார்த்திருக்கிறோம். ஏதோ புதையல் சுரங்கத்தில் நுழைந்ததுபோல ஒவ்வொறு ராக்காக புத்தகத்தை எடுத்தெடுத்துப் பார்த்தது நினைவிருகிறது. நீங்கள் இணைத்திருக்கும் சுட்டியை இனிதான் படிக்கவேண்டும். நன்றி

iniyavan said...

சுரேஷ் கண்ணன்,

ஏன் இந்த மாதிரி எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க?

//அதைத்தவிர நூலகத்தின் பக்கம் சென்றால், நூலகர் மிளகாய்த்தூள் விழுந்த ஆணுறையை தவறுதலாக உபயோகப்படுத்தி விட்டவர் போல பதறி எரிச்சலுடன் எங்களை துரத்தி விடுவார்//

//பல அரிய நல்ல நூல்கள் மாதவிலக்குப் பெண்கள் போல புழக்கடைகளில் மறைவாக போடப்பட்டிருக்கும்//

test said...

//பெரும்பாலான அரசு நூலகங்களில் இருப்பவர்களுக்கு அங்கிருக்கும் நூற்களைப் பற்றிய விவரங்களோ, அறிவோ, வாசிப்போ இருக்காது. ஆனால் நூலகத்திற்கான பட்டப் படிப்பு படிக்காமலேயே, பழைய புத்தகக் கடைக்காரர்கள் நுட்பமான துறை சம்பந்தமான புத்தகங்களைக் கூட தெளிவாக அறிந்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.//

உண்மை! நான் கண்டிருக்கிறேன்!

Anonymous said...

A good blog.Thanks
The blog in Uyirmai had been written last year.I do not think that Mr.Murali would still be working there as he would have been a nuisance for all the "regular" librarians!!

குரங்குபெடல் said...

நல்லபதிவு . . .நன்றி . .

இளங்கோ said...

//(இப்படியெல்லாம் பழம் பாடல்களை எடுத்துப் போட்டால் பதிவின் வெயிட் கூடுமா என பார்க்கிறேன்)//

hahaha..
அது நிறைவேறாதுங்க:)

dondu(#11168674346665545885) said...

சம்பந்தப்பட்ட நூலகர் தரப்பையும் பார்க்க வேண்டும். பள்ளி நூலகத்துக்கு வரும் அப்பபள்ளி மாணவர்கள் எல்லோருமே பொறுப்பாக செயல்படுவார்கள் எனக்கூறவியலாது. சத்தம் போடுவார்கள். மேலும் அப்பக்கம் தலைமை ஆசிரியர் வந்தால் அவர் வேறு நூலகரை திட்டுவார். நிர்வாக அமைப்பில் அவரது நிலை உயர்ந்தது அல்ல.

ஏதேனும் புத்தகங்கள் கிழிக்கப்பட்டால் அவரே பொறுப்பாக்கப்படுவார். சில தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு தேவையான புத்தகம் கேட்டு அது வெளியில் போயிருந்தால் அதற்கு வேறு கோபப்படுவார். மொத்தத்தில் நூலகர் நிலை இருதலைக் கொள்ளி எறும்பினதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Vadivelan said...

Hi,

Good blog.

Vadivelan. P
http://manage-geospatial.blogspot.com/

Krishnan said...

Gave a nice feeling of warmth. May his tribe prosper !

Ashok D said...

//காலத்தை கலைத்துப் போடும் பின்நவீனத்துவ மாயம் போல நேற்றைய இன்றைய செய்தித்தாள்கள் சிதறி பக்கங்கள் மூலைக்கொன்றாக இருக்கும்.//

:)

பிரகாஷ் said...

"முசுடு சங்கரலிங்கமும், புக்ஃபியஸ்டாவும்" என்கிற தலைப்பில் என் சின்ன வயது நூலக அனுபவங்களை எழுதியுள்ளேன்.
http://prakash-payanam.blogspot.com/2008/03/blog-post.html
உங்களுக்கு ஏற்பட்ட அதே கசப்பான அனுபவங்கள் எனக்கும்.
ஆனால்,வருடாந்திர தணிக்கை (ஆடிட்டிங்)யின் போது எங்கள் நூலகத்தில் இருக்கும் பத்தாயிரத்துச் சொச்ச புத்தகங்களை நம்பர்படி அடுக்கி வைக்க அவருக்கு உதவுவேன். அதிலிருந்து எனக்கு நூலகரின் கருணை கிடைக்க ஆரம்பித்தது.

உண்மைதான்.
நூலகர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான்