Sunday, November 07, 2010

அமெரிக்க அதிபருடன் ஒரு கைகுலுக்கல்

(ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி எழுதப்பட்ட பிரத்யேக திரைப்பார்வையிது) :-)

பங்குச் சந்தை வர்த்தகன், நாவலாசிரியை, ஆங்கில மொழி பயிற்சியாளன், சமூக ஆர்வலன், மென்பொருள் பொறியாளன், இளம்பெண் தொழிலதிபர் ... என்றொரு விநோதமான கூட்டணி.

யார் இவர்கள்?

அமெரிக்க அதிபர் புஷ் வருகையையொட்டி (2006-ல்) இந்தியாவின் வருங்காலத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்க அதிபருடன் கைகுலுக்குவதற்கான ஒரு வாய்ப்பு நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்படுகிறது. அதிபருடன் கைகுலுக்கக்கூடிய இளம் தலைமுறை அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்கக்கூடிய பணியை ஒரு PR நிறுவனம் மேற்கொள்கிறது. இந்தத் தேர்வின் போது நிகழும் அபத்தங்களையும் கூத்துக்களையும் கூர்மையான சுவாரசியமான அங்கதச்சுவைக் காட்சிகளுடன் விவரிக்கும் திரைப்படம் THE PRESIDENT  IS COMING (2009).


ஜார்ஜ் W புஷ்ஷைப் பற்றி இணையத்தில் உள்ள பல நகைச்சுவைகளில் ஒன்று 'என்' மொழியில்.

இறந்த பின் சொர்க்கம் அல்லது நரகம் செல்வதற்கான வரிசை. ஐன்ஸ்டைன், பிக்காஸோ, ஜார்ஜ் புஷ் ஆகியோரும் நிற்கிறார்கள். அவர்களின் பிரத்யேக அடையாளங்களை விசாரித்து உள்ளே அனுமதிக்கிறார் கடவுள்.

'நீர்தான் ஐன்ஸ்டைன்' என்பதற்கு என்ன ஆதாரம்?

கரும்பலகையும் சாக்பீஸூம் கேட்கிறார் ஐன்ஸ்டைன். கடவுள் தன்னுடைய மாயத்தின் மூலம் அந்தரத்திலிருந்து அதை வரவழைக்கிறார். மிகச் சிக்கலான இயல்பியல் சூத்திரம் ஒன்றை மளமளவென்று எழுதிக் காண்பிக்கிறார். கடவுளுக்கு சந்தேகம் தீர்ந்து அவரை உள்ளே அனுமதிக்கிறார்.

அடுத்து பிக்காஸோ. அவரும் அதே கரும்பலகையி்ல் அவருடைய பிரத்யேக க்யூபிச பாணில் ஒவியம் ஒன்றை வரைந்துக் காட்ட அவரும் அடையாளம் காணப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்.

அடுத்தது நம்ம ஆள் புஷ்.

கடவுள் சொல்கிறார். "ஐன்ஸ்டைனும் பிக்காஸோவும் அவங்க அடையாளத்த நிருபீச்சிட்டு உள்ளே போயிட்டாங்க. நீ யாரு. நிருபீ" என்கிறார்.

"ஐன்ஸ்டைனும் பிக்காஸோவுமா?. யார் அவங்கல்லாம்?"

"அட நீதான் புஷ்ஷா. உள்ள வாய்யா"என்கிறார் கடவுள்.

புஷ்ஷைப் பற்றியே இத்தனை நகைச்சுவை இருக்கும் போது அவர் சம்பந்தப்பட்ட திரைப்படமெனில் அதற்கு சற்றும் குறைவில்லாமல் நகைச்சுவை இருக்கும்தானே? ஆரம்பம் முதல் இறுதி வரை ரீங்கரித்துக் கொண்டேயிருக்கும மாண்டலின் போல மெலிதான பாசாங்கற்ற நகைச்சுவை இத்திரைப்படம் முழுவதும் வழிந்து கொண்டேயிருக்கிறது.

எல்லா பாத்திரங்களும் தங்களின் வார்ப்பிற்கேற்றவாறான பின்னணியிலிருந்து தங்களின் அழுக்குகளையும் வெகுளித்தனங்களையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

PR நிறுவனத்தின் தலைவி, தன்னுடைய உதவியாளினியை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டிக் கொண்டே இருக்கிறாள். மேலும் புஷ்ஷூடன் காலையுணவு அருந்த உதவியாளினிக்கு கிடைக்கும் வாய்ப்பையும் சமத்காரமாக தட்டிப் பறிக்க முயல்கிறாள்.

நாவலாசிரியை மிக சாமர்த்தியமாக தன்னுடைய போட்டியாளர்களை ஒவ்வொருவராக கழற்றி விடுகிறாள். இதற்காக தன்னுடைய உடலைக் கூட ஓர் ஆயுதமாக அவள் பயன்படுத்த தயங்குவதில்லை. பங்குச் சந்தை வணிகன் எல்லாவற்றையுமே பணம் கொடுத்து வாங்க முடியும் என நம்புகிறான், புஷ் உட்பட. சமூக ஆர்வலன், ஆணாக்கவாதியாகவும் இனவாதியாகவும் எத்தனை கல்வி கற்றிருந்தாலும் தன்னுடைய பிற்போக்குத்தனங்களை விட முடியாதவனாக இருக்கிறான். ஆனால் இதை அவன் போலித்தனமில்லாமல் வெளிப்படையாகவே செய்கிறான். ஆங்கில உச்சரிப்பு பயிற்சியாளனும் இளம் பெண் தொழிலதிபரும் தங்களின் பிம்பம் குறித்த உயர்வு மனப்பான்மையோடு இயங்குகின்றனர். அவர்களின் கலவி வீடியோகவாக இணையத்தில் ஏற்கெனவே வெளிப்பட்டிருக்கிறது. அதை முன்னிட்டு இருவரும் சண்டையிடுகின்றன. இறுதியில் தங்களின் அசலான நிலையை உணர்ந்து திருமணம் செய்து கொள்ளும் முடிவுடன் போட்டியிலிருந்து விலகி விடுகின்றனர்.

வட மாநிலத்தவர்களை தென்னிந்திய சினிமாக்களில் எத்தனை கொச்சையாக சித்தரிக்கிறார்களோ, அவ்வாறே அவர்களும் இங்குள்ளவர்களை பழிவாங்காமல் விடுவதில்லை. மென்பொருள் பொறியாளனாக வரும் தென்னிந்தியன், அசடாகவும் ஹோமோவாகவும் எப்போதும் பாலிச்சை குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பவனாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். இவனின் பழைய ஹோமோ உறவு தெரியவந்து போட்டியிலிருந்து விலக்கப்படுகிறான்.

ஆனால் இறுதியில் அமெரிக்க அதிபருக்கு யார்தான் கைகுலுக்குகிறார்கள் என்பது சுவாரசியமான சஸ்பென்ஸ்.



மத நம்பிக்கையாளர்களுக்கு இறப்பிற்குப் பின் 'சொர்க்கம்' என்பது எப்படி ஒரு கனவாகவும் லட்சியமாகவும் இருக்கிறதோ, அவ்வாறே நீண்ட வருடங்களாக உயர் மற்றும் நடுத்தரவர்க்க இந்தியர்களுக்கு 'அமெரிக்கா' என்பது தங்களது கனவெல்லையின் உச்சமாக இருக்கிறது.

தன்னுடைய உறவினர் ஒருவரைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் 'அமெரிக்காவிற்கு போய் வந்தவ' என்றே தொடர்ந்து குறிப்பிடுவார் என் அம்மா. அமெரிக்காவிற்கு போய் வந்ததே ஒரு சிறப்புத் தகுதியாக அவரைப் பொறுத்தவரை ஆகி விட்டிருக்கிறது. தங்களுடைய மகனோ, மகளோ அமெரிக்காவிலிருப்பதை பெருமையான அந்தஸ்துடன் உரையாடல்களில் பலரும் குறிப்பிடுவதை கவனிக்கலாம். நாம் படித்து வளர்வதே அமெரிக்க வாழ்க்கைக்குத்தான் என்று இளவயதிலேயே அந்தக் கற்பனையுடன் தங்கள் பயணத்தைத் தொடரும் மாணவர்களும் அதை அவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே புகட்டி வளர்த்த பெற்றோர்களையும் கண்கூடாகவே இச் சமூகத்தில் காண்கிறோம்.

(இங்கே சுயபுலம்பலுடன் ஓர் இடைச் செருகல். ஏன் இப்படியான காட்டுமிராண்டிகளின்  நிலப்பிரதேசத்தில் -கவனிக்க தேசம் அல்ல- பிறந்தோம் என்று என்னைப் பற்றி நானே பல முறை சலித்துக் கொண்டிருக்கிறேன். என் கனவு அமெரிக்கா அல்ல. தனி மனிதனின் நுண்ணுணர்வுகளுக்கும் விருப்பத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் எங்கே அதிகபட்ச மரியாதையும் அனுமதியும் அளிக்கப்படுகிறதோ அடிப்படையான நாகரிகத்துடன் நேயத்துடன் மனிதர்கள் எங்கே புழங்குகிறார்களோ அதுவே நான் வாழ விரும்புகிற நிலப்பிரதேசமாக இருக்கும். அந்த மாதிரியான மனிதர்களின் இடையில்தான் இருக்க விரும்புகிறேன். அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி. பிரான்சாக இருந்தாலும் சரி. பைத்தியக்காரர்களின் கூடாரத்தில் தங்கி அனுபவிக்கிற மன சித்திரவதை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதானிருக்கிறது).

உயர்நடுத்தர வர்க்கத்தினரின் இந்தப் போக்கு படத்தின் பல காட்சிகளில் சூசகமாக கிண்டலடிக்கப்பட்டிருக்கின்றன. 'புஷ்ஷை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொள்ளக்கூடாது' என்பது தேர்வுக்கான வழிகாட்டுதலில் ஒரு விதியாக சொல்லப்படுகிறது. அமெரிக்கர்களின் வசதிக்காக நம்முடைய நேரத்தையும், அடையாளத்தையும், உச்சரிப்பையும், பெயரையும் பொருளாதாரக் காரணங்களுக்காக மாற்றிக் கொண்டிய அவலம் இந்தத் திரைப்படத்தில் கிண்டலடிக்கப்படுகிறது. இந்த அவலத்தை உணராமல் அதை ஓர் அந்தஸ்தாகவே பாவித்துக் கொள்கிற படித்த முட்டாள்களை காணும் போது சுயத்தை வளர்க்காமல் ஆட்டு மந்தைகளை உருவாக்குகிற நம் கல்வித்துறையின் போக்கையும நம் மலட்டுத்தனமான சமூக வார்ப்பையும்தான் குறை சொல்லத் தோன்றுகிறது.

படத்தின் சில சுவாரசியமான காட்சிகள்:

தூதரகத்தில் பழைய அமெரிக்க அதிபர்களின் புகைப்படங்களுக்கு இடையில் நடிகர் தர்மேந்திராவின் படமும் தொங்குகிறது. அதன் பிரேம் சேதமடைந்து பழுது பார்ப்பதற்காக சென்ற போது எப்படியோ இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அதற்கு மாற்றாக அங்கிருக்க வேண்டிய புகைப்படம் பற்றிய (சீனியர் புஷ்) தகவல் ஒருவருக்கும் தெரியவி்ல்லை. கடைசியில் தூதரக அதிகாரி, கூகுளில் இதைப் பற்றி தேடுமாறு உததரவிடுகிறார்.

பங்குச் சந்தை வணிகன் பணத்தாசையின் மூலம் PR நிறுவன உதவியாளினியை மடக்கி விடுகிறான். (ஆனால் அவளோ தன் பெண் உயரதிகாரியின் குறிப்பின்படி அவனைச் சிக்க வைக்க இந்த நாடகத்திற்கு உடன்படுகிறாள்). நிறுவன தலைவி, அந்த அறைக்குள் செல்ல வணிகன் நின்று கொண்டும் உதவியாளினி  அவனுக்கு ப்ளோ - ஜாப் செய்யும் நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். வணிகன் இவளைக் கண்டு அதிர்ச்சியுடன் 'நீங்கள் நினைப்பது போல இல்லை' என்று திரும்புகிறான். பணக்கற்றையொன்று அவனின் ஆண் குறி போலவே நீண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆண் தன் குறியின் மூலம் செலுத்தும் அதிகாரம் போல பணமும் ஓர் அதிகாரமாக திகழ்கிறது என்பதை (உண்மையாகவே) ஒரு குறியீட்டுக் காட்சியாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர்.

அனுபவ் பால் எழுதின நாடகத்தை குணால் ராய் கபூர் வெற்றிகரமான நாடகமாக பல முறை இயக்கியிருக்கிறார். அதுவே அவரின் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. இதைத் தவிர இவர் வேறெந்த திரைப்படத்தையும் உருவாக்கியதாகத தெரியவில்லை. இருந்தால் அதை காண விரும்புகிறேன். நாவலாசிரியையாக கொன்கனா சென் நடித்திருக்கிறார். புஷ் சம்பந்தப்பட்ட நிஜ வீடியோ காட்சிகள் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. நகைச்சுவைப் படம் என்பதற்காக தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் பின்னணி களங்கள் அதிநம்பகத்தன்மையுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரே கட்டிடத்தினுள் படம் இயங்குவதால் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான பின்னணியும் காட்சிகளும் வருவது சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும் திரைக்தையின் சுவாரசியம் அக்குறையைப் போக்குகிறது. மேலும் இது ஏற்கெனவே பல முறை மேடை கண்ட நாடகத்தின் நீட்சி என்பதால் இதை உணர்ந்து கொள்ள முடிகிறது. நிஜ சம்பவங்களை கற்பனை பாத்திரங்களுடன் இணைத்து உண்மையானது போலவே நிகழ்த்தும் Mockumentary வகையைச் சார்ந்தது இத்திரைப்படம்.

அமெரிக்க கனவுடன் இயங்கிக் கொண்டிருப்பவர்களும் கனவை நிறைவேற்றிக் கொண்ட ஆனால் அதிலுள்ள வெற்றிடத்தின் போதாமையை விரக்தியுடன் அனுபவித்துக் கொண்டு வெளிப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களும் குறிப்பாக காண வேண்டிய திரைப்படமிது.

suresh kannan

6 comments:

Anonymous said...

"பைத்தியக்காரர்களின் கூடாரத்தில் தங்கி அனுபவிக்கிற மன சித்திரவதை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதானிருக்கிறது"

You've more freedom and opportunities here than anywhere else in the world. I am writing this after living in US for 10 yrs. Btw, you would've become a loony in those countries, only you wouldn't admit it.

You are imagining everyday blues you face here as life threatening problems.

ராஜ நடராஜன் said...

//"ஐன்ஸ்டைனும் பிக்காஸோவுமா?. யார் அவங்கல்லாம்?"//

புஷ்சிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று.
n
கேள்வி: பாகிஸ்தானை தற்போது நிர்வகிப்பது யார்?

ஜார்ஜ் புஷ்: ஒரு ஜெனரல் என நினைக்கிறேன்.

அப்புறம் பர்வேஷ் முஷ்ரப்,ஜார்ஜ் புஷ் இருவரும் சேர்ந்து ஆடிய ஆட்டம்தான் உலகறிந்ததே.

தணிகை செந்தில் said...

நீங்கள் சுயபுலம்பலில் குறிப்பிட்டது போன்ற நிலப்பிரதேசங்கள் எல்லாமே கானல்நீர் தான்.இக்கரைக்கு அக்கரை தொனி தான் நிதர்சன உண்மை.இரானிய படங்களை வரவேற்கும் நீங்கள் எதார்த்தத்தை உணர்ந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.பலவற்றை இழந்து சிலவற்றை பெறுவதில் அதிக வாய்ப்பு நம் சொந்த சொர்க்கத்தை(நம்ம ஊரு தான்)விட மற்ற நிலப்பரப்பில் தான் அதிகம்.

ஜோதிஜி said...

நம்முடைய தேவகௌடாவை ஜார்ஜ் புஷ் உடன் ஒரே வரிசையில் யோசித்துப் பார்க்கின்றேன்.

test said...

சூப்பரா அலசி இருக்கீங்க பாஸ்! படம் பாக்க வேணும்..! :)

//அமெரிக்கர்களின் வசதிக்காக நம்முடைய நேரத்தையும், அடையாளத்தையும், உச்சரிப்பையும், பெயரையும் பொருளாதாரக் காரணங்களுக்காக மாற்றிக் கொண்டிய அவலம் இந்தத் திரைப்படத்தில் கிண்டலடிக்கப்படுகிறது//

:)))

Anonymous said...

I second the opinion of the first anonymous. I have been living in the US for the last 11+ years..(still)

--anvarsha