Friday, November 05, 2010
கு.ப.ரா - விடியுமா - நான்
முதலில் இந்தச் சிறுகதையை வாசித்து விட்டு பின்னர் இந்தப் பதிவை தொடர்வதுதான் சரியாக இருக்கும்.
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது இது. ஏதோ ஒரு நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன். மனதுக்கு இதமான சூடான தேநீர் கிடைத்தால் கூட புத்தகத்திலிருந்து கண்ணை விலக்க முடியாமல் அருந்திக் கொண்டே வாசிப்போம் அல்லவா, அப்படியான சுவாரசியம். வெளியே சென்றிருந்த என் அப்பா இன்னும் திரும்பவில்லை என்று இடையில்தான் லேசாக உறைத்தது.
அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஒரு கைரிக்ஷாக்காரர், கவனக்குறைவாக என் அப்பாவை இடித்து தள்ளி அவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் வந்து சாலையில் போவோர் ஓரமாக அமர வைத்து முதலுதவி மாதிரி செய்து அனுப்பியிருந்தார்கள். நாங்கள் ஏதோ ஒரு சிறு காயம் என்பது மாதிரி நினைத்துக் கொண்டிருந்தோம். அந்தக் காயம்தான் சில நாட்களுக்குப் பின்னர் நிகழ்ந்த அவரது மரணத்திற்கு காரணமாயிருக்கப் போகிறது என்பது எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. தலையில் அடிபட்ட காரணத்தினால் மூளை நரம்பில் ரத்தம் உறைந்து கடைசியில் சுயநினைவிற்கு வர முடியாமலே இறந்து போனார்.
சரி. இப்போது நான் நாவல் வாசித்துக் கொண்டிருந்த கணத்திற்கு திரும்புவோம். சில நாட்களுக்கு முன்புதான் அவர் தலையில் அடிபட்டுக் கொண்டு திரும்பியதால் நாங்கள் அவர் வெளியில் செல்வதற்கு தடை விதித்திருந்தோம். 'என்ன வேண்டுமோ சொல்லுங்கள். நாங்கள் கொண்டு வந்து சேர்ப்பிக்கிறோம்'. ஆனால் எல்லாவற்றையும் அப்படி கொண்டு வந்து சேர்க்க முடியாததோடு வயதானவர்களின் சில பிரத்யேக பழக்கங்களை நிறுத்துவது அத்தனை சுலபமல்ல.
ஆனால் வீட்டில் நான் மாத்திரமே இருந்த சமயத்தில் 'இதோ 10 நிமிடத்தில் வந்து விடுகிறேன்' என்று சொல்லிச் சென்றவர், இன்னும் திரும்பவில்லையே என்பது என் நினைவின் ஓரத்தில் நெருடிக் கொண்டேயிருந்தது. ஆனால் நாவல் வாசிக்கும் சுவாரசியத்திலிருந்தும் நான் விலக விரும்பவில்லை. சிறிது வாசிப்பேன். 'ஏன் இன்னும் இவர் வரவில்லை' என்று சில விநாடிகள் யோசிப்பேன். திரும்பவும் எரிச்சலுடன் வாசிப்பிற்குத் திரும்புவேன். நேரம் ஆக ஆக ஒருபுறம் மன அழுத்தம் கூடிக் கொண்டிருந்தேயிருந்தது. ஒரு நாவலை நிம்மதியாக வாசிக்க முடியவில்லையே என்கிற கோபமும். "ஏன் இப்படி உயிரை வாங்குகிறார்' என்று சலிப்பும் ஒரு சேர எழுந்தது.
தெருமுனை வரை சென்று பார்த்து வரலாம்தான். ஆனால் அவர் எந்தக் கணமும் திரும்பிவிடலாம். எனில் நான் சென்று பார்ப்பது வீண்தானே' என்கிற எண்ணமும். நாவலின் சுவாரசியமும் என்னை தடுத்துக் கொண்டிருந்தன. ஒருநிலையில் அதைத் தொடர முடியாமல் புத்தகத்தை மூடி வைத்து விட்டேன். அவருக்கு ஏதாவது நிகழ்ந்திருக்குமோ என்கிற அச்சம் மெல்ல உள்ளுக்குள் படரத் துவங்கியது. அதையும் விட 'ஏன் அவரை வெளியே போக விட்டாய்' என்று மற்றவர்கள் கேட்கப் போகும் கேள்விகள் கற்பனை பிரம்மாண்டத்துடன் என்னுள் நின்றன். மற்றொரு புறம் 'இதோ சற்று நேரத்தில் திரும்பி வந்துவிடப் போகிறார்'. அதற்கு ஏன் இத்தனை பதட்டப்படுகிறாய்' என்று மனதின் இன்னொரு புறம் ஆறுதல்படுத்தியது. இரண்டு முனைகளுக்கு இடையில் நின்று தவித்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் குரூரமான அந்த சிந்தனை உள்ளுக்குள் ஓடியது. யாராவது வந்து 'ஏம்ப்பா..உங்க அப்பா கீழே விழுந்து மூச்சு பேச்சில்லாம கிடக்கறாரு' என்று சொன்னால் கூட அந்த நேரத்தின் மன அவஸ்தை ஒரு முடிவுக்கு வந்து அதன் மூலம் ஓர் ஆசுவாசம் ஏற்படும் போல் தோன்றியது. இப்படி குருரமாக நினைத்துக் கொண்டதற்காக என்னையே நான் கடிந்து கொண்டாலும் பெரும்பாலான சமயங்களில் நம் மனம் கெடுதல் நிகழ்வற்றையே பெரிதும் விரும்புகிறது என்பதை உணர்கிறேன்.
வேகமாக வரும் ஒரு வாகனத்தையும் எதிரே பைக்கில் வரும் ஹீரோவையும் மாற்றி மாற்றி காட்டும் ஒரு காட்சியில் நிச்சயம் அந்த விபத்து நிகழும் / நிகழ வேண்டும் என்று உள்ளுக்குள் நாம் விரும்புகிறோம். மேலுக்குள் நாம் 'உச்' கொட்டினாலும் குருதியில் நனைந்து சிதைந்த உடலை வேடிக்கை பார்க்கவே நம் குரூர மனம் அப்போது விரும்புகிறது.
ஆகவே.. அப்படியே என் அப்பாவிற்கும் ஏதேனும் நிகழ்ந்து தகவல் வந்தால் கூட அப்போதைய என் மனதவிப்பு ஒரு முடிவுக்கு வருவதுதான் அந்தக் கணத்தில் எனக்கு பெரிய விஷயமாய் தெரிந்தது.
என் மனைவி அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த நாட்களில் கூட அவள் வழக்கமாக வரும் நேரத்திற்கு சில நிமிடங்கள் தாண்டினால் கூட 'டிராபிக் ஜாம். அதனால்தான் தாமதம்' என்று ஒரு எண்ணமும் லாரி மோதி அவள் குருதிக்கறைகளுடன் சாலையில் விழுந்து, சூழ்ந்து நின்று பதட்டம் மாத்திரமே அடைந்து கொண்டிருக்கிற ஜனங்களுமான காட்சி மற்றொரு புறமும் விரியும். இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும் மன அழுத்தம், அவளின் பிரத்யேக செருப்புச் சத்தத்தை கேட்டவுடன் சட்டென்று இறங்கி உள்ளுக்குள் ஏற்படும் ஆசுவாசத்தை வார்த்தைகளில் வைக்க முடியாது. ஆனால் இத்தனை நேரமும் அவளுக்காய் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவன், அவள் உள்ளே நுழைந்தவுடன் பரிவாய் விசாரிக்காமல் இதுவரை எனக்கு பதட்டத்தை தந்ததின் காரணமாகவே, அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மனமில்லாமல், வேறு ஏதாவது காரணத்திற்காக சண்டை போட்ட விசித்திரத்தை என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. .
ஒரு வழியாக என் தந்தை சாவகாசமாக திரும்பி வந்தார். மகா எரிச்சலுடன் 'எங்கப்பா போயிருந்தே' என்றேன். வயதானவர்களுக்குரிய பிரத்யேக குழந்தைச் சிரிப்போடு உப்புப் பெறாத ஒரு காரணத்தைச் சொன்னார். அப்போதைக்கு அது என் எரிச்சலை அதிகப்படுத்தினாலும் சிறிது நேரம் கழித்து எனக்குமே அது சிரிப்பை ஏற்படுத்தியது.
சில நாட்கள் கழித்து இந்த நிகழ்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த போது, நான் அடைந்த பதட்டத்தைப் பற்றியும் அதன் தொடர்ச்சியாக எழுந்த குருர எண்ணத்தையும் அது தந்த ஆசுவாசத்தையும் வைத்து ஒரு சிறுகதை எழுதினால் என்ன தோன்றிற்று. 'எதைக் கண்டாலும் யாரைக் கண்டாலும்' அதில் சிறுகதையைத் தேடிக் கொண்டு திரிந்த பித்துப் பிடித்திருந்த நாட்கள் அவை. சிறிது சிறிதாக மனத்திலேயே அதை எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தேன். வரிகளை மாற்றியும் அடித்தும் திருத்தியும் கணினியில் கூட செய்ய முடியாத அற்புதம் அது.
அதற்குப் பிறகுதான் இன்னொரு சந்தர்ப்பத்தில் கு.ப.ரா - வின் இந்தச் சிறுகதையை வாசிக்க நேர்ந்தது. அப்படியே தூக்கி வாரிப் போட்டது. கிட்டத்தட்ட நான் கைப்பற்ற முயன்றிருந்த அந்த உணர்வை அதிலாவகத்துடன் ஒருவன் ஏற்கெனவே எழுதி வைத்திருக்கிறானே என்கிற ஆச்சரியமும், இனிமேலும் என்னால் எப்படி இதை எழுத முடியும் என்கிற ஏமாற்றமு்ம் ஒருசேர எழுந்தன. மனதில் உருவாகிக் கொண்டிருந்த கதையை அப்படியே அழித்து வீசினேன்.
அப்படி செய்திருக்கக்கூடாது என்று இப்போது தோன்றினாலும் அப்போதைக்கு 'நான் செய்தது சரி' என்பதாகத்தான் இருந்தது. ஒருவேளை நான் எழுதியிருந்தாலும் அதை கு.ப.ராவின் கதையோடு தொடர்புப்படுத்தி 'அங்கேயிருந்து உருவிட்டாம்பா' என்று யாராவது சொல்லி விடுவார்களோ என்கிற கற்பனை அச்சம்தான் பிரதானமாக இருந்தது.
இன்றும் கூட எந்தவொரு உருவாக்கமும் நான் முன்னர் வாசித்திருந்த /கண்டிருந்த உருவாக்கத்தை நினைவுப்படுத்தினால் உடனே வாய் கூசாமல் 'காப்பியடிச்சுடாங்கடோய்' என்று கூவ விரும்புவதை சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு மேற்சொன்ன சுயஅனுபவமே காரணமாய் அமைகிறது.
suresh kannan
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....
நீங்கள் சொல்லியிருப்பது போன்ற மனநிலை எனக்கும் வாய்த்திருக்கிறது. பலருக்கும் தோன்றியிருக்கும்.
ஆனால், உங்களுடைய இந்தக் கதையும் குபராவின் கதையும் முழுக்க வேறு வேறானவை. எழுதுங்களேன்!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Post a Comment