Saturday, October 30, 2010

குறுந்தகடுகளுடன் ஒரு பயணம்

சும்மா ஜாலியாய் ஒரு நாஸ்டால்ஜியா மொக்கை


"சார் டிவிடி ஏதாச்சும் பாக்கறீங்களா. பிஎஃப் படம்லாம் இருக்கு சார். மலையாளம், இங்கிலீஷ்னு பக்கா பிரிண்ட். புதுப்படங்கள்லாம் கூட இருக்கு. சரியா இல்லைன்னா வந்து மாத்திக்கலாம்.  வாங்க சார்"

சென்னை பாரிஸ்கார்னர் பக்கத்தில் பர்மா பஜார் ஓரமாக நீங்கள் நடக்கும் போது யாராவது வந்து இப்படி உங்கள் காதைக் கடித்து ரகசியம் பேசினால் உடனே சரேலென்று அவரிடமிருந்து விலகி விடுங்கள். இ.வாக்களுக்காக வலை விரித்து காத்திருக்கும் புரோக்கர்கள் அவர்கள். மாறாக அதீத கற்பனையுடன் அவர் பின்னர் சென்றீர்களெனில் குருட்டுத்தனமாக தடவித் தடவி மேலாடையை கழற்றுவதற்கே ஒரு மணிநேரம் எடுத்துக் கொள்ளும் தேசலான மங்கல் பிரிண்ட்டை உங்கள் தலையில் கட்டி விடுவார்கள். (இதுலயும் வெள்ளைக்காரன்ங்கதாம்ப்பா பெஸ்ட் என்கிறார் நண்பர்). வெறுத்துப் போய் அதற்குப் பதிலாக 'நாகூர் அனீபா பாடல்களை' மாற்றிக் கொள்ளும் நல்ல நோக்குடன் மறுபடியும் சென்றீர்கள் என்றால் நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல உங்களை புறக்கணித்து விடுவார்கள்.

நிற்க. இந்தக் கட்டுரை பர்மாபஜாரைப் பற்றின அனுபவக்கட்டுரை மாத்திரமல்ல. குறுந்தகடு என்னும் சமாச்சாரம் எப்படி என் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்தது என்பதைப் பற்றியதான குறுங் கட்டுரை. குறுந்தகட்டுக் கட்டுரை என்றும் சொல்லலாம்.

()

சைக்கிளில் ரிப்ளெக்டராகவும் குழந்தைகள் உருட்டி விளையாடும் பொருளாகவும்  குறுந்தகடுகள் இன்று தன் கவர்ச்சியை பெருமளவு இழந்து விட்டாலும் நான் முதன் முதலில் எப்போது குறுந்தகட்டை பார்த்தேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

A, B தவிர C,D சைடெல்லாம் கூட இருக்கு.. உனக்குத் தெரியாதா?.. என்று யாராவது கேட்டிருந்தால் கூட நம்பியிருக்கக்கூடிய அளவிற்கு ஆடியோ கேசட்டே சரியாக பழகியிருக்காத நிலை. வாயில் கட்டை விரலைப் போட்டு சப்பிக் கொண்டிருக்கும் மழலை சின்னமிட்ட 'மர்பி' ரேடியோதான் இசைக்கான அப்போதைய ஒரே வழி. (இப்போது யாராவது ஒலிச்சித்திரமெல்லாம் கேட்கிறீர்களா?). என் அண்ணன் வீட்டில் இல்லாத சமயத்தில் அவனுடைய எல்லைப்பகுதியில் தீவிரமான ஆராய்ச்சி கொண்டிருந்த போது ஒளித்து வைத்திருந்த ஆடியோ சிடிக்கள் கண்ணில் பட்டன. அப்போது அது ஆடியோ சிடி என்பது கூட எனக்குத் தெரியாது. டேட்டா பதியப்பட்டிருக்கும் பளபளவென்ற பகுதிதான் என்னை அதிகம் கவர்ந்தது. நகத்தால் சுரண்டிப் பார்த்தேன். (இப்போது குறுந்தகட்டை யாராவது அந்தப் பகுதியில் விரல்படுகிறாற் போல் எடுத்தால் கூட எரிச்சலும் இரும்பு சிலேட்டில் ஆணியாற் கிறுக்கினாற் போல் கூச்சமும் கொள்வேன்.) கண்டுபிடித்தால் கொலைவெறியுடன் தாக்குவான் என்பது நினைவுக்கு வர இருந்தது மாதிரியே வைத்து விட்டேன்.

பின்னர் நான் சிறு வேலைகளுக்கு போய் சம்பாதிக்க ஆரம்பித்தாலும் என்னால் அதிகபட்சமாக டபுள்டெக் டேப்ரிகார்டர்தான் வாங்க முடிந்தது. 'அடுத்து நீங்கள் கேட்கவிருக்கும் பாடல்... என்று என் குரலைப் பதிவு செய்து நானே கேட்பதில்  ஒர் அற்ப திருப்தி.

திரைப்படம் பார்க்க வேண்டுமென்றால் கூட வாடகை வீடியோ கேசட்டுகள்தான். (இப்போது கூட வெகுஜனம்  சிடியை கேசட்டு என்றே குறிப்பிடுவது விநோதமாக இருக்கிறது). 'கண்ணழகி' நடிகையின் கேசட்டை ஆவலோடு எடுத்து வந்தால், யார் ஆண், பெண், எவர் எங்கே இருக்கிறார்கள், செய்கிறார்கள் என்றே தெரியாத தேசலான மழைபெய்யும் கேசட்டை வெறுப்புடன் திருப்பிக் கொடுத்தேன். நமட்டுச் சிரிப்புடன் அதை ஒப்புக் கொண்ட கடைக்காரர், "சரி வேறு எந்த படம் வேண்டும்?" என்றார் ஜென்டில்மென்னாய்.   இந்த சங்காத்தமே வேண்டாமென்று முடிவு செய்து "மோட்டார் சுந்தரம் பிள்ளை" இருக்கா? என்றேன் அதிரடியாய். டாஸ்மாக்கில் விண்டோஸ் சாப்ட்வேரை கேட்டவனைப் போல எல்லோருமே சற்று திடுக்கிட்டு என்னைப் பார்த்தனர். காலமே சற்று உறைந்தது.

சிவாஜி கணேசன் என்றாலே ஓவர் ஆக்டிங் என்று எப்பவும் நக்கலடிப்பவர்களுக்கு (அதில் உண்மையில்லாமலி்ல்லை) ஒன்று சொல்வேன். இந்தப்படத்தைப் பாருங்கள். சிவாஜி 'அண்டர்பிளே' செய்து நடித்த படங்களில் ஒன்று. எப்பவோ தொலைக்காட்சியில் பார்த்திலிருந்தே அதை மீண்டும் பார்க்க வேண்டும் போலிருந்தது. என்றாலும் ஒரு பத்தொன்பது வயது இளைஞன் அதைப் பொதுவில் வெளிப்படுத்தியதுதான் மக்களுக்கு சகிக்க முடியாமலிருந்தது.

பின்பு வீடியோ கேசட் கடைக்காரரே சற்று டெவலப்பாகி, சிடி மற்றும்  பிளேயரையும் வாடகைக்கு விடுமளவிற்கு உயர்ந்தார். உள்ளங்கை அளவேயிருந்த போர்ட்டபிள் சிடி பிளேயர். ஹீரோக்கள் வெடிகுண்டை செயலிழக்க வியர்வையுடனும் பதட்டமான பிஜிஎம்முடனும் போராடுவதைப் போல மஞ்சள், சிகப்பு ஒயர்களை சரியாக இணைத்து ஆடியோவும் வீடியோவும் வரவழைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.  அப்போதுதான் விசிடி எனும் சமாச்சாரத்தை முதன் முதலில் பார்த்தது. ஒரு தமிழ் திரைப்படம் நீளத்தைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று தகடுகளில் அடங்கியிருக்கும்.

()

என்னதான் வாடகைக்கே எடுத்துக் கொண்டிருந்தாலும் சொந்தமாய் சிடி இருப்பது பெருமை என்கிற லட்சியம் நாளுக்கு நாள் பெருக, இருக்கும் கொடுமையில் பிளேயரையாவது அப்புறம் வாங்கிக் கொள்ளலாம், முதலில் சிடிக்களை வாங்கி வைத்துக் கொள்வோம் என்று அதிபுத்திசாலித்தனமாக யோசித்து விசாரித்ததில் சிடிக்கள் பர்மா பஜார் எனும் இடத்தில் சல்லிசாக கிடைக்கும் என்று தெரியவந்தது. பர்மாவிலிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்தவர்களுக்கு உதவ, பீச் ஸ்டேஷன் அருகே நிலம் ஒதுக்கி்த் தந்தது அப்போதைய அரசு. தங்களுடன் கொண்டு வந்திருந்த வெளிநாட்டுப் பொருட்களை விற்கத் துவங்கி, தமிழர்களின் வெளிநாட்டுப் பொருட்களின் மீதிருந்த அதீத மோகத்தால், இன்று பல நூறு கடைகள் பெருகி ஆறடிக்கு இரண்டடி சந்துக்கு பதினைந்தாயிரம் ரூ வாடகை என்கிற அளவில் வந்து நிற்கிறது. அதற்கே அரசியல் செல்வாககு இருந்தால்தான் முடியும்.

சரி. எஸ்.முத்தைய்யா போன்ற சென்னை வரலாற்று ஆர்வலர்களின், ஆய்வாளர்களின் ஏரியாவிற்குள் நாம் நுழைய வேண்டாம்.

பர்மா பஜார் என்றாலே 'ஆரண்ய காண்டம்' ராமாயண நூலை வாங்கப் போகிறவர்களுக்கு உபயோகப்படுத்தப்பட்ட காண்டத்தை' ஏமாற்றி விற்கும் மோசடிக்காரர்கள் புழங்கும் பிரதேசம்  என்று சிறுவயதிலிருந்தே எனக்குப் போதிக்கப்பட்டிருந்தபடியால், என் அலுவலகத்தின் அருகாமையிலே இருந்தும் கூட பல நாட்கள் அந்தப் பக்கத்தில் செல்லாமலேயே இருந்து விட்டேன்.

பணத்தை எண்ணிய களைப்பில் பில்கேட்ஸே சலித்துப் போய் விண்டோஸ் 98-ஐ கைகழுவி விட்டு அடுத்த வர்ஷனுக்கான பில்டப்பை தரும் சமயத்தில்தான் என் அலுவலகத்திற்கு கணினியே வந்தது. வின்ஆம்ப்பில் இருந்த இரண்டே இரண்டு சாம்பிள் பாடல்கள்தான். அப்போது இணையத்தில் தரவிறக்குவதைப் பற்றியெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. 'ஹலோ' என்று ஒரு வார்த்தை இ-மெயில் அனுப்பினாலே பில்லில் இரண்டு ரூ ஏறி விடும்.

mp3 என்கிற வார்த்தை அப்போது ஒரு வசீகரச் சொல்லாக எங்கும் உலவிக் கொண்டிருந்தது. கயவர்களின் பிரதேசத்திற்கு மிகுந்த தயக்கத்துடன் சென்று வேவு பார்த்தேன். ஒரு எம்பி3-ஐ எம்பி நிற்கிற உயரத்தின் விலையைச் சொன்னார்கள். எப்படியோ ஒரு சிடியை பேரம் பேசி வாங்கி வந்துவிட்டேன். இளையராஜாவின் ஹிட்ஸ். சோனி கம்பெனி சிடி மாதிரியே அச்சு அசலான நகல். (?!).

சிடியின் உள்ளே பதியப்பட்டு இருந்தது என்ன தெரியுமா?

(அடுத்த பகுதியில்)

suresh kannan

10 comments:

உலக சினிமா ரசிகன் said...

பர்மாபஜார் கடை வியாபாரிகள் 90சதவீதம் நேர்மையாளர்கள்.பிளாட்பார பார்ட்டிகள்100சதவீதம் பிராடுகள்.

அந்நியன் said...

பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

நாஞ்சில் பிரதாப்™ said...

//பணத்தை எண்ணிய களைப்பில் பில்கேட்ஸே சலித்துப் போய் விண்டோஸ் 98-ஐ கைகழுவி விட்டு அடுத்த வர்ஷனுக்கான பில்டப்பை தரும் சமயத்தில்தான் என் அலுவலகத்திற்கு கணினியே வந்தது. //

ஹஹஹஹ, விண்டோஸ் 2000 க்கு அப்புறம் கம்ப்யுட்டர் வந்த கம்பெனிகள் கூட இருக்குது...

Siva said...

சிடியின் உள்ளே பதியப்பட்டு இருந்தது என்ன தெரியுமா?

(அடுத்த பகுதியில்
எப்பம்ணே?

D.R.Ashok said...

கொடுமை என்னன்னா.. எங்கம்மா கூட்டுட்டு போற படம் என்னன்னா... பாசமலர், பாகபிரிவினை... அப்டிதான் இருக்கும்... அப்போ மோட்டர் சுந்தரம்பிள்ளை எனக்கு பிடித்த படம்.... :)

ஆனா ஸ்கூல்ல ’ரஜினி கமல்’ பத்தி பேசுவாங்க... அவங்க படத்த பாத்ததேயில்லை...

அதான் ஒன்பதாங்க கிளாஸ்ல ... ஸ்கூல்ல கட்டடிச்சிட்டு... போலிஸ்டோரி(ஜாக்கி) படம் பாக்க போனேன்... அந்த சந்தோஷம் இன்னைக்கி வரைக்கும் இருக்கு :)))

அதான் என் பிள்ளைய எந்திரன் first நாள் கூட்டிட்டு போனேன் :)

மத்தப்படி உங்கள் பதிவு மிகவும் மொக்கையாக இருந்ததால் இந்த (எனக்கு) சுவையான பின்னூட்டமிட்டேன்

BalHanuman said...

இப்படி ஒரு suspense வைத்து, உங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள்....

rajkumar said...

முன்பு மரத்தடியில் புத்தக ஈடுபாட்டை பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தீர்கள். அதை எங்கு படிக்கலாம்? இங்கே மீள்பதிவு செய்ய முடியமா?

சுரேஷ் கண்ணன் said...

நண்பர்களுக்கு நன்றி. இதன் அடுத்த பகுதி விரைவில். :-)

ராஜ்குமார்: நீங்கள் குறிப்பிடுவது இந்தப் பதிவு என்று நினைக்கிறேன்.
http://pitchaipathiram.blogspot.com/2009/06/blog-post_12.html

rajkumar said...

நன்றி. இதுதான்

Domain name India said...

புதுமையான சிந்தனை படைப்பு தீப்பொறி வெளியே என்று முக்கிய மற்றும் முக்கியமான அம்சம் உள்ளது.