Thursday, October 21, 2010

சினிமா பற்றி பேச நீ யார்?

முந்தைய பதிவொன்றில் ராம்கோபால் வர்மாவையும் மணிரத்னத்தையும் ஒப்பிட்டு ஒரு வரி எழுதும் போது, 'இப்படி எழுத நீ யார்?' என்றொரு அனானி நண்பர் பின்னூட்டத்தில் கேட்டார். நண்பர் முகமூடி அதை வேறு நோக்கில், "ஏன் அகங்காரம் தெறிக்கும் இத்தனை நான்கள்?' என்று கேட்டிருந்தார். இதே போல் இன்னொரு பதிவின் பின்னூட்டத்தில் 'ஏதோ சினிமாவை காக்க வந்தவர் போல் ஏன் இந்தப் பாவ்லா'? என்றொரு நண்பர் கேள்வி எழுப்பியிருந்தார். இது போன்ற கேள்விகளை பல்வேறு சமயங்களில் எதிர்கொள்வதால் இந்தப் பதிவு எழுத நேர்ந்தது.

சமீபத்தில் ஜெயமோகனின் பதிவில் வாசித்த ஒரு பத்தியை இங்கு பகிர்ந்து கொள்வது பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

நான் கண்டுவரும் ஒன்று உண்டு. நான் ஒரு விமரிசனக்கருத்தை அழுத்தமாகச் சொல்லும்போது சிலர் பொங்கி எழுவார்கள் ‘இவன் எப்படி அப்படிச் சொல்லலாம்? சொல்வதற்கு இவன் யார்? தன்னை அதிகமாக எண்ணிக்கொள்கிறான்’ என்றெல்லாம் சொல்லி வசைகளும் முன்முடிவுகளும் கலந்து ‘தூக்கிவீசும்’ கட்டுரைகளை எழுதித்தள்ளுகிறார்கள். ..

ஆனால் என்னைப் பொறுத்தவரை  நான் என்னை 'விமர்சகன்' என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். அந்தச் சொல்லுக்குப் பின்னாலிருக்க வேண்டிய தகுதியும், உழைப்பும், முதிர்ச்சியும் குறித்து நானறிவேன். என்னுடைய தற்போதைய உயரம் குறித்து எனக்கு தெளிவாகத் தெரியும்.

யமுனா ராஜேந்திரன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி போல் கோட்பாடுகள் சார்ந்தோ, ஜெயமோகன் போல் தத்துவம் சார்ந்தோ, அசோகமித்திரன் போல் புராதனம் சார்ந்தோ, எஸ்.ரா போல் அதன் அழகியல் சார்ந்தோ, தியோடர் பாஸ்கரன் போல் நுண்தகவல்கள் சார்ந்தோ, சாருநிவேதிதா போல கூர்மையான அங்கதம் சார்ந்தோ என்னால் சினிமாவைப் பற்றி உரையாட இயலாது. ஆனால் அந்தத் தகுதியை நோக்கி செல்ல வேண்டிய விருப்பமுண்டு.

நண்பர்கள் கேட்ட கேள்வியை இப்போது என்னையே நோக்கி நான் கேட்டுக் கொள்கிறேன்.

"சினிமா பற்றி எழுத நீ யார்?"

சில நாட்களுக்கு முன் சமகால சினிமாவின் இளம் இயக்குநர் ஒருவருடன் மின்னஞ்சலில் உரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது.

நான் அவரிடம் சொன்னேன்.

" நான் வணிக சினிமாக்களைப் பற்றி தொடர்ந்து கடுமையாக எழுதி வருவதை கவனித்திருப்பீர்கள். ஆனால் ஒரு சினிமாவின் உருவாக்கத்தைப் பற்றி நூல்களில் வாசித்ததோடு சரி. துளிக்கூட நேரடி அனுபவம் கிடையாது. ஒருநாள் கூட படப்பிடிப்புகளையோ அதனுடன் தொடர்புடைய பிற பணிகளையோ நான் பொறுமையாக கவனித்தது கிடையாது.

ஆனால் ஒரு கதைத் துளியை உருவாக்கி விவாதங்களின் மூலம் அதை விரிவாக்கி, திரைக்கதை எழுதி, தயாரிப்பாளர் தயாரிப்பாளராக,நடிகர், நடிகராக அலைந்து ஒப்புதல் பெற்று இரவு பகல்,உள்ளுர் வெளியூர் பாராமல் படப்பிடிப்பு நடத்தி கதையின் போக்கில் அவ்வப்போது குறுக்கிடும் அத்தனை இடையூறுகளையும் தாண்டி முடித்து அதன் வணிக சாத்தியக் கணக்குகளைக் கடந்து வெளியாகும் நாளன்று நகத்தைக் கடித்துக் கொண்டு  நிகழும் அந்த கூட்டு முயற்சியின் பின்னுள்ள அத்தனை கடுமையையும் என்னால் யூகிக்க முடியும். சில தகவல்களை நண்பர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.


இத்தனையையும் அறிந்து வைத்துக் கொண்டே ஒரு சினிமாவை அதன் மோசமான உருவாக்கத்திற்காக கடுமையாக எழுதும் போது 'சினிமாத் துறையில் உள்ளவர்கள் அதை வாசிக்க நேர்ந்தால், எவ்வாறு உணர்வார்கள்?' அதிலுள்ள குறைகளைக் கண்டு நமட்டுச்சிரிப்புடன் கடந்து செல்வார்களா? எரிச்சலுடன் திட்டித் தீர்ப்பார்களா? என்று குறுகுறுப்பாக உள்ளது அது பற்றி அறிய விரும்புகிறேன்'


- என்று அந்த நண்பரிடம் கேட்டேன்.

அவர் சொன்னது. "சுரேஷ். சினிமா உருவாக்கம் என்பது வேறு. சினிமா ரசனை என்பது வேறு. நீங்கள் முழுக்கவும் ரசனை சார்ந்து எழுதுகிறீர்கள். தவறில்லை. இங்கு ஒரளவு நல்ல சினிமாவை எடுக்க முடிகிறவர்கள் திறமைசாலிகள் என்பதை விடவும் மகா அதிர்ஷ்டக்காரர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நேரில் சந்திக்கும் போது விரிவாக பேசுவோம்' என்றார்.

திரும்பவும் சொல்கிறேன். நான் விமர்சகன் அல்ல.

இப்போதைக்கு நான் ஒரு சாதாரண சினிமா பார்வையாளன், ரசிகன். திரைப்படங்களைப் பார்த்தது குறித்த என் அனுபவங்களையும் கருத்துக்களையும் அது சார்ந்த எளிய மதிப்பீடுகளையும் இங்கு பகிர்வதே என் பிரதான நோக்கம். அதில் தவறோ, பிழையோ, அரிதாக பிடித்த படைப்பாளிகளின் மீதான மனச்சாய்வோ இருந்திருக்கலாம். ஆனால் அதன் பின்னே அதற்கான கடும் உழைப்பு உண்டு என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

நாளைக்கு ஒரு திரைப்படமாவது பார்க்க வேண்டும் என்பது என் திட்டம். சமயங்களில் அது சாத்தியப்படுவதில்லை. இந்தத் தகுதியே திரைப்படத்தைப் பற்றி எழுதுவதற்கான அடிப்படை என்று நான் சொல்லவரவில்லை. ஒரு திரைப்படத்தை அடிப்படையாக எப்படி பார்க்க வேண்டுமோ அந்த நோக்கில் பார்ப்பேன். பின்பு தேவையெனில் சில விடுபடல்களுக்காவும் நடிகர்கள் உடல் மொழிகளுக்காகவும் பின்னணி இசைக்காகவும் காமிராக் கோண்ங்களுக்காகவும் திரை மொழியை நுட்பமாக புரிந்து கொள்வதற்காகவும் மீண்டுமொரு முறை பார்ப்பதுண்டு. சிறந்ததாகக் கருதப்படும் திரைப்படங்களை இதற்கும் அதிகமான எண்ணிக்கையிலும் பார்ப்பதுண்டு. சில திரைப்படங்கள் ஒவ்வொரு முறையும் வேறு வேறு பரிமாணத்தில் வியப்பை ஏற்படுத்தும். (இதைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறேன்).

ஆக.. ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுதும் போது இதை இரண்டு அல்லது மேலான எண்ணிக்கையில் பார்த்த அனுபவத்தில்தான் எழுதுகிறேன் என்பதை கவனிக்க வேண்டுகிறேன். ஆனால் சில திரைப்படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் அவற்றை எழுத வேண்டுமென்கிற உந்துதலைத் தராத சாதாரணவைகளாக இருக்கும். சிலவற்றை எவ்வளவு முயன்றாலும்  பகிரவே முடியாத அளவிற்கு நுட்பமான அகவுணர்வு சார்ந்ததாக இருக்கும். மேலும் ஒரு திரைப்படத்தைப் பார்க்கின்ற போது கூடுமானவரை அது சார்ந்த அனைத்துத் தரவுகளையும் கூட கவனத்தில் கொள்கிறேன். இந்த இயக்குநரின் முந்தைய படங்கள் எவை, தர அடிப்படையில் இவரது நிலை என்ன, முந்தைய படங்களோடு இது எப்படி வேறுபடுகிறது, இதே வகைமையில் எடுக்கும் மற்ற இயக்குநர்ளோடு ஒப்பிடும் போது இவர் / இந்தத் திரைப்படத்தின் தரம் எப்படியானது, இதைப் பற்றியான மற்ற விமர்சனங்கள் போன்றவைகளை கவனிக்கிறேன்.

ஆக..இத்தனை அனுபவம் மற்றும் உழைப்பு சார்ந்து ஒரு திரைப்படத்தை நான் அவதானிக்கும் போது என்னுடைய தனிப்பட்ட அளவுகோல்களைச் சார்ந்து ஏன் அவற்றைப் பற்றின ஒரு கறாரான மதிப்பீட்டை நான் வைக்கக்கூடாது?

இதுவரையான மணிரத்னம் மற்றும் ராம்கோபால் வர்மாவின் உருவாக்கங்களை ஒப்பிட்டு என்னால் ஒரு பிரத்யேகக் கட்டுரையையே எழுத முடியும். மணிரத்னத்தின் 'நாயகன்' திரைப்படத்தை இதுவரை குறைந்தது ஐம்பது முறையாவது பார்த்திருப்பேன். போர்ட் கோப்போலாவின் 'காட்ஃபாதர்' திரைப்படத்தின் தழுவல் என்பது பொதுவாக அறியப்பட்டாலும், மணிரத்னம் இதை சிறப்பாக 'தமிழ்த்தன்மையுடன்' வளர்த்தெடுத்திருப்பார். (இந்தத் தழுவலை வெளிப்படையாக ஒப்பு்க் கொள்ளாத மணிரத்னம் மீதான இந்தக் குற்றச்சாட்டு உண்மையென்றாலும் எத்தனை இயக்குநர்களால் - மூலத்தின் உரிமையையே வாங்கித் தந்திருந்தாலும் - இதை இத்தனை சிறப்பாய் உருவாக்கியிருக்க முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். (இயக்குநர் பேரரசு போன்றவர்கள்  'நாயகன்' திரைப்படத்தை உருவாக்கியதாய் கற்பனித்துப் பாரு்ங்கள்.)

ஆனால் ராம்கோபால் வர்மா, இதற்கான ஒப்புதலை வெளிப்படையாக இட்டு விட்டு 'சர்க்கார்' என்கிற இந்திப்படமாக எடுத்தார். இரண்டையும் மேம்போக்காக ஒப்பிட்டுப்பார்த்தாலே, மணிரத்னத்திற்கும் ராம்கோபால் வர்மாவிற்கான வேறுபாடு புரியும்.

சிறுவனாக பம்பாய்க்கு ஓடிப் போய் அங்கேயே வளர்கிற ஒருவனை, இந்தி மொழி தெரியாதவன் போல் 'நாயகனில்' சித்தரித்திருப்பது மிகப் பெரிய தர்க்கப்பிழை. உரையாடல் தமிழ் பார்வையாளர்களுக்கு புரிய வேண்டுமென்பதற்காக வழக்கமாக இயக்குநர்கள் செய்யும் சமரசத்தை மணிரத்னமும் செய்திருந்தார். என்ன கொடுமை? சேட்டுக்கள் புழங்கும் சென்னை செளகார்பேட்டையில் சிறிது காலம் புழங்கிய எனக்கே திக்கித்திக்கி இந்தி பேச முடிந்திருக்கும் போது வேலு நாயக்கரால் முடிந்திருக்காதா? "அய்யிரே டாக்டருக்கு வூடு எங்கன்னு கேளு?" என்று மொழிபெயர்ப்பாளரின் துணையை நாட வேண்டும்?

ஆனால் ராம்கோபாவ் வர்மாவின் திரைப்படங்களில் இம்மாதிரியான தர்க்கப் பிழைகளை பெரிய அளவில் காண முடியாது. அவர் படங்களில் வரும் தாதாக்கள் அசலுக்கு மிக நெருக்கமான சித்தரிப்புகளில் வருவார்கள். அவர்களை வேலுநாயக்கர் போலவோ திருபாய் அம்பானி போலவோ திருவுரு ஆக்கும் வேலையில் RGV  ஈடுபடமர்ட்டார். மேலும் காமிராக் கோணங்கள் மணிரத்னத்தின் படங்களை விட ராம்கோபால் வர்மாவின் படங்களில் மிக லாவகமாக உருவாக்கப்பட்டிருக்கும்.

அஞ்சலி என்றொரு மணிரத்னம் திரைப்படத்தில் ஒரு காட்சி. மனநிலை குன்றிய ஜனகராஜை, ரகுவரனின் மகள் விளையாட்டாக 'பைத்தியம்' என்று பால்கனியில் இருந்து கத்தியழைப்பாள். எப்போதுமே குழந்தைகளிடம் கோபம் கொள்ளாத ரகுவரன் மகளை அறைந்து விடுவார். இது ஏன் என்று இத்திரைப்படத்தை முதன்முறையாக பார்வையாளர்களுக்கு புரியாததாக இருக்கும். ஆனால் படத்தின் பல காட்சிகளைக் கடந்த பின்புதான் ரகுவரனின் மறைத்து வளர்க்கப்படும் இன்னொரு குழந்தை மனநலம் குன்றியவள் என்பதே பார்வையாளர்களுக்குத் தெரியவரும்.

ஆனால் இதற்குள் முந்தைய காட்சி ஞாபகத்திலிருந்து அழிந்து இதற்கும் அதற்கும் தொடர்புப்படுத்தி பார்க்கும் நினைவு யாருக்குமே இருக்காது. இத்திரைப்படத்தை இரண்டாவது முறையாக பார்ப்பவர்களுக்குத்தான் இந்தக் காட்சி வந்தவுடனே அதன் முக்கியத்துவம் புரியும். ஒரு அதிர்ச்சிக்கு பார்வையாளனை தயார்ப்படுத்தும் வகையில் முன்னமே அதை சூசகமாக பல்வேறு காட்சி படிமங்களின் மூலம் துளித்துளியாய் வெளிப்படுத்துவதை சிறந்த இயக்குநர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள்.

ஆக.. ஒரு திரைப்படத்தை அவதானிப்பதற்கு பின்பு இத்தனை உழைப்பு இருக்கிறது. "எதுக்குங்க இதைப் போய் ஏதோ ஹோம் ஒர்க் மாதிரி செஞ்சிக்கிட்டு. ஏதோ படத்த ஜாலியா பாத்தமா போனமா'... என்பதை சினிமாவை அந்த நேரத்து பொழுதுபோக்காக வைத்திருப்பவர்கள்தான் சொல்ல முடியும். சினிமா ஆர்வலர்கள் அல்ல.

அச்சுப் பத்திரிகைகளின் கட்டுப்பாட்டில் இயங்க முடியாத சமயத்தில் இணையம் தரும் சுதந்திரத்தில் சிலவற்றை அழுத்தமாகவே சொல்ல முடியும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

மறுபடியும் இந்தக் கேள்வியை யோசித்துப் பார்க்கிறேன்.

'சினிமா பற்றி பேச நான் யார்?'

தொடர்புடைய பதிவுகள்



சாரு, wikipedia, imdb, திரைவிமர்சனம்

suresh kannan

28 comments:

சென்ஷி said...

//எனக்கே திக்கித்திக்கி இந்தி பேச முடிந்திருக்கும் போது வேலு நாயக்கரால் முடிந்திருக்காதா? "அய்யிரே டாக்டருக்கு வூடு எங்கன்னு கேளு?" என்று மொழிபெயர்ப்பாளரின் துணையை நாட வேண்டும்?//

:)

சினிமா மொழியைப் பொறுத்தவரை நீங்கள் வைத்த தர்க்கம் எடுபடாது. உன் பார்வை உனக்கு.. என் பார்வை எனக்கு என்ற ரீதியிலான விமர்சனம் மாத்திரமே சரிப்படும். வேண்டுமெனில் பார்வை பரிமாற்றங்கள் ஞாபகசக்தியை வளர்த்துக் கொள்ள இயலுமே ஒழிய சினிமாவைக் குறை கூறிவிட்டு சினிமாவை வளர்க்கப் போவதாகச் சொல்வது முடியாது. எதை விமர்சனம் எனக் கொள்வது என்பதைப் பற்றிய குழப்பங்களும் நிலவும் சூழல்தான் இது...

மேலே குறிப்பிட்டுள்ள நாயகன் திரைப்பட காட்சியில் கமல், டெல்லிகணேஷிடம் வீட்டின் விலாசத்தை கேட்பதும் திரைமொழியில் ஒன்று. அங்கு கமலுக்கு தமிழ் தெரியாதது என்பது முக்கியம் அல்ல. வேலு நாயக்கர் சொல்வதை கேட்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம். இதுதான் அந்தக் காட்சியின் திரைமொழியாக எனக்குப் படுகிறது. அந்த வேலுநாயக்கர் எனப்படும் வளர்ந்த ஆளுமையை மிக எளிமையாக வெளிப்படுத்திய காட்சி அது.

இதுபோல் இன்னும் உங்கள் கட்டுரையில் பலவற்றை மறுக்க முடியுமென்று தோன்றுகிறது.. :))

பணி குறைந்த பின்பு முடிந்தால் தொடர்கிறேன்.

சென்ஷி said...

followup

ராம்ஜி_யாஹூ said...

ரசனை சார்ந்து ஒரு பார்வையாளனாக நீங்கள் விமர்சனம் எழுதலாம். அதிக சினிமா பார்ப்பது என்ற ஒரு அனுபவமே, தகுதியே கூட போதும் விமர்சனம் எழுத.

ஒரு புத்தகம் நூல் எழுத கூட , கடும் உழைப்பு உழைக்கிறார்கள்- ஆசிரியர், பதிப்பகத்தார், விற்பனையாளர், விளம்பர் தார. ஆனால் நாம் விமர்சிப்பது வாசிப்பின் அடிப்படையில் தான் தான்.

ஆனால் எப்படி உங்களுக்கு விமரசனம் எழுத உரிமை, தகுதி இருக்கிறதோ அதே அளவு உங்கள் விமர்சனத்தை (உங்களை அல்ல, உங்கள் தனி வாழ்வை அல்ல அனால் உங்கள் பார்வையை, உங்கள் ரசனையை) விமர்சிக்கும் உரிமை/தகுதி அடுத்தவருக்கும் உண்டு.

ஜெமோ அந்த அடுத்த விமர்சனத்தை வரவேற்பதில்லை. விமர்சனத்தை விமர்சிக்கும் செயலை விரும்புகிறார என்று தெரிய வில்லை.

VJR said...

//(இயக்குநர் பேரரசு போன்றவர்கள் 'நாயகன்' திரைப்படத்தை உருவாக்கியதாய் கற்பனித்துப் பாரு்ங்கள்.)//

ஏன் கற்பனை செய்ய வேண்டும்? அப்போ சிவகாசியை மணிரத்னம் எடுத்தால் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்ய வேண்டுமா?

ஒவ்வொருத்தரும் ஒரு நிலை. இதில் யாரையும் யாருடனும் ஒப்பிடக்கூடாது.

ராமநாராயணன் படத்தை ஜேம்ஸ் கேம்ரூண் படத்துடன் ஒப்பிடக்கூடாது. அது நம் வேலையும் இல்லை. இவ்ளோ எடுத்த ராம நாராயணனுக்கு அவரின் டார்கெட் யாரென்று தெரியாதா?

தாஜ் கோரமண்டல் ஹோட்டல் இருக்கும் அதே சாலையில் கையேந்தி பவனும் இருக்கும் என்பதை நினைவில்கொள்ளவும்.

அதேக் கையேந்தி பவனுக்கு அருகில் மறைத்து மறைத்து ஒரு ப்ளாஸ்டிக் டம்ளரில் ஒரு சராசரி சினிமா ரசிக்கும் ரசிகனுடன் சாருவைத் தேட வேண்டாம்.அவர் தாஜில்ததன் இருப்பார்.

நல்லது.

சினிமா ஒரு வியாபாரம். வியாபாரம் மட்டுமே. கலை என்று சொன்னால் நம்பாதீர்கள். கலை வளர்க்கும் சினிமாவில் அதீத கற்பனைக்கு வேலையில்லை.விளம்பரமில்லை. இப்படி எத்தனையோ இல்லை.

பொதுவாக இந்தியர்கள் கமெண்ட்ரி செய்வதில் மட்டுமே வல்லவர்கள்.

குழலி / Kuzhali said...

இந்த அனானி என்ன சொல்கிறான் அந்த அனானி என்ன சொல்கிறான், என்பதை கணக்கிலெடுத்து பதில் சொல்கிறேன் என உங்கள் உழைப்பையும் நேரத்தையும் வீணாக்காதீர்கள்... ப்ளீஸ் நேரமிருந்த போது ஒரு நாளைக்கு 2 பதிவு போட்ட காலம் போய் இன்று பதிவு எழுத கூட முடியாத நிலையேற்பட்டபோதே இப்படியாக பதில் சொல்லி செலவழிப்பது எவ்வளவு காஸ்ட்லியானது என்பது புரிந்தது... தொடர்ச்சியாக எழுதங்கள் சைலண்ட்டாக படித்து செல்ல என்னைபோன்ற பலர் உண்டு

Anonymous said...

You seem to be on an apologetic and unwarranted justification spree these days. I wonder why!? :)

I think you are doing a fine job as film critic and just keep doing it the way you like it. Ultimately the value of your review will be judged by how it resonates with people who read and identify with it.

We need more of people like you who are less enamoured by, and unconnected with, the film industry to provide unbiased reviews, for frankly I am sick of views from the industry people who confuse hard work with good work, narrative with personal politics and opulence with aesthetic.

In this regard I agree with my favourite film critic Roger Ebert who explained is ratings thus:

"In the early days of my career I said I rated a movie according to its "generic expectations," whatever that meant. It might translate like this: "The star ratings are relative, not absolute. If a director is clearly trying to make a particular kind of movie, and his audiences are looking for a particular kind of movie, part of my job is judging how close he came to achieving his purpose." Of course that doesn't necessarily mean I'd give four stars to the best possible chainsaw movie. In my mind, four stars and, for that matter, one star, are absolute, not relative. They move outside "generic expectations" and triumph or fail on their own."

Anonymous said...

சென்ஷி சொன்ன அதே விசயம்தான் எனக்கும்படுகிறது. முபையிலேயே வளர்ந்தாலும் சுற்றியிருக்கும் தமிழ்க்கூட்டத்திடம் மட்டுமே பேசி வளரும் நாய்க்கருக்கு ஹிந்தி புரியுமளவுக்கு பேசத் தெரிய வேண்டிய அவசியமிருக்கவில்லை என்பதே திரை மொழியாக எனக்கும் தோன்றுகிறது.

Anonymous said...

நல்ல பார்வை நண்பரே..பொதுமக்களை நோக்கி புறப்படுகிற எந்த படைப்பும் விமர்சனத்திற்க்குரியதே..என்னிடம் கூட சில நண்பர்கள், சில நேரங்களில் இந்தக் கேள்வியை கேட்டுஇருக்கிறார்கள்.தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே...பம்பாய் தாராவி ஏரியாவில் 30 வருடமாக ஆடியோ&விடியோ கடை வைத்திருக்கும் எனது நண்பர் கருணாகரனுக்கு சுத்தமாக ஹிந்தி தெரியாது.அந்த ஏரியா நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே காட்சியளிக்கும்.

Unknown said...

//அங்கு கமலுக்கு தமிழ் தெரியாதது என்பது முக்கியம் அல்ல//

இந்தி என்றிருக்க வேண்டும்..

Anonymous said...

Meta என்றொரு வார்த்தையிருக்கிறது. அதாவது ஒரு படைப்பின் இலக்கணத்திற்கு இலக்கணம் உருவாக்குவது (metadata, meta dictionary). இது மற்றவர்கள் நமது உருவாக்கங்களைப் பற்றி செய்தால் சுவாரசியம் நாமே செய்து கொண்டிருந்தால் காம்ப்லெக்ஸ்.

Sridhar Narayanan said...

//திக்கித்திக்கி இந்தி பேச//

வேலு நாயக்கர் தன் பையன் இறந்தபிறகு கூட திக்கி திக்கிதான் இந்தி பேசுவார்.

நாயக்கரின் பாத்திரத்தை வடிப்பதற்கு (Itch out) அந்தமாதிரி குணநலன்கள் சேர்ப்பது நன்றாக அமைந்திருந்தது. (’இந்தியே பேசத் தெரில. ஆனா பாம்பேல பெரிய தாதாப்பா’)

தப்புதப்பாக இந்தி பேசும் தமிழர்கள் மும்பையில் இல்லாமலா போய்விடப் போகிறார்கள்? அதே சமயத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அந்த குணம் உவப்பானதாக அமைந்ததும் உண்மைதான். (’அவந்தேண்டா தமிழன்’)

வேலு நாயக்கர் போன்ற பாத்திரங்கள் எல்லாம் சமயத்தில் ‘அது’வாக அமைந்து விடுகிறது. பின்னர், தமிழ்சினிமாவில் ‘சக்தி வேலு’ என்னும் பெயர் ஓர் அதிர்ஷட இலச்சினையாக நிலைபெறும் அளவிற்கு அந்த பாத்திரம் பிரமாதமாக அமைந்திருந்தது.

நாயகன் நல்ல ஜிகினா சுற்றப்பட்ட சாதாரணப் படம்தான். அது வந்தக் காலத்தில் அதன் மேக்கிங் மிகவும் புதியது என்பதால் அது மிகப் பெரிய கவனத்தை பெற்றது.

காட்ஃபாதரை ஒட்டி எடுக்கப்பட்ட படங்களில் ‘நேர்மையானது’ தேவர் மகன் என்று சொல்லலாம்.

//நாளைக்கு ஒரு திரைப்படமாவது பார்க்க வேண்டும் என்பது என் திட்டம்.//

ஒரு படம்தானா? அப்ப மீதி 21 மணி நேரமா அதுக்கு விமர்சனம் எழுதறீங்களா? :)

//யமுனா ராஜேந்திரன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி போல் கோட்பாடுகள் சார்ந்தோ, ஜெயமோகன் போல் தத்துவம் சார்ந்தோ, அசோகமித்திரன் போல் புராதனம் சார்ந்தோ, எஸ்.ரா போல் அதன் அழகியல் சார்ந்தோ, தியோடர் பாஸ்கரன் போல் நுண்தகவல்கள் சார்ந்தோ, சாருநிவேதிதா போல கூர்மையான அங்கதம் சார்ந்தோ //

தியோடர் பாஸ்கரன், எஸ் ரா ஒத்துக்கலாம். மத்தவங்கள்லாம்? :))

பிச்சைப்பாத்திரம் said...

நன்றி நண்பர்களே.

அவரவர் அனுபவம் சார்ந்துதான் ஒரு சினிமாவின் புரிதல் இருக்கிறது என்கிற சென்ஷியின் கருத்து சரியாகப் படுகிறது.

மும்பையில் பல வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் அவனுக்கு இந்தி தெரியாமலிருக்கும் என்கிற நடைமுறை யதார்த்தத்தை ஆசிப் மீரான், உலக சினிமா ரசிகன் போன்றவர்கள் தெரிவித்தது குறித்து நன்றி. ஆனால் இன்னும் என்னால் அதை ஏற்க முடியவில்லை. இதன் நிஜ பாத்திரமான 'வரதராஜ முதலியாருக்கு' இந்தி தெரிந்திருந்ததா என்பதையும் ஒரு சுவாரசியத்திற்காக யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஆதரவு, ஆலோசனை தந்த மற்ற நண்பர்களுக்கும் நன்றி.

பிச்சைப்பாத்திரம் said...

//வேலு நாயக்கர் தன் பையன் இறந்தபிறகு கூட திக்கி திக்கிதான் இந்தி பேசுவார். //

ஸ்ரீதர் நாராயணன்> :-)

ஹரன்பிரசன்னா said...

இன்னும் எத்தனை சுய விளக்கங்கள் வரும்?

MSV Muthu said...

>>அவர்களை வேலுநாயக்கர் போலவோ திருபாய் அம்பானி போலவோ திருவுரு ஆக்கும் வேலையில் RGV ஈடுபடமர்ட்டார். மேலும் காமிராக் கோணங்கள் மணிரத்னத்தின் படங்களை விட ராம்கோபால் வர்மாவின் படங்களில் மிக லாவகமாக உருவாக்கப்பட்டிருக்கும்.
>>
well said!

பிச்சைப்பாத்திரம் said...

//இன்னும் எத்தனை சுய விளக்கங்கள் வரும்?//

பிரசன்னா, உங்களுக்காகவும் ஒன்று எழுத வேண்டி வரும், ஜாக்கிரதை. :-)

இது அந்த அனானி நண்பருக்காக மட்டும் எழுதப்பட்டதல்ல. அதே கேள்வியை நானே என்னை நோக்கிக் கேட்டுக் கொண்டதாலும் எழுதப்பட்டது. இனி இதை தவிர்க்க முயல்கிறேன்.

Ashok D said...

சமீபத்திய உங்களது பின்னூட்டம்

//சுரேஷ் கண்ணன் said...
கவிதை என்கிற வடிவம் எப்போதுமே பெரிய அளவில் ஈர்த்ததில்லை//

கவிதைகளின் மேல் காதல் இல்லாமல் எப்படி ஒருவரால் உலக சினிமாக்களை இரசிக்கமுடிகிறது என்பது தெரியவில்லை...

ஆனாலும்.. உங்களின் சில ’பதிவுகளின் மொழி’ ’கவிதை’யின் அருகாமையில் இருப்பதை உணர்ந்துயிருக்கிறேன்

//இரண்டாவது முறையாக பார்ப்பவர்களுக்குத்தான் இந்தக் காட்சி வந்தவுடனே அதன் முக்கியத்துவம் புரியும்//
இரண்டாவது முறையில்தான் உணர்ந்தேன்

பி.கு.
கவிதை என்பது ஒன்னுமில்லை... உங்க இந்த பதிவையே.. நாலு வரியில் சொல்லிபோவதுதான் :)

முகமூடி said...

// 'இப்படி எழுத நீ யார்?' என்றொரு அனானி நண்பர் பின்னூட்டத்தில் கேட்டார். நண்பர் முகமூடி அதை வேறு நோக்கில், "ஏன் அகங்காரம் தெறிக்கும் இத்தனை நான்கள்?' என்று கேட்டிருந்தார். //

’பெரும்பான்மையோருக்கு’ ஒன்றும் தோன்றியிருக்காது.. ஆனால் உங்கள் பதிவினை தொடர்ந்து வாசித்து வருவதில் அந்த பதிவின் கொஞ்சம் மிகுதியான “நான்” கள் வித்தியாசமாக தோன்றியது, அவ்வளவுதான்.. பாலகுமாரனை தொடர்ச்சியாக வாசித்த ஏதோ ஒரு காலகட்டங்களில், ஒரு சக வாசகருடனான உரையாடல் என்பதிலிருந்து “நான்” என்பதாக கொஞ்சம் கொஞ்சமாக மாறிப்போய், ஒரு கட்டத்தில் ”நான் குரு ஸ்தானத்தில் எனக்கு தெரிந்ததை உனக்கு உபதேசிக்கிறேன் அதை புரிய முயற்சிக்காத ஜடமாக இருக்கிறாயே” என்பது வரை அவரது எழுத்து மாறிப்போனபோது “போடா வெண்ணை” என்று அவரை உதறியவன் “நான்” (இதை படிக்கும் பாலகுமாரன் ரசிகர்கள் சிலருக்கு “ஆமா நீ பெரிய புடுங்கி, போடா வெண்ணை என்று தோனறலாம். அதுதான் இந்த “நான்”க்கு உள்ள மகிமை).

உங்களுடையது அந்த ஒரு பதிவின் மட்டுமான நடையாக எதேச்சையான அமைந்திருக்கலாம்.. ஆனால் பதிவை படித்த போது - அகங்காரம் என்று அல்ல, வெறுமே பாலகுமாரன் சம்பவம் எனக்கு ஞாபகம் வந்ததின் சாயல் மட்டுமே - இன்னொருவருக்கும் தோன்றியதை பின்னூட்டத்தில் பார்த்ததும் எதேச்சையாக பதிவு செய்தேன்...

பி.கு: வேணு என்ற “தோழர்” அந்த பதிவில் உங்களை இன்சல்ட் செய்யும் நோக்கில் சிலர் கமெண்ட் போடுவதாகவும் அதை நீங்கள் ரிஜக்ட் செய்ய வேண்டும் என்றும் உங்களுக்கு ஆலோசனை செய்து போட்ட கமெண்ட் படித்தீர்களா? அ) அந்த பதிவில் நான் கண்டவரை உங்களை இன்சல்ட் செய்யும் வகையில் எதுவும் எனக்கு தோன்றவில்லை. ஆ) அல்லது இந்த மாதிரி சாதா கமெண்டுக்கெல்லாம் நீங்கள் இன்சல்ட் ஆவீர்கள் என்பதாகவும் நினைக்கவில்லை இ) நீங்கள் ரிஜக்ட் செய்யும் முன் அந்த கமெண்டை படித்தாக வேண்டும் என்பதும் அதை படிக்கையிலேயே இன்சல்ட்ன் நோக்கம் நிறைவேறிவிடும் என்பதும் அப்புறம் அதை ரிஜக்ட் செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன என்பது “தோழர்” வேணுவுக்கு புரியாமல் போனது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. இப்போது இந்த பதிவை படித்தால் ஒரு சில லேசாக புரிகிறார் போல் இருக்கிறது.

**

கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனபின்பு தன் கடன் பணி (உங்கள் பாணியிலான பதிவுகள்) செய்து கிடப்பதே என்பதாக மீண்டு(ம்) வாருங்கள்.

பிச்சைப்பாத்திரம் said...

நணபர் முகமூடி: புரிந்தது.

இனி பதிவு அளவிற்கெல்லாம் பின்னூட்டம் போடாதீர்கள். இல்லையெனில் பதிலாக நானும் ஒரு பின்னூட்டம் போட வரும். :-)))

//அதை படிக்கையிலேயே இன்சல்ட்ன் நோக்கம் நிறைவேறிவிடும்//

யாருமில்லாத இடத்தில் கீழே விழுந்து உணரும் அவமானத்தை விட பல நபர்களுக்கு நடுவில் விழுவது இன்னும் அதிக அவமானத்தை உண்டுபண்ணும் இல்லையா? அதுதான் வித்தியாசம். :)

ஹரன்பிரசன்னா said...

//இனி பதிவு அளவிற்கெல்லாம் பின்னூட்டம் போடாதீர்கள். இல்லையெனில் பதிலாக நானும் ஒரு பின்னூட்டம் போட வரும். :-)))//

பதிலுக்கு பதிவு போடாமல் பின்னூட்டம் போடுவேன் என்று சொன்னதிலேயே உங்கள் பெருந்தன்மை புரிகிறது. இப்பதான் சரியான பாதைல போறீங்க பாஸ். :>

Anonymous said...

சுரேஷ்,

நீ யார் என்று கேட்ட அனானி நான்தான். என் பெயர் மனோ. இணையத்துக்கு புதியவன். மனோ என்று போட்டாலும் அனானி என்று போட்டாலும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதாலேயே அனானி. என்னுடைய கேள்வியின் அர்த்தத்தை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். சினிமா எழுத நீங்கள் யார் என்பது அல்ல என் கேள்வி. பதிவில் ஏகப்பட்ட Ôநான்Õகள் குறுக்கிடுவது பற்றிதான். இந்த நான் எழுதுவதற்கு நீங்கள் அறியப்பட வேண்டும். அறியப்பட என்றால் பிளாக் வைத்திருக்கிறேனே என்பதல்ல. நீங்கள் சினிமா விமர்சகர்களாக குறிப்பிட்டுள்ளவர்களுக்கென சில தகுதிகள் இருப்பதாக சொல்கிறீர்களே, அதுதான் சரி. அவர்கள் நான் என போட்டுக் கொள்ளலாம். நீங்கள் இன்னும் அந்த நிலையில் இல்லை. எனவே நீங்கள் சினிமா விமர்சனம் எழுதுவதில் ஏதும் தப்பு இல்லை. ஆனால் ஸ்டூல் போட்டு நின்றுகொண்டு எங்களுக்கு உபதேசிப்பதாக தொனி இருக்கக்கூடாது. அவ்வளவுதான்.

பிச்சைப்பாத்திரம் said...

அன்பான மனோ,

பின்னூட்டத்திற்கு நன்றி.

1) நீங்கள் அனானியாக பின்னூட்டமிட்டாலும் ஒன்றும் பிரச்சினையில்லை. 'ஒருவர் தன்னுடைய அடையாளம் வெளிப்பட விரும்பாமல்' ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறார் என்கிற அளவில்தான் அனானி என்கிற நிலையை நான் பார்க்கிறேன். அனானி என்பதாலேயே அதை சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதில்லை. (இதை ஆபாசமாகவும் ஒளிந்திருந்து தாக்குவதற்காக உபயோகப்படுத்துபவர்களை விட்டுவிடுவோம்).

அனானியாக எழுதிய போது 'நீ' என்றும் பெயர் போட்டு எழுதும் போது 'நீங்கள்' என்றும் ....நீங்கள் தன்னிச்சையாக குறிப்பிடுவதையும் கவனியுங்கள். :)

2. இப்போது 'நான்' பிரச்சினைக்கு வருவோம்.

பித்துக்குளி முருகதாஸ் மாதிரி 'நானை' 'அவன்' என்று குறிப்பிடும் பக்குவமோ முதிர்ச்சியோ எனக்கு இன்னும் வரவில்லை. மேலும் 'அவன்' என்று எழுதும் போது அது கருத்துப் பிழையையும் இலக்கணப்பிழையையும் ஏற்படுத்தி விடலாம்.

'நான் என்பது நீயல்லவோ.. தேவ தேவி.. என்றோ நீ இங்கு நலமே.. நான் அங்கு நலமா... என்று திரையிசைப்பாடல் போல கவித்துவமாக எழுதினாலும் சரிப்படாது.

சரி. jokes apart, நான் உபதேசம் செய்வதாக கூறப்படும் புகாரை சில நபர்களிடம் சில சந்தர்ப்பங்களில் எதிர்கொள்கிறேன். உபதேசங்களில் நம்பிக்கையில்லாத நான் நிச்சயமாக அந்த நோக்கில் எழுதவில்லை. எப்போதுமே அடக்கத் தொனியில் (சமயங்களில் போலியாகவே) எழுத முயல்வேன். அதையும் மீறி எப்படி இது நிகழ்கிறது என்று புரியவில்லை. 'மணியை முன் வரிசையில் வைப்பேன்' என்று எழுதுவதெல்லாம் 'வாத்தியார்' சுஜாதாவிடமிருந்து வந்தது.

இதைத்தவிர வேறு எந்த சில வரிகளையாவது உதாரணம் காட்டினால் எனக்குப் புரிவதற்கு வசதியாய் இருக்கும்.

இன்னொன்று. அகங்காரம்,கர்வம்,திமிர் போன்றவைகளை எப்போதுமே எதிர்மறையாகவே பார்க்கத் தேவையில்லை. கடும் உழைப்பின் மூலம் வெளிப்படும் அனுபவப்பகிரல்களின் போது நிச்சயம் அந்த 'நான்' என்பது சற்றாவது வெளிப்படும். அது அளவை மீறினால்தான் பிரச்சினை.

இன்னொன்று. உபதேசம் என்ற வகையிலேயே பார்த்தாலும் அதில் உண்மை என்கிற வஸ்து இருந்தால் தாமதமாகவாவது அதை யோசித்துப் பார்த்து ஏற்றுக் கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது. நானும் கூட உபதேசங்களின் போது எரி்ச்சல்பட்டாலும் பிறகு அது சரியாக இருக்கும் பட்சத்தில் பின்பற்ற முயல்வேன். (அய்யோ! இதுவே உபதேசம் போல் ஆகி விட்டதே. என்ன கொடுமை). :-)

தொடர்ந்து எழுதுங்கள் மனோ. நன்றி.

Anonymous said...

/அனானியாக எழுதிய போது 'நீ' என்றும் பெயர் போட்டு எழுதும் போது 'நீங்கள்' என்றும் ....நீங்கள் தன்னிச்சையாக குறிப்பிடுவதையும் கவனியுங்கள். :)
கரெக்ட்தான். திருத்திக்கொள்கிறேன். ஆனால் அந்த நீ மரியாதை குறைவுக்கு சொன்னதல்ல. ஒரு எபெக்டுக்காக. (இணையத்தில் சங்கமிக்கும் அளவுக்கு தயாராகிவிட்டேன் போல் தெரிகிறது)
நன்றி சுரேஷ்.

மனோ

Rafeek said...

பதிவுகள்.. பின்னூட்டங்கள்..அதுக்கு பதில்.. மீண்டும் அதுக்கு ஒரு பதிவு.. பின்னூட்டம்.ஆனாலும் அசராமல் விளக்கம்.

மனோவின் பதிவில்
நீ- நீங்கள்
ஆனதுதான் இப்பதிவின் வெற்றி. இருப்பினும் உங்கள் சினிமா தகுதி வளர நீங்கள் கண்டிப்பாக ஒரு சினிமா உருவாக்கத்திலும் பங்கு பெற வேண்டும்.. பெற்றால்..எங்களுக்கு இன்னும் சுவரஸ்யமான பதிவுகள் கிடைக்கும் என நம்புகிறேன்.

Venkat said...

அன்புள்ள சுரேஷ்,

மறுபடியும் ஒரு தன்னிலை விளக்கம்.

What ever you are posting in your blogs and twits is purely your personal opinion and it may even have biases against individuals/corporations/group or anyone (not that it has, but it could). It is a free service that you are providing and you are not forcing anyone to read. If someone does not like they do not have to visit/read your blog post. I am not asking you to be arrogant, but you have to certainly be aware that these back to back explanations suck lot of your time and apparently it also causes you lot of anguish. Instead remember you can spend that time with your daughter and at least she will be happy.

This is part of growing up I guess for all of us. As you grow you have to learn to be alone (sorry if I sound too patronizing). Just look at Badri's blog. He gets similar insinuations from others. He does not reply to anyone (unless he wants to). Just look for constructive criticism - these things that you are responding to just belong to hatred category (for various reasons).

Believe me, your blog posts are very interesting, really original and different to read. உங்களுடைய பதிவுகளில் இருக்கும் நடை, மெலிதான நகைச்சுவை, கிண்டல் - நீங்கள் நிஜமாகவே நன்றாக எழுதுகிறீர்கள். படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. நீங்கள் சில கருத்துக்களை சொல்லும் போது அது தவறாக இருக்கலாம், ஆனால் அதற்கு நான் உள்நோக்கம் கற்பிக்க மாட்டேன். நீங்கள் எந்திரன் பற்றி எழுதிய அனைத்து கருத்துக்களுடனும் உடன்படுகிறேன். உங்களுடைய பலம் உங்கள் எழுத்து நடை, நீங்கள் எப்போதும் போல் எழுத ஆரம்பியுங்கள்.

உங்கள் மேல் உள்ள உரிமையில் சொல்கிறேன். உங்கள் இஷ்டம்.

நன்றி.

Venkat

பிச்சைப்பாத்திரம் said...

வெங்கட்: உங்கள் பின்னூட்டம்.

நன்றி. புரிகிறது.

butterfly Surya said...

தொடர்ந்து எழுதுங்கள். இது மட்டும் தான் சொல்ல நினைகிறேன்.

சுய விளக்கங்கள் தேவையில்லை எனப்து வேண்டுகோள்....