Wednesday, October 13, 2010
செல்லில் அடங்காத இசை
டச் ஸ்கீரின் செல்போன், ஐபாட், பளூடூத்... போன்ற நவீன வகை தொலைத்தொடர்பு மற்றும பொழுதுபோக்குச் சாதனங்களையும் அவை போன்ற நுட்பங்களையும் கையாள்வதில் சமர்த்தோ அல்லது விருப்பமோ எனக்கு எப்பவும் இருந்ததில்லை. க்ரெடடிட் கார்டோ, ஏடிஎம் கார்டோ கூட என்னிடமில்லை. (அதை வைத்திருப்பதற்கெல்லாம் விட்டமின் ப சற்று அதிகமும் 'நாளை மற்றொரு நாளே' என்கிற கடனுக்கு அஞ்சாத ஏகாந்த மனநிலையும் தேவை என்பதெல்லாம் வேறு விஷயம்.). செல்போன் கட்டணம் நிமிடத்திற்கு 16ரூ என்றிருந்த காலகட்டத்திலிருந்து மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு வந்தபிறகும் எந்த செல்போனையும் நான் பயன்படுத்த விருப்பமில்லாமலே இருந்தேன். அதை வைத்துக் கொண்டு சிலர் செய்யும் அலட்டலும் ஏதோ காலையில் காம்ப்ளானுக்கு பதிலாக எக்னாமிக் டைம்ஸை கரைத்துக் குடிப்பது போல, சாப்பிடும் போதும் செல்போனில் பேசிக் கொண்டேயிருக்கும் எதிர்டேபிள் 'பிஸ்னஸ் மேக்னட்டுக்களை' காண்பதினாலோ அல்லது பேருந்துகளில்,ரயிலில் பயணிக்கும் போது வரிசைகளில் காத்திருக்கும் போது பெரும்பாலானோர் பொறுமையற்ற மனநிலையுடன் செல்போன்களில் எதையாவது நோண்டிக் கொண்டிருப்பதை கவனிப்பதினாலோ செல்போன்களின் மீது ஒவ்வாமையாகவே இருந்தது. 'சும்மா இருப்பது' எத்தனை கடினம் இந்த உலகமயமாக்க பதட்ட வாழ்க்கை உணர்த்துகிறது.
செல்போன் இல்லாமலே பல வருடங்களை ஓட்டிவிட்டாலும் எதிர்வீட்டு ஆறாம்வகுப்பு மாணவன் ' ஹாய்டா! ஹோம்ஒர்க்லாம் எழுதியாச்சு. .. என்கிற ரீதியில் சக மாணவனிடம் பேசி விட்டு நிமிர்ந்து என்னை மிதப்பாய்ப் பார்த்தபின்புதான் (எனக்கு அப்படித் தோன்றியதோ என்னவோ) நானும் செல்போன் வாங்குவது குறித்து அவமானத்துடன் யோசித்தேன். செல்போனிலியே டெராபைட் அனுப்பும் டெரரான போன்கள் எல்லாம் எனக்குத் தேவைப்படாததால் மிக அடிப்படையான மாடலை வாங்கினேன்.
அதற்கும் வந்தது வினை. என்னைச் சுற்றியுள்ளவர்கள் எல்லாம் ஸ்டீரியோ இசையில் ரிங்டோனிக்க, பாக்கெட்டிலிருந்து புறப்பட்ட இருபாம்புகள் காதில் ஒட்டிக் கொண்டிருக்க தலையாட்டி இசை கேட்டுக் கொண்டிருக்க இடையில் என்னுடைய போன் மாத்திரம் பரிதாபமாக ஞீஞீஞீஞீ .. என்று அனலாகில் அழுதது. அடுத்தமுறையாவது இசை கேட்கும் வசதியுடன் வாங்க வேண்டுமென்று ஆறு மாதங்கள் கழித்து பண்பலை வானொலியை கேட்கும் வசதியுடன் கூடிய செல்போனை வாங்கினேன்.
வாங்கினபின்புதான் எனக்கு ஆச்சரியமாயிருந்தது.. ரயிலின் தடக்தடக், உரையாடலின் இரைச்சல், வாகனங்களின் ஹாரன்கள், உறுமல்கள் என்கிற நாராச சப்தங்களுக்கு இடையில் இவர்களால் எப்படி இசையை கேட்க முடிகிறதென்று. அது வேகதாளயிசை கொண்ட திரைப்பாடல்களாக இருந்தாலும் சரி, அதன் ஒவ்வொரு ஒலியையும் மீட்டலையும் ஜென் தேநீர் லயிப்புடன் முனைப்புடன் கவனித்துக் கேட்டால்தான் என்னால் அதை ரசிக்க முடியும். இப்படி தன்னிச்சையாக அதுபாட்டுக்கு ஒலித்துக் கொண்டிருக்க உரையாடிக் கொண்டோ, துண்டித்து விட்டு துண்டித்து விட்டு கேட்கவோ இத்தனை இரைச்சல்களின் நடுவில் கேட்க எப்படி சாத்தியமென்று எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. நானும் முயன்று பார்த்ததில் பக்கத்தில் ஒருவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தால் கூட என்னால் கேட்க முடியவில்லை.
எப்போதுமே இப்படியான முழு கவனத்துடன் இசை கேட்க முடியாது என்பதையும் உணர்கிறேன். தன்னிச்சையாக கேட்க வேண்டிய தருணங்களும் உண்டு. நான் அலுவலகம் கிளம்பும் போதெல்லாம் நிச்சயம் ஏதாவதோரு இசை ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். டொய்ங் டொய்ங்.. என்றொலிக்கும் வாத்திய இசையோ, ஆறாம் மாடியில் பறக்கும் துப்பட்டாவை பிடிக்க முனையும் ஹிந்துஸ்தானியோ...எல்லாம் இரவில்தான். காலை வேளைகளில் நிச்சயமாக அதிரடி இசையாக இருக்க வேண்டும். அது ராக்கோ, தேவாவின் கானாவோ. உற்சாகமாக கிளம்பும் உந்துதலை அது தர வேண்டும்.
ஆனால் மெல்லிசையை கேட்க உன்னதமான தருணம் நள்ளிரவுதான். இதை அனுபவித்தவர்கள் என்னுடன் உடன்படுவார்கள். இசையமைப்பாளர்,பாடகர், பாடகி, வாத்தியக் கலைஞர்கள், நுட்பவியலாளர்கள், பாடலாசிரியர்கள் குழுவோடு கேட்பவனும் இணையும், முழுமையாக பங்கு பெரும் தருணமது. இசைக்கோர்ப்பாளர் எத்தனை ஒலிகளை தம்முடைய காவிய மாயத்துடன் இணைத்திருக்கிறார் என்பதை நுட்பமாக அணுக முடியும். 'என்னுள்ளில் ஏதோ' (ரோசாப்பூ ரவிக்கைக்காரி) எனும் ஒரே பாடலை ஓரிரவில் தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரங்களாக திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தேன். குறிப்பாக இரண்டாவது சரணத்திற்கு முன்பு இண்டர்லூடாக ஒலிக்கும் பறவையின் அகவல் போன்ற இசை என்னைப் பித்துப் பிடிக்க வைத்தது. 'காலைல டாக்டர வேணா பாக்கலாமா?' என்று உறக்கததிலிருந்து வெளியே வந்த என் மனைவி கேட்ட பிறகுதான் பதறிப் போய் கணினியை அணைத்தேன். (டாக்டர் ருத்ரன் போன்றவர்கள் இதை வாசித்துக் கொண்டிருந்தால் இது எந்த மாதிரியான உளப்பிரச்சினை என்பதைச் சொல்ல வேண்டும்). என்னைப் பொறுத்தவரை சமூகம் கட்டியமைத்திருக்கும் நியதிகளின் படியும் சம்பிரதாயங்களின் படியும் வழுவாமல் ஒரு கோட்டை இட்டுக் கொண்டு அதிலேயே பல வருடங்களாக எவ்வித சின்னச்சின்ன மீறல்களுமில்லாமல் ஒருவன் வாழ்வானாயின் அவனைத்தான் முதலில் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கருதுகிறேன்.
இந்த இடத்தில் இளையராஜாவின் இசையைப் பற்றி நிச்சயம் சொல்ல வேண்டும். புரிந்தும் புரியாமலும் எத்தனையோ இசையைக் கேட்டாலும் ராஜாவின் குறிப்பாக 80களில் வெளியான பாடல்களின் இசையைப் போல என் மனதிற்கு மிக நெருக்கமானதாக எதையுமே சொல்ல இயலவில்லை. பதின்ம வயதுகளில் இந்தப் பாடல்களின் பின்னணிகளிலேயே வளர்ந்ததால்தான் இவை இன்னும் பிடிக்கின்றனவா என்பதும் ஆய்வுக்குரியது. தாயின் கருவறையில் ஒடுங்கியமர்ந்திருக்கிற குழந்தையின் கதகதப்பை ராஜாவின் குறிப்பிட்ட சில இசையைக் கேட்கும் சமயத்தில்தான் உணர்கிறேன். (இது குறித்து விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் உரையாடலாம்).
நள்ளிரவில் கேட்பதைப் போல் இசையை அணுகுவதற்கு இன்னொரு உன்னதமான முறை ஹெட்போன். மற்றவர்களை தொந்தரவு செய்யாதவாறு இசை கேட்பதற்காக இது கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் வீணையின் சிணுங்கலோ குழலின் குழைவோ தலைக்கு நடுவில் ஒலிக்கும் போது அது கேட்பனுபவத்தின் இன்னொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்கிறது.
இந்தக் காரணத்திற்காகத்தான் ஹெட்போன் வழியாக இசை கேட்கக்கூடிய செல்போனை வாங்கினேன். ஆனால் பகல் நேரங்களில் அதை சில நொடிகள் கூட தொடரக்கூடிய மனநிலை வாய்க்கவில்லை. அதனால்தான் இதை மற்றவர்கள் எப்படி தொடர்கிறார்கள் என்பது குறித்து எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது.
ஆனால் ஹெட்போன்களில் கேட்பதில் இன்னொரு விதமான பிரச்சினையும் எனக்கிருந்தது. எனக்கு ஒரு காதின் செவிப்பறையில் துளையுண்டு. சிறுவயதிலிருந்தே இந்தப் பிரச்சினை என்னைத் துரத்திக் கொண்டிருக்கிறது. அறுவைச் சிகிச்சைதான் ஒரேவழியென்று பல ENT மருத்துவர்களும் கிருமித் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் தற்காலிகமாக சமாளிக்கலாம் என்று சில மருத்துவர்களும் மாறுபட்ட ஆலோசனைகளைச் சொல்வதால் குழப்பமாயிருக்கிறது. இந்த அறுவைச் சிகிச்சையைச் செய்து கொண்ட சிலரின் அனுபவங்கள் கேட்பதற்கு அத்தனை உவப்பானதாயில்லை. மருத்துவம் தொடர்பாக 'எதையும் தள்ளிப் போடும்' இந்திய மனோபாவத்தின் படி இதைக் கையாண்டு கொண்டிருக்கிறேன்.
என்ன பிரச்சினையெனில் இவ்வாறாக ஹெட்போன் உபயோகித்து இசை கேட்ட சமயங்களில் எல்லாம் உத்தரவாதமாக எனக்கு காதில் பிரச்சினை ஏற்பட்டது. இதை ஆராய்ந்த போது நாம் கண்ட இடங்களில் வைக்கும் ஹெட்போன்களில் உள்ள ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் மிக எளிதில் காதிற்குள் நுழைந்து தொற்றை ஏற்படுத்துகின்றன. ஓணானை எடுத்து நேரடியாக காதில் விட்டுக் கொள்ளும் சொந்தசெலவு சூன்ய சமாச்சாரமிது. பிறகு இந்தப் பழக்கத்தை விட்டொழித்த பிறகுதான் பிரச்சினை சமநிலைக்குத் தற்காலிகமாக திரும்பியது.
அதுவுமில்லாமல் சுற்றியிருக்கும் இரைச்சலைத்தாண்டி, அதிரடியான இசைகளை ஹெட்போன் மூலம் தொடர்ந்து கேட்பதால் அது காதின் நரம்புகளைச் சிதைத்து உளப்பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்கிறார்கள். 'குறிப்பிட்ட சில ப்ரீக்வன்ஸி இசை கேட்பவருக்கு பாதிப்பை ஏற்படுத்துமென்பதால் என்னுடைய இசையமைப்புகளில் அம்மாதிரியான இசையை கண்டிப்பாகத் தடுத்துவிடுவேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நவீன இசையமைப்பாளர்களின் பெரும்பாலான பாடல்கள் கேடுதரும் இசையுடன் அமைந்திருப்பதைக் காண வேதனையாக இருக்கிறது' என்கிறார் இளையராஜா ஒரு நேர்காணலில்.
இதிலிருந்து இப்படியாக ஹெட்போன்களில் இசையை தன்னிச்சையாக கேட்டு வரும் நபர்களைக் கண்டாலே அவர்களின் காதுகளிலிருந்து அதைப் பிடுங்கி பிரச்சினையை விளக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் வணிகசினிமாக்களைப் பற்றி மிதமாக எழுதுவதற்கே "..த்தா நீ யாருடா அதச் சொல்றதுக்கு" என்று பின்னூட்ட மற்றும் டிவிட்டர் சந்துகளில் பீதியூட்டும் வகையிலான குரோதக் கூக்குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது இதையும் எழுதினால் அவ்வளவுதான். வசவுகளைக் கொண்டே என்னைப் புதைத்து விடுவார்கள்.
இப்போது ஹெட்போன்களில் கேட்பவர்கள் தவிர, அது இல்லாமல் வெளியே அனைவருக்கும் இசை அலறும்படியான செல்போன்களும் வந்துவிட்டன. ஒருபக்கம் 'எங்கே நிம்மதி' என்று புலம்பிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கத்திலிருந்து 'டாடி மம்மி வீட்டில் இல்லே' என்று உரத்த ரகசியம் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஹெட்போன்கள் ஒருவகை பிரச்சினையென்றால் இது இப்படி.
suresh kannan
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
........இப்படியாக மனிதன் என்கிறீர்களா? :-)
இன்றைக்குத்தான் கூல்டோடில் ”என்னுள்ளில் ஏதோ” வைத் தரவிறக்கிக் கேட்டுக்கொண்டிருந்தேன்.. வாணி ஜெயராமின் இனிமையான குரலை கேட்டுக்கொண்டேயிருக்கலாம் எனத்தோன்றுகிறது.. இன்றுவரை கைக்காசு போட்டு மொபைல்போன் வாங்கியதில்லை.. எல்லாம் கம்பெனி உபயம் என்பதால் பிடித்ததை வாங்கிவைத்துக்கொண்டு பாட்டுக் கேட்கவோ, விளையாடவோ முடிகிறது. தற்போது உபயோகப்படுத்தும் மாடல் நோக்கியா X3-00..அருமையாய் இருக்கிறது.. எழுதுவதற்கு எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது .. இல்லையா?
ம்க்கும், இதையெல்லாம் 90களிலேஏ சொல்லிட்டாங்களே, CD Man வந்த போதே கத்தோ கத்துன்னு கத்திட்டாங்க. தொ கா பார்த்தா கண்ணுபோயிரும்னு கத்துனாங்க, இப்போ தொகா பொட்டியில்லாத வூடு 0.001% இருக்குமா? அதுமாதிரிதான் இதுவும்.
நல்ல பதிவு . . .பாராட்டுக்கள் . .
//
பதின்ம வயதுகளில் இந்தப் பாடல்களின் பின்னணிகளிலேயே வளர்ந்ததால்தான் இவை இன்னும் பிடிக்கின்றனவா என்பதும் ஆய்வுக்குரியது.
//
அப்படியெல்லாம் இல்லை. இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் எனக்கும் இளையராஜாவின் இசை பிடிக்கிறது. இத்தனைக்கும் என் சிறு வயதிலேயே ரஹ்மான் யுகம் ஆரம்பித்துவிட்டது. கல்லூரியில் பல சமயங்களில் ரஹ்மான் ஒலித்தாலும் கூட, இரவுகளில் எப்போதும் இளையராஜா தான்.
செல் போன் வழியாக மின்னஞ்சல், ட்விட்டர், பஸ் பயன் படுத்த தொடங்குங்கள். அப்புறம் கணினி பயன் படுத்த மனமே வராது.
இணைய இணைப்பு வசதி உள்ள செல்போனே வாங்கும் முன், தமிழ் எழுத்துக்கள் படிக்கும், எழுதும் வசதி உள்ளதா என்று சோதித்த பின்பு வாங்குங்கள்.
மாதம் தொன்னுத்தி எட்டு ரூபாய் கட்டணத்தில் எல்லையற்ற இனைய இணைப்பு கிடைக்கிறது இப்போது.
.
காதில் ஹெட்போன் மாட்டினால் நிச்சயமாக ஏதோ ஒரு வயதில் காது கேளாதோர் சங்கத்தில் சேரத்தான் வேண்டும்.
இதனை எனது அனுபவத்தின் மூலமாக திரும்பவும் சொல்கிறேன்.
காதுகளில் மாட்டப்படும் ஹெட்போனில் இருந்து வெளி்ப்படும் ஒலி அலைகள் நேரடியாக நமது செவிப்பறையைத் தாக்குவதால் அவற்றின் தாக்குப் பிடிக்கும் தன்மை குறைந்து வலிமையின்றிப் போய் விடும்.
பிறகு, ஆட்கள் கூப்பிடும்போது நாம் பாட்டுக்கு போய்க் கொண்டேயிருப்போம்..!
காதுக்கும் ஸ்பீக்கருக்கும் எட்ட அளவு தூரமாவது இருத்தல் வேண்டும். அதுவும் நமது முகத்திற்கு நேராகத்தான் அது இருத்தல் வேண்டும். காதுகளுக்கு நேராக இருக்கவே கூடாது..!
இன்றைய சமுதாயத்தில் 75 சதவிகிதம் பேர் நிச்சயம் தங்களது 50-வது வயதிலேயே செவிட்டு மிஷினை மாட்டப் போவது உறுதி. பார்த்துக் கொண்டேயிருங்கள்..
இதுபோன்ற அதிரும் பலமுனை செல்லிசை தாக்குதல்களுக்கு அரக்கோணம் மற்றும் திருப்பதி செல்லும் ரயில்களில் நானும் அனுபவிக்க நேர்ந்தது.அதை பார்த்தபிறகு ஆப்பிள் ஐபாட்-ஐ எடுத்து பந்தாவிடும் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
தமிழ்,தெலுங்கு என இரைச்சல்களின் நடுவில் தாக்குதல்கள் இம்சித்தன.அது வழக்கமான ஒன்றென பிற்பாடு தெளிவு பெற்றேன்.
ஹெட்செட் மாட்டிக் கொண்டால் காது.,,அப்புறம் கேட்காதுன்ணு ஆயிடும் என்பதென்னவோ உண்மை தான் என்றாலும் சில பாடல்களை ஆப்பிள் ஐபாட்-ல் கேட்கும் போது கிடைக்கும் சுகமும் தனி தான்.மிதமான ஒலியில் சிலநேரம் கேட்கலாம்.
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
Good post. Thanks for sharing your thought process. Happened to visit this page via Internet search by name. At many occasions, if i look back and ask myself why did i do that , why did i buy that ?. Not clear answer. Sometimes, i had real need of it but it came with its own -ve's and ended up fixing -ve's (like you, buying basic to little advanced, etc)....in today's world there isn't enough encouragements/system/time/advice given before one does something..many things we just do it to be part of the "living system"..what to do... just experience whatever i do. :)... Keep writing & sharing...
//இது எந்த மாதிரியான உளப்பிரச்சினை என்பதைச் சொல்ல வேண்டும்//
நார்மல்தான்.. என்ன கொஞ்சம் சோகம் உள்ளே உறைந்திருக்குது.. மாறுதலை கண்டு சிறிது சுனக்கம் தெரிகிறது.. :)))
காதில் ஹியர் போன் மாட்டுவது பொதுவாய் எல்லோருக்குமே கெடுதல்தான்
Buy SIEMENS Hearing Instruments ...Best Sound technology
Post a Comment