Saturday, March 16, 2013

விஸ்வரூபம் - இரா.முருகன் - நாவல்





விஸ்வரூபம்

பரமக்குடி பிராமணன் கடல் கடந்து தூர தேசத்து கதக் நடனத்தில் துவங்கி அரையின் கீழ் உதை வாங்கி துலுக்கன்மார் தேசத்தில் சண்டையிட்டுத் திரும்பும் டாக்கீஸ் சமாச்சாரமில்லை.

அதையும் விட சுவாரசியமானது, இரா.முருகனின் சமீபத்திய புதினம். கால்பந்து அளவிற்கான நூற்கண்டு அது இஷ்டத்திற்கு தாறுமாறாக பிரிந்து நான்லீனியர் இடியாப்பச் சிக்கலாய் விரிந்திருக்கிறது இந்த நூலின் களத்தில். தென்கிழக்கு முனையை பிடித்து இழுத்தால் எதிர்பாராத சிக்கலான திசையில் எதிர் அசைவு தெரிகிற சுவாரசியம். மாய யதார்த்த அரூப முன்னோர்கள் குடத்திலிருந்தும் நாரைகளாகவும் நாவல் நெடுக சலசலவென்று உரையாடிக் கொண்டும் உபதேசித்துக் கொண்டும் இருக்கிறார்கள். யுகம் முழுக்க உட்கார்ந்து எழுதினது போல ஆயாசத்துடன் தோற்றமளிக்கும் புதினம், இரண்டு சிறுநீர் இடைவேளைகளுக்கிடையில் எழுதி வி்ட்டிருப்பதான வாசிப்பு லகுவையும் கொண்டிருப்பதற்கான ரகசிய முரண் என்னவென்று தெரியவில்லை. எண்ணூறு பக்க நூலை வாசித்து முடித்தவுடன் அபினையும் அரை போத்தல் சாராயத்தையும் இணைத்து உண்டதைப் போன்ற கிறுகிறுப்பை ஏற்படுத்துகிறது.

18-ம் நூற்றாண்டிற்கும் 19-ம் நூற்றாண்டிற்கும் இடையில் நர்த்தனமாடும் (அல்லது இட வலமாகவா?)  அஸ்தி சொம்போடும் சொத்து பத்திரத்தோடும் பயணிக்கும் புதினம், இலக்கிய சாசுவதம் பற்றிய கவலையெதுவுமில்லாமல் தன்னிச்சையான மொழியில் உருவாக்கப்பட்டிருப்பதான பாவனையுடன் இயங்கினாலும் தொடர்புள்ள காலக்கட்டத்திய மொழியை உருவாக்குவதற்கான உழைப்பும் மெனக்கெடலும் அந்தந்த மொழி நேர்த்தியில் தெரிகின்றன. இங்கிலாந்து இளவரசர் ரயில் பயணம் குறித்த பத்திரிகை மொழிப் பகுதி ஓர் உதா.

இந்தப் புதினத்தில் எனக்கு மிகவும் பிடித்தமானது மகாலிங்கய்யன் என்கிற வரதராஜ ரெட்டி எழுதுகிற சுயவாக்குமூல கடிதங்கள்தான். அய்யருக்கும் ரெட்டிக்கும் உள்ள சுவாரசியமான தொடர்பு, புதினத்தை வாசித்தால்தான் புரியும். மனைவி லலிதாம்பிகைக்கும் கர்ப்பிரிச்சிக்கு பிறக்கும் மகனான வைத்தாஸூக்கும் எழுதும் கடிதங்களை அவர்கள் அல்லாமல் துரதிர்ஷ்டமாக நாம் மாத்திரமே வாசிக்க நேர்கிறது. ரெட்டிய கன்யகை குறித்த இரா.முருகனின் அபாரமான வர்ணிப்பில் வாசகனுக்கு ஸ்கலிதம் ஏற்படாவிட்டால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.

மயக்கும் மொழியில் ஒரு மாய யதார்த்தப் பயணம் இந்த விஸ்வரூபம்

(கிழக்கு பதிப்பகத்தின் மாத இதழான 'அலமாரி'யில் வெளியான சிறு விமர்சனத்தின் திருத்தப்படாத  வடிவம்)

suresh kannan

4 comments:

Sudhakar Kasturi said...

அன்பார்ந்த சுரேஷ் கண்ணன், மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள். நான் இன்னும் படிக்கவில்லை. ஒரு மாஜிக்கல் ரியலிஸத் தோற்றத்தை உருவாக்கிவிட்டீர்கள். அரசூர் வமிசத்தின் தொடர் என்பதால் இன்னும் மாய பிம்பங்களை எதிர்பார்க்கலாம் என்ற எண்ணத்தை வலுவாக்கிவிட்டது உங்களது விமரிசனம். இரா.முருகன் அவர்களிடம் எப்படி 800 பக்கம் எழுதினீர்கள் என்று கேட்டேன். “பையத் தின்றால் பனையும் திங்காம்” என்று மலையாள பழமொழி சொன்னார். இது பனையல்ல, பனந்தோட்டம் என்றே தோன்றுகிறது. அன்புடன் க.சுதாகர்.

kanavuthirutan said...

உடனடியாக வாங்கிப் படிக்கத் தூண்டும் விமர்சனம். இதுபோல் அடிக்கடி புத்தகம் சார்ந்த மதிப்புரைகள் எழுதும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...

Ashok D said...

(திருத்தப்படாத வடிவம்)

அதனாலேயே நல்லாயிருக்கு :)

Vadivelan said...

பிராமணன், துலுக்கன்மார்

இது இப்போ இங்கே அவசியமா.......