Sunday, December 08, 2019

Udta Punjab – போதையில் மிதக்கும் பிரதேசம்



ஐந்து நதிகள் பாயும்  செழிப்பான பிரதேசமான பஞ்சாப் மாநிலம், அதன் வீரத்திற்கும் கடுமையான  உழைப்பிற்கும் பெயர் போனது. ‘பிச்சைக்காரர்களில் ஒரு சீக்கியரைக் கூட பார்க்க முடியாது’ என்கிற பெருமித வாசகம் கூட ஏறத்தாழ உண்மையானதுதான். விவசாய உற்பத்தியில் சிறந்து விளங்கும் பிரதேசமும் கூட. இந்திய ராணுவத்தில் சீக்கியர்களின் பங்கு கணிசமானது.  எல்லோரும் அறிந்த இத்தனை சிறப்புகள் கொண்டஇந்த  மாநிலத்தின் பெரும்பான்மையான சமூகம்,  இன்று போதையில் சிக்குண்டு கிடக்கிறது. இந்த  சமகால அவலத்தை ‘Udta Punjab’ திரைப்படம் மிகச் சரியாக சுட்டிக் காட்டுகிறது.

‘மிதக்கும் பஞ்சாப்’ என்று பொருள் தரக்கூடிய தலைப்பைக் கொண்டிருக்கும் இத்திரைப்படம், வெகுசன திரைப்படத்திற்கும் தூய கலை சார்ந்த படைப்பிற்கும் இடையிலான மாற்று சினிமா வடிவில் இயங்குகிறது. சில காட்சிகளில் நாடகீயத்தனங்கள் மிகுந்திருந்தாலும் இத்திரைப்படத்தின் மையம் கவனப்படுத்த முயலும் சமூக அக்கறை சார்ந்த விஷயத்திற்காகவே இதுவொரு குறிப்பிடத்தக்க படமாக மாறுகிறது. Abhishek Chaubey இதனை சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

**

இதன் திரைக்கதை மூன்று தனித்தனியான இழைகளில் பயணித்து உச்சக்காட்சியில் ஒன்றிணைந்து நிறைகிறது.

டாமி சிங் எனும் நவீன இசைக்கலைஞன், பஞ்சாப் இளைஞர்களின் மத்தியில் பிரபலமானவனாக இருக்கிறான். ஆனால் அவனுடைய இசைத்திறமை இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தை உற்சாகமாக ஆதரிக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது. போதைப் பொருளை உபயோகப்படுத்தாமல் அவனால் செயலாற்ற முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவனுடைய வீழ்ச்சி துவங்குகிறது. அப்போது அவன் சந்திக்கும் ஓர் இளம்பெண் அவனுக்குள் பெரிய மாற்றத்தை உருவாக்குகிறாள். பதில் உதவியாக அவள் எதிர்கொண்டிருக்கும் ஆபத்திலிருந்து பாடகன் காப்பாற்றத் துணிகிறான்.

வறுமை காரணமாக பீகாரிலிருந்து இடம்பெயரும் இளம்பெண் ஒருத்தி பஞ்சாபில் விவசாயக்கூலியாக பணிபுரிகிறாள். முன்பு ஹாக்கி வீராங்கனையாக இருந்த அவள், தந்தை இறந்த பிறகு அதைத் தொடர முடியாத கடுமையான வறுமை. விலையுயர்ந்த போதைப்பொருள் பாக்கெட் ஒன்று அவளுக்கு தற்செயலாக கிடைக்கிறது. அதை விற்று தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள நினைக்கும் அப்பாவித்தனம், அவளை சிக்கலான சூழலில் மாட்ட வைக்கிறது. போதை மாஃபியாவிடம் சிக்கி சீரழிகிறாள். போதைப் பழக்கத்திற்கு  ஆளாக்கி, அவளை  பாலியல் தொழிலாளியாக மாற்றுகிறார்கள். ஒரு முறை அங்கிருந்து தப்பிச் செல்லும் சமயத்தில்தான் இசைக்கலைஞனை சந்திக்கிறாள்.

சர்ஜித் சிங் இளநிலை காவல் அதிகாரி. போதைப் பொருள் நடமாட்டத்தை கண்டுகொள்ளாமலிருக்க லஞ்சம் வாங்குகிற வழக்கமான பேர்வழி. 'இந்த போதை மருந்து ஆசாமிகள் நமக்கு குறைவான கமிஷன் தருகிறார்கள். அதை இன்னமும் உயர்த்தி கேட்க வேண்டும் சார்' என்று தன் உயரதிகாரிக்கே ஆலோசனை தருமளவிற்கு சுயநல ஆசாமியாக இருக்கிறான்.

ஆனால் தன்னுடைய இளம் சகோதரன், போதைப் பழக்கத்தில் வீழ்ந்து கிடக்கும் செய்தியை அறியும் போதுதான் இதன் ஆபத்து அவனுக்கு உறைக்கிறது. ‘உன் சுயநலத்திற்காக மட்டும் இதை எதிர்க்காதே. இந்த மாநிலமே போதையில் வீழ்ந்திருக்கிறது, உன் பதவியைப் பயன்படுத்தி அதற்காக ஏதாவது செய்’ என்று அவனுக்கு அறிவுறுத்துகிறாள் டாக்டர் ப்ரீத் சஹ்னி. போதைப் பழக்கத்திலிருப்பவர்களை மீட்பதற்காக சிகிச்சை நிலையம் நடத்திக் கொண்டிருப்பவள் அவள். இருவரும் இணைந்து இதன் நெட்வொர்க்கை கண்டுபிடிக்க முனைகிறார்கள்.

இந்த மூன்று இழைகளின் பயணம் மூலமாக பஞ்சாப் என்கிற மாநிலம் எப்படி மெக்சிகோவைப் போல போதை மாஃபியாவினால் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது என்பது தொடர்பான காட்சிகள் அபாரமாக விரிகின்றன. மாஃபியாவின் கூட்டணிக் கண்ணிகள் எவ்வாறு அரசியல், அதிகாரத் தளங்களில் பரவியிருக்கின்றன என்பதும்.

**

பாடகன் டாமி சிங்காக ஷாஹித் கபூர் அபாரமாக நடித்திருக்கிறார் . அதீதமான தன்முனைப்பும் தன் இசைத்திறமை மீது உயர்வு மனப்பான்மையும் கொண்ட இளைஞனாக நடிப்பதற்காக வித்தியாசமான ஒப்பனையையும் விலங்கின் உடல்மொழியையும் கையாண்டிருக்கும் இவரது அர்ப்பணிப்பும் நடிப்புத் திறனும் பாராட்ட வைக்கின்றன. போதை மருந்துதான் தன்னை செயல்படுத்துகிறது, தன் திறமை அல்ல என்கிற நிர்வாண உண்மையை இவன் கண்டுகொள்ளும் தருணம் அற்புதமானது. உன்மத்தம் தரும் தனது இசைக்காக காத்திருக்கும் பார்வையாளர்களிடம் ‘தான் ஒரு தோல்வியுற்றவன்’ என்று ஆவேச பரிதாபத்துடன் இவன் வாக்குமூலம் தரும் காட்சியும் அதைப் புரிந்து கொள்ளாமல் பார்வையாளர்கள் இவனை அவமானப்படுத்துவமான காட்சியும் சிறப்பாக பதிவாகியிருக்கின்றன.

ஓர் அசந்தர்ப்பமான சூழலில் பாட வேண்டிய கட்டாயம் ஏற்படும் தருணம் இவனுக்கு அமைகிறது. எந்தவொரு கலைஞனும் நடைமுறையில் எதிர்கொண்டிருக்கக்கூடிய நெருடல்தான் இது. தனக்கு போதிமரத்தை காட்டிச் சென்ற தேவதையை நினைத்து இவன் உணர்ச்சிகரமாக பாடும்  காட்சி அற்புதமானது. போலவே தன் இசையின் மீது பித்து கொண்டிருக்கும் இளைஞர்களில் இருவரை இவன் சிறைச்சாலையில் பார்க்கும் காட்சியில் வெளிப்படுத்தும் முகபாவமும் அபாரம். அங்கிருந்துதான் இவனுடைய மனமாற்றம் துவங்குகிறது.

ஷாஹித் கபூருக்கு  நிகரான சிறப்புத்தன்மையுடன் நடித்திருப்பவர் அலியா பட். முன்னணி நடிகர்கள் தங்களின் பிரபல பிம்பங்களைக் கழற்றி வைத்து விட்டு  இப்படியான யதார்த்தமான, சவாலான பாத்திரங்களை ஏற்பது பாராட்டத்தக்கது. தன்னை கோரமாக காட்டும் ஒப்பனையில் பாலியல் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படும் அவலத்தை எதிர்கொள்ளும் இளம்பெண்ணாக துணிச்சலுடன் நடித்திருக்கிறார் அலியா பட். பல்வேறு ஆண்களால் இவர் சீரழிக்கப்படும் போதெல்லாம், கட்டிடத்தின் எதிர்புறத்தில் இருக்கும் ஒரு சுற்றுலா விளம்பர பேனரை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதின் மூலம் தன் துயரத்தைக் கடக்க முயல்கிறார். ஒருபுறம் உடல் காமத்தின் மூலம் இழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் போது அவரது மனம் கோவாவின் கடற்கரையில் உல்லாசமாக உலவிக் கொண்டிருப்பதின் மூலம் தான் தேடிக் கொண்ட துயரத்தை விழுங்க முயல்கிறார்.

கடைசிக்காட்சியில் மட்டுமே பெயர் வெளிப்படும் அடையாளமில்லாத  இந்த இளம்பெண்ணும் 'கப்ரூ' என்கிற தன் பட்டப்பெயரை எப்போதும் பெருமையுடன்  முழங்கிக் கொண்டிருக்கும் பாடகனான டாமி சிங்கும் தங்களைத் துரத்துபவர்களிடமிருந்து ஒளிந்து கொள்ளும் ஒரு காட்சி அற்புதமானது. அப்போது இருவருக்கும் இடையில் நிகழும் உரையாடல் சுவாரசியமானதும் கூட.

இளம்பெண் கேட்கிறாள் “யாரிடமிருந்து தப்பிக்க ஒளிந்து கொண்டிருக்கிறாய்?”

டாமி சிங் சொல்கிறான் “என்னிடமிருந்துதான்”

“அட முட்டாளே”

“ஆம் மிகப் பெரிய முட்டாள் நான்”

“என்னை விடவா?”

“ஆம். முட்டாள்களின் சாம்பியன் நான்”

சிறிது நேரத்திற்குப் பிறகு டாமி சிங் கேட்கிறான். “நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்.. நீயும் வருகிறாயா?”

இளம்பெண் கோபத்துடன் சொல்கிறாள். ‘ஏய்.. நான் அத்தனை பெரிய முட்டாள் இல்லை”

இருவருமே போதை மருந்து ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவிக்கப் போராடிக் கொண்டிருக்கிறவர்கள் என்கிற பின்னணியில் இருந்து பார்க்கும் போது இந்த  உரையாடலின் முக்கியத்துவம் புரியும்.

**

டாக்டர் ப்ரீத் சஹ்னியாக நடித்திருப்பவர் கரீனா கபூர். இவரும் ஒரு முன்னணி நட்சத்திரம்தான். தாங்கள் நடிக்கும் படங்களில் தாங்களே எல்லா பிரேம்களையும் ஆக்ரமிக்க வேண்டும் என்கிற முனைப்பு இல்லாமல் திரைக்கதையின் பாத்திரமாக மட்டும் தங்களை ஆக்கிக் கொள்ளும் இந்தி திரை நடிகர்களின் போக்கு பாராட்ட வைக்கிறது. டாக்டரும் காவல்துறை அதிகாரியும் இணைந்து நிகழ்த்தும் சினிமாத்தனமான துப்பறியும் சாகசங்களின் இடையே மலரும் நுண்ணிய காதல் காட்சிகளின் மென்மை சுவாரசியமாக இருக்கிறது.

போதைப் பொருள் பழக்கத்தை கைவிட முடியாமல், சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பும் சர்ஜித்தின் இளம் சகோதரன், மிகப் பெரிய குற்றத்தை செய்து விட்டு திகைப்பும் அழுகையுமாக அமர்ந்திருக்கும் ஒரு காட்சி, இளைய தலைமுறை மீது நாம் கொள்ள வேண்டிய உடனடி கவனத்தை பதட்டத்துடன் அறிவுறுத்துகிறது.

இதன் பாடல்களைப் பற்றி பிரத்யேகமாக சொல்லியாக வேண்டும். சமகால இந்திய திரையிசையின் சிறந்த நவீன அடையாளங்களுள் ஒன்றாக அமித் திரிவேதியைச் சொல்லலாம். டாமி சிங்கின் ஆக்ரோஷமான ஆளுமைக்குப் பொருந்தும் வகையில் இவர் இசையமைத்திருக்கும் பாடல்கள் கேட்க கேட்க உன்மத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. இதே டாமி சிங், ஓர் அசந்தர்ப்பமான சூழலில் பாட கட்டாயப்படுத்தப்படுகிறான்.  சற்று முன் சந்தித்த தோழியின் பிரிவுத் துயரத்தில் அவன் பாடும் பாடல் காவியச் சோகத்துடன் அமைந்திருக்கிறது. ஆக்ரோஷம், துயரம் ஆகிய இரு நுனிகளிலும் அபாரமாக வெளிப்படுத்தும் விந்தையை நிகழ்த்துகிறது அமித் திரிவேதியின் இசை.


***

இந்த திரைப்படம் சென்சார் அதிகாரிகளிடம் சிக்கி அவதிப்பட்ட வேடிக்கையையும் சொல்லியாக வேண்டும். படத்தின் தலைப்பில் உள்ள 'பஞ்சாப்' என்கிற வார்த்தையை  நீக்கச் சொல்லியும் 89 இடங்களில் ஆட்சேபகரமான காட்சிகளை அகற்றச் சொல்லியும் சென்சார் போர்டு வலியுறுத்தியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் அனுராக் காஷ்யப் 'இது படைப்புச் சுதந்திரத்தை முடக்கும் நியாயமற்ற செயல்' என்று ஊடகங்களில் முழங்கினார். இன்ன பிற திரைப்பட படைப்பாளிகளும் அவருக்கு ஆதரவாக குரல் தந்தார்கள்.

பின்னர் இதில் தலையிட்ட மும்பை உயர்நீதி மன்றம், 'ஒரு திரைப்படத்திற்கு சான்றிதழ் தருவதோடு சென்சார் போர்டின் அதிகார எல்லை முடிந்து விடுகிறது. காட்சிகளை அகற்றச் சொல்ல அதற்கு உரிமையில்லை. இது வயதுக்கு வந்தோருக்கான படம் என்ற அளவில் உள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிரான காட்சிகள் இதில் இல்லை' என்கிற அடிப்படையான கருத்தை உறுதிப்படுத்தி ஒரேயொரு வெட்டுடன்  பிறகு அனுமதி தந்தது.

திரைப்படம் என்பது கலை சார்ந்த வடிவம் என்கிற புரிதல் ஏதும் இல்லாமல் டைப் அடித்து தரப்பட்டிருக்கும் அரசு விதிகளை இயந்திர மூளையுடன் ரோபோ போல டிக் அடிக்கும் குமாஸ்தா நபர்கள் சென்சார் போர்டு அதிகாரிகளாக இருந்தால் இவ்வாறான விபத்துகள்தான் நிகழும்.


இத்திரைப்படத்தின் வசனங்களிலும் பாடல்களிலும் சரமாரியான ஆபாச வார்த்தைகள் இடம்பெறுவது ஒரு நெருடல்தான் என்றாலும் அவை திணிக்கப்பட்டவையாக அல்லாமல் தொடர்புள்ள பாத்திரங்களின் வடிவமைப்பிற்கு இணக்கமானவையாகத்தான் உள்ளன. இதில் போதைப் பொருள் பழக்கத்தின் மீது வசீகரத்தை உண்டாக்கும் காட்சிகள் உள்ளன என்று சொல்லப்படுகிற தரப்பும் கூட தவறு. இதன் மையமே போதை மருந்தின் பயங்கரத்தை பல்வேறு காட்சிகளில் வலியுறுத்திக் கொண்டிருக்கிறது  என்பதை சராசரி நபர்களால் கூட நிச்சயம் புரிந்து கொள்ள முடியும்.

***

மிக ஆபத்தான போதைப் பொருட்கள், மருந்து என்கிற போர்வையில் ஒளிக்கப்பட்டு மருந்துக்கடைகளில் எளிதில் கிடைக்கின்றன. இதை இளைஞர்களால் எளிதில் அணுகி உபயோகப்படுத்த முடிகிறது. இந்த நடைமுறை உண்மைகள், இத்திரைப்படத்தின் காட்சிகளில் துணிச்சலுடன் அம்பலப்படுத்தப்படுகின்றன.

ஒரு நாட்டின் குடிமக்களை பலவீனப்படுத்த எதிரிநாடுகள் கையாளும் முறைகளுள் ஒன்று, போதைப் பொருட்களை புழங்க விடுவது.  பாகிஸ்தான் தரப்பு  நபர்கள் போதை மருந்து பாக்கெட்டை இந்திய எல்லைக்குள் வீசும் காட்சிகள் மிக நேரிடையாக படத்தின் துவக்கத்திலேயே காண்பிக்கப்படுகிறது. இதில் புழங்கும் கோடிக்கணக்கான பணத்திற்காக தம் நாட்டின் மக்களையே சீரழிக்கும் அரசியல்வாதிகளும், மாஃபியா நபர்களும் காவல்துறை அதிகாரிகளும் எதிரி நாடுகளின் நோக்கத்தை இன்னமும் எளிதாக்குகிறார்கள்.

மட்டுமல்லாமல் உலகமயமாக்கல் காலக்கட்டத்திற்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் பொருளாதார சமநிலையின்மை தரும் மனஉளைச்சலையும் பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்ள இயலாத எளிய சமூகத்தின் மக்கள் மிக எளிதாக போதைப் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்தப் போதையின் வசீகரத்திற்கு எளிதில் சிக்குகின்றனர். இவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு இயந்திர ஆசாமிகள், அதற்கு மாறாக தங்களின் சுயநலத்திற்காக இந்தப் போக்கிற்கு ஆதரவாக இயங்கும் ஊழல் மிகுந்த அவலம் நிகழ்கிறது. இது போன்ற நடைமுறை விஷயங்களை இத்திரைப்படம் வலுவாகவே சுட்டிக் காட்டுகிறது.

பஞ்சாப்பில் உள்ள பத்து ஆண்களில் நான்கு நபர்கள் போதைப் பொருள் பழக்கத்தில் விழுந்திருப்பதாக ஒரு அதிர்ச்சியான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த நிலையில் இதை மூடி மறைத்து நிலைமையை இன்னமும் மோசமாக்காமல், அவற்றை அம்பலப்படுத்தும் இது போன்ற துணிச்சலான படைப்புகள் மேலதிகமாக வெளிவர வேண்டும் என்பதையே உறுதி செய்கிறது Udta Punjab.

***

இத்திரைப்படத்தைப் பார்த்து முடித்தவுடன் தவிர்க்கவியலாத சில கேள்விகள் எழுந்தன. டாஸ்மாக் கடைகளின் மூலமாக தமிழகத்தின் பெரும்பான்மையும் குடிநோயால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அவலத்தை தினமும் காண்கிறோம். தன் வாழ்நாள் பெரும்பான்மையும் மதுவிலக்கிற்காக போராடி இறந்த சசிபெருமாள் முதற்கொண்டு பல தனி நபர்களும், அமைப்புகளும், பொதுமக்களும் மது ஒழிப்பு எனும் விஷயத்திற்காக கவலையுடனும் கொதிப்புடனும் ஓரணியில் குவிந்திருக்கின்றனர்.

ஆனால் பெரும்பாலான திரைப்படங்களில் டாஸ்மாக் பார்களில் நிகழும் குத்துப்பாட்டை மட்டும் தவறாமல் சித்தரித்து விடும் தமிழ் சினிமா, இந்த நடைமுறை அவலத்தைப் பற்றி Udta Punjab போன்று ஏன் இன்னமும் ஒரு படைப்பைக் கூட உருவாக்கவில்லை? ஆறுதலாக வெளிவந்த 'மதுபானக் கடை' போன்ற அரிய முயற்சிகள் கூட ஏன் இங்கு பரவலாக கவனிக்கப்படவில்லை?



(அம்ருதா  இதழில் பிரசுரமானது) 

suresh kannan

No comments: