Monday, December 09, 2019

கம்மாட்டிபாடம் - நசுக்கப்பட்ட வரலாற்றின் ஒரு துளி



சுமார் மூன்று மணி நேரங்கள்  ஓடி முடிந்த பிறகும், உடனே  மீண்டும் ஒருமுறை  துவக்கத்திலிருந்து பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஒரு திரைப்படத்தினால் ஏற்படுத்த முடியுமா? ஆம், அப்படியொரு விருப்பத்தை என்னுள் ஏற்படுத்திய மலையாளத் திரைப்படம்தான் 'கம்மாட்டிபாடம்'. அப்படியென்ன சிறப்பு இதில்?

அற்புதமான திரைக்கதை, திரைமொழி, பாத்திரங்களின்  வடிவமைப்பு,  நடிகர்களின் கச்சிதமான தேர்வு, காலத்தின் தொடர்ச்சிக்கேற்ப பாத்திரங்கள் மாறுபடும் தோற்றத்தின் பொருத்தம், திறமையான இயக்கம் உள்ளிட்ட பல சிறப்பான காரணிகள் இந்தப் படத்தை ஒரு சுவாரசியமான காண்பனுபவமாக மாற்றுகின்றன. என்னதான் தொழில்நுட்ப அளவில் ஒரு திரைப்படம் சிறப்பாக இருந்தாலும்  அதன் மையமும் உள்ளடக்கமும் எதைப் பற்றி உரையாடுகிறது என்பதைப் பொறுத்துதான் அதன் முக்கியத்துவம் அமையுமல்லவா?. அந்த நோக்கிலும் இது கவனிக்கத்தக்க ஒரு திரைப்படம்தான்.

இத்திரைப்படம் எதைப் பற்றியது?

எந்தவொரு பிரதேசத்தின் வரலாறாக இருந்தாலும் அது பெரும்பாலும் எவர்களைப் பற்றியதாக இதுவரை அமைந்திருக்கிறது, எவர்களை முன்நிறுத்துவதாக இருக்கிறது என்று பார்த்தால்  அவை பெரும்பாலும் பேரரசர்களைப் பற்றியும், மன்னர்களைப் பற்றியும், அதிகாரத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களைப் பற்றியுமாகத்தான் இருக்கும். சமூகத்தின் இதர பிரிவின் மனிதர்கள், குறிப்பாக விளிம்பு நிலை சமூகத்தினரைப் பற்றி போகிற போக்கில் கூட எந்த குறிப்பும் இருக்காது.  சரித்திரப் புனைவுகளைக்  கூட கவனித்தால் பல்லக்கில் கம்பீரமாக வரும் மன்னர்களைப் பற்றியும் ஒயிலாக உலவும் இளவரசிகளை வர்ணித்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வரிகள் இருக்குமே ஒழிய, அந்த பல்லக்கைத் தூக்கி வருபவர்களைப் பற்றி ஒரு வரி கூட இருக்காது. அவர்கள் முகமில்லாத அடையாளமற்றவர்கள். பல்லக்கைப் போலவே அவர்களும் ஜடப் பொருட்கள்.

அரண்மணைகள், ஆலயங்கள், அணைக்கட்டுகள் என்று கட்டிடங்களும் மாளிகைகளும்  உருவாகும் போது அவற்றை உருவாக்கிய பெருமையான அடையாளங்களாக மன்னர்களின், அதிகாரத்தில் உள்ளவர்களின் பெயர்களிலேயே அறியப்படும். அந்தக் கட்டுமானங்களில் ரத்தமும் வியர்வையும் சிந்திய பல்லாயிரக்கணக்கான உழைப்பாளிகளைப் பற்றியும் உயிரைத் தந்த தியாகிகளைப் பற்றியும் எந்தப் பதிவும் இருக்காது. இப்படித்தான் பொதுவாக பெரும்பாலான வரலாறுகளும் அதுசார்ந்த புனைவுகளும் உருவாக்கப்படுகின்றன.

மனித நாகரிகம் மெல்ல மெல்ல கனிந்து பெரும்பாலான நாடுகளில் ஜனநாயகம் என்பது மலர்ந்து மக்களுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டு தனிநபர்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி பேசக்கூடிய சமகாலத்தில் கூட மன்னராட்சியின் எச்சங்களே பெருமளவில் நடைமுறையில் இருக்கின்றன. வேறு வகையில் சொன்னால் மன்னராட்சிதான் நீடிக்கிறதோ என்கிற ஐயத்தை கூட சில அரசியல் நிகழ்வுகளும் வாரிசுமுறை பதவியேற்புகளும் ஏற்படுத்துகின்றன.

இவ்வாறான மேல்தட்டு அதிகார தரப்புகளால் நசுக்கப்பட்டு வரலாற்றின் இருளில் புதையுண்டு போகும் ஒரு சமூகத்தின் மனிதர்களைப் பற்றிய சிறுதுளிதான் 'கம்மாட்டிபாடம்'.


***

நாகரிக மனிதனின் தேவைகளுக்காகவும் செளகரியங்களுக்காகவும்  எத்தனையோ அநாகரிகங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன; நிகழ்கின்றன. மனிதர்களுக்கான வாழ்விடங்களையும் வசதிகளையும் உருவாக்க இதர உயிரினங்கள் பல அழிக்கப்படுகின்றன. சில வகை உயிரினங்கள் பூமியிலிருந்தே காணாமற் போகின்றன. இன்னும் சில அரியவகை உயிரினங்களாகின்றன. உயிரினங்கள் மட்டுமல்ல, வனங்களிலுள்ள பழங்குடி மனிதர்களை அழித்து விட்டு அல்லது அப்புறப்படுத்தி விட்டு அணைக்கட்டுகளும் செல்வந்தர்களுக்கான சொகுசுப்பண்ணைகளும் உருவாகின்றன. ஒரு பெருநகரம் உருவாவதற்கு பின்னால் அங்கிருந்து துரத்தப்பட்ட சேரி மக்களின் துயரமும் உழைப்பும் அவர்களை உபயோகப்படுத்திக் கொண்டு தூர எறிந்த வணிக முதலாளிகளின் நயவஞ்சகங்களும் மறைந்திருக்கின்றன.

அப்படியொரு பகுதி மனிதர்களின் துயரத்தை மெலோடிராமாவாக அல்லாமல் யதார்த்தமான வன்முறையின் அழகியலோடு விவரிக்கிறது இத்திரைப்படம்.

நடுத்தர வயதுள்ள ஒரு நபர் (துல்கர் சல்மான்) கத்தியால் தாக்கப்பட்டு சாலையில் ஓடி வந்து ஒரு பேருந்தை நிறுத்தி ஏறுகிறார். அவருடைய மனவோட்டம் மூலமாக முந்தைய காட்சிகள் விரிகின்றன. இதன் திரைக்கதை மூன்று தளங்களில் விரிகிறது. ஒன்று, தாக்கப்பட்ட மயக்கத்துடன் இருக்கும் கிருஷ்ணா தனது அதுவரையான வாழ்க்கையை  நினைவுகூர்ந்து கொண்டே வருவது. இரண்டு அவனுடைய இளமைப்பருவம் முதல் தாக்கப்பட்ட சமகாலம் வரையான காட்சிகள். மூன்று ஃபிளாஷ்பேக் முடிந்த பிறகு விரியும் காட்சிகள். இந்த மூன்று தளங்களின் தருணங்களும் சுழற்சி முறையில் அடுக்கடுக்காக காட்டப்பட்டும் அதன் திரைக்கதை  பார்வையாளனுக்கு எவ்வித குழப்பத்தையும் தராத வகையில் உருவாக்கப்பட்டிருப்பதே இதன் சிறப்பு.

***



கேரளத்தின் எர்ணாகுளம் பகுதியில் கம்மாட்டிபுரம் பகுதி. எந்தவொரு பிரதேசத்திலும் வன்முறைச் செயல்களும் குற்றச்செயல்களும் அது சார்ந்த நபர்களும் அதிகமிருப்பவைகளாக சில பகுதிகளும் அறியப்படும். காவல்துறை பதிவுகளில் இவை குறித்த பிரத்யேகமான குறிப்புகளும் மக்களிடையே இது குறித்த  உண்மை கலந்த புனைவுளும் நிறைய காணப்படும். ஆனால் அந்தக் குற்றங்கள் சமூக விரோதச் செயல்களாக மட்டுமே பார்க்கப்படுகிறதே தவிர, அந்தக் குற்றத்தின் ஊற்றுக்கண்களையோ, சமூகவியல் நோக்கில் அதன் காரணங்களையோ எவரும் பெரிதாக ஆராய்வதில்லை. இப்படி வன்முறை நபர்களால் புகழ் அடையும் இடம் 'கம்மாட்டிபாடம்'

அதுவரை ஆதிக்கச் சாதியினால் அடிமைப்படுத்தப்பட்டு வந்த அவலத்தை புதிய தலைமுறை  இளைஞர்கள் எதிர்க்கத் துவங்குகிறார்கள். சில முரட்டு இளைஞர்கள் வன்முறையின் மூலம் தங்கள் பகுதியின் அடையாளத்தை நிறுவுகிறார்கள். அதைப் பெருமையாகவும் நினைக்கிறார்கள். இவர்களின் வன்முறையை மிக சாதுர்யமாக முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்தப் பகுதிக்கு இடம்பெயரும் ஈழவச் சமூகத்தைச் சேர்ந்த  நடுத்தர வர்க்க குடும்பம் சிறுவன் கிருஷ்ணாவுடையது. அவனுக்கும்  தலித் சமூகத்தைச் சார்ந்த சக வயதுள்ள  சிறுவர்களுக்கும் நட்பு ஏற்படுகிறது. குறிப்பாக பாலன் மற்றும் கங்கா. அந்தப் பகுதியில் நிகழும் வன்முறையின் வசீகரம் கிருஷ்ணனுக்குள்ளும் பரவுகிறது. தன் குடும்பத்தினரின் கண்டிப்பை மீறி அவர்களோடு பழகத் துவங்குகிறான். மட்டுமல்ல கங்காவின் முறைப் பெண்ணான அனிதாவின் மீது இவனுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.

கிருஷ்ணன் வாலிபனான பிறகு ஒரு வன்முறைச் சம்பவத்தில் கங்காவை காப்பாற்ற ஒரு போலீஸ்காரரை குத்திப்போட்டு ஜெயிலுக்குப் போகிறான். ஜெயில்வாசம் முடிந்து திரும்பும் போது தம்மை வரவேற்கும் பாலன் குழுவினருடன் செல்கிறான். அவனை அழைத்துச் செல்ல வந்த கிருஷணனின் தந்தை இதை வெறுப்புடன் பார்க்கிறார். கங்காவிற்காக கிருஷ்ணன் செய்த கொலையின் புகழ் காரணமாக அந்தக் குழுவிற்குள் இன்னமும் அழுத்தமாக இடம்பெறுகிறான். முதலாளிகளுக்காக கள்ளச்சாராயம் தயாரிப்பது, கடத்துவது என இவர்களது தொழில் நடக்கிறது.

கிருஷ்ணணிற்கும் அனிதாவிற்குமான காதல் ரகசியமாக வளர்ந்து கொண்டிருந்தாலும் அவனது முறை மாப்பிள்ளையான கங்கா, தாம் அவளை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக சொல்கிறான். நட்பிற்கும் காதலுக்கும் இடையேயான சங்கடம் கிருஷ்ணனிற்கு ஏற்படுகிறது.

***

இந்தக் குழுவின் தலைவனான பாலன் எவருக்கும் அஞ்சாத முரட்டுத்தனமானவனாக இருக்கிறான். தம்மை ஏமாற்ற நினைக்கும் முதலாளிகளையே துணிச்சலுடன் தட்டிக் கேட்கிறான். 'இவனை வளர விட்டால் ஆபத்து' என முதலாளிகள் இவனுடைய தொழிலின் ஆதாரங்களை மறைமுகமாக அழிக்கிறார்கள். முதலாளிகளுக்காக  தம் சமூகத்தின் ஆட்கள் வைத்திருக்கும் நிலங்களை மிரட்டி பிடுங்கி அவற்றை முதலாளிகளுக்கு தருகிறான் பாலன். சொந்த மக்களுக்கே துரோகம் செய்யும் பாலனின் கண்மூடித்தனமான விசுவாசத்தை நினைத்து வருந்தி அவனுடைய தாத்தா மனம் நொந்து சாகிறார். நிலம் பிடுங்கப்பட்ட மக்களுக்கான நியாயமான இழப்பீடை பாலன் முதலாளிகளிடம் கேட்கும் போது வெற்றுச் சமாதானங்களால் துரத்தப்படுகிறான்.


வெறுப்புறும் பாலன் 'இந்த தொழிலே வேண்டாம்' என விலகி திருமணம் செய்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கும் போது முதலாளிகளால் கொல்லப்படுகிறான். அனிதாவை அடைவது தொடர்பாக கங்காவிற்கும் கிருஷ்ணனிற்கு ஒரு மறைமுக போட்டி இருப்பதால் பாலனின் சாவிற்கு கிருஷ்ணன்தான் காரணம் என கங்கா குற்றம் சாட்டுகிறான். ஒரு கட்டத்தில் 'அவளை விட்டுத் தந்து விடு' என முறையிடுகிறான். உஷாராகும் கிருஷ்ணன், அனிதாவுடன் எங்காவது சென்று விட திட்டமிடும் போது காவல்துறை கைது செய்கிறது.

இதன் பிறகு கிருஷ்ணன் இந்தச் சூழலில் இருந்து விலகி மும்பைக்குச் சென்று ஒரு செக்யூரிட்டி ஏஜென்சியில் பணிபுரிவதை நாம் அறிய முடிகிறது. இப்படியாக சில வருடங்கள் கழிந்த பிறகு ஒரு நாள் கங்காவிடமிருந்து அவனுக்கு ஒரு தொலைபேசி வருகிறது. கம்மாட்டிபாடத்திற்கு வரச்சொல்லி கங்கா அழைக்கிறான். சட்டென்று  நின்று போகும் உரையாடலின் மூலம் கங்கா ஆபத்தில் இருப்பதை கிருஷ்ணனால் உணர முடிகிறது. எனவே அவனுக்காக மீண்டும் வன்முறைக் களத்திற்குள் திரும்ப வேண்டிய நெருக்கடி கிருஷ்ணனுக்கு ஏற்படுகிறது.

கங்காவைத் தேடி அவனுடைய பயணம் துவங்குகிறது. தன் பழைய நண்பர்களை சந்திக்கிறான். அவன் அங்கிருந்து விலகியிருந்த சமயத்தில் நடந்த சம்பவங்களை அறிய முடிகிறது. கங்கா பயங்கர முடிகாரனாகி முதலாளிகளிடம் அவ்வப் போது பணம் கேட்டு வாழ்க்கை நடத்தும் விஷயங்களை அறிகிறான். அனிதாவை திருமணம் செய்து கொண்ட கங்கா, ஒரு கட்டத்தில் தன் மீதே வெறுப்புற்று 'நான் உனக்கு நல்ல கணவனில்லை. கிருஷ்ணாதான் உனக்குச் சரியானவன், நீ அவனிடம் சென்று விடு' என்று சொல்லிச் சென்றதை அனிதாவின் மூலம் அறிகிறான். 'ஆண்களாகிய உங்களின் விளையாட்டில் என்னைப் பலி கொடுத்து விட்டீர்களே' என்று நெடுங்காலமாக பெண் சமூகத்திடமிருந்து வரும் புகாரை அனிதாவும் சொல்லி அழுகிறாள்.

தன் நண்பன் கங்காவைக் கொன்ற முதலாளிகளைத் தேடி கிருஷ்ணன் பழிதீர்ப்பதுடன் படம் நிறைவுறுகிறது.

***

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த படி இந்தச் சம்பவங்கள் நேர்க்கோட்டில் அல்லாமல் நான்-லீனியர் திரைக்கதையின் வசீகரத்துடன் காட்சிகள் மாற்றி மாற்றி அடுக்கப்பட்டு காண்பிக்கப்படுகின்றன.

ஒரு திரைப்படத்திற்கு நடிகர் தேர்வு எத்தனை முக்கியம் என்பதும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு எத்தனை பிரத்யேகமானதாக இருக்க வேண்டும் என்பதை இத்திரைப்படம் துல்லியமாக உணர்த்துகிறது. அந்த அளவிற்கு திட்டமிட்டு உழைத்திருக்கிறார்கள். பாலனின் குடும்பத்தினரின் பெரும்பாலோனோருக்கு மரபு காரணமாக பல் துருத்திக் கொண்டு இருப்பதிலிருந்து சிறுவர்களின் காலம் முதல் பெரியவர்களின் காலம் வரையான பொருத்தமான நடிகர்களின் தேர்வும், காலத்தின் வளர்ச்சிக்கேற்ப அவர்களின் தோற்றமும் மாறுவதை கச்சிதமாக சித்தரித்திருப்பதும் இதன் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.

பாலனாக மணிகண்டன் ஆசாரி என்பவர் நடித்திருக்கிறார்.இவர் ஒரு நாடகக் கலைஞர். சினிமா வாய்ப்பிற்காக பல வருடங்கள் சிரமப்பட்டு இந்த திரைப்படத்தின் மூலம்தான் முதல் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. முதல் திரைப்படத்திலேயே கனமான வேடம். அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒரு மூர்க்கமான விலங்கைப் போல எதற்கும் அஞ்சாமல் செயல்படும் கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து கொண்டு நடித்திருக்கிறார். ஆனால் வெறுமனே உடல் பலம் மட்டுமே அல்லாமல், சூழலைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப சாதுர்யமாக வியூகம் வகுக்கும் புத்திசாலித்தனமும் இவரிடம் இருக்கிறது.  விளிம்புநிலை சமூகத்தின் மனிதர்கள் உடல் பலம் மட்டுமே கொண்டிருப்பவர்கள் என்கிற பொதுப்புத்தியை இந்தப் பாத்திரம் சிதறடிக்கிறது.

கங்காவாக விநாயகம். பாலனின் முக்கியமான அடியாள். கிருஷ்ணணின் காதலை அறிந்தும் அனிதாவிற்காக தம் உரிமையை நிலைநாட்டிக் கொண்டேயிருப்பதும் அவளை விட்டுத்தரச் சொல்லி கிருஷ்ணனிடம் முறையிடுவதும் பல வருடங்கள் கழித்து அந்த பொருந்தா திருமணத்தை நினைத்து வருந்துவதும் அதீத குடிகாரனாகி அந்த உடல்மொழியுடன் ஆரவாரமாக நடந்து கொள்வதும் என அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

அது எந்தச் சமூகத்தின் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, கதாநாயகி என்றால் சினிமாவின் காமிரா எப்போதுமே அழகான, வெள்ளை நிறத்திலான நபர்களை மட்டுமே விருப்பத்துடன் பதிவு செய்யும். வெள்ளை நிறத்தின் மோகம் கொண்ட சமூகவியல் காரணங்களைத் தவிர வணிகக் காரணங்களும் இதற்கு உண்டு. இந்த மரபை உடைத்துப் போட்டிருக்கிறார் இயக்குநர். இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் சமூகத்தை சரியாக பிரதிநிதித்துவப்படுத்தும் தோற்றத்துடன் உள்ள நாயகியை வடிவமைத்திருக்கும் துணிச்சலை பாராட்ட வேண்டும். அனிதாவாக நடித்திருக்கும் ஷான் ரோமி அபாரமாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு துணை பாத்திரமும் இதில் சரியாக உபயோகப்படுத்தபட்டிருக்கின்றன.

***

தம்முடைய டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்லும் பல விஷயங்கள் சர்ச்சையாவது வழக்கம். அந்த வகையில் 'அமிதாப் பச்சனை விட அவருடைய மகன் அபிஷேக் பச்சன் சிறந்த நடிகர்' என்று அவர் ஒருமுறை  சொல்லி வழக்கம் போல் அதுவும் சர்ச்சையான நினைவிருக்கிறது.

அந்த வகையில் சொல்ல வேண்டுமானால்  மம்முட்டி இத்தனை வருடங்களில் கடந்து அடைந்த இடத்தை அவரது வாரிசான துல்கர் சல்மான் சில வருடங்களிலேயே அடைந்து விடுவார் என்று தோன்றுகிறது. அவரது கிராஃபை பார்த்தால் அத்தனை ஆரோக்கியமானமாக  இருக்கிறது. வழக்கமான வெகுசன திரைப்படங்களோடு மாற்று முயற்சியில் அமைந்த திரைப்படங்களிலும் நடிக்கிறார். வயதான வேடங்கள் என்றாலும் தயங்குவதில்லை. இதிலும் அப்படியே. ஆனால் இதில் நடுத்தர வயது ஒப்பனையையும் மீறி அவருடைய இளமையின் உடல்மொழி வெளிப்படுவதை சற்று கவனித்திருக்கலாம்.

இத்திரைப்படத்தில் கிருஷ்ணனிற்கு தந்தையாக நடித்திருக்கும் P.பாலச்சந்திரன் எழுதிய கதையை ராஜீவ் ரவி அற்புதமாக இயக்கியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஆதார வளங்கள் அழிக்கப்பட்டு அவர்கள் எப்படி அதிகாரத்தால் நசுக்கப்படுகிறார்கள் என்கிற நெடுங்கால துயர வரலாற்றின் ஒரு துளியை பிரச்சாரத் தொனியல்லாமல் இயல்பான, அழுத்தமான காட்சிகளுடன் உருவாக்கியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வன்முறையின் அடையாளமாக நாம் முத்திரை குத்தினாலும் அதற்குப் பின்னால் உள்ள சமூகவியல் காரணங்களையும் அச்சமூகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகங்களையும் நாம் கவனிக்க வேண்டும் என்கிற செய்தியை இத்திரைப்படம் அழுத்தமாகச் சொல்கிறது.

மது நீலகண்டனின் ஒளிப்பதிவு பிரமிக்கத்தக்க அளவில் உள்ளது. காட்சிகளின் விவரணகளுக்கேற்ப தெறிக்கும் கேவின் பின்னணி இசை, நவீனத்தின் அழகியலோடு உருவாகியிருக்கிறது. படத்தின் துவக்கத்தில் ஒலிக்கும் 'பற பற' என்கிற பாடலின் அழுத்தமான வரிகளும் உன்மத்தம் ஏற்படுத்தும் இசையும் பார்வையாளனை சரியாக தயார்படுத்துகின்றன.

இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு கேரளத்தில் இடதுசாரி அரசு அமைந்த பிறகு நிலமில்லாத தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு வழங்கப்பட்ட நிலங்கள், உலகமயமாக்க கட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களும் உள்ளூர் முதலாளிகளும் எவ்வாறு நயவஞ்சமாக உருவிக் கொள்கிறார்கள் என்பதை எர்ணாகுளம் என்கிற சிறிய நகரம் கொச்சின் என்கிற நவீன நகரமாக உருவாவதன் பின்னால் நிகழும்  நவீன பொருளாதாரத்தின் மூலமான சமூக அநீதியையும் மோசடிகளையும் இத்திரைப்படம் சரியாக சுட்டிக் காட்டுகிறது.

செர்ஜியோ லியோனின் 'Once Upon a Time in America', அனுராக் காஷ்யப் இயக்கிய 'கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர்' சசிகுமாரின் 'சுப்பிரமணியபுரம்' ஆகிய திரைப்படங்களின் வரிசையில் கம்மாட்டிபாடம் இடம் பெறும் தகுதியுள்ளது. இதுவரையான மலையாள சினிமாவின் வரிசையில் ஒரு முக்கியமான படமாக வரலாறு குறித்துக் கொள்ளும் சாதனைப்படமாகவும் உருவாகியுள்ளது.


(அம்ருதா இதழில் பிரசுரமானது)

suresh kannan

No comments: