Monday, December 16, 2019

குட்டியப்பனின் 'லீலா' விநோதம்




எழுத்தில் வெளியான ஒரு நல்ல படைப்பை சினிமாவாக மாற்றுவதென்பது ஒரு திரைப்பட இயக்குநருக்கு ஒரு நோக்கில் எளிதான, பளு குறைந்த பணி. ஏற்கெனவே போட்டு வைக்கப்பட்டிருக்கும் அஸ்திவாரத்தின் மீது  திரைக்கதை எனும் கட்டிடத்தை நுட்பமாக கட்டும் திறமையை செலுத்தினால் போதும். ஆனால் இன்னொரு நோக்கில் அதுவே பெரிய சவாலும் கூட. கதாசிரியர் முதற்கொண்டு அந்த எழுத்தின் வாசகர்களையும் இயன்ற அளவிற்கு திருப்தி செய்வதோடு அந்தப் படைப்பின் மையத்தையும் சிதைக்காமல் அதற்கு நியாயம் செய்ய வேண்டும். மலையாள இயக்குநர் ரஞ்சித்தின் சமீபத்திய திரைப்படமான 'லீலா', ஆர்.உண்ணியால் எழுதப்பட்ட  சிறுகதையின் மையத்தை மிக கச்சிதமாக பிரதிபலிக்கும் ஒரு படைப்பாக உருவாகியுள்ளது. எழுத்தாளரே இதற்கு திரைக்கதை எழுதியதும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கலாம்.

உலகின் சிறந்த திரைப்படங்களாக அறியப்படுபவை பெரும்பாலும் எழுத்தியலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாகின்றன. ஒருவகையில் அத்திரைப்படங்களுக்கு அந்த படைப்புகளே நல்ல அடையாளத்தை தரும் விளம்பரங்களாகவும் அமைகின்றன.  'கதை,திரைக்கதை,வசனம், இயக்கம்' என்று எல்லாவற்றிற்கும் தாமே கிரெடிட் எடுத்துக் கொள்ளும் இந்திய வெகுசன திரையுலகின் மோசமான போக்கு சர்வதேச அரங்குகளில் அங்கீகரி்க்கப்படும் திரைப்படங்களில் பொதுவாக இருப்பதில்லை.

சுகுமாரனால் தமிழில்  மொழிபெயர்க்கப்பட்டுள்ள, ஆர்.உண்ணி எழுதிய 'லீலை' போன்ற  மலையாளச் சிறுகதையை  இலக்கிய பயிற்சியற்ற மொண்ணையான இயக்குநர்கள் வாசித்தால் ' ஒன்றுமே இல்லாத இந்த சாதாரணக் கதையைப் போய் எப்படி சினிமாவாக மாற்றுவது' என்று எரிச்சலும் சலிப்பும் கொள்ளக்கூடும். ஆனால் நுண்ணுணர்வும் முறையான இலக்கிய வாசிப்பும் உள்ள இயக்குநர்கள் வாசித்தால் 'சிறுகதையின் நுட்பத்தை எப்படி காட்சி வழியாக உருமாற்றுவது' என்று திகைப்பு கொள்வார்கள். ரஞ்சித் இரண்டாவது வகை. மேற்பரப்பில் அலட்சியமாகத் தோன்றும் ஆனால் அடிப்பரப்பில் சமூகத்தின் ஒழுக்க  மதிப்பீடுகளை மிக ஆழமாக எள்ளி நகையாடும் இந்தச் சிறுகதையை மிக நுட்பமானதொரு சினிமாவாக்கியுள்ளார்.

ஒரு சிறுகதையை எப்படி திரைப்பட வடிவமாக மாற்றுவது என்று பயில விரும்பும் இளம் இயக்குநர்கள், இந்தச் சிறுகதை மற்றும் சினிமாவை அவதானித்து எங்கெங்கெல்லாம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது, மெருகேற்றப்பட்டிருக்கிறது, சிறுகதையை அடுத்த தளத்திற்கு எப்படி சினிமா நகர்த்திச் செல்கிறது என்பதை ஒரு கற்றலாகவே வாசிக்கலாம். அப்படியொரு ஜாலத்தை ரஞ்சித் நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் சிறுகதையின் ஒரு முக்கியமான குறிப்பு திரைக்கதையில் மாற்றப்பட்டிருப்பதின் மூலம் இதன் ஒரு பகுதி பலவீனமாக அமைந்திருப்பதாக என்னளவில் உணர்கிறேன். என்னவென்று கட்டுரையின் போக்கில் பார்ப்போம்.

***

லீலா எதைப்  பற்றிய திரைப்படம்? அப்படி ஏதும் குறிப்பாக சொல்லி விட முடியாது என்பதே இதன் சிறப்பும் தனித்தன்மையும். ஒன்று செய்யலாம். இறுதிக் காட்சியில் அப்பாவி இளம் பெண்ணான லீலா ஏன் யானையின் கால்களில் நசுங்கிச் சாகிறாள்? அது ஏன் கொம்பன் யானையாக இருக்கிறது? என்று யோசித்துப் பார்த்தால் இத்திரைப்படத்தின் பூடகம் ஒருவாறு மெல்ல பிடிபடலாம். ஆண்மைய சிந்தனைகளால் இயங்கும் உலகத்தில் பெண்ணுலகம் எவ்வாறு நெடுங்காலமாக நசுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்பதற்கான ஒரு துளி உதாரணமாக 'லீலா' இருக்கக்கூடும்.

நடுத்தர வயதிலுள்ள குட்டியப்பன் ஆற்றில் மிதந்து செல்லும் இலை போல, காற்றில் பறந்து செல்லும் காகிதத் துண்டு போல ஒரு வாழ்க்கையை நிலையில்லாத வாழ்கிறவன். அன்றாட சலிப்புகளிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டு அதன் எதிர்திசைக்கு பாய்ந்தோடும் மனஅமைப்பைக் கொண்டவன். படிக்கட்டுகள் வழியாக அல்லாமல் ஏணி வழியாக  ஏறி மாடிக்கு வந்து காப்பி தரச்சொல்லி பணிப்பெண்ணை விநோதமாக இம்சிப்பவன். பணிப்பெண் விழுந்து இடுப்பெலும்பை முறித்துக் கொள்ளும் போது காந்தி சிலையின் முன்பு மனமுருக மன்னிப்பு கேட்பவன். அந்தக் குற்றவுணர்விலிருந்து விலக ஓய்வு பெற்ற பாலியல் தொழிலாளப் பெண்களுக்கு நிதியுதவி தருபவன்.  ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு, மர்லின் மன்றொ, ப்ரூஸ்லீ  என்கிற விசித்திரமான கலவையில் படங்கள் தொங்கும் வீடு அவனுடையது. ஏதோவொரு அமைதியின்மை அவனது ஆழ்மனதில் நெருடிக் கொண்டேயிருக்கிறது. இரவுகளில் தனிமையாக உறங்க அஞ்சுகிறான். அதனிடமிருந்து தப்பிக்க ஓர் அலைக்கழிக்கும் வாழ்க்கைக்குள் தன்னை ஒளித்துக் கொள்கிறான்.  இப்படியாக குட்டியப்பனின்  குணாதிசயங்களும் அவன் வெளிப்படுத்தும் நுட்பமான பகடிகளும் படம் முழுவதிலும் விரவிக் கிடக்கி்ன்றன.

ஒரு நடுஇரவில் பிள்ளேச்சனின் வீட்டு கதவைத் தட்டி குட்டியப்பன் சொல்கிறான். "பிள்ளேச்சா.. நான் ஒரு யானை வாங்கலாம்னு இருக்கேன். தயாரா இரு. காலைல போகலாம்".

குட்டியப்பனின் எதிர் பிம்பமாக இயங்கும் இந்த பிள்ளேச்சன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் சுவாரசியமானது. குட்டியப்பனின் கலகத்திற்கு எதிரான ஒரு சராசரியான நடுத்தரவர்க்க கோழையின் பாத்திரம். குட்டியப்பனின் விநோதமான அலைச்சல் இவருக்குள் எரிச்சலையும் அச்சத்தையும் தந்தாலும் அதன் மீது ஈர்ப்பும் இருக்கிறது. ஒருபுறம் உள்ளிருந்து எழும் அறவுணர்விற்கு அஞ்சினாலும் சமூகத்தினால் கீழ்மைகள் என ஒதுக்கப்பட்டிருப்பவைகளை மெல்ல தீண்டிப் பார்க்கும் ஆர்வமும் அவருக்குள் ரகசியமாக இருக்கிறது. குட்டியப்பன் ஓர் இளம்பெண்ணை தேடிச்செல்லும் பயணத்தில் தன்னுடைய மகளின் நினைவு அவ்வப்போது பிள்ளேச்சனுக்கு வந்தாலும் குட்டியப்பனை விட்டு விலகி விடாத படி அவருக்கு சாத்தானின் ருசியும் தேவைப்படுகிறது.


***


குட்டியப்பனுக்கு ஒரு யானையும் ஓர் இளம் பெண்ணும் தேவைப்படுகிறது. அதை நோக்கிய தேடலும் பயணமும்தான் 'லீலா'வின் கதை.

'ஒரு கொம்பன் யானையோட தும்பிக்கை மேலே ஒரு பெண்ணை துணியில்லாமல் சேர்த்து நிறுத்தினா எப்படி இருக்கும்? பார்த்தா நெற்றிப்பட்டத்தை அவிழ்த்து வெச்ச மாதிரி இருக்கணும். அப்புறம் யானையோட ரெண்டு கொம்புகளையும் பிடிச்சிக்கிட்டு தும்பிக்கையோடே சாஞ்சிருக்கும் பெண்ணை சம்போகம் பண்ணணும்'

உண்ணி எழுதிய சிறுகதையின் துவக்கப்பகுதியிலேயே குட்டியப்பனின் இந்த நோக்கம் தெளிவாக நிறுவப்பட்டு விடுகிறது. ஆனால் திரைக்கதையில் இது பூடகமாக அதன் இறுதி வரைக்கும் காப்பாற்றப்படுகிறது. சிறுகதையிலிருந்து திரைக்கதையாக உருமாறும் போது மற்ற பகுதிகள் மேம்பட்டிருந்தாலும் கதையின் மையமான இந்த விஷயம் மாற்றப்பட்டது பெரிய நெருடலைத் தருகிறது. குட்டியப்பனின் பயணம் முழுதும் அவனுடன் பயணிக்கும் பிள்ளேச்சனுக்கு 'ஏதோ நடக்கிறது" என்று தெரிந்தாலும் அது என்னவென்று தெளிவாகத் தெரிவதில்லை. அவருடன் இணைந்து பார்வையாளர்களும் இந்த பூடகத்தன்மையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அதுவே ஓர் ஆர்வத்தைத் தந்தாலும் கூடவே எரிச்சலையும் தருகிறது.

குட்டியப்பன் அதுவரை தான் சந்திக்கும் பாலியல் தொழிலாளிகளுடன் உடல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. படத்தின் துவக்கத்தில் சந்திக்கும் அவ்வாறான ஒரு பெண் முன்பு பிணம் போல படுத்துக் கொண்டு 'என்னை உன் தந்தையாக நினைத்து அழு' என்கிறான். இப்படியொரு விநோதமான வாடிக்கையாளனால் தவிக்கும் அவள் ஒரு கட்டத்தில் தந்தையின் நினைவினால் அழுதுத் தீர்க்கிறாள். அவளை ஆறுதலாக அணைத்துக் கொள்கிறான் குட்டியப்பன். இதைப் போலவே இன்னொரு பாலியல் தொழிலாளியுடன் ஒரு பாடலை ஒலிக்க விட்டு நிர்வாணமாக நடனம் மட்டுமே ஆடினான் என்கிற தகவல் பிறகான காட்சிகளில் வருகிறது. இதை சம்பந்தப்பட்ட பாலியல் தொழிலாளியே நாணத்துடன் பிள்ளேச்சனிடம் சொல்கிறாள். 'ஆத்ம வித்யாலயமே' என்கிற  அந்தப் பாடல் மலையாளத் திரைப்படமான ஹரிச்சந்திராவில் இடம்பெற்றது. ஹரிச்சந்திரன் மயானத்தில் பாடும் பாடல். 'அந்த ராத்திரிய என்னால மறக்கவே முடியாது பிள்ளேச்சா' என்கிறாள் வெட்கத்துடன்.

பாலியல் தொழிலாளிகளுடன் உடல் ரீதியான உறவு கொள்வது அவன் நோக்கமல்ல என்பது இந்தச் சித்தரிப்புகளின் மூலமாக தெளிவாகவே நிறுவப்படுகிறது. அவனுடைய அகம் தேடுவது வேறு ஏதோவொன்றை. ஆனால் 'யானையின் மீது சாய்த்து ஒரு இளம் பெண்ணோடு உறவு கொள்ள வேண்டும்' என்கிற அவனுடைய தீர்மானம் முதலிலேயே தெளிவாக சொல்லப்பட்டிருந்தால் இதன் திரைக்கதை இன்னமும் வலுவாக அமைந்திருக்கலாம் என கருதுகிறேன். ஏனெனில் படம் முழுவதுமே இதற்கான 'ஏற்பாடுகள்' நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் முகம் முழுக்க  சோகம் கவ்வியிருக்கும் இளம் பெண்ணை பார்த்ததும், தன்னுடைய மகளின் நினைவு வந்து பிள்ளேச்சன் அமைதியில்லாமல் தவிப்பதைப் போல பார்வையாளர்களும் தவிக்க வேண்டும் என்கிற நோக்கில் இந்தப் பூடகத்தை இயக்குநர் கையாண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

***

படம் துவங்கும் போதே குட்டியப்பனின் விநோதமான மனஅமைப்பு பார்வையாளர்களுக்கு துல்லியமாக கடத்தப்பட்டு விடுகிறது. அலட்சியமான உடல்மொழியுடன் குதிரையின் மீது வரும் அவன் சொல்கிறான்.'இரவு நேரத்தில் குடித்து விட்டு போலீஸ்காரர் தொந்தரவு இல்லாமல் வருவதற்கு ஏற்ற வாகனம்  இதுதான்'. பிறகு காங்கிரஸ் தலைவர் பி.டி.சாக்கோவின் சிலையை நோக்கி 'சரிதானே சாக்கோ சார். தெரியுமா உங்களுக்கு.. பலாவில் உங்க கட்சி 26 குழுக்களா உடைஞ்சிருக்கு' என்கிறான். செல்கள் பிரிந்து பிரிந்து புது செல்கள் உருவாவது போல  காங்கிரஸின் குழு குணாதியசத்தை ஒரு வரியில் கிண்டலடிக்கும் வசனம் இது. படம் முழுவதும் போகிற போக்கில் இது போன்று பல நுட்பமான கிண்டல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு காட்சியில் பாலியல் தரகனான தாசப்பாப்பி 'மாட்டுக்கறி வாங்கினேன்" எனும் போது "ஏன் மாட்டுக்கறி'ன்னு உரக்கச் சொல்றே?' என்கிறான் குட்டியப்பன். சமகால அரசியல் கிண்டல் இது.

குட்டியப்பனாக பிஜூ மேனன் அபாரமாக நடித்திருக்கிறார். மலையாளத் திரையுலகில் கதாநாயனுக்கான வெற்றிகரமான உயரத்தை அடைய முடியாமல் போனாலும் இரண்டாம் நிலை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வெற்றி பெற்றவர். குட்டியப்பனின் அலட்சியமான உடல்மொழியையும் ஆனால் உள்ளுக்குள் பதற்றம் கொள்ளும் நடுக்கத்தையும் சரளமாகப் புளுகும் இயல்பையும் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். பிள்ளேச்சனாக விஜயராகவன். மனைவிக்கு பயந்து மிரளும் கோழைத்தனத்தையும் குட்டியப்பனின் விநோதங்களை தூர நின்று விரலால் தொட்டு நாக்கில் தடவும் ருசியையும் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். (தமிழில் இத்திரைப்படம் ரீமேக் ஆனால் முறையே ஓவர் ஆக்டிங் செய்யாத பார்த்திபனும் டெல்லி கணேஷூம் பொருத்தமாக இருப்பார்கள் என யூகிக்கிறேன்). பிள்ளேச்சனின் மனைவியாக நடித்திருக்கும் பார்வதி அற்புதமான நடிகை. காமிரா என்கிற தன் முன்னே உள்ளது என்கிற உணர்வே அல்லாதது போல மிக இயல்பாக நடித்துள்ளார். குட்டியப்பனால் 'லீலா' என பெயர் சூட்டப்படும் அப்பாவியான இளம்பெண் பாத்திரத்தில் பார்வதி நம்பியார் நன்றாக நடித்துள்ளார். 'உதிரிப்பூக்கள்' அஸ்வினியின் முகம் போன்று சோகத்தால் மூழ்கப்பட்ட கண்களும் முகமும் இந்தப் பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.

***

மலையாளத் திரையுலகின் புதிய அலை இயக்குநர்களில் ரஞ்சித் குறிப்பிடத்தகுந்தவர். இடையில் நிறைய சுமாரான திரைப்படங்களை எடுத்தவராக இருந்தாலும் 'கையொப்பு' 'ஞான்' 'பாலெரி மாணிக்கம்', 'இந்தியன் ருபி'  போன்ற அற்புதமான படங்களையும் எடுத்தவர். அந்த வரிசையில் 'லீலா'வும் நிச்சயம் இணையும்.

இந்த திரைப்படத்தின் மையமே குட்டியப்பனின் அக ரீதியான அலைச்சல்தான். ஒரு சராசரி நபரின் எவ்வகையான வாழ்வுமுறைக்கும் அவனுடைய உலகம் அடங்குவதில்லை. அவனுக்குள் ஏன் அப்படியொரு விநோதமான விருப்பம் உருவாகிறது என்பதற்கான விளக்கமோ காரணங்களோ திரைப்படத்திலும் சிறுகதையிலும் சுட்டிக்காட்டப்படவில்லை. அவனுடைய பின்னணி கூட சொல்லப்படுவதில்லை. பூர்வீக சொத்து தரும் செளகரியத்தினால் அந்த செல்வத்தை விசிறியடித்து தன் சலிப்புகளைத் தாண்டிச் செல்ல முயல்கிறான்.

ஒழுக்க மதிப்பீடுகளால்  கட்டியமைக்கப்பட்டுள்ள சமூகத்தின் பிம்பம் விளிம்பு நிலை மனிதர்களால் மீறப்பட்டுக் கொண்டேயிருப்பது இத்திரைப்படத்தில் பல இடங்களில் நுண்மையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தன் மகளையே கற்பழித்து கர்ப்பமாக்கி அவளை குட்டியப்பனுடன் விபச்சாரத்திற்காக தரும் தங்கப்பன் நாயருக்கு குடியும் பணமும் முதன்மையானதாக இருக்கிறது. பின்பு அதற்காக கண்ணீர் வடிக்கவும் செய்கிறான் தங்கப்பன். பாலியல் தொழிலாளியான உஷா தன் கணவருக்குத் தெரிந்தேதான் அந்த தொழிலில் ஈடுபடுகிறாள். குட்டியப்பனுடன் கழித்த விநோதமான இரவை நாணிக் கொண்டே பிள்ளேச்சனுடன் பகிர்கிறாள். தன் மகளையொத்த ஓர் இளம்பெண் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதை குற்றவுணர்வுடன் கவனித்தாலும் அதை தடுக்க முடியாத கையாலாதவனாக பிள்ளேச்சன் இருக்கிறார்.   நடுத்தரவர்க்க மனோபாவம் காரணமாக அவரால் நிகழ்த்த முடியாத சாகசங்களை குட்டியப்பன் செய்வதை கவனிக்கும் போது அவனின் அருகாமை அவருக்கு ஒரு பக்கம் ஆசுவாசமாகவும் ஆதாயமாகவும் இன்னோரு பக்கம் பயத்தையும் குற்றவுணர்வையும் ஏற்படுத்துகிறது. பார்க்கும் எந்தவொரு பெண்ணையும் தன்னுடைய தொழிலுக்கேற்ற உருப்படியாக கவனிக்கும் பாலியல் தரகன் தாசப்பாப்பி.

இது போன்ற பல நுண்தகவல்கள் படம் முழுவதும் எவ்வித நாடகீயத்தனமுமின்றி மிக இயல்பாக சொல்லப்படுகின்றன. தன் வாழ்க்கையை எப்படியாவது வாழ்ந்து முடிப்பதுதான் ஒவ்வொரு எளிய மனிதனுக்குள்ள சவால். ஆகவே நாகரிக உலகம் ஏற்படுத்தியிருக்கும் விழுமியங்களை அவன் உடைத்துக் கொண்டே முன்னகர்கிறான். புதுமைப்பித்தனின் மொழியில் சொன்னால் இதுதான் 'பொன்னகரம்'. இந்த சவால்களின்  இடையில் ஆணாதிக்கப்போக்கினால் லீலாக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அதை நுட்பமாக உணர்த்த முயலும் சித்திரம் இது.



(காட்சிப்பிழை இதழில் பிரசுரமானது)

suresh kannan

No comments: