ஒலிம்பிக், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி போன்ற பெரிய அளவு விளையாட்டு திருவிழாக்கள் நிகழும் போதெல்லாம் இந்திய பொதுச் சமூகத்திடமிருந்து உடனடியாகத் தோன்றி விடும் வெறிகளுள் ஒன்று தேசப்பற்று. அதன் கூடவே கசப்பும் எரிச்சலுமாக வெளிப்படும் எதிர்வினைகளில் ஒன்று இதுவாக இருக்கும். 'இத்தனை பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டிலிருந்து ஒரு தங்கம் வாங்க முடியலையே?". விளையாட்டுத் துறையில் உள்ள அரசியல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு சமூகக் காரணிகளை இந்த புகார்தாரர்கள் மேலோட்டமாகவாவது அறிந்திருப்பார்கள் என்றாலும் தேசப்பற்று ஆவேசத்தின் காரணமாக இந்த முணுமுணுப்புகளுக்கு குறைவிருக்காது.
நாம் நிச்சயம் தாழ்வு மனப்பான்மையோ, சலிப்போ கொள்ளத் தேவையேயில்லை. எந்தவொரு துறையிலும் உலகத்தின் சாதனையாளர்களுக்கு நிகரான திறமையுள்ளவர்கள் இங்கும் நிச்சயமாக இருப்பார்கள். அவ்வாறான திறமைசாலிகளை கண்டெடுத்து எவ்வித அரசியலும் கலக்காமல் அவர்களை முறையாக ஊக்குவித்தால் நம்மாலும் அத்தகைய மைல்கல்களை எட்ட முடியும். ஆனால் இந்தியாவில் அங்கிங்கெனாபடி நிறைந்திருக்கும் சாதி மத அபிமானம், துவேஷம், ஊழல், அரசியல் போன்ற தடைக்கற்கள் இந்தச் சாதனைகளை நோக்கி நகர விடாது. இவற்றைக் களையாமல் நாம் உலகச் சாதனைகளைப் பற்றி பேசுவதில், புகார் செய்வதில் அர்த்தமில்லை.
எம்.எஸ்.தோனி என்கிற கிரிக்கெட் சாதனையாளரின் வாழ்க்கை வரலாற்றின் மீது அமைந்திருக்கும் திரைப்படத்தைப் பார்த்தால் இந்தக் கருத்து மேலதிகமாக உறுதிப்படுகிறது. கிரிக்கெட் என்பது ஒரு மதத்திற்கு இணையான வெறியையும் அபிமானத்தையும் இந்தியாவில் கொண்டிருப்பது நமக்குத் தெரியும். எனவே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கும் நோக்கம், சாதனையாளரின் வரலாற்றை விவரிப்பதையும் தாண்டி மக்களின் அபிமானத்தை வணிகமாக்கிக் கொள்வதுதான் என்பது வெளிப்படை. அடுத்து சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையும் திரைப்படமாக வரப்போவதாக சொல்கிறார்கள்.
ஆனால் தோனியின் வாழ்க்கை தொடர்பான நிகழ்வுகள், காட்சிகளாக விரியும் இந்தப் பயணத்திலேயே இந்த நுண்ணரசியல் விஷயங்களும் தன்னிச்சையான உள்ளுறையாக பதிவாகியிருப்பதை உணர முடிகிறது.
பொதுவாகவே இங்கு திறமையாளர்களை தேடிக் கண்டுணரும் கலாசாரமோ, அவர்களை முறையாக பராமரிக்கும் வழக்கமோ இல்லை. பொதுவான நிலைமையே இப்படியென்றால் தாழ்த்தப்பட்ட, அடித்தட்டு சமூகத்தில் உள்ள திறமையாளர்களை எவரும் சீந்த மாட்டார்கள் என்பதே நிதர்சனம். தீராத ஆர்வமுடையவர்கள் அவர்களே இந்தச் சமூகத்தின் ஒவ்வொரு தடைக்கற்களையும் முட்டி முட்டி முன்னேற வேண்டியிருக்கும். அப்படி முன்னேறும் பயணத்திலும் கூட அவர்களின் திறமை மூடப்பட்டு அவர்களை மறைக்கும் விதமாக பல்வேறு கீழ்மை அரசியல்களும் நிகழும். இவர்கள் முட்டி மோதி சற்று அடையாளம் பெற்று விட்ட பிறகு ஊடகங்களும் பெருவணிகமும் இவர்களை சுயநலம் காரணமாக அள்ளி அணைத்துக் கொள்ளும். இவர்களின் புகழும் திறமையும் சற்று மங்கினால் உடனே உதறித்தள்ள இந்த வணிகக்கூட்டம் தயங்காது.
***
தோனி என்கிற கிரிக்கெட் சாதனையாளன் எவ்வாறு தன் பயணத்தின் உயரத்தை அடைகிறான்? அது திட்டமிட்ட பயணமா அல்லது தற்செயல்களால் அமைந்ததா?
இளம் வயது தோனிக்கு கால்பந்து விளையாட்டின் மீதுதான் விருப்பம் இருக்கிறது. அதில் திறமையான கோல்கீப்பராக இருக்கிறான். ஆனால் அவன் படிக்கும் பள்ளியில் உள்ள கிரிக்கெட் குழுவில் விக்கெட் கீப்பராக இருக்கும் மாணவனை, படிப்பு பாழ்படக்கூடாது என்று அவனது தாய் அழைத்துச் சென்று விடுகிறாள். எனவே அந்த ஆசிரியர், கோல் கீப்பராக இருக்கும் இவனை வலுக்கட்டாயமாக அழைத்து கிரிக்கெட்டில் போடுகிறார். ஆக. ஒருவனின் கனவும் பயணமும் அமைவது அவனது இயல்பான ஆர்வத்தினால் அல்ல. தற்செயல்களே தீர்மானிக்கின்றன.
படத்தின் துவக்கத்திலேயே இது தொடர்பானதொரு காட்சி வருகிறது. தோனியின் தந்தை பிரசவ வார்டில் காத்திருக்கிறார். செவிலி வெளியே வந்து அவருக்கு மகன் பிறந்திருப்பதாக கூறுகிறாள். மகிழ்ச்சியடையும் தந்தையை பிறகு வரும் மருத்துவர் குழப்புகிறார். 'உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது'. சிறிய விசாரணைக்குப் பிறகு தெளிவாகிறது. ஆண் குழந்தை இவருக்கு கிடைக்காமல், ஏற்கெனவே மூன்று ஆண் பிள்ளைகள் உள்ள இன்னொரு குடும்பத்திற்கு தவறுதலாக கூடுதல் ஆண் பிள்ளையாக தோனி சென்றிருந்தால் என்னவாகியிருக்கும் என்கிற சுவாரசியமான கேள்வியை இந்தக் காட்சி எழுப்புகிறது. நம்முடைய மருத்துவமனைகள் ஒருவரின் தலைவிதியையே மாற்றி எழுதி விடும் வல்லமையுடன் இயங்குகின்றன.
தன்னுடைய அதிரடிகளின் மூலம் கிரிக்கெட் போட்டிகளில் கவனஈர்ப்பு ஏற்படுத்தும் தோனிக்கு ரயில்வே பணி கிடைக்கிறது. எங்கே இவனது எதிர்காலம் விளையாட்டில் தொலைந்து விடுமோ என்று பயந்து கொண்டிருக்கும் அவனது நடுத்தர வர்க்க தந்தை அப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடுகிறார். பாதுகாப்பான குமாஸ்தா வேலைகளைத் தவிர வேறு பிற துறைகளை நடுத்தரவர்க்கம் அலட்சியப்படுத்துகிறது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நிலைமை இங்கு அப்படித்தான் இருக்கிறது. ஒருவன் தனக்கு விருப்பமான துறையில் தன் கனவுப்பயணத்தை தொடர நினைத்தால் அதற்கான நிச்சயமான எதிர்காலம் இங்கு இல்லை. தோனியின் தந்தை அவனை அரைமனதுடன் கிரிக்கெட் விளையாட சம்மதிக்கிறார்தான் என்றாலும் அவர் அனுமதிக்காமல் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? இன்னொரு தற்செயல்.
உறுதியான, தெளிவான திட்டமிடலும் ஆர்வமும் அல்ல, தற்செயல்களே பெரும்பாலும் இங்கு சாதனைகளின் பயணத்தை தீர்மானிக்கின்றன.
***
இத்திரைப்படத்தில் வரும் இரண்டு காட்சிக் கோர்வைகள் எனக்குப் பிடித்திருந்தன. உத்வேகமும் நெகிழ்வும் அளித்தன. ஒன்று, தோனி தனது குழப்பத்திலிருந்து விலகி எதிர்காலத்தைப் பற்றி உறுதியுடன் தீர்மானிக்கும் இடைவேளை காட்சி. ரயில்வேயில் டிக்கெட் கலெக்ட்டராக பணி கிடைத்தது அவனுடைய தந்தைக்கு நிம்மதி என்றாலும் உள்ளூற இவனுக்கு சந்தோஷமில்லை. கிரிக்கெட் கனவுகளுடன் அரசாங்க இயந்திரத்தில் சிக்கி தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறான். அவ்வப்போது பயிற்சிக்கு சென்று விடுவதால் இவன் மீது விசாரணையொன்று வரவிருப்பதாக இவனுக்கு ஆதரவாக இருக்கும் உயர்அதிகாரி எச்சரிக்கிறார். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுகிறார். மனஉளைச்சலில் இருக்கும் இவனுக்கு எதுவுமே காதில் விழுவதில்லை.
குழப்பமான சிந்தனையுடன் ரயில்வே நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான். கனவுலகிலிருந்து வருவதைப் போல ஒரு ரயில் அவனை நோக்கி வருகிறது. அவனுடைய ஊருக்குச் செல்லும் வண்டியாயிருக்கும் அது. பெரிய மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர் கூட்டம் அவனுடைய பெயரைச் சொல்லி கூக்குரலிடுவது போன்ற ஒலிகள் அவனுடைய மனக்காதில் விழுகின்றன. சட்டென்று உறுதியான தீர்மானத்துடன் அந்த ரயிலில் ஏறுகிறான். அவன் தன் பணியிலிருந்து விலகி விட்டான் என்று தெரிகிறது. அப்படி தீர்மானமான முடிவெடுக்காமல் அவன் ரயில்வேயில் பணியாற்றிக் கொண்டே சாத்தியமான கிரிக்கெட் போட்டிகள் மட்டும் விளையாடிக் கொண்டிருந்தால் என்னவாகியிருக்கும்? மீண்டும் ஒரு தற்செயல்.
இன்னொரு காட்சி. தோனி திறமையானவனாக இருந்தாலும் இந்திய அணியில் தேர்வாவது சிரமமானதாக இருக்கிறது. கடுமையான போட்டி. தவிர வழக்கமான அரசியலும். சோர்வும் எரிச்சலும் இருந்தாலும் தன்னுடைய ஊக்கத்தை அவன் கைவிடுவதில்லை. ஒருநாள் அவன் பேட்மிட்டன் ஆடிக் கொண்டிருக்கும் போது நண்பர்கள் வந்து அந்த சந்தோஷமான விஷயத்தைச் சொல்கிறார்கள். ஆம். அவன் இந்திய அணியில் விளையாட தேர்வாகியிருக்கிறான். அவர்களின் கூச்சல் தோனியின் காதில் விழுந்தாலும் அவனுடைய கவனம் கலைவதில்லை. தன்னுடைய ஆட்டத்தை முடிக்கும் வரையில் நிறுத்துவதில்லை. அதிலேயே கவனமாக இருக்கிறான். மகிழ்ச்சியோ, துயரமோ, எத்தனை கவனக்கலைப்புகள் வந்தாலும் உணர்ச்சிவசப்படாமல் தம்முடைய அப்போதைய பணியில் ஒருமுகப்பட்ட மனதுடன் கவனமாக இருக்கும் அந்த மனோபாவமே, தோனியை அணித்தலைவன் என்கிற நிலைக்கு உயர்த்திச் சென்றிருக்கும் என்பதை உணர முடிகிறது.
***
மத்திய அரசாலும் இன்னபிற வளர்ந்த மாநிலங்களாலும் கவனிக்கப்படாத, புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றின் நகரத்திலிருந்து தன்னுடைய கடுமையான உழைப்பால் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான தலைவனாக மாறிய இந்த சரித்திரம் ஏறத்தாழ சுவாரசியமாகவே சொல்லப்பட்டிருந்தாலும் ஒரு biographical drama-விற்கு மூன்று மணி நேரம் என்பது அதிகம். தோனியின் தனிப்பட்ட காதல் வாழ்க்கை சம்பவங்கள் சாவகாசமாக விவரிக்கப்பட்டிருந்ததை சற்று சுருக்கியிருக்கலாம். மைதானங்களில் பதிவாக்கப்பட்ட உண்மையான காட்சித்துணுக்குகள் மிகப் பொருத்தமான தருணங்களில் உறுத்தாதவாறு இத்திரைப்படத்தில் இணைக்கப்பட்டிருக்கும் நுட்பம் பாராட்டப்பட வேண்டியது.
The Untold Story என்கிற படத்தின் தலைப்பிற்கேற்ப படத்தில் எதுவுமே இல்லை. எல்லாமே பொதுவெளியில் உதிர்ந்த தகவல்கள்தான். மாறாக பல சம்பவங்கள் விடுபட்டிருப்பது இந்த தலைப்பை தலைகீழ் நகைச்சுவையாக்குகிறது. தோனி, இந்திய அணியின் தலைவனானது, இதர வீரர்களுடனான இணக்கமும் மோதலும், அதிலிருந்த அரசியலை எதிர்கொண்டது, கிரிக்கெட் எனும் ஆட்டத்தை சுற்றுலா பொருட்காட்சி மாதிரி ஆக்கிய டி20 ஆட்டங்கள் போன்வற்றின் தீற்றல்கள் இதில் விடுபட்டிருந்தன. நடைமுறைச் சிக்கல்கள், சங்கடங்கள் கருதி சில விஷயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
Sushant Singh Rajput எனக்குப் பிடித்தமான நடிகர்களில் ஒருவர். தோனியாக நடிக்க இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது மிகவும் பொருத்தமானது. ஏறத்தாழ தோற்ற ஒற்றுமையிலும் மட்டுமல்ல, மைதானங்களில் தோனி வெளிப்படுத்தும் உடல்மொழியை கச்சிதமாக பின்பற்றியிருந்தார். தோனி ஒருவேளை அடைந்திருக்கக்கூடிய அகச்சிக்கல்களை, சங்கடங்களை தனது அபாரமான முகபாவங்களால் நம்மை உணரச் செய்திருந்தார். யுவராஜ் மாதிரியே இருந்தவரையும் casting செய்த மெனக்கெடல் சிறப்பு. அனில்கபூர், குமுத் மிஸ்ரா, ராஜேஷ் சர்மா போன்ற விற்பன்னர்கள் தங்களின் அற்புதமான பங்களிப்பை அளித்திருந்தார்கள்.
இதன் திரைக்கதைக்காகவும் நம்பகத்தன்மைக்காகவும் இயக்குநர் நீரஜ் பாண்டேவின் குழு மேற்கொண்டிருந்த உழைப்பு நன்றாகவே தெரிகிறது. ஆனால் இதை ஒரு சம்பிரதாயமான வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக ஆக்கி விட்டிருந்ததுதான் பரிதாபம். வெகுசன பார்வையாளர்களுக்கான பண்டமாக இதை ஆக்க மாற்ற முயன்றதில் நிகழ்ந்த விபத்தாக இருந்திருக்கலாம்.
என்றாலும் இந்தியா போன்ற ஊழல் மலிந்திருக்கும் பிரதேசத்திலிருந்து சாதனையாளர்கள் உருவாவதும் வெளியே வருவதும் பெரும்பாலும் அவர்களின் சுயாதீன முயற்சிகளாலும் தற்செயல்களாலும் மட்டுமே நிகழ்கிறது என்பதை தன்னிச்சையான உள்ளுறையாக விவரித்த விஷயத்திற்காக இத்திரைப்படம் ஒரு முக்கியமான பதிவாக இருக்கும்.

(காட்சிப்பிழை இதழில் பிரசுரமானது)
suresh kannan
1 comment:
Super. ...
Post a Comment