Friday, August 17, 2007

உயிர் எழுத்து - இதழ் அறிமுகம்

சி.சு.செல்லப்பா ஆரம்பித்த 'எழுத்து' முதல் கிருஷ்ணமூர்த்தி, ஞானக்கூத்தன் உள்ளிட்டோர் நிறுவிய 'கசடதபற' முதலான இதழ்கள் நவீன தமிழிலக்கிய பரப்பில் ஒரு இயக்கமாகவே தீவிரமாக இயங்கிய காலகட்டங்கள் நீ¡த்துப் போய், உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் பொருளாதார நோக்கம் கொண்ட, வாசகனின் மூளையை கவர்ச்சியாலும் பரபரப்பாலும் மழுங்கடிக்கிற பத்திரிகைகளே அச்சு ஊடகத்தின் பிரதான சக்தியாக விளங்குகின்றன. இன்றைய தேதியில் 'வெற்றி' என்கிற சொல்லே முக்கியம். அதை அடைகிற பாதைகளைப் பற்றி சமூகத்திற்கு அக்கறையில்லை. வெற்றியின் படிக்கட்டுகள் பெரும்பாலும் பணக்கட்டுகளினாலேயே அமைந்துள்ளன.

போகட்டும். 'சிற்றிதழ்' என்றாலே கெட்ட வார்த்தையாகி விட்ட இன்றைய இருண்மையான உலகில் எங்கோ சில நம்பிக்கைத் தெறிப்புகளும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. எப்படி பொருளாதார நோக்கமின்றி, சமூகப் பொறுப்புடன் இயங்குகிற சில பைத்தியங்கள் இருக்கின்றனரோ, அதைப் போல. உயிர்மை, காலச்சுவடு போன்ற இடைநிலை இதழ்களின் வரிசையில் இன்னொரு வரவாக மலர்ந்திருக்கிறது 'உயிர் எழுத்து'. (ஆசிரியர்: சுதீர் செந்தில்)

Photo Sharing and Video Hosting at Photobucket



.. குரோதமும், அதிகார வேட்கையும், பொருளாசைகளும் நிரம்பி வழியும் ஒரு சூழலில் மக்களுக்கான இலக்கிய வெளியைச் செப்பனிடும் பணியில் படைப்பாளிளும் வாசகர்களும் இணைந்து கொள்ள அழைக்கும் தலையங்கத்தோடு முதல் இதழ், ஜூலை 2007-ல் ஆரம்பித்துள்ளது.

சிறுகதைகளின் வரிசையில், லதா ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், ஆதவன் தீட்சண்யா என்று சிற்றிதழ்களில் சம்பிரதாயமாக காணப்படுகிற பெயர்களோடு சு.தமிழ்ச்செல்வி போன்ற புதிய பெயர்களும் காணப்படுகின்றன. (இந்த கிளிஷே உடைக்கப்பட்டு புதிய, திறமையான எழுத்தாளர்களை சிற்றிதழ்கள் அடையாளம் காட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன்).

நாட்டார் கதையொன்றின் இடைச் செருகலுடன், பச்சைக்கிளி என்கிற பேதையின் கதை இயல்பான மொழியால் சொல்லப்பட்டிருக்கிறது, சு.தமிழ்ச்செல்வியின் 'இருசி' சிறுகதை. 'அங்கும் இங்கும்' என்கிற யுவனின் சிறுகதை, வாசிப்பு சுவாரசியத்தோடு இருந்தாலும், பூடகமான விஷயத்தோடு கதையை நகர்த்தி எங்கோ ஒரு புள்ளியில் இணைக்கும் அவரின் வழக்கமான பாணியை கைவிட நேரம் வந்துவிட்டதோ என்று தோன்ற வைக்கிறது.

பிரபஞ்சனின் 'புனல்வழிப்படும்' என்கிற சிறுகதை சிறப்பாக அமைந்துள்ளது. இன்றைய சாமர்த்தியமான லெளதீக வாழ்க்கையில் ஒரு கலைஞன் பிழைப்புக்காக படும் அல்லல் எள்ளலுடன் கதையில் இறைந்துள்ளது. எனக்குப் பிடித்தமான ஒரு பத்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

....வேலை என்கிற பேயை வசக்கித்தான் வாழ வேண்டி இருக்கிறது. ஏனெனில் வாழ்வதற்குப் பணம் என்ற பூதம் தேவைப்படுகிறது. உணவு, உறையுள், நாளாந்திரச் செலவுகளுக்குப் பணம் தேவை. அந்தப் பணம் அயோக்கியர்களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. அயோக்கியர்களிடம் அவர்களின் ஊழியர்கள் எனக் கையை ஏந்த வேண்டி இருக்கிறது. அவர்களைப் பிரபுகளாக்கி, நம்மை நாம் பிச்சைக்காரர்களாக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது. எந்த அறமும் இல்லாத வீங்கிப் பொத்து சீழ்வடியும் பணக் கைகளில் இருந்து வழியும் பணத்தைச் சம்பளம் என்று பெறுகையில் உயிர் பதறுகிறது. வேலை என்பதுதான் என்ன. அழகிய காலையை இழப்பது; வைகறைக் குளிரை துறப்பது; குளிப்பது எனும் அழகிய அனுபவம் மறந்து அவசரத்தைப் பூசிக் கழுவுவது; படித்தே தீர வேண்டிய உலக உன்னதங்களைத் தன்னில் போடுவது; காலை நேரத்து உலகை, பத்து மணி உலகை, மதிய நேரத்துத் தெருவை, வெயில் வற்றி மாலை முளைக்கையைக் கண்கொண்டு பார்க்க இயலா மூட¨ம்; இரவு எனும் விருந்தைப் புத்துணர்ச்சியோடு எதிர்கொள்ளாத மந்த புத்தியினராதல்; விஸ்வத்தின் பேரண்டத்தின் நாமே அச்சு என்கிற போதம் உணரா பேதமை. மெளடீகத்தின் மொத்தத் திருவுருவாக உன்னை நீ விற்றுக் கொள். முப்பது நாள்கள் முடியும் போது அதன் பலனை நீ பெறுவாய். .....

ஆதவன் தீட்சண்யாவின் 'காலத்தைத் தைப்பவனின் கிழிசில்' என்கிற சிறுகதை, நவீன வரலாற்று புனைவாளனை பகடி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. 'ஐந்து பாகங்களாய் எழுத வேண்டிய மனேகர்ராவ் வாழ்க்கைக்கான முன்குறிப்புகள்' என்கிற வரிகளுடன் ஆரம்பிக்கிற இந்தச் சிறுகதை, தையற்கலைஞன் பரம்பரையொன்றை நூற்றாண்டுகளாய் தொடர்கிறது.

()

குடிப்பழக்கம் சார்ந்த நாஞ்சில் நாடனின் மீள்பிரசுரமான கட்டுரையை வாசகர்கள் தவறவிடாமல் கட்டாயம் வாசிக்க வேண்டுமென்கிற பரிந்துரையை முன்வைக்கின்றேன். குடிப்பழக்கத்தை பொதுப்புத்தி சார்ந்த பார்வையிலிருந்து விலகி, முற்றிலும் கட்டுடைக்கிற பார்வையோடு யதார்த்தமான நடையில் எழுதியுள்ளார் நாஞ்சில்நாடன். (.... குடி என்பது அறம் சார்ந்த பிரச்சினையாகப் பெரும்பாலான இடங்களில் பார்க்கப்படுகிறது. அதன் அபத்தத்தை உணர்ந்து பேசுகிறேன். குடி, எனது பார்வையில் ஒரு அறம் சார்ந்த பிரச்சினை அல்ல....)

'இலக்கிய உரையாடல்கள்' என்கிற நூலை தனக்கேயுரிய ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான மொழியில் விமர்சித்திருக்கிறார் பாவண்ணன்.

ந.முருகேச பாண்டியன் எழுதியுள்ள கட்டுரை, (புத்தக அரசியல்: பன்முகப் பார்வை), ஆசிரியர் பணித்ததிற்காக உல்லாசப் பயணக் கட்டுரை எழுதிய மாணவனின் நடையையொற்றி அமைந்திருப்பது துரதிர்ஷ்டமே. தெருக்கூத்து கலைஞர்களின் சினிமாவில் பங்கேற்பதில் உள்ள மோகத்தை உளவியல் பின்னணியுடன் விவரிக்கிறது, மு.ராமசாமியின் 'வானம் பார்க்கும் பூமியாய்' என்கிற கட்டுரை. ச.முருகபூபதியின் 'செம்மூதாய்' என்கிற நாடகத்துடன், என்னை அவசரமாய் பக்கங்களைப் புரட்ட வைக்கிற கவிதைகளும் பிரசுரமாகியுள்ளன.

()

அடுத்த இதழ் எப்போது வரும் என்று தோன்ற வைத்த 'உயிர் எழுத்து', அற்பாயுளில் மறைந்து போன பெரும்பான்மையான சிற்றிதழ்களைப் போலல்லாமல் தொடர்ந்து கனமான உள்ளடக்கங்களுடன் வெளிவர வேண்டுமென்கிற விருப்பம் என்னுள் எழுகிறது. தொடர்புக்கு: 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி-1. செல்: 99427 64229. மின்னஞ்சல்: uyirezhutthu@gmail.com தனி இதழின் விலை ரூ.20/-

No comments: