கமல் திரைப்படங்களிலேயே ஆகச்சிறந்த மொக்கை - ம.அ.. என்ற ரீதியில் விமர்சனம் வைக்கப்பட்ட போது கூட நான் முழு நம்பிக்கையையும் இழக்காமலிருந்தேன். ஹேராம், விருமாண்டி போன்ற படங்களில் அபாரமான திரைக்கதையை எழுதியிருந்த கமல் இதற்கும் திரைக்கதை எழுதியிருந்ததுதான் அதற்குக் காரணம். சரி, ஒருவேளை கமலே கோக்குமாக்காக நடந்தால் கூட, மசாலாவை சிறப்பாகத் தடவி எப்படி காசைப் பிடுங்குவது என்கிற சூட்சுமத்தை சிறப்பாக தெரிந்து வைத்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் இதில் இருந்ததால் அவர் ஸ்டியரங்கை சரியாக பிடித்து திருப்பி படத்தை குறைந்தது அடிப்படை சுவாரசியமாகவாவது உருவாக்கியிருப்பார் என்றும் நம்பினேன். (இந்த ப்ராக்ஜக்டில் கேஎஸ்ஆர் இருக்கிறாரா என்கிற சந்தேகமே இப்போது வந்து விட்டது.)
இந்தப் படத்தை உருவாக்கின திரை ஜாம்பவான்களின் மீது அடிப்படையான நம்பிக்கையை வைத்து துணிந்து படத்திற்குச் சென்றிருந்தால், சொல்லி வைத்தது மாதிரி அத்தனை பேருமே நிர்வாண பின்புறங்களை அசைத்து 'வெவ்வெ' காட்டியிருக்கிறார்கள். இந்தப் படம் 'படுமொக்கை' என்று எழுதினால் கூட அது மிகப்பெரிய under statement ஆக இருக்கும். இதைப் பற்றி எழுதுவது கூட நேர விரயம் என்றாலும் கூட என்னைப் போலவே கொஞ்ச நஞ்ச நம்பிக்கையோடு படத்திற்குச் செல்ல யோசித்திருக்கும் அப்பாவிகளை தடுத்து நிறுத்துவதே இந்தப் பதிவின் நோக்கம்.
நிர்வாணமாகத் திரியும் ஊரில் கோவணம் கட்டிய பைத்தியக்காரனாக, அபத்தமான தமிழ்ச்சினிமாவில் பல தரமான முன்னுதாரணங்களை உருவாக்கின கமல் நிச்சயம் கொம்பன்தான். மறுக்கவில்லை. ஆனால் இந்தக் கொம்பனே பாத்ரூம் பாசியில் வழுக்கி மல்லாக்க விழுந்திருக்கும் பரிதாபம்தான் சகிக்கவில்லை. (ஹேராம் மாதிரி வணிகரீதியான தோல்வியில் சறுக்கி விழுந்த போது கூட அந்த வழுக்கலை பொருட்படுத்தத் தேவையிருந்திருக்காத ஒரு கம்பீரம் இருந்தது). உள்ளடக்கம் சுவாரசியம் இல்லையெனில் ரஜினி படத்தையே தூக்கியெறியக் கூடிய புத்திசாலியான ரசிகர்கள் இருக்கும் சமகால சூழலில் கமல் இத்தனை அசமஞ்சமாகவா இருப்பது?
எவ்வித வணிக குதர்க்கங்களுமில்லாமல் இதை ஒரு மென்மையான டிராமாவாக ஆக்கியிருந்தால் கூட இந்த முயற்சியை பாராட்டியிருக்கலாம். அதற்கான சொற்ப தடயங்கள் இதில் இருந்தன. ஆனால் ஸ்காட்லாண்ட் காவல்துறையினராலேயே கண்டுபிடிக்க முடியாத தீவிரவாதிகளை விஜய்காந்த் துரத்தி துரத்தி உதைக்கும் அபத்தம் போல் சண்டைக்காட்சியோடு துவங்கி. படம் முடிவதற்கு முன்னால் யாரோ 'இது காமெடிப் படமாயிற்றே' என்று நினைவுப்படுத்தினாற் போல் அபத்தக் காட்சிகளால் நிரப்பி... போங்கப்பா.
மாதவன் அடுத்த முறை கமல் கூப்பிட்டவுடனே கண்ணீர் மல்க வந்து நிற்காமல், என்னவிதமான பாத்திரம் என்பதை கறாராக பேசிக் கொள்வது நல்லது. இல்லையெனில் இதில் அதிக எரிச்சலையூட்டிய அந்த மலையாளி (குரூப்) துணைநடிக பாத்திரத்தை அடுத்த படத்தில் கமல் அவருக்கு தந்துவிடுவார். ஜாக்கிரதை. சங்கீதா இன்னொரு மகா எரிச்சல். ஊர்வசி மாத்திரம் அதிகுண்டாக இல்லாமலிரு்நதால் அவர்தான் இந்த துடுக்கான பாத்திரத்தில் நடித்து வழக்கம் போலவே எரிச்சலூட்டியிருப்பார்.
இந்த மகா அபத்தத்தை ரெட்ஒன்னில் எடுத்தாலென்ன, செல்போனில் எடுத்தாலென்ன, பாவம் மனுஷ் நந்தன். இப்படி பல பேர்களின் உழைப்பு வியர்த்தமாகியிருக்கிறது. இந்தப் படத்தின் இன்னொரு மகா எரிச்சல் ஒலிப்பதிவு. என்ன உரையாடப்படுகிறது என்பதே பல இடங்களில் கேட்கவில்லை. லைவ் சவுண்ட் என்கிற நுட்பத்தின் மீது குறை சொல்ல முடியாது .விருமாண்டியில் கூட இந்த நுட்பம்தான் பயன்படுத்தப்பட்டது. ஏசி போட்டு பாப்கார்னுக்கு துட்டு பிடுங்கும் நம் அரங்கங்கள் இதற்கான அதிநவீன நுட்ப வசதிகளுக்கு ஈடு கொடுக்கவில்லையா, இந்தப்படத்தின் ஒலிப்பதிவு மோசமா என்பது தெரியவில்லை.
கமல் மாதிரி இன்னும் சிலர் அதிபயங்கரமாக திட்டமிட்டு இது போல் பத்திருபது அம்புகளை தயாரித்தால் தற்போது தமிழ்த்திரையை ஆக்ரமித்திருக்கும் கழகவாரிசுகளை சுலபமாக விரட்டிவிடலாம். அந்தவகையில் இந்தப்படம் தந்திருக்கும் ஒரே ஆறுதல் அது மட்டுமே.
suresh kannan

