Monday, December 06, 2010

அம்பேத்கர்: அறிவுஜீவி அரசியல்

"இந்தியா ஏற்றத் தாழ்வுகளின் தாயகம். பல தளங்கள் உள்ள கட்டிடம் போன்றது. அதற்கு நுழைவாயில் கிடையாது. படிக்கட்டுகளும் இல்லை. அந்தந்த தளத்தில் பிறந்தவன் சாகும் வரை வெளியேற முடியாமல் அந்த தளத்திலேயே இருக்க வேண்டியதுதான்."

- அம்பேத்கர், பத்திரிகை தலையங்கத்தில்

 'தசாவதாரம்' திரைப்படத்தில் ஒரு காட்சி. மணல் கொள்ளை  அரசியல்வாதியிடம் பர்மிட்டை காண்பிக்கச் சொல்லி ஒரு தலித் அமைப்பு கேள்வி எழுப்பும். "உங்கள்ல படிச்சவங்க யாருடா இருக்கா?" என்பார் அரசியல்வாதி. 'அதெல்லாம் அந்தக் காலம். இப்பம் எங்கள்ல படிக்காதவங்க ஒருத்தனையாவது காமி பாப்போம்" என்று பதிலடி கொடுப்பார்கள். 

இவ்வாறான சூழல் ஏற்படுவதற்கு சுதந்திர இந்தியாவிற்கு முன்னரே அடித்தளம் போட்ட அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் டாக்டர்.பாபா சாஹேப் அம்பேத்கர். இந்தியாவின் தாழ்ததப்பட்ட மக்களின் முதல் பட்டதாரி வழக்கறிஞர்.  வாழ்வின் பெரும்பான்மை முழுவதையும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் சமூக விடுதலைக்காகவும்  சிந்தித்தவர்; போராடினவர். தீண்டாமை ஒரு சமூகக் குற்றம் என்று சட்டம் இயற்றப்பட்டதிற்கான காரணகர்த்தா.

அம்பேத்கர் குறித்து NFDC தயாரித்து 1998-ல் உருவாக்கப்பட்டு 2000-ல் வெளியான திரைப்படமொன்று தமிழ் மொழி மாற்றத்துடன் சமீபத்தில் வெளியாகியிரு்ககிறது. 1998-ன் சிறந்தபடத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. அம்பேத்கராக நடித்த மம்முட்டிக்கு சிறந்த நடிகர் விருதும் நிதின் சந்திரகாந்த் தேசாய்க்கு சிறந்த ஆர்ட் டைரக்டர் விருதும் கிடைத்தன. காந்தி படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பு பிரிவில் ஆஸ்கர் விருது பெற்ற பானு அதையா இதில் பணியாற்றியுள்ளார்.

ஒரு திரைப்படத்தின் மூலம் இத்தனை பெரிய ஆளுமையின் முழு பரிமாணத்தை அறிந்து கொள்ள முடியாதென்றாலும், அறியாமலே இருப்பதற்கு பதிலாக இதிலிருந்து துவங்குவதற்காவது இந்தத் திரைப்படம் உதவும்.  மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒர் அமைப்பு  உருவாக்கின படத்தைக் காண மக்களே போராட வேண்டிய அவலமான சூழல். பத்து வருடங்களுக்கு முன்பாகவே உருவான திரைப்படத்தை சமீபத்தில்தான் காணும் வாய்ப்பு தமிழக மக்களுக்கு, அதுவும் சொற்ப திரையரங்குளில், காலை நேரத்தில். சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி.

கோடிக்கணக்கான ரூபாயில் தயாராகும் வணிகக் குப்பை திரைப்படங்கள் நிமிடத்திற்கொரு முறை விஷ அம்பாக நம் மூளைகளில் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அபத்தமான சூழலில் அரசே முன்வந்து வரிவிலக்கு அளித்து மக்களிடம் இதை பரவலாகக் கொண்டு சேர்த்திருக்க வேண்டும். அதுசரி.  'பெண் சிங்கத்திற்கும்' 'மானாட மயிலாட' போன்றவைகளின் முன்னால் அம்பேத்கர் அப்படியொன்றும் அவசியமானவர் இல்லைதானே?

சரி. இப்போது அம்பேத்கர் திரைப்படத்திற்கு வருவோம்.

வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன். சுமார் பத்து வருடத்திற்கு முன்பு உருவான திரைப்படத்தை இப்போது பார்ப்பதில் சில தயக்கங்கள் எனக்கு இருந்தன. ஒளிப்பதிவு எப்போது இருக்குமோ, அது நன்றாக இருந்தாலும் பிரிணட் எப்படி இருக்குமோ, முக்கியமாக தேசத் தலைவர்களின் ஆளுமைகளின் வாழ்க்கை குறித்து உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் பல எனக்கு அதிருப்தியையே தந்திருக்கின்றன. (காந்தி போன்றவை தவிர). சமீபத்தில் வெளியான பெரியார், காமராஜர் போன்று, எங்கே இதுவும் மோசமான உருவாக்கமாக இருக்குமோ என்று எணணிக் கொண்டிருந்தேன்.

என்னுடைய அத்தனை தயக்கங்களையும் தகர்த்து விட்டு இத்திரைப்படம். இந்த வருடம்தான் எடுத்தது போல் அத்தனை புத்தம் புதிதான வெளித்தோற்றத்துடனும் உள்ளடக்கத்துடனும் இருக்கிறது. தேசத் தலைவர்கள் குறித்த திரைப்படங்கள் என்றாலே, பொதுவாக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சுவையான சம்பவங்களின் தொகுப்பாகவும் சமுதாயத் தொடர்பைப் பற்றி மேலோட்டமாகவும் இருக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் அம்பேத்கரின் அரசியல் குறித்த நிகழ்வுகளும் அது குறித்த உரையாடல்களும் முக்கியத்துவத்தோடு பதிவாகியிருக்கின்றன. குறிப்பாக காந்திக்கும் அம்பேத்கருக்கும் இருந்த அரசியல் ரீதியான முரண்பாடு அழுத்தமாக பதிவாகியிருக்கிறது.

'காந்தி ஒரு சந்தர்ப்பவாதி அரசியல்வாதி' என்பது மாதிரியான காந்தி குறித்து அம்பேத்கர் முன்வைக்கும் விமர்சனமெல்லாம் அப்படியே பதிவாகியிருக்கிறது. சென்சாரில் எப்படி விட்டுவைத்தார்கள் என்று தெரியவில்லை. 'மகாத்மாக்கள் வருவார்கள், போவார்கள், தீண்டாமை இன்னும் அப்படியேதானே இருக்கிறது' என்கிறார் அம்பேத்கர்.

' காந்தி வெளிநாட்டுத் துணிகளையெல்லாம் எரித்து போராட்டம் செய்கிறாராம்' என்று தகவல் தருகிறார் நண்பரொருவர். அதற்கு அம்பேத்கர் சொல்வது 'அவர் எரிக்க வேண்டிய விஷயம் இன்னும் நெறைய இருக்கு".

பரோடா சமஸ்தானம் அளிக்கும் உதவித் தொகையின் மூலமாக நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலைகழகத்தில் அம்பேத்கர் கல்வி பயிலும் காட்சியோடு படம் துவங்குகிறது. 'இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நீங்கள் ஏன் ஈடுபடக்கூடாது' என்று கேட்கிறார்கள். 'நான் இங்கு வந்தது கல்வி பயில்வதற்காக. இப்போது அதைத்தான் முழுக்கவனத்துடன் செய்வேன்' என்கிறார் அம்பேத்கர். சமஸ்தானம் உதவியை நிறுத்திக் கொள்ள வேறு வழியின்றி இந்தியா திரும்புகிறார். அங்கு வரவு செலவு அதிகாரியாக பணி கிடைத்தாலும் தங்குவதற்கான இடம் கிடைக்கவில்லை.

தீண்டாமை என்னும் கருநாகம் அவர் செல்லும் இடமெல்லாம் பின்தொடர்ந்து அவரைத் துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது. மஹர் என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த பாவத்திற்காக ஆதிக்கச் சாதியினர் எல்லா இடத்திலும் அவரை மறுக்கின்றனர். பார்சி இனத்தவர்களுக்கான சத்திரத்தில் கெஞ்சிக் கூத்தாடி தங்குகிறார். ஆனால் சில நாட்களிலேயே இதை கண்டுபிடித்து பார்சிக்காரர்கள் தடி,கம்புகளுடன் வந்து அவரைத் துரத்துகின்றனர்.

தமக்கு வேலையளித்த மகாராஜாவிடமே இது குறித்து முறையிடுகிறார். 'உனக்கு வேலை தந்ததே நான் செய்த புரட்சி. மேலும் உன்னை ஆதரித்தால் எனக்கு தொல்லை ஏற்படும்' என்கிறார் மகாராஜா.

சுயபச்சாபத்தினால் ஒரு பூங்காவில் அமர்ந்து அம்பேத்கர் அழும் காட்சி ஒரே ஒரு முறை காட்டப்படுகிறது. இது போல் எத்தனை முறையோ? கல்வி எனும் சாதனம் சமூக விடுதலையைத் தேடித் தரும் என்பது பொதுவான கருத்தானாலும் அது மாத்திரமே உதவாது என்பது அவருக்கு தெளிவாக புரிந்து போகிறது. தங்களுக்கான உரிமைகளை தாங்களேதான் போராடி பெற வேண்டும்.

நீருக்கும் தீண்டாமைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது போலும்.

இயற்கை அனைவருக்கும் பொதுவாக அளித்துள்ள நீரை ஆதிக்கச் சாதிக்காரர்களே ஆக்ரமித்துக் கொள்கிறார்கள். பணியிடத்தில் அவருக்கு கீழ் பணிபுரிகிற ஆதிக்கச் சாதிக்காரன் அவருக்கு தண்ணீர் கொண்டுவர தர மறுக்கிறான்.

கல்லூரி பேராசிரியராக பணிபுரிகிற சமயத்தில் அவர் தண்ணீர் அருந்த முயல்வதை மற்ற பேராசிரியர்கள் தடுக்கின்றனர். "வேண்டுமானால் வீட்டிலிருந்து கொண்டு வாருங்கள்' என்கிறார்கள். 'நான் அருந்தும் நீர் தீட்டுப்பட்டுவிட்டது என்று கருதுவீர்களானால் அவரவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள்தான் நீர் கொண்டு வர வேண்டும்' என்று பதிலடி தருகிறார் அம்பேத்கர். மேலும் 'நீர் தீட்டுப் பட்டு விட்டால் அதைப் போக்கும் மந்திரம்தான் உங்களுக்குத் தெரியுமே. அதைக்கொண்டு நீரை சுத்தப்படுத்திக் கொள்ளுங்களேன்' என்று அவர்களின் மூக்கை உடைக்கிறார். சம்பந்தப்பட்ட மந்திரத்தையும் ஸ்பஷ்டமாக உச்சரித்துக் காட்டுகிறார்.

மக்களிடம் அவர்களின் விழிப்புணர்விற்கான செயற்பாட்டைத் துவங்கியதுமே அவர் முதலில் கையிலெடுக்கும் போராட்டம், நகர சபையினால் அங்கீரிக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்படுகிற குளங்களில் நீர் அருந்தும் போராட்டம்தான்.

பம்பாயிலிருக்கும் பிராமண எதிர்ப்புச் சங்கமொன்று இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்புகிறது. ஆனால் பிராமணர்களை தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. அம்பேத்கர் தெளிவாக இதை மறுத்துவிடுகிறார். 'பிராமணர்கள் மாத்திரமல்ல, அதற்கு அடுத்தடுத்த அடுக்குகளில் இருக்கும் சாதி இந்துக்களும் தாழ்த்தப்பட்டவர்களை தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளாக்கும் போது பிராமணர்களை மட்டும் எதிர்ப்பது முறையாகாது' என்பது அவரின் நிலைப்பாடு.

மேற்படிப்பைத் தொடர்வதற்காக மீண்டும் லண்டன் பயணம். இந்தியாவில் தீண்டாமையினால் அல்லறுவது போல அங்கே இனவெறியினால் கிடைக்கிற துன்பம். ஏழ்மை வேறு. ஆனால் எதுவுமே அவரின் கல்வித்தாகத்தை தடுக்க முடியவில்லை. இந்தியாவின் சாதிஅமைப்புகள் குறித்தான ஆய்வுக் கட்டுரை பல்கலைகழகத்தால் ஏற்கப்பட்டாலும் அதன் கடுமையான மொழிநடை அவர்களை பதட்டமடையச் செய்கிறது. மாற்றி எழுதித் தரச் சொல்கிறார்கள். தன் தோழியிடம் இது குறித்து ஆத்திரத்துடன் உரையாடுகிறார். "என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்கிறாள் அவள்.

அம்பேத்கர் சொல்கிறார்: 'திருத்துவேன்'. இரு பொருள்பட என் காதில் ஒலிக்கிறது இது.

மறுபடியும் இந்தியாவிற்குத் திரும்பியவுடன் முழு மூச்சாக தன் சமூகப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். காந்தி சைமன் கமிஷனை புறக்கணிக்கிற போது அம்பேத்கர் அங்கு சென்று இந்தியாவில் தீண்டத்தகாதவர்கள் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவிக்கும் கொடுமையை விளக்கிச் சொல்லி தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை முன்வைக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்கள் எனினும் அவர்களும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களை தனியாக பிரித்தால், சாதி இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடைவெளி இன்னும் தீவிரமாகி இரு பிரிவுகளுக்கான ஒற்றுமை சாத்தியப்படவே படாது என்பது காந்தியின் நிலைப்பாடு.

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக நீடிக்கிற தீண்டாமைக் கொடுமை அடுத்து வரும் சில வருடங்களில் தீரப் போவதில்லை என்பது அம்பேத்கரின் யதார்த்தமான வாதம். (அம்பேத்கரின் தீர்க்கதரிசனம் இன்றும் கூட காலாவதியாகிவிடவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது). முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் கூட தொகுதி ஒதுக்கீடு அளிக்க ஒப்புக் கொள்கிற காந்தி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதை மறுப்பது என்ன நியாயம் என ஆவேசமாக முழங்குகிறார் அம்பேத்கர்.  தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களின் இனவெறி தாக்குதல்கள் குறித்து தெளிவாக அனுபவித்திருக்கிற காந்தி, இந்தியாவில் அதே நிலையை தாழ்த்தப்பட்டவர்கள் மீது பொருத்திப் பார்க்காமல் வசதியாக மறந்து விடுவது ஏன்? என்பதும் அம்பேத்கர் முன் வைக்கும் கேள்வி. (ஆனால் சுதந்திர அறிவிப்பின் போது 'பாகிஸ்தான்' குறித்த ஜின்னாவின் கோரிக்கையை அம்பேத்கர் ஏற்றுக் கொள்ளாதது குறித்து நெருடல் ஏற்படுகிறது. முஸ்லிம்கள் குறித்த அம்பேத்கரின் தீவிரமான விமர்சனங்கள் படத்தில் வெளிப்படவில்லை. சென்சாரில் துண்டிக்கப்பட்டதா என தெரியவில்லை.)

அம்பேத்கர் முன்வைக்கும் கோரிக்கைகளை எதிர்த்து காந்தி உண்ணாவிரதத்தை அறிவிக்கிறார். பெரும்பான்மையான மக்களின் வெறுப்பு அம்பேத்கரின் மீது படிகிறது. காங்கிரஸூக்கு எதிராக செயல்பட்டு பிரிட்டிஷ்ஷாருடன் பேச்சு வார்த்தை நடத்தும் அவரை 'தேசத் துரோகி' என்று முத்திரை குத்துகின்றனர். எல்லாப் பக்கங்களிலிருந்தும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்.

'தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களின் தொகுதி ஒதுக்கீடு குறித்தான அவசியத்தை காந்தியிடம் விவாதிக்கிறார். 'தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட இந்துக்களிடம் பிரிவினை ஏற்படுவதை தாம் விரும்பவில்லை' என்கிற அதே பல்லவியை பாடுகிறார் காந்தி. '5 வருடங்கள் அவகாசம் கொடுங்கள். அதற்குள் மக்கள் மனம் மாறுவார்கள்'

இத்தனை வருடங்களாக ஏற்படாத மாற்றம் சில வருடங்களில் ஏற்படும் என்பதை அம்பேத்கர் ஏற்கத் தயாராக இல்லை. 'தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்கிற நிலையில்தான் ஆதிக்கச் சாதியினர், தாழ்த்தப்பட்டவர்களை துன்புறுத்தாமல் இருப்பார்கள்'. உண்ணாவிரதம் காரணமாக காந்தியின் உயிருக்கு ஆபத்து நேரிடும் போது எல்லாத் திசைகளிலிருந்து நெருக்கடியும் அழுத்தமும் கூடுகிறது. வேறு வழியின்றி காந்தியை சந்தித்து தம்முடைய சமரசங்களை முன்வைக்கிறார். விடைபெறும் போது காந்தியிடம் சொல்கிறார். 'காந்திஜி, அடிக்கடி உண்ணாவிரதம் என்னும் ஆயுதத்தை கையில் எடுக்காதீர்கள்'. 

தாம் நிற்கிற நிலையிலிருந்து விலக மறுக்காத காந்தியின் பிடிவாதமும் தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளை முழுக்க புரிந்து கொள்ள விரும்பாத அவரின் மீது அம்பேத்கர் கொள்கிற எரிச்சலும் முரணும் இத்திரைப்படம் முழுக்க பதிவாகியிருக்கிறது. அதே சமயத்தில் மனதின் ஆழத்தில் காந்தி மீது இவர் வைத்திருக்கிற மரியாதையும். காந்தி உண்ணாவிரதமிரு்க்கிற சமயத்தில், தம்முடைய உணவை திருப்பி அனுப்பி விடுவதின் மூலம் இதை உணர முடிகிறது. 

தம்முடைய சமூகப் போராட்டத்திற்கு தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக இருப்பதே கசப்புடன் உணர்கிறார். 'தீண்டத்தகாதவன்' என்று தங்கள் மீது அழுத்தமாக குத்தப்பட்டிருக்கும் முத்திரையை இந்து மதத்திலிருந்து வெளியேறுவதன் மூலமே நீக்க முடியும் என்று நம்புகிறார். இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடும் போது தேர்தல் கூட்டணிக்காக பேச்சு வார்த்தை நடத்த முண்டியடிப்பது போன்று மற்ற மதங்களின் தலைவர்கள் பேரத்திற்கு வருகின்றார்கள். அவரை இந்து மதத்திலேயே தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளும் நடைபெறுகிறது. பலத்த ஆலோசனைக்குப் பின் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமலிருப்பதாக அவர் நம்புகிற பெளத்த மதத்தை தேர்ந்தெடுக்கிறார்.

சுமார் ஐந்து லட்சம் மக்களோடு அவர் பெளத்த மதத்தை தழுவுவதோடு படம் நிறைகிறது.  

சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சர் பொறுப்பும் அவரைத் தேடிவருகிறது. இந்த ஆலோசனையை நேருவிடம் முன்வைப்பவர் காந்திதான். எந்த இடையூறுமில்லாமல் இதைச் செய்யலாம் என்கிற நேருவின் உத்தரவாதத்துடன் அதை ஏற்றுக் கொள்கிறார் அம்பேத்கர். குழுவிலுள்ள மற்ற நபர்கள் பல்வேறு காரணங்களினால் செயல்படாத நிலையில் தனியொருவராக இந்தியாவின் அரசியல் சட்டத்தை எழுதி முடிக்கிறார். ஆனால் இந்து சட்ட மசோதா குறித்த பகுதிகளை நேரு ஏற்றுக் கொண்டாலும் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இதனால் ஏமாற்றமும் கசப்பும் கொள்ளும் அம்பேத்கர் தன் பதவியை ராஜினாமா செய்கிறார்.

அம்பேத்கரின் தனி வாழ்க்கையும் இடையிடையில் சொல்லப்படுகிறது. வெளிநாட்டு கல்வி தொடர்பான காட்சிகளின் இடையில் சிறுவயதில் அவர் சந்திக்க நேர்ந்த தீண்டாமைக் கொடுமைகள் காட்சிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவரது மனைவியான ரமாபாய் (சோனாலி குல்கர்னி) ஒரு சாதாரண குடும்பத்தலைவி. கல்விக்காகவும் போராட்டத்திற்காகவும் தன்னை விட்டு பெரும்பாலும் விலகியே இருக்கிற கணவனின் அருகாமைக்கு ஏங்குகிறவர். எக்காரணம் கொண்டும் தன் குழந்தைகளின் படிப்பு தடைபட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் அம்பேத்கர்.

உடல் நலிவுற்று ரமாபாய் இறக்கும் காட்சி உருக்கம். 'வெளியே மழை பெய்கிறதா' என்று பிதற்றுகிறார் ரமாபாய். பாவனையாய் அதை ஆமோதிக்கிறார் அம்பேத்கர். அவர்களின் இளவயதுத் திருமணத்தின் போது மழை பெய்த காட்சிகள் மிகப் பொருத்தமாய் இங்கு இணைகிறது.

முன்னரே குறிப்பிட்ட படி அம்பேத்கர் என்கிற ஆளுமை குறித்தான நல்லதொரு அறிமுகத்தை தருகிறது இத்திரைப்படம். 90 களில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், அந்தக் காலக் கட்டத்திற்காக பின்னணிகளுக்காகவும், வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்காகவும் எவ்வித சமரசங்களுமின்றி நம்பகத்தன்மையோடு பதிவாகியிருக்கின்றன. அசோக் மேத்தாவின் சிறந்த ஒளிப்பதிவு இந்த அனுபவத்தை இன்னும் உன்னதமாக்குகிறது.

கிளிஷேவான வாக்கியமாக இருந்தாலும் சொல்லி விடுகிறேன். இத்திரைப்படத்தின் எந்தவொரு காட்சியிலும் எனக்கு மம்முட்டி என்கிற நடிகரே தெரியவில்லை. உருவப் பொருத்தம் முதற்கொண்டு அத்தனை கச்சிதமான தேர்வு. மம்முட்டியின் அடக்கமான நடிப்பு அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்ததில் ஆச்சரியமில்லை.

()

சென்னை எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டரில் 05.12.2010 அன்று காலை 11.15 மணிக் காட்சியில் இத்திரைப்படத்தைக் கண்டேன்.

விடாது பெய்துக் கொண்டிருந்த மழையிலும் சுமார் 40 சதவீத அரங்கம் நிரம்பியிருந்தது குறித்து மகிழ்ச்சி. திரையரங்குகளில் நடிகர்களின் புகைப்படங்களையே கண்டு எரிச்சலடைந்திருந்த கண்களுக்கு, அம்பேத்கரின் வாசகங்களும் புகைப்படங்களும் தாங்கிய பதாகைகள் மகிழ்ச்சியை ஏற்படு்த்தின. அம்பேத்கர் அமைப்பைச் சார்ந்த தோழர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்ததோடு பார்வையாளர்களை வரவேற்றனர். ஓரு அரசியல் திரைப்படத்தின் காட்சிகளை நுட்பமாக உள்வாங்கிக் கொண்டு பொருத்தமான இடங்களில் கைத்தட்டல்களின் மூலம் எதிர்வினையாற்றியது குறித்தும் மகிழ்வாக இருந்தது. காந்தியைப் பற்றின அதீதமான கூச்சல்கள்தான் சங்கடத்தை ஏற்படுத்தின.

இன்னும் சில நாட்களே திரையிடப்பட இருக்கும் இதை சந்தர்ப்பத்தை வீணாக்காமல் காணுமாறு வேண்டுகிறேன். முக்கியமாக குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம்.

இந்தியா என்கிற தேசத்தின் உருவாக்த்தின் பின்னால் எத்தனை பேரின் கண்ணீரும் ரத்தமும் இருக்கிறது என்பதை இளைய தலைமுறை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். நகரங்களில் மட்டுப்பட்டிருக்கிறது என்றாலும் கிராமங்களில் இன்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நீடிக்கிற தீண்டாமை என்னும் கொடிய கற்பிதத்தை பற்றி அவர்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.

அம்பேத்கரின் நினைவு நாளான இன்று இந்தப் பதிவு எழுதப்படுவதின் பொருத்தம் குறித்த உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.   

suresh kannan

15 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Arun Nadesh said...

Excellent review! Hats off to you...

ஜெ. ராம்கி said...

அம்பேத்கார் குறித்த காவியத்திற்கு விமர்சனம் எழுதுவதற்கு கூட கோடிக்கணக்கான ரூபாயில் தயரான வணிகக்குப்பையை மேறகோள் காட்டவேண்டிய துரதிருஷ்டத்தை நினைக்கும்போது அவமானத்தில் நெஞ்சு வெடித்து சிதறிவிட்டது

யாத்ரீகன் said...

விரிவான பார்வைக்கு நன்றி.. படத்தை காண ஆவலுடன் இருக்கிறேன்..

Sridhar Narayanan said...

நல்லா எழுதியிருக்கீங்க சுரேஷ். // மம்முட்டியின் அடக்கமான நடிப்பு // பாந்தமான நடிப்புக்கு மம்மூக்காவைக் கேட்கனுமா... பிரமிப்பான கலைஞர்.

பெரியார் படமளவுக்கு காமராஜர் படம் பேசப்படாவிட்டாலும் நான் பார்த்தவரையில் நன்றாகவே இருந்தது. குறைந்த பட்ஜெட்டில், சிறந்த தொழில்நுட்பம் இல்லாவிட்டாலும் நேர்த்தியான முறையில் பதிவு செய்திருந்தார்கள்.

அவற்றை விட அம்பேத்கர் சிறப்பாக வந்திருப்பதாக நீங்கள் சொல்வது மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

ஒரு மாமனிதரின் மனசாட்சியாக நிற்கிறது படம். அருமையான விமர்சனம்.

CS. Mohan Kumar said...

படம் பார்க்க முடியாதவர்கள் கூட அம்பேத்கார் பற்றி பல விஷயங்கள் உணரும் வண்ணம் விரிவாக எழுதியுள்ளீர்கள் நன்றி

BalHanuman said...

மிகவும் அருமையான விமர்சனம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

குரங்குபெடல் said...

நல்லபதிவு . . .நன்றி . .

Ashok D said...

அந்த ’தலையங்கம்’.. இன்றைய தலையங்கம் போலவே உள்ளது..

பாந்தமான விமர்சனம்...
நன்றி

arasiyalkalam said...

nice

Peter John said...

இந்தியா என்கிற தேசத்தின் உருவாக்த்தின் பின்னால் எத்தனை பேரின் கண்ணீரும் ரத்தமும் இருக்கிறது என்பதை இளைய தலைமுறை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். this is true. most of the freedom fighters and their efforts are not shown to the younger genreation under
Gandhi effet. But one day every body will know the truth.

ஏழுமலை said...

மிகவும் அருமையான விமர்சனம்.

Anonymous said...

அருமையான விமர்சனம் ஸ்வஸ்திக்ஜி! சிலச்சில பாகங்கள் மட்டுமே ஹிந்தியில் பார்த்திருக்கிறேன். தமிழையும் தேடிக்கண்டு பிடித்துவிடுகிறேன்!

டைனோ

Unknown said...

அம்பேத்கர் என்ற மாமனிதர் இல்லையென்றால் .....என்னால் உங்களின் இந்த பதிவை கூட படித்திருக்கவும் , பார்த்திருக்கவும் முடியாது......டாக்டர் பீமராவ் அம்பேத்கர் அவர்கள் எங்களின் குலதெய்வம்......

பகிர்தமைக்கு நன்றி அய்யா.....