Showing posts with label திரில்லர். Show all posts
Showing posts with label திரில்லர். Show all posts

Monday, March 31, 2014

Big Bad Wolves - நானறிந்த ஓநாய்களிலே....



சமீபத்தில் பார்த்த மிகச் சிறந்த திரைப்படமாக இதைச் சொல்வேன்.  நண்பர் Quentin Tarantinoவும் இதையே வழிமொழிந்திருக்கிறார் என்பதிலிருந்தே இந்த இஸ்ரேலியத் திரைப்படத்தின் சிறப்பை அறியலாம்.

பல திரில்லர் திரைப்படங்களை பார்த்துப் பழகியவர்கள் கூட எந்த சாத்தியங்களையெல்லாம் யூகிக்கிறார்களோ அதையெல்லாம் உடைத்துக் கொண்டு அற்புதமாக நகர்கிறது திரைக்கதை, ஆங்காங்கே சில சகித்துக் கொள்ளக்கூடிய கிளிஷேக்கள் இருந்தாலும். திரைக்கதை எழுத விரும்புவர்கள் இதை தங்களின் பயிற்சிக்காக கூட எடுத்துக் கொள்ளலாம். கோயன் சகோதரர்களின் பாணியில் அமைந்திருக்கும் இத்திரைப்படத்தை இயக்கியவர்களும் இருவரே. டோரண்டினோவையும் ஹிட்ச்காக்கையும் கலந்ததொரு பாணியில் அமைந்திருக்கிறது இதன் திரைக்கதை.

குரூரமான காட்சிகளின் இடையே வசனங்களிலும் திரைக்கதையின் சில பகுதிகளிலும் தெறிக்கும் அட்டகாசமான அபத்த நகைச்சுவை இத்திரைப்படத்தை மேலும் சுவாரசியமாக்குகிறது. உதாரணமாக எனக்கு மிக பிடித்ததொரு காட்சி. எதிராளியின் மார்பை தீயால் பொசுக்கும் ஒரு கிழவர், பிறகு தனது மனைவியிடமிருந்து வரும் தொலைபேசி உரையாடலின் போது 'தான் சிகரெட் பிடித்ததை சொல்லாதே' என்று சித்திரவதை செய்யப்பட்டவரிடமே சைகையால் திருட்டுக் கெஞ்சு செய்யும் காட்சி.

படத்தின் ஒளிப்பதிவு (குறிப்பாக shot composition), பின்னணி இசை போன்ற பல நுட்பமான அம்சங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியதும் செல்ல வேண்டிய தூரமும் நிறைய இருக்கிறது. இஸ்ரேலியர்களுக்கும் அரேபியர்களுக்குமான வரலாற்றுப் பகையும் பிரிவும் கூட மின்னல் கீற்றாக சில காட்சிகளில். நடிகர்கள் அத்துணை பேரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.


சமீபத்தில் வெளியான டென்மார்க் திரைப்படமான 'The Hunt' ஐயும் இதையும் கூட ஒருவகையில் இணைக்கோடாக வைத்து யோசித்துப் பார்க்கலாம். 'எல்லாவற்றையும் சந்தேகி' என்கிறார் கார்ல் மார்க்ஸ் (தானே?). படத்தின் இறுதிக் காட்சியை நீங்கள் யூகித்து விட்டிருந்தால் நிச்சயம் உங்களை காவல்துறையில் சேர்த்துக் கொள்வார்கள்.

நம்மூர் இளம் இயக்குநர்கள் இதை இறக்குமதி செய்து கொத்து பரோட்டா போட்டு ஒரு காதல் டிராக்கையும் குத்துப் பாடலையும் எப்படியாவது இணைத்து விடுவார்கள் என்று யோசிக்கும் போதுதான் ஆயாசமாக இருக்கிறது. 

suresh kannan