
நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக சமீபத்திய திரைப்படங்கள் ஆங்கில துணையெழுத்துக்களுடன் (English subtitles) வெளியாவது அந்தந்த மொழிகளை அறிந்திராத எனக்கு மிக வசதியாக இருக்கிறது. துணையெழுத்து அல்லாத அந்நிய மொழித் திரைப்படங்களை காண்பது எனக்கு உவப்பில்லாததாகவும் அசெளகரியமாகவுமே இருக்கிறது. நடிப்பவர்களின் உடல்மொழி மற்றும் தொனி கொண்டு வசனங்களை ஒரளவிற்கு ஊகிக்க முடியும்தான் என்றாலும் நடிகர்கள் உரையாடுவதின் முழு அர்த்தத்தையும் அறிந்து கொள்ள முடியாமல் அடுத்த காட்சிக்கு என்னால் நகர முடியாது. காட்சி ஊடகத்தை இவ்வாறு அணுகுவது அவற்றின் அடிப்படைக்கு செய்யும் துரோகம்தான் என்றாலும் பெரும்பாலான திரைப்படங்கள் இன்னமும் மொழியையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்த நிலை. ஆங்கில துணையெழுத்துக்களுடன் கூடிய திரைப்படங்கள் அரிதாகக் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் (பெரும்பாலும் விருதுப் படங்களே இவ்வாறு காணக் கிடைக்கும்) அது அல்லாத மற்ற திரைப்படங்களை காண முடியாமற் போனதின் இழப்பை இப்போதுதான் உணர்கிறேன். துணையெழுத்துக்களின் மூலம் வசனங்களின் சாரத்தை புரிந்து கொள்ள முடிந்தாலும் (இது பெரும்பாலும் மொழி பெயர்ப்பாளர்களின் திறமையை நம்பியே இருக்கிறது) அதன் நுட்பமான விவரணைகளை (nuances) புரிந்து கொள்ள இயலாதது ஒரு இழப்பே. உதாரணத்திற்கு இந்தத் திரைப்படத்தின் தலைப்பான கமீனே-வின் பொருள் 'பொறுக்கி' என்று மேம்பாக்காக அறியப்பட்டாலும் அதனின் சரியான அர்த்தத்தை அந்த மொழியில் அதிகம் புழங்குபவர்களே (குறிப்பாக பிராந்திய வசைச் சொற்களை அதன் அர்த்தத்துடன் முழுமையான அறிந்தவர்கள்) சொல்ல முடியும்.
கமீனே-வின் கதை பெரும்பாலான இந்திய வணிகத் திரைப்படங்களில் (குறிப்பாக 80-90களில்) பெரும்பாலும் உபயோகப்படுத்தப்பட்ட கதைதான். இரட்டைச் சகோதரர்கள். ஒருவன் நல்லவன்; சில குறிக்கோள்களுடன் வாழ்பவன்; இன்னொருவன் பொறுக்கி; பணத்தை அடிப்படையாகக் கொண்ட கனவுலகமே அவன் இலட்சியம். (இங்கே நல்லவன், கெட்டவன் என்கிற பதங்களை ஒரு அடையாளத்திற்காகவே உபயோகிக்கிறேன். அப்படி கருப்பு வெள்ளையாக ஒரு நிலை இருக்க முடியாது என்பதை நாம் அறிவோம்) இருவரும் எதிரெதிர் நிலைகளில் பிரிந்து வாழ்பவர்கள். சந்திக்க நேர்ந்தால் மோதிக் கொள்பவர்கள். கிளைமாக்சில் சட்டென திருந்தி 'சுபம்' போடுபவர்கள். கமீனேவும் இதே கதைச் சரடை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதன் பிரமிப்பூட்டும் திரைக்கதையாலும் திரை மொழியாலும் காட்சிக் கோர்வைகளினாலும் உருவாக்கத்தினாலும் சமகால படைப்புகளுக்கு மத்தியில் ஒரு முன்மாதிரியான திரைப்படமாக தனித்துத் தெரிகிறது.
கமீனேவில் இயங்கும் மனிதர்கள் யதார்த்த வாழ்க்கையுடன் மிக நெருக்கமானவர்கள். ஒரு துணை கதாபாத்திரத்தின் மூலம் இதை விளக்க முயல்கிறேன். போதைப் பொருள் தடுப்பு பிரிவிலிருக்கும் காவல்துறையினர் இருவர் பத்து ரூபாய் கோடி பெறுமான கோகெய்னை ஒரு மா·பியா தலைவனிடம் சேர்ப்பிக்க எடுத்துச் செல்லும் போது வழியில் தவற விட்டுவிடுகின்றனர். சரக்கை கொண்டு போய் சேர்க்கவில்லையெனில் தலை போய்விடும். புலி வாலை பிடித்த கதை. சரக்கை எடுத்துச் சென்ற இளைஞனை (இரட்டையர்களில் கெட்டவன்) கண்டுபிடித்து அழைத்து வரும் போது விபத்து ஏற்பட்டு மூத்த அதிகாரிக்கு ஏற்பட்ட காயத்தைக் கண்டு இளைய அதிகாரி பதறிப் போய்விடுகிறான். சாப்.. சாப்.. என்று கலங்குகிறான். ஆனால் சில காட்சிகளுக்குப் பிறகு இருவரும் மா·பியா தலைவனின் எதிரில் பீதியோடு அமர்ந்திருக்கின்றனர். கெட்டவனின் மொபைலுக்கு இளைய அதிகாரி தொடர்பு கொள்ள முயற்சிக்கிறான். தொடர்பு கிடைக்கவில்லை. "அடுத்த முறையும் லைன் கிடைக்கவில்லையென்றால் உன்னையே நீ சுட்டுக் கொள்" என்கிறான் மா·பியா. வியர்த்து விறுவிறுக்க டயல் செய்ய இந்த முறையும் தொடர்பு கிடைப்பதில்லை. அழுகையும் பதட்டமுமாக துப்பாக்கியை எடுப்பவன் திடீரென்று தீர்மானித்து விபத்தில் சிக்கிய வலியால் எதிரில் அனத்திக் கொண்டிருக்கும் மூத்த அதிகாரியை சுட்டுக் கொல்கிறான். "மன்னிச்சுடுங்க அண்ணா" என்று கதறுகிறான். பிறகு மா·பியாவிடம் "இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா? என்கிறான். மரணத்தின் விளிம்பிற்கு செல்லும் ஒருவனை உயிர்பயம் நட்பும் பாசமும் கண்ணை மறைக்க எத்தகையை முடிவிற்கு நோக்கி தள்ளுகிறது என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தக்காட்சி. அடுத்த முறை லைன் கிடைக்கும் வரைக்குமாவது தன்னுடைய உயிர் நீடிக்கட்டும் என்னும் நப்பாசையே இந்த நிலைக்கு அவனை உந்தித் தள்ளுகிறது. இது மாதிரியான பல அற்புத தருணங்களை 'கமீனே'வில் சந்திக்க முடிகிறது.
கமீனேவின் பல காட்சிகளில் நான் Quentin Tarantino-வின் திரைப்படமொன்றை பார்ப்பது போலவே உணர்ந்தேன். அந்தளவிற்கு ப்ளாக் ஹியூமர் படமெங்கும் விரவிக் கிடக்கிறது. இரட்டையர்களில் கெட்டவனான சார்லி, அவனின் மா·பியா நண்பனான மிகைல், இனவாதக் குழுவின் தலைவனான போப்.. இவர்கள் மூவரும் உரையாடிக் கொள்ளும் காட்சி மிக அற்புதமானதொன்று. அந்த அறையில் எப்போது துப்பாக்கி வெடிக்கும் என்கிற பதைபதைப்போடு பார்வையாளன் கவனித்துக் கொண்டிருக்கும் போது போப்பும் மிகைலும் குழந்தைகள் போல் தங்களுக்குள் சுட்டு வேடிக்கையாக விளையாடுகின்றனர். விநோதமான நகைச்சுவையும் ஆனால் அதை முழுக்க ரசிக்க விடாமல் காட்சிக்குள் புதைந்திருக்கும் வன்முறையின் வசீகரமும் இனம்புரியாத பதட்டத்தை பார்வையாளனுக்கு தருகின்றன. இந்தக் காட்சியில் மூவரின் நடிப்பும் உன்னதமாக வெளிப்பட்டிருக்கிறது.
'ஜாப் வி மெட்'டில் பார்த்த அதே இளைஞன்தானா என்கிற மலைப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஷாஹித் கபூர். இரட்டைச் சகோதரர்களுக்கான இரு பாத்திரங்களுக்கும் பெரிதளவில் வித்தியாசமான ஒப்பனை எதுவுமில்லை. இருவருக்கும் பொதுவான உச்சரிப்புக் குறைபாடு வேறு. இருந்தாலும் இரண்டிற்கும் நுணுக்கமான வேறுபாட்டை வெளிப்படுத்தி இரண்டும் வேறு வேறு பாத்திரம்தான் என்கிற மயக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் ஷாஹித் கபூர். (நல்ல இயக்குநர் கையில் சிக்கினால் ஒரு சுமாரான நடிகனும் எப்படி வைரமாக மின்னுவான் என்பதற்கு இது ஒரு உதாரணம்). இன்னொரு ஆச்சரியம் பிரியங்கா. மதூர் பண்டார்க்கரின் 'Fashion'-ல் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. ஆனால் இதில் ஒருபடி முன்னேறி விருதுக்கான நடிப்பை தந்துள்ளார். ஆனால் மிஷின் கன்னை தூக்கி வெடிக்கும் காட்சி சற்று மிகை.
இந்தப்படத்தை சிவசேனைக்காரர்கள் எப்படி வெளியே வரவிட்டார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. (அல்லது இது குறித்து மறைமுகமான சமரசம் ஏதாவது நிகழ்ந்ததா என்பதை அறியேன். கரன் ஜோகரின் சமீபத்திய படத்தில் "பம்பாய்' என்ற வார்த்தை இடம் பெற்றதற்காக MNSகாரர்கள் கலாட்டா செய்ததும் பின்பு இயக்குநர் ராஜ்தாக்கரேவை சந்தித்து முழங்காலிட்ட செய்தியும் இங்கு நினைவு கூரத்தக்கது) அந்தளவிற்கு அந்தக் குழு இந்தப்படம் முழுக்க பகடி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 'மஹாராஷ்டிரா மஹாராஷ்டிரர்களுக்கே' என முழங்குவது, பம்பாய் என்னும் சொலை 'மும்பை' என்று திருத்துவது, வந்தேறிகள் என்று வன்மத்துடன் உரையாடுவது, ஐந்து கோடி காசுக்காக நிறம் மாறுவது, வடாபாவ்... என்று படம் நெடுக இந்த இனவாதக்குழுவின் அசிங்கத்தை மறைமுகமாக வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார் இயக்குநர். குழுவின் தலைவனாக நடித்திருக்கும் 'சுனில் சேகர் போப்பாக' அமோல் குப்தா (தாரே ஜமீன் பர்-ன் திரைக்கதையாசிரியர்) கலக்கியிருக்கிறார். இந்தப்படத்தின் பெரும்பான்மையானவர்கள் புதுமுகங்கள் என்பதை ஆச்சரியத்துடன் கவனித்தேன். மூன்று, ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஒரே மாதிரியாக நடிப்பவர்களை - அவர்கள் சூப்பர் ஸ்டார்களாக இருந்தாலும் சரி - திரைத்துறையிலிருந்து கட்டாயமாக விலக்க அரசு ஏதேனும் சட்டம் கொண்டு வந்தால்தான் இந்த மாதிரியான புதுமுகங்களை நாம் அதிகம் பார்கக இயலும். :-)
விஷால் பரத்வாஜின் படம் என்பதால்தான் இந்தப்படத்தை பார்க்க தீர்மானித்தேன். ஒரு மென்மையான காதல்கதையாக இருக்கலாம் என்று யூகித்திருந்தேன். ஏனெனில் இவரது முந்தைய படங்களுள் ஒன்றான நீலக்குடை (இங்கே இதைப் பற்றி எழுதியிருக்கிறேன்) அந்தளவிற்கு மென்மையும் குழைவுமாக இருந்தது. ஆனால் படம் துவங்கின சிறிது நேரத்திற்கெல்லாம் படத்தின் இயக்குநர் இவர்தானா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அந்தளவிற்கு அந்தப் படத்திலிருந்து விலகி வேறொரு பரிமாணத்தில் திமிறியது கமீனே. பல வருடங்களாக ஒரே மாதிரியான பாணியில் (இதை முத்திரை வேறு குத்தி கொண்டாடுகிறார்கள்) உருவாக்கி எரிச்சலூட்டிக் கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழ் இயக்குநர்கள் மத்தியில் இதே மாதிரியானதொரு ஆச்சரியத்தை முன்பு தந்தவர் பாரதிராஜா. பதினாறு வயதினிலே எடுத்தவர்தான் 'சிகப்பு ரோஜாக்களையும்' எடுத்தார் என்பதை நம்ப அப்போது சற்று சிரமமாயிருந்தது.
விஷால் பரத்வாஜ் அடிப்படையில் ஒரு இசையமைப்பாளர் என்பதால் கமீனேவின் பாடல்கள் பெரும்பாலும் சுவாரசியமான உருவாக்கங்களாக வெளிவந்துள்ளன. உதாரணமாக சுக்விந்தர் சிங்கும் விஷாலும் பாடியிருக்கும் 'Dhan te nan' பாடலும் அதன் திரைப்படக்காட்சிகளும் ரகளையாக உள்ளன. 80களில் வெளிவந்த Gangster திரைப்படங்களின் தீம் மியூசிக்கை இந்த இசை பகடி செய்கிறதோ என்று கூட தோன்றுகிறது. இந்தப்படத்தின் மிகப் பெரிய பலமாக இதன் திறமையான நான்-லீனியர் திரைக்கதையைச் சொல்வேன். Cajetan Boy என்கிற உகாண்டா நாட்டு படைப்பாளியிடமிருந்து இந்த திரைக்கதையை 4000 டாலர்கள் தந்து வாங்கி இயக்குநர் செப்பனிட்டதாக விக்கிபீடியா கூறுகிறது. ஆரம்பக்கட்டத்தின் ஒரு புள்ளியை வேறொரு காட்சியின் புள்ளியோடு இணைக்கும் மாயம் இந்தப்படத்தில் நிகழ்கிறது. உதாரணத்திற்கு சார்லி தன்னுடைய தந்தை தற்கொலை செய்து கொண்டதை நினைவு கூரும் போது பிணத்தின் மேலுள்ள துணி விலக்கப்படும் போது அங்கே அவனது தந்தையின் முகம் அல்லாது சார்லியின் ஆருயிர் நண்பனான மிகைலின் முகம் காட்டப்படுவது பல உள்ளர்த்தங்களை விவரிக்கிறது.
சமீப கால இந்தித் திரைப்படங்கள் சர்வதேசதரப் படங்களுடன் போட்டி போடும் திறமையோடு உருவாக்கப்படுவதை மகிழ்ச்சியோடு கவனிக்கிறேன். இந்தக் காற்று தமிழ்த் திரையுலகை நோக்கியும் பெருமளவிற்கு வீசினால் அது ஆரோக்கியமானதொன்றாக இருக்கும்.
suresh kannan