Friday, June 06, 2014

சூது கவ்வும் - மாறி வரும் தமிழ் சினிமாவின் முகம்..

முன்குறிப்பு: 'என்னது காந்தி செத்துட்டாரா? அல்லது யேசு பொறந்துட்டாரா?' என்பது மாதிரியான அரதப்பழசான கேள்விகளையெல்லாம் கேட்கக்கூடாது. சூது கவ்வும் திரைப்படம் வந்த புதிதில் ஓர் இதழுக்காக எழுத உத்தேசிக்கப்பட்ட கட்டுரை இது. ஆனால் அப்போது நேரத்தில் அதை முடிக்க முடியவில்லை. எனவே முக்கால் சதவீதம் எழுதி அப்படியே விட்டு விட்டேன். இன்று டிராஃட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை நீக்கிக் கொண்டிருக்கும் போது இது கண்ணில் பட்டது. 'வரலாறு முக்கியம் அமைச்சரே' என்பதால் இதை இணையத்தில் பிரசுரிக்க முடிவு செய்தேன். எனவே இந்தக் கட்டுரையை எழுதப்பட்ட காலத்தையும் முழுமையாக நிறைவுறாத கட்டுரை என்பதையும் மனதில் இருத்திக் கொண்டு வாசிக்க வேண்டுகிறேன். 
 

தமிழ் சினிமாவின் வழக்கமான கதைச் சொல்லும் முறையும், சம்பிதாயமான உள்ளடக்கமும் மெல்ல மெல்ல மாறிக் கொண்டு வருவதை சமீபத்திய திரைப்படங்கள் உணர்த்துகின்றன. சூது கவ்வும் அவ்வாறான அடையாளங்களுள் ஒன்று. உதவி இயக்குநர்களாக இருந்து குரு - சிஷ்ய வழியில் உருவாகி வரும் இயக்குநர்கள் தங்களுடைய ஆசான்களிடமிருந்து சினிமா எடுப்பதின் நுட்பங்களை மாத்திரம் கற்றுக் கொள்ளாமல் அவர்களின் சிந்தனைகளையும் தனித்தன்மைகளையும் தங்களுடைய மூளைகளுக்குள் நிரப்பிக் கொண்டு வருவதால் முந்தையவர்களின் நகல்களாகவே தொடரும் அபாயம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இவர்கள் மூச்சு திணறத்திணற அரைத்த மாவையே வேறு வேறு வடிவில் அரைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் வளர்ந்து வரும் நுட்பத்தால் இன்றைய இளம் இயக்குநர்கள் எவரையும் சார்ந்து இராமல் தாங்கள் பார்த்த சிறந்த சினிமாக்களிலிருந்து கற்றுக் கொண்டு தமிழ் சினிமாவின் மரபைக் கலைத்துக் கொண்டு வருகிறார்கள்.

இதில் ஆச்சரியமான விஷயம், தமிழ் சினிமாவின் பார்வையாளர்களும் இந்தப் புதிய போக்கை ஏற்றுக் கொண்டு இவ்வாறான படங்களை வணிக ரீதியாகவும் வெற்றியடையச் செய்வதுதான். இது மின்னல் கீற்று போல தோன்றி மறைந்து விடுமா, அல்லது தொடர்ந்து தமிழ் சினிமாவின் தட்பவெப்ப நிலையே முற்றிலும் மாறி வேறு தளத்திற்கு நகர்ந்து செல்லுமா என்பது படத்தை உருவாக்குபவர்களும் காண்பவர்களும் இணைந்து நிர்ணயிக்க வேண்டியதொரு விஷயம். ஆனால் இவை தமிழ் சினிமாவின் சராசரி ரசிகர்களுக்குத்தான் புதிது. உலக சினிமா எனும் வகைமையில் அடங்கும் திரைப்படங்கள் இதையெல்லாம் தாண்டி எங்கோ பயணித்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும்.

குறும்பட உலகத்திலிருந்து முழுநீளத்திரைப்பட உலகிற்கு வந்திருப்பவர்களின் சமீபத்திய வரவு நலன் குமாரசாமி. (அது நளன் இல்லையோ?). இவரின் குறும்படங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். சிறுகதையின் வடிவத்தையே தனது குறும்படங்களுக்கும் உபயோகிக்கிறார். சுவாரசியமானதொரு துவக்கம், முடிவை விரைவாக நோக்கி நகர்தல், எதிர்பாராத முடிவு என்கிற வார்ப்பில் இவரின் படைப்புகள் இயங்குகின்றன. Dark comedy எனப்படும் இருண்மை நகைச்சுவை இவரது படங்களில் ஒரு சிறிய கீற்றாக காணக் கிடைக்கிறது.

தமிழ் சினிமாவில் இந்த இருண்மை நகைச்சுவை திரைப்படங்கள் மிக அரிது. இல்லை என்று கூட சொல்லி விடலாம். உரத்த குரலில் கத்துவதையும் உதைப்பதையுமே நகைச்சுவை என்று பார்த்து வருகிறோம். என்றாலும் கமல் தன்னுடைய 'மும்பை எக்ஸ்பிரஸ்' மூலம் இந்த வகைமையை லேசுபாசாக துவங்கி வைத்தார். காது கேளாத கதாநாயகன், காவல்துறை அதிகாரியின் வைப்பாட்டி நாயகி..என்று தமிழ் சினிமாவின் வழக்கமான பிரதான பாத்திரங்களை கலைத்துக் கொண்டு நுழைந்தது 'மும்பை எக்ஸ்பிரஸ். மிக தீவிரமாக திட்டமிடப்படும் குற்றச் செயல்கள் படு அபத்தமாக சொதப்பலாக எதிர்பாராத விதமாக முடியும் வகையில் இந்தப் படத்தின் காட்சிகள் அமைந்திருக்கும். கமல் படங்களில் உள்ள பிரச்சினை, அவரேதான் பிரதானமாக தெரிய மெனக்கெடுவார். தசாவதாரம் எனும் அபத்த நாடகம் சிறந்த உதாரணம். காக்கை வடை திருடிய கதையை திரைப்படமாக எடுக்க வேண்டுமென்றால் கூட அவரே காக்கையாகவும் நரியாகவும் நடிக்க விரும்புவதில் கூட தவறில்லை. வடையாகக் கூட அவரே நடிக்க விரும்புவதுதான் பிரச்சினையாகி விடுகிறது.

தியாகராஜன் குமாரராஜா -வின் ஆரண்ய காண்டம், இருண்மை நகைச்சுவைக்கு மிகச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். இதையே தமிழ் சினிமாவின் முதல் dark comedy film என்று கூட சொல்லலாம். முதல் பின்நவீனத்துவ சினிமா என்றும் கூட. நலன் குமாரசாமி இந்தப் பாதையில் பயணிக்க விரும்புகிறார் என்பது அவரது முயற்சிகளைப் பார்த்தால் உணர முடிகிறது. ஆனால் இந்தப் பயணத்தில் தன்னுடைய முதலடியை அழுத்தமாக பதித்திருக்கிறாரா என்று பார்த்தால் சற்று ஏமாற்றம்தான். முதல் திரைப்படம் என்ற சலுகை காரணமாக வேண்டுமானால் நலனை பாராட்டலாம். Comedy is a serious business என்பார்கள். அந்த தீவிரத்தன்மையை 'சூது கவ்வும்' -ல் பார்க்க முடியவில்லை. எல்லாமே நாடகத்தன்மையுடன் துவங்கி அதிலேயே முடிந்து விடுகிறது. அலாரம் வைத்து எழுந்து குளித்து விபூதி பூசி அமர்வது தண்ணியடிக்க என்பதுதான் நகைச்சுவை என்று நினைத்தால் நம்மை நினைத்து நமக்கே பாவமாய்த்தான் இருக்கிறது.

ஆனால் நலன் குமாரசாமியால் வருங்காலங்களில் சிறப்பானதொரு டார்க் காமெடி திரைப்படத்தை உருவாக்கிட முடியும் என்பதற்கான அறிகுறிகள் இத்திரைப்படத்திலேயே காணக் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு காட்சி. அதற்கு முன் படம் எதைப் பற்றியது என்பதைப் பார்த்து விடலாம். ஸ்கீஸோபோர்னியா நோய் கொண்ட ஒரு சில்லறைத் திருடனும் பல்வேறு காரணங்களால் வேலையில்லாத, எளிதில் சம்பாதிக்க விரும்புகிற மூன்று இளைஞர்களும் இணைந்து தாங்கள் வகுத்துக்கொண்ட சுயவிதிகளை மீறி அமைச்சரின் மகனை கடத்த முடிவு செய்வதில் துவங்குகிற அபத்தம் படம் முழுக்க அவர்களை துரத்துகிறது. சில்லறைத் திருடன் தன்னுடைய சகாக்களுக்கு எடுக்கிற உபதேச வகுப்பில் போதிக்கிற முதல் விதியே 'அதிகாரத்தின் மீது கைவைக்காதே' என்பதுதான். அதற்கேற்ப நடுத்தர வாக்க மனிதர்களின் (இவர்களை பயந்த சுபாவமுள்ளவர்கள் என்று தனியாக குறிப்பிடத் தேவையில்லை) குழந்தைகளைக் கடத்தி சில ஆயிரங்களை கைப்பற்றி விட்டு அவர்களை விட்டு விடுவார்கள். பயம் காரணமாக அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதுதான் இவர்களின் பிரதான ஆயுதம். இது ஏதோ புதிய வகையான உத்தி என்று நினைத்து விடக்கூடாது. நமது வருமான வரித்துறையினர் பல ஆண்டுகளாக செய்துவருவதுதான் மத்திய அமைச்சர்களும் நடிகர்களும் பல ஆண்டுகளாக வரிபாக்கியை வைத்திருந்தாலும் அவர்களை கெஞ்சிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் தவறுதலாகவோ அல்லாமலோ நூறு ரூபாய் குறைவாக கட்டினாலும் மிரட்டி சம்மன் அனுப்பி பணத்தைப் பிடுங்கும் அதே உத்திதான்.

மேலே குறிப்பிட்ட உதாரணக் காட்சியில் அமைச்சரின் மகன் தன்னைக் கடத்துபவர்களுடன் இணைந்து தந்தையின் பணம் பறிப்பதற்காக நாடமாடுகிறான். தொலைபேசியில் வீட்டிற்கு தாயிடம் சென்டிமென்ட்டாக பேசி பணத்தை கறக்க முயற்சிக்கிறான். கடத்தல்காரர்களில் ஒருவனிடம் பேசும் போது தன் கழுத்தை கெட்டியாகப் பிடித்து அழுத்து எனவும் உபதேசிக்கிறான். இதை அந்தக் கடத்தல்காரனிடம் ஒத்திகையாக தானே செய்து காட்டி 'ஏதாவது பேசு' என்கிறான். அப்போது அந்தக் கடத்தல்காரன் சொல்லும் வசனம்தான் இருண்மை நகைச்சுவையின் அடையாளம். கழுத்து நெரிக்கப்பட்டு விழி பிதுங்கும் தருணத்தில் அவன் பேசும் வசனம் 'என் வழி தனி வழி'. தமிழ் சினிமாவின் வணிக உச்சமாக கருதப்படும் ஒரு நடிகரின் புகழ்பெற்ற பஞ்ச் டயலாக்கை இதை விடவும் சிறப்பாக கிண்டலடித்து விட முடியாது.

சுமார் 40 வயதான நரைமுடியுடன் பரதேசி கோலத்திலிருக்கிற தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசுகிற ஒருவன்தான் இத்திரைப்படத்தின் மைய பாத்திரம். அவனுடைய மனநோய் காரணமாக, அரூப வடிவில் மினி ஸ்கர்ட்டுடன் கூடவே இருந்து உபதேசம் செய்து கொண்டிருக்கும் காதலி, நயனதாரவிற்கு கோயில் கட்டி அடிவாங்கி ஊரை விட்டு வருபவன், 'எதுக்கு வேலை செய்யணும்' எனும் பகல்நேர குடிகாரன், எதையும் சந்தேகமாக அணுகும் ஆனால் இறங்கி விட்டால் பெரிய அளவில் திருடத் திட்டமிடும் சாப்ட்வேர் கம்பெனி பணியாளன் என்று விநோதமான கூட்டணி. 
 
இத்திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான அம்சங்களுள் எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரத்தை, இயக்குநர் சிறப்பாக வடிவமைத்திருக்கும் விதம். எம்.எஸ்.பாஸ்கர், பூர்ணம் விஸ்வநாதன் போன்று பெரும்பான்மையாக ஓர் அசட்டுத்தனமான நகைச்சுவை நடிகராகவே இயக்குநர்களால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பவர். அந்த அடையாங்களை முற்றிலும் அழித்து எம்.எஸ்.பாஸ்கரின் வேறுவித சித்திரத்தை முன்வைக்கிறார் இயக்குநர். தமிழ் சினிமாக்களின் வாாப்பில் ஒரே மாதிரியான பாத்திரங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களை, வேறு விதமான பாத்திரங்களில் நடிக்க வைக்கும் போது, இயக்குநர்கள் அல்லது நடிகர்களின் தன்னிச்சையான நிகழ்வினாலோ அல்லது திட்டமிட்டோ அவர்களின் வழக்கமான முகம் எங்காவது கசிந்து விடும். பார்வையாளர்கள் அந்தப் பாத்திரத்திலிருந்து விலகி, இது சினிமா என்பதை உணரும் தருணமாக அது இருக்கும். பரோட்டாவை அதிகம் தின்று புகழ்பெற்ற ஒரு நகைச்சுவை நடிகரை, அவர் தொடர்ந்து நடிக்கும் எல்லாப்படத்திலும் ஏதாவது ஒரு இடத்தில் பரோட்டாவை நினைவு கூர்வது போல் வசனம் வைப்பது ஓர் உதாரணமாக சொல்லலாம். 
 
அவ்வாறின்றி, இத்திரைப்படத்தில் நேர்மையான அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், எந்த நிலையிலும் தன்னுடைய பாத்திரத்திலிருந்து விலகி சட்டென்று அசட்டுத்தனமாக ஏதும் பேசுவதில்லை என்பது இயக்குநரின் தன்னுணர்வுடன் கூடிய திட்டமிடலுக்கு ஓர் உதாரணம். கடந்த காலத்தின் நேர்மையான அமைச்சர்களாக கருதப்பட்டவர்களின் அபூர்வமான மிச்சம் போலவே அமைச்சர் ஞானோதயம் (கதாபாத்திரங்களின் சில பெயர்களே பகடியின் அடையாளமாக இருக்கின்றன - நம்பிக்கை கண்ணன் துரோகம் செய்கிறார்) மிக மிக நேர்மையாக இருக்கிறார். தனக்கு லஞ்சம் தர வந்த தொழிலதிபரை இனிக்க வரவேற்று லஞ்ச ஒழிப்பத் துறையின் அதிகாரியாரியிடம் ஒப்படை்க்கும் நேர்மை. பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் மகனிடம் தோற்று ரிடையர்டு ஆகிறார்.
 
மிகவும் தீவிரமாக இயங்கும் இந்தக் கதாபாத்திரத்தைப் பார்த்து மக்கள் திரையரங்கில் சிரித்துத் தீர்க்கிறார்கள். ஒருவன் நேர்மையாக இருக்கிறான் என்பதே இன்று நம்ப முடியாததாக, நகைச்சுவையைத் தூாண்டுவதற்கான காரணமாக அமைகிறது என்பதே ஒரு முரண்நகை. நேர்மை, அறம், தயாளம் போன்ற விழுமியங்கள், உலகமயமாக்கப்பட்ட, முற்றிலும் பொருளாதார சிந்தனைகளாகி விட்ட, சமகால சூழலின் முன் மண்டியிட்டு தோல்வியைத் தழுவுகின்றன. இத்திரைப்படமே இந்த எதிர் அறங்களின் உணர்வுகளில் அடிப்படையில்தான் இயங்குகிறது. மனிதன் சகமனிதனைத் தின்று வாழும் கொடூரமான காலத்தின் குற்றவுணர்வின் தடயங்கள் ஏதுமன்றி நம்மை நமக்கே அதன் சார்ந்த பகடிகளோடு இத்தி்ரைப்படம் அறிமுகப்படுத்துகிறது.

***
தமிழ் சினிமாவின் புதிய அலை இயக்குர்நர்களின் பிரச்சினை என்னவெனில், அதுவரை தமிழ் சினிமா இயங்கி வரும் சலித்துப் போன வார்ப்பிலிருந்து முற்றிலுமாக அவர்களால் தங்களை துண்டித்துக் கொண்டு வெளிவர இயலவில்லை. பார்வையாளர்களின் ரசனை, சினிமாவின் வணிகம் ஆகிய இன்னபிற விஷயங்களையும் கவனத்தில் கொண்டே அவர்கள் திரைக்கதையை எழுத வேண்டிய துர்ப்பாக்கியமான நிலையில் இருக்கிறார்கள். என்றாலும் தமிழ் சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்ட இயக்குநர்கள் கூட செய்யத் துணியாத சில விஷயங்களை செய்து, அது வரையிலான மரபைக் கலைக்கும் முயற்சியில் இந்த இயக்குநர்கள் ஈடுபடுவது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. 
 
சூது கவ்வும் போன்ற அபத்த நகைச்சுவை வகையிலான திரைப்படங்களும் மேற்குலகில் உருவாக்கப்படும் அதே வகைமையிலான திரைப்படங்களின் சுமாரான நகலாகவே திகழ்கின்றன. இந்த சுவரை உடைத்துக் கொண்டு தத்தம் பிரதேசங்களின் கலாசாரம் சார்ந்த சுய முன்மாதிரிகளை அடுத்து வரும் இயக்குநர்கள் உருவாக்குவார்கள் என நம்புகிறேன்.


suresh kannan