Thursday, July 31, 2008

குசேலனும் கொத்து பரோட்டாவும்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஜனி பட வெளியீடு என்பதே ஒரு திருவிழாவாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது. குசேலன் திரைப்படம் வரப்போகும் இந்த தருணமும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகமும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தக்கூடியது. கட்அவுட்களின் மீது பாலாபிஷேகம், படச்சுருளை வைத்து பூஜை, ஊர்வலம்... என்று எல்லா அபத்தமான சடங்குகளுக்கும் குறைவிருக்கப் போவதில்லை. ஆனால் தரம் என்கிற அளவுகோலின் மூலம் நோக்கும் போது 75 ஆண்டு கால தமிழ் சினிமா மீண்டுமொரு முறை தலையைக் குனியக்கூடிய தருணமும் கூட இது என்பதையும் மறக்கக்கூடாது.

'கத பறயும் போள்' என்கிற மலையாள திரைப்படம்தான் 'குசேலனாக' உருமாறப் போகிறது என்பது தெரிந்த செய்தி. ஆனால் இந்த உருமாற்றம் தமிழில் எப்படி நிகழப்போகிறது என்பதை உற்று நோக்கும் போது, கலை என்கிற நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல ஒதுக்கப்படப் போவதையும் வணிகம் என்கிற சமாச்சாரமே பிரதானமாக இருக்கப் போதையும் காண முடிகிறது. தேன்மாவு கொம்பத்து, மணிசித்ரத்தாழ் போன்ற மலையாளத் திரைப்படங்கள் தமிழில் முறையே முத்து, சந்திரமுகி என்று உருமாறின பிறகு அவற்றின் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை இரண்டு திரைப்படங்களையும் அவதானித்த பார்வையாளர்களால் எளிதில் உணர்ந்திருக்க முடியும். இதே போன்றதொரு கொடுமையான விபத்துதான் 'கத பறயும் போளுக்கு'ம் நிகழப் போகிறது என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை.

()

ஒரு காலத்தில் மலையாள சினிமா யதார்த்தத்திற்கு புகழ் வாய்ந்தாக இருந்தது. 1970-80களில் புதிய அலை தோன்றி அடுர் கோபால கிருஷ்ணன், அரவிந்தன், எம்.டி.வாசுதேவன் நாயர், ஜான் ஆப்ரஹாம், K.R.மோகனன், G.S.பணிக்கர் போன்றவர்களின் பங்களிப்பின் மூலம் சிறந்த மலையாளத் திரைப்படங்கள் உருவாகின. அதே சமயத்தில் பல தமிழ்நாட்டு பார்வையாளர்களுக்கு மலையாளத் திரைப்படங்கள் என்பவை, ஒரு கட்டழகி தன்னுடைய மேலாடையை கழட்டுகிற தோரணையில் நிர்வாண முதுகைக் காட்டிக் கொண்டு நிற்பதும் அதன் மீது பெரிய எழுத்தில் A என்கிற ஆங்கில வார்த்தை பொறிக்கப்பட்டிருக்கும் என்பதாகவே இருந்தது. திரைப்படங்களின் தேசிய விருதுகளுக்காக மலையாளமும் வங்காளமும் மாத்திரமே பிரதான போட்டிகளாக இருந்த அளவிற்கு மிகச்சிறப்பான யதார்த்தமான, அந்த மாநிலத்தின் கலாச்சாரத்தை சிறப்பாக பிரதிபலிக்கும் படங்கள், மலையாளத்தில் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று மலையாள சினிமாவின் முகம் மாறி விட்டது. கோடிகளில் புழங்கும் தமிழ்த் திரையுலகின் வணிகத் தாக்கத்தில் மயங்கி மலையாளத் திரையுலகமும் தமிழ்த் திரையுலகத்தின் மோசமான ஒரு பிரதியாக மாறிவிட்டிருக்கிற துரதிர்ஷ்டவசமான நிலையை காண முடிகிறது.

இவற்றின் இடையே ‘கத பறயும் போள்’ படத்தின் கதை மற்றும் திரைக்கதையாசிரியரான ஸ்ரீனிவாசன், யதார்த்தமான சிறந்த நகைச்சுவைப் படங்களின் உருவாக்கங்களின் பங்கெடுப்புக்களுக்காக மிகவும் சிலாகிக்கப்படுகிறார். அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘வடக்கு நோக்கி இயந்திரம்’ மற்றும் ‘சிந்தாவிஷ்டயாய சியாமளா’ என்பவை மலையாளத்தின் முக்கிய திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன. ‘கத பறயும் போள்’ திரைப்படம், வாழ்வில் புகழ், செல்வத்தை விட நட்பே முக்கியமானது என்கிற விஷயத்தைப் பேசுகிறது.

கேரளத்தின் ஒரு சிற்றூரில் சிகையலங்காரத் தொழிலாளியான ஸ்ரீனிவாசன், நவீனத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வறுமையில் சிரமப்படுகிறார். அந்த ஊருக்கு படப்பிடிப்பிற்காக வரப்போகும் நடிகர் (மம்முட்டி) ஸ்ரீனிவாசனின் பால்ய கால நண்பன் என்ற செய்தி ஊருக்குள் பரவியதில் ஒரே நாளில் அவரின் மதிப்பு உயர்கிறது. அதுவரை அவரை மனிதராக கூட மதிக்காதவர்கள் நடிகரிடம் பெறப்போகும் லாபத்துக்காக ஸ்ரீனிவாசனை கொண்டாடுகிறார்கள். ஆனால் தாழ்வுமனப்பான்மையும் கூச்சமும் கொண்ட ஸ்ரீனிவாசன் நடிகரை அணுகாமலிருக்கிறார். இதனால் ஊராரின் ஏச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

ஊருக்குள் நிகழும் ஒரு சிறுவிழரவில் பேசும் நடிகர் ஸ்ரீனிவாசனிடம் தாம் கொண்டிருந்த நட்பை மாத்திரமே பிரதானமாக குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் பேசுகிறார். பிறகு நண்பர்கள் சந்திப்பும் ஊராரின் மனமாற்றமும் நிகழ்கிறது. இவ்வாறாக போகிறது ‘கத பறயும் போள்’ கதை. இதில் நடிகராக வரும் மம்முட்டி வரும் காட்சிகள் மிகச் சொற்பமே. கதை பெரும்பாலும் ஸ்ரீனிவாசனின் வறுமையையும் ஊராரின் போக்கையும் (கறுப்பு) நகைச்சுவையின் மூலம் சித்தரிக்கிறது.

()

இந்தப்படம் தமிழில் ‘குசேலனாக” உருமாற்றம் செய்யப்படும்போது என்ன நிகழப் போகிறது என்பதை இதுவரை வந்திருக்கிற செய்திகளின் மூலம் எளிதாக ஊகிக்க முடிகிறது. மலையாளத் திரைப்படத்தைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்து போன ரஜினிகாந்த் உடனே தமிழில் இதை எடுக்க வேண்டும் என்று விரும்பினாராம். அதற்கு அவர் இயக்குநராக உடனே தேர்ந்தெடுத்தது, திரைப்படக்கல்லூரியில் தன்னுடன் படித்த, ‘கத பறயும் போள்’ கதையை உருவாக்கின ஸ்ரீனிவாசனை அல்ல. ‘சின்னதம்பி’ போன்ற கலைநயம் மிக்க காவியங்களைப் படைத்த பி.வாசுவை. ஏன்? இதை மலையாளத் திரைப்படத்தின் பாணியிலேயே எடுத்தால், தான் நடித்தாலும் கூட அது ஊத்திக் கொள்ளும் என்று ரஜினிக்கு தெளிவாகவே தெரியும். எனவேதான் இந்த எளிமையான கதையில் தேவையான மசாலா சமாச்சாரங்களை சேர்த்து கொத்து பரோட்டாவாக்கி தமிழ் ரசிகர்களுக்கு படைக்க, மசாலா சமாச்சாரத்தில் விற்பன்னரான வாசுவை அழைத்திருக்கிறார். ஏகப்பட்ட பில்டப்புடன் வெளிவந்த ‘பாபா’ படுதோல்வி அடைந்த போது அதிலிருந்து ‘சந்திரமுகி’யின் மூலம் தன்னை மீட்டெடுத்துக் கொடுத்த வாசுவின் திறமை பற்றி ரஜினி நன்றாக அறிவார்.

இந்த இடத்தில் P.வாசுவைப் பற்றி சற்று பேச வேண்டும். இவரின் பெரும்பாலான.. மன்னிக்கவும் அனைத்துப் படங்களும் அவரின் இனிஷயல் போலவே இருக்கும் என்பதில் நமக்கு சந்தேகமே இல்லை. (ஆரம்பத்தில் சந்தானபாரதியுடன் இணைந்து எடுத்த ‘பன்னீர் புஷ்பங்கள்’ மாத்திரம் ஒரு ஆச்சரியமான விதிவிலக்கு). தமிழ்த்திரைப்படங்களின் வரிசையில் மற்ற பெரும்பாலான இயக்குநர்களைப் போலவே குப்பைகளை தோரணங்களாக அடுக்குபவர். ‘சின்னதம்பி’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை நினைத்தால் இப்போது கூட எனக்கு புல்லரிக்கிறது. விதவைத் தாய் ஒருத்தியை அவமானப்படுத்தும் நோக்கத்தில் வில்லன் வண்ணப்புடவை கட்டி, குங்குமம் வைக்கும் போது பாய்ந்து வரும் மகன் குதிக்கும் போது தெறிக்கும் நீரில் தாயின் குங்குமம் அழிந்து புடவையும் வெள்ளையாகி விடும். ஒரு அடிமட்ட pervert-களினால்தான் இவ்வாறெல்லாம் காட்சிகளை யோசிக்க முடியும். இதைப் போல நிறைய பெர்வர்ட்டுகள் தமிழ் இயக்குநர்களாக உள்ளனர்.

இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநரான இருந்து குருவின் பெயரை களங்கப்படுத்தும் இப்பேர்ப்பட்ட பிரகஸ்பதிதான் இந்தப்படத்தை இயக்குவது. படம் தயாரிக்கப்படும் முன்னரே இந்தப்படத்தில் தன்னுடைய பங்கு 25 சதவீதம்தான் இருக்கும் என்று ரஜினிகாந்த், ரசிகர்களிடம் அதிகபட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் தெளிவுபடுத்தி விட்டாராம். ஆனால் மசாலா விற்பன்னரான வாசு இதை ஏற்றுக் கொள்வாரா? படம் கல்லாப்பெட்டியை நிரப்ப வேண்டுமே. அதனால் ரஜனிக்கு தேவையான மசாலாவையெல்லாம் பதமாக அரைத்து எளிமையான மலையாளத்திரைக்கதையின் வண்ணமே தெரியாமல் முழுக்க கோமாளித்தனமான அலங்காரங்களை செய்திருப்பார் என்பதை படம் வெளிவந்த பிறகுதான் உணர வேண்டும் என்பதில்லை.

இதுவரை வெளிவந்திருக்கும் ‘குசேலன்’ படத்தின் புகைப்படங்களே இதற்கு முன்னோட்டமாக உள்ளன. இதற்கு முன்னர் வெளிவந்த ‘சிவாஜி’ யை ஒத்த அதே மாதிரியான ஒப்பனையுடன் (இதில் கூடவா காப்பி?) பிரதானமான போஸ்களுடன் ரஜினிகாந்தின் உருவத்தையும், ஒரு தமிழ் சினிமா நாயகி காட்ட வேண்டிய அத்தனை அம்சங்ளையும் காட்டிக் கொண்டு நயனதாராவின் கவர்ச்சியையும் காணும் போதே படத்தின் வாசனையை நுகர முடிகிறது.

ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அவருக்கே கதாநாயகியாகவும் நடித்து இப்போது நாயகி பதவியிலிருந்து ரிட்டயர்டும் ஆகி பசுபதியின் மனைவியாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையில், தாத்தா வயதுள்ள ‘ஆன்மீகவாதி’ ரஜினி அதிஇளமை நடிகைகளோடு ஜோடி சேர்ந்து அசட்டுத்தனமான ஒப்பனையோடு செயற்கை இளமை துள்ள நடிப்பதும் அதை எந்தவித சொரணையுமில்லாமல் தமிழ் ரசிகர்கள் பார்த்து ரசிப்பதும் கொடுமையின் உச்சக்கட்டம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

குசேலன் படத்தின் புகைப்படங்களில், மலையாள திரைக்கதையின் படி சொற்ப நேரம் வருகிற பாத்திரமான ரஜினியே பிரதானமாக இருப்பதையும், கதையின் முக்கிய பாத்திரமான பசுபதியும் அவரின் குடும்பமும் இந்தப்படத்தில் இருக்கிறார்களா என்கிற கேள்வியை எழுப்பும் அளவிற்கு மூடி மறைக்கப்பட்டதையும் பலரும் சுட்டிக் காட்டி கண்டித்ததில் தற்சமயம் வெளியாகும் விளம்பரங்களில் ஒரு ஓரத்தில் பசுபதியையும் இன்ன பிறரையும் கறுப்பு வெள்ளையில் (வண்ணத்தில் ரஜினியும் நயனதாராவும்) வெளியிடுகிறார்கள்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு கூத்து நடந்தது. விழாவில் ரஜினி பேசும் போது சொன்னது, படப்பிடிப்பின் போது யாரோ ஒரு பையன் அவரையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தானாம். ஏன் இந்தப் பையனை துரத்தாமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று இவர் யோசித்தாராம் . பிறகுதான் தெரியவந்ததாம், அது தான் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் என்று. தன்னுடைய படத்தின் இசையமைப்பாளரே யார் என்று தெரியாமலிருக்கும் இந்த பிரகஸ்பதியைத்தான் தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஒரு சமயத்தில் மலை போல் நம்பிக் கொண்டிருந்தார்கள், ஏதோ இவர் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டில் தேனும் பாலும் ஓடப் போகிறது என்கிற கற்பனையுடன்.

பாவம் பசுபதி. கூத்துப் பட்டறையில் திறமை காட்டிக் கொண்டிருந்தவரை கமல் அழைத்து ‘விருமாண்டியில் ஒரு சாகஸ வில்லனாக சித்தரித்தவுடன் நம் தமிழ் இயக்குநர்கள் சுள்ளானுக்கும் வவ்வாலுக்கும் வில்லனாக நிறுத்தி ‘ஏய்’ என்று உறும விட்டு விட்டார்கள். அதே கமல் ‘மும்பை எக்ஸ்பிரஸில்’ பசுபதியை இன்னொரு பரிமாணத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் பொருத்தி வித்தியாசம் காட்டினாலும் மற்ற இயக்குநர்கள் அவ்வாறு யோசிக்கவே மாட்டார்கள்.

()

திரைப்படம் என்கிற ஊடகம் சமுகத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி மக்களிடையே புரட்சியையும் விழிப்புணர்வையும் உருவாக்கக்கூடிய பலமான ஆயுதம் என்கிற சமாச்சாரமே வணிகம் என்கிற பலம் வாய்ந்த சக்தியின் முன் மங்கிப் போயிருக்கின்றது. இதைப் பற்றிய எந்த உணர்ச்சியுமில்லாத ரசிகசிகாமணிகள் ஆட்டு மந்தைகள் போல் நடிகர்களின் பின்னால் சென்று கொண்டு ‘சிவாஜியும் குசேலனும்” எவ்வளவு கோடிகளில் விற்பனையாகியது என்று ‘எக்னாமிக்ஸ்’ பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் திரையில் உற்பத்தியாகிற நடிகர்களின் கதாநாயக பிம்பங்களை உண்மையென்று மயங்கி தம்மை ஆளும் பொறுப்பினையே அவர்கள் வசம் ஒப்படைக்கத் தயாராக இருப்பது மூடத்தனத்தின் உச்சம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

பிரம்மாண்டமான விளம்பரங்களின் மூலமும் நடிகைகளின் கவர்ச்சிகளின் மூலமும் ஊசிப்போன குப்பைகளை அழகான உறையிலிட்டு ருசிக்கக் கொடுக்கும் இவ்வாறான வணிகப் பொருட்களை விழிப்புணர்ச்சி உடைய நுகர்வோர்கள் என்ற பொறுப்புணர்ச்சியோடு நாம் புறக்கணிக்க வேண்டும் என்பதே என்னுடைய வழமையான வேண்டுகோள்.

இது ஏதோ ரஜனி என்கிற தனிமனிதரின் மீதும் குசேலன் என்கிற படத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு அல்ல. அனைத்து வணிகப்படங்களின் / நடிகர்களின் / இயக்குநர்களின் மீதான விமர்சனமாகவே இதைப் பார்க்க வேண்டும். தமிழ்ச்சினிமாவின் ஆரோக்கியமான போக்கை நீண்ட வருடங்களாக தடுத்துக் கொண்டிருக்கும் வணிகப்படங்களின் வரிசையில் பிரதானமாக ரஜினியும் அவரது படங்களும் இருக்கிற காரணங்களினாலேயே அதைப் பற்றி எழுதுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இவ்வாறான வணிகப்படங்களை தொடர்ந்து தோற்கடிப்பதின் மூலம்தான் பாலா, அமீர், செல்வராகவன், பாலாஜி, வெற்றிமாறன், சசிகுமார் என்று நம்பிக்கை தரும் இயக்குநர்கள் தங்கள் படைப்புகளை இன்னும் அதிகபட்ச கலைஅம்சத்துடன் தருவதற்கான வழிவகைகளை ஏற்படுத்த இயலும்.

குசேலன் வெளிவரப்போகும் உற்சாகத்திலும் கொண்டாட்டத்திலும் சத்தத்தின் இடையில் இந்தப் பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் என்னுடைய ஆதங்கம் பெரும்பான்மையானவர்களின் கவனத்தில் பதியாது என்பதை உணர்ந்தே இருந்தாலும், ஊதுகிற சங்கை ஊதி வைப்போமே என்றுதான் இதை எழுதத் துணிந்தேன்.

தொடர்புடைய இன்னொரு பதிவு: சிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்

suresh kannan

Monday, July 21, 2008

எழுத்தாளரின் மனைவி

லோக்சபா சேனலில், கோவிந்த நிஹ்லானியின் 'Party' (1984) என்கிற திரைப்படத்தை காண நேர்ந்தது.

Photobucket

இங்கே இயக்குநரைப் பற்றின சிறு அறிமுகம். கோவிந்த் நிஹ்லானி அடிப்படையில் ஒர் ஒளிப்பதிவுக்காரர். ஆரம்பக் காலங்களில் ஷியாம் பெனகல், க்ரீஷ் கர்னாட், ரிச்சர்ட் அட்டன்பரோ (காந்தி) போன்றோரோரின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். பின்னர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராகின பிறகு இவரின் முதல்படமான 'ஆக்ரோஷ்', சினிமா பார்வையாளர்களையிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு இந்தியத் திரைப்பட விழாவில் Golden Peacock விருதைப் பெற்றது.

கோவிந்த் நிஹ்லானி இயக்கத்தில் வெளிவந்த, 'அர்த் சத்யா' என்கிற திரைப்படம் பாலுமகேந்திராவால் 'மறுபடியும்' என்றும் 'துரோக்கால்' என்கிற திரைப்படம், கமலால் 'குருதிப்புனல்' என்றும் தமிழில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தன.

Photobucket

இனி Party திரைப்படத்திற்கு வருவோம். இது இந்தியத் திரைப்படங்களின் வழக்கமான கதை சொல்லும் முறையிலிருந்து பெரிதும் விலகி நிற்கிறது. பாத்திரங்களின் உரையாடல்கள், முகபாவங்கள், அதன் மூலம் வெளிப்படும் அவர்களின் அகச்சிக்கல்கள் பார்வையாளர்களுக்கு உணர்த்தப்படுவதின் முலாமாக கதை நகர்த்தப்பட்டு ஒரு திருப்பமான புள்ளியில் நிறைகிறது. எந்தவொரு கறுப்பு மற்றும் வெள்ளையாக இல்லாமல் அவரவர்களின் நியாயங்களோடும் பார்வையோடும் வெளிப்பட்டிருக்கிறது.

திவாகர் பார்வே (மனோகர் சிங்) என்கிற எழுத்தாளருக்கு தேசிய விருது வழங்கப்படுவதையொட்டி அவரது ஆதரவாளரான மேல்தட்டு வர்க்க தமயந்தி (விஜயா மேத்தா) என்பவர் ஒரு 'பார்ட்டி' தருகிறார். நகரின் முக்கிய கலைஞர்கள் அதில் கலந்து கொள்கின்றனர். இதில் கலந்து கொள்கிறவர்களின் அறிமுகம் பார்ட்டிக்கு முன்பாக சிறுசிறு காட்சிகளின் மூலம் பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு தனது நாடக நடிப்பை கைவிட்டு விட்ட ஆதங்கத்தோடும் கணவனின் அரவணைப்பின்றியும் இருக்கும் எழுத்தாளரின் மனைவியான மோகினிக்கு (ரோஹிணி அட்டங்காடி) இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள விருப்பமில்லை. கணவரின் கட்டாயத்தினால் கலந்து கொள்கிறார். நியூஸ் ஏஜென்சியில் பணிபுரியும் ஒரு பேரிளம்பெண் தனது இளவயது ஆண் நண்பனுடனும் பார்ட்டியில் கலந்து கொள்கிறார். ("அங்கிருக்கும் பெண்களை பார்த்து வழியாதே"). அங்கீகாரத்திற்கு ஏங்கும் ஒரு நடுத்தர வர்க்க கவிஞன், கம்யூனிஸம் பேசும், திருமணத்திற்கு ஏங்கும் ஒர் இளம் பெண், நாடக நடிகன் என்று பலதரப்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

()

எழுத்தாளரின் மனைவி மீது நடிகனுக்கு உள்ள காதல், பேரிளம் பெண்ணுடன் வந்த இளைஞனுக்கும் பார்ட்டிக்கு வரும் ஒரு திருமணமான பெண்ணுக்கும் ஏற்படும் காமம், அங்கீகாரத்திற்கு ஏங்கும் கவிஞனின் தாழ்வு மனப்பான்மை, அதைப் பயன்படுத்திக் கொள்ள முயலும் கம்யூனிஸப் பெண், பார்ட்டியை host செய்யும் தமயந்தியின் குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகள், திருமணமான பெண்ணை தொந்தரவு செய்யும் நாடக ஆசிரியன், தன்னுடைய கொண்டாடங்களை நிகழ்த்த இந்த விருந்தை பயன்படுத்திக் கொள்ளும் இளம் தலைமுறையினர் என்று அவர்களின் பாசாங்குகள் மெல்ல மெல்ல வெளிப்படுகின்றன. இவற்றோடு ஒட்டாத டாக்டராக அம்ரிஷ்புரி.

இவர்களின் உரையாடல்களின் ஊடே அம்ரித் என்பவனைப் பற்றின ஆளுமை வெளிப்படுகிறது. அவன் சிறந்த கவிஞனாக இருக்கிறான். பழங்குடியினரின் நிலமீட்பு போராட்டத்திற்கான களப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். நீண்டநாட்களாக அவனைப் பற்றின தகவல்கள் இல்லை. அவன் இந்த பார்ட்டிக்கு வருவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலோனோர் அவனைப் பற்றி விசாரிக்கின்றனர்.

இந்தப் பார்ட்டியில் பிரதானமாக வெளிப்படுவது எழுத்தாளருக்கும் அவனது மனைவிக்கும் உள்ள இடைவெளி. திருமணத்திற்கு பிறகு கணவருக்காக நாடக நடிப்பினை கைவிட்டு விடும் மோகினி, தன்னுடைய கலையாற்றளுக்கான வெளிப்பாடு நிகழ்த்தப்படாத மன உளைச்சலிலும் கணவரின் தேவையில்லாத அலட்டல்களினாலும், அரவணைப்பின்மையாலும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். பா¡ட்டிக்கு வரும் மோகினியிடம் தமயந்தி 'இன்று நீ மிக அழகாக இருக்கிறாய்" என்னும் போது "அதுவா! நான் குடித்திருக்கிறேன்" என்று அதிரடியாக கூறுமளவிற்கு அவள் மனநிலை அமைந்துள்ளது. பார்ட்டியில் அதிகமாக குடித்துவிட்டு கீழே விழுந்து scene செய்வதிலும் தன்னுடைய அக மற்றும் புற பிரச்சினையை மோனாவிடம் புலம்பி கிளம்பும் போது "என்னுடைய தலைமுடி சரியாக இருக்கிறதல்லவா?" என்று இளம் பெண்களின் மீதான பொறாமையுடன் மிகையான ஒப்பனையுடன் வெளிவரும் தன்னுடைய பாத்திரத்தை திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் ரோஹிணி அட்டங்காடி. Best Supporting actress-க்கான தேசிய விருது இந்தப்படத்தில் இவருக்கு கிடைத்தது.

தன்னுடைய எழுத்தினால் கிடைத்த விருதினால் கர்வம் கொண்டிருக்கிற எழுத்தாளர் போதை ஏறிய ஒரு கணத்தில் இயல்பாக வெளிப்படுகிறார். "ரயிலில் சென்று கொண்டிருக்கிறேன். பலத்த மழை பொழிந்து கொண்டிருக்கிறது. ஒரு வயதான பழங்குடி மனிதன் மழையில் நனைந்து கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான். நான் எழுதும் எந்த இலக்கியமும், கலையும் அவனைச் சென்று சேர்வதில்லை. அப்போது நான் யாருக்காக எழுதுகிறேன்."

()

அம்ரித்தின் நண்பனான ஓம்புரி கையில் கட்டோடு பார்ட்டிக்கு வருகிறார், அம்ரித் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியோடு. அம்ருத்தைப் பற்றி துவங்குகிற உரையாடல் கலை x இலக்கியம் என்கிறதாக பயணிக்கிறது. "கலை என்பது வலிமையான ஆயதத்தை அரசியல் பிரச்சினைகளுக்காக பயன்படுத்துவதின் மூலமே ஒரு படைப்பாளி முழுமையாக தன்னுடைய கடமையை ஆற்றுகிறான்" என்கிறார் ஓம்புரி. "அப்போது கலை, கலைக்காகவென்று இயங்கக்கூடிய சுதந்திரம் இருக்கக்கூடாதா" என்று கேட்கிறார் இளம் கவிஞர். " அரசியலில் ஈடுபடாத கலையினால் எந்த பயனுமில்லை என்கிறார் டாக்டர்.

அப்போது ஒம்புரிக்கு தொலைபேசியின் வழியாக ஒரு செய்தி கிடைக்கிறது. ...

()

இந்தப்படத்தில் நான் பெரிதும் வியந்த அம்சம், படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே தொடங்கி விடுகிற பார்ட்டிதான் படத்தின் பிரதான களம். படம் முழுவதும் பார்ட்டி மனிதர்களைச் சுற்றியே இயங்குகிறது. கையில் மதுக்கோப்பையோடு மனிதர்கள் உரையாடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் படத்தின் எந்த இடத்திலும் தொய்வோ, ஜெர்க்கோ இல்லை. இரண்டு மணி நேரத்தில் கதை சொல்லப் போகிற ஒரு திரைப்பட இயக்குநருக்கு இது பெரிய சவால்தான். ஆனால் கோவிந்த் நிஹ்லானி தன்னுடைய இறுக்கமான திரைக்கதையின் மூலமும் சுவாரசியமான பாத்திரத் சித்தரிப்புகள், உரையாடல்களின் மூலமும் இந்த சவாலை மிக திறமையாக தாண்டி வருகிறார்.

படத்தின் நிறைவுக் காட்சியில் சில கணங்களில் மாத்திரம் நஸ்ருதீன் ஷா வருகிறார். தமயந்தியாக நடிக்கும் விஜயா மேத்தாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். பார்ட்டி ஆரம்பிப்பதற்கு முன் அவர் காட்டுகிற பதட்டமும், மோனா தன்னை parasite என்று விமர்சிப்பதில் ஏற்படும் தடுமாற்றத்தையும் இயல்பாக வெளிப்படுத்துகிறார்.

மாற்று சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத படம்.

suresh kannan

Tuesday, July 08, 2008

சுஜாதாவும் அசத்தலான ஒரு கொரிய திரைப்படமும்

"'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் 'மூலப் படம்' இதுதான். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்" என்று நண்பர் dvd ஒன்றை தந்தார். - Memories of Murder (2003) என்பது அந்த தென்கொரிய படத்தின் title. பூசணிக்காய் முகமும் இடுங்கிய கண்களுமாய், பிரதான வேடத்தில் நடிப்பவன் போல் தோன்றியவனின் முகத்தை குறுந்தகட்டின் மேலட்டையில் பார்த்த கணத்திலேயே எனக்குப் பிடிக்காமல் போனது. மிகவும் அசுவாரசியத்துடன், தூக்கம் வரும்வரை சிறிது நேரம் பார்ப்போம் என்றுதான் பிளேயரை இயக்கினேன். ஆனால்.... படம் முடியும் வரை என்னால் படத்தை நிறுத்த முடியவில்லை.

சுஜாதாவின் நாவல்களில் எனக்குப் பிடித்தவற்றில், 'எதையும் ஒரு முறை' என்ற நாவலும் ஒன்று. வழக்கமான துப்பறியும் நாவல்களின் முடிவுகளிலிருந்து அந்த நாவல் விலகி நிற்கும். கொலையாளி யாரென்று நன்றாகத் தெரிந்தும் அவனை சட்டத்திற்கு முன்னால் நிறுத்த இயலாமல் நடைமுறை யதார்த்தமாக நிறைகிற நாவல் அது. பணக்கார சைக்கோ ஒருவன் உலகிலுள்ள 'எதையும் ஒரு முறை' முயன்று பார்ப்பவன். அவ்வாறு அவன் முயன்று பார்க்க விரும்பும் பட்டியலில் 'கொலையும்' உண்டு. ஏழ்மையான செக்ஸ் தொழிலாளி ஒருத்தியை வரவழைத்து கொன்று விடுவான். கணேஷ¥ம் வசந்த்தும் அவன்தான் கொலையாளி என்பதை தங்களுடைய பிரத்யேக உத்திகளின் மூலம் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் அந்த சைக்கோ தன்னுடைய பணபலத்தின் மூலம் அனைத்து சாட்சியங்களையும் கலைத்து விடுவான். எனவே சட்டரீதியாக தண்டிக்க முடியாத நிலையிலேயே அந்த நாவல் முடியும்.

'எதையும் ஒரு முறை' முயலும் அவன் 'அதையும்' ஒரு முறை முயல்வான்" என்பான் கணேஷ். 'என்ன பாஸ்' என்ற வசந்தின் கேள்விக்கு "தற்கொலையை" என்று பதில் வரும்.


Photobucket

இந்தப்படமும் ஏறக்குறைய இதே போக்கில்தான் செல்கிறது என்றாலும் முடிவு எதிர்பாராதவிதமாக இருக்கிறது. தென் கொரியாவில் 1986 - 1991- கால கட்டத்தில் நிகழ்ந்த தொடர்கொலைகளின் அடிப்படையில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இரவில் தனியாகச் செல்லும் பெண்கள் கற்பழிக்கப்பட்டு அவர்களின் உள்ளாடைகளினாலேயே முகம் மூடப்பட்டும் கழுத்து இறுக்கப்பட்டும் கொலை செய்யப்படும் தொடர் சம்பவங்கள் நிகழ்கின்றன. அந்தப் பகுதியில் இது மாதிரியான கொலைச் சம்பவங்கள் புதிதானது என்பதால் மக்களின் இடையே இது பீதியை உண்டாக்குகிறது. உள்ளுர் துப்பறிவாளனான Park Doo-man எப்படியாவது கொலையாளியை கண்டுபிடிப்பதில் துடிப்பாக இருக்கிறான். ஆனால் அவனின் அதிரடியான அணுகுமுறையால் இதை சாதிக்க முடியவில்லை. மன முதிர்ச்சிற்ற ஒரு இளைஞனை நையப்புடைத்து கொலைகளை ஒப்புக் கொள்ளச் சொல்கிறான். ஆனால் சந்தர்ப்ப, சூழ்நிலைகள் பொருந்தாமல் போவதால் அவன் வேறு வழியின்றி விடுவிக்கப்படுகிறான்.

இதனிடையே சியோலில் இருந்து சுயவிருப்பமாக Seo Tae-yoon என்பவன் இதை துப்பறிவதற்காக வருகிறான். இவன் Park Doo-man-ஐ போலன்றி தர்க்க ரீதியாக சிந்தித்து கொலையாளியை கண்டுபிடிக்க முயல்கிறான். இதனால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு அவர்களின் உயரதிகாரியால் கண்டிக்கப்படுகிறார்கள். நடுஇரவில் பெண்களின் உள்ளாடைகளின் மேல் சுயஇன்பம் செய்பவன் ஒருவனை கண்டுபிடித்து அடித்து விசாரிக்கிறார்கள். நோயாளி மனைவியால் இல்லற சுகம் காண முடியாத அவன் pervert-ஆக மாறியிருப்பதும் அவனுக்கும் கொலைகளுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிகிறது. இதனிடையே பெண்கள் கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. துப்பறிவாளர்கள் அப்பாவிகளை துன்புறுத்துவதாக செய்தித்தாள்களின் வழி வெளிப்படும் செய்திகளால் பொதுமக்களுக்கு இவர்களின் மீது அதிருப்தி ஏற்படுகிறது. கொலைக்களத்தில் எந்தவித துப்பும் போதுமான தடயங்களும் கிடைக்காமல் துப்பறிவாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதனிடையே மழை பெய்கின்ற நாளில்தான் கொலைகள் நடைபெறுகின்றன என்பதையும் அந்த குறிப்பிட்ட நாளில் வானொலியில் குறிப்பிட்ட ஒரு பாடல் நேயர் விருப்பமாக ஒலிபரப்பப்படுவதையும் கண்டுபிடிக்கின்றனர். வானொலி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலம் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவனை விசாரிக்கின்றனர். ஆனால் அவனோ கல்லுளி மங்கனாக 'நான் அவனில்லை' என்று சாதிக்கிறான். துப்பறிவாளர்களுக்கு இவன்தான் என்ற சந்தேகம் வலுக்கிறது. பிறகு நடக்கின்ற கொலைச் சம்பவமொன்றில் பெண்ணின் உள்ளாடையில் படிந்திருக்கும் விந்தணுக்களோடு இவனின் விந்தணுக்களையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிவு செய்கின்றனர். அந்த வசதி அந்தப்பகுதியில் இல்லாததால் அமெரிக்காவிற்கு அனுப்பி அதுவரை காத்திருக்க முடிவு செய்கின்றனர். தகுந்த சாட்சியம் இல்லாததால் அவனை அனுப்பிவிட்டு தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.

மனமுதிர்ச்சியற்ற இளைஞன் கொலையாளியை நேரில் பார்த்திருக்கிறான் என்பதை அறிந்து அவனை விசாரிப்பதற்குள் ரயில் மோதி இறந்து போகிறான். இதனிடையே Seo Tae-yoon ஒரு சூழ்நிலையில் முதலுதவி செய்திருக்கும் ஒரு பள்ளிச்சிறுமி கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டவுடன் மிகுந்த ஆவேசம் கொள்கிறான். தொழிற்சாலை பணியாளனை தேடிப்பிடித்து கடுமையாக அடிக்கிறான். அப்போது சக துப்பறிவாளனான Park Doo-man அமெரிக்காவில் வந்திருக்கும் ரிப்போர்ட்டை காண்பிக்கிறான். அந்த ரிப்போர்ட்டின் படி தொழிற்சாலை பணியாளன் குற்றமற்றவன் என்பதாக தெரிகிறது. ஆவேசம் அடங்காத Seo Tae-yoon 'ரிப்போர்ட்டையெல்லாம் நம்ப மாட்டேன்" என்று சொல்லிக் கொண்டே துப்பாக்கியால் சுடுகிறான். என்றாலும் தொழிற்சாலை பணியாளன் ஒருவழியாக தப்பிப் போகிறான்.

()

படம் உடனே சுமார் 13 வருடங்கள் தாவி 2003-ன் நிகழ்வுகள் காண்பிக்கப்படுகின்றன. Park Doo-man துப்பறியும் தொழிலில் இருந்து விலகி மா¡க்கெட்டிங் தொழில் செய்கிறான். ஒரு பயணத்தின் போது முதன் முதல் கொலை நடந்த இடத்திற்கு அவன் செல்ல நேர்கிறது. பிணமிருந்த இடத்தை பார்க்கப் போகிறான்.

பிறகு என்ன நடக்கிறது..... என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். :-)

எந்தவிதமான உயர்நிலை தொழில்நுட்ப சங்கதிகளும் பயன்படுத்தப்படாமலேயே இந்தத் திரைப்படம் பிரமாதான திரைக்கதையின் மூலம் பார்வையாளனுக்கு ஒரு திகிலான காண்பனுபவத்தை வழங்குகிறது. பெண்ணை பாய்ந்து பிடிக்கும் கொலையாளியின் முகம் சில மைக்ரோ செகண்டுகளே தெரிகிறது. Park Doo-man ஆக நடித்திருத்திருப்பவர் பிரமாதமாக நடித்திருக்கிறார். போலி தடயங்களை ஏற்படுத்தி குற்றவாளியை ஒப்புக்கொள்ள வைக்கும் ஆரம்ப நிலையிலும், புதிதாக வரும் Seo Tae-yoon மீது எரிச்சல் அடைவதிலும் தன் மனைவியிடம் புலம்புவதிலும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் ஏற்படும் மன உளைச்சலையும், பின்பு Seo Tae-yoon-ன் நேர்த்தியான அணுகுமுறைகளை ஒப்புக் கொள்வதிலும் என பிரமாதப்படுத்துகிறார். இடுங்கிய கண்களை வைத்தே காட்சிகளின் உணர்வுகளுக்கேற்ப மிகத் திறமையாக இவர் நடித்திருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. Seo Tae-yoon-ஆக நடித்திருப்பவரும் நன்றாக செய்திருக்கிறார். பின்னணி இசை மிக நேர்த்தியாகவும் தேவையான காட்சிகளில் பரபரப்பை ஏற்படுத்துவதிலும் என பிரமாதமாக பதிவாகியிருக்கிறது.

Bong Joon-ho என்பவர் இயக்கிய இத்திரைப்படம் cannes film festival, tokyo film festival போன்ற பல விழாக்களில் திரையிடப்படும், விருதுகள் பெற்றதோடு அல்லாமல் கொரியாவில் "பார்வையாளர்களால் அதிகமுறை விரும்பிப் பார்க்கப்பட்ட படம்" என்கிற சிறப்பையும் பெற்றிருக்கிறது.

தொடர் கொலைகளும் துப்பறிபவர்களை முயற்சிகளை நெருக்கமாக அணுகுவது என்கிற ரீதியில்தான் "வேட்டையாடு விளையாடு" திரைப்படத்திற்கும் இதற்கும் ஒற்றுமைகள் இருக்கின்றனவே தவிர, தமிழ்ப்படங்களில் உள்ள கொடுமைகள் இதில் இல்லை.

suresh kannan

Wednesday, July 02, 2008

கமலின் 'அபத்த' அவதாரம்

இணையத்தில் ஏற்கெனவே இந்தப்படத்தை கிழித்து எறிந்தும், தூக்கிக் கொண்டாடியுமான பதிவுகளின் ஆரவாரங்கள் அடங்கின இந்தச் சமயத்தில் ஒரு அதிதாமத பதிவை எழுத என்னைத் தூண்டியது, chaos theory-ஆ, பெருமாளா, மன அரிப்பா, யாரோ, எந்த காரணமோ நானறியேன். நிறைய விமர்சனங்களைப் படித்த பின்பும் எந்த முன்தீர்மானமும் இல்லாமலிருக்க முயன்றுதான் இந்தப் படத்தை அணுகினேன்.

உண்மையில் இந்தப்படத்தைப் பற்றின செய்திகள் ஆரம்பத்திலிருந்தே எனக்கு உவப்பானதாக இல்லை. 'பத்து வேடங்கள்' என்னும் போதே, அதுதான் பிரதானமாக இருக்கப் போகிறது என்பதையும் கதையோ, திரைக்கதையோ முறையாக இல்லாமல் ஒரு typical வணிகப்படமாகத்தான் இருக்கப் போகிறது என்பதையும் யூகிக்க முடிந்தது. (அதிலும் கே.எஸ்.ரவிகுமார் வேறு). எனவேதான் இந்தப்படத்தை உடனே பார்ப்பதற்கான எந்த ஆவலும் இல்லாமலிருந்தேன்.

இந்தப் படத்தை 'உலகத்தரமான படம்" ' பத்து வேடங்களில் முதன் முறையாக.... blah blah... 'உலக நாயகன்" என்பது போன்ற விஷயங்களையெல்லாம் கட்டிக் கொண்டு மாரடிப்பதை தவிர்க்க வேண்டும். பாமர ஜனங்களை ஏமாற்ற படத்தயாரிப்பாளர்கள் இந்த விஷயங்களை hype செய்து விளம்பரம் அடித்துக் கொள்ளட்டும். திரைப்படம் என்கிற ஊடகத்தின் அடிப்படையை எளிமையாக புரிந்து வைத்திருக்கிற பார்வையாளனுக்கு கூட இந்தப்படம் ஒரு அப்பட்டமான gimmicks என்பது எளிதில் புரிந்துவிடும். எனவே, வழக்கமான அருவா, துப்பாக்க நாயக திரைப்படங்களிலிருந்து விலகி நின்று வழக்கம் போல் கமல் செய்திருக்கிற ஒரு வணிக முயற்சி என்கிற நிலையிலேயே இந்தப்படத்தை அணுகலாம்.

Photobucket

படத்தின் கதை (?) என்ன என்பது இந்நேரம் நாளைக்குப் பிறக்கப்போகிற குழந்தைக்குக் கூடத் தெரிந்திருக்கும் . உண்மையில் இந்தப்படத்தில் கதை என்கிற சமாச்சாரம் இருக்கிறதா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இல்லாத ஒன்றுக்காகவா நீதிமன்றத்தில் அடித்துக் கொண்டார்கள் என்பதும் நகைப்புக்குரியதாக இருக்கிறது. 12-ம் நூற்றாண்டில் இருந்து பிரமிப்புடனும் சீரியசாகவும் ஆரம்பிக்கும் திரைக்கதை, கமல் இந்தியா வந்தவுடனே 'மைக்கேல்மதனகாமராஜன்' படத்தின் மோசமான பிரதி போல் ஆகிவிடுகிறது. (தசாவோடு ஒப்பிடும் போது மைக்கேல் சுவாரசியமான படம்).

வேறு ஒரு உருவத்துக்குள் கூடுமாறிப் போவதில் கமலுக்கு 'தப்புத்தாளங்கள், கடல்மீன்கள், 'எனக்குள் ஒருவன்' ......காலத்திலிருந்தே ஒரு பிரேமை. நல்லதுதான். உண்மையான கலைஞனுக்குள் இருக்கிற தாகம்தான் அது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நாளுக்கு நாள் அதுவே ஒரு வியாதியாக வளர்ந்து போய் இந்தப்படத்தில் வியாதி முற்றிப் போய் இருக்கிற நிலையை காண முடிகிறது. ஒரு அழுத்தமான கதைக்காக 'பாத்திரங்கள்' என்பதில்லாமல் reverse-ஆக 'பத்து வேடங்கள்' என்பதை முடிவு செய்து கொண்டு அதற்கேற்ப கதையை (!) தயார் செய்ததில் பெருங்குழப்பமே ஏற்பட்டிருக்கிறது. சம்பந்தமேயில்லாமல் 12-ம் நூற்றாண்டில் துவங்கி அதை சமீபத்திய சுனாமி வரை தொடர்புபடுத்துவதற்குள் (அதாங்க கேயாஸ் தியரி) அவர்களுமில்லாமல் நம்மையும் மூச்சு வாங்க வைத்திருக்கிறார்கள்.

ஒரு வணிகப்பட நாயகனின் ஆர்ப்பாட்ட அறிமுகத்திற்கு எந்தவித குறைச்சலுமில்லாமல் ரங்கராஜன் நம்பி ஆர்ப்பாட்டமாக சண்டைக் காட்சியில் அறிமுகமாகிறார். 12-ம் நூற்றாண்டில் இப்படித்தான் தமிழ் பேசப்பட்டதா என்பதை தமிழறிஞர்கள்தான் சொல்ல வேண்டும். 'கயிலாயத்தில் கயவர்களுக்கு இடமில்லை' என்பதெல்லாம் கருணாநிதி பாணி மாதிரியிருக்கிறது. உலகத்தையே அழிக்கும் ஒரு உயிர்க்கொல்லி கிருமியை கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்யும் ஒரு விஞ்ஞானி, அதை அழிப்பதற்கு இப்படியா திணறுவார் என்பது ஆச்சரியமாயிருக்கிறது. இது போன்ற பல லாஜிக் ஓட்டைகளினால் படத்தில் ஒன்ற முடியவில்லை.

()

பெரும்பாலோரைப் போல எனக்கு பிடித்த கமல் 'பல்ராம் நாயுடு'தான். ஆனால் இப்படி ஒரு கோமாளி, 'ரா'பிரிவின் தலைவராக இருப்பார் என்கிற கேள்வி எழுகிறது. சொல்ல முடியாது. இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். விஞ்ஞானி கமலை 'விசாரணை' செய்யும் பாணியிலும் 'நூவு தெலுகு அப்பாயியா' என்று ஆவலாக விசாரித்துவிட்டு 'கன்னடிகா' என்று பதில் வரும் போது சட்டென்று மாறுகிற முகபாவமும் பின்னர் சுதாரித்துக் கொண்டு "ரெண்டுக்கும் ஒரே script-தான்' என்று சமாதானமடைவதிலும்... நாயுடுகாரு.. பாக உந்தி. "He speaks five languages in Telugu' போன்ற வசனங்களில் கிரேசி மோகன் வாசனை.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களுக்கும் இந்தப்படத்தின் பாத்திரங்களுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமையை ஆராய்ந்து சில பதிவுகளையும் யூகங்களையும் இணையத்தில் படித்தேன். வாழ்க தமிழர்கள்.

()

வித்தியாச முயற்சியை பாராட்டாமல், நொட்டை & நொள்ளை சொல்கிறாயே என்று இணையத்தில் ஏற்கெனவே கேள்வி எழுந்திருக்கிறது. ஒரளவிற்கு சரிதான். தமிழ்ச் சினிமாவின் தரத்தையும் போக்கையும் அவ்வப்போது உயர்த்திக் கொண்டே போகும் சொற்ப ஆளுமைகளில் கமல் பிரதானமானவர்தான். மறுக்க முடியாது. அதற்காக அவர் காலை 04.00 மணிக்கே எழுந்து ஒப்பனை செய்து கொண்டு சிரமப்பட்டார் என்பதற்காக ஒரு அபத்தமான திரைப்படத்தை பாராட்ட முடியாது.

நானும் ஓர் கமல் ரசிகன்தான். (இங்கே ரசிகன் என்கிற வார்த்தையை சங்கடத்தோடு பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அந்தளவிற்கு அந்த வார்ததையை பாழ்படுத்தியிருக்கிறார்கள்). நினைத்துப் பார்க்கிறேன். 'நாயகன்' திரைப்படம் படம் பார்த்து வீடு திரும்பிய அந்த மழை பொழிந்து கொண்டிருந்த தருணத்தில் உறைந்து போய் வீடு திரும்பினேன். 'வேலு நாயக்கர்' என்னுள் முழுதாக நிரம்பியிருந்தார். பின்னர் அந்தப்படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று தெரியாது. இப்போது அதனுடைய திரைப்படத்தின் குறுந்தகடு அவ்வப்போது பயன்பாடாகிக் கொண்டிருக்கிறது. அதே போல் மகாநதி, அன்பே சிவம், விருமாண்டி என்று பிற்கால படங்களாகட்டும், அவர்கள், அவள் அப்டித்தான், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து.. என்று முற்கால படங்களாகட்டும், கமலின் உழைப்பையும் ஈடுபாட்டையும் கண்டு பிரமித்துப் போயிருக்கிறேன். கமலின் இயக்கத்தில் வந்த 'ஹேராம்' ஒரு காவியப்படமென்றே சொல்வேன்.

கமலின் survival-காக தசா.. போன்ற வணிகப்படங்களை எடுக்கட்டும். ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அவைகளை உலகத்தரமென்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு கொண்டாட முடியாது. அவரிடமிருந்து நான் எதிர்பார்ப்பது மேற்சொன்ன மாதிரியான படங்களைத்தான்.

காத்திருக்கிறேன்.....


suresh kannan