Tuesday, March 08, 2011

இல்லறத்தின் வெறுமை - Rabbit Hole

 
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள். மழலைச்சொல் கேளாதவர்' என்னும் வள்ளுவரின் வாக்கிற்கேற்ப.... என்று 1980-களின் பள்ளிக் கட்டுரை மாதிரி இதை ஆரம்பித்தால் நிச்சயம் நீங்கள் அடிக்க வருவீர்கள்.

குழந்தையின்மை ஒருவகை துன்பமெனில் நான்கு, ஐந்து வருடங்கள் கண் முன்னாலேயே தவழ்ந்து, உருண்டு, சிரித்து வளர்ந்த குழந்தையை இழந்து நிற்பது அதனினும் கொடுமை. திருமணமாகி ஒரு மாதத்திலேயே கணவனை இழந்தவளின் பாலுறவு சார்ந்த துன்பம் போல.

புலிட்சர் விருது பெற்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் உருவாக்கப்பட்ட திரைப்படம் 'Rabbit Hole'.

செயற்கையான உற்சாகத்துடன் ஆனால் உள்ளுக்குள் இயந்திரமாக வாழும் அந்தத் தம்பதியினரின் நான்கு வயது மகன் விபத்தொன்றில் இறந்து போனது சாவகாசமான திரைக்கதையின் மூலம் மெல்ல மெல்ல அவிழ்கிறது. அந்த இழப்பு தரும் துயரமும் வெறுமையும் தம்பதியினருக்குள் சண்டையை ஏற்படுத்துகிறது. இதே போல் தங்கள் குழந்தைகளை இழந்தவர்களின் குழும உரையாடலின் மூலம் துயரத்தை மழுப்பும் பாசாங்கான முயற்சிகள் அர்த்தமற்றதாகின்றன. உறவுகளின் மூலம் இந்த துயரம் தீர்வதில்லை ; மாறாக வளர்கிறது. 

அந்தத் தாய், தன் சிறிய மகனின் மரணத்திற்குக் காரணமான பதின்ம வயது இளைஞனிடம் கருணையையும் மன்னிப்பையும் வழங்குவதின் மூலம் இந்த துயரத்திலிருந்து விலக முயற்சிக்கிறாள். தகப்பனோ தன் குழும நண்பி ஒருத்தியிடம் பழக முற்படுவதின் மூலம். சில சம்பவங்களுக்குப் பிறகு அவர்களுக்குள்ளான புரிதல் ஏற்பட்டவுடன், தங்களின் கசப்பை யதார்த்த்துடன் விழுங்கி ஏற்றுக் கொள்வதோடு படம் நிறைவடைகிறது.
 
நாடகத்திலிருந்து உருவாக்கப்பட்டதினாலோ என்னமோ, திரைப்படமும் அதே போன்று உரையாடல் சார்ந்த காட்சிகளின் மூலமே பெரிதும் நகர்கின்றது.

மகன் புழங்கிய பொருட்கள் ஏற்படுத்தும் நினைவின் வலியை பொறுக்க முடியாமல் அவற்றை ஒவ்வொன்றாக தாய் அப்புறப்படுத்த முயல, மகனின் மரணத்தை அவள் மறக்க முயல்கிறாள் என்பதாகப் புரிந்து கொண்டு அவன் கோபமடைகிறான்.மரணத்திற்கு காரணமான இளைஞனுடன் தன் மனைவி நட்புணர்வாக இருப்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த இளைஞனுக்குள் இருக்கிற தனிமையையும் துயரத்தையும் அந்தத் தாயால்தான் புரிந்து கொள்ள முடிகிறது. 
 
 
மகனின் இழப்பால் துயரரும் தாய் becca - வாக  Nicole Kidman. பெரும்பான்மையான காட்சிகள் இவரைச் சுற்றியே நகர்கிறது. இதற்கும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுள் இவரும் ஒருவர் என்பதற்கும் தொடர்பிருக்காது என நம்புகிறேன். என்றாலும் மிக அற்புதமான நடிப்பு இவருடையது. இவருடைய தாயும் தன்னுடைய மகனின் மரணத்தால் துயருபவர்தான். ஆனால் இரண்டையும் ஒப்பிட்டுப் பேசுவதை பெக்கவால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. "போதை மருந்து உபயோகத்தால் இறந்து போனவனையும் நான்கு வயது குழந்தையையும் எப்படி ஒப்பிடலாம்?" என்று வெடிக்கிறாள். தாய், மகளாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களின் துயரமே பிரதானமானது என்கிற மனநிலையின் நுட்பத்தை இந்தக் காட்சி வெளிப்படுத்துகிறது.

இவரின் கணவனாக Aaron Eckhart. படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். நிக்கோலுக்கு ஈடுகொடுத்து நடிக்கிறார். செல்போனிலிருந்த மகனின் வீடியோவை மனைவி தெரியாமல் அழித்து விட்டதை இன்னொரு கோணத்தில் புரிந்து கொண்டு போடுகிற சண்டையில் இவரின் நடிப்பு அற்புதம்.

மிக மெதுவாக நகரும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை சிலர் வெறுக்கக்கூடும். ஆனால் மெதுவாக நகர்ந்தாலும் நுட்பமாகவும் நுண்ணுணர்வுகள் கொண்ட காட்சிகளை ரசிக்கும் மனநிலை வாய்த்தவர்கள் இதைக் கொண்டாடலாம்.

இது போன்ற கதைக்கருக்களை தமிழில் அநேகமாக கே.ரங்கராஜ் போன்றவர்கள் இயக்க, சிவகுமார், லட்சுமி போன்றவர்கள் நடித்திருக்க பொதிகை தொலைக்காட்சியில் கொட்டாவிகளை மென்றுக் கொண்டே அரைத்தூக்கத்தில் உங்களில் அநேகர் பார்த்திருக்கக்கூடும்.

ஆனால் இது போன்ற கதையமைப்பில் நான் பரிந்துரைப்பது, ஈரானிய திரைப்படமான Leila. குழந்தையின்மையின் வெறுமையை மிக சுவாரசியமாகவும் மெல்லிய நகைச்சுவையுடனும் Leila Hatami-ன் அருமையான நடிப்பாலும் முன்வைத்த திரைப்படம்.
 
suresh kannan

Monday, March 07, 2011

நுனிக்காலின் துயரம் (Black Swan)

        

நுனிக்காலை உயர்த்தி உடலின் எடை முழுவதையும் அதன் மீது நிறுத்தி சில கணங்களுக்கு சுழன்று ஆடுவது பாலே நடனத்தின் ஒரு அழகியல் நுட்பம். இதை en pointe  என்கிறார்கள். நான் இத்திரைப்படம் முழுவதையும் நுனிக்காலில் அமர்ந்த அவஸ்தையோடுதான் பார்த்தேன் என்று சொல்ல வேண்டும். பாலே நடனக்கலைஞராக நடித்த நினாவின் (Natalie Portman) பதற்றத்தை அகரீதியான துயரத்தை வலியை பார்வையாளனுக்குள்ளும் கடத்தி விட்டதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.

பொதுவாழ்க்கையில் நாம் பொறாமையுடனும் பரவசத்துடனும் கிளர்ச்சியுடனும் பளபளப்பாகவும் காணும் பல ஆளுமைகளின் அகவுலகம், பெரும்பாலும் எப்போதும் பதற்றமும் துயரமும் வலியும் கொண்டதாக உள்ளது. தன்னுடைய லட்சியத்தின் அடிப்படையை அடைவதற்கே பெரும் போராட்டத்தை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறதென்றால், அதிலிருந்து இன்னும் உயரே செல்வதற்கும் தன்னுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும் பெரும் மனஅழுத்தத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. பேஷன் கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், திரைக்கலைஞர்கள், (குறிப்பாக பெண்கள்)  தங்களின் உடலை பல தியாகங்களுடன் கச்சிதமாகப் பேணும் பொறுப்பையும் சுமக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் இடத்தை நிரப்புவதற்காக அதிஇளமையோடு காத்திருக்கும் வரிசை அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. நாயகன் தூக்கிச் சுற்ற அலறுமளவிற்கான குவிண்டால் எடை கொண்டவர்கள் நாயகியாய் நடித்ததெல்லாம் கறுப்பு - வெள்ளைக் காலத்தோடு முடிந்து விட்டது.

பாலே நடனக் கலைஞராக இருக்கும் நினா, சிறுவயது முதலே அது மாத்திரமே புகட்டப்பட்டவளாய் வளர்கிறாள். இந்தக் கலையில் பிரகாசிக்க முயன்று தோற்றுப் போன அவளின் தாய், இதற்காகவே அவளை வளர்த்தெடுக்கிறாள். தொடர்ந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நினாவிற்கு, அவள் இயங்கும் நாடகக்குழுவின் பிரதான பாத்திரம் கிடைக்குமா என்று பதற்றமாகவே இருக்கிறது.

அக்குழுவில் ருஷ்ய நாட்டார் கதையான Swan Lake-ஐ அடிப்படையாகக் கொண்டு நாடகமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது. இரண்டு பிரதான பாத்திரங்கள். அன்பும் காதலும் கொண்ட White Swan. தந்திரமும் வஞ்சமும் கொண்ட Black Swan. இரண்டு பாத்திரங்களையும் ஒருவரே செய்வது அதிலுள்ள சவால். முந்தைய பாத்திரத்தில் மிகக் கச்சிதமாக செயல்படும் நினா, இன்னொரு பாத்திரமான Black Swan-ல் சற்று தடுமாறுகிறாள். இதுவே அவளின் இயல்புத்தன்மையை வெளிப்படுத்துகிறது. 'இந்தப் பாத்திரத்திற்கு மிகுந்த ஒழுங்குத்தன்மை தேவையில்லை, சற்று தளர்வாக ஆடு' என்று அதட்டிக் கொண்டேயிருக்கும் நாடக இயக்குநரான தாமஸின் ஆணைகள் அவளை மிரள வைக்கின்றன. இந்தப் பாத்திரத்தை அவளிடமிருந்து பிடுங்கிக் கொள்ள காத்திருக்கும் சக கலைஞரின் செயல்கள் அவளை மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இதன் விளைவாக அவள் அடையும் உளப்பாதிப்பு அவள் முன் விசித்திரமான உருவங்களை (hallucination) தோற்றுவித்து குழப்பமான அனுபவத்திற்கு உட்படுத்துகிறது. 

 பிரதான பாத்திரமாக Natalie Portman. அகாதமி விருதின் சிறந்த நடிகை வென்றதில் ஆச்சரியமேயில்லை. படம் முழுக்க இவரின் ராஜ்ஜியமே. 'பூ' படத்தின் பார்வதி போல, சட் சட்டென்று மாறும் முகபாவங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. நம்பிக்கையில்லாமலே வீட்டிலிருந்து புறப்பட்டு பிரதான பாத்திரத்திற்கு தான் தேர்வானதின் மகிழ்ச்சியை தாங்க முடியாமல் கழிவறைக்குள் புகுந்து தன் தாய்க்கு அதை தெரிவிக்கும் காட்சி ஓர் உதா. "நீ ஒன்றும் வர்ஜின் இல்லையே' என்று கேட்கும் நாடக இயக்குநரிடம், வெட்கமும் பயமுமாக  'இல்லை' என்று உரையாடும் அந்தக் காட்சி இன்னொரு உதா. இப்படி பல உதாக்களை நினாவை முன்னிட்டு சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த psychological thriller வகை திரைப்படத்தை மிகுந்த சுவாரசிய திரைக்கதையுடன் நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர் Darren Aronofsky.  நினாவின் அகவுலகத்தில் ஏற்படும் குழப்பங்களை புறவயமாக அதன் பூடகத்தன்மையுடன் சித்தரிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். பாலே நடனமே பயிற்சியாக வாழும் அவளின் கட்டுப்பாடான அகம் கட்டவிழ்ந்த நிலையில் வெளிப்படும் பாலியல் சார்ந்த ஆவேசக் காட்சிகள் மிகுந்த நுட்பமானவை.

சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு தடையாய் நிற்கும் முட்டுக்கட்டைகளுள் பிரதானமான ஒரு முட்டுக்கட்டை ஆண்குறி. நிறுவனத்திற்குள மட்டுமல்லாது அன்றாட வாழ்க்கையிலும் இது ஏற்படுத்தும் தடைகள் அதிகம். வேதனையில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் நினாவை பாலியல் நோக்கிலான சமிக்ஞைகளைக் காட்டி குறும்பு செய்கிறான் அறுபதைக் கடந்த கிழவனொருவன். இத்திரைப்படத்தில் ஒரு சிறு துணுக்காக இந்தக் காட்சி கடந்து செல்கிறது.

பெரும்பான்மையான துறைகளுள் நிலவும் ஆணாதிக்கம் காரணமாக அசாத்திய திறமைகளைக் பெண்கள் கொண்டிருந்தாலும் அது வெளிப்படும் வாய்ப்பை பாலுறவு சார்ந்த அத்துமீறல்களைக் கடந்தே பெற முடிகிறது. நாடக இயக்குநரான தாமஸ், நினாவை பாலுறவிற்காக வற்புறுத்தியபடியே இருக்கிறான். இல்லையெனில் இந்த ஒத்துழைப்பை தாராளமாக தர தயாராயிருக்கும் இன்னொரு பெண்ணுக்கு அந்த வாய்ப்பு போகும் நிலை நினாவிற்கு கூடுதல் மன அழுத்தத்தையும் பாதிப்பையும் தருகிறது.

இயக்குநரின் ஆஸ்தான இசையமைப்பாளரும், ஒளிபதிப்பாளரும். படத்தின் பெரும்பான்மையிலும் நடனப்பயிற்சியை முன்னிட்டு ரகசியமாக கசிந்துக் கொண்டேயிருக்கும் Clint Mansell -ன் பின்னணியிசை ஒருபுறம் உன்னதமான அனுபவத்தை தருகிறதென்றால், பாலே நடனக் கலைஞர்களின் கூடவே நாமும் சுழன்றாடும் பிரமையை Matthew Libatique-ன் ஒளிப்பதிவு தருகிறது.

பதற்றம் கலந்த நல்ல அனுபவத்தைத் தந்த திரைப்படம். அழுத்தமாக பரிந்துரைக்கிறேன்.
suresh kannan

Friday, March 04, 2011

இரவல் அடையாளம்

 
ஈரான் நாட்டின் முன்னணி திரைப்பட இயக்குநர்களுள் ஒருவர் மொசான் மெக்மல்பப் (Mohsen Makhmalbaf).

'நான்தான் அந்த இயக்குநர்' என்று போலியாக இவர் பெயரை உபயோகித்துக் கொண்டு ஒரு பணக்கார குடும்பத்தினரிடம் பழகினார் ஒரு நபர். அவர்களின் வீட்டை படப்பிடிப்பிற்காக பயன்படுத்துவதாகவும் அங்குள்ள குடும்ப உறுப்பினர்களையும் தனது திரைப்படத்தில் நடிக்க வைப்பதாகவும் கூறியிருக்கிறார். செலவுக்காக சிறிது பணத்தையும் பெற்றிருக்கிறார். சில நாட்கள் கழித்துத்தான் இவர் போலி என்பது அந்தக் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. காவல் துறையில் புகார் அளிக்க, வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த உணமைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஈரானின் இன்னொரு புகழ்பெற்ற இயக்குநரான 'அப்பாஸ் கிராஸ்தமி' உருவாக்கிய திரைப்படம் 'CLOSE -UP'. (பெர்ஷிய மொழியில் Nema-ye Nazdik)

சிறு குற்றமான இந்த ஏமாற்று வழக்கை திரைப்படமாக்குமளவிற்கு என்ன சுவாரசியமிருக்க முடியும் என்று சிலருக்குத் தோன்றலாம். இந்த வழக்கு விசாரணை உண்மையாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சிறப்பு அனுமதி பெற்று படமாக்கி அதை அப்படியே படத்தில் இணைத்திருக்கிறார் அப்பாஸ் கிராஸ்தமி. இதற்காக அவர் சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் அனுமதிக்காக அணுகும் போது அவரும் இதையே கேட்கிறார். 'இது கொலை வழக்கு கூட அல்ல. எதற்கு இதை திரைப்படமாக பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்'.

மேற்பார்வைக்கு அசுவாரசியமாகத் தோன்றும் இந்த விஷயத்தை தனது அபாரமான கலைத்திறனால் மிகுந்த சுவாரசியமானதொரு திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். வழக்கு விசாரணைக் காட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் காட்சிகளும் இந்தத் திரைப்படத்திற்காக மீண்டும் அதே போன்று நிகழத்தப்பட்டன. அது மட்டுமல்ல. உண்மையான சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களும் அதே பாத்திரத்தில் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள், இயக்குநர்  மொசான் மெக்மல்பப் உட்பட.

அசலும்
படத்தின் இறுதிக் காட்சியில் வரும் ஒரேயொரு இசைத் துணுக்கைத் தவிர படத்தில் வேறு பின்னணி இசையே கிடையாது. இறுதிக் காட்சியில் போலியாக நடித்த பாத்திரமும் உண்மையான மொசான் மெக்மல்பப்-ம் சந்திக்கும் போது அதை ரீ-டேக் செய்தால் சுவாரசியப்படாது என்பதற்காக, பத்திரிகையாளர்கள் தொலைவிலிருந்து படமெடுப்பதைப் போன்ற பாணியிலேயே படமெடுத்திருக்கிறார் இயக்குநர்.  இதில் மொசான் மெக்மல்பப் வைத்திருந்த மைக் சரியாக பொருத்தப்பட்டிருக்காத காரணத்தினால் சுற்றுப்புற ஒலியும் வசனமும் விட்டுவிட்டு கேட்க, அதுவும் அந்த பிழைகளோடு அப்படியே திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது இதற்கொரு அசலான தன்மையைத் தருகிறது. 

நகலும்
ஓர் உண்மைச் சம்பவத்தை திரைப்படமாக உருவாக்குவதற்கான மிகக் கச்சிதமான உதாரணம் CLOSE-UP. படத்தின் தலைப்பிற்கேற்ப பல காட்சிகள் அண்மைக் கோணங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக நீதி விசாரணை செய்யப்படும் காட்சிக் கோர்வைகள் பெரும்பாலும் அண்மைக் கோணம்தான்.

சமூகத்திலுள்ள தனிமனிதனின் அடையாளச் சிக்கலைப் பற்றி இத்திரைப்படம் பேசுகிறது. ஒவ்வொரு மனிதனுமே அக்குழுவிலிருந்து தான் தனித்து அடையாளம் காணப்பட வேண்டும், அங்கீகரிக்கப்பட வேண்டும், போற்றப்பட வேண்டும்  என விரும்புகிறான். பல்வேறு திறமைகளினாலும் ஞானங்களினாலும் சமயத்தில் கீழ்மைகளினாலும் சமூகத்தினால் பரவலாக அடையாளங் காணப்படும் தகுதியை சிலரே அடைகின்றனர். அது இயலாதவர்கள், அடைந்தவர்களின் பிம்பத்தின் மீது ஏறி நிற்பதிலாவது இந்த அடையாளத்தை அடைய முடியுமா என்று பரிதவிக்கிறார்கள். இதுவே ரசிக குழுக்களாக, தொண்டர் படைகளாக  ஆறுதல் வடிகால்களாக உருமாறுகின்றன.

பிரபல இயக்குநரின் பெயரை போலியாக பயன்படுத்திக் கொண்ட நபரான அலி ஸப்ஜியான் (Ali Sabzian) நீதி விசாரணையின் போது தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுப்பதில்லை. அவர் நிதானமாக தரும் வாக்குமூலம் இத்திரைப்படத்தின் சிறப்பான காட்சிகளுள் ஒன்று.

'மிகுந்த வறுமையில் வாடும் என்னை இச்சமூகம் மதிக்கவேயில்லை. திரைப்படங்களில் அதிக ஈடுபாடு கொண்ட எனக்கு, The Cyclist திரைப்படத்தில் அதன் இயக்குநரான மொசான் மெக்மல்பப் விளிம்புநிலை மக்களின் அவலமான வாழ்க்கையை யதார்ததமாக காட்டியதின் காரணமாக அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அவராகவே மனதிற்குள் என்னை உருவகித்துக் கொண்டேன். ஒரு நிலையில் என்னுடைய சுய அடையாளமே மறந்து போய் 'நானே அந்த இயக்குநர்' என்று நினைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன். அது மிகுந்த தன்னம்பிக்கையைத் தந்தது. அவர் பெயருடன் புழங்கும் போது மக்கள் என் ஒவ்வொரு சொல்லையும் மதித்துக் கேட்டார்கள், மரியாதை செலுத்தினார்கள். இரவு வீடு திரும்பும் போது ஏழ்மையான சூழ்நிலையைக் காணும் போது எல்லாமே வடிந்து விடும்'.

இந்த அங்கீகாரத்திற்காகவே அந்தக் குடும்பத்தினருடன் பழகினேன். அங்கு எதையும் திருடும் நோக்கம் எனக்கு இல்லவே இல்லை'


ஈரான் போன்ற தேசங்களின் அடக்குமுறைகளைப் பற்றி நிறைய வாசித்திருக்கிறோம். ஆனால் இது வரும் நீதி விசாரணைக் காட்சி, இந்தியாவில் கூட காண இயலாத ஜனநாயகத்தன்மையுடன் உள்ளது. வாதி, பிரதிவாதிகளுக்கிடையே பகடையாட்டம் நிகழ்த்தும் வழக்குரைஞர்கள் எவரும் குறுக்கேயில்லை. நீதிபதியே, பாதிக்கப்பட்டவர்களிடமும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடமும் நேரடியாக விசாரிக்கிறார். இது முதன்முறையாக செய்யப்படும் குற்றம் என்பதற்காகவும், குற்றஞ்சாட்டப்பட்டவர் குறைந்த வயதுடையவர் என்பதற்காகவும் தன்னுடைய தவறை உணர்ந்து விட்டார் என்பதற்காகவும் நீங்கள் ஏன் அவரை மன்னிக்கக்கூடாது?' என்று பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்கிறார்.

தான் இயக்கிய திரைப்படங்களிலேயே மிகவும் திருப்தி தந்தது CLOSEUP தான் என்று (டிவிடியில் உள்ள) நேர்காணலில் குறிப்பிடுகிறார் இயக்குநர் அப்பாஸ் கிராஸ்தமி.

எவ்வித ரெடிமேட் மசாலாக்களும் சேர்க்காமல் உண்மைச் சம்பவத்தை யதார்த்தமாகக் கொண்ட தமிழ்த் திரைப்படம் ஏதேனும் வந்திருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தேன். ஏன் உலகத் திரைப்படங்களைப் பற்றி பேசும் போது தமிழ்த் திரைப்படங்களையும் இணைத்து கிண்டலடிக்கின்றீர்கள் என்று சில நண்பர்கள் அவ்வப்போது கேட்கிறார்கள். ஆனால் இவர்களேதான் உலக சினிமா எனும் போது அதில் இந்தியாவிற்கோ, தமிழகத்திற்கோ பங்கே இல்லையா என்றும் கேட்கிறார்கள்.

விசு இயக்கத்தில், பிரபு இரட்டை வேடத்தில் நடித்து 'நான் தான் அந்த திரைப்பட இயக்குநர்' என்று புளுகித் திரியும் நகைச்சுவைத் (?) திரைப்படமொன்று மங்கலாக நினைவுக்கு வருகிறது. அந்த வகையில் அப்பாஸ் கிராஸ்தமிக்கு முன்னரே, நாம் இந்தக் கதையமைப்பை கையாண்டு விட்டோம் என்று பெருமையடித்துக் கொள்ளலாம்.
suresh kannan