Tuesday, July 26, 2022

குமுதம் - உலக சினிமா கட்டுரைகள் - பாகம் ஒன்று

 

சுவாசம் பதிப்பகம் மூலம் சமீபத்தில் வெளியான 'சர்வதேசத் திரைப்படங்கள்' - பாகம் ஒன்று நூலிற்காக எழுதப்பட்ட முன்னுரை.

 

oOo 



அலுவலக மதிய உணவிற்குப் பிறகு சிறுநடை செல்வது என் வழக்கம். அவ்வாறாக ஒரு நாள் நான் சென்று கொண்டிருக்கையில் கைபேசி ஒலித்தது. “நான்.. குமுதம் எடிட்டர்.. பிரியா கல்யாணராமன் பேசறேன்”.

என்னுடைய இளம் வயதிலிருந்தே பரிச்சயப்பட்ட அந்த எழுத்தாளரின் பெயரை திடீரென்று போனில் கேட்டவுடன் எனக்குள் ரொமான்ஸூம் கோயில் விபூதி வாசனையும் கலந்த விநோத நினைவுகள் எழுந்தன. அவருடைய எழுத்துப் பாணி அத்தகையது. ஒருபக்கம் ‘ஜாக்கிரதை வயது 16’ போன்ற இளமை ததும்பும் சிறுகதைகளையும் எழுதுவார். இன்னொரு பக்கம் கோயில், ஆன்மீக கட்டுரைகளும் எழுதுவார். வெகுசன பாணியின் அத்தனை வகைமைகளையும் முயன்று பார்த்த எழுத்து அவருடையது.

‘ஒரு முன்னணி வார இதழின் ஆசிரியர் என்னை ஏன் அழைக்க வேண்டும்.. யாராவது அந்தப் பெயரை வைத்து விளையாடுகிறார்களா?’ என்று பல்வேறு எண்ணங்கள் எனக்குள் ஓடின. என்னுடைய திகைப்பை உணர்ந்தாரோ, என்னவோ.. அவரே தொடர்ந்தார். “கிழக்குப் பதிப்பகத்துல வெளிவந்த உங்க நூலைப் படிச்சேன். ‘உலக சினிமா சில அறிமுகங்கள்’. இன்ட்ரஸ்ட்டிங்.. நல்லா எழுதியிருக்கீங்க. ஒவ்வொரு கட்டுரையும் சுவாரசியமா, க்ரிஸ்ப்பா இருந்தது. குமுதத்திற்கும் அதே போல வாரா வாரம் வர்ற மாதிரி ஒரு கட்டுரைத் தொடர் எழுத முடியுமா?” என்றொரு கேள்வியை முன்வைத்தார். சட்டென்று எனக்குள் ஒரு பெரும் தயக்கம் எழுந்தது. ஏன்?

oOo

வெகுசன இதழ்களின் வழியாக என் வாசிப்பு துவங்கி வளர்ந்திருந்தாலும் ஒரு கட்டத்தில் சிறுபத்திரிகை இலக்கியமே என்னை ஆக்ரமித்தது. அப்போது நான் இடைநிலை இதழ்களில் சினிமா பற்றிய ஆவேசமான கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தேன். வெகுசன ஊடகங்கள், திரைப்படங்கள் செய்யும் கலாசாரச் சீரழிவுகள் குறித்து நானே காரசாரமாக எழுதியிருக்கிறேன். எனவேதான் அந்தத் தயக்கம்.  வழக்கம் போல் இந்தச் சமயத்தில் எனக்கு மானசீகமாக உதவி செய்ய வந்தவர் எழுத்தாளர் சுஜாதா. பல வகைகளில் இவரையே நான் என்னுடைய முன்னோடியாக கருதுவேன்.

வெகுசன வாசகப் பரப்பு என்பது மிகப் பெரியது. அந்த மேடையைப் பயன்படுத்திக் கொண்டு உன்னதமான விஷயங்களை சராசரியான வாசகர்களுக்கு கடத்திச் செல்லலாம் என்பது அவர் ஏற்கெனவே போட்டு வைத்த பாதை. வெகுசன எழுத்துக்கும் இலக்கியத்திற்கும் இடையில் ஒரு பாலமாக இருந்தவர் சுஜாதா. அவரின் மூலம் சிலபல நல்ல எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்து இலக்கிய வாசிப்பின் பக்கம் நகர்ந்த எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன்.

உலக சினிமா பற்றிய அறிமுகத் தகவல்களையும் கட்டுரைகளையும் வெகுசன இதழ்களில் இன்று கூட காண்பது மிகக் குறைவுதான். 4G இணைய வேகமும், OTT பிளாட்பாரங்களும் வெப் சீரிஸ்களும் இன்று பரவலாக காணக் கிடைப்பதால் அவற்றைப் பற்றி இன்றைய தேதியில் எழுதியாக வேண்டியாக கட்டாயம் வெகுசன ஊடகங்களுக்கு இருக்கிறது.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பான நிலைமை அப்படியல்ல. உலக சினிமா பற்றிய கட்டுரைகளை இடைநிலை இதழ்கள் மற்றும் சிறு பத்திரிகைகளில் மட்டுமே வாசிக்க முடியும். ஆனால் அதுவும் கூட ஒரு சராசரி வாசகன் எளிதில் அணுக முடியாதபடியான தீவிரமான முரட்டு மொழியில் இருக்கும்.

எனில் உலக சினிமா பற்றி ஒரு வெகுசன வாசகன் அறிவதற்கு என்னதான் வழி?! இதைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே யோசித்தவர் பிரியா கல்யாணராமன். குமுதம் போன்ற லட்சக்கணக்கான சர்க்குலேஷன் கொண்ட ஒரு முன்னணி இதழில் உலக சினிமாக்கள் பற்றிய சுருக்கமான அறிமுகத்தைத் தருவதற்கு ஒரு வாய்ப்பை அவர் தரும் போது அதை ஏன் நான் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?

இத்தனை எண்ணவோட்டமும் சில நொடிகளுக்குள் என் மூளைக்குள் நடந்து முடிய, உடனே உடனே ‘ஓகே’ சொன்னேன்.

oOo


ஜூன் 2016-ல் இந்தக் கட்டுரைத் தொடர் குமுதம் வார இதழில் வெளிவரத் துவங்கியது. தொடர்ந்து 60 வாரங்களுக்கு வெளிவந்தது. தொடர் ஆரம்பித்து மூன்று வாரங்களுக்குப் பின்பு என்னை அழைத்தார் பிரியா கல்யாணராமன். “படத்தோட முடிவு என்னன்னு சொல்லாமலேயே கட்டுரையை முடிச்சுடறீங்களே.. சார்.. அதையும் கூடவே எழுதிடுங்க. ஒரு சிறுகதை ஃபார்மட்ல வந்துடும். அதைத்தான் வாசகர்களும் விரும்புவாங்க” என்றார்.

Spoiler எனப்படும் சமாச்சாரம் பற்றி எனக்கும் மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன. ஏன், அதில் உடன்பாடு இல்லை என்று கூட சொல்லி விடலாம். ஆனால் ஒரு திரைப்படத்தில் முக்கியமான திருப்பங்களை, முடிவுகளை வெளிப்படுத்தி, படம் பார்க்கவிருக்கிறவரின் ஆவலைக் கெடுத்து விடக்கூடாது என்று பொதுவான கருத்து இருக்கிறது. சிலர் எரிச்சலுடன் பதறி ஆட்சேபம் கூட செய்வார்கள். ஒருவகையில் அதுவும் நியாயமே.

ஆனால் என்னைப் பொறுத்தவரை, முழுக்கதையும் தெரிந்தாலும் கூட ஓர் இயக்குநர் எவ்விதமான திரைமொழியினால், திரைக்கதையினால், நுட்பங்களால் தனது சினிமாவை உருவாக்குகிறார் என்பதைத்தான் ஆதாரமான அளவுகோலாக பார்ப்பேன். ஆனால் என் தனிப்பட்ட அபிப்ராயத்தை பொது வாசகனுக்கும் பொருத்திப் பார்க்க முடியாதே?!

“அப்படி முடிவு சொல்லிட்டா தப்பு சார்..” என்றேன் தயக்கமாக. “அந்தத் தப்பையும் செஞ்சு பார்த்துடுவோம். என்ன இப்ப?” என்கிற பலத்த சிரிப்பொலி எதிர்முனையில் கேட்டது. அதுதான் வெகுசன இதழ்களின் வெற்றியின் அடையாளம். சிறு தயக்கத்துடன் சம்மதித்தேன். இந்த ஒரு விஷயம் தவிர, எவ்வித குறுக்கீடும் செய்யாமல் சுதந்திரமான மொழியில் என்னை எழுத அனுமதித்தார் குமுதம் ஆசிரியர்.

ஒவ்வொரு வாரமும் என்னுடன் தொடர்பில் இருந்து நினைவுப்படுத்தி, வழிநடத்தி, கட்டுரைகளை வாங்கி ஒருங்கிணைத்த நண்பர் அருண் சுவாமிநாதனை இந்தச் சமயத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் போஸ்டர்களை தேடியெடுத்து வசீகரமான லேஅவுட் உடன் சிறப்பாக பிரசுரம் செய்த குமுதம் பணியாளத் தோழர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். 
 
பிரியா கல்யாணராமன்

 
இந்தத் தொடர் வெளிவந்த முதல் வாரத்திலிருந்து எனக்கு கிடைத்த எதிர்வினைகளும் பாராட்டுக்களும் நம்ப முடியாத அளவில் இருந்தன. இந்த உற்சாகம் வாசகர்கள் கடிதங்களில் எதிரொலித்தன. இணையத்திலும் ஃபேஸ்புக்கிலும் கூட நல்ல வரவேற்பு. நீண்ட காலமாக தொடர்பில் இல்லாத, என்னை எப்போதும் கண்டு கொள்ளாத ஓர் உறவினர் கூட கைபேசியில் அழைத்து “உன் போட்டோ பார்த்தேன்.. நீதான் எழுதறியா?” என்று விசாரித்த போதுதான், வெகுசன பரப்பின் வீச்சு விளங்கியது. “இந்தக் கொரியன் படத்தை பற்றி நல்லா எழுதியிருந்தீங்க. இதை எப்படி பார்க்கறது?” என்று வாட்சப்பில் கேட்ட ஒரு முன்னணி படத்தயாரிப்பாளர் முதல் “நீங்க சொல்லித்தான் இந்தப் படத்தை பார்த்தேன். மிக்க நன்றி” என்று சொன்ன நண்பர்கள் வரை விதம் விதமான எதிர்வினைகள் வந்தன.

இந்தத் தொடர் முடிந்தவுடன், “குமுதம் தீராநதி இதழில் உங்க ஆசைப்படி விரிவான கட்டுரைகள் எழுதுங்க” என்று பச்சைக்கொடி காட்டினார் பிரியா கல்யாணராமன். ‘குமுதம் உலக சினிமா கட்டுரைகள் நூலாக வந்தால் நன்றாக இருக்கும்” என்கிற விருப்பத்தை பல நண்பர்கள் அப்போது தெரிவித்தார்கள். எனக்கும் கூட விருப்பம்தான். ஆனால் அதற்கேற்ற சூழல் அமையவில்லை. நானும் இதற்கு பெரிதாக மெனக்கெடவில்லை.

ஆனால் ஒரு நல்ல விஷயம் என்றேனும் நடந்தே தீரும் என்பார்கள். என்னுடைய முந்தைய நான்கு நூல்கள் வெளிவருவதற்கு அடிப்படையான காரணமாக இருந்த நண்பர் ஹரன் பிரசன்னாவே, இந்த நூல் வருவதற்கும் முக்கிய காரணமாக இருக்கிறார். இந்த வகையில் அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அவருடைய புதிய பதிப்பக முயற்சியின் மூலம் ‘குமுதம் சினிமா கட்டுரைகள்’ ஒரு தொகுப்பாக வெளிவருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே!.

இந்த நூலை குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமனுக்கு சமர்ப்பிப்பதற்காக ஏற்கெனவே திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த முன்னுரையை நான் எழுதிக் கொண்டும் நேரத்தில் அவர் நம்முடன் இல்லை என்கிற செய்தி துயர் கொள்ள வைக்கிறது. ஆம், 22-06-2022 அன்று இயற்கையில் கலந்து விட்டார் பிரியா கல்யாணராமன்.

oOo

‘சர்வதேசத் திரைப்படங்கள் – பாகம் ஒன்று’ என்கிற இந்த நூலை வாசிக்க முடிவெடுத்த உங்களுக்கு நன்றி. 2010-க்கு பிறகு, பல்வேறு ஆண்டுகளில் வெளியான சர்வதேச திரைப்படங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை இந்த நூல் உங்களுக்குத் தரும். சம்பந்தப்பட்ட திரைப்படத்தை தேடிப் பார்த்தேயாக வேண்டும் என்கிற ஆவலை இந்தக் கட்டுரைகள் நிச்சயம் உங்களுக்குள் எழுப்பும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. இந்தத் தொடர் எழுதப்பட்டதின் நோக்கமே அதுதான். இதன் மூலம் நல்ல சினிமாக்களைப் பார்க்கும் ரசனை மேலதிகமாக பெருகும். இந்த ரசனை மாற்றம் நல்ல சினிமாக்கள் வெளிவருவதற்கும் காரணமாக இருக்கக்கூடும் என்பது என் நம்பிக்கை. அந்த மாற்றத்திற்கு ஒரு துளியாக இருக்கப் போகும் உங்களுக்கும் என் பாராட்டும் நன்றியும்.

வாருங்கள்! சிறந்த சினிமாக்களைக் கொண்டாடுவோம்!


சென்னையின் ஒரு சோம்பலான மதியம்
29-06-2022                                                                                        சுரேஷ் கண்ணன்