Wednesday, August 26, 2009

காசி - தமிழ்மணம் - 05ம் ஆண்டு நிறைவு - கேள்வி-பதில்

இந்தக் கேள்விகள் என்னுடைய தகுதிக்கும் மீறியவை என்பதை உணர்ந்தாலும் பதிலளிக்கச் சொன்னவர் நண்பர் காசி என்பதாலேயே இது தவிர்க்க முடியாததாகிறது. சில ஆண்டுகளுக்கு முன் என்னுடைய வலைப்பூவை துவங்குவதற்கு காசி எழுதிய ஒரு கட்டுரைத் தொகுப்பே காரணமாக அமைந்திருந்தது. அவ்வகையில் நான் அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அதை சிறிதாவது தீர்ப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள உத்தேசம்.
1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

இணையத்தில் துறைசார் தமிழ் உள்ளடக்கங்கள் இன்னும் அதிகமாக ஏற்றப்பட வேண்டும். மதுரைத் திட்டக் குழுவினரின் ஆத்மார்த்தமான உழைப்பின் காரணமாக தமிழின் தொன்மையான இலக்கியங்கள் இணையத்தில் ஏற்றப்பட்டிருந்தாலும் அது பெரும்பாலும் பாரதியோடு நின்று விட்டிருக்கிறது. இவையோடு நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளின் பிரதிகளும் சேர்க்கப்பட வேண்டும். நூலகம்.நெட் தளத்தை இதற்கு சிறந்த முன்னுதாரணமாக சொல்லலாம். யாழ்ப்பாண நூலக எரிப்பு போன்ற அவலங்கள் இனியும் ஒரு முறை நிகழாமல் இருக்க சாத்தியமானவை அனைத்தையும் இணையத்தில் ஏற்றிவிட்டால் அவற்றிற்கொரு சாஸ்தவதான அந்தஸ்து கிடைப்பதோடு உலகத் தமிழர்கள் அனைவரும் கையாளும் எளிதான நிலையும் ஏற்படும். ஆனால் இவ்வாறான முயற்சிகள் ஆங்காங்கே தனித்தனி நபர்களால் செயல்படாமல் திட்டமிட்ட ஒருங்கிணைப்போடு நிகழ்த்தப்பட்டால் சிறப்பாக இருக்கும். இது போன்ற அனைத்துத் துறை சார்ந்த நூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் இணையப்பதிவுகளும் எழுதப்பட்டு ஒரே இடத்தில் கிடைக்குமாறு தொகுக்கப்பட்டால் அது இணையத்தின் பயன்பாட்டை அடுத்த தளத்திற்கு நகர்த்திச் செல்ல உதவும் என்று நம்புகிறேன்.


2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

இணையத்தின் பயன்பாடு தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்துவருவதாக புள்ளிவிபரங்கள் கூறினாலும் இன்னமும் கூட தகவல் நுட்பப் புரட்சி பெரும்பான்மையான மக்களை சென்று அடையவில்லை என்பதே என் அவதானிப்பு. நகரங்களில் மாத்திரமே தகவல்நுட்பத்தின் பயன்பாடு குறிப்பிடத்தகுந்த அளவு உள்ளது. ஒரு கணினியை இதுவரை கண்ணால் கண்டிராதவர்கள் கூட தமிழக கிராமங்களில் இன்னும் சிலர் இருக்கலாம். உயர்கல்வி பெற்றவர்கள்தான் கணினியை கையாள முடியும் என்பதான மனத்தடைகள் நம்மிடையே உள்ளன. எளிய நுட்பங்களை கையாளக்கூடிய தைரியத்தை இத்தகைய மனத்தடைகள் முறியடிக்கின்றன. இவைகளைத் தாண்டி வரக்கூடிய நிலையை அரசும் தன்னார்வ நிறுவனங்களும் ஏற்படுத்த வேண்டும். இணைய வாசிப்பைப் பொறுத்தவரை பெரும்பான்மையான செய்தித்தாள்கள் இணையத்தில் வாசிக்கக் கிடைத்தாலும் அச்சு வடிவில் வெளிவரும் செய்தித்தாள்களை இது எவ்வகையிலும் பாதிக்கவில்லை. மாறாக அவற்றின் விற்பனை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. வெளிநாட்டுவாழ் தமிழர்கள் மாத்திரமே இணையச் செய்தித்தாள்களை அதிகளவில் வாசிக்கின்றனர் என்று கருதுகிறேன். ஆச்சரியகரமாக ஆமை வேகத்தில் இயங்கும் அரசுத்துறைகளின் சில சேவைகளை இணையத்திலேயே பெற முடிகிறது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இன்று இணையத்திலேயே பெற்றுக் கொள்ள முடியும். மின்கட்டணத்தை இணையத்திலேயே செலுத்த முடிகிறது. இவையெல்லாம் வரவேற்கத்தக்க முயற்சிகள்தான் என்றாலும் நுட்பத்தை பெரும்பான்மையாக பயன்படுத்திக் கொள்ளும் பாதையில் நாம் கடக்க வேண்டிய தூரம் மிக நீளமாக இருக்கிறது.


3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

பலவிதமான திறமூல மென்பொருட்களை தமிழுக்கு ஏற்றவாறு உருவாக்கியதிலும் எழுத்துரு சார்ந்த பல ஆரம்ப குழப்பங்களை தீர்ப்பதற்கும் தன்னார்வலர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. தமிழ் விக்கிபீடியா குறித்த விழிப்புணர்வு அதிகமில்லை என்றே கருதுகிறேன். இது குறித்த விழிப்புணர்வை ஒரு இயக்கமாகவே செய்யலாம். தமிழ் விக்கிபீடியாவை விட ஆங்கில விக்கிபீடியாவை அதிகம் பயன்படுத்துவதற்கு ஆங்கிலத்தில் இருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிற மயக்கம் நமக்கு இருப்பது ஒரு காரணமாய் இருக்கலாம். தமிழ் விக்கிபீடியாவில் பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகள் விபரப் பிழைகள் திருத்தப்பட்டு இன்னும் அதிக அளவில் இணைக்கப்பட வேண்டும்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

கணினியில் தமிழால் எழுத முடியும் என்பதே இன்னும் பல நபர்களுக்கு - கணினி பயன்படுத்துபவர்கள் உட்பட - ஆச்சரியமான செய்தியாக இருக்கிறது. கணினி என்பது நம் கட்டளைகளை நிறைவேற்ற உதவும் ஒரு இயந்திரம்தான் என்கிற அடிப்படையை மறந்துவிடுகிறார்கள். கணினியில் தமிழ் பயன்படுத்துவது குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த முயலலாம். கணினி சார்ந்த நம் செயல்பாடுகளை மெல்ல மெல்ல தமிழிலேயே செய்வதற்கான புள்ளியை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளைச் செய்யலாம்.

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக
வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?


அச்சு ஊடகத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து இன்று யார் வேண்டுமானாலும் தங்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும் தணிக்கைத் தடையின்றி எழுதி அதை உடனே பதிப்பித்து உடனே சில நூறு நபர்களின் பார்வைக்கும் எடுத்துச் செல்ல முடிகிறது. மிகுந்த முயற்சிக்குப் பின் வெளியிடப்படும் ஒரு அச்சு ஊடக சிற்றிதழக்கு கூட சாத்தியமில்லாதது இது. தகவல்நுட்பப் புரட்சியால் ஏற்பட்டிருக்கிற இந்த நல்ல வாய்ப்பை நாம் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்வேன். நேர்ப்பேச்சில் நாம் பெரும்பாலும் உரையாடுகிற அரசியல், சினிமா குறித்த கிசுகிசுக்களே அதிகம் எழுத்திலும் பதியப்படுகின்றன. ஆரம்ப உற்சாகத்தில் எழுத வரும் பலர் இன்னும் அந்த நிலையிலிருந்து மேல்நோக்கிச் செல்லாமல் அங்கேயே தங்கிவிடுகின்றனர்; சிலர் அந்த உற்சாகமும் வடிந்து எழுதுவதிலிருந்து விலகி விடுகின்றனர். வம்புப் பேச்சுகள், அதனால் ஏற்படும் சச்சரவுகள், அவதூறுகள், ஆபாசப் பின்னூட்டங்கள் போன்றவற்றிலேயே பெரும்பாலான சக்தி விரயமாகிறது. மற்றவர்களின் கவனத்தை உடனே கவர பரபரப்பான தலைப்புகளை மாத்திரம் வைத்து உள்ளடக்கத்தில் ஒன்றுமே இல்லாதிருப்பது, செய்தித்தாள்களில் வரும் செய்திகளை அப்படியே மறுபிரசுரம் செய்வது போன்றவை வாசிப்பவர்களுக்கு சோர்வையும் அவநம்பிக்கையையுமே தோற்றுவிக்கின்றன.

அவ்வாறில்லாமல் தம்முடைய பணிசார்ந்த அல்லது தமக்கு விருப்பமான துறையைப் பற்றின ஆழமான கட்டுரைகளை எழுத முயல வேண்டும். பின்னூட்டங்களை பெரிதும் எதிர்பார்க்கவோ நம்பவோ கூடாது. தொடர்ந்த செயல்பாடுகளின் மூலம் தானாகவே ஒரு வாசகர் வட்டம் உருவாவதை நீங்கள் பிற்பாடு உணர முடியும்.


6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

திரட்டி ஒன்றை உருவாக்குவது குறித்து காசி எழுதின ஆரம்பப் பதிவை இன்னும் என்னால் நினைவு கூர முடிகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதப்பட்டுக் கொண்டிருந்த பதிவுகள் தமிழ்மணம் மூலம் அதிக கவனத்தைப் பெற ஆரம்பித்ததும் இன்னும் பல உற்சாகமான பதிவுகள் பல்கிப் பெருகியது. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டியும் இணையச் செயல்பாட்டில் தமிழ் மணத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. என்னுடைய வலைப்பூவிற்கு வரும் பார்வையாளர்கள் குறித்த விபரங்களைக் காணும் போது பலரும் தமிழ்மணம் மூலமாகவே வருவதைக் கவனிக்க முடிகிறது. பரிந்துரை, மென்னூல் நூலாக்கம், திரட்டியில் வலைப்பூவை இணைக்கும் செயற்பாட்டை எளிமைப்படுத்தியது, பதிவர்களின் சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுப்படுத்துவது, ஆக்கப்பூர்வமான பதிவர்களை உற்சாகப்படுத்த அவர்களின் திறமையாக எழுதப்பட்ட பதிவுகளை தேர்ந்தெடுத்து இணைத்தது, அதிகம் வாசிக்கப்படும் பதிவுகளை தனித்து தெரியச் செய்தது.. போன்ற செயற்பாடுகள் முக்கியமானவை. இவற்றில் சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றையும் மீறி இவை சிறப்பாக செயல்பட்டதாகவே கருதுகிறேன்.

திரைமணம் போன்று துறைசார்ந்த பதிவுகளுக்கு தனித்தனி திரட்டிகளை உருவாக்கலாம். சிறப்பாக எழுதப்படும் பதிவுகளை உற்சாகப்படுத்த இன்னும் அதிக முயற்சிகள் எடுக்கலாம். வாசகர் பரிந்துரைகளில் எழும் சர்ச்சைகளைத் தவிர்க்க வெளிப்படையான செயற்பாட்டு முறையை ஏற்படுத்தலாம். தொடர்ந்து எழுதப்படும் மோசமான வலைப்பூக்களை திரட்டியிலிருந்து நீக்கிவிடலாம்.

தமிழ்மணத்திற்கு என்னுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

suresh kannan

Sunday, August 09, 2009

பைத்தியக்கார விடுதிக்குள் ஒரு உற்சாக பறவை

முந்தைய பதிவின் தொடர்ச்சி

1975-ன் சிறந்த - படம், இயக்குநர், நடிகர், நடிகை, திரைக்கதை... என அகாதமி விருதின் பிரதான விருதுகள் அனைத்தையும் பெற்ற திரைப்படம் One Flew Over the Cuckoo's Nest. சம்பிதாயமாக இருந்தாலும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. McMurphy என்கிற அந்த பாத்திரத்திற்கு ஜாக் நிக்கல்சனைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அந்தளவிற்கு ஒரு அற்புதமானதொரு நடிப்பைத் தந்து மறக்க முடியாத ஒரு அனுபவத்தை தந்திருந்தார் அவர்.

உளவியலின் ஆரம்ப வகுப்பில் ஒரு முறை எங்கள் ஆசிரியர் கேட்டார். "யார் யாரெல்லாம் நார்மலான நபர்கள் என்று உணர்கிறீர்கள்?. கையைத் தூக்குங்கள்". வகுப்பின் பெரும்பாலோனோர் கையைத் தூக்கினார்கள். சிலர் இதில் ஏதோ சூது இருக்கிறது என்கிற குருட்டு யோசனையில் கையைத் தூக்கவில்லை. ஆசிரியர் சிரித்துவிட்டு சொன்னார். "நாம் ஏற்படுத்தி வைத்திருக்கிற பொதுவான அளவுகோல்களின் படி நார்மல் என்று ஒருவருமே கிடையாது. நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு வகையில் அப்நார்மல் நபர்கள்தான்."


Nurse Ratched-ன் கண்டிப்பான தலைமையில் அந்த மனநல நிலையத்தின் பிரிவில் எல்லாச் சிகிச்சை செயற்பாடுகளும் ஒரு ஒழுங்குணர்ச்சியுடனும் இயந்திரத்தனமாகவும் நடைபெறுகிறது. அந்த மெளனத்தைக் கலைத்துக் கொண்டு ஒரு உற்சாக புயல் போல் உள்ளே நுழைகிறான் McMurphy. கற்பழிப்பு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவனின் விசித்திரமான நடவடிக்கை காரணமாக இங்கு அழைத்து வரப்பட்டிருக்கிறான். அவன் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவனா அல்லது நடிக்கிறானா என்பதை மருத்துவர்கள் விசாரித்து தெரிவிக்க வேண்டும்.

அங்குள்ள விதிகளை மாற்ற முயல்வது, எல்லோரிடமும் உற்சாகமாக உரையாடுவது.. நோயாளிகளோடு பேருந்தை கடத்திச் சென்று அவர்களை போட்டிங் அழைத்துச் சென்று உற்சாக அனுபவத்தை தருவது.. என அந்த நிலையத்தை ஒரு கேளிக்கை விடுதியாக மாற்றி Nurse Ratched-க்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கிறான் McMurphy. இம்மாதிரியான அதீதமான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு "ஷாக் ட்ரீட்மெண்ட்" தருவதின் மூலம் அவர்களுக்கு தண்டனை அளிக்கப்படுவது அங்குள்ள அராஜக சடங்காக இருக்கிறது. McMurphyயும் அதே தண்டனைக்கு உள்ளானாலும் அது அவனின் உற்சாகத்தை குறைப்பதில்லை. அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்யும் இரவன்று அனைவருக்கும் தன்னுடைய பெண் நண்பர்கள் மூலம் வரவழைக்கப்பட்ட மதுவை வழங்கி அந்த இரவை எல்லோருக்கும் மறக்க முடியாத அனுபவமாக ஆகும் அளவிற்கு உற்சாகமாக்குகிறான். தன்னுடைய தோழியின் மீது ஆசைப்படும் ஒரு இளம் நோயாளிக்கு அவளுடன் அந்த இரவை இன்பமாக கழிக்க வைக்கிறான். அளவுக்கதிகமான மதுவின் காரணமாக அனைவருமே அன்றிரவு உறங்கி விடுவதால் தப்பிக்கும் திட்டம் தவறிப் போகிறது.

மறுநாள் காலையில் நிகழும் அந்த கிளைமாக்ஸ் காட்சியை திரையில் பார்ப்பது நலம்.

()

முன்னரே சொன்னது போல் ஜாக் நிக்கல்சன் தம்முடைய பாத்திரத்தை மிகத் திறமையாக கையாண்டிருக்கிறார். இரவன்று நிகழவிருக்கும் base ball விளையாட்டுப் போட்டியை தொலைக்காட்சியில் காண Nurse Ratched-ன் அனுமதியை கேட்கிறான் McMurphy. பெரும்பான்மையான நபர்கள் இதற்கு ஒப்புதல் அளித்தால்தான் இதை அனுமதிக்க முடியும் என்று vote counting-க்கிற்கு ஏற்பாடு செய்கிறார் செவிலி. எல்லோரிடமும் கெஞ்சி கெஞ்சி தன்னுடைய கடைசி நபரின் ஒப்புதலை வாங்கும் போது செவிலி அளித்த நேரம் முடிகிறது. ஓட்டளிப்பு நேரம் முடிந்ததாகக் கூறி அனுமதியை மறுக்கிறார் Nurse Ratched. எல்லோரும் ஏமாற்றத்துடன் திரும்பும் போது McMurphy தொலைக்காட்சியின் முன் அமர்ந்து விளையாட்டுப் போட்டியை காண்பதான உடல் மொழியுடன் ஆட்டக்காரர்களை உற்சாகப்படுத்தும் குரலையும் எழுப்புகிறான். பின்பு ஒருவர் ஒருவராக அவனுடன் இணைந்து அந்த இடமே ரசிகர்கள் விசிலடிக்கும் விளையாட்டு மைதானமாக மாறுகிறது. உண்மையில் தொலைக்காட்சியில் எதுவுமே ஒளிபரப்பாவதில்லை. அனுமதி மறுக்கப்பட்டதின் எதிர்ப்புக் குரலாக தன்னுடைய கலகத்தை நிகழ்த்துகிறான் McMurphy. படத்தின் மிகச் சிறப்பான காட்சி இது.

"ஷாக் ட்ரீட்மெண்ட்" தண்டனையை பெற்ற பிறகு அதனால் பாதிக்கப்பட்டவன் போல் விசித்திரமான முகத்துடனும் உடல்மொழியுடனும் வெளியே வருகிறான் McMurphy. எல்லோருமே திகைப்புடனும் பரிதாபத்துடனும் அவனைப் பார்க்கின்றனர். சற்று நேரத்திலேயே அவன் செய்கிற குறும்பு அது என்று தெரிய வந்ததும் அனைவருக்கும் சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வருகிறது.

துளிக்கூட உணர்ச்சியே வெளிப்படுத்தாத இயந்திரமான முகமும் தம்முடைய உத்தரவு பின்பற்றப்படவேண்டிய மெளன கண்டிப்புமாக Nurse Ratched பாத்திரத்தை Louise Fletcher ஏற்றிருக்கிறார். சிறந்த நடிகைக்கான அகாதமி விருது இவருக்கு கிடைத்தது நியாயமே. ஒருநிலையில் McMurphy மனநிலை சரியில்லையாதவனாக நடிக்கிறான் என்பதை மருத்துவர் குழு கண்டுபிடித்து அவனை வெளியேற்ற முடிவு செய்தாலும் Nurse Ratched தலையிட்டு அந்த முடிவை மாற்றுகிறார். McMurphy தனக்கு விடுக்கும் மறைமுக சவாலில் வெல்ல வேண்டும் என்கிற உணர்வே இந்த முடிவை நோக்கி அவளை நகர்த்துகிறது.

()

Ken Kesey படத்தின் தலைப்பிலேயே எழுதின நாவலை சிறப்பாக படமாக்கியிருக்கிறார் Milos Forman. மனித மனத்தின் சிடுக்குகளை அவிழ்க்க புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள சிகிச்சை முறைகளும் இயந்திரத் தனமான சடங்குகளும் மாத்திரமே தேவையில்லை. அவர்களை இயல்பான உற்சாகத்துடன் செயல்படுவதற்கான சூழ்நிலையை அமைத்துத் தருவதும் முக்கியமானது என்பதை இந்தப் படம் நமக்கு உணர்த்துகிறது. ராபர்ட் ராஜசேகர் இயக்கத்தில் 'மனசுக்குள் மத்தாப்பு' என்கிற தமிழ் திரைப்படம் இந்தத் திரைப்படத்தின் பாதிப்பில் உருவாகியது எனக் கருதுகிறேன். வசூல்ராஜா எம்.பி.எஸ்-திரைப்படமும் (இந்தி மூலம் - முன்னாபாய் )இந்தப் படத்தின் சில கூறுகளை உள்ளடக்கியது. IMDB-ன் 250 தர வரிசையில் நீண்ட காலமாக முன்னணியில் இருந்துவரும் இந்தத் திரைப்படம் அகாதமி விருதுகள் தவிர BAFTA உள்ளிட்ட மற்ற விருதுகளையும் பெற்றுள்ளது.

suresh kannan

Wednesday, August 05, 2009

1975-ன் இரு திரைப்படங்கள்

ஒரே நாளில் பார்த்த இரு திரைப்படங்களுமே 1975-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்பது தற்செயலானதாக இருக்க வேண்டும். ஒன்று இந்தியத் திரைப்படம். இன்னொன்று அமெரிக்கா.
ஷ்யாம் பெனகல் இயக்கிய இந்தித் திரைப்படமான 'Nishant' (இரவின் முடிவில் என்று பொருள் கொள்ளலாம்) சுதந்திரத்திற்கு முந்தையதொரு இந்தியக் கிராமத்தில் நிகழும் ஆண்டைகளின் அராஜகங்களையும் அதற்கான தீர்வையும் பற்றிப் பேசுகிறது. நகரமயமாக்கலின் விளைவாக இப்போது பெரும்பாலான ஆண்டைகள் கோட், சூட் மாட்டிக் கொண்டு பன்னாட்டு வர்த்தகத்திற்கு மாறிவிட்ட இன்றைய நவீன சூழ்நிலையிலும் கூட இந்தியாவின் முன்னேறாத பல கிராமங்களில் ஆண்டைகள் தங்களின் செல்வாழ்க்கை இழக்காமல் அடித்தட்டு மக்களின் முதுகு மீது சுகஜீவனம் நடத்திக் கொண்டிருப்பது தொடர்வது துரதிர்ஷ்டவசமானது.

1945-ன் ஒரு இந்தியக் கிராமம். அதன் ராஜா ஜமீன்தார் அம்ரீஷ்புரி. அவருடைய மூன்று இளைய சகோதரர்களில் நஸ்ருதீன்ஷா மாத்திரமே மது, மங்கை பக்கம் போகாதவன். கிராமம் முழுவதுமே இவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இயங்குகிறது. அங்கு பள்ளி ஆசிரியராக (கிரிஷ் கர்னாட்) வருபவரின் மனைவியை (சப்னா ஆஸ்மி) பார்த்ததுமே அவள் மீது மையல் கொள்கிறான் நஸ்ருதீன்ஷா. அராஜக சகோதரர்கள் அவளை கடத்திக் கொண்டு தங்கள் வீட்டில் வைத்துக் கொண்டு ஷிப்ட் போட்டுக் கொண்டு அவள் மீது இரவில் பாய்கிறார்கள். அப்பாவி பள்ளி ஆசிரியர் அதிகாரத்தின் எல்லா முனைகளிலும் தனக்கு நேர்ந்த அக்கிரமத்தை கதறிப் பார்க்கிறார். ஒன்றும் நிகழவில்லை. வேறு வழியின்றி அந்த சூழ்நிலையை அவர் ஏற்றுக் கொண்டாலும் அவருக்குள் இருக்குள் 'ஆண்' கையாலாகாத அவரைத் துன்புறுத்திக் கொண்டே இருக்கிறான். மன உளைச்சலுக்கு ஆளாகும் அவர் அந்த ஊரின் கோயில் பூசாரி உதவியுடன் கிராமம் முழுவதும் ஜமீன்தார் குடும்பத்தின் அநியாயத்தைப் பற்றி உரையாடி அவர்களுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறார். மக்கள் புரட்சி வெடித்து அந்தக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் கொல்லப்படுகிறார்கள்.

ஷ்யாம் பெனகல், அந்தப் பள்ளி ஆசிரியரின் கையாலாததனத்தை இரக்கமேயில்லாமல் சித்தரிக்கிறார். கடத்தலுக்குப் பிறகு பள்ளி ஆசிரியரும் அவரது மனைவியும் சந்திக்கும் இடம் முக்கியமானது. 'எப்படியிருக்கிறாய்' என்று அவர் மனைவியை நோக்கி வினவ, "அவர்கள் என்னை மிருகத்தைப் போல நடத்துகிறார்கள். நீங்கள் வந்து என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று ஒவ்வொரு நாளும் நம்பியிருந்தேன். இப்போது வந்து எப்படியிருக்கிறாய் என்றா கேட்கிறீர்கள்?" என்று வெடிக்கிறாள் மனைவி. ஆசிரியர் தன்னுடைய முயற்சிகளைப் பற்றி விவரித்தாலும் கூட "அந்த வீட்டை எரித்துவிட்டு நீங்கள் என்னை அழைத்து வந்திருக்க வேண்டாமா?" என்பதுதான் அவளின் பதிலாக இருக்கிறது. புராணங்களில் சித்திரிக்கப்படும் வீரபுருஷர்களைப் பற்றிய பிம்பமே ஆண்களின் பிம்பம் என்பதாக அவளுக்குள் உறைந்திருக்கக்கூடும் என்று கருதுகிறேன்.

நஸ்ரூதீன்ஷாவின் பாத்திரம் மிக நுட்பமானது. ஷா அதைச் சரியாக புரிந்து கொண்டு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயல்பில் நல்ல குணங்களைக் கொண்டிருந்தாலும் சகோதரர்களின் ஆண்மைத்தனமான அராஜகங்களின் மீது அவனுக்கு ஈர்ப்பு இருக்கிறது. அவர்களைப் போலவே தானும் பாவனை செய்ய முயன்று தோற்றுப் போகிறான். தன்னுடைய மனைவியை (ஸ்மிதா பாட்டில் - அறிமுகம்) விட ஆசிரியரின் மனைவியான சப்னா ஆஸ்மியை அவன் அதிகம் நேசிக்கிறான். எனவேதான் ஊரார் அவனை மிருகவெறியுடன் துரத்தும் போது சப்னாவின் கையைப் பற்றிக் கொண்டு ஓடுகிறான்.

சப்னா ஆஸ்மியும் ஸ்மிதா பாட்டிலும் முரண்படும் புள்ளியும் மிக நுட்பமானது. கடத்தப்பட்டு வந்திருக்கும் சப்னாவின் மீது அனுதாபம் கொள்ளும் ஸ்மிதா பாட்டில் அவள் தன்னுடைய கணவனுடன் நெருங்கும் போது அவள் மீது விரோதம் கொள்கிறாள். பின்பு வேறு வழியில்லாமல் அவளுடன் இணங்கியும் போகிறாள். சப்னாவும் அப்படியே. வன்புணர்ச்சிக்கு ஆளாகும் வெறுப்பான சூழ்நிலைக்கு பழகிவிடும் அவள் அந்த வீட்டில் தன்னுடைய முக்கியத்துவத்தை நிலைநாட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறாள். சிக்கலான சூழ்நிலையிலும் தன்னுடைய survival குறித்து யோசிக்கும் பெண்களின் ஆதார உள்ளுணர்வு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

அதிகாரத்தை எதிர்க்க மக்கள் சக்தியால்தான் இயலும் என்கிற தீர்வையும் இந்தப் படம் முன்வைத்தாலும் அதிலுள்ள நகை முரணையும் இந்தப்படம் சொல்லத் தவறவில்லை. பள்ளி ஆசிரியரின் மனைவியை மீட்கும் புள்ளியில்தான் அந்தப் புரட்சியே ஆரம்பிக்கிறது. ஆனால் அந்த ஆரம்பக் காரணத்திற்கு அர்த்தமேயில்லாமல் அவளும் இந்த வன்முறையில் பலியாகிறாள். கட்டுப்படுத்தப்படாத புரட்சி எப்படி தன் பிரதானஅர்த்தத்தை இழக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கோவிந்த் நிஹ்லானியின் காமிரா மிகுந்த அழகுணர்ச்சியுடன் காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறது. இந்தப் படம் போன வருடம்தான் உருவாக்கப்பட்டது என்றால் கூட நம்பலாம் அளவிற்கு காட்சிகள் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்கின்றன. இந்தப் படத்தில் அறிமுகமாகும் ஸ்மிதா பாட்டில் உற்சாகமுள்ள இளம் ஓவியன் தன்னுடைய அத்தனை திறமைகளையும் கொண்டு வரைந்த ஓவியத்தைப் போல இருக்கிறார்.

கிராம மக்களுக்குள் இருக்கும் வர்க்க முரண்களையும் அதன் யதார்த்தத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஷ்யாம் பெனகல். புராணங்களை மறுஉற்பத்தி செய்தும் அசட்டுத்தனமான மிகைப்படுத்திய சமூகப்படங்களை உற்பத்தி கொண்டிருந்த இந்திய சினிமாவின் அந்தக் காலத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக வெளிவந்த யதார்த்தவாதப் படங்களில் இந்தப்படம் முக்கியமானது. 1977-க்கான மத்திய அரசின் 'சிறந்த படம்' விருதை வென்ற இந்தப் படம் கேன்ஸ் உட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்றுள்ளது. இந்தப் படத்தின் பாதிப்பை இயக்குநர் மகேந்திரனின் 'உதிரிப்பூக்களிலும்'(1979) எதிரொலிப்பதைக் காண முடிகிறது.

உலக சினிமா என்றாலே மிக செளகரியமாக இந்தியத் திரைப்படங்களை ஒதுக்கிவிடும் நாம் இம்மாதிரியான படங்களைப் பற்றியும் உரையாடுவது மிக அவசியமானது என்று தோன்றுகிறது. இந்தப் பதிவே நீண்டு விட்டதால் இன்னொரு '1975' அமெரிக்கத் திரைப்படத்தைப் பற்றி அடுத்த இடுகையில் எழுத முயல்கிறேன்.

suresh kannan