Wednesday, August 05, 2009

1975-ன் இரு திரைப்படங்கள்

ஒரே நாளில் பார்த்த இரு திரைப்படங்களுமே 1975-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்பது தற்செயலானதாக இருக்க வேண்டும். ஒன்று இந்தியத் திரைப்படம். இன்னொன்று அமெரிக்கா.
ஷ்யாம் பெனகல் இயக்கிய இந்தித் திரைப்படமான 'Nishant' (இரவின் முடிவில் என்று பொருள் கொள்ளலாம்) சுதந்திரத்திற்கு முந்தையதொரு இந்தியக் கிராமத்தில் நிகழும் ஆண்டைகளின் அராஜகங்களையும் அதற்கான தீர்வையும் பற்றிப் பேசுகிறது. நகரமயமாக்கலின் விளைவாக இப்போது பெரும்பாலான ஆண்டைகள் கோட், சூட் மாட்டிக் கொண்டு பன்னாட்டு வர்த்தகத்திற்கு மாறிவிட்ட இன்றைய நவீன சூழ்நிலையிலும் கூட இந்தியாவின் முன்னேறாத பல கிராமங்களில் ஆண்டைகள் தங்களின் செல்வாழ்க்கை இழக்காமல் அடித்தட்டு மக்களின் முதுகு மீது சுகஜீவனம் நடத்திக் கொண்டிருப்பது தொடர்வது துரதிர்ஷ்டவசமானது.

1945-ன் ஒரு இந்தியக் கிராமம். அதன் ராஜா ஜமீன்தார் அம்ரீஷ்புரி. அவருடைய மூன்று இளைய சகோதரர்களில் நஸ்ருதீன்ஷா மாத்திரமே மது, மங்கை பக்கம் போகாதவன். கிராமம் முழுவதுமே இவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இயங்குகிறது. அங்கு பள்ளி ஆசிரியராக (கிரிஷ் கர்னாட்) வருபவரின் மனைவியை (சப்னா ஆஸ்மி) பார்த்ததுமே அவள் மீது மையல் கொள்கிறான் நஸ்ருதீன்ஷா. அராஜக சகோதரர்கள் அவளை கடத்திக் கொண்டு தங்கள் வீட்டில் வைத்துக் கொண்டு ஷிப்ட் போட்டுக் கொண்டு அவள் மீது இரவில் பாய்கிறார்கள். அப்பாவி பள்ளி ஆசிரியர் அதிகாரத்தின் எல்லா முனைகளிலும் தனக்கு நேர்ந்த அக்கிரமத்தை கதறிப் பார்க்கிறார். ஒன்றும் நிகழவில்லை. வேறு வழியின்றி அந்த சூழ்நிலையை அவர் ஏற்றுக் கொண்டாலும் அவருக்குள் இருக்குள் 'ஆண்' கையாலாகாத அவரைத் துன்புறுத்திக் கொண்டே இருக்கிறான். மன உளைச்சலுக்கு ஆளாகும் அவர் அந்த ஊரின் கோயில் பூசாரி உதவியுடன் கிராமம் முழுவதும் ஜமீன்தார் குடும்பத்தின் அநியாயத்தைப் பற்றி உரையாடி அவர்களுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறார். மக்கள் புரட்சி வெடித்து அந்தக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் கொல்லப்படுகிறார்கள்.

ஷ்யாம் பெனகல், அந்தப் பள்ளி ஆசிரியரின் கையாலாததனத்தை இரக்கமேயில்லாமல் சித்தரிக்கிறார். கடத்தலுக்குப் பிறகு பள்ளி ஆசிரியரும் அவரது மனைவியும் சந்திக்கும் இடம் முக்கியமானது. 'எப்படியிருக்கிறாய்' என்று அவர் மனைவியை நோக்கி வினவ, "அவர்கள் என்னை மிருகத்தைப் போல நடத்துகிறார்கள். நீங்கள் வந்து என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று ஒவ்வொரு நாளும் நம்பியிருந்தேன். இப்போது வந்து எப்படியிருக்கிறாய் என்றா கேட்கிறீர்கள்?" என்று வெடிக்கிறாள் மனைவி. ஆசிரியர் தன்னுடைய முயற்சிகளைப் பற்றி விவரித்தாலும் கூட "அந்த வீட்டை எரித்துவிட்டு நீங்கள் என்னை அழைத்து வந்திருக்க வேண்டாமா?" என்பதுதான் அவளின் பதிலாக இருக்கிறது. புராணங்களில் சித்திரிக்கப்படும் வீரபுருஷர்களைப் பற்றிய பிம்பமே ஆண்களின் பிம்பம் என்பதாக அவளுக்குள் உறைந்திருக்கக்கூடும் என்று கருதுகிறேன்.

நஸ்ரூதீன்ஷாவின் பாத்திரம் மிக நுட்பமானது. ஷா அதைச் சரியாக புரிந்து கொண்டு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயல்பில் நல்ல குணங்களைக் கொண்டிருந்தாலும் சகோதரர்களின் ஆண்மைத்தனமான அராஜகங்களின் மீது அவனுக்கு ஈர்ப்பு இருக்கிறது. அவர்களைப் போலவே தானும் பாவனை செய்ய முயன்று தோற்றுப் போகிறான். தன்னுடைய மனைவியை (ஸ்மிதா பாட்டில் - அறிமுகம்) விட ஆசிரியரின் மனைவியான சப்னா ஆஸ்மியை அவன் அதிகம் நேசிக்கிறான். எனவேதான் ஊரார் அவனை மிருகவெறியுடன் துரத்தும் போது சப்னாவின் கையைப் பற்றிக் கொண்டு ஓடுகிறான்.

சப்னா ஆஸ்மியும் ஸ்மிதா பாட்டிலும் முரண்படும் புள்ளியும் மிக நுட்பமானது. கடத்தப்பட்டு வந்திருக்கும் சப்னாவின் மீது அனுதாபம் கொள்ளும் ஸ்மிதா பாட்டில் அவள் தன்னுடைய கணவனுடன் நெருங்கும் போது அவள் மீது விரோதம் கொள்கிறாள். பின்பு வேறு வழியில்லாமல் அவளுடன் இணங்கியும் போகிறாள். சப்னாவும் அப்படியே. வன்புணர்ச்சிக்கு ஆளாகும் வெறுப்பான சூழ்நிலைக்கு பழகிவிடும் அவள் அந்த வீட்டில் தன்னுடைய முக்கியத்துவத்தை நிலைநாட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறாள். சிக்கலான சூழ்நிலையிலும் தன்னுடைய survival குறித்து யோசிக்கும் பெண்களின் ஆதார உள்ளுணர்வு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

அதிகாரத்தை எதிர்க்க மக்கள் சக்தியால்தான் இயலும் என்கிற தீர்வையும் இந்தப் படம் முன்வைத்தாலும் அதிலுள்ள நகை முரணையும் இந்தப்படம் சொல்லத் தவறவில்லை. பள்ளி ஆசிரியரின் மனைவியை மீட்கும் புள்ளியில்தான் அந்தப் புரட்சியே ஆரம்பிக்கிறது. ஆனால் அந்த ஆரம்பக் காரணத்திற்கு அர்த்தமேயில்லாமல் அவளும் இந்த வன்முறையில் பலியாகிறாள். கட்டுப்படுத்தப்படாத புரட்சி எப்படி தன் பிரதானஅர்த்தத்தை இழக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கோவிந்த் நிஹ்லானியின் காமிரா மிகுந்த அழகுணர்ச்சியுடன் காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறது. இந்தப் படம் போன வருடம்தான் உருவாக்கப்பட்டது என்றால் கூட நம்பலாம் அளவிற்கு காட்சிகள் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்கின்றன. இந்தப் படத்தில் அறிமுகமாகும் ஸ்மிதா பாட்டில் உற்சாகமுள்ள இளம் ஓவியன் தன்னுடைய அத்தனை திறமைகளையும் கொண்டு வரைந்த ஓவியத்தைப் போல இருக்கிறார்.

கிராம மக்களுக்குள் இருக்கும் வர்க்க முரண்களையும் அதன் யதார்த்தத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஷ்யாம் பெனகல். புராணங்களை மறுஉற்பத்தி செய்தும் அசட்டுத்தனமான மிகைப்படுத்திய சமூகப்படங்களை உற்பத்தி கொண்டிருந்த இந்திய சினிமாவின் அந்தக் காலத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக வெளிவந்த யதார்த்தவாதப் படங்களில் இந்தப்படம் முக்கியமானது. 1977-க்கான மத்திய அரசின் 'சிறந்த படம்' விருதை வென்ற இந்தப் படம் கேன்ஸ் உட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்றுள்ளது. இந்தப் படத்தின் பாதிப்பை இயக்குநர் மகேந்திரனின் 'உதிரிப்பூக்களிலும்'(1979) எதிரொலிப்பதைக் காண முடிகிறது.

உலக சினிமா என்றாலே மிக செளகரியமாக இந்தியத் திரைப்படங்களை ஒதுக்கிவிடும் நாம் இம்மாதிரியான படங்களைப் பற்றியும் உரையாடுவது மிக அவசியமானது என்று தோன்றுகிறது. இந்தப் பதிவே நீண்டு விட்டதால் இன்னொரு '1975' அமெரிக்கத் திரைப்படத்தைப் பற்றி அடுத்த இடுகையில் எழுத முயல்கிறேன்.

suresh kannan

25 comments:

Beski said...

//உலக சினிமா என்றாலே மிக செளகரியமாக இந்தியத் திரைப்படங்களை ஒதுக்கிவிடும் நாம் இம்மாதிரியான படங்களைப் பற்றியும் உரையாடுவது மிக அவசியமானது என்று தோன்றுகிறது.//

சரி.

Beski said...

இப்போது வரும் படங்களின் விமர்சனங்களை விட, பழைய படங்களின் விமர்சனங்கள் தருவது, என்னைப் போன்ற ’யூத்’களுக்கு அவற்றை அறிந்துகொள்வதில் உபயோகமாய் இருக்கும்.

நன்றி.

பிச்சைப்பாத்திரம் said...

//என்னைப் போன்ற ’யூத்’களுக்கு//

அலோ, என்ன சொல்ல வர்றீங்க? நானும் யூத்துதான் மாம்ஸ். நம்புங்க. :-)

Beski said...

//அலோ, என்ன சொல்ல வர்றீங்க? நானும் யூத்துதான் மாம்ஸ். நம்புங்க. :-)//

சரி மாப்ஸ்.
---
இங்க யூத்துன்னு சொன்னது மனதளவு யூத்து இல்ல. வயசளவு யூத்து.

மத்தபடி இங்க நெறையா பேரு யூத்துனுதான் சொல்லிக்கிறாங்க.... நேர்ல பாத்து பேசினாத்தான் தெரியும்.

ஆனா உங்க எழுத்துக்கள், பதில்கள்ல இயற்கையாவே நக்கல், நையாண்டியெல்லாம் கலந்து யூத்தாவே இருக்கு (எப்படி ஐசு?).

சென்ஷி said...

//இன்னொரு '1975' அமெரிக்கத் திரைப்படத்தைப் பற்றி அடுத்த இடுகையில் எழுத முயல்கிறேன். /

காத்திருக்கிறோம்.

உங்களின் விமர்சன நேர்த்தி பளிச்சிடுகிறது.

மணிஜி said...

ஆத்து,ஆத்துன்னு ஆத்திக்கிறேன்
யூத்து,யூத்துன்னு சொல்லி..
உங்கள் விமர்சன முயற்சியை
வரவேற்கிறேன் நண்பரே..

இளவட்டம் said...

மிக அருமையான பதிவு ....உங்களுடைய வலை பதிவை தொடர்ந்து படித்து வரும் வாசகன் நான்...சிறந்த திரைப்படங்களை அறிமுக படுத்துவதற்கு மிக்க நன்றி ........

இளவட்டம் said...

அடுத்த பதிவை எதிர்நோக்கி இருக்கிறோம் ......

GHOST said...

//உலக சினிமா என்றாலே மிக செளகரியமாக இந்தியத் திரைப்படங்களை ஒதுக்கிவிடும் நாம் இம்மாதிரியான படங்களைப் பற்றியும் உரையாடுவது மிக அவசியமானது என்று தோன்றுகிறது.//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Sridhar V said...

ஆம். நிஷப்தின் பாதிப்புதான் உதிரிப் பூக்கள். இன்னொரு தமிழ்ப் படமான ‘சிறை’யும் (ஆர் சி சக்தி) இதே பாதிப்பில் இருக்கும். அங்கே குருக்களின் மனைவியை ரவுடி பலாத்காரம் செய்ய அவன் வீட்டிலேயே தங்குகிறாள் அவள். பின்னர் அவன் இறநபிறகு தாலியை கழட்டி எறிகிறாள்.

நல்ல விமர்சனம். சந்தர்ப்பம் அமையும்போது பார்க்க வேண்டும். அடுத்த பதிவிற்காக வெயிட்டிங் :)

Toto said...

Thanks Suresh for introducing the mid time classics in Hindi. What a rich casting !! Interesting to know and looking for the 2nd one.

-Toto
Film4thwall.blogspot.com

PRABHU RAJADURAI said...

"நானும் யூத்துதான் மாம்ஸ். நம்புங்க. :-)"

கண்கள் இருண்டால்....பாட்டை எங்க கேட்டாலும் அப்படியே மனது நின்று விடுகிறது என்று சொன்னவர் நீங்கள்தானே....மினிமம் 43 இருக்கணுமே...

குப்பன்.யாஹூ said...

Lot of Tamil, Malayalam, Hindi, Telugu cinemas are there which are equal to the world standards.

samples: Moondraam pirai, Salangai Oli, 16 vayadinile, Kizakku seemiyile, yaatraa, Madilukal,Tevar Magan, Mouna Raagam, Gentle Man.

Anonymous said...

1975-இன் இரண்டாவது திரைப்படத்தைப் பற்றி ஒரு ஊகம்:

"One Flew over the Cuckoo's Nest"

பிச்சைப்பாத்திரம் said...

அனானி:

இதை நிச்சயம் யாராவது யூகித்து சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். நீங்கள் யாராக இருந்தாலும் சரி. உங்கள் முதுகில் நீங்களே ஒரு முறை தட்டிக் கொள்ளுங்கள். :-)

Anonymous said...

70s and 80s were the golden age of such directors. Films like Ardh Satya showed life as such and did not sensationalise or glorify violence. Benegal, Govind Nihalani
made many films that depicited the many facets of indian society, unseen in mainstream films.

உண்மைத்தமிழன் said...

நன்றி சுரேஷ் ஸார்..

நானும் திரைப்பட விழாவில் இத்திரைப்படத்தைப் பார்த்தேன்.

அப்போதைய என்னுடைய மனநிலையில் இது அவார்டு படம் என்பது போலவே தோன்றியது..

ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால்தான் அதன் வீரியம் புரிகிறது..

சப்னாவும், ஸ்மிதாவும் சந்திக்கின்ற காட்சிகளில் எதுவோ ஒன்று இருந்தது.. அது என்னவென்று சொல்லத் தெரியவில்லை..

மஞ்சூர் ராசா said...

aakrosh endra padamum antha neraththil vanthathu. athai patriyum ezuthavum.

பிரதீப் said...

சுரேஷ்,

நானும் நிஷாந்த் பார்த்தேன். நல்ல படமாய் இருந்தாலும் சில இடங்கள் எனக்குப் புரியவில்லை.

1. கலவரத்தில் ஸ்மிதா பாட்டிலை ஏன் கொன்றார்கள்? அந்த பூஜாரி சோகமாய் அங்கு ஏன் உட்கார்ந்திருந்தார்?
2. சபானா ஆஸ்மி ஏன் செத்துப் போனாள்?

அப்புறம் ஒரு சின்ன விண்ணப்பம். நீங்கள் அறிமுகப்படுத்தும் இந்த மாதிரி படங்கள் இணையத்தில் இருந்தால் ஒரு முறை கூகுளித்து அதையும் இணைத்து போட்டீர்கள் என்றால் செளக்கியமாய் இருக்கும். ஏன் என்றால் நாங்க எல்லாம் பேசிக்கலி கொஞ்சம் சோம்பேறீஸ்! நிஷாந்தை யு ட்யுபில் தான் பார்த்தேன். அதனுடைய லிங்க்
http://www.youtube.com/watch?v=EhtPaiCDMnw

அப்புறம் பூரா பதிவையும் ஸ்க்ரோல் செய்து படித்து விட்டு கமெண்ட் போடலாம் என்று தேடினால் கமெண்ட் பெட்டி மேலே இருக்கிறது. மறுபடியும் ஸ்கோரல சோம்பேறித்தனமாய் இருக்கிறது! திட்டாதீர்கள். நான் தான் இந்த அளவுக்கு சோம்பேறியா அல்லது எல்லோரும் அப்படி உணர்கிறார்களா என்று தெரியவில்லை. கொஞ்சம் பாருங்கள்....

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு நன்றி.

//கண்கள் இருண்டால்....பாட்டை எங்க கேட்டாலும் அப்படியே மனது நின்று விடுகிறது என்று சொன்னவர் நீங்கள்தானே....மினிமம் 43 இருக்கணுமே...

பிரபு இதெல்லாம் ஒவர். :-) நீங்கள் சொன்னதில் பத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

//சப்னாவும், ஸ்மிதாவும் சந்திக்கின்ற காட்சிகளில் எதுவோ ஒன்று இருந்தது.. //

ஆமாம் உண்மைத்தமிழன். மிக நுணுக்கமான காட்சி அது.

//1. கலவரத்தில் ஸ்மிதா பாட்டிலை ஏன் கொன்றார்கள்? அந்த பூஜாரி சோகமாய் அங்கு ஏன் உட்கார்ந்திருந்தார்?
2. சபானா ஆஸ்மி ஏன் செத்துப் போனாள்?//

ப்ரதீப்,

அத்தனை வருடங்களாக அதிகாரத்திற்கு அஞ்சி பொறுத்துக் கொண்ட மக்கள் தூண்டிவிடப்பட்டவுடன் பொங்கியெழுந்து அந்தக் குடும்பத்தினர் அனைவரையும் -அப்பாவிகள் உட்பட - கொன்று விடுகின்றனர். அது அப்படித்தான்நேரும். mob pshychology. சபனா ஆஸ்மியும் அவ்வாறே.

பூசாரி அமர்ந்திருப்பது அந்த அதிர்ச்சியினால் கூட இருக்கலாம். எடிட்டிங் அல்லது சென்சார் பிரச்சினையினால் தொடர்ச்சி விட்டுப் போயிருக்கலாம். என்னுடைய யூகம்தான் இது. எனிவே படம் பார்த்தற்கு நன்றி.


//இணையத்தில் இருந்தால் ஒரு முறை கூகுளித்து அதையும் இணைத்து போட்டீர்கள் என்றால் //

இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இணையத்தில் படங்களை தரவிறக்கும் செய்வது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான் என்றாலும் வெளிப்படையாக குறிப்பிடுவது சமயங்களில் நமக்கு எதிராய்த் திரும்பி விடலாம். ஆர்வமுள்ளவர்கள் தேடினால் நிச்சயம் கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கவில்லையா? :-)


//ஸ்க்ரோல் செய்து படித்து விட்டு கமெண்ட் போடலாம் என்று தேடினால்//

இது ஒன்றும் புரியவில்லை. :-(

பிரதீப் said...

சுரேஷ்,

நான் தரவிறக்கம் செய்து பார்ப்பதை சொல்லவில்லை. ஆன்லைனில் கூகுள் வீடியோஸ், யு ட்யுப் இவைகளில் இருந்தால் சுட்டலாம் அல்லவா? அதில் ஒன்றும் பிரச்சனை வராது என்று தான் நினைக்கிறேன். தெரியவில்லை.

அப்புறம் முழு பதிவையும் மெளசை க்ளிக்கி க்ளிக்கி கீழ் வரை வந்து படித்து முடித்து பின்னூட்டம் போட மறுபடியும் பதிவின் ஆரம்பத்திற்கு போக வேண்டியிருக்கிறது. அதைத் தான் சொன்னேன். புரியுதா?

thozhan maba said...

நண்பர் சுரேஷின் எழுத்துக்கள், மிக எளிதாக திரைப்படங்களின் ஊடே பயணம் செய்து வருகின்றது. அந்த மெல்லிய இழையாய் அவர் தரும் விமர்சனகள் நிச்சயம் போற்றுதற்குரிய ஒன்று.

முயற்சிகள் தொடரட்டும்.

-தோழன் மபா

தமிழன் வீதி.

yamuna rajendran said...

anpulla suresh-
the story revolves in telengana region in fourties. other two films by narasingarao - thasi and maa boomi - were also revolves around the same time period and region. all thesethree films are about the early days of telengana artmed struggle waged by united communist party. nishant - the film seen from the intellectual's point of view- again it is about the relation between intellecuals and revolution - even before sabhana ashmi's episode the whole peasents in the film affcted by the feudal lords in some way - it is an instance the intellectual generate the anger and it become a people revolt - the anger of the whole people - not mob pshycology - backfires everything related to feudal oppression from their own experience individualy. when the film evolves shabhana ashmi adopted the system and in a way she fall in love with nazruthin shaw, the same to him- she becomes part of the feudal world - it is the plight of the women in the fourties - dhasi tells more on this - nishant and maa boomi both classics in their own styles - nice you write about nishant in this time - the time of lalghar- anpudan yamuna rajendran

பிச்சைப்பாத்திரம் said...

Dear Yamuna Rajendran,

Thanks for visiting my blog and your comment.

Prathap Kumar S. said...

நன்றி...