Friday, July 31, 2009

அதிகாரத்தின் பக்கத்து வீட்டுக்காரர்

எஸ்.ராவின் பதிவில் இந்த திரைப்படத்தைப் பற்றி வாசித்ததிலிருந்தே உள்ளுக்குள் 'குறுகுறு'வென்றிருந்தது. இணையத்தில் தேடி கிடைக்காமல் விட்டுவிட்டேன். நண்பர் பைத்தியக்காரனும் தன்னுடைய மாத திரையிடலுக்காக இதே படத்தை தேர்வு செய்த போது ஆர்வம் மிகுந்து பரபரப்பேற்பட்டது. பழுதான காலை வைத்துக் கொண்டு திரையிடலுக்கு செல்ல முடியாது என்பதால் பெருமுயற்சிக்குப் பிறகு நண்பரொருவர் உதவியுடன் படத்தை தேடிப் பிடித்து இரவில் ஒரே அமர்வில் சுவாரசியத்துடன் பார்த்து விட்டேன். அது இஸ்ரேலியத் திரைப்படமான Lemon Tree (2008). இந்தப் பதிவு அதற்கான டிரையிலர்.பொதுவாக 'அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' என்பதான தொனியில் பலர் உரையாடுவதைக் கவனித்திருக்கிறேன். அவ்வாறில்லை. நம் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளின் ஒவ்வொரு பகுதியிலும் கூட அரசியல் நேரடியாகவோ மறைமுகமாகவோ பொதிந்துள்ளது. தனிநபரின் படுக்கையறைக்குள்ளும் நுழையும் அளவிற்கு அது காற்றைப் போல 'அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்' வஸ்துவாக மாறி நீண்ட காலமாகிவிட்டது. கேயாஸ் தியரி போல எங்கோ ஒரு அதிகார பிரதிநிதி எடுக்கும் முடிவு வேறெங்கோ இருக்கும் ஒரு தனிமனிதனைப் பாதிக்கிறது. இதைப் பற்றிதான் இந்தப் படம் பிரதானமாக பேசுகிறது.

()

திரையிடலுக்குச் செல்லவிருக்கும் பதிவர்கள் இந்தப் படத்தை காணவிருப்பதால் அவர்களின் சிந்தனைப் பரப்பில் எந்தவொரு அதீத எதிர்பார்ப்பபையோ எதிர்மறையான சலனத்தையோ ஏற்படுத்திவிடக்கூடாத கவனத்துடன் படத்தின் சில குறிப்பிடத்தகுந்த சமாச்சாரங்களை மாத்திரம் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.

* பல்லாண்டுகளாக நீண்டுக் கொண்டிருக்கும் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையின் பின்னணியை மேலோட்டாகவாவது அறிந்திருந்தால் இந்தப்படத்தை இன்னும் அழுத்தமாக உணர முடியும். இல்லையென்றாலும் ஒன்றும் குடி முழுகிவிடாது. இந்தப் பிரச்சினையைப் பற்றி இயக்குநர் அழுத்தமாகப் பேசாமல் அதை மறைமுகமாக ஒரு எலுமிச்சைத் தோட்டத்தின் மூலம் நமக்கு உணர்த்த விரும்புகிறார். இங்கு எலுமிச்சைத் தோட்டமும் அது அமைந்திருக்கும் இடமும் ஒரு குறியீடாகவே தோன்றுகிறது.

* படத்தின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் முதல் பாதிக் காட்சிகளின் பெரும்பான்மையிலும் எலுமிச்சையின் அற்புத மணம் நம்மை வருடிக் கொண்டேயிருக்கும் அளவிற்கு அந்த தோட்டமும் எலுமிச்சைகளின் அழகாக வடிவமும் நம்மை உணரவைக்குமளவிற்கு அற்புதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் Rainer Klusmann. அரியப்படும் எலுமிச்சை, எரியும் அடுப்பின் நெருப்பு, பலத்த சப்தத்துடன் நிறுவப்படும் கண்காணிப்பு கோபுரம், அதிகாரத்தின் குறியீடாகவே நீண்டிருக்கும் சுற்றுப்புறச் சுவர் போன்றவற்றின் அண்மைக் காட்சிகள் மிகுந்த அர்ததத்துடன் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் படத்தின் எடிட்டிங்கையும் (Tova Asher) குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தெளிவான நீரோடை போல அமைந்துள்ள திரைக்கதைக்கு ஏற்றாற் போல் காட்சிகள் நறுக்குத் தெறித்தாற் போல் அடுத்த நிகழ்வை நோக்கி நகர்கிறது.

* பாலஸ்தீன விதவைப் பெண்மணியாக Hiam Abbass மிகச் சிறப்பாக நடித்துள்ளார். நான் முன்னர் எழுதியுள்ள The Vistor திரைப்படத்திலும் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாய் இருந்தது. பாதுகாப்பு அமைச்சரின் மனைவியாக Rona Lipaz-Michael-ம் சிறப்பாக நடித்துள்ளார். ஆண்கள் அமைக்கும் அதிகாரப் பலகையின் கோடுகளில் பெண்கள் எவ்வாறு பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை இந்த இரு பெண் கதாபாத்திரங்களின் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். என்றாலும் பாதுகாப்பு அமைச்சராக நடித்திருக்கும் Doron Tavory-ன் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிகாரம் அளித்திருக்கும் கர்வமும் பெருமிதமும் எப்போதும் முகத்தில் கொப்பளிக்க உலாவரும் இவர், இறுதிக்காட்சியில் பரிதாபமாக நின்றிருக்கும் தோற்றம் மறக்கவியலாதது.

* இயக்குநர் Eran Riklis இந்தத் திரைப்படத்தை மிக மென்மையாகவும் அதே சமயம் மிக அழுத்தமாகவும் உருவாக்கியுள்ளார். தனிநபர் வாழ்க்கையில் நுழையும் அதிகாரத்தின் ஆதிக்கமும் அதை எதிர்கொள்பவரின் இயலாமையையும் சமூகம் இதை அணுகும் விதத்தையும் மிகுந்த நுண்ணுணர்வோடும் கலை மனத்தோடும் சொல்லியிருக்கிறார். எலுமிச்சை தோட்டத்தின் பிரச்சினை கூடவே அந்த விதவைப் பெண்மணியின் தனிமையையும் வழக்கறிஞருக்கும் அவருக்கும் ஏற்படும் நேசத்தையும் அதைக் கண்டிக்கும் கலாச்சார காவலர்களையும் மிகச் சிறப்பாக சித்தரித்திருக்கிறார். படத்தின் இறுதியில் வழக்கறிஞருக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை சொற்பானதொரு நேரக் காட்சியின் மூலம் பார்வையாளருக்கு உணர்த்தியிருப்பது அழகு.

* இயல்பானதொரு முத்தக் காட்சியைத் தவிர படத்தின் வேறு எந்தவொரு 'சங்கடமான' காட்சிகளும் இல்லாதிருப்பதால் அனைவருமே பார்க்கக்கூடிய அளவில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

()

நான் இந்தப் பதிவை எழுதுவதின் முக்கிய நோக்கமே நண்பர் பைத்தியக்காரனின் திரையிடலுக்கு 'செல்வதா வேண்டாமா' என்கிற மன ஊசலாட்டத்துடன் இருப்பவர்களுக்காகத்தான். கண்டிப்பாகச் செல்லுங்கள். இல்லையெனில் ஒரு சிறந்த திரைப்படத்தின் காண்பனுபவத்தை நீங்கள் இழக்கப் போகிறீர்கள் என்பதை நிச்சயமாக என்னால் சொல்ல முடியும்.

திரைப்படத்தின் இறுதியில் திரைப்படம் குறித்த பதிவர்களின் மனவோட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தி அதை நண்பர் பைத்தியக்காரனோ அல்லது வேறு நண்பரோ பதிவாக எழுதினால் நன்றாக இருக்கும்.

suresh kannan

16 comments:

கே.என்.சிவராமன் said...

அன்பின் சுரேஷ்,

இடுகைக்கு மிக்க நன்றி. படத்தை பார்த்துவிட்டும் எழுத முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். காரணம், பதிவுலக நண்பர் முத்துவேல். சென்ற மாத திரையிடலின்போது அவர் வைத்த வேண்டுகோள் இது. 'படத்தை பத்தி நீங்க எழுதினதை வாசிச்சதுனாலயே, என்னால முழுமையா ரசிக்க முடியலை' என்றார். நியாயமாகப்பட்டது. அதனால்தான் இந்த மாதம் அறிவிப்புடன் நிறுத்திவிட்டேன்.

இந்த சம்பவம் குறித்து அறியாமலேயே, ஆனால், மிகுந்த கவனத்துடன் இந்த இடுகையை எழுதியிருக்கிறீர்கள். உங்கள் அனுபவமும், பக்குவமும் இதில் பளிச்சிடுகிறது.

உங்கள் உடலும் உள்ளமும் ஒத்துழைத்தால் அவசியம் வாருங்கள். ஆனால், மாடிப்படிகளை ஏற வேண்டும் என்பதை நினைக்கும்போதே, 'பரவாயில்லை அடுத்த மாதம் வாருங்கள்...' என்றே சொல்லத் தோன்றுகிறது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பிச்சைப்பாத்திரம் said...

படத்தின் நிகழ்வுகளை வாசித்து அறிந்து கொண்டால் அது திரைப்படத்தை முழுமையான ஈடுபாட்டுடன் காண்பதற்கு இடைஞ்சலாக இருக்கும் என்பது ஒரு அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதே. [எனவேதான் இந்த இடுகையை மிகுந்த ஜாக்கிரதையுடன் எழுத முயன்றேன். என்றாலும் சிலது சிந்தியிருக்கலாம்.]

ஆனால் இது சஸ்பென்ஸ்,திரில்லர் வகையறா படங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். இம்மாதிரியான கலை நுணுக்கம் சார்ந்த படங்களின் கதைச் சுருக்கத்தை முன்பே அறிந்து கொள்வதில் தவறில்லை என்றே கருதுகிறேன். திரைப்பட விழாக்களில் இதை அச்சிட்டே தந்து விடுகிறார்கள். கதைச்சுருக்கத்தை அறிந்து கொண்டாலும் இதை இயக்குநர்கள் எவ்வாறு நுணுக்கமான காட்சிகளினாலும் உணர்வுகளினாலும் திரைப்படமாக்கியிருக்கிறார் என்பதையே ஒரு முதிர்ச்சியடைந்த பார்வையாளன் கவனிப்பான். கதைச்சுருக்கத்தை அறிந்து கொள்வது எவ்வகையிலும் அவனை தொந்தரவு செய்யாது. மேலும் அது ஆர்வத்தையே ஏற்படுத்தும்.

உதாரணமாக இதே படத்தைப் பற்றின எஸ்.ராவின் பதிவில் அவர் திரைப்படத்தின் நிகழ்வுகளை முழுமையாகவே வெளிப்படுத்தியுள்ளார். அது எனக்கு படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆவலைத்தான் ஏற்படுத்தியதேயன்றி .. ப்பூ.. இவ்வளவுதான் மேட்டரா?" என்கிற உணர்வை ஏற்படுத்தவில்லை. என்னுடைய பதிவின் நோக்கமும் அதுவே.

ஆனால் இதுவே சில பார்வையாளர்களுக்கு ஒரு முன்தீர்மானத்தை உருவாக்க வழி செய்யும் என்பதையும் நான் மறுக்கவில்லை.

இத்திரைப்படத்தைப் பற்றின உங்கள் பார்வையையும் (திரையிடலுக்குப் பின்னர்) அறிய ஆவலாய் இருக்கிறேன்.

குசும்பன் said...

//நான் முன்னர் எழுதியுள்ள The Vistor திரைப்படத்திலும் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாய் இருந்தது. //

என்னமோ நான் முன்னர் இயக்கிய தி விசிட்டர் திரைப்படத்திலும் இவரின் பங்களிப்பு... என்போல் போல் ஒரு பில்டப்பு:)


படத்தை பார்க்கலாம் என்று நினைச்சுக்கிட்டு இருந்தேன் ஆனால்

// இயல்பானதொரு முத்தக் காட்சியைத் தவிர படத்தின் வேறு எந்தவொரு 'சங்கடமான' காட்சிகளும் இல்லாதிருப்பதால்... //

இப்படி சொல்லி யோசிக்க வெச்சுட்டீங்க:)))

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி சுரேஷ் கண்ணன்

geethappriyan said...

திரைப்பட விழாக்களில் இதை அச்சிட்டே தந்து விடுகிறார்கள். கதைச்சுருக்கத்தை அறிந்து கொண்டாலும் இதை இயக்குநர்கள் எவ்வாறு நுணுக்கமான காட்சிகளினாலும் உணர்வுகளினாலும் திரைப்படமாக்கியிருக்கிறார் என்பதையே ஒரு முதிர்ச்சியடைந்த பார்வையாளன் கவனிப்பான். கதைச்சுருக்கத்தை அறிந்து கொள்வது எவ்வகையிலும் அவனை தொந்தரவு செய்யாது. மேலும் அது ஆர்வத்தையே ஏற்படுத்தும்.//
good explanation
good show
never give up ur style

geethappriyan said...

திரைப்பட விழாக்களில் இதை அச்சிட்டே தந்து விடுகிறார்கள். கதைச்சுருக்கத்தை அறிந்து கொண்டாலும் இதை இயக்குநர்கள் எவ்வாறு நுணுக்கமான காட்சிகளினாலும் உணர்வுகளினாலும் திரைப்படமாக்கியிருக்கிறார் என்பதையே ஒரு முதிர்ச்சியடைந்த பார்வையாளன் கவனிப்பான். கதைச்சுருக்கத்தை அறிந்து கொள்வது எவ்வகையிலும் அவனை தொந்தரவு செய்யாது. மேலும் அது ஆர்வத்தையே ஏற்படுத்தும்.//
good explanation
good show
never give up ur style

குப்பன்.யாஹூ said...

நான் குறை பாடாக எழுத வில்லை.

நாமும் (பதிவர்களும்) கோடம்பாக்கம் சினிமா காரர்கள் போலவே இருக்கிறோம். ஒருவர் ஒரு விஷயம் பற்றி எழுதினால் உடனே அனைவரும் அதே விசயத்தை எழுதும் பாணி.

எஸ் ரா எழுதும் முன்னர் ஒருவர் கூட லெமன் ட்ரீ பற்றி எழுத வில்லை. இப்போது எல்லாரும் வரிந்து கடி கொண்டு அதையே எழுதி தீர்க்கிறோம். அதுவும் தேர்ந்த பதிவர்கள் கூட.


இனிமேலாவது நாம் பேரரசு, விஜய் வகையறாக்களை குறை கூற கூடாது. ஏனென்றால் நமக்கும் பேரரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லையே.

ஒருவேளை மனித இயல்பே அப்படித்தானோ, ஆடு மந்தைகள் போல இருப்பது.


குப்பன்_யாஹூ

பிச்சைப்பாத்திரம் said...

நன்றி நண்பர்களே.

//ஒரு பில்டப்பு:)//

குசும்பன், இடுகையைப் பதிப்பித்த பிறகு மறுபடியும் வாசித்துப் பார்க்கும் போதுதான் இந்த வாக்கிய அமைப்பில் இருந்த பிழையைக் கண்டேன். சரி. யார் கவனிக்கப் போகிறார்கள் என்று அலட்சியமாக இருந்துவிட்டேன். ஆனால் அது யார் கண்ணில் படக்கூடாதோ அவர் கண்ணில் படும் என எதிர்பார்க்கவில்லை. :-))


//உடனே அனைவரும் அதே விசயத்தை எழுதும் பாணி.//

குப்பன்_யாஹூ,

மனிதனும் சமூக விலங்குதானே, மேலும் நல்ல விஷயத்திற்காக மந்தையில் சேர்வது தவறில்லையே? :-)

jokes apart, இதே கருத்து எனக்கும் உண்டு. எனவேதான் பைத்தியக்காரனின் பதிவின் பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

""பொதுவாக உலக சினிமா எனும் போது சில குறிப்பிட்ட படங்களே மீண்டும் மீண்டும் உரையாடப்படுவதைக் கவனிக்கிறேன். அவ்வாறில்லாமல் பரவலாக அறியப்படாத இதுபோன்ற படங்களையே வரும் மாதங்களிலும் தேர்வு செய்ய வேண்டும் என்கிறதொரு வேண்டுகோளையும் முன்வைக்கிறேன். ""
http://naayakan.blogspot.com/2009/07/blog-post_29.html

மேலும் மற்றவர்கள் எழுதாத பரவலாக அறியப்படாத திரைப்படங்களைப் பற்றியும் என்னுடைய பதிவில் எழுதியிருக்கிறன். இது உங்கள் கவனத்திற்கு. :-)

குப்பன்.யாஹூ said...

பின்னூட்டம் போஸ்ட் செய்த பிறகு நானே வருத்த பட்டேன்.

ஒரு நல்ல சினிமா எல்லா மக்க்களையும் அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே தாங்கள் எழுதி உள்ளீர்கள்.

அது புரியாமல் பின்னூட்டம் இட்டு விட்டேன், மன்னிக்கவும்.

சென்ஷி said...

@ குப்பன் யாஹூ..

நீங்களாச்சும் என்னன்ன உலகப்படத்தை திரையிடலாமுன்னு கொஞ்சம் ஐடியா கொடுத்திருக்கலாம் சார். பாருங்க உங்களை வருத்தப்படுத்துற அளவுக்கு ஆகிடுச்சு!

Anonymous said...

happy friendship day to all

pavithra

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அயல் சினிமாக்களைப் பற்றி எழுதும்போது கொஞ்சம் அதிகம் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் போல. உதா : /எலுமிச்சையின் அற்புத மணம் / இதுல என்னய்யா அற்புதம் இருக்கு :) :)

உங்கள் பதிவு படித்துவிட்டு படம் பார்த்தது உபயோகமாய் இருந்தது.

ஆனாலும், நீங்கள் உபயோகிக்கும் ஜெமோத்தனமான ‘முதிர்ச்சியடைந்த பார்வையாளன்’ போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் லேசான எரிச்சலைத் தருகிறது :(

பிச்சைப்பாத்திரம் said...

//அதிகம் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் //

இருக்கலாம். என்னுடைய பதிவில் திரைப்படம் குறித்த இடுகையை வாசிப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட திரைப்படத்தை பார்க்கச் செய்யும் ஆர்வத்தை ஏற்படுத்துவதுதான் நான் எழுதுவதின் பிரதான நோக்கம். அதனால் இம்மாதிரியான அதீதமான வார்த்தைகள் விழுகிறது என கருதுகிறேன்.

///எலுமிச்சையின் அற்புத மணம் / இதுல என்னய்யா அற்புதம் இருக்கு //

எலுமிச்சையின் மணம் எனக்கு மிக பிடித்தமானது. (மொக்கை கேள்விபதில் மீமீ ஒன்று இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது அதிலும் 'உங்களுக்கு பிடித்த மணம்' என்ற கேள்வியில் எலுமிச்சையையும் குறிப்பிட்டேன். இந்தத் திரைப்படத்தில் எலுமிச்சைகள் அண்மைக்காட்சிகளில் காட்டப்படும் போதெல்லாம் (குறிப்பாக தொடக்கக்காட்சி) அதன் மணத்தை என்னால் உணர முடிந்தது.

//முதிர்ச்சியடைந்த பார்வையாளன்’ //

உங்களை மாத்திரம் யாராவது பாமரனாய்ச் சித்தரித்தால் கோபம் வருகிறதே,அது ஏன? :-)

இந்த மாதிரியான வார்த்தைகளை உபயோகிப்பது ஒரு பாவனையாய் இருந்தாலும் அது தரும் தன்னம்பிக்கை எனக்கு பிடித்திருக்கிறது.

//லேசான எரிச்சலைத் தருகிறது :(//

என்னய்யா இது, இதே எழவாப் போச்சு? :-))

இனி மேல் என்னுடைய பதிவைப் படிப்பதற்கு முன் 'gelusil syrup ஒரு கரண்டி குடித்துவிட்டு வரவும்' என்கிற முன் குறிப்பை பதிவின் tag line-ஆக உபயோகிக்கலாமா என்று யோசிக்கிறேன். :-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மற்றவர்களை அடிக்காதீர்கள் என்றால், உன்னை அடித்தால் வலிக்கவில்லையா என்று கேட்டால் எப்படி :)

சிலரை முதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் என மகுடம் சூட்டவும் வேண்டாம், சிலரை பாமரன் என்று மட்டம் தட்டவும் வேண்டாம் (இதை சாதி மற்றும் அரசியல் ரீதியாகவும் யோசிக்கலாம்).

பலரை முதிர்ச்சியடையாத பார்வையாளர்கள் என ஒதுக்கும்போது நமக்கு வருவதற்குப் பெயர் ‘தன்னம்பிக்கையா’ என்ன?

முதிர்ச்சியடைந்த பார்வையாளன், நுட்பமான வாசகன் என்றெல்லாம் ஒன்றுமில்லை. பயிற்சி சார்ந்த விஷயம்தானே இதெல்லாம்!

’எரிச்சல்’ என்று வேறு சிலரும் சொல்லியிருப்பார்கள் போல! நான் குறிப்பிட்டது அப்படியில்லை. உங்கள் எழுத்துகள் என்னைக் கவர்வதாலேயே தொடர்ந்து வாசிக்கிறேன். நமக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களிடம்கூட சில சமயம் கோபம் வருமல்லவா, அதைப் போல இதை எடுத்துக் கொள்ளவும்.

prabhuraj said...

It is one of the finest films made in Israel.In climax,when i saw the chopped lemon trees,i felt disturbed.Plants are like us..They too have dreams,emotions and etc.,

Another Important film from Isreal on Political issues is WALTZ WITH BASHIR.we can screen this movie too

RAMG75 said...

இந்த படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிடீர்கள்.
Before sunrise and Before sunset படங்களை பார்த்திருகிறீர்களா ?