Tuesday, July 28, 2009

நாடோடிகள் - சில குறிப்புகள்


* திரைப்படம் துவங்கின பல நிமிடத்திற்கு 'இந்தப்படத்தையா தமிழ் கூறும் நல்லுலகம் இப்படிக் கொண்டாடியது' என்ற எண்ணம் எழுந்து கொண்டேயிருந்தது. ஒரளவிற்கு சுவாரசியமான திரைக்கதையும் நடிகர்களின் திறமையான யதார்த்த நடிப்பும் இல்லாதிருந்தால் இது ஒரு தோல்விப் படமாய் அமைந்திருக்கும் ஆபத்து இருந்தது. (தோல்வி என்பதை வணிக நோக்கில் சொல்லவில்லை).

* இளம் காதலர்கள் சிலபல தடைகளுக்குப் பிறகு ஓடிப்போய் இணைவதை சில்அவுட்டில் காண்பித்ததோடு முடித்துக் கொண்ட புரட்சி இயக்குநர்களின் திரைப்படங்களுக்கு மத்தியில் அப்படி ஓடின பிறகு அவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதான சமாச்சாரத்தை 'காதல்' திரைப்படம் உரையாடியது. அதைப் போலவே நாயகனின் கூடவே 'ஜோக்கடித்து' சுற்றித் திரியும் 'நாலு' நண்பர்கள் அவனை 'காதலியோடு' இணைத்து வைத்த பிறகு அவர்களின் கதி என்னவாகிறது என்பதைப் பற்றி எந்தவொரு திரைப்படமும் பேசாததை 'நாடோடிகள்' பேசுகிறது. ஆனால்...

* பதின்ம வயதுகளுக்கேயுரிய உணர்ச்சிப் பெருக்கிலும் துணிச்சலிலும் 'காதலிக்கிற' நண்பரையும் அவரது இணையையும் அவர்களின் காதலின் பின்புலத்தையும் உண்மையையும் ஆராயாமல் உயிரையும் பணயம் வைத்து இணைத்து வைத்துவிட்டு பின்னர் அவர்கள் கருத்து வேறுபாடினாலோ உடல்கவர்ச்சி தீர்ந்து போன பிறகோ பிரிய நினைக்கும் போது 'தங்களால்தான் அவர்கள் திருமணம் நிகழ்ந்தது' என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் இணைந்துதான் வாழ வேண்டும் என்று நினைப்பது அவர்களின் அந்தரங்கத்திலோ சுதந்திரத்திலோ தலையிடுகிற விஷயமாகிறது என்பதையும் இயக்குநர் யோசித்துப் பார்த்திருக்கலாம். இதற்காக அவர்களை சாகடிப்பதற்காக புறப்படுவதெல்லாம் ரொம்பவே ஓவர்.

* 'உன்னுடைய நண்பனின் நண்பன் உனக்கும் நண்பனே' என்பது மேலோட்டமாகப் பார்க்கும் போது சரியென்று தோன்றினாலும் ஆழமாக யோசித்துப் பார்க்கும் போது அபத்தமானது என்பது புரியும். முட்டுச் சந்தில் நின்று பேசித்தீர்ப்பதும் ஒன்றாக தண்ணியடிப்பதும்தான் நட்பு என்கிற புரிதல் இருப்பவர்கள் இதை மறுக்கக்கூடும். ஆனால் 'நட்பு' என்பதின் உண்மையான அர்த்தம் புரிந்தவர்களுக்கு இது நடைமுறையில் ஒவ்வாதது என்பதை உணர முடியும். நண்பனின் அறிமுகத்தினால் நேர்வதினாலேயே அவர் நமக்கும் உடனே நண்பராகி விட முடியாது. சிலபல இனிமையான, கசப்பான அனுபவங்களுக்குப் பிறகும் ஒத்த அலைவரிசை சிந்தனைகளினாலுமே அவர் நமக்கு நண்பராகக்கூடும்.

* இயக்குநர் சசிகுமார் ஏறக்குறைய 'சுப்ரமணியபுரம்' நடிப்பையே இதிலும் தந்திருக்கிறார். இதிலிருந்து அவர் உடனே வெளிவருவது நல்லது. ஆனால் இவரின் நடிப்பு உண்மையாக இருக்கிறது. இதுவே மற்ற அபத்த நடிகர்களிலிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது. 'கல்லூரி' பரணியின் நடிப்பு அதீதமாக இருந்தாலும் பல காட்சிகளில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். சசியின் மாமன் மகளாக வரும் அநன்யா துள்ளலான நடிப்பின் மூலமும் சட்டென்று மாறும் முகபாவங்களின் மூலமும் பார்வையாளர்களை உடனே கவர்கிறார். காது கேட்காதவராக இருந்தாலும் சிறப்பாக நடித்தார்' என்று சினிமா செய்திகளில் குறிப்பிடப்பட்ட அபிநயாவிற்கு (சசியின் தங்கை) இன்னும் அதிக வாய்ப்பளித்திருக்கலாம்.

* சமுத்திரக்கனி பாலசந்தரின் சீடர் என்பதாலேயோ என்னவோ, சிறிய கதாபாத்திரங்களைக் கூட அவர்களுக்கேயுரிய தனித்தன்மைகளுடன் உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக விஜய்யின் தந்தையாக வருபவரின் பாத்திரம் சிறப்பாக இருக்கிறது. அரசாங்க வேலையை கடவுளுக்கும் மேலாக நினைக்கும் சசியின் மாமா, இரண்டாவது மனைவியை திருப்தி செய்யும் பொருட்டு மகனை திட்டும் வயதான தந்தை, ஒரு வார்த்தை வசனம் கூட பேசாத அவர் மனைவி, "நீங்க சொன்னா சரி மாமா" எனும் அடிமை மருமகன்..போன்றவை காட்சிகளை சுவாரசியப்படுத்துகின்றன.

* எம்.பியின் மகன், தங்களின் காதல் பெண்ணின் அப்பாவால் பிரிக்கப்பட்டது என்பதை ஒரே ஒரு காட்சியின் மூலம் மிக சுருக்கமாக விளக்கியதற்கு இயக்குநரை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஆனால் பேரிளம் பெண்ணின் அயிட்டம் நம்பர் பாட்டு, காவல் நிலையத்தில் இருக்கும் சீரியஸான நிலையில் கூட நகைச்சுவையை புகுத்தி அதன் தீவிரத்தை நீர்க்கச் செய்தது, போன்றவைகளை அடுத்த படத்திலாவது தவிர்ப்பது நல்லது.

* நண்பனின் காதலியை கடத்துகிற பரப்பரப்பான காட்சிகளை (ஏன் கடத்த வேண்டும், அவளிடமே சொன்னால் பின்னால் வந்துவிட்டுப் போகிறாள்) இசையமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் கூட்டணி அமைத்து மிரட்டியிருக்கின்றனர்.

* படத்தின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு எவ்வாறு பொருந்துகிறது என்ற அற்ப கேள்வி எழுந்தாலும் கூட படத்தின் சுவாரசியமான உருவாக்கத்திற்காக பார்க்கலாம்.

* திரையரங்கில் கூட்டம் குறைவாகவே இருந்தாலும் சில சக பார்வையாளர்கள் வழக்கம் போல ஏற்படுத்திய அசெளகரியங்களை குறிப்பிடலாமென்று நினைத்தாலும் அது இணையத்தில் சிலருக்கு ஏற்படுத்தும் அலர்ஜியை கருத்தில் கொண்டு குறிப்பிடாமல் தவிர்க்கிறேன். :-)

suresh kannan

14 comments:

மண்குதிரை said...

சின்னச் சின்ன விசியங்கள் சுவாரஸ்யமான இருந்தாலும் படம் பார்த்து வந்த பிறகு நீங்கள் முதலில் சொல்லியதைத்தான் நானும் நினைத்தேன். சசிக்குமாரின் காதலி மணமுடிந்து போகும் போதும், அவருடைய ஆச்சி இறக்கும் போதும் ஒரு சலமும் என்னளவில் ஏற்படவில்லை.

தங்கமீன் said...

/*
* படத்தின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு எவ்வாறு பொருந்துகிறது என்ற அற்ப கேள்வி எழுந்தாலும்*/

இதையும் கொஞ்சம் படித்து பாருங்களேன்.
http://nahaikadai.blogspot.com/2009/06/blog-post_29.html

சரவணகுமரன் said...

//திரையரங்கில் கூட்டம் குறைவாகவே இருந்தாலும் சில சக பார்வையாளர்கள் வழக்கம் போல ஏற்படுத்திய அசெளகரியங்களை குறிப்பிடலாமென்று நினைத்தாலும் அது இணையத்தில் சிலருக்கு ஏற்படுத்தும் அலர்ஜியை கருத்தில் கொண்டு குறிப்பிடாமல் தவிர்க்கிறேன். :-) //

:-)

Beski said...

எனக்குப் படம் ரொம்ப பிடிச்சிருக்கு, நீங்கள் சொன்ன பல குறைகள் எனக்குத் தோன்றவில்லை.
---
//'தங்களால்தான் அவர்கள் திருமணம் நிகழ்ந்தது' என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் இணைந்துதான் வாழ வேண்டும் என்று நினைப்பது அவர்களின் அந்தரங்கத்திலோ சுதந்திரத்திலோ தலையிடுகிற விஷயமாகிறது என்பதையும் இயக்குநர் யோசித்துப் பார்த்திருக்கலாம்//
அப்படியெல்லாம் இல்லை. எவ்வளவோ பாடுபட்டு சேர்த்துவைத்த கனவுகள் கலைந்ததன் வெளிப்பாடுதான் அந்தக் கோபம்.
---
புதிய விஷயங்கள் சில தெரிந்துகொண்டேன். நன்றி.
---
அப்புறம் கால் எப்படி இருக்கு? ஆபீஸ் போயாச்சா?

அகநாழிகை said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

Arun Nadesh said...

சுரேஷ் அண்ணா,

ஒருக்கால், நீங்கள் பதிவெழுதாமல் இருந்ததற்கு ஒரு கால் தான் காரணமோ??
நலமாக இருக்கிறீர்களா??

விமர்சனம் அருமை..

//திரையரங்கில் கூட்டம் குறைவாகவே இருந்தாலும் சில சக பார்வையாளர்கள் வழக்கம் போல ஏற்படுத்திய அசெளகரியங்களை குறிப்பிடலாமென்று நினைத்தாலும் அது இணையத்தில் சிலருக்கு ஏற்படுத்தும் அலர்ஜியை கருத்தில் கொண்டு குறிப்பிடாமல் தவிர்க்கிறேன்.//

LOL..

கே.என்.சிவராமன் said...

பெரிய அளவில் இந்தப் படம் ஈர்க்கவில்லை என்பதே எனது அனுபவமும்.

சொல்ல வந்ததை அழுத்தமாகவும், சுருக்கமாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.

கால் குணமாகிவிட்டதாக தெரிகிறது. தொடர்ந்து பதிவு எழுதுங்கள். பட்ட காலிலேயே படாமல் இருக்க, எச்சரிக்கையாகவும் நடந்து செல்லுங்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட / நட்பாக விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

பாலா said...

சுரேஷ் கண்ணன்,
கால் முறிவு குணமாகியதில் மகிழ்ச்சி....மீண்டும் தேவதை வந்து வரம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்....

நாடோடிகள்:

மண் குதிரையார் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்...
ஸ்க்ரீன் ப்ளே நல்ல க்ரிப்பிங் ஆகா இருந்தது..
ஆகா ஓஹோ என்றெலாம் சொல்ல முடியவில்லை, ஆனால் ஒரு நாகரீகமான என்டர்டைனர் என்பதில் ஐயமில்லை :)
ஆனால் நிறைய பேர் இந்த ஆண்டின் சுப்ரமணியபுரம் என்றனர் :(

prabhuraj said...

//இதற்காக அவர்களை சாகடிப்பதற்காக புறப்படுவதெல்லாம் ரொம்பவே ஓவர்.

I too felt the same.But overall its a nice entertainment.

யாசவி said...

This movie not so good.

It is some way attracts that all.

But many review say it is so wonderful......

சாணக்கியன் said...

நேற்றுதான் இப்படத்தைப் பார்த்தேன்.

/*
'தங்களால்தான் அவர்கள் திருமணம் நிகழ்ந்தது' என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் இணைந்துதான் வாழ வேண்டும் என்று நினைப்பது அவர்களின் அந்தரங்கத்திலோ சுதந்திரத்திலோ தலையிடுகிற விஷயமாகிறது என்பதையும் இயக்குநர் யோசித்துப் பார்த்திருக்கலாம். இதற்காக அவர்களை சாகடிப்பதற்காக புறப்படுவதெல்லாம் ரொம்பவே ஓவர்.
*/

மிகவும் தட்டையாக யோசித்திருப்பதாக உங்களுக்கே தோன்றவில்லையா சுரேஷ்? நண்பனின் காதலுக்கு உணர்ச்சிவசப்பட்டு அவ்வளவு ரிஸ்க் எடுக்கும் நபர்கள் அவர்கள் அற்பமாக பிரியும்போதும் அதேபோல்தானே உணர்ச்சிவசப்படுவார்கள்? It is total justice to the characters... நம்முடைய புத்திசாலித்தனம் வாழ்வியல் கோட்பாடுகளையெல்லாம் அந்தக் கதாபாத்திரங்களிடம் எதிர்பார்ப்பது நியாயமா? அவர்கள் ஒன்றும் சும்மா ‘லவ் பண்றேண்’, என்றவுடன் சேர்த்துவைக்கவில்லை. சொல்லிவைத்தாற்போல் இருவரும் ‘செத்துவிடுவோம்’ என்கிறார்கள். நண்பன் தற்கொலைக்கே முயல்கிறான். ஆனால்,பின்னர் அங்கே காதலே இல்லை எனும் போது ஆத்திரம் வராதா? ஒரு மோசமான திரைப்படம் நம்முடைய 2 மணி நேரத்தை திருடிவிட்டாலே நமக்கு எத்தகைய எரிச்சல், ஆத்திரம் வருகிறது? அவர்கள் தங்கள் வாழ்க்கையையே அதில் இழந்திருக்கிறார்கள்.

/*'இந்தப்படத்தையா தமிழ் கூறும் நல்லுலகம் இப்படிக் கொண்டாடியது' என்ற எண்ணம் எழுந்து கொண்டேயிருந்தது */
ஒப்புக்கொள்கிறேன். ஆஹா, ஓஹோவென்று சொல்லமுடியவில்லை. ஆனால் அப்படி பாராட்டுவது எதனுடன் ஒப்பிட்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ‘அயன்’ போன்ற மாயாஜாலப்படங்கள் எல்லாம் இன்னும் வெற்றிபெருகின்றனவே!

/* ஆனால் 'நட்பு' என்பதின் உண்மையான அர்த்தம் புரிந்தவர்களுக்கு இது நடைமுறையில் ஒவ்வாதது என்பதை உணர முடியும் */
சுரேஷ், நம்முடைய ரசனை, ஆர்வம், விருப்பங்கள் எல்லாம் ஒத்துவரும் நண்பர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் பக்குவம் வரும் வரை ஒரு தேடல் இருக்கும். சந்திக்கும் எல்லோரையும் நண்பர்களாக்கிக்கொள்ளம் வேகம் இருக்கும். குறிப்பாக கல்லூரிக் காலத்தில்!

Venkatesh Kumaravel said...

படம் ஒரு செமி-டர்டி எண்டர்டெய்னர். அவ்வளவு தான். அந்த மீதி செமி-க்காக தான் குவிகின்ற பாராட்டுகளை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. சசிக்குமாருக்கு பதில் விஜயோ பிரசாந்தோ நடித்திருந்தாலோ படம் அப்பிக்கொண்டு போயிருக்கும். வலையுலகமும் துவம்சம் பண்ணியிருக்கும். பெரிதாக அலட்டிக்கொள்ளுமளவிற்கு ஒன்றுமே கிடையாது...

சாணக்கியன் said...

படத்தை இரண்டாம் முறையாக டிவியில் பார்த்தேன். ஒவ்வொரு பிரேமும் அற்புதமாக செதுக்கப்பட்டிருப்பதாக தோன்றியது