Saturday, July 04, 2009

'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா?..

முன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி வைக்க முடியாத சுமை. சில நபர்களை நமக்கு பார்த்த கணத்திலேயே பிடிக்காமற் போவதும் சிலரை பார்க்காமலேயே பிடித்துப் போவதும் முன்முடிவுகளின் அடிப்படையில்தான். ரயில் பயணத்தின் போது எதிரே அமரப் போகின்ற பயணி, சிடுமூஞ்சியாகவும் அவருடைய பெட்டிகளை வைத்துக் கொள்ள நம்முடைய இடத்தை ஆக்ரமிக்கப் போகிறவர் என்பதான கற்பனைகளுடனும் அதற்குண்டான ஜாக்கிரதை முன்னேற்பாடுகளுடனும் அமர்ந்திருக்கிறோம். வெளியே வரும் போது ஆட்டோகாரர் நிச்சயம் நம்மை ஏமாற்ற முயல்வார் என்ற முன்முடிவுடன் அவர் கேட்பதிலிருந்து ஐம்பது சதவீதத்தைக் குறைத்து பேரம் பேசுகிறோம். உறவுகளில் முன்முடிவோடு தவறாக பெரிதும் அணுகப்படுவது 'சித்தி' என்கிற உறவுமுறை. சித்தி என்றாலே அவர் தன்னுடைய கணவரின் குழந்தைகளை நிச்சயம் சரியாக வளர்க்காமல் கொடுமைப்படுத்துவார் என்பது பொதுவான எண்ணம்.

என்னுடைய மூத்த சகோதரருக்கு திருமணமாகியிருந்த சமயம். அதுவரை எங்களுக்குள் நாங்கள் அடித்துக் கொண்டும் கூடிக் கொண்டும் விரோதித்துக் கொண்டும் நட்பு பாராட்டிக் கொண்டும் இருந்தோம். அதுவரை இருந்த சூழ்நிலையைக் கலைத்துக் கொண்டு புதிதாக ஒரு அந்நியர் எங்கள் வீட்டில் நுழைகிறார். என்னுடைய பதின்மத்தில் இருந்த அந்த வயதுக்கேயுரிய அறியா வன்மத்தோடு 'அண்ணி' என்கிற அந்த உறவைப் புரிந்து கொள்ள முயலாமலேயே வெறுக்கவும் புறக்கணிக்கவும் செய்தேன். அவர் சாப்பாடு கொண்டு வந்தால் சாப்பிட மாட்டேன்; எதிரில் வந்தால் வெறுப்போடு திரும்பிச் செல்வேன். அவரின் நல்ல குணத்தைப் புரிந்து கொள்ள ஒரு மாதம் பிடித்தது. 'புதிதாக வரப்போகிறவள்' தன் மகனை பிரித்துவிடுவாளோ என்கிற வழக்கமான possessiveness குணத்தை வெளிப்படுத்தும் விதமாக என் அம்மா ஒரு முன்முடிவுடன் அண்ணனின் திருமணத்திற்கு முன்பிருந்தே எங்களிடையே உரையாடிக் கொண்டிருந்தது எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று பிறகு உணர்ந்தேன். உறவுகளை முன்முடிவுடன் அணுகக்கூடாது என்கிற படிப்பினையை இது அளித்தது.இரானிய திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதியின் திரைப்படமான 'PEDAR' (தந்தை என்று பொருள்) இதைத்தான் பிரதானமாக சொல்வதாக எனக்குத் தோன்றுகிறது.

ஒரு விபத்தில் தன்னுடைய தந்தையை இழந்த சிறுவனான Mehrollah பொருளாதாரக் காரணங்களுக்காக கிராமத்திலிருந்து நகரத்திற்கு சம்பாதிக்கச் செல்கிறான். பணியிடத்தில் விடுமுறையைப் பெற்றுக் கொண்டு அம்மாவிற்கு, தங்கைகளுக்கு என்று ஒவ்வொரு பொருளாக தேடி வாங்கி ஊருக்குத் திரும்பும் போது தன்னுடைய பால்ய நண்பனின் மூலம் அந்த அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. அவளுடைய அம்மா ஒரு போலீஸ்காரனை திருமணம் செய்து கொண்டு வேறொரு வீட்டில் வசிக்கிறார். "அந்த போலீஸ்காரன் ரொம்ப நல்லவனாம். உங்க அம்மா அதிர்ஷ்டம் செஞ்சவங்கன்னு ஊருக்குள்ள பேசிக்கறாங்க". கேட்ட மாத்திரத்திலேயே முகந் தெரியாத அந்த போலீஸ்காரனின் மீதும் அதற்குக் காரணமாகியிருக்கிற அம்மாவின் மீதும் ஆத்திரமும் வன்மமும் பெருகுகிறது மெஹ்ருல்லாவிற்கு. தான் வாங்கி வந்த பொருட்களை அவர்கள் வீட்டு வாசலில் எறிந்து விட்டு அம்மாவையும் ஆத்திரப்பார்வையுடன் முறைத்துவிட்டு தன்னுடைய பழைய வீட்டில் தங்குகிறான். எப்படியாவது அந்த போலீஸ்காரனை நிம்மதியிழக்கச் செய்ய வேண்டும் என்பதே அவனுடைய பிரதான நோக்கமாயிருக்கிறது.

நடுஇரவில் அவர்கள் வீட்டின் ஜன்னலை கல்லெறிந்து உடைக்கிறான். தன்னுடைய தங்கைகளை யாருக்கும் தெரியாமல் கூட்டி அழைத்து வந்து அம்மாவை பதைக்கச் செய்கிறான். தன்னுடைய புது தகப்பனை வழியில் முறைத்து 'தாயின் மருத்துச் செலவிற்கான' பணத்தை விட்டெறிகிறான். அவனுடைய அம்மா தன்னுடைய ஆதரவற்ற நிலையை எடுத்துச் சொல்லிக் கதறுவதை ஏற்காமல் புறக்கணிக்கிறான். "குடும்பத்திற்கு வேண்டிய பணத்தைத்தான் நான் சம்பாதிக்கப் போயிருந்தேன். நீ எதுக்காக இந்த ஆள கல்யாணம் செஞ்சிக்கிட்ட" என்று ஆணில்லாமல் ஒரு பெண் எதிர்கொள்ள சங்கடங்களையெல்லாம் அறிந்திருக்க முடியாத பால்யத்த்தின் அறியாமையுடன் எதிர்க்கேள்வி கேட்கிறான்.

ஒரு விபத்தில் சுவற்றின் மேலேயிருந்து கீழே விழுந்து சுவாதீனமின்றி கிடக்கும் மெஹ்ருல்லாவை தங்களுடைய பராமரிப்பில் வைத்து கவனிக்கின்றனர் அவனுடைய அம்மாவும் புதுதகப்பனும். தன்னுடைய இருப்பு அவனுக்கு சங்கடத்தை தரக்கூடாது என்பதற்காகவே பணியிடத்திலேயே தற்காலிமாக தங்கிக் கொள்கிறார் புதுதகப்பன். இவை எதுவும் மெஹ்ருல்லாவின் வன்மத்தை தேயச் செய்யவில்லை. போலீஸ்கார புதுதகப்பனின் துப்பாக்கியை களவாடிக் கொண்டு தன்னுடைய பால்ய நண்பனுடன் நகரத்திற்கு பறக்கிறான். அவனைத் தேடி கோபத்துடன் போலீஸ்காரரும் நகரத்திற்குச் செல்கிறார். நகரத்தில் ஜாலியாக சுற்றித்திரியும் அவர்களை பெருமுயற்சிக்குப் பின் துரத்திப்பிடித்து நண்பனை பேருந்தில் ஏற்றி அனுப்பி விட்டு மெஹ்ருல்லாவை கைவிலங்கிட்டு தன்னுடைய பைக்கிலேயே அழைத்து வருகிறார். வழியெங்கும் பிடிவாதமான மெளனத்துடன் பயணிக்கிறான் மெஹ்ருல்லா. "எத்தன திருட்டுப் பசங்கள பாத்திருப்பேன். எங்கிட்டயே உன் போக்கிரித்தனத்தை காட்டறியா" என்று அவனைத் திட்டிக் கொண்டே வருகிறார் போலீஸ்காரர்.

ஒரு சூழ்நிலையில் அவரிடமிருந்து வண்டியுடன் தப்பித்துவிடுகிறான் மெஹ்ருல்லா. ஆனால் இது போல் பல திருடர்களை பார்த்து அனுபவமுள்ள அந்த போலீஸ்காரர் மலையை சுற்றிவந்து பாதையில் தடையை ஏற்படுத்தி வைக்கிறார். இதை எதிர்பார்க்காத மெஹ்ருல்லா வண்டியுடன் கீழே விழுந்து திரும்பவும் மாட்டிக் கொள்கிறான். திரும்பவும் கைவிலங்கு மாட்டி அழைத்து வருகிறார். இரவு ஒரிடத்தில் தங்குகிறார்கள். அவர் தரும் உணவைப் புறக்கணிக்கிறான் மெஹ்ருல்லா. உறக்கத்தின் இடையில் தப்பிக்க முடியுமா என்று பார்க்கிறான். ஆனால் பயங்கர இருட்டில் ஓநாய்களின் ஊளையோசை அவனைத் தடுக்கிறது. இதை நன்றாக அறியும் போலீஸ்காரர் நிம்மதியாக உறங்குகிறார். திரும்பவுமான பயணத்தில் வண்டி பழுதாகி பாலைவனத்தின் நடுவிலேயே நின்றுவிடுகிறது. பழுதைச்சரிசெய்யும் எந்த முயற்சியும் பலனளிக்க வில்லை. எரிச்சலின் உச்சியில் மெஹ்ருல்லாவை போட்டுச் சாத்தியெடுக்கிறார். பின்பு அவனை கைவிலங்கிட்டு கால்நடையாகவே அந்த பாலைவனத்தை கடக்க முயற்சிக்கிறார். தீடீரென்று ஏற்படும் பாலைவனப் புயல் இருவரையும் அலைக்கழிக்கிறது. தன்னையும் மெஹ்ருல்லாவையும் பாதுகாத்துக் கொள்ள பெருமுயற்சியெடுகிறார். புயல் ஓய்ந்து மறுபடியும் நடக்க ஆரம்பிக்கும் போது வயதான அந்த போலீஸ்காரரால் ஒரு நிலைக்கு மேல் நடக்க முடியவில்லை. அதீதமான தாகமும் களைப்பும் கண்தெரியுமளவிற்கு நீளும் மணற்பரப்பும் உயிர்பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. கண்ணீருடன் தன்னை அங்கேயே விட்டுவிட்டு மெஹ்ருல்லாவை போகச் சொல்கிறார்.

கடுமையானவராக தெரிந்தாலும் அவரிடமிருந்து அவ்வப்போது கசியும் அன்பை ஓரளவிற்கு புரிந்து கொண்டிருக்கும் மெஹ்ருல்லா இந்த உச்சநிலையில் அவரின் அன்பை முழுமையாக தெரிந்து கொள்கிறான். நினைவின்றிக் கிடக்கும் அவரை மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அருகிலிருக்கும் ஒரு எதிர்பாராத ஓடையின் குளிர்ச்சியில் வந்து கிடத்துவதுடன் நிறைகிறது திரைப்படம்.

()

பொதுவாக இரானியத் திரைப்படங்களின் உருவாக்கமும் கதை சொல்லும் விதமும் அதன் நிலப்பரப்பும் என் மனதிற்கு மிக நெருக்கமாக இருப்பதைப் பார்க்கிறேன். இதுவும் அவ்வாறே. மஜித் மஜிதி இந்தத் திரைப்படத்தின் மூலம் எந்தவித கோணங்கித்தனமான உத்திகளுமில்லாமல் நேரடியாக பார்வையாளனிடம் உரையாடுகிறார். இந்தப் படத்தின் இரண்டே இரண்டு பிரதான பாத்திரங்களான போலீஸ்காரர் மற்றும் அந்த பதின்ம வயதுச்சிறுவன் ஆகிய இரண்டு பாத்திரங்களும் மிகத் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளன. போலீஸ்காரர் மெஹ்ருல்லாவை கருணையோடு அணுகினாலும் திரும்பத் திரும்ப அவனின் வன்மமான செயல்கள் வெளிப்படும் போது ஆத்திரமும் கோபமும் அடைந்து அதே வன்மம் அவருக்குள்ளும் பரவுவது இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

நம்முடைய தமிழ்த் திரைப்படங்களின் பாத்திரங்கள் நீண்ட காலமாகவே கருப்பு-வெள்ளைத்தனத்துடனே உருவாக்கப்படுகின்றன. நாயகன் எலலா விதக் கல்யாண குணங்களுடன அதீத நல்லவனாகவும் சித்தரிக்கப்படும் வேளையில், வில்லன் குடும்பம் குட்டி என்ற எந்தக் கருமாந்திரங்களுமில்லாமல் எப்போதும் மது, மங்கைகளுடன் உல்லாசபுரி நாயகனாகவும் அதீத கொடுமைக்காரனாகவுமே சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். (தங்கத்தையோ, போதைப்பொருளையோ கைமாற்றின 'டீல்' வெற்றிகரமாக முடிந்தவுடன் 'என்ன வெறும் தண்ணிதானா என்பார் விருந்தாளி. வில்லன் புன்னகையுடன் கையைத் தட்டினவுடன் இதற்காகவே காத்திருந்த, எந்தெந்த பாகங்கள் தெரியவேண்டுமோ அதற்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட விநோதமான உடையுடன் இரட்டை அர்த்தப்பாடலுடன் வருவார் கவர்ச்சி நடிகை). அவ்வாறில்லாமல் பயபக்தியாக சாமி கும்பிடுகிற ஒரு முதியவரை காட்டும் அறிமுகக் காட்சியுடன் இயல்பான வில்லனை காட்டிய படம் மணிரத்னத்தின் 'பகல் நிலவு' என்று நினைக்கிறேன்.

Photobucket

இந்தப் படம் எனக்கு உணர்த்திய இன்னொரு செய்தி, ஒரே சூழ்நிலையில் திரும்பத் திரும்ப வாழ நேரும் மனிதர்களுக்குள் நீடிக்கும் முரண்கள், நீண்ட பயணங்களின் போது அது தரும் இனிய அனுபவங்களால் புகையாய் மறைந்து போவது. 'காப்பி போட்டாச்சா' என்பது போன்றவற்றிற்கு மாத்திரம் வீட்டில் வாயைத் திறக்கும் சிடுமூஞ்சி அப்பா, ரயில் பயணத்தின் போது கொய்யாப் பழம் விற்கும் சிறுமியின் விற்பனை சாதுர்யத்தை நினைத்து வாய்விட்டு சிரிப்பதை பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். சமையலறையையும் அம்மாவையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அங்கேயே புழங்கிக் கொண்டிருக்கும் எரிச்சலுடன் பதிலளிக்கும் அந்த ஜீவன் அடக்க மாட்டாத மகிழ்ச்சியுடன் தன் உறவினர் தோழியுடன் திருமண வீட்டில் உரையாடிக் கொண்டிருப்பதைக் காணும் போது இன்னும் ஆச்சரியம் நீளும். பயணங்களை நம்முடைய தொன்மையான சம்பிரதாயங்களுடன் பின்னிப் பிணைக்க வைத்திருப்பதின் காரணம் இதுவாகத்தானிருக்க வேண்டும். அதுவரை தன்னுடைய புதுதகப்பனிடம் முரண் கொண்டிருக்கும் மெஹ்ருல்லா பயணங்களின் இடையில் ஏற்படும் உயிர்போகும் சிக்கலான தருணத்தில் அவரின் அன்பைப் புரிந்து கொள்கிறான்.

போலீஸ்காரராக நடித்திருக்கும் Mohammad Kasebi தொழில்முறை நாடக நடிகர் மாத்திரமல்லாது இயக்குநரும் ஆவார். Hassan Sadeghi மெஹ்ருல்லா என்கிற சிறுவனாக மிகத்திறமையான முகபாவங்களுடன் தன்னுடைய பங்களிப்பை அளித்திருக்கிறான். மெஹ்ருல்லாவின் நண்பனாக வரும் சிறுவனின் துணைப்பாத்திரமும் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் வறுமையில் உழன்று கொண்டிருக்கும் அவனுக்கு 2000 டோமன் (ரியால்) பணத்தை சம்பாதிப்பதே கனவெல்லையாக இருக்கிறது. இதற்காக மெஹ்ருல்லாவை தன்னையும் நகரத்திற்கு அழைத்துப் போகச் சொல்லி நச்சரித்துக் கொண்டேயிருக்கிறான். இதற்காகவே மெஹ்ருல்லாவிற்கு ஒரு விசுவாசமான அடிமை போல இருக்கிறான். நகரத்தின் செளகரியங்களை அனுபவிக்கும் போது அவனுடைய கனவு நிறைவேறி விட்டதாகவே தோன்றுகிறது. ஆனால் போலீஸ்காரரால் பிடிபட்டு திருப்பியனுப்பப்படும் போது ஆற்றாமையால் அழுகிறான். பொருளாதாரக் காரணங்களுக்காக நகரத்திற்கு புலம்பெயரும் கனவுகளுடன் இருக்கும் பல சிறுவர்களை இந்தப் பாத்திரம் நினைவுப்படுத்துகிறது.


இந்தத் திரைப்படம் நிறைவடையும் காட்சி மிக முக்கியமானது. சற்றும் நாடகத்தனமில்லாமல் இயல்பான நிகழ்வுடன் தன்னுடைய புதுதகப்பனின் அன்பை அந்தச் சிறுவன் முழுக்கவும் புரிந்து கொள்வதான காட்சியுடன் படம் நிறைகிறது. நினைவின்றி கிடக்கும் போலீஸ்காரனின் சட்டையிலிருந்து மெஹ்ருல்லாவின் குடும்பம் சந்தோஷமாகச் சிரிக்கும் புகைப்படமொன்று மிதந்து சிறுவனின் கையில் படருவதோடு திரை இருளடைகிறது. மாறாக இருவரும் கட்டிப்பிடித்து கதறியழுதிருந்தால் அது கேவலமானதொரு காட்சியாக அமைந்திருக்கும். இந்தப் புள்ளியில்தான் உலக சினிமாவிற்கும் மற்ற சினிமாவிற்கான வித்தியாசம் பொதிருந்திருக்கிறது எனக் கருதுகிறேன்.

suresh kannan

13 comments:

Anonymous said...

நல்லதொரு பதிவிற்கும் சினிமா அறிமுகத்திற்கும் நன்றி சுரேஸ்.

கானகம் said...

என்னங்கப்பா..உலகத்திரைப்படம் அப்படின்னாலே ஈரானியப் படமும் மஜித் மஜிதியின் படங்கள் மட்டுமேவா என்ற அளவுக்கு வலையுலகில் மஜிதியின் திரைப்படங்கள் விவாதிக்கவும், பாராட்டவும் படுகிறது... கடைசியில கட்டியனச்சு அழுகுறதுக்கு இதென்ன தமிழ் சினிமாவா???

நல்ல விமர்சனம்.. அதைவிட நன்றாய் இருந்தது இந்தப் படவிமர்சனத்துக்கு முன்பு நீங்கள் போட்ட ட்ரெய்லர்..

Anonymous said...

>பயபக்தியாக சாமி கும்பிடுகிற ஒரு முதியவரை<

எம்.ஆர்.ராதா எத்தனையோ படங்களில் பக்தியாளராய்,காமெடியனாய் வில்லத்தன்ம் செய்திருக்கிறார். நீங்க பகல்நிலவுல இருந்துதான் சினிமா பார்க்க ஆரம்பிச்சீங்க போல :). எதுக்கு ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட்ஸ். கானகம் சொன்னாப்புல ட்ரெய்லர்தான் நல்லா இருந்துச்சு. படத்தின் கதையை முழுசாசொல்றதை தவிர்த்தா விமர்சனம் சிறப்பாய் இருக்கும்!

Athisha said...

நல்ல அறிமுகம் தோழர். கதையை சொல்லாமல் இருந்திருக்கலாம். அதனால் ஸ்கிப் பண்ணி படிக்க வேண்டியதாகிவிட்டது.

கதை வேண்டாமே.. அல்லது கதையின் சாரத்தை மட்டும் சொல்லலாமே!

Sridhar V said...

நான் இன்னமும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டாக்கிவிட்டீர்கள்.

மஜீதின் முறையில் படம் எடுப்பது ஒரு சவால்தான். அவருடைய சில்ட்ரன் ஆஃப் ஹெவனில் பல காட்சிகள் மிகவும் யதார்த்தமானவையாக இருக்கும். உதாரணமாக அந்தச் சிறுவனின் தந்தை மசூதியில் தொழுகைக்கு தேநீர் தயாரிக்கும்போது பக்தியினால் கண்களில் ததும்பும் கண்ணீரோடு இருப்பார். சமீபத்தில் ஒரு எழுத்தாளர் ‘பசங்க’ படத்தை அதோடு ஒப்பிட்டு பசங்க படம் சிறப்பானது என்று வேறு எழுதியிருந்தார். முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் சற்று நேரம் கழித்து அந்த அரசியல் புரிந்தது :).

மஜீதின் இறுதிக் காட்சிகள் அப்படித்தான். நாம் இருக்கையைவிட்டு எழுந்திருக்க ஏதோ ஒரு வகையில் முடிவு அறிவிக்கப்பட வேண்டியிருக்கிறது :)

அருண்மொழிவர்மன் said...

நல்ல பகிர்வு. அண்மையில்தான் கனடாவில் இப்படியான உலக திரைப்படங்களுக்கெனவே ஒரு கடை உள்ளது என்று அறிந்துகொண்டேன் . இனித்தான் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கவேண்டும்.


//ம்முடைய தமிழ்த் திரைப்படங்களின் பாத்திரங்கள் நீண்ட காலமாகவே கருப்பு-வெள்ளைத்தனத்துடனே உருவாக்கப்படுகின்றன. நாயகன் எலலா விதக் கல்யாண குணங்களுடன அதீத நல்லவனாகவும் சித்தரிக்கப்படும் வேளையில், வில்லன் குடும்பம் குட்டி என்ற எந்தக் கருமாந்திரங்களுமில்லாமல் எப்போதும் மது, மங்கைகளுடன் உல்லாசபுரி நாயகனாகவும் அதீத கொடுமைக்காரனாகவுமே சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.//

இப்படியான நிலையால்தான் ஹீரோ வோர்ஷிப் தலைவிரித்தாட, தமிழ்த்திரைப்பட கதாபாத்திரக் கட்டமைப்பு பலவீனமடைந்துவிடுகின்றது என்று நினைக்கின்றேன்.

உண்மைத்தமிழன் said...

விரிவான அறிமுகத்திற்கு நன்றிகள் சுரேஷ் ஸார்..!

நான் இன்னமும் பார்க்கவில்லை.. வாய்ப்பு கிடைத்தால் பார்த்துவிடுகிறேன்.

பொதுவாகவே ஈரானியத் திரைப்படங்கள் அவர்கள் அழாமலேயே நம்மை அழுக வைக்கிறார்கள்.

இந்தச் சூத்திரம் மட்டும் நம்மாளுகளுக்குத் தெரிந்தா..?!!!

Unknown said...

ஒரு அற்புதமான விமர்சனம் சுரேஷ்.

மிகை உணர்வின்றி உள்ளபடியே எழுதியிருக்கின்றீர்கள்.
போலவே மஜித்தின் கலர் ஆப் பாரடைஸும்,பாரனும் ஏர்கெனவே பார்த்ததின் அனுபவம் உண்டு.

மனித வாழ்வின் எல்லையில்லா சந்தோஷங்களையும்,
வருத்தங்களையும்,மெல்லிய உணர்வுகளையும் மொழி பற்றிய அல்லது வார்த்தைகள் நமக்கு புரிய வைப்பதைவிடவும் பல நூறு மடங்கு அழுத்தத்துடன் மனதின் ஆழத்தில் பதிவு செய்வதில் மஜித்துக்கே முதலிடம் தருவேன்.

ஒரு நுட்பமான மனம் அமையப்பெற்றிருந்தால் மட்டுமே இம்மாதிரியான படங்களை முழுமையாக ஈடுபட(ரசிக்க அல்ல)முடியும்.

இன்னும் நமது சினிமா எத்தனை காலத்திற்க்கு பெண்ணின் உடல் சார்ந்ததும், லும்பன்களின் கலாச்சாரத்தையும்,அல்லது போலீஸ் போல அபரிமிதமான அதிகாரம் படைத்த அல்லது கோடீஸ்வர கதாநாயகர்களையும்,கதாநாயகிகளையும் காட்டிக்கொண்டும், யதார்த்த வாழ்வினின்றும் மக்களை தள்ளி வைத்து கொடுமைப்படுத்திக்கொண்டிருக்குமோ தெரியவில்லை.

Beski said...

படத்தோட விமர்சனத்த விட எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் அருமையோ அருமை.

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

படத்தின் முழுக்கதையையும் எழுதுவது நன்றாக இல்லை என்று சில நண்பர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது சரிதான். ஆனால் எப்படியோ இது நிகழ்ந்துவிடுகிறது. இந்தத்தடையை தாண்டும் வித்தை இன்னும் கைகூடவில்லை. இனிவரும் பதிவுகளில் இதை தவிர்க்க முயற்சிக்கிறேன். குறிப்பிட்டுச் சொன்னதற்கு நன்றி.

//எம்.ஆர்.ராதா//

நான் குறிப்பிட்ட உதாரணத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் சொல்ல வந்ததின் மையத்தை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

நான் குறிப்பிட விரும்பியது வில்லன் என்றாலே அவனை முழுக்கவும் எந்தவித நல்ல குணங்களுமில்லாதவனாகவும் நாயகன் என்றால் அவனை எந்தவித கெட்ட குணங்களுமில்லாதவனாகவும் கருப்பு - வெள்ளை கருத்தாக்கத்திலேயே சி்த்தரிப்பது. இயல்பில் நம் சமூகம் அவ்வாறில்லை. எல்லோரிடமும் நாயகத்தன்மையும் வில்லத்தனமும் கலந்தே இருக்கிறது. அவற்றையே திரைப்படங்களு்ம எதிரொலித்தால் யதார்த்தமாக இருக்கும் என்பதுதான் நான் சொல்ல விரும்பினது.

மஜித் மஜித தவிர ஏனைய இரானிய இயக்குநர்களின் படங்களைப் பற்றியும் எழுத முயல்கிறேன்.

pulikesi said...

Are you the one mentioned by 'Nanjil Naadan' in one of the weeklies as to going to direct his 'Ettu Thikkum Matha Yaanai' ?

பிச்சைப்பாத்திரம் said...

No pulikesi. That is another "Suresh Kannan'. ('Nellai' Kannan's son). am facing this sort of question for 100th time. :-))

Anonymous said...

Yup Iam happy for being the 100th one ;) Jokes apart sorry for being the 100th irritant. Just thought of posing the question as your writings showed an affinity towards cinema.

I havent read your review of 'Pedar' as I have an habit of not reading reviews before watching the movie :) I watched his 'Baran', 'COH' & 'COP' and am in love with his style of filmmaking ever since.
In Baran The last scene where the rain fills the footprint is still etched in my mind like a beautiful poem. Do you know that there was a pathetic attempt in converting Baran into telugu titled 'Mallepuvvu' ?