Showing posts with label தெலுங்கு சினிமா. Show all posts
Showing posts with label தெலுங்கு சினிமா. Show all posts

Tuesday, April 03, 2018

ரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்



நீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி சமந்தாவின் தரிசனத்தைப் பெறுவதற்காகத்தான். அந்த விஷயம் ஒருமாதிரியாக அட்டகாசமாக நிகழ்ந்தது என்றாலும் இதற்காக படத்தின் இன்னபிற அபத்தங்களை சகித்துக் கொண்டு அமர்ந்திருந்தது கொடுமையான அனுபவமாக இருந்தது. சில குறிப்பிட்ட விஷயங்களைத் தவிர்த்து வழக்கமான தேய்வழக்கு சினிமாவாக இருந்தது ‘ரங்கஸ்தலம்’. இது எப்படி வணிகரீதியான வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. அர்ஜூன் ரெட்டி போன்ற திரைப்படங்கள் ஒருபக்கம் தெலுங்கு சினிமாவை முன்னகர்த்திக் கொண்டு வரும் போது ரங்கஸ்தலம் போன்ற கிளிஷேக்கள் பின்னகர்த்துகின்றன.

படத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் தோழி சமந்தாவின் பங்களிப்பைப் பற்றி பின்வரும் பத்திகளில் பார்த்து விடலாம்.

சமந்தா ஒரு பேரழகி, தேவதை என்கிற விஷயமெல்லாம் ஊர் அறிந்ததுதான். தன் சினிமா ஒப்பனைகளையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு எண்பதுகளின், கிராமத்துப் பெண்ணின் எளிமையைப் பூசிக் கொண்டு இயல்பான தோற்றத்தில் வருகிறார். ஒப்பனையின்மை என்கிற விஷயம் கூட தோழியின் அழகைக் குறைக்க முடியவில்லை என்பதுதான் சிறப்பு.

குணா படத்திற்காக என்று நினைவு. சிவாஜி கமல்ஹாசனை இவ்வாறு பாராட்டினார். ‘அழகா இருக்கற ஒரு நடிகன், ஒரு பாத்திரத்திற்காக தன்னை அவலட்சணமா காட்டி நடிக்க முன்வர்றான்னா.. அவன்தான் சிறந்த கலைஞன்”. அந்த வகையில் சமந்தா ஓர் அபாரமான கலைஞி எனலாம்.

ஒரு நடிகையின் வணிகச் சந்தையும் அதன் மதிப்பும்  அவருடைய திருமணத்திற்குப் பிறகு முற்றிலும் கீழிறிங்கி விடுவது இந்தியா போன்ற கலாசார சூழலில் வழக்கமானது. ஒரு சராசரியான இந்திய ஆணின் உளவியல் சிக்கலுக்கும் இது போன்ற போக்குகளுக்கும் நெருக்கமான தொடர்பிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு அவளிடமிருந்த ‘ஏதோவொன்று’ காணாமல் போய் விட்டது என்று சராசரி ஆண் கருதுகிறான். எதையோ இழந்ததாக அவன் கருதுவதே இது போன்ற நிராகரிப்புகளுக்கு வந்து சேர்கிறது. ‘பிறன் மனை நோக்கான்’ என்றெல்லாம் இதை ஜல்லியடிக்கக்கூடாது. எதிலும் புதியதைத் தேடும் ஆதிக்க மனதின் சிக்கல் இது. இதையே திரைப்படத்தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கருதுகிறார்கள். பார்வையாளர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறார்கள். அதையெண்ணி அச்சப்பட்டு திருமணமான நடிகைகளுக்கு அக்கா, அத்தை வேடம் தரவே தயாராக இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் இந்த மரபை உடைத்த நடிககைகள் மிகச் சொற்பமே. அந்த வரிசையில் கம்பீரமாக இணைந்திருக்கிறார் சமந்தா. இந்த திரைப்படத்திற்கும் நடிகை தேர்வின் போது மேற்குறிப்பிட்ட மாதிரியான இடையூறுகளை இயக்குநர் எதிர்கொண்டிருக்கிறார். நடிகர் சிரஞ்சீவிதான் சமந்தாவின் தேர்வு குறித்து நம்பிக்கையளித்ததாக சொல்கிறார்கள். திருமணத்திற்குப் பின்னரும் சமந்தாவின் பிம்பம் துளியும் குறையாமல் இருப்பது, பார்வையாளர்கள் அவர் மீது வைத்துள்ள பிரியத்தைக் காட்டுகிறது. இத்திரைப்படத்தில் காட்சிக்கு காட்சி அவரை ரசிக்கிறார்கள்.

அவருடைய நடிப்புத் திறமையை இயக்குநர் வலிமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது பெரிய குறை. இந்தியச் சினிமாவின் சராசரியான நாயகி போலவே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அதையும் மீறி தன் பங்களிப்பில் சமந்தா ஜ்வலிப்பதுதான் சிறப்பு. இடுப்பின் அபாரமான வளைவுகளும் ஆபத்தான இறக்கங்களும் நாபியின் பேரழகும் நமக்குள் சில சங்கடமான உணர்வுகளை உற்பத்தி செய்கின்றன.

அவர் காட்சியளிக்கும் ஒவ்வோரு பிரேமிலும் மற்ற நடிகர்களை கவனமாகத் தவிர்த்து விட்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சட் சட்டென்று விதம் விதமாக அவருடைய முகபாவங்களை ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருந்தேன். அவருடைய அழகை அள்ளி அள்ளி மனதிற்குள் நிரப்பிக் கொள்ள முயற்சித்தேன். பாற்கடலை நக்கிக் குடிக்க ஆசைப்பட்ட பூனையின் பேராசை போலவே அது அமைந்தது.

**

ராம் சரணின் திரைப்படங்களை நான் அதிகம் பார்த்ததில்லை. இதுவரை பெரும்பாலும் வழக்கமான மசாலா கதாநாயகனாகவே நடித்திருக்கிறார் என்று எண்ணுகிறேன். ரங்கஸ்தலத்தில் ஒரு வெகுசன திரைப்படத்தின் நாயக எல்லைக்குள் நின்று திறம்பட இயங்கியிருக்கிறார். நாயகனை மிகையான சூப்பர் ஹீரோவாகவே சித்தரித்துக் கொண்டிருக்கும் சூழலில் இருந்து விலகி செவிக்குறைபாடு உள்ள பாத்திரமாக இதில் காட்டியதே ஓர் ஆறுதலான முயற்சி எனலாம். இந்தச் சந்தர்ப்பத்தை இயன்றவரை ராம்சரண் நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் பெரும்பாலும் அவர் வெளிப்படுத்தும் ஒரே மாதிரியான முகபாவங்கள் சலிப்பூட்டுகின்றன.

எண்பதுகளின் காலக்கட்டத்தில் படம் இயங்குவதால் அது சார்ந்த பின்னணி விஷயங்கள் திறமையாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு காட்சியில் நாயகன் எழுந்ததும் ஒரு டப்பாவைத் திறந்து வெள்ளைப் பொடியைக் கொட்டுவார். “ஏன்யா இந்தாள் எழுந்தவுடனேயே மூஞ்சிக்கு பவுடர் போடப் போகிறான்?” என்று வியந்தேன். அது அக்காலக்கட்டத்தில் பல் விளக்கும் கோல்கேட் பவுடர். பற்பசை உபயோகத்திற்கு மாறி நீண்ட காலமாக விட்டதால் இது சட்டென்று மறந்து போயிருந்தது. இது போன்ற கலை இயக்கம் சார்ந்த சின்னச் சின்ன விஷயங்கள் ஆச்சரியப்படுத்தின.

ஒளிப்பதிவாளர் ரத்னவேலின் பங்களிப்பு இத்திரைப்படத்திற்கு முக்கியமானது. சோளக்காட்டில் நிகழும் துரத்தல்களும் சண்டைக்காட்சிகளும் தொடர்பான ஒளிப்பதிவு அபாரம். போலவே அந்த நிலப்பரப்பின் அழகியலும் செம்மண் புழுதியும் சிறப்பாக பதிவாகியிருந்தன.

ஒரேயொரு ‘டண்டணக்கா’ மெட்டை வைத்துக் கொண்டு பல காலமாக ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் DSP. ஆந்திரர்களுக்கு இன்னமும் இது சலிக்கவில்லையோ என்னமோ. ‘ரங்கம்மா.. மங்கம்மா’ என்கிற பாடல் மட்டும் சற்று கவனத்தை ஈர்க்கிறது. மற்றதெல்லாம் டப்பாங்குத்துதான். காது வலிக்கிறது. நாயகனைப் போலவே பார்வையாளர்களும் செவிக்குறைபாடு உள்ளவர்கள்  என்று  இசையமைப்பாளர்கள் நினைத்துக் கொண்டது போல பாடல்களிலும் பின்னணி இசையிலும் மிகையான சத்தம்.

ஜெகபதி பாபு, பிரகாஷ் போன்றவர்கள் எத்தனையோவாவது முறையாக தாங்கள் சலிக்க சலிக்க செய்த வில்லன் பாத்திரத்தை இதிலும் தொடர்கின்றனர். அதிலும் பிரகாஷ்ராஜின் ஒப்பனையெல்லாம் கொடுமை.


கோமா நிலையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு வருடக்கணக்காக தினமும் சவரம் செய்தும் முகத்திற்கு பவுடர் போட்டும் குணப்படுத்தி விடுகிறார் நாயகன். இது போன்ற நகைச்சுவைகள் திரைக்கதையின் நம்பகத்தன்மையை சிதைக்கின்றன. மிக எளிதாக யூகிக்கக்கூடிய கிளைமாக்ஸ். இதற்கு அத்தனை பில்டப் தந்திருக்க வேண்டியதேயில்லை. ஏன் இத்திரைப்படத்தை  180  நிமிடங்களுக்கு இழுத்திருக்கிறார்கள் என்கிற மர்மம் பிடிபடவில்லை. படத்தின் இரண்டாம் பாதியில்தான் சிறிதாவது வேகம் எடுக்கிறது. முதற்பகுதியின் பல காட்சிகள் வீண்.

தன்னைக் கடித்து தப்பிய பாம்பினை நாயகன் தேடும் காட்சியை பல நிமிடங்கள் கழித்து வில்லனோடு இணைப்பது, நாயகனின் செவிக்குறைபாட்டை நகைச்சுவையாகவும் தீவிரமாகவும் உபயோகித்தது போன்று சில விஷயங்கள் மட்டுமே இந்த சலிப்பான திரைக்கதையில் ஆறுதலான விஷயங்கள். சமந்தா எடுத்து வரும் உணவை, ராம்சரணின் வீட்டைச் சேர்ந்தவர்கள் உரிமையாக கைப்பற்றிக் கொள்ளும் காட்சி ‘விக்ரமன்தனமாக’ இருந்தாலும் கவர்ந்தது.

கிராமத்து மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு ஊரையே ஆட்டிப் படைக்கும் பண்ணையார்த்தனத்தை சற்று தாமதமாகவேனும் நாயகன் எதிர்க்கும் பல படங்களில் ரங்கஸ்தலமும் ஒன்று. நவீன நுட்பத்தின் வழியாக ‘வித்தியாசமான’ படம் என்கிற பாவனையில் பழைய வடையையே சுட முயன்றிருக்கிறார்கள். வேறு ஒன்றும் புதிதாக இல்லை. சமந்தாவின் தரிசனம் மட்டுமே ஆறுதல்.

suresh kannan

Tuesday, October 11, 2016

மலர் டீச்சர்: சாய்பல்லவி Vs ஸ்ருதிஹாசன்



கடந்த ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் தெலுங்கு திரைப்படத்தின், சில நிமிடங்கள் ஓடும் பாடல் டீஸர் ஒன்று இணையத்தில் வெளியானது. மலையாளத்தில் வெளியாகி அதிரிபுதிரியாக ஓடி பிரம்மாண்டமான வெற்றி பெற்ற ‘பிரேமம்’ திரைப்படத்தின் தெலுங்கு வடிவ முன்னோட்டக் காட்சிதான் அந்த டீஸர்.

இதன் ஹீரோ நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனாவிற்கு பிறந்த நாள் பரிசாக இந்த டீஸர் அந்தக் குறிப்பிட்ட நாளில் வெளியிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இணைய ரசிகர்களுக்கு இது விரும்பத்தக்க பரிசாக அமையவில்லை. ஏற்கெனவே எப்போதும் ரத்தபூமியாக கொந்தளித்துக் கொண்டிருக்கும் இணைய வெளியில் இந்த டீஸர் வெளியானவுடனே ஆவேசமான கிண்டல்களும், அதிருப்தியான எதிர்ப்புக் குரல்களும் ஒலிக்கத் துவங்கி விட்டன. இதன் நடிகர் தேர்வு, பாடல், இசை ஆகியவற்றை மலையாள வடிவத்துடன் ஒப்பிட்டு ரணகளமான எதிர்வினைகள் கிளம்பின.

குறிப்பாக ஒரிஜினல் படத்தில் மலர் டீச்சராக வந்த ‘சாய் பல்லவியின்’ வேடத்திற்கு ஸ்ருதிஹாசனை சிறிது கூட மகாஜனங்களால்  ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தெலுங்கு வடிவத்தில், ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கிறார் என்கிற செய்தி வெளியான நாள் முதற்கொண்டே அது சார்ந்த கிண்டல்கள் இணையத்தில் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தன. இப்போது டீஸர் வெளியானவுடன் இது உச்சநிலையை அடைந்திருக்கிறது. முழுதிரைப்படம் வெளிவந்தவுடன் இன்னமும் என்னென்ன ஆகுமோ என்பது அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம். இதில் சிலபல எதிர்வினைகள் தரக்குறைவான வார்த்தைகளுடன் இருந்தன என்பது துரதிர்ஷ்டமானது.

இந்த ரணகளத்தின் இடையே ஒரு கொடுமையான கிளுகிளுப்பாக, ஓர் ஆங்கில இணைய தளம், மலையாளப் பாடலையும் சமீபத்திய தெலுங்குப் பாடலையும் ஒப்பிட்டு கருத்து தெரிவிக்குமாறு தன் பார்வையாளர்களைக் கேட்டுக் கொண்டிருந்தது. மலையாளப் பாடலான ‘மலரே’விற்கு ஆதரவாக 89.8 சதவீதத்தினரும் தெலுங்குப் பாடலுக்கு ஆதரவாக 10.13 சதவீதத்தினரும் வாக்களித்திருந்தனர். (ரொம்ப முக்கியம்).

‘நாட்ல எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது ஒரு திரைப்படத்திற்கு இத்தனை அக்கப் போரா?’ என்று சிலர் ஒருபுறம் சலித்துக் கொள்ள ‘ஒரிஜினல் பிரேமமே ஒரு சாதாரண படம்தான். அது எப்படி வந்து நாசமா போனா என்ன இப்ப?’ என்று இன்னொரு புறம் சிலர் வேறு விதமாக அலுத்துக் கொண்டார்கள். ‘இது ஆணாதிக்க மனதிலிருந்து உற்பத்தியாகும் பெண் வெறுப்பு’ என்று ஸ்ருதிஹாசனின் மீதான வசைகள் குறித்து கரடுமுரடான தமிழில் உணர்ச்சி பொங்க கட்டுரைகள் எழுத அதற்கும் லைக்குகள் பிய்த்துக் கொண்டு போனது.

தேர்தல் முடிவுகளைக் கூட சமயத்தில் சரியாக யூகித்து விட முடியும். ஆனால் இந்த இணைய மஹாஜனங்கள் எதற்கு எப்படி விதம் விதமாக பொங்குவார்கள் என்பது யூகிக்கவே முடியாத விஷயம்.

ஒரு திரைப்படத்திற்கு ஏன் இத்தனை கலாட்டா? ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா’ என்கிற காமெடிக் காட்சி மாதிரி மலையாள ஒரிஜினல் மட்டும்தான் சிறந்தது என்று பிடிவாதம் பிடிக்க முடியுமா? இந்த எதிர்ப்பின் பின்னணியில் உள்ள வெகுசன உளவியல் என்ன?

சற்று ஆராய்ந்து பார்ப்போம்.


ஒரு புகழ்பெற்ற நாவல் திரைப்படமாக உருமாற்றம் ஆகப்போகிறது என்று வைத்துக் கொள்வோம். திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் அப்போதே உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில் அந்த நாவலைப் படித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் அதைப் பற்றி பல்வேறு கற்பனைகள் இருக்கும். தங்களின் அனுபவங்கள் மற்றும் ரசனை போன்றவைகளையொட்டி அதன் பிரதான பாத்திரங்கள், முக்கியமான சம்பவங்கள் இப்படி இருக்கும் என்று பலவிதமான கற்பனைகளை பல்வேறு விதமாக யோசித்து வைத்திருப்பார்கள். 

சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த பல்லாயிரக்கணக்கான விருப்பங்களை, எதிர்பார்ப்புகளை அத்திரைப்படத்தின் இயக்குநர் ஒரேயொரு வடிவத்திற்குள் கொண்டு வந்து அத்தனை பேரின் எதிர்பார்ப்புகளையும் திருப்திப்படுத்த வேண்டும். நடக்கின்ற காரியமா இது? இந்த எதிர்பார்ப்புகள் திரைப்படத்தின் வணிகரீதியான வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் விஷயமாகவும் அமையக்கூடும்.

இந்தச் சவாலை வெற்றிகரமாக கடந்த சில இயக்குநர்களும் இருக்கிறார்கள். சறுக்கி அதல பாதாளத்தில் விழுந்தவர்களும் இருக்கிறார்கள். இதைப் போலவேதான் ரீமேக்குகளின் கதியும்.

மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘திரிஷ்யம்’ இங்கே ‘பாபநாசமாக’ வந்த போது ‘எவருடைய நடிப்பு சிறந்தது, கமல்ஹாசனா, மோகன்லாலா’ என்று இணையத்தில் பெரிய குடுமிப்பிடி சண்டையே நிகழ்ந்தது. ‘மணிசித்ரதாழ்’ எனும் அருமையான மலையாளப்படம், இங்கே ‘சந்திரமுகி’யாகி சுமாரான ரீமேக்காக வந்தாலும் ரஜினிகாந்த் எனும் ஸ்டார் அடையாளத்திற்காகவும் வடிவேலு உள்ளிட்ட வணிகத்தனமான சுவாரசிய காரணங்களுக்காகவும் பேயோட்டம் ஓடி வெற்றி பெற்றது. ஒரிஜினல் வடிவத்தை நிறையப் பேர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இவ்வாறான குருட்டு அதிர்ஷ்டங்களும் சமயங்களில் நிகழ்வதுண்டு.

**

ஆனால் பிரேமம் திரைப்படத்தின் விஷயம் அப்படியல்ல. இது கேரளத்தில் பெரிய வெற்றி பெற்றது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் 200 நாட்களைக் கடந்த முதல் மலையாளத் திரைப்படம் என்கிற பெருமையையும் கொண்டது. சேட்டன்களைப் போலவே தமிழர்களும் ‘மலர் டீச்சர், மலர் டீச்சர்’ என்று உருகத் துவங்கினார்கள். இத்திரைப்படம் வந்த புதிதில் இணையமெங்கும் மலர் டீச்சர் மகாத்மியம்தான். தங்களுக்கு சிறுவயதில்  கல்வி சொல்லித்தந்த டீச்சர் பெயரைக் கூட நினைவில் வைத்திருக்காத பிரகஸ்பதிகள் கூட மலர் டீச்சரை தங்கள் மனதில் அழுத்தமாக பச்சை குத்திக் கொண்டார்கள்.

நான் கூட எரிச்சலாகி ‘யாருடா அந்த கபாலி?’ என்கிற ரேஞ்சிற்கு ஆத்திரப்பட்டு ‘பிரேமம்’ திரைப்படத்தைப் பார்த்த பிறகு தன்னிச்சையாக ‘மலர் டீச்சர்’ என்று உருகி அந்த வழிபாட்டு ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன்.

இத்தனைக்கும் மலர் டீச்சராக நடித்த சாய்பல்லவி பேரழகி எல்லாம் இல்லை. சன்னமான உருவம் கொண்டவர்.  முகத்தில் பருக்கள் வேறு. (இந்தப் பருக்களுக்காகவே ஆராதிக்கிற கோஷ்டி ஒன்று தனியாக இயங்குகிறது). ஆனால் படத்தின் இயல்புத்தன்மையோடு இந்தப் பாத்திரம் மிக கச்சிதமாகப் பொருந்திப் போனது என்பதுதான் இதன் வெற்றியின் ரகசியம். விரித்த கூந்தலோடு அழகான காட்டன் சேலையில் எளிமையின் ஆடம்பரத்தோடு ‘தமிழ் பெண்’ பாத்திரமாக உலா வந்த இவரை மலையாள இளைஞர்கள் மட்டுமன்றி தமிழர்களும் கொண்டாடியதில் ஆச்சரியமில்லை. 

**

இத்தனை கொண்டாடப்படும் அளவிற்கு ‘பிரேமம்’ காவியப்படமா என்ன? அப்படியெல்லாம் எதுவுமில்லை. இதுவொரு Cult Film ஆக உருமாறியது என்பதுதான் இதன் சிறப்பு.

1970-80களில்  மலையாள சினிமாவில் புதிய அலை தோன்றி அடுர் கோபால கிருஷ்ணன், அரவிந்தன், எம்.டி.வாசுதேவன் நாயர், ஜான் ஆப்ரஹாம், K.R.மோகனன், G.S.பணிக்கர் போன்றவர்களின் பங்களிப்பின் மூலம் சிறந்த திரைப்படங்கள் உருவாகின.  உலகமயமாக்கத்திற்குப் பிறகு வணிகமே பிரதானம் எனும் நோக்கில் தமிழ் மசாலா சினிமாக்களின் வணிக வெற்றியைப் பார்த்து மலையாள சினிமாக்களும் சூடு போட்டுக் கொண்டன. மம்முட்டிகளும் மோகன்லால்களும் மூச்சு வாங்க தமிழ் ஹீரோக்களைப் போலவே சண்டை போடப் பழகினார்கள்.

ஆனால் 2010-க்குப் பிறகு மலையாள சினிமாவில் மீண்டும் ஒரு நவீன அலை உருவானது. பல இளம் இயக்குநர்கள் உள்ளே வந்தார்கள். புத்துணர்வுடன் பல புதிய முயற்சிகள் வந்து வெற்றி பெற்றன. பார்வையாளர்களின் ரசனையும் மாறியிருந்தது ஒரு காரணம். இந்தப் புதிய அலையின் ஒரு அடையாளம்தான் ‘பிரேமம்’ திரைப்படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன். குறும்பட உலகிலிருந்து வந்த இவரின் முதல் இருமொழிப் படமான ‘நேரம்’ என்கிற திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் பரவலான கவனத்தைப் பெற்றது.

அடுத்த திரைப்படம்தான் ‘பிரேமம்’. ஒரு காலக்கட்டத்தில் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களாக வந்து கொண்டு பார்வையாளர்கள் சலித்துப் போயிருக்கும் சமயத்தில் அந்த டிரெண்டிலிருந்து விலகி ஒரு மென்மையான காதல் கதை மற்றும் நல்ல பாடல்களை கொண்ட ஒரு திரைப்படம் வந்தால், அது சாதாரணமானதாகவே இருந்தாலும் கூட சூழலில் ஒரு புத்துணர்வை உண்டாக்கிய காரணத்திற்காகவே பிய்த்துக் கொண்டு ஓடும்.

தமிழிலும் 80-களில் ‘ஒரு தலை ராகம்’ என்றொரு திரைப்படம் வந்தது. அது அந்தக் காலத்தில் எதற்காக அப்படி பேயோட்டம் ஓடியது என்கிற ரகசியம் இன்னமும் கூட எவருக்கும் பிடிபடவில்லை. இன்றைய இளைஞர்கள் பார்த்தால் ஒருவேளை விழுந்து விழுந்து சிரிக்கக்கூடிய அந்த திரைப்படம் அக்கால இளைஞர்களுக்கு ஒரு காதல் காவியப் படமாக இருந்தது. இதன் எல்லாப்பாடல்களும் பயங்கர ஹிட். இன்றைய மொழியில் சொன்னால் தெறிமாஸ்.

காதலை வெளிப்படுத்தவும் ஏற்றுக்கொள்ளவும் தயங்குகிற, காவியச்சோகத்தோடு நிறைவுறுகிற திரைப்படம் அது.

ஓர் இளம் ஆண், சகவயது பெண்ணிடம் ‘டைம் என்னங்க ஆச்சு?’ என்று கேட்பது கூட ஒரு சாகசமான செயலாக கருதப்பட்ட காலத்தில் நாயகன், நாயகியிடம் தன் காதலை சொல்ல மென்று மென்று முழுங்குவதும் அவள் ஏற்கத் தயங்கியதும் அப்போதைய கலாச்சார சூழலை எதிரொலித்த படியாக இயங்கியது. பார்வையாளர்களும் ஏற்றுக் கொண்டார்கள். சந்தித்த இரண்டாவது நிமிடத்திலேயே ஃபேஸ்புக் பிரெண்டாகி ‘what’s ur plan tonight?’ என்று கேட்கிற பெருநகரத்தைச் சார்ந்த நவீன இளம் தலைமுறைக்கு இந்தப் படத்தின் வெற்றி ஆச்சரியத்தை தரக்கூடும்.

**

‘பிரேமம்’ திரைப்படமும் இப்படியான மெல்லுணர்வுகளைக் கொண்ட படைப்புதான். நம்ம ஊர் சேரன் நடித்து இயக்கிய ‘ஆட்டோகிராஃப்’  திரைப்படத்தின் ஒற்றுமைகளைக் கொண்டது. (சேரனின் திரைப்படமும் இத்தாலிய இயக்குநர் Michelangelo Antonioni-ன் 1995- வெளிவந்த Beyond the Clouds –ன் பாதிப்பில் உருவானது).

ஓர் ஆணின் வளரிளம் பருவத்தில் துவங்கி வெவ்வேறு காலக்கட்டத்தில் அவன் எதிர்கொள்ளும் பெண்களைப் பற்றிய திரைப்படம். பிரதான ஆண் பாத்திரமாக நிவின் பாலி நடித்திருந்தார். அந்தந்த காலக்கட்டத்தின் வயதுக்குரிய உடல்மொழியை அற்புதமாக பிரதிபலித்திருந்தார். இத்திரைப்படத்தில் வரும் மூன்று பெண் பாத்திரங்களுமே ரசிகர்களின் இடையே புகழ் அடைந்தவைகளாக மாறின. இதன் சில காட்சிகளில் வரும் ரெட் வெல்வெட் கேக் கூட ஒரு நினைவுச் சின்னமாக, ரசிகர்களின் கவனத்திற்குரியதாக மாறியது.

என்றாலும் அனைத்தையும் விட ரசிகர்களின் மனதில் அழுத்தமாகப் படிந்தது ‘மலர் டீச்சர்’ பாத்திரம்தான். பிரேமம் என்கிற இந்த திரைப்படத்தின் பெயரைச் சொன்னவுடன் இணைக்கோடாக இந்தப் பாத்திரத்தின் பெயரும்  சாய்பல்லவியின் உருவமும் சட்டென்று நினைவில் பெருகி வருமளவிற்கு அத்திரைப்படத்தின் மிக முக்கியமானதொரு அம்சமாய் மாறி விட்டார் ‘மலர் டீச்சர்’

நாயகியின் பாத்திரப் பெயரையொட்டி முதல் படத்திலேயே இத்தனை கொண்டாடப்பட்ட முன்உதாரண நடிகை வேறு எவரும் இருக்கிறார்களா என தெரியவில்லை. ‘சில்க்’ ஸ்மிதாவைச் சொல்லலாம். ஆனால் தனது வசீகரமான தோற்றத்திற்காக முதல் படத்திலேயே ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால் நதியா முதல் ஆலயம் கட்டி வழிபடப்பட்ட குஷ்பு வரை பல முன்உதாரணங்கள் உண்டு.


**

ஆனால் இந்த திரைப்படம் தெலுங்கில் மறுஆக்கமாக உருவாக்கப்படும் போது ‘மலர் டீச்சர்’ பாத்திரத்தில் ஸ்ருதிஹாசனை ஏன் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?

பிரேமம் திரைப்படத்தில் ‘மலர் டீச்சராக’ நடித்த சாய்பல்லவிக்கு அதுதான் முதல் திரைப்படம்.  ஓர் அழகான பாத்திரத்துடன் எளிமையான அழகில் மிளர்ந்த புதுமுகமாக அறிமுகமாகிய சாய்பல்லவியை அந்தப் பாத்திரத்துடன் எளிதில் இணைத்து ரசிகர்கள் எளிதில் ஏற்றுக் கொண்டார்கள். அவரின் இயல்பான நடிப்பும் இதற்குக் காரணமாக இருந்தது. புதுமுகம் என்கிற தகுதியே இதற்கான கூடுதல் பலமாக அமைந்தது.

ஆனால் ஸ்ருதிஹாசன் திரையுலகில் ஏற்கெனவே நிறுவப்பட்ட, பல திரைப்படங்களில் நடித்த ஒரு வணிகமுகம். புகழ் பெற்ற நடிகரின் மகள் என்கிற பின்னணியுடன் திரைத்துறையில் நுழைந்தாலும் தனது தனித்தன்மையான பங்களிப்பினால் குறுகிய காலத்திலேயே பல தென்னிந்திய படங்களில் நடிக்கும் அளவிற்கு முன்னேறியவர். இசையமைப்பாளர் என்கிற கூடுதல் தகுதியும் உண்டுதான். ஆனால் இவரது பிரபலமான அடையாளமே, ரசிகர்களுக்கு மனத்தடையை ஏற்படுத்தக்கூடிய தகுதியின்மையாக மாறி விடக்கூடிய ஆபத்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

வணிகக் காரணங்களுக்காக பிரபலமான நடிகை ஒருவரை இந்தப் பாத்திரத்தில் நடிக்க வைக்க இதன் தயாரிப்பாளரும் இயக்குநரும் முடிவு செய்திருப்பார்கள் என்றாலும் இது அந்தப் பாத்திரத்திற்கு செய்த துரோகமாக ரசிகர்கள் கருதுகிறார்கள். அந்த அளவிற்கு ‘மலர் டீச்சர்’ பாத்திரத்தின் மீது ரசிகர்களுக்கு பொஸஸிவ்னஸ் இருக்கிறது. மட்டுமல்லாமல் வெளிவந்த டீஸர் பாடலில் ஸ்ருதிஹாசனின் ஆடம்பர உடல்மொழியானது, மலர் டீச்சரின் எளிமையான அழகிற்கு முன் பொருந்தவேயில்லை என்பதும் ரசிகர்களின் கருத்து. சில நிமிடங்கள் மட்டுமே வெளிவந்திருக்கும் இந்தப் பாடலை வைத்து மட்டும் முழு திரைப்படத்தை தீர்மானிக்க முடியாது என்றாலும் இந்த சில நிமிடங்களையே  எங்களால் தாங்க முடியவில்லையே என்று அவர்கள் கதறுகிறார்கள்.

மலர் டீச்சர் பாத்திரத்தின் தெலுங்கு வடிவத்திற்கு எளிமையின் அழகியலைக் கொண்ட ஒரு புதுமுக நடிகையை ஒருவேளை  அறிமுகப்படுத்தியிருந்தால் ரசிகர்கள் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். மற்ற இரு பெண் பாத்திரங்களுக்கும் மலையாளத்தில் நடித்த அதே நடிகைகளையே தெலுங்கிலும் பயன்படுத்த முடிவு செய்திருந்ததைப் போல ‘மலர் டீச்சரின்’ பாத்திரத்திற்கும் சாய்பல்லவியைப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஒரு திரைப்படத்தின் பாத்திரம்தான் என்றாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் தங்களின் மனதில் பதிந்து விட்ட ஒரு சித்திரம் சற்று முரண்பட்டாலும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது நுண்ணுணர்வு சார்ந்த விஷயம். இதை தயாரிப்பாளர் தரப்பு சிந்தித்திருக்க வேண்டும்.

ஆனால் இந்தக் கலாட்டாக்களின் இடையில் ஆறுதலான ஒரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். ஆண் ரசிகர்கள்தான் ‘மலர் டீச்சரின்’ உருவத்தில் சாய்பல்லவியைத் தவிர இன்னொரு நபரை ஏற்றுக் கொள்ளாமல் ரகளை செய்கிறார்கள். ஆனால் பெண் ரசிகர்கள் அப்படியல்ல. மலையாளத்தில் வந்த நிவின் பாலியையும் ரசித்தார்கள். அந்தப் பாத்திரத்தில் தெலுங்கில் வரும் நாக சைதன்யா பற்றியும் அவர்களுக்கு எவ்வித புகாரும் முணுமுணுப்பும் இல்லை. இது சார்ந்த கண்டனங்கள் எதையும் அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ‘ஆண்களின் காதல்களைச் சொல்லும் திரைப்படங்கள் மட்டும்தான் வரவேண்டுமா? எங்களுக்கும் அம்மாதிரியான காதல் கதைகள் இல்லையா?’ என்றெல்லாம் கேட்டும் ஆண்களைச் சங்கடத்திற்கு ஆளாக்கவில்லை.

என்ன இருந்தாலும் பெண்கள் பெருந்தன்மையானவர்கள். 

(ஜன்னல், செப் 15-30 இதழில் வெளியானது - நன்றி: ஜன்னல்) 

suresh kannan

Friday, June 26, 2015

மனம் - ஒக்க மன்ச்சி தெலுகு சித்திரமுலு


என்னது, நாகேஸ்வரராவ் இறந்து விட்டாரா? என்றெல்லாம் கேள்வி கேட்டு ஆச்சரியம் கொள்ளாமல் இந்தப் பதிவை வாசியுங்கள். இத்தனை காலமாக ஏன் இந்த திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்று என்னையே நான் இன்று நொந்து கொண்டேன். இதைப் பற்றி பல நல்ல வார்த்தைகளை ஏற்கெனவே கேட்டிருந்தாலும் தெலுங்கு பேசும் ஒரு முதியவர் நேற்று இத்திரைப்படத்தைப் பற்றி என்னிடம் அத்தனை சிலாகித்து சொன்ன போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு சமகால திரைப்படத்தை இரண்டு தலைமுறைக்கு முந்தியுள்ளவர் பாராட்டுகிறார் என்றால் ஒன்று, அவர் மனது அத்தனை இளமையானதாக இருக்க வேண்டும் அல்லது அத்திரைப்படம் அத்தனை சிறப்பானதாக இருக்க வேண்டும். இரண்டுமே சரிதான் போல. படம் பார்த்த பிறகு இதைத்தான் நானும் உணர்ந்தேன்.

அந்தத் திரைப்படம் - மனம். நாகேஸ்வர ராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் பரஸ்பரம் தங்கள் பாத்திரங்களின் பெயர்களை மாற்றியமைத்துக் கொண்டு நடித்தது. இதன் திரைக்கதையை விவரித்தால் சற்று தலைசுற்றும். உதாரணத்திற்கு அசலில் நாகார்ஜூனாவின் மகனான நாக சைதன்யாதான், கதாபாத்திரப்படி  இத்திரைப்படத்தில் அவரின் தந்தை. போலவே நாகார்ஜூனாதான், நாகேஸ்வர ராவின் தந்தை. ஐம்பது வயது நபர் இருபது வயதுப் பெண்ணை தாய் போல பார்த்து உருகுவதை கற்பனை செய்து பார்த்தாலும் நம்ப முடியாது. "என்னய்யா உட்டாலக்கடி இது" என்று தோன்றும். அதிலும் மறுஜென்மத்திலும் எப்படி ஐயா, அதே தோற்றத்துடன், அதே உறவுமுறையில் உணர்வார்கள் என்றெல்லாம் பல கேள்விகள் பிறக்கலாம்.

ஆம். தர்க்கமே இல்லை. ஆனால் தனது அபாரமான திரைக்கதையால் நெருடலே ஏற்படாதவாறு நம்ப வைத்திருக்கிறார் இயக்குநர் விக்ரம் குமார். குறிப்பாக இதன் மேக்கிங்கும் சின்ன சின்ன சுவாரசியங்களும் அற்புதம். இளம் இயக்குநர்களுக்கான பாடம், இத்திரைக்கதையில் உள்ளது. நீண்ட நாட்கள் கழித்து ஒரு திரைப்படத்தை மிகுந்த பரவசத்துடனும் பொங்கி வரும் புன்னகையுடனும் இடையில் சிறிது கண்ணீருடனும் பார்த்தேன் என்றால் அது இந்த திரைப்படம்தான். Back to the future என்கிற அறிபுனைவின் நகல் என்கிறார்கள். தெரியவில்லை. அதையும் பார்க்க வேண்டும்.

***

பொதுவாகவே எனக்கு தெலுங்கு திரைப்படங்களையும் அதன் நடிகர்களையும் பார்க்கவே பிடிக்காது. "சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து" என்று பாரதி பாடினாலும் அந்த மொழியின் ஒலி கூட சமயத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக என்.டி.ராமாராவ் போன்றோர்களின் கூப்பாடுகளையும் கதற வைக்கும் சப்தங்களையும் கண்ணைக் கூச வைக்கும் அடர்த்தியான வண்ணங்களையும் காமெடியான நடனங்களையும் பார்க்கவே பிடிக்காது. விதிவிலக்காக இந்த  பிரதேசத்தின் சினிமாக்களில்  பிடித்த ஒரே அம்சம், ஜெயமாலினி. இதற்காகவே பல டப்பிங் படங்களை சகித்துக் கொண்டு பார்த்திருக்கிறேன். ஆனால் தெலுங்கு சினிமா நிறைய முன்னேறி வந்திருக்கிறது என்பதை இத்திரைப்படம் மூலம் உணர முடிந்தது.

நான் பார்த்து ரசித்த முதல் தெலுங்குத் திரைப்படம் என்றால் அது ராம்கோபால் வர்மா இயக்கிய ஷிவா (தமிழில் உதயம்). தெலுங்கு படங்களிலும் ஹீரோக்கள் ஸ்மார்ட்டாக இருப்பார்கள் என்பதை அறிய வைத்தவர் நாகார்ஜூனா. ஆனால் ஏனோ இதற்குப் பிறகு தெலுங்கின் பக்கம் மறுபடியும் போகத் தோன்றவில்லை. 

ஆனால் நண்பர் சிவராமன், தினகரன் வெள்ளி மலர்களில் அதிரி புதிரியாக புல்லட் வேக நடையில் தெலுங்கு சினிமாக்களை அதன் கார சாரம் குறையாமல் விவரிக்கும் போது லேசாக சற்று சபலம் தட்டும். அதன் பாதிப்பில் சில இயக்குநர்களின் பெயர்கள் அறிமுகமானது. அதில் முக்கியமானது ராஜ்மெளலி. அவருடைய திரைப்படமான நான் ஈ, இந்தியத் திரைப்படங்களில் ஒரு சாதனை. அதைப் பற்றிய எழுதிய பதிவு.

பிறகு பார்த்தவைகளில் குறிப்பிடத்தக்கது, மகேஷ் பாபு நடித்த பிஸ்னஸ்மேன். மாஃபியாவின் இயக்கம் நாம் சினிமாக்களில் பார்ப்பது போல் அல்லாமல், ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் நிர்வாக கச்சிதத்துடனும் வலைப்பின்னலுடனும் அரசாங்கத்தையே ஆட வைக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நம்பும் வகையாக சொன்ன படம். தர்க்கரீதியாக எதையும் சிந்திக்காமல் படத்துடன் நம்மை ஒப்புக் கொடுத்து விட்டால் ஒருவேளை ரசிக்கலாம். அதைப் பற்றி இங்கே.

அதற்குப் பிறகு நான் ரொம்பவும் ரசித்த தெலுங்குத் திரைப்படம் என்றால் இதுதான். - மனம்.  வழக்கமாக வெகுசன திரைப்படங்களை நான் வெறுப்பதற்கு அதிக காரணமே அவை அரைத்த மசாலாவையே அரைத்து வேறு வேறு பாக்கிங்களில் தந்து கொண்டிருப்பதனால்தான். மற்றபடி இம்மாதிரியான வித்தியாசமான திரைக்கதைகளையும் சுவாரசியங்களையும் நுட்பங்களையும் கொண்ட திரைப்படங்களை நான் வரவேற்கவே செய்கிறேன். 


ஏறத்தாழ நூறு ஆண்டுகளின் இடைவெளிகளில் நிகழ்வது போன்ற, மறுஜென்ம நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை. அதிலும் தெலுங்கில் புகழ்பெற்றிருக்கும் ஒரே நட்சத்திரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடித்திருக்கிறார்கள் எனும் போது திரைப்படத்தையும் தாண்டி அத்தனை தலைமுறை ஆந்திர ரசிகர்களும் தங்களின் வாழ்நாளில் ரசித்த நடிகர்களை  உணர்ச்சிகரமான தொடர்போடு எப்படி கொண்டாடியிருப்பார்கள் என்பதை யூகிக்க முடிகிறது. தமிழில் இதை ரீமேக் செய்தால் சிவாஜியின் குடும்பத்தைத் தவிர வேறு யாருமே சாய்ஸில் இல்லை. அப்படி வந்திருந்தால் அந்த திரைப்படம் மிக சுவாரசியமானதாக இருந்திருக்கும். துரதிர்ஷ்டமாக சிவாஜி நம்மிடம் இல்லை என்பது ஒரு சோகம்.

நாக சைதன்யாவை முதன் முதலில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' வில் பார்க்கும் போது வழக்கமான தெலுங்கு நாயகர்கள் மீது ஏற்படும் ஒவ்வாமையே ஏற்பட்டது. "இவனா நாகார்ஜூனா பையன்? ஐயோ.. " என்றிருந்தது. ஆனால் இந்தப் படத்தில் அத்தனை அட்டகாசமாக நடித்திருக்கிறார். ஆனால் அவரது தந்தையான, இளமை மாறாத நாகார்ஜூனனை பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. என்ன காயகல்ப மருந்து சாப்பிடுகிறார்?

இந்தப் படத்தை நான் மிகவும் ரசித்து பார்க்க வைத்த நபர் என்றால் அது நடிகை சமந்தா. இதில் அத்தனை அற்புதமாக நடித்திருக்கிறார். நடிப்பிற்காக அல்லாமல் சமந்தாவை அதிகம் பிடிப்பதற்கு காரணம், 'நீதானே என் பொன் வசந்தம்'. அதைப் பார்த்த பிறகு மிக அப்பட்டமாகவே ஒப்புக் கொள்ள ஆரம்பித்து விட்டேன். ஆனால் அதையும் தாண்டி வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத அந்தரங்கமானதொரு காரணமும் இருக்கிறது. அவர் தோன்றும் பிரேம்களில் எல்லாம் அவர் மீதிருந்து கண்களை எடுக்கவே முடியவில்லை. குடும்பக் காவியமாக தோன்றும் முதல் பகுதியிலும் உற்சாகப் புயலாக தோன்றும் இரண்டாம் பகுதியிலும் அதற்கான வித்தியாசத்துடனும், தாயாக உணரும் தருணங்களில் சிறந்த நடிப்பையும் தந்திருந்தார். இத்திரைப்படத்தில் அவருக்கான முத்தக் காட்சிகளைப் பார்க்கும் போது உண்மையாகவே காதிலிருந்து புகையும் வயிற்றிலிருந்து நெருப்பும் வந்தது.

ஆகவே நண்பர்களே... இந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயமாக இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். தெலுங்குத் திரைப்படங்களை முன்கூட்டிய ஒவ்வாமையுடன் தவிர்க்கும் என்னைப் போன்றவர்களுக்கு அழுத்தமாகவே பரிந்துரைக்கிறேன். உங்கள் வெறுப்பை இந்த திரைப்படம் நிச்சயம் மாற்றும். அபாரமான படைப்பு.

suresh kannan