Friday, June 26, 2015

மனம் - ஒக்க மன்ச்சி தெலுகு சித்திரமுலு


என்னது, நாகேஸ்வரராவ் இறந்து விட்டாரா? என்றெல்லாம் கேள்வி கேட்டு ஆச்சரியம் கொள்ளாமல் இந்தப் பதிவை வாசியுங்கள். இத்தனை காலமாக ஏன் இந்த திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்று என்னையே நான் இன்று நொந்து கொண்டேன். இதைப் பற்றி பல நல்ல வார்த்தைகளை ஏற்கெனவே கேட்டிருந்தாலும் தெலுங்கு பேசும் ஒரு முதியவர் நேற்று இத்திரைப்படத்தைப் பற்றி என்னிடம் அத்தனை சிலாகித்து சொன்ன போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு சமகால திரைப்படத்தை இரண்டு தலைமுறைக்கு முந்தியுள்ளவர் பாராட்டுகிறார் என்றால் ஒன்று, அவர் மனது அத்தனை இளமையானதாக இருக்க வேண்டும் அல்லது அத்திரைப்படம் அத்தனை சிறப்பானதாக இருக்க வேண்டும். இரண்டுமே சரிதான் போல. படம் பார்த்த பிறகு இதைத்தான் நானும் உணர்ந்தேன்.

அந்தத் திரைப்படம் - மனம். நாகேஸ்வர ராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் பரஸ்பரம் தங்கள் பாத்திரங்களின் பெயர்களை மாற்றியமைத்துக் கொண்டு நடித்தது. இதன் திரைக்கதையை விவரித்தால் சற்று தலைசுற்றும். உதாரணத்திற்கு அசலில் நாகார்ஜூனாவின் மகனான நாக சைதன்யாதான், கதாபாத்திரப்படி  இத்திரைப்படத்தில் அவரின் தந்தை. போலவே நாகார்ஜூனாதான், நாகேஸ்வர ராவின் தந்தை. ஐம்பது வயது நபர் இருபது வயதுப் பெண்ணை தாய் போல பார்த்து உருகுவதை கற்பனை செய்து பார்த்தாலும் நம்ப முடியாது. "என்னய்யா உட்டாலக்கடி இது" என்று தோன்றும். அதிலும் மறுஜென்மத்திலும் எப்படி ஐயா, அதே தோற்றத்துடன், அதே உறவுமுறையில் உணர்வார்கள் என்றெல்லாம் பல கேள்விகள் பிறக்கலாம்.

ஆம். தர்க்கமே இல்லை. ஆனால் தனது அபாரமான திரைக்கதையால் நெருடலே ஏற்படாதவாறு நம்ப வைத்திருக்கிறார் இயக்குநர் விக்ரம் குமார். குறிப்பாக இதன் மேக்கிங்கும் சின்ன சின்ன சுவாரசியங்களும் அற்புதம். இளம் இயக்குநர்களுக்கான பாடம், இத்திரைக்கதையில் உள்ளது. நீண்ட நாட்கள் கழித்து ஒரு திரைப்படத்தை மிகுந்த பரவசத்துடனும் பொங்கி வரும் புன்னகையுடனும் இடையில் சிறிது கண்ணீருடனும் பார்த்தேன் என்றால் அது இந்த திரைப்படம்தான். Back to the future என்கிற அறிபுனைவின் நகல் என்கிறார்கள். தெரியவில்லை. அதையும் பார்க்க வேண்டும்.

***

பொதுவாகவே எனக்கு தெலுங்கு திரைப்படங்களையும் அதன் நடிகர்களையும் பார்க்கவே பிடிக்காது. "சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து" என்று பாரதி பாடினாலும் அந்த மொழியின் ஒலி கூட சமயத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக என்.டி.ராமாராவ் போன்றோர்களின் கூப்பாடுகளையும் கதற வைக்கும் சப்தங்களையும் கண்ணைக் கூச வைக்கும் அடர்த்தியான வண்ணங்களையும் காமெடியான நடனங்களையும் பார்க்கவே பிடிக்காது. விதிவிலக்காக இந்த  பிரதேசத்தின் சினிமாக்களில்  பிடித்த ஒரே அம்சம், ஜெயமாலினி. இதற்காகவே பல டப்பிங் படங்களை சகித்துக் கொண்டு பார்த்திருக்கிறேன். ஆனால் தெலுங்கு சினிமா நிறைய முன்னேறி வந்திருக்கிறது என்பதை இத்திரைப்படம் மூலம் உணர முடிந்தது.

நான் பார்த்து ரசித்த முதல் தெலுங்குத் திரைப்படம் என்றால் அது ராம்கோபால் வர்மா இயக்கிய ஷிவா (தமிழில் உதயம்). தெலுங்கு படங்களிலும் ஹீரோக்கள் ஸ்மார்ட்டாக இருப்பார்கள் என்பதை அறிய வைத்தவர் நாகார்ஜூனா. ஆனால் ஏனோ இதற்குப் பிறகு தெலுங்கின் பக்கம் மறுபடியும் போகத் தோன்றவில்லை. 

ஆனால் நண்பர் சிவராமன், தினகரன் வெள்ளி மலர்களில் அதிரி புதிரியாக புல்லட் வேக நடையில் தெலுங்கு சினிமாக்களை அதன் கார சாரம் குறையாமல் விவரிக்கும் போது லேசாக சற்று சபலம் தட்டும். அதன் பாதிப்பில் சில இயக்குநர்களின் பெயர்கள் அறிமுகமானது. அதில் முக்கியமானது ராஜ்மெளலி. அவருடைய திரைப்படமான நான் ஈ, இந்தியத் திரைப்படங்களில் ஒரு சாதனை. அதைப் பற்றிய எழுதிய பதிவு.

பிறகு பார்த்தவைகளில் குறிப்பிடத்தக்கது, மகேஷ் பாபு நடித்த பிஸ்னஸ்மேன். மாஃபியாவின் இயக்கம் நாம் சினிமாக்களில் பார்ப்பது போல் அல்லாமல், ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் நிர்வாக கச்சிதத்துடனும் வலைப்பின்னலுடனும் அரசாங்கத்தையே ஆட வைக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நம்பும் வகையாக சொன்ன படம். தர்க்கரீதியாக எதையும் சிந்திக்காமல் படத்துடன் நம்மை ஒப்புக் கொடுத்து விட்டால் ஒருவேளை ரசிக்கலாம். அதைப் பற்றி இங்கே.

அதற்குப் பிறகு நான் ரொம்பவும் ரசித்த தெலுங்குத் திரைப்படம் என்றால் இதுதான். - மனம்.  வழக்கமாக வெகுசன திரைப்படங்களை நான் வெறுப்பதற்கு அதிக காரணமே அவை அரைத்த மசாலாவையே அரைத்து வேறு வேறு பாக்கிங்களில் தந்து கொண்டிருப்பதனால்தான். மற்றபடி இம்மாதிரியான வித்தியாசமான திரைக்கதைகளையும் சுவாரசியங்களையும் நுட்பங்களையும் கொண்ட திரைப்படங்களை நான் வரவேற்கவே செய்கிறேன். 


ஏறத்தாழ நூறு ஆண்டுகளின் இடைவெளிகளில் நிகழ்வது போன்ற, மறுஜென்ம நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை. அதிலும் தெலுங்கில் புகழ்பெற்றிருக்கும் ஒரே நட்சத்திரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடித்திருக்கிறார்கள் எனும் போது திரைப்படத்தையும் தாண்டி அத்தனை தலைமுறை ஆந்திர ரசிகர்களும் தங்களின் வாழ்நாளில் ரசித்த நடிகர்களை  உணர்ச்சிகரமான தொடர்போடு எப்படி கொண்டாடியிருப்பார்கள் என்பதை யூகிக்க முடிகிறது. தமிழில் இதை ரீமேக் செய்தால் சிவாஜியின் குடும்பத்தைத் தவிர வேறு யாருமே சாய்ஸில் இல்லை. அப்படி வந்திருந்தால் அந்த திரைப்படம் மிக சுவாரசியமானதாக இருந்திருக்கும். துரதிர்ஷ்டமாக சிவாஜி நம்மிடம் இல்லை என்பது ஒரு சோகம்.

நாக சைதன்யாவை முதன் முதலில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' வில் பார்க்கும் போது வழக்கமான தெலுங்கு நாயகர்கள் மீது ஏற்படும் ஒவ்வாமையே ஏற்பட்டது. "இவனா நாகார்ஜூனா பையன்? ஐயோ.. " என்றிருந்தது. ஆனால் இந்தப் படத்தில் அத்தனை அட்டகாசமாக நடித்திருக்கிறார். ஆனால் அவரது தந்தையான, இளமை மாறாத நாகார்ஜூனனை பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. என்ன காயகல்ப மருந்து சாப்பிடுகிறார்?

இந்தப் படத்தை நான் மிகவும் ரசித்து பார்க்க வைத்த நபர் என்றால் அது நடிகை சமந்தா. இதில் அத்தனை அற்புதமாக நடித்திருக்கிறார். நடிப்பிற்காக அல்லாமல் சமந்தாவை அதிகம் பிடிப்பதற்கு காரணம், 'நீதானே என் பொன் வசந்தம்'. அதைப் பார்த்த பிறகு மிக அப்பட்டமாகவே ஒப்புக் கொள்ள ஆரம்பித்து விட்டேன். ஆனால் அதையும் தாண்டி வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத அந்தரங்கமானதொரு காரணமும் இருக்கிறது. அவர் தோன்றும் பிரேம்களில் எல்லாம் அவர் மீதிருந்து கண்களை எடுக்கவே முடியவில்லை. குடும்பக் காவியமாக தோன்றும் முதல் பகுதியிலும் உற்சாகப் புயலாக தோன்றும் இரண்டாம் பகுதியிலும் அதற்கான வித்தியாசத்துடனும், தாயாக உணரும் தருணங்களில் சிறந்த நடிப்பையும் தந்திருந்தார். இத்திரைப்படத்தில் அவருக்கான முத்தக் காட்சிகளைப் பார்க்கும் போது உண்மையாகவே காதிலிருந்து புகையும் வயிற்றிலிருந்து நெருப்பும் வந்தது.

ஆகவே நண்பர்களே... இந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயமாக இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். தெலுங்குத் திரைப்படங்களை முன்கூட்டிய ஒவ்வாமையுடன் தவிர்க்கும் என்னைப் போன்றவர்களுக்கு அழுத்தமாகவே பரிந்துரைக்கிறேன். உங்கள் வெறுப்பை இந்த திரைப்படம் நிச்சயம் மாற்றும். அபாரமான படைப்பு.

suresh kannan

No comments: