Wednesday, June 24, 2015

இரண்டு கட்டுரைகள் - ஜூலை 2015

ஜூலை 2015 இதழ்களுக்காக இரண்டு திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளேன். ஒன்று, காக்கா முட்டை திரைப்படம் பற்றியது. 

இதில் என்ன எழுதப் போகிறேன் என்பதைப் பார்க்க நானே ஆவலாக இருந்தேன். (அடங்குடா!) தமிழில் இது கவனப்படுத்தப்பட வேண்டிய, வரவேற்கப்பட வேண்டிய  சிறந்த படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றாலும் அதன் முழுமையை நோக்கி நகர்ந்திருக்கலாம் என்கிற நோக்கில் கதாபாத்திரங்களின், சம்பவங்களின் வடிவமைப்பில் நிகழ்ந்திருக்கும் போதாமைகளை, பிசிறுகளை, இயக்குநரின் மீதுள்ள மதிப்பேதும் குறையாத அளவிற்கு சுட்டிக் காட்டியுள்ளேன்.  இவைகளை பதேர் பாஞ்சாலி திரைப்படத்தின் காட்சிகளோடு ஒப்பிட்டுள்ளேன்.


***

இரண்டாவது, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது திரைப்படத்தைப் பற்றியது. சமீபத்தில் வெளிவந்த ஆனால் அதிகம் கவனிக்கப்படாமல் போனதொரு நல்ல திரைப்படம். ஆனால் 'நாயகனுக்கு பிறகு தமிழில் என்னைக் கவர்ந்த மிகச்சிறந்த திரைப்படம்' என்று பாரதிராஜா மிகையுற்சாகமாக கூறின அளவிற்கு அல்ல. (மணிரத்னம் மீது பாரதிக்கு அப்படியென்ன கோபம்).

இதில் துண்டு துண்டாக மிகச் சிறந்த தருணங்களும் சிறுகதைகளும் உள்ளன. குறிப்பாக பொருளீட்டுவது உள்ளிட்ட இன்னபிற காரணங்களுக்காக சென்னை எனும் பெருநகருக்கு புலம் பெயர்ந்திருக்கும் பிரம்மாச்சாரிகளும், தனிநபர்களும் வசிப்பிடத்திற்காக அல்லாடும் பகுதிகள். அப்படி தங்க இடம் கிடைக்காத ஓர் இரவின் நீளம் எத்தனை கொடுமையாக இருக்கும் என்பது உள்ளிட்ட பகுதிகள் மிகச் சிறப்பாக பதிவாகியிருக்கின்றன. பெருநகரத்தின் கதவுகள் இரவுகளில் இறுகச் சாத்திக் கொள்கின்றன.

ஏறத்தாழ அப்படியொரு அனுபவத்தை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. என்னுடைய வழக்கமாக அல்லாமல், நண்பர்களின் அழைப்பில் சென்று உரையாடிய ஒரு மாலைப்பொழுது நீண்டு கொண்டே போய் கிளம்ப நள்ளிரவாகி விட்டது. அந்த நேரத்தில் வீட்டுக்குச் செல்ல முடியாது. நல்ல மழை வேறு பெய்து கொண்டிருந்தது. உடனிருந்த நண்பர் எங்காவது விடுதியில் உறங்கி விட்டு காலையில் கிளம்பலாம் என்று யோசனை தந்தார்.  

மழையில் நனைந்து கொண்டே ஓரளவிற்கு  தரமான, சுமாரான விடுதிகளில் சென்று கேட்டோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அப்படிச் சென்ற நான்கைந்து விடுதிகளிலும் இடமில்லை என்று கறாராக சொல்லி விட்டார்கள். அவர்கள் சொல்வதில் உண்மையில்லை என்பது அவர்களின் உடல்மொழியிலேயே தெரிந்தாலும் வெட்கத்தை விட்டு கெஞ்சிக் கேட்டாலும் 'அறை காலியில்லை' என்றே சாதித்தார்கள். உடனிருந்த நண்பர் தான் ஒரு பத்திரிகையாளர் என்று அடையாள அட்டையைக் காட்டியும் அவர்கள் மசியவில்லை. 

பலத்த மழை பெய்து கொண்டிருக்கும் இந்த இரவை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்று சற்று கலவரமாகி விட்டது. பதின்ம வயதுகளில் திரைப்படத்தின் இரவுக் காட்சிகளுக்கு தனியாகச் சென்று வீடு திரும்ப முடியாமல் காலியான ஆட்டோக்களிலும் பூங்காக்களிலும் சமயத்தில் சாலையோரத்திலும் கூட உறங்கின அனுபவம் எனக்கு உண்டுதான் என்றாலும் அவை பழங்கதையாகி நாகரிக உலகில் கலந்து விட்ட மேட்டிமைத்தனமும் சொகுசும் இப்போது  அப்படி அனுமதிக்குமா என தெரியாமல் இருந்தது. மட்டுமல்லாமல் காவல் துறையினரின் சந்தேகத்தை, அராஜகத்தை கடப்பதற்கு தனியான திறமை வேண்டும்.

இந்த நகரத்தின் தன்மையையும் சூழலையும் அறியாத ஓர் அந்நியர், ஊருக்கும் திரும்ப முடியாத படி இப்படி மாட்டிக் கொண்டால் என்ன செய்வார், எப்படி உணர்வார் என்பதை யோசித்துப் பார்க்கவே பயமாக இருந்தது. பெருநகரத்தின் இரவு முகம் என்பது அனுபவமில்லாதவர்களுக்கு திகிலை ஏற்படுத்துகிறது. பிறகு நண்பரின் யோசனைப்படி அந்த நேரத்தில் தெய்வாதீனமாக வந்த ஷேர் ஆட்டோவில் பயணித்து சென்னையின் புறநகரில் இருந்த சுமாரான விடுதியில் இடம் கிடைத்த பிறகுதான் ஆசுவாசமாக இருந்தது. 

கன்யாகுமரியின் விடுதிகளில் தனிநபராக வருபவர்களுக்கு இடம் தரப்படாது என்று விடுதி உரிமையாளர்கள் சங்கம் ஒரு முடிவே எடுத்திருக்கிறார்களாம். தனிநபர்களாக வருபவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் அதிகரித்திருப்பதே காரணம் என்கிறார்கள். பார்க்க: செய்தி. இப்படி பல காரணங்களைச் சொல்கிறார்கள்.

இப்படியாக பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் சாலையோரத்திலும் காவல்துறையினரின், சமூக விரோதிகளின், பணக்காரத் திமிரில்  கார் ஏற்றிக் கொல்லும் நபர்களிடையே ஒவ்வொரு இரவையும் கழிக்க நேர்பவர்களின் நிலைமையை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. 

இந்த சம்பவத்தின்  உணர்வை மேற்குறிப்பிட்ட திரைப்படத்தின் காட்சிகள் மீள்நினைவு செய்ய வைத்து விட்டது. 

இரண்டு கட்டுரைகளும் முறையே உயிர்மை மற்றும் அம்ருதா ஜூலை 2015 இதழ்களில் வெளிவரக்கூடும். (பிரசுரமாகும் வரை உறுதியில்லை). நண்பர்கள் வாசித்து விட்டு தங்களின் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

suresh kannan

No comments: