Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Thursday, January 09, 2020

ரஜினி – முருகதாஸின் ‘காட்டு தர்பார்’



 
பொதுவாக ரஜினியின் வணிக சினிமா அரசியல் மீதும் அல்லது அவர் அரசியலுக்கு வருவதாக சொல்லிக் கொண்டிருக்கும் பூச்சாண்டி விளையாட்டு மீதும் பல விமர்சனங்களை வைத்தாலும் அவர் திரைப்படம் வரும் போது ‘பார்த்துதான் வைப்போமே’ என்கிற மெல்லிய ஆவல் சராசரியான நபருக்கு எழுவது இயல்புதான். வெறித்தனமான ரசிகர்கள் உருவாக்கும் ஆரம்ப அலை அடங்கியவுடன் குடும்பம் குடும்பமாக சென்று அவரின் திரைப்படங்களைப் பார்ப்பது ஒரு தமிழ் மரபு. அந்த வகையில் ரஜினியின் charisma இன்னமும் பெரிதாக அடங்கி விடவில்லை என்பது உண்மை.

ஆனால் ‘தர்பார்’ வெளியீட்டில் இவ்வகையான சந்தடிகள் எதையும் அதிகம் பார்க்க முடியவில்லை. ரஜினி மறுபடியும் ‘கமர்சியல்’ சந்தைக்குள் நுழைந்திருப்பது மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டதா?

தர்பார் - இது எதைப் பற்றிய திரைப்படம்?

ஆதித்யா அருணாச்சலம் (ரஜினிகாந்த்) ரவுடிகளை ‘கன்னா பின்னாவென்று’ என்கவுன்டரில் போட்டுத்தள்ளும் ஒரு வெறி கொண்ட காவல்அதிகாரியாக நமக்கு அறிமுகமாகிறார். அவர் ஏன் அப்படி மூர்க்கத்தனமாகிறார் என்பதை ஒரு பின்கதையின் வழியாக சொல்கிறார்கள்.

ஆக.. காவல்துறை அதிகாரியின் வீரத்தை, பெருமிதத்தை, அரச பயங்கரவாதத்தின் கொலைகளை கண்மூடித்தனமாக ஆராதிக்கும் திரைப்படம் இது. ஹரியின் ‘சாமி’ ‘சிங்கம்’ போன்றவைகளின் இன்னொரு வெர்ஷன். அவ்வளவே. புதுமையாக எதுவுமில்லை.

ஒருவகையில் இது எழுபது, எண்பதுகளில் வெளியாகும் திரைப்படத்தைப் போலவே பலவிதமான கிளிஷேக்களுடன் உள்ளது. ஒரு நேர்மையான காவல் அதிகாரி, எதிரிகளால் தன் பிரியமான உறவை இழப்பார். அதற்கு பழிவாங்க கிளம்புவார். ‘தர்பாரின்’ ஒன்லைனும் இதே அரதப்பழசுதான்.

**

முதலில் இந்தத் திரைப்படத்திலுள்ள நல்ல (அப்படியாகத் தோன்றும்) விஷயங்களை பார்த்து விடுவோம்.

முன்பே குறிப்பிட்டது போல ரஜினியின் வசீகரம் இன்னமும் குறையவில்லை என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் வேறெந்த முன்னணி நடிகருக்கு கூட இப்படியொரு வசீகரத்தன்மை பெரிதும்  குறையாமல் இருக்குமா என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் ஒரு காலத்தில் இளசுகள் முதல் பெரிசுகள் வரை செல்வாக்கு பெற்றிருந்த ஜாக்கிசானின் வெற்றி கூட இப்போது அடங்கி விட்டது.

‘தர்பாரில்’ ரஜினி ஸ்டைலாக நடக்கிறார், ஆக்ஷன் செய்கிறார், குறும்புகள் செய்கிறார். சில காட்சிகள் காமெடியாக இருந்தாலும் பார்ப்பதற்கு அப்படியொன்றும் பெரிய முரணாகத் தெரியவில்லை. மனதிற்குள்ளாக ரசிக்கத்தான் செய்கிறோம். (இளமைப் பருவம் முதல் ரஜினியைப் பார்த்து வளர்ந்ததால் அப்படித் தோன்றுகிறதா அல்லது தமிழ் சினிமாவின் தொடர்ச்சியான அபத்தங்கள் நம்மை அவ்வாறு கண்டிஷன் செய்து விட்டதா என்பது ஆய்வுக்குரியது). ஆக்ஷன் காட்சிகள் போலி என்பதை அறிந்தாலும் இந்த வயதில் இப்படி வேகமாக உடலை அசைப்பதே ஒரு சாகசம்தான்.

திரைப்படத்தின் முதல் பாதியில் வரும் ‘ஆள்மாறாட்ட’ குற்றங்கள், அதைப் பற்றிய விசாரணைகள் போன்றவை சற்று நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. அதற்குப் பிறகு படம் முழுக்க டொங்கலாகி விடுகிறது. பாவம் சுனில் ஷெட்டி. திடகாத்திரமான உடம்புடன் தமிழில் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார். ஆனால் எக்ஸ்ட்ரா நடிகர் போலவே அவரை குறைவாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். திடகாத்திரமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து விட்டு அவரது சுண்டுவிரலை மட்டுமே திரைக்கதையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மெயின் வில்லனின் பாத்திரம் அழுத்தமாகவும் சுவாரசியமாகவும் அமைந்தால்தான் நாயகனின் சாகசங்களும் அதிகம் எடுபடும். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இது நிரூபிக்கப்பட்டதொன்று.

இவற்றைத் தாண்டி ரஜினி செய்யும் தனிநபர் சாகசங்கள் பலவும் ‘காமெடியாக’ இருக்கின்றன. கமிஷனர் என்கிற அதிகாரத்தில் இருந்தாலும் எந்தவொரு குற்றவாளியைப் பிடிக்க வேண்டுமானாலும் மற்றவர்களை ஓரமாக நிற்க சொல்லி விட்டு இவரே தன்னந்தனியாக சென்று ‘ஹீரோத்தனத்தை’ நிறுவுகிறார். இப்படிப்பட்ட காட்சிகள் அபத்தமாகவும் காமெடியாகவும் இருக்கின்றன. ஒரு இண்டர்நேஷனல் குற்றவாளியைப் பிடிக்க சம்பந்தப்பட்ட நாடுகள் உதவி செய்ய முன்வந்தாலும் ‘நானே தனியாப் பிடிக்கறேன்’ என்று ஹீரோத்தனம் செய்ய இவர் அடம்பிடிக்கும் போது இந்த காமெடியின் அளவு உச்சத்திற்குப் போகிறது.

ஒருபக்கம் என்கவுன்டர் போலீஸாக இருந்து கொண்டு இன்னொரு பக்கம் அழகான பெண்ணிடம் பேசுவதற்கு வாய் குழறுவதாக இவர் செய்யும் நகைச்சுவை இருக்கிறதே.. அபத்தம். ஒரு காரெக்ட்டரின் நம்பகத்தன்மை எப்படி சீரழிந்தால் என்ன, ஒரு திரைப்படத்தில் ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என்று அனைத்து நவரசக்குப்பைகளும் வந்து விட வேண்டும் என்று இயக்குநர்கள் கிணற்றுத் தவளையாக யோசிப்பதால் வரும் வினை இது.

நாயகி என்றொருவர் இருக்க வேண்டும் என்கிற சம்பிரதாயத்திற்காக நயன்தாரா. நல்லவேளை, டூயட் எல்லாம் வைத்து இயக்குநர் நம்மைச் சோதிக்கவில்லை. ஆனால் டூயட் இல்லையே.. தவிர இதர அசட்டுத்தனமான ரொமான்ஸ் எல்லாம் நடக்கிறது.

ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ். கமலின் மகளாக ஒரு படத்தில் நடித்து விட்டதால் ரஜினியின் மகளாக இன்னொன்றில் நடிக்க விரதம் இருந்தாரோ. என்னமோ. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவு இதில் அழுத்தமாக வெளிப்படவில்லை. ஒருவகையில் இதுதான் பழிவாங்கலின் அடிப்படையே. என்றாலும் தன் ‘கடைசி வீடியோ’வில் இவர் பேசுவது நன்று.

முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு மொக்கையான கவுண்ட்டர் வசனம் பேசுவதை இன்னமும் எத்தனை நாளைக்கு ‘காமெடி’ என்று யோகிபாபுவும் பெரும்பான்மையான தமிழ் ரசிகர்களும் நினைத்துக் கொண்டிருக்கப் போகிறார்களோ என்று தெரியவில்லை.

‘கல்யாணம் பண்ண வேண்டிய வயசுல ஒரு பொண்ணை வெச்சிக்கிட்டு.. இந்த வயசுல.. எங்க வீட்டு பெண்ணை லவ் பண்றியே.. நியாயமா?” என்று ரஜினியை ஒரு பாத்திரம் கேள்வி கேட்கிறது. ‘ஹே.. சூப்பர்பா..’என்று தோன்றியது அந்தக் காட்சியில்தான். தன் மகள் வயது நாயகிகளுடன் ரஜினி டூயட் பாடிய அத்தனை காட்சிகளும் அந்த ஒரு நொடியில் நம் கண் முன் வந்து போகின்றன. ரஜினி படத்திலேயே அவரை நாசூக்காக சவட்டியிருக்கும் முருகதாஸிற்கு பாராட்டு.

‘படையப்பா’ திரைப்படத்தில் உடம்பை முறுக்கி ரஜினி சண்டையிடும் காட்சியைப் பார்த்து ‘வாட் அ மேன்?’ என்று அப்பாஸ் வியக்கும் நகைச்சுவைக் காட்சி ஒன்று உண்டல்லவா? அப்படியே இதிலும் ஒன்று இருக்கிறது. உடற்பயிற்சி செய்யும் ரஜினியின் முறுக்கேறிய உடலை க்ளோசப்பில் காட்டுகிறார்கள். தமிழ் சினிமாவில் VFX டிபார்ட்மெண்ட் எத்தனை தரமாக முன்னேறியுள்ளது என்பதற்கு இந்தக் காட்சி ஓர் உதாரணம்.

இதைப் போலவே, தங்கப் பதக்கம்’ திரைப்படத்தில் மனைவி இறந்த செய்தியைக் கேட்டவுடனேயே விறைப்பு குறையாமல் சல்யூட் அடித்து விட்டு தடுமாறி விழச் சென்று பிறகு சமாளித்துக் கொண்டு சிவாஜி செல்வார் அல்லவா? அப்படியொரு நகைச்சுவையும் இதில் உண்டு. முருகதாஸின் டீமில் அறுபதைக் கடந்த உதவி இயக்குநர் எவரோ இருக்கிறார் போலிருக்கிறது. அவர் ‘சிவாஜி’யின் வெறிபிடித்த ரசிகராகவும் இருக்கக்கூடும்.

மும்பையின் நிழல் உலகு பின்னணியில் நிகழ்ந்திருக்கும் இந்தக் காமெடி கலாட்டாவை இயக்குநர் ‘ராம்கோபால் வர்மா’ ஒருவேளை பார்த்தால் எப்படியெல்லாம் டிவிட்டரில் கிண்டலடிப்பார் என்றொரு கற்பனை ஓடியது. அப்படி கந்தர கோலமாக ரவுடிகளை ஹாண்டில் செய்திருக்கிறார்கள்.

மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு திருநங்கைகள், காவல்துறை உள்ளிட்ட அரசு பதவிகளில் அமரத் துவங்கி விட்ட காலம் இது. ஆனால் இயக்குநருக்கோ நடிகருக்கோ இது குறித்த சமூக உணர்ச்சி எதுவுமில்லை. ‘பணம் கொடுத்தால் அவர்கள் வாழ்த்தி நடனமாடுவார்கள்’ என்பதையே காட்டியிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு திருநங்கையை ‘எக்ஸ்ட்ரா’ நிமிடங்கள் கட்டிப்பிடித்து கிளுகிளுப்பாகிறார் ரஜினி. காமெடியாம்.

சந்தோஷ் சிவன் போன்ற திறமையான ஒளிப்பதிவாளர்கள், இது போன்ற சாதாரண திரைப்படங்களுக்கு தங்களின் உழைப்பைக் கொட்டுவது அநீதி. அனிருத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும சரி. எதையும் அவர் ‘கிழிக்க’வில்லை. நம் காதுகள்தான் கிழிகின்றன.

‘இளம் வயது நாயகிகளுடன் டூயட் பாடி நடிப்பது எனக்கே சங்கடமாக இருக்கிறது. இனி என் வயதிற்கு ஏற்ற பாத்திரங்களில் நடிக்கவிருக்கிறேன்” என்று சுயபரிசீலனையுடன் தன்னை உணர்ந்து அறிவித்த ரஜினி, (அதற்கு லிங்கா போன்ற சில தோல்விகளும் காரணம்) ‘கபாலி’ ‘காலா’ என்று சரியான திசைக்கு தடம் மாறினார். அவையும் வணிகத் திரைப்படங்கள்தான் என்றாலும் ரஜினி நடிப்பதற்கு ஏற்ற இடம் அந்தத் திரைக்கதையில் இருந்தது. ஆனால் ஒரு தீவிர ரசிகனாக எண்பதுகளின் ரஜினியை மீண்டும் கொண்டு வருகிறேன் பேர்வழி என்று ‘பேட்ட’யின் மூலம்  ரஜினி என்கிற தேரை இழுத்து வந்து பழைய சாக்கடையில் இறக்கி விட்டார் கார்த்திக் சுப்புராஜ்.

‘அடடா.. சொல்லியிருக்கக்கூடாதா.. நானும் இந்த மாதிரி பண்றதுல.. பெரிய ஆளாச்சே’ என்று முருகதாஸூம் தேர் பயணத்தை சாக்கடையில் இன்னமும் ஆழமாக இறக்கியிருக்கிறார். விளைவு ‘தர்பார்’.

இந்த அழகில் தமிழ் சினிமாவில் ‘கதை’ என்கிற வஸ்து இருப்பதாக நம்பி அதற்காக கதை, திருட்டு, பஞ்சாயத்து எல்லாம் நடப்பதாக கேள்விப்படும் போது எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை.


**

இப்படிப்பட்ட க்ளிஷேக்கள், காமெடிகள், பொழுபோக்கு  போன்றவற்றைத் தாண்டி கருத்தியல் ரீதியாகவும் இதுவொரு ஆபத்தான திரைப்படம். ஏனெனில் இதில் வரும் காவல்அதிகாரியான ‘ஆதித்யா அருணாச்சலம்’ கண்மூடித்தனமான ‘என்கவுன்டர்’ ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். இவர் சுட்டுத் தள்ளுகிறவர்கள் எல்லாம் நிச்சயம் ரவுடிகள்தானாம். இந்த லட்சணத்தில் ‘மனித உரிமை கமிஷன்’ அதிகாரியையே துப்பாக்கி முனையில் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத வகையில் மிரட்டுகிறார். முருகதாஸின் வித்தியாசமான ‘சிந்தனை’ இது.

இந்தியாவில் இதுவரை நடந்த என்கவுன்டர் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் எளிய சமூகத்தினராக இருப்பதில் ஏதோ ஒரு விந்தையுள்ளது. குற்றம் செய்ததாக வலுவாக சந்தேகப்படும் ஒரு அமைச்சரின் மகனோ, அரசாங்கத்தின் உயர் அதிகாரியின் மகனோ ‘என்கவுண்டரில்’ போட்டுத் தள்ளப்பட்டதாக வரலாறு இல்லை. .

காவல்துறையும் நீதித்துறையும் பெரும்பாலும் அழுகிப் போயிருக்கும் சூழலில் ‘கொடூரமான குற்றவாளி’ என்று உறுதிப்படுத்தப்பட்ட ஒரு ஆசாமியை, சட்டத்தின் வழியாக சென்று தண்டிக்க முடியாது என்கிற நடைமுறை காரணம் கருதி, ஒரு நேர்மையான காவல்துறை ஆசாமி ‘என்கவுன்டராக’ கொலை கூட ஏதோ ஒருவகையான நியாயமுள்ளது. நான் சட்டத்தையும் நீதியையும் முழுக்க நம்புபவன் என்றாலும் இதையும் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. ஆனால் நடக்கும் ‘என்கவுன்டர்கள்’ எல்லாமே இப்படிப்பட்ட ‘நேர்மையுடனா” நடக்கின்றன?

ஒரு சமூகத்தின் கூட்டு மனச்சாட்சியை தற்காலிகமாக திருப்திப்படுத்தவும், உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றி ஒளித்து விட்டு அந்த இடத்தில் எளியவர்களை பலியிடும் சடங்காக அல்லவா ‘என்கவுன்டர்கள்’ அமைந்திருக்கின்றன?

இந்தச் சூழலில் தமிழ் சினிமாவும் ‘என்கவுன்டர்களை’ பெருமிதப்படுத்தி உருவாக்குவதில் உள்ள ஆபத்தை உணர்ந்திருப்பது போல் தெரியவில்லை. குருதிப்புனல் திரைப்படத்தில் கமலுக்கும் நாசருக்கும் ஒர் அற்புதமான உரையாடல் நடைபெறும். குறைந்தபட்சம் அப்படியொரு சமநிலையான காட்சி கூட இது போன்ற ‘போலீஸ்’ திரைப்படங்களில் இருப்பதில்லை.

இந்த நோக்கில் ரஜினியும் முருதாஸும் இணைந்து ‘காட்டு தர்பார்’ நடத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.





suresh kannan

Tuesday, January 22, 2019

ரஜினி என்கிற மாயமான்







தங்களின் துயரங்களிலிருந்து மீட்பதற்காக எந்த ரட்சகனாவது வர மாட்டானா என்பது பொதுசமூகத்தின், குறிப்பாக அடித்தட்டு மக்களின் ஆதாரமான ஏக்கங்களுள் ஒன்று. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இந்த எதிர்பார்ப்பு ஓயாது. மதம் போன்ற நிறுவனங்கள் இந்த ஏக்கத்தை வலுவாகப் பற்றிக் கொண்டு ,அவரவர்களின் பிம்பங்களை முன்நிறுத்தி அசைக்க முடியாத அமைப்புகளாகி விட்டன. அரசர்கள் கடவுளுக்கு நிகராக கருதப்பட்ட, அப்படி கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட காலங்களும் முன்பு இருந்தன. ஜனநாயகம் மலர்ந்து மக்கள் அதிகாரத்திற்கு நகர முடியும் என்கிற மறுமலர்ச்சிக் காலக்கட்டத்தில் அரசியல்வாதிகள் இந்த இடத்தை அபகரித்துக் கொண்டார்கள். ஒரு சராசரி நபர் சாம, பேத, தான, தண்டம் என்று பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டால் ஒரு குறுநில மன்னருக்கான அதிகாரத்தையும் செளகரியங்களையும் பெற்று விட முடிகிறது.

பொதுமக்களுக்கு உண்மையாகவே சேவை செய்வதின் மூலமாகவோ அல்லது அப்படியான பாவனைகளின் மூலமாகவோ அதிகார அரசியலுக்குள் வருவது ஒருவழி. இதற்கு நீண்ட காலமாகும். ஆனால் இதற்கான குறுக்கு வழியும் ஒன்று இருக்கிறது. அது சினிமா. கச்சிதமாக திட்டமிடப்பட்ட காட்சிகளின் மூலம் தன்னை அவதார நாயகராகவும் அடித்தட்டு மக்களின் மீட்பராகவும் காட்டிக் கொண்டால், நிழல் பிம்பங்களை நிஜம் என்று நம்பும் சமூகம் அதிகாரத்தை இந்த நடிகர்களிடம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இந்த வழிமுறையில் வெற்றிகரமாக பயணித்த அரிதான உதாரணம் எம்.ஜி.ஆர்.

இன்றைய விளம்பர நிபுணர்கள் கூட அதிசயப்படக்கூடிய விஷயமாக எம்.ஜி.ஆரின் திட்டங்களும் முன்தயாரிப்புகளும் இருந்தன.  ஏறத்தாழ அனைத்து திரைப்படங்களிலும் ஏழைப் பங்காளனாக தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டதோடு அரசியல் அடையாளங்களையும் அவற்றில் மிக நுட்பமாக திணித்து மக்களின் அபாரமான நம்பிக்கையைப் பெற்றார். இன்றும் கூட அடித்தட்டு மக்களிடையே இவரது பிம்பம் செல்வாக்குடன் இருக்கிறது. ‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்…’ என்கிற பாடலின் மூலம் அவர் வைத்த கோரிக்கையை மக்கள் நிஜமாக்கிக் காட்டினார்கள். இவரின் அரசியல் எதிரியாக கருதப்பட்ட கருணாநிதியை முழுதாக ஓரங்கட்டி, ஏறத்தாழ 13 வருடங்கள் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த பெருமை எம்.ஜி.ஆருக்கு வாய்த்தது.

ஆனால் எம்.ஜி.ஆரின் ஆட்சி நடைமுறையில் இருந்த காலக்கட்டங்களில் அடித்தட்டு மக்கள் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தார்களா? அவர்களின் பெரும்பாலான துயரங்கள் தீர்க்கப்பட்டனவா? இது தொடர்பாக எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதிய ‘பிம்பச்சிறை’ என்கிற நூலை வாசித்துப் பார்க்கலாம். எம்.ஜி.ஆர் என்கிற பிம்பம் படிப்படியாக திட்டமிட்டு வளர்ந்ததையும், அதிகாரத்தில் அமர்ந்த பிறகு நிகழ்ந்த குளறுபடிகளும் நிர்வாக சீர்கேடுகளும் புள்ளிவிவரங்களோடு அந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. நிழலை நிஜமாக நம்பினதற்காக தமிழக மக்கள் தந்த விலை இது. 

எம்.ஜி.ஆர் என்கிற புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பல பூனைகள் பின்னர் கிளம்பின. சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர் என்று இந்தப் பட்டியல் மிக நீண்டது. எம்.ஜி.ஆர் தந்த ஆதரவின் பின்புலத்தில் இதில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா மட்டுமே. அவருக்கு என ஓர் இரும்பு ஆளுமையையும் பல அடாவடிகளின் மூலம் வளர்த்துக் கொண்டார். ஆனால் மற்றவர்கள் எல்லாம் சூடான பாலில் வாய் வைத்த பூனையைப் போல மறுபடியும் சினிமாத் துறைக்கே அலறியடித்துக் கொண்டு திரும்பி ஓடினார்கள். விஜய்காந்த் போன்றவர்கள் திரிசங்கு சொர்க்கம் போல இடையில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்கள். என்றாலும் இந்த வரிசை ஓய்வதாக இல்லை. அரசியல் அதிகாரத்திற்குள் நகர சினிமா என்கிற குறுக்கு வழி எளிதாக இருக்கும் என்கிற கற்பனையில் நேற்று நடிக்கத் துவங்கிய இளம்நடிகர் கூட காமிராவை நோக்கி வீர வசனங்கள் பேசும் நகைச்சுவைகளும் பெருகத் துவங்கி விட்டன.

ஆனால் நிழலுக்கும் நிஜத்திற்குமான வித்தியாசத்தை பொதுமக்கள் இன்று உணர ஆரம்பித்து விட்டார்கள். முன்பெல்லாம் சண்டைக்காட்சிகள் என்றால் அது தொடர்பான படப்பிடிப்பை ஸ்டூடியோவிற்கு உள்ளே ரகசியமாகத்தான் வைத்துக் கொள்வார்களாம். ஹீரோ தாவுவதையும் பறப்பதையும் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு இது சார்ந்த ரகசியங்கள் புலப்பட்டு, சினிமா மீதும் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீதும் அவர்களுக்கு இருக்கும் கவர்ச்சி குறையக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. ஆனால் பெரும்பாலான படப்பிடிப்புகள் இன்று வெளிப்புற இடங்களில்தான் நடைபெறுகின்றன. கிராஃபிக்ஸ் முதற்கொண்டு சினிமாவின் பல நுணுக்கங்களை, அதிலுள்ள பிழைகளை பார்வையாளர்களே அலசத் துவங்கியிருக்கிறார்கள். இவற்றில் சித்தரிக்கப்படும் சாகசங்கள் பெரும்பாலும் போலியானவை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. நாயக நடிகர்களின் மீதான கவர்ச்சி குறைவதற்கு இது போன்ற காரணங்கள் முக்கியமானதாக அமைந்திருக்கின்றன. இந்தச் சூழலில் இன்னொரு எம்.ஜி.ஆர் உருவாவது இனி சாத்தியமேயில்லை என்றுதான் தோன்றுகிறது.

**

சமீப காலத்திய தமிழக அரசியல் சூழலில் ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடத்தை குறிவைத்து மறுபடியும் சில நடிகர்கள் அரசியல் களத்திற்குள் குதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவற்றில் பிரதானமானவர் ரஜினிகாந்த். ‘வருவேன், ஆனா வர மாட்டேன்’ என்கிற மதில் மேல் பூனை கதையாக, அரசியலுக்குள் நுழைவதாக ரஜினிகாந்த் கூறிக் கொண்டிருக்கும் புனைவிற்கான வயது ஏறத்தாழ 25 ஆண்டுகள். மாறி மாறி அரசாண்ட இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியால் சலிப்பும் வெறுப்பும் கொண்டிருக்கும் தமிழக மக்கள், மாற்றத்திற்காக அல்லாடிக் கொண்டிருக்கும் போது இந்த ‘வருவேன், வரமாட்டேன்’ விளையாட்டை இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அவர் நிகழ்த்திக் கொண்டிருப்பது நிச்சயம் முறையல்ல. தன்னுடைய நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாக தெரியப்படுத்தாமல் சூழ்நிலைக்கு ஏற்ப ஜாக்கிரதையாக விளையாடிக் கொண்டிருப்பதும் ஒருவகையில் மக்களுக்கு செய்கின்ற துரோகம்தான். இது மட்டுமல்லாமல், இந்த ‘மதில் மேல் பூனை’ கதையாடலை தன்னுடைய திரைப்படக்காட்சிகளுக்கான முதலீடாகவும் மாற்றிக் கொண்ட சாமர்த்தியசாலிதான் ரஜினிகாந்த். ‘நான் பாட்டுக்கு என் வழியில் போயிட்டிருக்கேன்.. என்னை சீண்டாதீங்க’ என்று புனைவுப் பாத்திரங்களிடம் வீராவேசமாக பேச, மக்கள் அந்தப் பாவனையைப் புரிந்து கொண்டு பலமாக கைத்தட்டி மகிழ்ந்தார்கள். இப்படி சில வருடங்கள் அவரது சினிமா வண்டி ஓடிக் கொண்டிருந்தது.

எம்.ஜி.ஆரைப் போல தன் திரைவாழ்க்கையை ரஜினி திட்டமிட்டு அமைத்துக் கொள்ளவில்லை. அவ்வாறு தீர்மானிக்கும் செல்வாக்கு துவக்க காலக்கட்டங்களில் அவரிடம் இல்லாமலிருந்தது. வில்லன் பாத்திரங்களின் மூலம் வெற்றியடைந்து நாயகராக பதவி உயர்வு பெற்றாலும் கூட, குடிப்பது உள்ளிட்ட காட்சிகளில் அவர் நடிக்கத் தயங்கவில்லை. எம்.ஜி.ஆரைப் போல தன்னை ஒழுக்கவாதியாகவும், நேர்மறை பிம்பமாகவும் சித்தரித்துக் கொள்ள ரஜினி அதிகம் மெனக்கெடவில்லை. திரைக்கு வெளியிலும் தன்னுடைய பிம்பம் குறித்தான கவலை அவருக்கு இல்லை. ஒருவகையில் அவருடைய சிறப்பு அம்சங்களில் ஒன்றாக இதுவே பேசப்பட்டது.

வருங்காலத்தில் தானொரு ‘சூப்பர் ஸ்டார்’ ஆவோம் என்கிற கற்பனையோ எதிர்பார்ப்போ ரஜினிக்கு இல்லை. இதை வெளிப்படையாகவே பல நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார். என்றாலும் காலம் இந்த தங்க கீரிடத்தை அவர் தலையில் வைத்தது. ரஜினியின் கடுமையான உழைப்பும் இதற்கு காரணமாக இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ‘தானுண்டு தன் நடிப்புண்டு’ என்றிருந்த ரஜினியை அரசியல் உள்ளே இழுக்கும் என்று கற்பனை செய்திருப்பாரா என்று தெரியவில்லை என்றாலும் இது எல்லா பிரபலங்களுக்கும் நேரக்கூடிய விபத்துதான்.

ஒரு சராசரி நபருக்கு, அரசியல் மீது இருக்கக்கூடிய பொதுவான கோபங்களையும் கிண்டல்களையுமே அவர் திரைப்படத்தின் பாடல்களும் காட்சிகளும் ஒரு காலக்கட்டத்தில் பிரதிபலித்தன. குரு சிஷயன் திரைப்படத்தில் வரும் ‘நாற்காலிக்கு சண்டை போடும்’ பாடல் ஓர் உதாரணம். ‘எனக்கு கட்சியும் வேண்டாம், கொடியும் வேண்டாம்’ என்றெல்லாம் கூட தன் அரசியல் ஒவ்வாமையை வெளிப்படையாக பதிவு செய்தவர். மக்களிடம் பிரபலமும் செல்வாக்கும் கொண்டவர்களின் மீது அரசியல்வாதிகளுக்கு ஒருபுறம் ஈர்ப்பும் இன்னொரு புறம்எரிச்சலும் வருவது இயற்கை. ஒன்று அவர்களை வளைக்கப் பார்ப்பார்கள் அல்லது உடைக்கப் பார்ப்பார்கள்.

அந்த வகையில் அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவிற்கும் ரஜினிகாந்த்திற்கும் உரசல்கள் ஆரம்பித்தன. காவல்துறையினர் ரஜினியின் காரை போயஸ் கார்டனின் வெளியில் நிறுத்தி விசாரணை செய்தார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ரஜினி தன் திரைப்படங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசிய அரசியல் விமர்சனங்கள், வசனங்கள் ஆளுங்கட்சியை எரிச்சலூட்டியதாகவும் கூறப்படுகிறது. ‘அண்ணாமலை’ திரைப்படத்தில் துவங்கிய இந்த உரசல், பாட்சா திரைப்படத்தின் வெற்றிவிழாவில் பெரிய சர்ச்சையாக மாறியது. மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதையொட்டி விழா மேடையில் இதை ரஜினி காரமாக விமர்சிக்க, படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகி பதவியை இழந்தார். இதன் இடையில் பாமக கட்சியோடு ஏற்பட்ட உரசலில் அந்தக் கட்சிக்காரர்கள் ‘பாபா’ திரைப்படத்தின் படப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய நகைச்சுவையும் நிகழ்ந்தது.

இதனால் பல்வேறு வகையில் எரிச்சலுக்கு உள்ளான ரஜினி, 1996-ல் நிகழ்ந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக – தாமக கூட்டணிக்கு ஆதரவாக குரல் தந்தார். ‘ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது’ என்று அவர் ஆவேசமாக கூறியதை, தொலைக்காட்சிகளில்  மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டது திமுக.  இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு, அப்போதைய ஆளுங்கட்சியின் மீது பொதுமக்கள் சலிப்பும் கோபமும் கொண்டது பிரதான காரணம் என்றால், ரஜினியின் ஆதரவும் ஒரு குறிப்பிடத்தக்க பங்காக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பிறகு நிகழ்ந்த தேர்தல்களில் ரஜினியின் ‘வாய்ஸ்’ பெரிதும் எடுபடவில்லை. இதை உணர்ந்த ரஜினியும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நேரடி ஆதரவு தராமல் ‘கழுவிய நீரில் நழுவிய மீனாக’ இருந்தார். மறுபடியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது ஒரு விழா மேடையில் அவரை ‘தைரியலட்சுமி’ என்று புகழவும் ரஜினி தயங்கவில்லை.

தமிழக அரசியலுக்கும் ரஜினிக்கும் இடையில் நிகழ்ந்த இந்தச் சம்பவங்களை விவரமாக எழுதுவற்கான காரணம் இருக்கிறது. ரஜினி அரசியல் பாதைக்குள் தற்செயலாக வந்து விழுந்ததற்கான தடயங்கள் இவை. மற்றபடி பொதுமக்களின் பிரச்சினைகளைப் பற்றிய பிரத்யேகமான கருத்தோ, பார்வையோ, அக்கறையோ அவரிடம் எப்போதும் இருந்ததில்லை. திரைத்துறையினர் நிகழ்த்தும் போராட்டங்களில் மட்டும் கட்டாயத்திற்காக கலந்து கொள்வார். காவிரி நீர் பிரச்சினைக்காக நிகழ்ந்த ஒரு போராட்டத்தில் நடிகர் சங்கத்தோடு இணையாமல் தனியாக உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ‘என் வழி, தனி வழி’ என்கிற அவருடைய ‘பஞ்ச்’ வசனத்தை இப்படித்தான் நடைமுறையில் நிரூபிக்க வேண்டுமா?

‘நதிநீர் இணைப்பிற்காக ரூ.ஒரு கோடி தருகிறேன்’ என்று அவர் அறிவித்ததும் பரபரப்பானது. இந்தியாவின் நதிகளை இணைப்பதென்பது பல நூறு கோடிகளை கோரி நிற்கும் திட்டம் என்பதால் எளிதில் சாத்தியமில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, இயற்கையான முறையில் பாயும் நதிகளை வலுக்கட்டாயமாக இணைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பல லட்சம் மக்கள் தங்களின் வாழ்விடங்களை இழக்க வேண்டியிருக்கும் என்றும் சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் ஆராயாமல் ரஜினி அறிவித்தது ஒரு ‘ஸ்டண்ட்’ ஆகவே படுகிறது. அவருடைய குரல் பலரால் கவனிக்கப்படும் போது அதுபற்றிய பொறுப்பில்லாமலும் ஒரு பிரச்சினையின் ஆழத்தை அறியாமலும் சினிமாவில் பேசும் ‘பஞ்ச்’ வசனங்களைப் போன்று நிஜ வாழ்விலும் சொல்லுபவரால் என்ன மாதிரியான திட்டங்களை மக்களுக்கு சாத்தியப்படுத்த முடியும்?

நேரடி அரசியலுக்குள் வருவதற்கான எண்ணம் ரஜினிக்கு இப்போது கூட இல்லை என்றே தோன்றுகிறது. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் ஆடிய நாடகத்தையே சமகாலத்திலும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறார். அரசியல் கட்சியை துவங்குவதற்கான ஏற்பாடுகளை அவர் தெரிவித்த போது வழக்கம் போல் ஊடகத்தில் அந்தச் செய்தி தீ போல பற்றிக் கொண்டது. ஒரு செய்தியாளர் ‘உங்கள் கட்சியின் கொள்கை என்ன?’ என்கிற ஆதாரமான கேள்வியை முன்வைக்கும் போது கூட அவரால் தெளிவாக பதிலளிக்க முடியவில்லை. இந்தச் சம்பவத்தைப் பற்றி ‘தலையே சுத்திடுச்சு’ என்று வேறு இடத்தில் சொல்லி சிரித்துக் கொள்கிறார். இதற்காக மக்களும் அவரைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்பதை அவர் அறிகிறாரா இல்லையா என்று தெரியவில்லை.

‘இன்னமும் கட்சியே துவங்கவில்லை, அதற்குள் கொள்கையைப் பற்றி என்ன சொல்ல முடியும்?” என்று அவர் வெள்ளந்தியாக பேசுவதிலிருந்து கதையே இல்லாமல் சினிமா படப்பிடிப்பிற்கான பூஜையைப் போட்டு விடுவது போல, கட்சியின் கொள்கைகள், தொலைநோக்குத் திட்டங்கள், வாக்குறுதிகள் என்கிற எந்தவொரு அடிப்படையான விஷயங்களும் இல்லாமல் விளையாட்டு போல கட்சியைத் துவங்கவிருக்கிறாரா என்று தோன்றுகிறது. தனது ஒவ்வொரு புதிய சினிமா வெளியாவதற்கு முன்பும் படம் ஓடுவதற்காக செயற்கையாக ஒரு பரபரப்பைக் கிளப்பி விட்டு விடுகிறார் என்று பெரும்பாலோனார் கருதுகிறார்கள் இதற்கான முகாந்திரங்கள் அவருடைய தொடர்ச்சியான செய்கைகளில் தெரிகின்றன. ‘போர் வரும் போது பார்க்கலாம்’ என்று ரசிகர்களை உசுப்பி விட்டு விட்டு அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள சென்று விடுபவரை மக்களின் பிரதிநதி என்று கூட அல்ல, ஒரு கட்சியின் தலைவர் என்று கூட சொல்ல முடியவில்லை.

காவிர் நீர் விவகாரத்திற்காக, ஐபிஎல் போட்டியை எதிர்த்து நிகழ்ந்த போராட்டத்தின் போதும் சரி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு  விவகாரத்தின் போதும் சரி, ரஜினியின் அசலான ‘வலதுசாரி’ முகம் கொடூரமாக வெளிப்பட்டது. ‘சீருடை அணிந்த காவலர்களை அடிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என்று காவல்துறையினருக்கு பரிந்து பேசினார். இது ஒருவகையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால் காவல்துறையால், போராட்டக்காரர்கள் மீதும், காவல்நிலையத்தில் புகார் தர வருகிறவர்கள் மீதும், ஏன் அன்றாடம் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள், ஊழல், லஞ்சம், பொய் வழக்குகள் என்று நீளும் பல மோசடிகளைப் பற்றி அவர் எப்போதாவது பொதுமக்களின் குரலாக நின்று பேசியிருக்கிறாரா?

ஸ்டெர்லெட் ஆலையை மூடுவதற்காக நிகழ்ந்த மக்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு ‘சமூக விரோதிகள்’தான் காரணம் என்று ஆவேசமாக பேட்டியளித்தார் ரஜினிகாந்த். காவல்துறையினர் தாக்கப்பட்டதற்காக இந்த இடத்திலும் கண்டனம் தெரிவித்தார். ஏறத்தாழ நூறு நாட்கள் அமைதியாக நிகழ்ந்த போராட்டத்தை திசை திருப்ப அல்லது கறை படிய வைக்க, அரசு மற்றும் கார்ப்பரேட் கூட்டணியின் சதியில் சில கைக்கூலிகள் போராட்டத்தில் ஊடுருவி வன்முறையை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் பல அப்பாவி மனிதர்களின் உயிர் பறி போயிருக்கும் நேரத்தில் அதைப் பற்றி பிரதானமாக பேசாமல் ‘சமூக விரோதிகள்’ என்று அசந்தர்ப்பமாக பேசியிருப்பதின் மூலம் மக்களின் உணர்வுகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகிறோம் என்கிற பிரக்ஞை கூட அவருக்கு இல்லை.

அடித்தட்டு மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு எவ்வகையிலும் உதவாத ‘ஆன்மீக அரசியல்’ என்றொரு கொள்கையை முன்வைப்பது, முன்னாளில் ‘சோ’வும் இன்னாளில் ‘குருமூர்த்தியும்’ ரஜினியின் அரசியல் ஆலோசகர்களாக இருந்தார்கள் என்று சொல்லப்படுவது, ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு சாதகமாகப் பேசுவது … ரஜினியின் இந்த நிலைப்பாடுகளையெல்லாம் கூட்டி கழித்துப் பார்த்தால், பாஜகவின் செல்வாக்கை தமிழகத்தில் வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் மறைமுக பிம்பம் ரஜினிகாந்த் என்று சொல்லப்படுவதில் உண்மையிருக்குமோ என்று தோன்றுகிறது.

ஒரு திரைப்படத்தை மூன்று மணி நேரம் பார்க்கும் ஒரு சராசரி ரசிகன் கூட அதில் அழுத்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அரசியல் உணர்வின் பால் கவரப்படுவான். அது குறித்து சிந்திக்கத் துவங்குவான். அடித்தட்டு மக்களின் ‘நில உரிமைக்கான போராட்டத்தை’ அடிப்படையாகக் கொண்ட ‘காலா’ திரைப்படத்தில் பல நாட்கள் நடித்திருந்தும் அதில் பேசப்பட்டிருக்கும் அரசியலால் ரஜினி துளி கூட ஈர்க்கப்படவில்லை என்றே தெரிகிறது. ‘எல்லாத்துக்கும் போராட்டம்னா தமிழ்நாடு சுடுகாடாயிடும்’ என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் எரிச்சல்பட்டது அவருடைய ‘வலதுசாரி’யின் முகத்தை அம்பலப்படுத்துகிறது.. அவர் நடித்த திரைப்படத்தின் கருத்தாக்கத்திற்கு அவரே முரணாக நிற்கிறார். திரைக்குள் ஒரு ரஜினியும், திரைக்கு வெளியே வேறு ஒரு ரஜினியுமாக விலகி நிற்கும் ‘டபுள் ஆக்ஷனை’ அவரால் சிறப்பாக செய்ய முடிகிறது.

ரஜினிகாந்த் தனிப்பட்ட வகையில் சில நற்பண்புகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் அரசியல் தளத்தில் இயங்குவதற்கான துளி தகுதி கூட அவரிடம் தென்படவில்லை. அரசியலில் நுழைவதையே இருபத்தைந்து ஆண்டுகளாக மேலாக குழப்பிக் கொண்டிருப்பவரிடம், துரதிர்ஷ்டவசமாக அரசியல் அதிகாரம் கிடைத்து விட்டால் மக்களுக்கான திட்டங்கள் எல்லாம் இந்தக் குழப்பத்திலேயே தள்ளாடி நின்று விடும். ‘எப்போது அவர் அரசியலுக்கு வருவார்?’ என்று கொலைவெறியுடன் காத்திருக்கும் ரசிகர் படையிடம் அதிகாரப் பங்கீடு கிடைத்தால் முன்னாள் அரசியல்வாதிகள் அடித்த கொள்ளையையே தொடர்வதற்கான சாத்தியங்கள் அதிகம். இந்த வாய்ப்பிற்காகத்தான் ரஜினியின் அரசியல் சூதாட்டத்தை பல வருடங்களாக அவர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திரைத்துறையில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அரசியலைப் பொறுத்தவரையில் அவர் ஒரு மாயமான். அவரை நம்பி பின்தொடர்ந்து சென்றால் இழப்பு தமிழக மக்களுக்குத்தான். இதை பெரும்பாலான சதவீதத்தினர் அறிந்தே வைத்திருக்கிறார்கள். என்றாலும் தங்களுக்கான மீட்பரை எதிலும் எங்கும் தேடும் அப்பாவிகள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. 

('பேசும் புதிய சக்தி - ஜூலை 2018 இதழில் பிரசுரமானது)

suresh kannan

Monday, December 31, 2018

ரஜினி: ‘சந்திரமுகி’ முதல் ‘பேட்ட’ வரை (இந்தியா டுடே கட்டுரை)





திரைப்பட நடிகர் என்றால் சிவந்த நிறமும் வசீகரமான முகத்தோற்றமும் இருக்க வேண்டும் என்றிருந்த காலத்தில் அவை சார்ந்த தடைகளை உடைத்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்த ரஜினியின்  சினிமா பயணத்தில் ஆச்சரியமான பல மேடுகளும் அதிர்ச்சிகரமான சில பள்ளங்களும் உண்டு. இந்த நோக்கில் ‘சந்திரமுகி’ திரைப்படம் முதல் வெளிவரவிருக்கிற ‘பேட்ட’ வரையான ரஜினி சினிமாக்களின் சுருக்கமான வரலாற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

ரஜினியின் சினிமா பயணத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த திரைப்படமாக 2005-ல் வெளிவந்த ‘சந்திரமுகி’யை சொல்லலாம். அந்த வருடத்திய நிலைமையின் படி ஒரு திரையரங்கில் அதிக நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை புரிந்த தென்னிந்திய திரைப்படமாக ‘சந்திரமுகி’ இருந்தது. சென்னை, சாந்தி தியேட்டரில் 890 நாட்கள் தொடர்ந்து ஓடி, தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸின்’ முந்தைய சாதனையை முறியடித்தது.

இந்த வெற்றி ரஜினியின் தரப்பிற்கு வழக்கத்தை விடவும் கூடுதல் மகிழ்ச்சியை தந்திருக்கக்கூடும். ஏனெனில், பலத்த எதிர்பார்ப்பிற்குப் பிறகு வெளியான முந்தைய திரைப்படமான ‘பாபா’ (2002) மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தது. ‘சூப்பர் ஸ்டார்’ என்னும் சிம்மாசனத்தில் ரஜினி அழுத்தமாக உட்கார்ந்த பிறகு அவருடைய அகராதியில் தோல்வி என்பதே பெரும்பாலும் இல்லாமல் இருந்தது. ஹாலிவுட் திரைப்படமான ‘பிளட் ஸ்டோன் (1988), ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்” (1991), சொந்த தயாரிப்பான வள்ளி (1993) போன்று அரிதான சில திரைப்படங்கள் முன்பு தோல்வியைச் சந்தித்திருந்தாலும் உச்ச நட்சத்திரமாக ரஜினியின் பிம்பம் உறுதிப்பட்ட பிறகு அவருடைய வணிகச் சந்தை பெரும்பாலும் ஏறுமுகமாகவே இருந்தது. ஒரு ரஜினி திரைப்படத்தின் வசூல் சாதனையை அவரது அடுத்த திரைப்படமே முறியடிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த வெற்றிகரமான பயணத்தின் மிகப் பெரிய கரும்புள்ளி என்று ‘பாபா’வைச் சொல்லலாம்.

வழக்கமான வணிக அம்சங்கள் பெரும்பாலும் இல்லாதது, அந்த திரைப்படம் விவரித்திருந்த ‘ஆன்மீகம்’, சுவாரசியமற்ற திரைக்கதை போன்ற காரணங்களால் ‘பாபா’ திரைப்படத்தை ரசிகர்கள் ரசிக்கவில்லை. மட்டுமல்லாமல் ரஜினியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றிய உறுதியான சமிக்ஞை இந்த திரைப்படத்தில் இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தது மீண்டும் நிகழாததால் மனதளவில் சோர்ந்து போனார்கள். இந்த திரைப்படத்தினால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி ஈடுகட்டும்படியான சூழல் உருவாயிற்று.

தனது வணிக பிம்பத்தில் ஏற்பட்ட இந்த ஓட்டையை சரிக்கட்டுவதற்காக அடுத்த காலடியை கவனமாக எடுத்து வைத்தார் ரஜினி. 1993-ல் வெளியாகிய ‘மணிச்சித்ரதாழு’ என்கிற திரைப்படத்தையொட்டி ‘ஆப்தமித்ரா’ என்கிற கன்னட திரைப்படத்தை அப்போதுதான் இயக்கி முடித்திருந்தார் இயக்குநர் வாசு. அதை தமிழில் கொண்டு வருவதற்காக திட்டமிட்டார் ரஜினி. ஒவ்வொரு வணிக அம்சமும் இதில் மிக கவனமாக சேர்க்கப்பட்டன.

நகைச்சுவை நடிகர் வடிவேலு அப்போது உச்சத்தில் இருந்தார். ‘வடிவேலுவின் கால்ஷீட்டை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்’ என்று ரஜினி சொன்ன தகவல், ‘சந்திரமுகி’ வெற்றி விழா மேடையில் தெரிவிக்கப்பட்டிருந்ததில் இருந்து, இந்த திரைப்படத்தின் வெற்றியில் ரஜினி மிக ஜாக்கிரதையாக இருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ‘ஸ்பிலிட் பர்சனாலிட்டி’ என்னும் உளக்குறைபாட்டை வைத்து உருவாக்கப்பட்ட மலையாள சினிமாவின் ஆன்மாவை கொன்று புதைத்தாலும் ‘சந்திரமுகி’யில் இருந்த வணிக அம்சங்கள், ஜோதிகாவின் அசத்தலான நடிப்பு, வித்யாசாகரின் அருமையான பாடல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் இத்திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. ‘வேட்டையன்’ என்கிற எதிர்மறையான பாத்திரத்தில் பழைய ‘ரஜினி’யை பார்க்க முடிந்தது.

இதற்குப் பிறகு ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘சிவாஜி’ (2007)  திரைப்படம், ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது. இதன் பின்னர் மீண்டும் இன்னொரு ரீமேக் முயற்சியில் இறங்கினார் ரஜினி. ‘கதபறயும் போள்’ என்கிற மலையாள திரைப்படத்தை தமிழில் கொண்டு வரத் திட்டமிட்டார். ‘சந்திரமுகி’ போலவே இதுவும் வெற்றியடையக் கூடும் என்று அவர் நினைத்திருக்கலாம். மலையாளத்தில் சீனிவாசன் ஏற்றிருந்த பாத்திரத்தில் பசுபதி நடித்தார். புகழ்பெற்ற நடிகராக மம்முட்டி ஏற்றிருந்த பாத்திரத்தை தமிழில் ரஜினி ஏற்றார். இந்தத் திரைப்படம், அடிப்படையில் ஒரு சராசரி நபருக்கும் அவரது இளமைப்பருவ நண்பராக இருந்து பின்னர் ‘சூப்பர் ஸ்டார்’ நடிகராக ஆனவருக்கும் இடையிலான உறவின் தத்தளிப்பைச் சித்தரிக்கும் திரைப்படம். சராசரி நபரின் கோணத்திலேயேதான் பெரும்பாலான திரைப்படமும் நகரும். மலையாளத்தில் மம்முட்டி சில காட்சிகளில் மட்டுமே வருவார். ஆனால் இது தமிழில் உருவாக்கப்படும் போது ரஜினிக்காக பல காட்சிகளும் வணிக அம்சங்களும் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக இன்னொரு மலையாள சினிமாவை கொத்து பரோட்டா போட்ட புகழ் இயக்குநர் வாசுவிற்கு கிடைத்தது.

இந்தத் திரைப்படமும் தோல்வியடையவே மீண்டும் ஷங்கரிடம் அடைக்கலம் புகுந்தார் ரஜினி. துவக்கத்தில் கமலுக்காக உருவாக்கப்பட்ட ‘எந்திரன்’ திரைப்படம் சாத்தியமாகாமல் போகவே ரஜினிக்காக மாற்றங்கள் செய்யப்பட்டன. பொதுவாக ஒரு வெகுசன திரைப்படத்தை உயர்தரத்தில் உருவாக்க விரும்பும் ஷங்கர், அதே சமயத்தில் சராசரி ரசிகனுக்குரிய பல அம்சங்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். ஹாலிவுட்டிற்கு பழைய சமாச்சாரம் என்றாலும், ஒரு ரோபோட்டிற்கும் பெண்ணிற்கும் இடையிலான காதல் என்பது தமிழ் சினிமாவிற்குப் புதியது என்பதாலும் ஷங்கரின் திறமையான இயக்கம் காரணமாக ‘எந்திரன்’ வணிகரீதியாக வெற்றி பெற்றது.

அடுத்ததாக மீண்டும் இன்னொரு தோல்விப்படம். ரஜினியின் மகள் செளந்தர்யாவின் இயக்கத்தில் ‘சுல்தானாக’ துவங்கி பிறகு கைவிடப்பட்டு ‘ராணா’வாக பரிணமித்து ரஜினியின் உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் அதுவும் கைவிடப்பட்டு பிறகு ‘கோச்சடையனாக’ உருவானது. ஹாலிவுட்டைப் போன்று அனிமேஷன் திரைப்படங்களுக்கென்று பிரத்யேகமான ரசிகர்களோ, வணிகச்சந்தையோ இந்தியாவில் இல்லை. சரியாக திட்டமிடப்பட்டிருந்தால் ‘கோச்சடையான்’ இந்தப் போக்கின் துவக்கப் புள்ளியாக அமைந்து ஒரு சிறந்த முன்னுதாரணமாக ஆகியிருக்கக்கூடும். வெற்றிப்பட இயக்குநரான ‘கே.எஸ்.ரவிக்குமார்” பிறகு வந்து இந்தத் திட்டத்தில் இணைந்தாலும், பல்வேறு குழப்பங்களால் ‘கோச்சடையான்’ தோல்விப்படமாக அமைந்தது. ரஜினியின் குடும்பம் நிதி சார்ந்த சில வழக்குகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது.

தனது பிம்பத்தின் சரிவை சரிக்கட்டும் நெருக்கடியில் இருந்த ரஜினி, தனது அடுத்த திரைப்படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தனது ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமாருடன் மீண்டும் இணைந்தார். விளைவாக ‘லிங்கா’ உருவானது.  இந்தியாவிலுள்ள நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்கிற தம் விருப்பத்தை காவிரி நீர் விவகாரம் பற்றியெரிந்த ஒரு கணத்தில் தெரிவித்த ரஜினி, அந்தத் திட்டத்திற்காக கணிசமான நிதியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ‘லிங்கா’ திரைப்படமும் இது தொடர்பாக அமைந்தது. முல்லை பெரியார் அணை உருவானதற்கு பிரதான காரணமாக இருந்த ஜான் பென்னிகுயிக் என்கிற ஆங்கிலேயப் பொறியாளர் தொடர்பான வாழ்க்கைச் சம்பவங்களின் சாயல் இதன் திரைக்கதையில் இணைக்கப்பட்டது.

ஒரு வெகுசன திரைப்படத்திற்குரிய அம்சங்கள் ‘லிங்கா’வில் இருந்தாலும் தேய்வழக்கு பாணியில் அமைந்த காரணத்தினாலேயே வணிகரீதியான வெற்றியை அடையவில்லை. இந்தத் தோல்விக்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. உலக சினிமா உள்ளிட்ட மாற்று முயற்சிகளை பார்த்து வளர்ந்திருந்த இளைய தலைமுறை அப்போது பெருகி வந்திருந்தது. வெகுசன திரைப்படமென்றாலும் கூட அது வித்தியாசமாகவும் தரமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற மனோபாவம் அவர்களிடம் அதிகரித்தது. இதனாலேயே தேய்வழக்கு பாணியில் அமைந்த சினிமாக்களையும் அதன் காட்சிகளையும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து தீர்க்கும் பழக்கமும் பெருகியது. மேலும் திரையரங்கத்திற்கு வரும் பார்வையாளர்களின் பெரும்பான்மை சதவீதமாக இளைஞர்களாக இருப்பதால் ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாகவும் அவர்களே இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் வணிகரீதியான தோல்வி காரணமாக விநியோகஸ்தர்களின் கசப்புகளையும் ரஜினி தரப்பு எதிர்கொள்ள நேர்ந்தது.

ரஜினி தன் வயதை விட மிகக்குறைந்த நாயகிகளுடன் டூயட் ஆடுவதை அவரது ரசிகர்களில் சில சதவீதத்தினரே கூட விரும்பவில்லை. அமிதாப்பச்சனைப் பின்பற்றி ரஜினியும் தன் வயதுக்கேற்ற பாத்திரங்களிலும் கதைகளிலும் நடிக்க வேண்டும் என்கிற விருப்பமும் எதிர்பார்ப்பும் பரவலாக இருந்தது. இதுவும் ‘லிங்கா’வின் தோல்விக்கு ஒருவகை காரணமாக இருக்கக்கூடும்.


இந்தச் சூழலை ரஜினியும் உணர்ந்திருப்பார் என்று தோன்றுகிறது. அவரது அடுத்த திரைப்படமான ‘கபாலி’யில், வழக்கமான போக்கை கைவிட்டு வயதான டானாக நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல், பல வெற்றிப்பட இயக்குநர்கள் அவரது கால்ஷீட்டிற்காக காத்துக் கொண்டிருந்த போது ‘இரஞ்சித்’ என்கிற இளம் இயக்குநரிடம் ரஜினி தன்னை ஒப்படைத்துக் கொண்டது புதிய மாற்றங்களை தேடி அவர் நகர்கிறார் என்பதை உணர வைத்தது. இதில் முக்கியமானதொரு மாற்றமும் உண்டு. ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பூச வேண்டும்’ என்று நிலவுடமைச் சமுதாய பெருமிதங்களைப் பேசும் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த ரஜினி, ‘தலித்’ அரசியலை பிரதானமாக முன்வைக்கும் படத்தில் நடித்தது, அவரின் திரை பிம்பத்தில் உருவான முக்கியமான மாற்றம் என்று சொல்லலாம். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான அம்சங்களும் இருந்தன. இந்தச் சவாலை ரஜினி வெற்றிகரமாக தாண்டி வந்தார்.

‘கபாலி’யின் வெற்றியால் உற்சாகமடைந்த ரஜினி அடுத்த திரைப்பட வாய்ப்பையும் இரஞ்சித்திற்கே அளித்தார். ஒரு பெருநகரின் பூர்வகுடிகளை நிலமற்றவர்களாக ஆக்கி நகருக்கு வெளியே அப்புறப்படுத்தும் ‘தூய்மை அரசியலை’ காலா மையப்படுத்தியது. ஆனால் இது ரஜினியின் திரைப்படமாகவும் அல்லாமல் இரஞ்சித்தின் அரசியல் சினிமாவாகவும் அல்லாமல் இருந்ததால் இதை எப்படி ஏற்றுக் கொள்வது என்கிற குழப்பம் ரசிகர்களிடையே இருந்ததால் அதிக வெற்றியை அடையவில்லை.

தனது சமீபத்திய திரைப்படத்தை, கார்த்திக் சுப்பராஜ் என்கிற இளம் இயக்குநரிடம் ஒப்படைத்ததில் இருந்து இளம் இயக்குநர்களின் மூளைகளையே ரஜினி அதிகம் நம்ப விரும்புகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தானொரு தீவிரமான ரஜினி ரசிகன் என்பதை ‘பேட்ட’ திரைப்படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ் நெடுங்காலமாகவே கூறி வருகிறார். ஒரு நடிகரின் தீவிரமான ரசிகருக்கு சம்பந்தப்பட்ட நடிகரையே இயக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது சுவாரசியமான திருப்பம். ஒரு சராசரி ரஜினி ரசிகன் எதிர்பார்க்கும் விஷயங்களோடு, இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கும் போக்குகளின் கலவையாக ‘பேட்ட’ இருக்கக்கூடும்.

ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுவான பார்வையாளர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் 2.0. நீண்ட கால தயாரிப்பில் உள்ள இந்த திரைப்படம் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக வெளியாவதில் தாமதம் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் வணிகம் பல கோடிகளைத் தாண்டி சாதனை புரிவதற்கும் அதன் சந்தை வெளிநாடுகளில் வளர்ந்து விரிந்து கொண்டே போவதற்கும் ரஜினியின் திரைப்படங்களே பிரதான காரணமாக இருக்கின்றன என்பதை சில புள்ளிவிவரங்களின் மூலம் அறிய முடிகிறது.

**

ரஜினியின் அரசியல் நுழைவின் வரலாறு என்பது ஓர் அவல நகைச்சுவை நாடகத்திற்கான சிறந்த உதாரணம். ‘வரும்.. ஆனா வராது..’ என்கிற வசனத்திற்கேற்ப தன் அரசியல் வருகையை இத்தனை வருடங்களுக்கு இழுத்திருக்கக்கூடிய ஒரே நபராக ரஜினி மட்டுமே இருப்பார் என்று தோன்றுகிறது. அண்ணாமலை திரைப்படத்தில் இருந்த சில வசனங்கள், அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த ஜெயலலிதாவை கடுப்பேற்றதியதில் துவங்கிய உரசல், பா.ம.க.தலைவர் ராமதாஸூடன் தொடர்ந்து பற்றியெரியத் துவங்கியது. மாறி மாறி ஆண்ட இரண்டு திராவிடக் கட்சிகளின் மீதான அதிருப்தியும் மக்களிடம் பெருகியது. இதன் காரணமாக ரஜினி அரசியலில் நுழைந்து ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொதுசமூகத்தில் ஏற்பட்ட நம்பிக்கைத் தீயில், தனது நீண்ட கால மெத்தனத்தின் மூலம் ரஜினியே நீர் ஊற்றி அணைத்தார். இன்னமும் கூட இந்த அபத்த நாடகத்தை அவர் தொடர்ந்து கொண்டேயிருப்பது துரதிர்ஷ்டமானது.  தன் அரசியல் பிரவேசத்தின் மீது மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அதையும் தனது திரைப்படங்களில் காட்சிகளாகவும் வசனங்களாகவும் பயன்படுத்தி அதையும் ஒரு முதலீட்டாக்கிக் கொண்ட சாமர்த்தியம் ரஜினிக்கு இருந்தது.

சில பல விமர்சனங்கள் இருந்தாலும் ரஜினி ஒரு கவர்ச்சிகரமான ஆளுமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு சராசரி நபருக்கான முகத்தோற்றத்தைக் கொண்டவர், சினிமாத்துறையின் உச்சத்தை அடைந்து அதில் நீண்ட காலம் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதற்கான வாழும் உதாரணமாக இருப்பவர் ரஜினி. இன்னமும் கூட ரஜினி என்கிற பிம்பத்தின் மீதாக கவர்ச்சி பெரிதும் மங்கவில்லை. அவரது ஒவ்வொரு புதிய திரைப்படத்திற்கும் மீதும் எழும் எதிர்பார்ப்பு இன்னமும் குறைந்து விடவில்லை. காலத்தின் போக்கிற்கு ஏற்ப சினிமாவில் தன்னை தகவமைத்துக் கொள்வதில் ரஜினியின் தொலைநோக்கு திறமையை பல சமயங்களில் பிரமிக்க முடிகிறது.

மாறி வரும் போக்குகளினாலும் ரஜினி என்கிற குதிரையின் வேகம் சற்று சுணங்கினாலும் அது முற்றிலுமாக குறைந்து விடவில்லை. ஆனால் அரசியலைப் பொறுத்தவரை ஆமை வேகம் கூட இல்லை. நிஜத்திற்கும் நிழலிற்கும் வேறுபாடு அறியாத ரசிகர்கள் இருந்த காலக்கட்டங்கள் முடிந்து விட்டன. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு சினிமா, அரசியல் என்கிற இரட்டைச் சவாரியை கை விட்டு, தன்னுடைய பலமான சினிமாவில், பொருத்தமான பாத்திரங்களை ஏற்று நடித்தால் எஞ்சியிருக்கும் ரஜினியின் பிம்பம் மேலும் சேதமுறாமல் தப்பிக்கும். 

(இந்தியா டுடே - தமிழ் - ரஜினிகாந்த் சிறப்பிதழில் வெளியான கட்டுரையின் எடிட் செய்யப்படாத வடிவம்) - நன்றி: இந்தியா டுடே


Image Courtesy: original uploader

suresh kannan

Thursday, December 11, 2014

சிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்



நண்பர்களே,

ரஜினிகாந்த் நடித்து 2007-ல் வெளிவந்த சிவாஜி திரைப்படம் வெளியிடப்படும் தருணத்தில் எழுதப்பட்ட கட்டுரையிது. இந்த 2014-ன் இறுதியில் வெளியாகும் லிங்கா திரைப்படத் தருணத்திலும் இக்கட்டுரை பொருத்தமாக அமைந்திருப்பதாகவே கருதுகிறேன். 

***

அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ, பரபரப்பை ஏற்படுத்தவோ அல்லது ரஜினி ரசிகர்களை சங்கடத்திலோ, கோபத்திலோ ஆழ்த்துவதற்காகவோ இந்த பதிவு எழுதப்படவில்லை. அது என் நோக்கமும் கிடையாது. ஆபாச வசைச் சொற்களைக் கூட எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்த்திருந்தும் இந்தப்பதிவு எழுதப்படுவதின் நியாயத்தை, திறந்த மனதுடன் வாசிக்கும் எவரும் பதிவின் இறுதியில் உணர்வார்கள் என்று நிச்சயமாகவே நம்புகிறேன்.

()

தமிழில் திரைப்படங்கள் தோன்றும் போது அது அப்படியே நாடகத்தின் கூறுகளை, தாக்கங்களை முழுவதுமாக உள்வாங்கி பிரதிபலித்தது. காட்சியமைப்புகள், ஆடை அணிகலன்கள், அரங்க அமைப்புகள், இசைப் பாடல்கள் என்று நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஏதுமில்லை. சுருங்கக்கூறின் நாடகங்களின் சுருள்வடிவமே திரைப்படம் என்பதாக இருந்தது. காளிதாஸ் (1931) ஹரிச்சந்திரா (1932) சீதா கல்யாணம் (1933) தொடங்கி புராணங்களின் உபகதைகளை கொண்டு தமிழ்ச் சினிமா பயணித்தது. பின்பு எம்.கே.தியாகராஜ பாகவதர், (ஹரிதாஸ் - 1944) பி.யூ.சின்னப்பா, கிட்டப்பா போன்ற இசையும் நடிப்புத்திறமையும் இணைந்த நாயக நடிகர்களின் துணை கொண்டு வளர்ந்தது. இடையே விடுதலைப் போராட்டத்தின் எதிரொலியாக காலனியாதிக்கத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் (நாம் இருவர் - 1947) எதிர்த்து திரைப்படங்கள் தோன்றின.

ஏ.பி.நாகராஜன் போன்றோர்களின் புராண மறுஉருவாக்க படங்களும் (திருவிளையாடல் - 1965) கண்களைப் பிழிய வைக்கும் பீம்சிங்கின் மிகை உணர்ச்சிப் படங்களும் (பாசமலர் 1964) வெளிவந்தன. புராணப்படங்கள் தேய்ந்து போய் சமூகக் கதைகள் (நல்லவன் வாழ்வான்; கெட்டவன் வீழ்வான் என்பதை அடிச்சரடாகக் கொண்டு) பெரும்பாலான படங்கள் வெளிவந்தன. இதிலிருந்து மாறுபட்டு ஸ்ரீதர் (தேன்நிலவு 1961) கே.பாலச்சந்தர் (சர்வர் சுந்தரம் 1964; நாணல் - 1965) போன்றவை வெளியாகின. தமிழ்த்திரையுலகின் முதல் கலகக்குரலாக (அன்றைய சூழ்நிலையில்) கே.பாலச்சந்தரை குறிப்பிடுவேன். அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள் போன்ற திரைப்படங்கள், மக்களை கனவுலகிலிருந்து மீட்டு யதார்தத்தின் வெளிச்சத்திற்கு அழைத்து வந்த ஆரம்பப் புள்ளிகளாக அமைந்து சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தின.

()

1975-க்கும் 1980-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தை "தமிழ்த்திரையுலகின் பொற்காலம்" எனக்கூறலாம். பதினாறு வயதினிலே, சில நேரங்களில் சில மனிதர்கள் (1977), அவள் அப்படித்தான், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978) அழியாத கோலங்கள், உதிரிப்பூக்கள், நூல்வேலி, பசி, (1979), இவர்கள் வித்தியாசமானவர்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நிழல்க்ள், மழலை பட்டாளம், மூடுபனி, (1980) என்று களம், பின்னணி, திரைக்கதையமைப்பு, இசை போன்ற பிரதான துறைகளில் வித்தியாசமான அமைப்பை கொண்டு வந்திருந்தன. எல்லா காலகட்டத்திலும் வணிக சினிமா, ரசனை சார்ந்த சினிமா என்பது தொடர்ந்து கொண்டிருந்தாலும், இந்தக் காலகட்டத்திலும் பெரும்பான்மையான ரசனை சார்ந்த சினிமா உருவாகின. இதன் மூலம் சர்வதேச திரைப்படங்களைப் பற்றின தேடலும், விவாதங்களும், விழிப்புணர்வும் சாத்தியமாக்கியது. நல்ல திரைப்படங்களை மக்கள் ஏற்கிறார்கள் என்பதால் வித்தியாசமான முயற்சிகளை கொடுக்கும் துணிவு இயக்குநர்களுக்கு ஏற்பட்டது.

திரைவிமர்சகர்கள் தமிழ்த்திரையுலகின் வரலாற்றை எழுதும் போது இந்த காலத்தை ஏக்கப்பெருமூச்சுடன் நினைவு கூர்கிறார்கள். இந்தப் படங்கள் பொதுமக்களின் பரவலான கவனத்தைப் பெற்றதோடு வணிக ரீதியான வெற்றியையும் பெற்றன. இதே நிலை தொடர்ந்திருந்தால், தமிழ்த்திரையுலகத்தின் முகமே மாறிப் போய் மேற்கு வங்காளம், கேரளம் போன்ற மாநிலங்கள் பெற்றிருந்த ரசனை வளர்ச்சியை நாமும் பெற்றிருக்கக்கூடும்.

ஆனால் 1982-ல் ஏவி.எம்.எம். நிறுவனத்திலிருந்து வெளிவந்த "சகலகலா வல்லவன்" என்கிற திரைப்படத்தின் மாபெரும் வெற்றி இந்த வளர்ச்சியை அடியோடு மாற்றியது. உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்போடு இதை ஒப்பிடலாம். குறிப்பிட்ட படத்தின் வணிகரீதியான மிகப் பெரிய வெற்றி மேற்சொன்ன சூழ்நிலையை குரூரமாக குலைத்துப் போட்டது. ஆபாசம், வன்முறை, நாயக புகழ்ச்சி, மிகை உணாச்சி, பாசாங்கு என்று எல்லாவிதமான செயற்கைத்தனங்களுடன்தான் பிற்காலத்திய படங்கள் வெளிவந்தன. இடையிடையில் மாற்று முயற்சிகள் வந்தாலும் அவை பெரும்பான்மையான கவனத்தை ஈர்க்கவில்லை. தமிழ் சினிமாவின் முக்கியமான மறுமலர்ச்சிப் படமான "நாயகனை" (1987) உருவாக்கிய மணிரத்னம், பிற்பாடு "தளபதி" (1991) போன்ற வணிகரீதியான சினிமாவை கொடுக்க நேர்ந்தது. தரமான திரைப்படங்களை பார்த்து உள்வாங்கி வெளிவந்த திரைப்படக் கல்லூரி மாணவர்களும் (ஊழை விழிகள் - இதே போன்ற படங்களையே அளிக்க முடிந்தது. விக்ரமன் போன்றோரது படங்கள் மோசமான முன்மாதிரிகளாகவே இருந்தன.

()

இப்போதைய காலகட்டத்திற்கு திரும்புவோம். தொடர்ந்து "ஸ்டீரியோ டைப்" படங்களை பார்த்து சலித்துப் போனதும், சர்வதேச சினிமா குறித்து அறிவுஜீவிகள் தவிர்த்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு எழுந்ததாலும், ஊடக வளர்ச்சி காரணமாக சினிமாவின் தொழில்நுட்பம் குறித்து பாமரனும் அறிய முடிந்ததாலும் மக்கள் மாற்று முயற்சிகளை மெலிதாக வரவேற்றனர். காதல் என்று ஆரம்பிக்கிற பெயரில் நிறைய கண்ராவிப் படங்கள் வந்திருந்தாலும், பாலாஜி சக்திவேலின் "காதல்" திரைப்படம் (2004) ஒரு பெரிய ஆசுவாசமாக அமைந்தது. நல்ல திரைப்படங்களை மக்கள் வரவேற்பார்கள் என்கிற நம்பிக்கை இளம் இயக்குநர்களுக்கு பிறந்தது. இதனின் சமீபத்திய தொடர்ச்சியாக அழகிய தீயே, வெயில், மொழி, பருத்தி வீரன் என்று குறைவான வணிக சமரசங்களோடு படங்கள் வெளிவந்து வணிக ரீதியாக வெற்றியையும் பெற முடிந்திருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் முன் குறிப்பிட்ட பொற்கால சூழ்நிலையையும் தாண்டிச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கையை இந்தப் படங்கள் ஏற்படுத்தியிருக்கிறது. (வணிகரீதியான அம்சங்கள் குறைவாக இருந்தாலே, அது நல்ல படம் என்று நாம் பேச ஆரம்பித்திருப்பது துரதிர்ஷ்டவசமானதுதான் என்றாலும், நிஜமாகவே நல்ல படங்களை எடுப்பதற்கு இவைகளை ஆரம்ப முயற்சிகளாக கொண்டு வரவேற்கலாம்)

ஆனால் இந்த ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை சிவாஜி திரைப்பட வரவு குறித்த அதீத பரபரப்பு, முன்னர் குறிப்பிட்ட அதே மாதிரியான சீர்குலைவை ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சகலகலா வல்லவன் போன்றே சிவாஜியும் ஏவி.எம். நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது என்பதுதான் நகைமுரண். சினிமாப் பத்திரிகைகள் தொடங்கி ஜோதிடப் பத்திரிகைகள் வரை எதுவுமே "சிவாஜி"யைப் பற்றி எழுதாமலிருக்க முடியாது என்கிற அளவிற்கு இத்திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. (இதே போன்று முன்னர் பரபரப்பை ஏற்படுத்தின "பாபா"வின் கதியும் நினைவிற்கு வருகிறது). வேறெந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படத்தின் வணிக ரீதியான விற்பனையின் தொகை பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. ஆடியோ விற்பனையே 3 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எத்தனையோ வணிகரீதிப்படங்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கவில்லையா, சிவாஜி வருவதால்தான் ஆக்கப்பூர்வமான சூழ்நிலை மாறிவிடுமா? என்னய்யா அபத்தமாக இருக்கிறது? என்று உங்களில் சிலருக்கு தோன்றக்கூடும். ஏற்கெனவே குறிப்பிட்டது போல் நான் அஞ்சுவது இந்தப்படத்தின் பரபரப்பு குறித்தும், ஆர்ப்பாட்டம் குறித்தும்தான். ஒருவேளை இந்தப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றால், மீண்டும் வணிகரீதியான படங்களுக்கு மவுசு கூடி, வணிகரீதி இயக்குநர்கள் பிசியாகி விடுவார்கள். மாற்று முயற்சிகளின் பிரகாசம் மங்கிப் போய், நாளடைவில் தேய்ந்து போய்விடவும் வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். மீண்டும் இந்த சூழ்நிலை மலர எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ?


()

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வருடத்திற்கு சுமார் 1000 படங்கள் தயாரிக்கும் ஒரு தேசத்திலிருந்து சர்வதேச தரத்திற்கு இணையான படங்களின் சதவீதம் மிக மிகக்குறைச்சலே. ஆஸ்கருக்காக ஏங்கிப் போய், அது கிடைக்காத விரக்தியில், அது உலகத்தரம் அல்ல, அமெரிக்கத்தரம் என்று பேசுவது "சீசீ இந்தப் பழம் புளிக்கும்" என்கிற கதையைத்தான் நினைக்க வைக்கிறது. ஆஸ்கர் விருது கிடைப்பது ஒரு புறம், அதன் நாமினேஷன் பட்டியிலில் இடம் பெறுவதற்கே நாம் மல்லாட வேண்டியிருக்கிறதே? cannes film festival-ல் திரையிடுவதற்கு கூட பெரும்பான்மையான திரைப்படங்கள் லாயக்கில்லாதவை. இந்த நிலை குறித்து நாம் கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா? ஈரான் போன்ற கைக்குட்டை தேசங்கள் கூட சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க கவனிப்பை பெறும் போது நம் நிலை என்ன?

"கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி" என்று பழம்பெருமை பேசிக் கொண்டிருப்பதில் மாத்திரம் புண்ணியமில்லை. காலத்திற்கேற்ப நம் தரத்தையும் முன்னேற்றிக் கொள்ள வேண்டும். மக்களின் ரசனை மேம்பாடும், குறிப்பாக படைப்பாளிகளின் படைப்பும் மேம்பாடும் முக்கியமானவை. எனவேதான் சிவாஜி போன்ற அதிக பரப்பரப்பை ஏற்படுத்துகிற வணிக நோக்கமுடைய படங்களை தொடர்ந்து நாம் தோல்வியடைய வைப்பதன் மூலம், திரையுலகினரை சிந்திக்க வைத்து தரமான படங்கள் வெளிவர நாமும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

(மீள்பதிவு) 

suresh kannan

Monday, November 03, 2008

ரஜினியின் உளறல் பேச்சு வழக்கம் போல்



தமிழ்த்திரையுலகினர் தங்களுடைய வழக்கமான சம்பிரதாயத்தை மீண்டுமொரு முறை நிறைவேற்றியுள்ளனர் என்றுதான் தோன்றுகிறது. இன உணர்வோடு வீறுநடை போட்ட தமிழ்ச்சமூகமும் நயனதாரா வகையறாக்களை ஜொள்ளிட்டும் தங்களுடைய வருங்கால அரசியல் தலைவர்களின் உணர்சசிப் பெருக்கோடும் முழக்கங்களை கண்டு மெய்சிலிர்த்தும் திரும்பியுள்ளனர். தமிழ்ச்சினிமாக்களின் உலக சந்தையை கணக்கில் கொண்டு தங்களின் பிழைப்பிற்காவாவது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவானதொரு பாவனையை செய்ய பல நடிகர்களுக்கு கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாட்டு பிரச்சினைக்காக இங்கே ஏன் போராட வேண்டும் என்று அஜீத், அர்ஜூன் போன்றோர் சொன்னதாக ஏற்பட்ட வதந்தியையொட்டி ஈழத்தமிழர்கள் அஜீத்தின் சமீபத்திய படத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். உடனே கருப்புச் சட்டையை மாட்டிக் கொண்டு வந்த அஜீத் 'உடல் மண்ணுக்கு - உயிர் தமிழக்கு' என்ற அரதப்பழசான இற்றுப்போன ழுழக்கத்தை செத்துப் போன குரலில் சொல்லி விட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தார். "உங்க அரசியல்ல சினிமாக்காரங்கள இழுக்காதீங்க. ப்ளீஸ்'. அவ்வளவுதான் அவர் பேசினது. இலங்கைத்தமிழர்கள் குறித்தான அவர் பார்வையை தெரிந்து கொள்ள ஏற்கெனவே அவர் கொடுத்துள்ள பேட்டிகளைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். திரும்பவும் மேடையில் சொல்லியழ அவருக்கு 'தல' எழுத்தா என்ன?. ரஜினிகாந்த்தின் நாற்காலிக்கு ஆசைப்பட்டவரல்லவா? அப்படித்தான் பேசுவார் போலிருக்கிறது. என்றாலும் வணிகத்தையும் அரசியலையும் கலக்காதீர்கள் என்று வெளிப்படையாக சொன்ன அவரின் நேர்மையை பாராட்டியாக வேண்டும்.

யாருக்கும் புரியாது என்பதால் கமல் பேசுவது பற்றி பிரச்சினையில்லை. உணர்ச்சி வேகத்தில் உளறிக் கொட்டாமல் அறிவுப்பூர்வமாக பேசுவதால் அவர் பேச்சை யாருக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அபத்தமாக இருந்தாலும் எதையும் உணர்ச்சிகரமாக பேசுவதுதான் தமிழர்களுக்குப் பிடிக்கும். ரஜினி இதை நன்றாக புரிந்து வைத்துள்ளார். ஊடகங்கள் இவரின் உளறல்களை பிடல் காஸ்ட்ரோவின் 'வரலாறு நம்மை விடுதலை செய்யும்' என்ற முழக்கம் போல பிரதான இடமளித்து பிரசுரிப்பதின் அபத்தத்தை தாங்க முடியாமல்தான் இவர் பேசுவதை நானும் முக்கியத்துவம் அளித்து மறுக்க வேண்டியிருக்கிறது.

'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே'... என்று கருணாநிதி சொல்வதை ஆவலுடன் எதிர்பார்த்து விசிலடிக்கும் கழகக்கண்மணிகள் போல் 'என்னை வாழவைக்கும் அன்பு ரசிகர்களே' என்று ரஜினி சொன்னவுடன் புல்லரித்துப்போய் (அவரை வாழ வைப்பது இருக்கட்டும், நீ எப்போதடா வாழ்ந்தாய் என்று யாரும் கேட்க மாட்டார்களா) இது உணர்வு சார்ந்த போராட்டம் என்கிற உணர்ச்சி கூட இல்லாமல் விசிலடித்து கைத்தட்டி மகிழும் கூட்டத்தைக் கண்டால் வேதனையாக இருக்கிறது.

'இந்த விழா...' என்று ஆரம்பித்தவர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு நல்லவேளையாக 'உண்ணாவிரத போராட்டம்' என்று சுதாரித்துக் கொண்டார். அண்டை நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆதரவாக நடக்கும் ஓர் கூட்டத்திற்குப் போகிறோம் என்பது அவரின் ஆழ்மனதில் பதிந்திருந்தால் ஏதோ குறுந்தகடு வெளியீடு போல் விழா என்று ஆரம்பித்திருந்தது நிகழாமல் இருந்திருக்கும்தானே? கவனக்குறைவு என்று அவரின் ரசிகர்கள் சப்பைக்கட்டு கட்டினாலும். '30 ஆண்டுகளாலும் மேலாக போராடியும் வெற்றி பெற முடியவில்லை, நீங்கள் ஆம்பளைகளா?" என்பது அவரின் அடுத்த உதிர்ந்த முத்து. போர் என்கிற சமாச்சாரத்தை ஏதோ தாம் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு வில்லன்களை உதைக்கிறாற் போன்றதொரு விஷயம் என்று புரிந்து கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.

போர் என்பதின் வலியையும் வேதனையையும் நாம் எவ்வளவுதான் படித்தாலும், பார்த்தாலும் அனுபவிக்காமல் அதன் குரூரத்தை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. எனவேதான் யாராவது திரியை கொளுத்திப் போட்டால் அப்போதைக்கு எரிவதும் பின்பு அடங்கிவிடுவதுமாக இந்தப் பிரச்சினை தமிழக்கதில் எதிரொலிக்கிறது.

அங்கு கூடியிருந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்ச்சமூகமாகிய நமக்குமே இலங்கையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்கிற உண்மைச்சித்திரம் தெரியுமா என்பது கேள்விக்குறி. தீராநதியில் ஷோபாசக்தியின் பேட்டியைப் படித்தால் சகோதர இயக்கங்களை கொன்று குவிக்கிற போரை நிறுத்த வாய்ப்பிருந்தும் நிறுத்தாத புலிகளை குறை கூறுகிறார். ஷோபாசக்தியின் ஆளுமையை கட்டமைக்கிற முயல்கிற அ.மார்க்ஸின் போக்கு பற்றி அடுத்த இதழில் ஒரு எதிர்வினை வருகிறது. ஒரு காலகட்டத்தில் உணர்வுபூர்வமாகவும் நேர்மையாகவும் இந்தப்பிரச்சினையை கையாண்ட கருணாநிதி இன்று அரசியல் குளிர்காய பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். புலிகளின் மீதான நிலைப்பாட்டை பா.ம.க. சட்டென்று மாற்றிக் கொள்கிறது. தமிழர்களின் பிரச்சினையை விடுதலைப்புலிகள் ஆதரவு/எதிர்ப்பு என்ற பிரச்சினையாக மாற்றிவிடாதீர்கள் என்கிற தா.பாண்டியனின் குரல் தனித்து ஒலிக்கிறது.

பகுத்தறிவாளர்கள், முற்போக்குவாதிகள், ஜனநாயகவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொள்கிறவர்கள் உட்பட எல்லோரும் இனம் இனம் என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய ஜாதியை, மதத்தை, இனத்தை, எல்லைக்கோடுகளை கடந்துவருகிறவனே ஒரு உண்மையான முற்போக்குவாதியாய் இருக்க முடியும் என்பது என் புரிதல். தமிழர்களுக்காக மாத்திரமல்லாமல் அங்கு சாகிற சிங்களனுக்கும் சேர்த்து உலகெங்கிலும் ஆதிக்க சக்தியால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் நாம் துயரப்பட்டால்தான் உண்மையான மனிதர்களாவோம்.

suresh kannan

Tuesday, October 14, 2008

ரஜினியின் அறிக்கையும் இன்னபிற மேட்டர்களும்

Photobucket

அண்ணன் ரஜினிகாந்த் மறுபடியும் திருவாய் மலர்ந்திருக்கிறார். அவரைச் சொல்லி குற்றமில்லை. அவர் பாட்டுக்கு (அதாவது ஏ.ஆர்.ரகுமான் பாட்டுக்கு) ஐஸ்வர்யாவுடன் சமர்த்தாக நடனம் ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது ரசிகர்கள் "விஜயகாந்த் வந்திருக்காக, சிரஞ்சீவி வந்திருக்காக, நீங்களும் மின்னலா வாங்க" என்று வற்புறுத்தி தாங்களே கொடியையும் கட்சியின் பெயரையும் அறிவித்து விட்டனர். அடையாளம் தெரியாமலிருக்க தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு சனி, ஞாயிறு லாட்ஜ்களில் தங்கியிருக்கும் 'காளிமுத்து' வகையறா வைத்தியர்களை சந்தித்து விட்டு திரும்பும் நபரைப் பிடித்து அழகான பெண்ணுடன் கல்யாணம் செய்து சாந்தி முகூர்த்த அறைக்குள் தள்ளிய கதையைப் போலிருக்கிறது இவர்கள் கதை. தமிழ்நாட்டில்தான் இந்த மாதிரி கொடுமையெல்லாம் நடக்கும். விட்டால் கட்சி அலுவலகம் அமைத்து வேட்புமனு தாக்கல் செய்து விடுவார்கள் என்று பயந்தோ என்னமோ ரஜினியே வெளிவந்து 'தனது பெயரை, புகைப்படத்தை அரசியல் ரீதியாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறிக்கை விட்டிருக்கிறார். ஏதோ அவரின் பிம்பத்திற்கு மக்களிடம் இன்னும் செல்வாக்கு இருக்கிறது என்றொரு மாயத்தோற்றத்தை இதன் மூலம் நிறுவ முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது.

வடிவேலு ஒரு நகைச்சுவைக்காட்சியில் சொல்வது போல 'இன்னமுமாடா இந்த ஊரு நம்பள நம்புது"?. "அது அவங்க விதி". என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

குசேலன் பட விவகாரம் தொடர்பாக அவர் அடித்த பல்டியின் மூலம் மக்களிடம் அவருக்கிருந்த கொஞ்ச நஞ்ச இமேஜூம் சரிந்துவிட்டது. தான் ஒரு சந்தர்ப்பவாதி என்பதை அவர் பல முறை நிரூபித்திருக்கிறார். 'தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்று விமர்சித்த அதே ஜெயலலிதா அவர் கண்ணுக்கு அஷ்டலட்சுமியாகவும் காட்சியளித்திருக்கும் அதிசயம் ஆன்மீக தரிசனத்தின் ஒரு புதிய பரிமாணம். காவிரி பிரச்சினையில் நெய்வேலிக்குச் சென்ற திரையுலகத்தை புறக்கணித்து 'என் வழி தனிவழி' என்று தனிஆவர்த்தனம் நடத்தி சாத்தியமில்லாத நதிநீர் இணைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக 'ஸ்டன்ட்' அடித்தார். ஒக்கேனக்கல் விவகாரத்திலும் உணர்ச்சிகரமாக பேசி கைத்தட்டல் வாங்கிவிட்டு தன்னுடைய பட வியாபாரம் பாதிக்கப்படும் என்று தெரிந்தவுடன் 'மாப்பு. இனிமேல் செய்ய மாட்டேன்' என்று கன்னடத்தில் தோப்புக்கரணம் போட்டார். இனிமேலும் தமிழ்நாட்டு மக்கள் அவரை சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அரசியல் அவருக்கு ஒத்துவராது என்பதை அவரே உணர்ந்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. என்றாலும் ரசிகர்களின் போர்வையில் சிலர் செய்யும் அதிகப்பிரசங்கித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் முயன்றிருப்பது நல்ல விஷயம்தான்.


ஆனால் அதோடு அவர் நின்றிருந்தால் அவரைப் பாராட்டியிருக்கலாம். 'தான் அரசியலுக்கு வர விரும்பினால் யாராலும் அதைத் தடுக்க முடியாது' என்று வழக்கம் போல் ஒரு குழப்ப 'பிட்டைப்' போட்டிருப்பதுதான் காமெடி. அவரைச் சுற்றியுள்ள கூட்டத்திற்கு கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வதெல்லாம் போரடித்துவிட்டது. ரஜினியின் புதுப்படங்கள் வரும்போது டிக்கெட்டுகள் மூலம் சம்பாதிப்பதை இன்னும் விஸ்தரிக்க விரும்புகிறார்கள். எனவேதான் ரஜினிக்கே விருப்பமில்லையென்றாலும் அவர் அரசியலில் வரவேண்டுமென்று நீண்ட வருடங்களாக விரும்புகின்றனர். இதன் மூலம் குறைந்தபட்சம் தனக்கொரு எம்.எல்.ஏ. பதவியாவது வந்துவிடாதா என்பது அவர்களின் கணக்கு. இதனால்தான் இன்னமும் ரஜினியின் அரசியல் பிரவேசம் நிகழாமலிருப்பது அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இதுவும் ரஜினிக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. எனவேதான் 'அரசியலுக்கு வரமாட்டேன்' என்பதை தெளிவுபடுத்த விரும்பாமல் குட்டையைக் குழப்புகிறார். அவ்வாறு அவர் தெளிவாக அறிவித்துவிட்டால் பதவி மோகத்துடன் திரியும் பல பேர் விஜய்காந்த் கட்சிக்கோ வேறு எங்காவதோ தாவிவிடுவார்கள் என்று அவருக்குத் தெரியும். பின்பு அவர் படங்களுக்கு தோரணங்களும் கட்அவுட்டும் அமைப்பதற்கும் 'தலைவா' என்று கூச்சலிடுவதற்கும் ஆட்கள் வேண்டாமா? இன்றைய இளைய தலைமுறையினர் அஜீத்திற்கும் விஜய்க்கும் மாறி நீண்ட நாட்களாகிறது.


அவர் கைவிட்ட பொன்னான சூழலான '1996' மறுபடியும் அமையும் என்பது அசாத்தியமான ஒன்று.

முன்பெழுதிய பதிவின் காரணமாக 'அவள் அப்படித்தான்' படத்தை மீண்டுமொரு முறை பார்த்தேன். எப்பேர்ப்பட்ட ஒரு சிறந்த நடிகன்.. நடிப்புலகிலும் சிறந்த பெயரெடுக்காமல் அரசியலிலும் ஸ்தாபிக்க முடியால்.. இன்னமும் விக்கை மாட்டிக் கொண்டு ஒரு ஜோக்கர் போல... வேதனையாக இருக்கிறது. அவரின் உண்மையான ரசிகர்கள் இவ்வாறுதான் யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

()

உயிர்மை அக்08 இதழின் தலையங்கத்தில் ரசித்த மனுஷ்யபுத்திரனின் வரி: பெரியார் படைப்புகளை நாட்டுடமை ஆக்குவது குறித்து இவ்வாறு எழுதுகிறார்: 'அண்ணா நூற்றாண்டில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்து வருபவர்களையெல்லாம் கருணையின் அடிப்படையில் விடுவித்து வரும் தமிழக முதல்வர் அவர்கள் திராவிட இயக்கத்தின் மூலவரும் மாபெரும் தமிழின் சிந்தனையாளருமான பெரியாரையும் கி.வீரமணியிடமிருந்து விடுதலை செய்யக் கருணை காட்ட வேண்டும்.'

()

சுப்ரமணியபுரத்தின் 'கண்கள் இரண்டால்' பாடலை பல பேர் சிலாகித்து தாண்டிப் போய் அடுத்தப் பாடலை மகிழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் என்னால் இன்னமும் அந்தப் பாடலில் இருந்து வெளிவர முடியவில்லை. அந்தப்பாடல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போதெல்லாம் சானலை மாற்ற முடியவில்லை. மனம் பதின்ம வயதுகளின் எண்ணங்களுக்குள் புகுந்து கொண்டு கொண்டாட்டம் போடுகிறது.



ஏதோவொரு புகைப்படத்தில் கிட்டத்தட்ட ஒரு தேவாங்கு போல தோற்றமளிக்கும் ஸ்வாதி இந்தப் படத்தின் பாடல்காட்சியில் தேவதை போல் தோற்றமளிப்பது ஆச்சரியமளிக்கிறது. வெட்கம் என்றால் என்னவென்று மறந்து போய் "சீக்கிரம் வாடா, அணைச்சுக்கடா" என்று முனகும் இன்றைய நாயகிகளுக்கு மத்தியில் பதின்ம வயதுப் பெண்களின் வெட்கம் கலந்த சிரிப்பை அழகியல் உணர்வுடன் திரையில் சாத்தியப்படுத்தியிருக்கும் அந்தப் பெண்ணை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. குறிப்பாக அந்தப்பாடல் காட்சியில் நாயகன் கோயிலில் நடக்கும் ஏதொவொரு சடங்கில் சாப்பிட்டுவிட்டு கைகழுவ வரும் போது தன்மீது மோதுவதைப் போல வருவதைக் கண்டு படபடப்புடன் நடுங்குவதும் அவன் திரும்ப செல்லும் போது தான் பயந்ததற்காக வெட்கத்தோடு ஒரு சிரிப்பை அவனை நோக்கி அளிப்பதும்... divine.

()

செப்08 உயிர் எழுத்துவில் பெருமாள் முருகனின் 'இருள் திசை' என்றொரு சிறுகதை மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. குடித்துவிட்டு வழக்கம் போல் எங்கோ விழுந்திருக்கும் குடும்பத்தலைவனை தேடி அழைத்துவர அம்மாவும் பிள்ளையும் நடுஇரவில் கிளம்புகிறார்கள். வீட்டினுள் தூங்கிக் கொண்டிருக்கும் சின்னதம்பி எழுந்து தேடி அழக்கூடாதே என்கிற பதைபதைப்புடனே அம்மா வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்புகிறாள். இவ்வாறான பயணம் அவர்களுக்கு பழக்கமான ஒன்றுதான். பனிபூத்த இரவில் நடப்பது அந்தச்சிறுவனுக்கு பிடித்திருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக ரத்த காயங்களுடன் விழுந்து கிடக்கும் அப்பனை வெறுப்புடன் அவனும் அழுகையுடன் அம்மாவும் தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்கிறார்கள். சின்ன தம்பி எழுந்து அழாமல் இன்னமும் தூங்கிக் கொண்டுதான் இருந்தானா? அறிய இதழைப் படியுங்கள்.

பெருமாள் முருகன் எளிய வார்த்தைகளின் மூலம் மிக உயிர்ப்புடன் இந்தக் கதையைப் படைத்திருக்கிறார். கோடிக்கணக்கான தாய்மார்களின் கண்ணீரும் குடிகார தந்தையின் மகன்களின் வெறுப்பும் இக்கதையில் அழுத்தமாக உறைந்திருக்கின்றன. அதற்காக தந்தை பாத்திரத்தை ஏதோ ஒரு கொடூரனாக பெருமாள் முருகன் படைக்கவில்லை. இவ்வாறு குடித்து விழுவதைத் தவிர ஒரு நல்ல தந்தையாகவே அவர் இருக்கிறார். மிகச்சிறிய கதைதான். இதைப்படித்துக் கொண்டிருக்கும் போதே வார்த்தைகளும் புத்தகமும் மறைந்து போய் ஒரு குறும்படமாகவே அந்தச் சித்திரம் என் முன் நிகழ்ந்து கொண்டிருந்ததை காணும் அதிசய அனுபவத்தைப் பெற்றேன்.

()

எனது மீடியா பிளேயரின் play list-ல் நிரந்தரமானதொரு இடத்தைப் பிடித்திருக்கிறது 'வாரணம் ஆயிரம்' திரைப்பாடல்கள். 'சத்யம்'-ல் இழந்த தனது பெயரை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். அவரிடம் எனக்குப் பிடித்த அம்சம் consistency. 'மின்னலே' வந்த புதிதில் 'ஏ.ஆர். ரகுமானை பிரதியெடுப்பவர்' என்றும் பின்பு 'கிறித்துவ தேவாலயங்களின் இசைப்பாடல்களை நகலெடுப்பவர்' என்றும் விமர்சனங்கள் எழுந்தன. என்றாலும் தன்னுடைய demand-ஐ உபயோகித்து நிறைய படங்களை ஒத்துக் கொண்டு நீர்த்துப் போகாமல் நிதானமாக தொடர்ந்து தரமான படைப்புகளையே தருகிறார் என்பது என் அவதானிப்பு. அதிசயமாக 'வாரணம் ஆயிரத்தில்' ஒரு கானா டைப் பாடலை போட்டிருக்கிறார். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' போன்ற கேட்பதற்குச் சுகமான தாமரையின் தமிழ் வார்த்தைகள், இன்றைய மற்ற திரைப்பாடல்கள் எவ்வளவு தூரம் மாசடைந்திருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.

'சாமுராயில்' 'மூங்கில் காடுகளே'வை விடவும் எனக்குப் பிடித்தது 'ஒருநதி' என்ற பாடல். திரைப்பாடல் அல்லாது தனியிசைப்பாடல்களுக்கு (private albums) மிகச்சிறந்த உதாரணமது. வைரமுத்துவின் வரிகள் மிகச்சிறப்பாக அமைந்திருக்கும். கேட்டுப்பாருங்கள்.

()

தமிழ்நாட்டுத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுபவர்களுக்கு எவ்வளவு சம்பளமிருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள். சில ஆயிரங்கள்? ஒரு லட்சம்? தெரியவில்லை. ஆனால் விஜய்காந்தின் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது கருணாநிதி கூறியது. 'கண்ணம்மா' படத்திற்கு வசனம் எழுதியதற்கு கிடைத்த 15 லட்சம், 'உளியின் ஓசை' படத்தில் கிடைத்த 25 லட்சம்... போன்றவைகளை பொதுமக்களுக்கே செலவழித்து விட்டதாக ஒரு பட்டியலை கூறியிருக்கிறார்.

கருணாநிதிக்கு முன்னதாக சூப்பர் ஸ்டாராக விளங்கிய இளங்கோவன் ('கண்ணகி'க்கு வசனம் எழுதியவர்) தன்னுடைய இறுதிக்காலத்தில் வறுமையில் செத்துப் போனார். பாகவதருக்கு வசனம் எழுதப் போன புதுமைப்பித்தன் காசநோய்க்கு மருந்தில்லாமல் இளமையிலேயே செத்துப் போனார். வசனம் எழுதுபவர்களுக்கு இவ்வளவு அதிக பணம் கிடைக்கும் போது ஏன் இவர்கள் அதை தக்க வைத்துக் கொள்ளவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது.

suresh kannan

Thursday, September 25, 2008

ரஜினி vs ஷகிலா - ஓர் ஆளுமை ஒப்பீடு

இரவு உணவு முடித்து நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது உரையாடல் இயல்பாக சினிமா பக்கம் திரும்பியது. இரண்டு தமிழர்கள் பேசினால் அதில் பிரதான விஷயம் சினிமாவைப் பற்றியதாகத்தான் இருக்கும் என்பதை யூகிக்க பில்கேட்ஸ் அளவிற்கு மூளை தேவையில்லை. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினியைப் பற்றியும் அவருக்கு இருக்கும் வணிகமதிப்பைப் பற்றியும் நண்பர் விஸ்தாரமாக பேசினார். பேச்சின் நடுவில் அவர் சொன்ன விஷயம் என்னை திடுக்கிட வைத்தது. "வணிக நோக்கில் பார்த்தீர்கள் என்றால் ரஜினியையும் "மலையாளப் பட புகழ்" ஷகிலாவையும் ஒரே அளவுகோலினால் அளந்துவிட முடியும்" என்றார் நண்பர். "என்ன சொல்கிறீர்கள்.. இதை வெளியே சொன்னால் உங்கள் வீட்டுக்கு ஆட்டோ வரும் வாய்ப்பு இருக்கிறது, தெரியுமா" என்றேன். "அதனால்தான் யோசிக்கிறேன். இருவருக்குமான சில ஒற்றுமையைப் பட்டியலிடுகிறேன். அப்புறம் நீங்கள் சொல்லுங்கள், நான் சொன்னது சரியா, தவறா என்று".

எனக்கும் சுவாரசியம் தட்டியது. "சரி சொல்லுங்கள்" என்றேன்.அவர் சொன்னதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள கொஞ்சம் சென்சாருடன் இங்கே பட்டியிலிட்டிருக்கிறேன்.

Photobucket

(1) ரஜினி படங்களில் "கதை" என்கிற சமாச்சாரத்திற்கு அவ்வளவு முக்கியம் கிடையாது. ரஜினி இருக்கிறார் என்பதே முக்கியம். படம் வியாபாரமாகி விடும். ரசிகர்களும் தியேட்டருக்கு வருவார்கள். ஷகிலாவிற்கும் அப்படியே. அவர் பட வெளியீடுகளின் போது பரங்கிமலை பக்கம் டிராபிக் ஜாம் ஆகிவிடுவதை போக்குவரத்து காவலர்களே உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

(2) ரஜினி படங்களில் மிக முக்கியமானது, சண்டைக்காட்சிகள், அவர் பஞ்ச் வசனம் சொல்லும் காட்சிகள், போன்றவை. இது இல்லாவிட்டால் ரசிகர்கள் திருப்தியடைய மாட்டார்கள். படமும் ஓடாது. ஷகிலாவின் படங்களுக்கும் அப்படியே. ரசிகர்கள்
முக்கியமாக எதிர்பார்த்து வருவது "அந்த மாதிரியான" சண்டைக் காட்சிகளை. அது இல்லாவிட்டால் பெஞ்சுகளை உடைத்து தங்கள் எதிர்ப்பை கண்ணியமாக வெளிப்படுத்துவார்கள்.

(3) ஒரு வெற்றிகரமான படத்திற்கு 'ரஜினி' என்கிற ஒற்றைச் சொல்லே போதும். சக நடிகர்கள் யார், இயக்குநர் யார், என்பது பற்றியெல்லாம் ரசிகர்களுக்கு கவலையில்லை. அவர்களை தியேட்டருக்க வரவழைக்க அவர் பெயரே போதும். அம்மணியின் படங்களுக்கும் அப்படியே. "கூட நடிக்கும்" ஆண்களைப் பற்றியெல்லாம் அம்மணியின் ரசிகர்களுக்கு கவலையில்லை. தங்கள் தலைவியின் "முக தரிசனம்" (?) கிடைத்தால் போதும் என்ற அளவில் திருப்தியடைவார்கள்.

(4) பொதுவாக ரஜினி படங்கள் நிச்சய வெற்றி என்பதால் பட பூஜை அன்றே எல்லா ஏரியாவும் விற்பனையாகிவிடும். விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிவிடுவார்கள். செல்வி ஷகிலாவின் படங்களும் அப்படியே. தென்னிந்தியாவைத் தவிர
வட இந்தியாவிலும் அம்மணியின் படங்களுக்கு மிகுந்த கிராக்கியுண்டு. விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்குவார்கள்.

(5) ரஜினி படங்கள் வெளியாகிறது என்றால் அதனுடன் போட்டி போட அஞ்சி தங்கள் பட வெளியீட்டை தள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் அதிகம். ஷகிலாவின் படங்களும் அப்படியே. ஒரு சமயத்தில் கேரளத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்றவர்களின் பட வசூலை விட ஷகிலாவின் பட வசூல் அதிகமாகிப் போக, பீதியடைந்து சேட்டன்கள் ஒன்று சேர்ந்து ஷகிலாவை தமிழ்நாட்டிற்கே துரத்தி விட்டனர்.

(6) ஆரம்பக் காலங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ரஜினி மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். தன் தனித்தன்மையை வெளிப்படுத்த சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் கவ்வுவது, தலைமுடியை ஒதுக்கிக் கொள்வது போன்ற சேஷ்டைகளை செய்திருக்கிறார். ஷகிலாவும் அப்படியே. தன்னுடைய "திறமையை" ரசிகர்களுக்கு வெளிப்படுத்த மேலாடை இல்லாமல் கூட நடித்திருக்கிறார். பிற்பாடு அம்மணி இதை நிறுத்திக் கொண்டாலும் ரஜினி இன்னும் நிறுத்தவில்லை என்பது ஒரு சிறு வேற்றுமை.

(7) விநியோகஸ்தர்களின் வட்டாரத்தில் ரஜினியை 'தங்க முட்டையிடும் வாத்து' என்றே கருதுகிறார்கள். பட வெளியீட்டின் போது மட்டுமல்லாமல் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆன பின்னரும், தொலைக்காட்சிகளில் அடிக்கடி போட்டு தேய்த்த பின்னரும் கூட, மறுவெளியீடுகளின் போது ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஆதரவு தர மறப்பதில்லை. பொதுவாக மற்ற நடிகர்களுக்கு இந்த வணிக மதிப்பு இல்லை. புதுப்படங்களை வாங்கி வெளியிட வசதியில்லாத சில திரைப்பட உரிமையாளர்கள் இவ்வாறான மறுவெளியீடுகளிலேயே தங்கள் பிழைப்பை நடத்துகின்றனர். ஷகிலாவின் படங்களும் இவ்வாறான அதே வணிக மதிப்பை கொண்டதுதான். ஷகிலா தன்னுடைய திறமையை "அதிகமாக" வெளிப்படுத்துவதை நிறுத்திய பின்னரும் அவரின் பழைய படங்களுக்கு கூட்டம் அலைமோதுகிறது.

(8) ரஜினி படங்கள் மொழி, இன, பிராந்திய, கலாச்சார எல்லைகளைக் கடந்தது. தமிழ்ப்படமென்றாலும் கூட அது ஆந்திரா, கர்நாடகா,கேரளா என்று தென்னிந்தியாவிலும் சில வட மாநிலங்களிலும், சர்வதேச நாடுகளில் குறிப்பாக ஜப்பானிலும் புகழ்பெற்றது. மொழி புரியாவிட்டாலும் கூட ரஜினியின் தோற்றத்திற்காகவும் ஸ்டைலுக்காகவும் சர்வதேச ரசிகர்கள் பார்த்து மகிழ்கின்றனர். ஷகிலாவின் படங்களும் அப்படியே. சர்வதேச அளவில் ரசிகர்கள் உண்டு. பின்னணயில் ஒலிக்கும் மொழி பற்றி அவரின் ரசிகர்களுக்கு கவலையில்லை. தங்களுடைய தலைவியின் "ஆக்ஷன் காட்சிகளை" ரசிக்க மொழி அவர்களுக்கு ஓர் தடையாய் இருப்பதில்லை.

(9) ரஜினி பட விளம்பரங்களில் (பத்திரிகைகளிலும், போஸ்டர்களிலும்) ரஜினிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அது 25 சதவீதம் நடிக்கும் குசேலனாயிருந்தாலும் சரி அவர்தான் பிரதானமாய் தெரிவார். ரசிகர்களின் "வாங்கும் சக்தியை" இந்த பிம்பமே தீர்மானிக்கிறது. எனவே வணிக நோக்கில் இது தவறில்லை. அன்னார் ஷகிலா படங்களுக்கும் அவ்வாறே. பிரதான காட்சிகளில் அவரின் சக நடிகர்களான மரியா, ரேஷ்மா போன்றவர்கள் இருந்தால் கூட விளம்பரங்களில் இவருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவர் "ஆக்ஷன் படங்களில்" நடிப்பதை நிறுத்திய இன்றும் கூட பத்திரிகை விளம்பரங்களில் அவர் புகைப்படங்களே பெரிதாக அமைக்கப்படுகிறது. (அவர் படத்தை சிறிதாக வடிமைக்க முடியாது என்பது வேறு விஷயம்).

(10) ரஜினி பட ரசிகர்களின் வயதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் பதின்ம வயது இளைஞர்களிலிருந்து அறுபது வயதான கிழவர்கள் வரை காணலாம். ரஜினி படங்களைக் காண விரும்பாதவர்கள் போல் பாவனை செய்பவர்கள் கூட உள்ளூர பார்க்கவே விரும்புவர். செல்வியின் படங்களும் அவ்வாறே. பரங்கிமலை தியேட்டர்களில் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக முதியவர்களின் எண்ணிக்கையையும் பார்க்க முடியும்.

()

இன்னும் கூட நண்பர் சொல்லிக் கொண்டே போனார். சில பகுதிகள் மிகுந்த ஆட்சேபகரமானது என்பதால் அவற்றை வெளியிடாமல் தவிர்க்கிறேன்.

அவர் சொன்னவற்றை கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது கணக்கு சரியாகவே வந்தது. (நன்றி: அண்ணாமலை) இவற்றை என்னுடைய வலைப்பதிவில் வெளியிடலாமா என்று அவரின் அனுமதியைக் கேட்டேன். முதலில் தயங்கியவர் " இந்தத் தலைப்பில்யாராவது பிஎச்டி ஆராய்ச்சி செய்ய முனைந்தால் அவர்களுக்கு இந்தக் குறிப்புகள் உதவிகரமாக இருக்கக்கூடுமே" என்று நான் கன்வினஸ் செய்தவுடன் 'என் பெயரை வெளியிடக்கூடாது' என்ற நிபந்தனையுடன் ஒத்துக் கொண்டார்.

"நான் சொன்னது சொற்பமே. இணையத்தில் வெளியிட்டவுடன் மற்றவர்கள் இதற்கும் மேலாக பல ஆதாரபூர்வமான, சுவாரஸ்யமான குறிப்புகளை வழங்க முடியும் பார்" என்றும் பின்குறிப்பாக சொன்னார்.

suresh kannan

Thursday, July 31, 2008

குசேலனும் கொத்து பரோட்டாவும்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஜனி பட வெளியீடு என்பதே ஒரு திருவிழாவாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது. குசேலன் திரைப்படம் வரப்போகும் இந்த தருணமும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகமும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தக்கூடியது. கட்அவுட்களின் மீது பாலாபிஷேகம், படச்சுருளை வைத்து பூஜை, ஊர்வலம்... என்று எல்லா அபத்தமான சடங்குகளுக்கும் குறைவிருக்கப் போவதில்லை. ஆனால் தரம் என்கிற அளவுகோலின் மூலம் நோக்கும் போது 75 ஆண்டு கால தமிழ் சினிமா மீண்டுமொரு முறை தலையைக் குனியக்கூடிய தருணமும் கூட இது என்பதையும் மறக்கக்கூடாது.

'கத பறயும் போள்' என்கிற மலையாள திரைப்படம்தான் 'குசேலனாக' உருமாறப் போகிறது என்பது தெரிந்த செய்தி. ஆனால் இந்த உருமாற்றம் தமிழில் எப்படி நிகழப்போகிறது என்பதை உற்று நோக்கும் போது, கலை என்கிற நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல ஒதுக்கப்படப் போவதையும் வணிகம் என்கிற சமாச்சாரமே பிரதானமாக இருக்கப் போதையும் காண முடிகிறது. தேன்மாவு கொம்பத்து, மணிசித்ரத்தாழ் போன்ற மலையாளத் திரைப்படங்கள் தமிழில் முறையே முத்து, சந்திரமுகி என்று உருமாறின பிறகு அவற்றின் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை இரண்டு திரைப்படங்களையும் அவதானித்த பார்வையாளர்களால் எளிதில் உணர்ந்திருக்க முடியும். இதே போன்றதொரு கொடுமையான விபத்துதான் 'கத பறயும் போளுக்கு'ம் நிகழப் போகிறது என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை.

()

ஒரு காலத்தில் மலையாள சினிமா யதார்த்தத்திற்கு புகழ் வாய்ந்தாக இருந்தது. 1970-80களில் புதிய அலை தோன்றி அடுர் கோபால கிருஷ்ணன், அரவிந்தன், எம்.டி.வாசுதேவன் நாயர், ஜான் ஆப்ரஹாம், K.R.மோகனன், G.S.பணிக்கர் போன்றவர்களின் பங்களிப்பின் மூலம் சிறந்த மலையாளத் திரைப்படங்கள் உருவாகின. அதே சமயத்தில் பல தமிழ்நாட்டு பார்வையாளர்களுக்கு மலையாளத் திரைப்படங்கள் என்பவை, ஒரு கட்டழகி தன்னுடைய மேலாடையை கழட்டுகிற தோரணையில் நிர்வாண முதுகைக் காட்டிக் கொண்டு நிற்பதும் அதன் மீது பெரிய எழுத்தில் A என்கிற ஆங்கில வார்த்தை பொறிக்கப்பட்டிருக்கும் என்பதாகவே இருந்தது. திரைப்படங்களின் தேசிய விருதுகளுக்காக மலையாளமும் வங்காளமும் மாத்திரமே பிரதான போட்டிகளாக இருந்த அளவிற்கு மிகச்சிறப்பான யதார்த்தமான, அந்த மாநிலத்தின் கலாச்சாரத்தை சிறப்பாக பிரதிபலிக்கும் படங்கள், மலையாளத்தில் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று மலையாள சினிமாவின் முகம் மாறி விட்டது. கோடிகளில் புழங்கும் தமிழ்த் திரையுலகின் வணிகத் தாக்கத்தில் மயங்கி மலையாளத் திரையுலகமும் தமிழ்த் திரையுலகத்தின் மோசமான ஒரு பிரதியாக மாறிவிட்டிருக்கிற துரதிர்ஷ்டவசமான நிலையை காண முடிகிறது.

இவற்றின் இடையே ‘கத பறயும் போள்’ படத்தின் கதை மற்றும் திரைக்கதையாசிரியரான ஸ்ரீனிவாசன், யதார்த்தமான சிறந்த நகைச்சுவைப் படங்களின் உருவாக்கங்களின் பங்கெடுப்புக்களுக்காக மிகவும் சிலாகிக்கப்படுகிறார். அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘வடக்கு நோக்கி இயந்திரம்’ மற்றும் ‘சிந்தாவிஷ்டயாய சியாமளா’ என்பவை மலையாளத்தின் முக்கிய திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன. ‘கத பறயும் போள்’ திரைப்படம், வாழ்வில் புகழ், செல்வத்தை விட நட்பே முக்கியமானது என்கிற விஷயத்தைப் பேசுகிறது.

கேரளத்தின் ஒரு சிற்றூரில் சிகையலங்காரத் தொழிலாளியான ஸ்ரீனிவாசன், நவீனத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வறுமையில் சிரமப்படுகிறார். அந்த ஊருக்கு படப்பிடிப்பிற்காக வரப்போகும் நடிகர் (மம்முட்டி) ஸ்ரீனிவாசனின் பால்ய கால நண்பன் என்ற செய்தி ஊருக்குள் பரவியதில் ஒரே நாளில் அவரின் மதிப்பு உயர்கிறது. அதுவரை அவரை மனிதராக கூட மதிக்காதவர்கள் நடிகரிடம் பெறப்போகும் லாபத்துக்காக ஸ்ரீனிவாசனை கொண்டாடுகிறார்கள். ஆனால் தாழ்வுமனப்பான்மையும் கூச்சமும் கொண்ட ஸ்ரீனிவாசன் நடிகரை அணுகாமலிருக்கிறார். இதனால் ஊராரின் ஏச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

ஊருக்குள் நிகழும் ஒரு சிறுவிழரவில் பேசும் நடிகர் ஸ்ரீனிவாசனிடம் தாம் கொண்டிருந்த நட்பை மாத்திரமே பிரதானமாக குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் பேசுகிறார். பிறகு நண்பர்கள் சந்திப்பும் ஊராரின் மனமாற்றமும் நிகழ்கிறது. இவ்வாறாக போகிறது ‘கத பறயும் போள்’ கதை. இதில் நடிகராக வரும் மம்முட்டி வரும் காட்சிகள் மிகச் சொற்பமே. கதை பெரும்பாலும் ஸ்ரீனிவாசனின் வறுமையையும் ஊராரின் போக்கையும் (கறுப்பு) நகைச்சுவையின் மூலம் சித்தரிக்கிறது.

()

இந்தப்படம் தமிழில் ‘குசேலனாக” உருமாற்றம் செய்யப்படும்போது என்ன நிகழப் போகிறது என்பதை இதுவரை வந்திருக்கிற செய்திகளின் மூலம் எளிதாக ஊகிக்க முடிகிறது. மலையாளத் திரைப்படத்தைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்து போன ரஜினிகாந்த் உடனே தமிழில் இதை எடுக்க வேண்டும் என்று விரும்பினாராம். அதற்கு அவர் இயக்குநராக உடனே தேர்ந்தெடுத்தது, திரைப்படக்கல்லூரியில் தன்னுடன் படித்த, ‘கத பறயும் போள்’ கதையை உருவாக்கின ஸ்ரீனிவாசனை அல்ல. ‘சின்னதம்பி’ போன்ற கலைநயம் மிக்க காவியங்களைப் படைத்த பி.வாசுவை. ஏன்? இதை மலையாளத் திரைப்படத்தின் பாணியிலேயே எடுத்தால், தான் நடித்தாலும் கூட அது ஊத்திக் கொள்ளும் என்று ரஜினிக்கு தெளிவாகவே தெரியும். எனவேதான் இந்த எளிமையான கதையில் தேவையான மசாலா சமாச்சாரங்களை சேர்த்து கொத்து பரோட்டாவாக்கி தமிழ் ரசிகர்களுக்கு படைக்க, மசாலா சமாச்சாரத்தில் விற்பன்னரான வாசுவை அழைத்திருக்கிறார். ஏகப்பட்ட பில்டப்புடன் வெளிவந்த ‘பாபா’ படுதோல்வி அடைந்த போது அதிலிருந்து ‘சந்திரமுகி’யின் மூலம் தன்னை மீட்டெடுத்துக் கொடுத்த வாசுவின் திறமை பற்றி ரஜினி நன்றாக அறிவார்.

இந்த இடத்தில் P.வாசுவைப் பற்றி சற்று பேச வேண்டும். இவரின் பெரும்பாலான.. மன்னிக்கவும் அனைத்துப் படங்களும் அவரின் இனிஷயல் போலவே இருக்கும் என்பதில் நமக்கு சந்தேகமே இல்லை. (ஆரம்பத்தில் சந்தானபாரதியுடன் இணைந்து எடுத்த ‘பன்னீர் புஷ்பங்கள்’ மாத்திரம் ஒரு ஆச்சரியமான விதிவிலக்கு). தமிழ்த்திரைப்படங்களின் வரிசையில் மற்ற பெரும்பாலான இயக்குநர்களைப் போலவே குப்பைகளை தோரணங்களாக அடுக்குபவர். ‘சின்னதம்பி’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை நினைத்தால் இப்போது கூட எனக்கு புல்லரிக்கிறது. விதவைத் தாய் ஒருத்தியை அவமானப்படுத்தும் நோக்கத்தில் வில்லன் வண்ணப்புடவை கட்டி, குங்குமம் வைக்கும் போது பாய்ந்து வரும் மகன் குதிக்கும் போது தெறிக்கும் நீரில் தாயின் குங்குமம் அழிந்து புடவையும் வெள்ளையாகி விடும். ஒரு அடிமட்ட pervert-களினால்தான் இவ்வாறெல்லாம் காட்சிகளை யோசிக்க முடியும். இதைப் போல நிறைய பெர்வர்ட்டுகள் தமிழ் இயக்குநர்களாக உள்ளனர்.

இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநரான இருந்து குருவின் பெயரை களங்கப்படுத்தும் இப்பேர்ப்பட்ட பிரகஸ்பதிதான் இந்தப்படத்தை இயக்குவது. படம் தயாரிக்கப்படும் முன்னரே இந்தப்படத்தில் தன்னுடைய பங்கு 25 சதவீதம்தான் இருக்கும் என்று ரஜினிகாந்த், ரசிகர்களிடம் அதிகபட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் தெளிவுபடுத்தி விட்டாராம். ஆனால் மசாலா விற்பன்னரான வாசு இதை ஏற்றுக் கொள்வாரா? படம் கல்லாப்பெட்டியை நிரப்ப வேண்டுமே. அதனால் ரஜனிக்கு தேவையான மசாலாவையெல்லாம் பதமாக அரைத்து எளிமையான மலையாளத்திரைக்கதையின் வண்ணமே தெரியாமல் முழுக்க கோமாளித்தனமான அலங்காரங்களை செய்திருப்பார் என்பதை படம் வெளிவந்த பிறகுதான் உணர வேண்டும் என்பதில்லை.

இதுவரை வெளிவந்திருக்கும் ‘குசேலன்’ படத்தின் புகைப்படங்களே இதற்கு முன்னோட்டமாக உள்ளன. இதற்கு முன்னர் வெளிவந்த ‘சிவாஜி’ யை ஒத்த அதே மாதிரியான ஒப்பனையுடன் (இதில் கூடவா காப்பி?) பிரதானமான போஸ்களுடன் ரஜினிகாந்தின் உருவத்தையும், ஒரு தமிழ் சினிமா நாயகி காட்ட வேண்டிய அத்தனை அம்சங்ளையும் காட்டிக் கொண்டு நயனதாராவின் கவர்ச்சியையும் காணும் போதே படத்தின் வாசனையை நுகர முடிகிறது.

ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அவருக்கே கதாநாயகியாகவும் நடித்து இப்போது நாயகி பதவியிலிருந்து ரிட்டயர்டும் ஆகி பசுபதியின் மனைவியாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையில், தாத்தா வயதுள்ள ‘ஆன்மீகவாதி’ ரஜினி அதிஇளமை நடிகைகளோடு ஜோடி சேர்ந்து அசட்டுத்தனமான ஒப்பனையோடு செயற்கை இளமை துள்ள நடிப்பதும் அதை எந்தவித சொரணையுமில்லாமல் தமிழ் ரசிகர்கள் பார்த்து ரசிப்பதும் கொடுமையின் உச்சக்கட்டம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

குசேலன் படத்தின் புகைப்படங்களில், மலையாள திரைக்கதையின் படி சொற்ப நேரம் வருகிற பாத்திரமான ரஜினியே பிரதானமாக இருப்பதையும், கதையின் முக்கிய பாத்திரமான பசுபதியும் அவரின் குடும்பமும் இந்தப்படத்தில் இருக்கிறார்களா என்கிற கேள்வியை எழுப்பும் அளவிற்கு மூடி மறைக்கப்பட்டதையும் பலரும் சுட்டிக் காட்டி கண்டித்ததில் தற்சமயம் வெளியாகும் விளம்பரங்களில் ஒரு ஓரத்தில் பசுபதியையும் இன்ன பிறரையும் கறுப்பு வெள்ளையில் (வண்ணத்தில் ரஜினியும் நயனதாராவும்) வெளியிடுகிறார்கள்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு கூத்து நடந்தது. விழாவில் ரஜினி பேசும் போது சொன்னது, படப்பிடிப்பின் போது யாரோ ஒரு பையன் அவரையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தானாம். ஏன் இந்தப் பையனை துரத்தாமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று இவர் யோசித்தாராம் . பிறகுதான் தெரியவந்ததாம், அது தான் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் என்று. தன்னுடைய படத்தின் இசையமைப்பாளரே யார் என்று தெரியாமலிருக்கும் இந்த பிரகஸ்பதியைத்தான் தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஒரு சமயத்தில் மலை போல் நம்பிக் கொண்டிருந்தார்கள், ஏதோ இவர் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டில் தேனும் பாலும் ஓடப் போகிறது என்கிற கற்பனையுடன்.

பாவம் பசுபதி. கூத்துப் பட்டறையில் திறமை காட்டிக் கொண்டிருந்தவரை கமல் அழைத்து ‘விருமாண்டியில் ஒரு சாகஸ வில்லனாக சித்தரித்தவுடன் நம் தமிழ் இயக்குநர்கள் சுள்ளானுக்கும் வவ்வாலுக்கும் வில்லனாக நிறுத்தி ‘ஏய்’ என்று உறும விட்டு விட்டார்கள். அதே கமல் ‘மும்பை எக்ஸ்பிரஸில்’ பசுபதியை இன்னொரு பரிமாணத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் பொருத்தி வித்தியாசம் காட்டினாலும் மற்ற இயக்குநர்கள் அவ்வாறு யோசிக்கவே மாட்டார்கள்.

()

திரைப்படம் என்கிற ஊடகம் சமுகத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி மக்களிடையே புரட்சியையும் விழிப்புணர்வையும் உருவாக்கக்கூடிய பலமான ஆயுதம் என்கிற சமாச்சாரமே வணிகம் என்கிற பலம் வாய்ந்த சக்தியின் முன் மங்கிப் போயிருக்கின்றது. இதைப் பற்றிய எந்த உணர்ச்சியுமில்லாத ரசிகசிகாமணிகள் ஆட்டு மந்தைகள் போல் நடிகர்களின் பின்னால் சென்று கொண்டு ‘சிவாஜியும் குசேலனும்” எவ்வளவு கோடிகளில் விற்பனையாகியது என்று ‘எக்னாமிக்ஸ்’ பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் திரையில் உற்பத்தியாகிற நடிகர்களின் கதாநாயக பிம்பங்களை உண்மையென்று மயங்கி தம்மை ஆளும் பொறுப்பினையே அவர்கள் வசம் ஒப்படைக்கத் தயாராக இருப்பது மூடத்தனத்தின் உச்சம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

பிரம்மாண்டமான விளம்பரங்களின் மூலமும் நடிகைகளின் கவர்ச்சிகளின் மூலமும் ஊசிப்போன குப்பைகளை அழகான உறையிலிட்டு ருசிக்கக் கொடுக்கும் இவ்வாறான வணிகப் பொருட்களை விழிப்புணர்ச்சி உடைய நுகர்வோர்கள் என்ற பொறுப்புணர்ச்சியோடு நாம் புறக்கணிக்க வேண்டும் என்பதே என்னுடைய வழமையான வேண்டுகோள்.

இது ஏதோ ரஜனி என்கிற தனிமனிதரின் மீதும் குசேலன் என்கிற படத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு அல்ல. அனைத்து வணிகப்படங்களின் / நடிகர்களின் / இயக்குநர்களின் மீதான விமர்சனமாகவே இதைப் பார்க்க வேண்டும். தமிழ்ச்சினிமாவின் ஆரோக்கியமான போக்கை நீண்ட வருடங்களாக தடுத்துக் கொண்டிருக்கும் வணிகப்படங்களின் வரிசையில் பிரதானமாக ரஜினியும் அவரது படங்களும் இருக்கிற காரணங்களினாலேயே அதைப் பற்றி எழுதுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இவ்வாறான வணிகப்படங்களை தொடர்ந்து தோற்கடிப்பதின் மூலம்தான் பாலா, அமீர், செல்வராகவன், பாலாஜி, வெற்றிமாறன், சசிகுமார் என்று நம்பிக்கை தரும் இயக்குநர்கள் தங்கள் படைப்புகளை இன்னும் அதிகபட்ச கலைஅம்சத்துடன் தருவதற்கான வழிவகைகளை ஏற்படுத்த இயலும்.

குசேலன் வெளிவரப்போகும் உற்சாகத்திலும் கொண்டாட்டத்திலும் சத்தத்தின் இடையில் இந்தப் பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் என்னுடைய ஆதங்கம் பெரும்பான்மையானவர்களின் கவனத்தில் பதியாது என்பதை உணர்ந்தே இருந்தாலும், ஊதுகிற சங்கை ஊதி வைப்போமே என்றுதான் இதை எழுதத் துணிந்தேன்.

தொடர்புடைய இன்னொரு பதிவு: சிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்

suresh kannan