Showing posts with label அம்பை. Show all posts
Showing posts with label அம்பை. Show all posts

Thursday, February 19, 2009

அம்பையின் சிறுகதைகள்

வற்றும் ஏரியின் மீன்கள் - அம்பை - சிறுகதைகள்
காலச்சுவடு பதிப்பகம் - பக் 184 - ரூ.140/-

ஒரு காலத்தில் பெண் எழுத்தாளர்களின் மீது நான் வைத்திருந்த அவநம்பிக்கையை தகர்த்தெறிந்தவர்களில் அம்பை என்கிற சி.எஸ்.லஷ்மியை பிரதானமாக சொல்ல வேண்டும். 'அம்மா ஒரு கொலை செய்தாள்' என்கிற அவரின் முக்கியமான சிறுகதையோடு அவரின் அறிமுகம் எனக்கு நிகழ்ந்தது. 'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்தில் உயரம் குறைவான கமலைப் பற்றி அவருடைய அம்மாவே அவரது குறையைச் சுட்டிக் காட்டும் பேசிவிடும் போது அதிர்ச்சியும் சுயபச்சாதாபமும் அழுகையும் கலந்த முகபாவனையோடு அம்மாவின் முகத்தையே கூர்ந்து பார்க்கும் போது காமிரா கமலின் முகத்தையே பிரதானமாக நோக்கி சுற்றியலையும். இந்தக்காட்சியின் சாரம்தான் 'அம்மா ஒரு கொலை செய்தாள்'- சிறுகதை.

Photobucket

சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் ஆகிய சிறுகதைத் தொகுதிகளைத் தொடர்ந்து அம்பையின் நான்காவது சிறுகதைத் தொகுதியிது. பெண்ணிய நோக்கில் எழுதும் எழுத்தாளர்களின் அம்பை முன்னோடியானவர். ஆனால் அதில் பிரச்சார தொனியும் ஆண்களை அவமதித்து எழுதுவதுதான் பெண்ணியம் என்கிற அபத்தமான புரிதலோ இருக்காது என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும்.

எழுத்தாளர்களை பால் வேறுபாடு கொண்டு நோக்குவதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் கலாச்சார காவலர்கள் அதிகம் புழங்கும் நம்முடைய ஆச்சாரமான இலக்கியப் பரப்பில் ஆண் எழுத்தாளர்களும் எழுதத் தயங்கும் விஷயங்களை அம்பையின் பேனா இயல்பான துணிவோடு எழுதியிருப்பது ஓர் ஆச்சரியமே. அவர் தமிழக நிலப்பரப்பிலிருந்து வெளியேயிருப்பதே இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆண் பாலியல் தொழிலாளியை கருணையோடு அணுகும் ஒரு பெண்மணியின் சிறுகதையை சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். (பொதுப் புத்தியின் பார்வையில் பாலியல் தொழிலாளி என்றாலே அது பெண்ணாகத்தான் இருக்க முடியும்). தான் பயணிக்கிற நேரங்களில் எதிர்கொள்ளும் அனுபவங்களை 'பயணம்' என்கிற தலைப்பில் வரிசைப்படுத்தி சிறுகதைகளாக உருமாற்றியிருக்கிறார்.

அதில் ஒரே ஒரு சிறுகதையை மாத்திரம் சற்று நெருங்கிப் பார்ப்போம்.

பேருந்து நிலையம். கர்ப்பிணியான தன் மனைவியை வழியனுப்ப வந்திருக்கும் கணவன், பிரிவின் துயர் தாங்காமல் பொது இடமென்றும் பாராமல் அழுதுத் தீர்க்கிறான். மனைவி ஆறுதல் சொல்கிறாள். "பச்சப் புள்ளையாட்டம் அது" என்று தன் தாயிடம் பேருந்து கிளம்பிய பின் சொல்லிப் புலம்புகிறாள். கதை சொல்லி அந்த கர்ப்பிணிப் பெண்ணை பிற்பாடு கடற்கரையில் சந்தித்து உரையாட நேர்கிறது. வரதட்சணைக் கொடுமையின் கசப்பான அனுபவத்தில் நின்று போன திருமண நாளில் 'தீடீர்' கணவனான அவனுக்கு குழந்தைகள் என்றால் உயிர். ஆனால் சிறுவயதில் வந்த 'பொன்னுக்கு வீங்கி' நோயால் அவனின் ஆண்மை செயலிழந்திருக்கிறது. ஆனால் அது அவனுக்கே தெரியாது.

... சற்று நேரம் பயணித்ததால் தன்னையே பிட்டுக்காட்டும் அவளுடைய சற்றே மேடிட்ட வயிற்றைப் பார்த்த போது, "இது அவங்க வீட்டுதுதான்".. என்றாள்....

குண்டாந்தடியுடன் கலாச்சாரக் காவலர்கள் உலவுகின்ற சூழலில் ஒரு பெண் எழுத்தாளரிடமிருந்து இப்படியொரு சிறுகதை வெளிவந்திருப்பதைக் குறித்துத்தான் ஆச்சரியம். இந்தத் தொகுப்பில் உள்ள ஏனைய கதைகள், பெண்ணியக் களப் போராளிகள் தங்களின் அந்திம காலத்தில் எதிர்கொள்ள நேர்கிற சமூகவியல் சார்ந்த சிக்கல்களின் அலுப்பைச் சொல்லிச் செல்கிறது. சில கதைகள் மதக் கலவரங்களினால் ஏற்படும் வன்முறையையும் அவற்றின் அபத்தத்தையும் பற்றிப் பேசுகிறது.

மொத்தத்தில் நல்லதொரு சிறுகதைத் தொகுப்பு.


suresh kannan