Saturday, January 29, 2005

வக்காலி... சூப்பரா படமெடுத்திருக்கானுய்ங்க மாப்ள..

நம் மனதிற்குள் ஊடுருவி உணர்வுகளை மென்மையாக ஆனால் ஆழமாக பாதிக்கும் தமிழ்த்திரைப்படங்கள் மிக அரிதான வரவாக இருக்கிறது. சென்ற வருட உதாரணம் ஆட்டோகிராப். அதே போன்றதொரு அம்சத்துடன் சமீபத்தில் வந்திருக்கும் திரைப்படமாக சொல்லக்கூடியது 'காதல்'.O

பாரதிராஜா 'அலைகள் ஓய்வதில்லை'யில் ஆரம்பித்து வைத்த கருமமிது. இளைஞர்களின் வாழ்க்கையின் லட்சியம் மற்றும் குறிக்கோள் காதலில் ஜெயிப்பது மட்டுமே, உலகம் காதலால் மட்டுமே ஆனது என்கிற மாதிரியான ஒரு மாயபிம்பத்தை அந்தப்படத்திலிருந்து தொடங்கிவைத்தார். விடலைத்தனமாக இளங்காதலர்கள் அசட்டுபிசட்டென்று காதலித்து விட்டு கிளைமாக்சில், ஊர் முழுவதும் தீப்பந்தங்களுடனும் அரிவாள்களுடனும் துரத்த ஒருவரையருவர் கைப்பிடித்து 18-ம் நம்பர் பஸ்ஸை பிடிக்கிற அவசரத்தோடு ஓடுவார்கள். சில்-அவுட்டில் அந்த காட்சி ஒரு வானவில்லுடனோ, சூரியஉதயத்துடனோ அப்படியே freeze ஆக 'காதல் என்றும் அழிவதில்லை - அழிவதென்றால் அது காதல் இல்லை' என்கிற மாதிரியான அசட்டு messageகயோடு (இயக்குநர் குரலில்) படம் முடியும். பார்வையாளர்களும் காதலர்கள் ஒன்றுசேர்ந்த திருப்தியோடு வீட்டுக்கு கிளம்புவார்கள்.

அப்படி வானவில்லை தாண்டி ஒடிய காதலர்கள் யதார்த்த உலகில் போராட முடியாமல் தடுமாறுவதை சித்தரிக்கின்ற படங்கள் மிக அரிது. அப்படிப்பட்ட படமாக இதை மிகுந்த யதார்த்தத்தோடு சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். (இவர் இயக்கிய முதல்படம் விக்ரம் நடித்த 'சாமுராய்') என்றாலும் அவர் வணிகரீதியாக சமரசம் செய்து கொண்ட காட்சிகள் சில, இது சினிமாதான் என்பதை துரதிர்ஷ்டவசமாக நமக்கு அவ்வப்போது நினைவுப்படுத்துகிறது.

O

மதுரை பஸ் ஸ்டாண்ட், முருகன் இட்லி கடை, சர்வோதய இலக்கியப் பண்ணை, தமிழக எண்ணெய்ப்பலகாரம் என்ற மதுரையின் முக்கியமான landmark-களை சில விநாடிகள் காட்டுகிற டைட்டில் காட்சிகளிலேயே படம் களைகட்டி விடுகிறது. இளங்காதல் ஜோடி ஒன்று ஊரை விட்டுப் போகிற திகில் காட்சிகளோடு படம் ஆரம்பமாகின்றது. காதலிக்காக காத்திருக்கின்ற அந்த இளங்காதலன் தோளில் மாட்டியிருக்கிற பையின் நுனியை பிய்க்கிற குளோசப் காட்சியிலேயே அவனின் தவிப்பை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பின்பு பஸ்ஸில் பயணிக்கிற அவர்களின் இருவர்களின் பார்வையிலும் மாறி மாறி அவர்கள் காதல் பிறந்து வளர்ந்த (?!) கதை சொல்லப்படுகிறது.

ஒரு பெண்ணின் வெட்கம் கலந்த பார்வைக்காகவும் புன்சிரிப்புக்காகவும் நான் சிறுவயதில் நாயாய் பேயாய் அலைந்ததையெல்லாம் நினைவுபடுத்தும்வகையில் அவர்களுக்குள் காதல் வளரும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும் அவர்களுக்குள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகிற காதல் வருகிற காட்சிகள் அழுத்தமாக சொல்லப்படாமல் just like that சொல்லப்பட்டிருப்பது ஒரு குறைதான். (இந்த வயதில் - அதுவும் இந்த காலகட்டங்களில் ஒரே பார்வையில் காதல் வருகிற கர்மமெல்லாம் சாத்தியம் என்பதை தெரிந்தேதான் சொல்கிறேன்)

O

தமிழ்ச்சினிமாவின் வழக்கப்படி ஒரு மோதலில்தான் அவர்களின் காதல் தொடங்குகிறது.

அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன்.

நான் குழந்தையென்றே நேற்றுநினைத்திருந்தேன்.அவன் பார்வையிலே என் வயதறிந்தேன்.

(சமீபத்திய கற்றதும் பெற்றதுமில் கூட இந்த வரிகளை பிடித்தமானமானதாக சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார்)

என்கிற நா.முத்துக்குமாரின் பாடல்வரிகளில் தேர்ந்த இலக்கியத்தரம் தெரிந்தாலும் இது சம்பந்தப்பட்ட காட்சிகள் சற்றும் பொருந்தாமல் படமாக்கப்பட்டிருக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். அந்தப் பாடலின் வரிகளின் படி படமாக்கப்பட்டிருந்தால் அது இவ்வாறு இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அவன் நெஞ்சு நிறைய காதலோடும் காமத்தோடும் ஒரு ஆணுக்கு பெண்ணிடம் இச்சை தரக்கூடிய பாகங்களை அழுத்தமாக பார்ப்பதும் அதனால் அதனால் அவள் வெட்கப்பட்டு (?!) இத்தனை நாள் தன்னை குழந்தையாக நினைத்துக் கொண்டிருந்தவள் அந்தப் பார்வையின் மூலம் தன்னை குமரியாக உணருகிறாள் என்பதாக படமாக்கப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் அந்த காட்சியோ அவன் அவளுடன் முறைப்புடன் சண்டை போடுவதாகவும் அதனாலேயே அவளுக்கு அவன் மீது காதல் வருவதாகவும் எடுக்கப்பட்டிருப்பதால் இந்த வரிகள் சற்றும் பொருந்தாமல் இருக்கின்றன.

O

நாயகி தன் காதலுடன் ஊரைவிட்டு விலகி பயணிக்கத் தொடங்குகிற அதே கணத்தில் அவளுடைய அம்மாமார்கள் இந்த விஷயம் தெரியாமல் வீட்டில் 'காதலுக்கு மரியாதை' திரைப்படத்தில் ஷாலினியும் விஜய்யும் ஊரைவிட்டுப் போகிற காட்சிகளை கண்கலங்க பார்த்துக் கொண்டிருப்பதும் அவளுடைய அப்பா வேறு யார் காதலையோ பிரிக்கும் முயற்சியில் பஞ்சாயத்து செய்துக் கொண்டிருப்பதும் நாடகத்தனம்.

நாயகி வயதுக்கு வந்ததற்காக நடத்தப்படும் மஞ்சள் நீராட்டுவிழா காட்சிகள் வெகு இயல்பாக ஒரு பாட்டின் பின்னணியில் சொல்லப்படுகிறது. அவள் குடும்பத்தார் என்ன ஜாதி என்பதை நேரடியாக கூறாமல் குறிப்பால் உணர்த்துவது சர்ச்சைகளை தவிர்ப்பதற்கான உத்தியாக இயக்குநர் நினைத்திருக்கலாம்.

அவர்கள் சென்னைக்கு வந்து சேர்ந்தவுடன்தான் கதையே வேகமாக நகருகிறது. நகரம் என்கிற மாயப்பிசாசு தன் கொடூர நகங்களால் அவர்களை பிறாண்டத் தொடங்குகிற யதார்த்தத்தை கண்டு நொந்துப் போகிற அவர்களை ஒரு கிறிஸ்துவ நண்பன் அடைக்கலமளித்து (அவனே எங்கோ ஒண்டிக் கொண்டிருக்கிறான்) அவர்கள் திருமணத்தை ஒரு ரோட்டோர பிள்ளையார் கோவிலில் நடத்திவைக்கிறான்.

தன் காதலியின் நகைகள் அனைத்தையும் - அவள் அணிந்திருக்கிற ஸ்கூல் யூனிபார்ம் உட்பட - விலக்கி விட்டு வரச் சொல்கிற, அவள் வீட்டுப் பொருட்களை உபயோகிக்க விரும்பாத அந்த சுயமரியாதையுள்ள இளைஞன், அவ்வளவு பெரிய நகரத்திற்கு எந்தவித முன்னேற்பாடுமில்லாமல் கையில் போதுமான அளவு பணமுமில்லாமல் செல்வான் - என்னதான் தவிர்க்க முடியாத அவசரம் என்றாலும் - என்பது சற்று பொருத்தமில்லாமல் தோன்றுகிறது.

O

எந்தவித முன்னேற்பாடுகளுமில்லாமல் அவர்கள் படும் அவஸ்தைகள் பரிதாபத்துக்குரியவை என்றாலும் சற்று விஸ்தாரமாகவே சொல்லப்படுகிறது. (அவள் மாதவிலக்கினால் அவஸ்தைப்படுகிற காட்சிகள் உட்பட) வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவர்கள் தெருத்தெருவாக அலைவதும் இருட்டி விட்டதால் நண்பனின் யோசனைப்படி சாயந்திரம், இரவுக்காட்சிகள் சினிமா பார்த்துவிட்டு திண்டிவனம் சென்று திரும்பும் அந்த காட்சிகள் (பின்னணியில் ஒலிக்கும் பாடல் மிக உருக்கமாக இருக்கிறது) யதார்த்ததிற்கு மிக நெருக்கமாகவே எடுக்கப்பட்டிருக்கின்றன.

மேன்ஷன் காட்சிகள் சிறப்பாக காண்பிக்கப்பட்டிருந்தாலும் ('சேவல் பண்ணை' என்கிற உவமையை பாலகுமாரனின் குறுநாவல் ஒன்றின் தலைப்பிலிருந்து உருவியிருக்கிறார் இயக்குநர்) அவர்களின் கல்யாண வரவேற்பிற்கு ஏற்பாடு செய்வதும் மணமகனும் மணமகளும் - அந்த பதட்டமான சூழ்நிலையிலும் - ஆனந்தக் கூத்தாடுவதும் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.

அவர்கள் சுடச்சுட குடித்தனம் நடத்தத் தொடங்குகிற அந்தப் பெண்ணின் சித்தப்பா அவர்களின் முகவரியை எப்படியோ கண்டுபிடித்து நேரில் வந்து உருக்கமாக பேசி நடித்து அவர்களை ஊருக்கு அழைத்துச் செல்கிறார். (தனது அப்பாவின் ஜாதி வெறியையும் சித்தப்பாவைப் பற்றியும் நன்றாக அறிந்து வைத்திருக்கக்கூடிய நாயகி இதை நம்பி ஊருக்கு புறப்படுவது சற்று நெருடலாக இருக்கிறது)

அந்த பயணத்தில் சித்தப்பாவிற்கும் நாயகனுக்கும் நடக்கிற உரையாடல் புதிதானது.

"நீங்க என்ன சாதி தம்பி?"

நாயகன் விறைப்பாக சொல்கிறான் "மனுச சாதி"

"அது சரி. மிருகத்துலயும் நெறைய சாதி இருக்கு. சிங்கம், சிறுத்தை, கழுதை, நெறைய இருக்கு. நீ என்ன சாதி. நாயா? பன்னியா? சொல்லுடா .. ஈனசாதிப் பயலே"

என்று அவர் உறுமும் போதுதான் அவரின் நிஜமான முகம் பார்வையாளர்களுக்கு உறைக்கிறது.

பிறகு அந்த புதுமணமக்கள் பெண்ணின் பெற்றோர்களால் பிரிக்கப்படுவதும் தொன்று தொட்டு வரும் வழக்கமாக அவள் இன்னொருவனை கல்யாணம் செய்து கொண்டு குழந்தை, குட்டியுடன் செளக்கியமாக வாழ்வதும் அவன் பைத்தியமாக திரிவதும் சில வருடங்களுக்குப் பிறகு நிகழ்வதாக சொல்லப்படுகிறது. அவனை பைத்தியமாக அலைவதை எதிர்பாராத சூழ்நிலையில் பா¡க்க நேரும் அவள் குற்ற உணர்ச்சி மிகுதியில் அவனை கட்டிபிடித்து கதறுவதும் இதனை ஆரோக்கியமான மனநிலையில் எதிர்கொள்ளும் அவள் கணவன் இருவரையும் ஆதரவாக அணைத்துச் செல்வதுடன் நிறைகிறது கதை.

(இந்த இடத்தில், பெண்கள் ஜாக்கிரதையானவர்கள்' என்று எழுதிய இரவிச்சந்திரனின் சிறுகதை ஒன்றின் வரிகள் நினைவிற்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. தன்னால் காதலிக்கப்பட்டவன் பைத்தியமாக அலைவதை காணச் சகியாமல் குற்ற உணர்ச்சியில் வருத்தப்பட்டாலும், கணவனையும் குழந்தையையும் உதறிவிட்டு சமூகத்தைப் பற்றி கவலைப்படாமல் அவனை தேடிப் போவதாக சொல்லப்படுவது எந்தளவிற்கு யதார்த்த உலகில் சாத்தியம் என்பது விவாததத்திற்குரியது)

ரயில் பயணத்தில் சந்தித்த ஒருவர் சொன்ன உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தக் கதை அமைக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் தெரிவிக்கிறார். இந்தச் சம்பவத்தை அவரிடம் சொன்ன அந்த கணவன், மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிற இளைஞனை மருத்துவமனையில் வைத்து பராமரித்து வருவதாக அடிக்குறிப்பு தெரிவிக்கிறது.

O

படத்தின் வருகிற பாத்திரங்கள் பெரும்பான்மையானவர்கள் புதுமுகங்கள் என்கிற செய்தி மிகுந்த வியப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக படத்தின் நாயகி சந்தியா. இவரின் முகபாவங்கள் பெரும்பான்மையான காட்சிகளில் இயல்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. (உதாரணமாக மஞ்சள் நீராட்டு விழாவில் அவரின் வயதான மாமா ஒருவர் குடிப்போதையில் தள்ளாடிக் கொண்டே அவளுக்கு மாலையிட வரும்போது அவள் காட்டுகிற முகபாவம்).

பாய்ஸில் பேண்ட் ஜிப்பை திறந்து போட்டுக் கொண்டு வருகிற குறும்பான இளைஞனா இவர்? என்கிற கேட்கிற அளவிற்கு பரத், இந்தப்படத்தில் மெக்கானிக்காக வித்தியாசம் காட்டியிருக்கிறார். மதுரை வட்டார வழக்கையும் சிறப்பாக உச்சரித்திருக்கிறார்.

ஒரு கையை இழந்த சித்தப்பா வேடத்தில் வருகிறவரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மெக்கானிக்கடையில் வேலைசெய்யும் அந்தச் சிறுவன், முகத்தில் அம்மைத் தழும்புகளுடன் விகாரமாக இருக்கும் பெண்ணின் அப்பா, அவரின் அம்மாவாக நடிக்கும் வயதான பெண்மணி, நண்பனாக வரும் சுகுமார் என்று ஒவ்வொருவரும் தம் பங்கை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருப்பதில் இருந்து இயக்குநர் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள இயலுகிறது.

பாடல்காட்சிகளைத் தவிர்த்து விஜய் மில்டனின் காமிரா வழக்கமான சினிமாத்தனத்தை தவிர்த்து, ஒரு டாக்குமெண்டரித் தனத்தோடு கதையை நிழல் போல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக இருந்து ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் இனிமையாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கிறது.

O

தமிழின் சிறப்பான படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

suresh kannan

Tuesday, January 11, 2005

இந்தவருட புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் (?!)
முன்பு இட்ட பதிவில் நானிட்ட அறிவிப்பை சில மணிநேரங்களுக்குள் மீறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எந்தவித முன்தீர்மானங்களுமின்றிதான் இன்று மாலை 4 மணியளவில் கண்காட்சிக்கு சென்றேன். அலுவலக நாள் என்பதாலும் மதிய நேரம் என்பதாலும் கூட்டம் மிதமாகவே இருந்தது.

வெளியே உள்ள பிளாட்பாரக்கடைகளில் பல நூல்கள் இருந்தாலும் குனிந்து தேடுவதில் சிரமமிருந்தது.

கண்காட்சியின் உள்ளே சிலபல பதிப்பக கடைகளை சுற்றியபின்னர் கிழக்கு பதிப்பகத்திற்கு சென்றேன். பா.ராகவனைப் பார்த்ததும் நான் கேட்ட முதல் கேள்வி:

"'ஜெயேந்திரர் அருளிய பொன்மொழிகள்' புத்தகம் இருக்கா?"

பான்பராக் வாயுடன் அடக்க முடியாமல் சிரித்தவரின் சற்று தொலைவில் நகர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தேன். எழுத்தாளர் என்கிற நிலையிலிருந்து பதிப்பாசிரியர் என்கிற நிலைக்கு உயர்வு பெற்று கிழக்கு பதிப்பகத்தின் வெற்றிக்கு மூலகாரணங்களுள் ஒருவராயிருக்கிற அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். புத்தக அட்டைகளை பாராட்டிய பின்னர் "யார் புத்தக அட்டைகளை வடிவமைக்கிறார்கள்?" என்கிற என் கேள்விக்கு தாம்தான் அதற்கான யோசனைகளை தருவதாகவும் தன் மேற்பார்வையில்தான் அட்டைகள் வடிவமைக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

"மக்களுக்கு நிஜமாகவே புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கூடியிருக்கிறதா? அல்லது பிட்ஸா சாப்பிடுவது மாதிரி இதுவும் பேஷன்களில் ஒன்றாகி விட்டதா? என்ற என் கேள்விக்கு 'பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் முரண்பட்ட செய்திகளினால் அலுப்பும் சலிப்பும் அடைந்திருக்கும் மக்கள் ஒரு மாற்றாக புத்தக வாசிப்பை அதிகம் தேர்ந்தெடுக்க முன்வந்திருக்கலாம்' என்றார். தன் புத்தகங்களான 'டாலர் தேசம்' மற்றும் '9/11' புத்தகங்கள் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறினார். சோம.வள்ளியப்பன் எழுதிய 'அள்ள அள்ளப் பணம்' என்கிற புத்தகம் விற்றுத் தீர்ந்து எவ்வளவு பிரதிகள் மட்டும் மீதமுள்ளன என்பதை கிரிக்கெட் ஸ்கோர் போர்டு போல் அவ்வப்போது மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஓவியர் அரவக்கோன் அவர்களை கிழக்கு பதிப்பக அரங்கின் முன் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். நண்பர்கள் ரஜினிராம்கி, பத்ரி, முத்துராமன் ஆகியோர்களையும் சந்தித்து உரையாட முடிந்தது ஒரு மகிழ்ச்சியான விஷயம். 'எனது பார்வை' என்கிற வலைப்பூவை எழுதுகிற மெய்யப்பனையும் ஒரு அகஸ்மாத்தான சூழ்நிலையில் சந்தித்து உரையாட முடிந்தது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் என்னை ஞாபகப்படுத்திவிட்டு பேசிக் கொண்டிருக்கும் போது (அவரது 'உலக சினிமா' என்கிற புத்தகம் பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது) உலக சினிமா புத்தகத்திற்காக மூன்று வருடங்கள் உழைத்ததாக கூறினார். இனிய உதயம் என்கிற இதழில் ஜெயமோகன் அளித்திருக்கிற பேட்டியில் 'எஸ்.ரா சினிமாவுக்கு வந்தபிறகுதான் நிறைய எழுதவாரம்பித்தார்' என்கிற கருத்தை உடனடியாக மறுத்தார். 'துணையெழுத்து' தொடருக்காக விகடன் அலுவலகத்தினர் தன்னை அணுகிய போது 'என் எழுத்துக்கள் எதனையும் எடிட் செய்யக்கூடாது' மற்றும் 'தான் விரும்புகிற மாதிரியான ஓவியங்களுடனும் லே-அவுட்களின் படியும்தான் தொடர் பிரசுரமாக வேண்டும்' என்கிற கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்' என்றார்.
கண்காட்சியில் நான் கண்ட குறைபாடுகள்:

1) கழிப்பறைக்கு செல்ல வேண்டுமானால் அரங்கத்தை விட்டு வெளியேறிய பின்னர்தான் செல்ல முடியும். மறுபடியும் உள்ளே வரவேண்டுமென்றால் புதிதாக நுழைவுச்சீட்டு வாங்க வேண்டும்.

2) வயதானவர்கள் இளைப்பாற அங்கங்கே ஓய்வு அரங்கங்கள் இல்லை.

3) தாகம் எடுத்தால் குடிக்க நீர் தொட்டிகள் எங்கும் தட்டுப்படவில்லை.

பலபேர் புத்தகங்கள் வாங்குவதைக் காட்டிலும் பாப்கார்ன் போன்ற நொறுக்கு தீனிகள் தின்பதிலும் காண்டீன் எங்கே விசாரிப்பதையும் பார்க்க எரிச்சலாக வந்தது. நூல் வாங்க வந்த இடத்தில் சாப்பாடு தேடுபவர்கள், சாப்பாடு கிடைக்குமிடத்தில் இலக்கியம் தேடுவார்களா என்றால் இல்லை.

O
நான் வாங்கிய புத்தகங்களை பட்டியலிட்டு விடுகிறேன்.

கண்காட்சிக்கு வெளியே உள்ள பிளாட்பாரக்கடைகளில் வாங்கியது:

யானை, குதிரை, ஒட்டகம் (நாவல்) - ஞானராஜசேகரன்
பெரியார் பன்முகம் - ச.அறிவுக்கரசுஎன் வாசிப்பனுபவத்தில் சுஜாதாவின் நாவல்களை தாண்டி வெகுதூரம் வந்துவிட்டாலும் வெகுஜனங்களை சென்றடையும் விதத்தில் எழுதும் அவரின் எழுத்து ஆளுமையுடனான நடையில் எனக்கு எப்போதுமே பிரேமை உண்டு. எனவே ரொம்ப நாட்களாக தேடிக் கொண்டிருந்த அவரின் பல பழைய நாவல்களையும் மறுபதிப்பு செய்யப்பட்ட நாவல்களையும் வாங்கினேன். சில நாவல்கள் பழைய பதிப்பில் குறைந்த விலைக்கு கிடைத்ததும் ஒரு காரணம்.

உயிராசை - சிறுகதைத்தொகுதி
தேவன் வருகை - விஞ்ஞானக்கதைகள்
பாதி ராஜ்யம் - சிறுகதைகள்
தோரணத்து மாவிலைகள் - கட்டுரைகள்
வடிவங்கள் - விஞ்ஞானக் கதைகள்
இருள் வரும் நேரம் - நாவல்
கம்ப்யூட்டர் கிராமம் - நாவல்
நடனமலர் - கட்டுரைகள்
24 ரூபாய்தீவு - நாவல்
பேசும் பொம்மைகள் - நாவல் (1991 ல் குமுதம் இதழில் தொடராக வந்தது மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது)

மற்ற நூல்கள்:
ஏழாம் உலகம் - நாவல் - ஜெயமோகன்
காகித மலர்கள் - நாவல் - ஆதவன்
இரவுக்கு முன்பு வருவது மாலை - சிறுகதைகள் - ஆதவன்
வாத்தியார் - சிறுகதைகள் - ம.வெ. சிவகுமார்.
என்றும் நன்மைகள் - சிறுகதைகள் - க.சீ.சிவகுமார்.

காலச்சுவடு இதழின் 2000-2001-ன் பழைய இதழ்கள்.
காலம் - மாத இதழ் (ஜீன் 2004)

O

நான் முக்கியமாக வாங்க நினைத்தது பெரியாரைப் பற்றின நூல்களை. திராவிட கழகத்தினரின் அரங்கம் கண்ணில் தட்டுப்படவில்லை. அடுத்த சுற்றில் பார்க்க வேண்டும்.


suresh kannan

Saturday, January 08, 2005

ஒரு 'ஆய்' படம்

'காதல்' திரைப்படத்தைப்பற்றி பத்திரிகை விமர்சனங்களும் நண்பர்களும் 'ஆகா ஓகோ' என்று புகழ்கிறார்களே என்று அந்தப்படத்தைப் பார்க்க குடும்பத்தோடு சென்றேன். சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன் என்றாலும் யாமறிந்த வட்டார மொழிகளிலேயே மதுரை வட்டார மொழியின் இனிமையை வேறெதிலும் காண இயலவில்லை. 'ஏ புள்ள, என்னா என் கிட்ட வம்பு பண்றே, சரஸ்ஸாடுயிவே, போய்றிரிரி....' என்று பரத் மதுரை தமிழில் நாயகியை பைக்கில் உறுமிக்கொண்டே வந்து மிரட்டுகிற காட்சியை தொலைக்காட்சியில் கண்டவுடனே இந்தப் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றிவிட்டது.

ஆனால் நான் பார்க்கவிரும்பிய படங்களை உடனே பார்க்கவிடாமல் எந்த துர்தேவதையாவது எனக்கு சாபம் கொடுத்திருக்கிறதோ என்னமோ, அந்தப் படத்திற்கு அனுமதிச்சீட்டு கிடைக்காமல் அரங்கம் நிரம்பிவிட்டதாக தகவல் கிடைத்தது. முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ள படி, சினிமாவுக்கு என்று கிளம்பினால் எந்த ஒரு எழவு சினிமாவையாவது பார்க்காமல் வீடு திரும்புவதில்லை என்கிற நம் தமிழ் மரபுப்படி, இன்னொரு வேறுவழியில்லாத சாய்ஸாக கிடைத்ததுதான் 'ஏய்'. இது A சர்டிபிகேட் வழங்கப்பட்ட படம் என்பதால் '18 வயதிக்குட்பட்டவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது' என்று கொட்டை எழுத்தில் போர்டு தொங்கியது. என் நான்கு வயது மகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது, கவுண்டரில் டிக்கெட் வழங்கும் பெண்மணி தானாகவே முன்வந்து யோசனை கூறினார். "படம் ஆரம்பிச்சதும் தூங்கிடுவான்னு சொல்லுங்க"

Oஇந்தப்படத்திற்கு விமர்சனம் எழுதுவதை விட &*(^&(*(_ செய்யலாம் என்று தோன்றினாலும், என்னைப் போல நண்பர்கள் யாரும் தப்பித்தவறி கூட இந்தப்படத்திற்கு சென்றுவிடக்கூடாது என்கிற நல்லெண்ணமே இதை எழுதக் காரணம்.

கதை என்று ஒரு எழவும் கிடையாது. பழைய கால பத்திரிகைப்பாணியில் எழுதினால், சரத்குமார் என்கிற பெரிய வாணலியை எடுத்துக் கொள்ளவும். அதில் பாட்ஷா, இந்தியன், ரமணா, சாமி பிராண்ட் மசாலா பொடிகளை உபயோகித்து, காதைப்பிளக்கிற சகிக்காத பாடல்களை ஊற்றி, நமீதா, மும்தாஜ் என்கிற கருவேப்பிலை கொத்தமல்லிகளை போட்டு வேகாமலேயே இறக்கிவைத்தால் ரெடியாகிற பண்டம்தான் 'ஏய்'

வழக்கமாக நம் தமிழப்பட இயக்குநர்கள் லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். ஒரு மாறுதலுக்கு இந்த இயக்குநர் 'டன் என்ன விலை' என்று கேட்டிருக்கிறார். பொதுமக்களின் பார்வையில் காவல்துறையினர் எவ்வளவு கேவலமாக தோற்றந்தருகின்றனர் என்று சரத் காவல் உயர்அதிகாரியிடம் விளக்குகிற காட்சியிலும் (கான்ஸ்டபிள், எஸ்.ஐ. என்று போலீஸ்ல எத்தன போஸ்டு இருந்தாலும் மக்கள் போலீஸ்காரன 'மாமா'ன்னுதான் கூப்பிடறாங்க) வில்லன் கோட்டா சீனிவாசராவ் சரத்தின் வீட்டுக்கே வந்து மிரட்டுகிற காட்சியிலும் (எல்லாரும் சின்னப்புள்ளைல அணில், ஆடுன்னுதான் பாடம்படிப்பாங்க, நான் அப்பவே அருவா, ஆசிட்டுன்னு பாடம் படிச்சவன்) வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் மீது லேசாக வெளிச்சம் படுகிறது.

O
சரத்குமாரின் பெரிய பலமே அவரது புஜபலபராக்கிரம ஆஜானுபாகுவான உடம்புதான். மனிதர் பத்துப்பேரை அடித்து வீழ்த்தினாலும் சிரிக்க தோன்றவில்லை. டியூப்லைட்டுக்கு சண்டை பேண்ட் மாட்டின மாதிரி இருக்கிற சுள்ளான்கள் இதை செய்யும் போதுதான் சிரிக்க தோன்றுகிறது. ஆனால் படத்தின் பிற்பாதியில் இதுவே ஓவர்டோஸ் ஆகிவிடும் போது எரிச்சலே மண்டுகிறது. ஒரு காட்சியில் சரத் முழு நிர்வாணமாகவும் ஆஷிஷ் வித்யார்த்தி முக்கால் நிர்வாணமாகவும் போலீஸ் ஸ்டேஷனில் சண்டை போடுகின்றனர். இந்த காட்சிக்கே டபுள் A கொடுக்கலாம் போலிருக்கிறது.

கதாநாயகி நமீதாவின் இடுப்பளவு சரத்தின் மார்பளவை விடப் பெரிதாக இருக்கிறது. இவர் தொப்புள் தெரியாமல் வருகிற காட்சிகளை கண்டுபிடிக்கச்சொல்லி ஒரு போட்டியே வைக்கலாம். 'அர்ஜீனா அர்ஜீனா' பாடலை ஏற்கெனவே தொலைக்காட்சியில் கொஞ்ஞீண்டு பார்த்து இங்கே பிரம்மாண்ட திரையில், 'வந்ததுக்கு இதுதான் மிச்சம்' என்று எண்ணிக்கொண்டே இருக்கையில் வசதியாக சாய்ந்து பார்க்காமென்றால், மகள் என் சட்டையைப் பிடித்து இழுத்து காதில் கிசுகிசுக்கிறாள் "அப்பா ஒன் பாத்ரூம் போகணும்".

அடிப்பாவி.

மறைந்த வில்லன் நடிகர் அசோகனின் மகன் இதில் ஒரு வில்லனாக வருகிறார். ஆனால் இஞ்சி தின்ற ஏதோ மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு போதாதற்கு ஈ என்று இளித்துக் கொண்டே வரும் போது எரிச்சலே வருகிறது. அடுத்த படத்திலாவது நல்ல இயக்குநர் கையில் சிக்க வேண்டும். இசையமைப்பாளர் sriகாந்த் தேவா இதற்கு முன் சாவுமேளக் கச்சேரிகள் லட்சமாவது செய்திருப்பார் போல. ஒரு பாடலையும் காதைப் பொத்திக் கொள்ளாமல் கேட்க முடியவில்லை.

வடிவேலு இருக்கவே கொஞ்சமாவது பிழைத்தோமோ என்னமோ?

இயக்குநர் கண்ணில் சிக்கினால் "ஏய்" என்னடா படம் எடுத்திருக்கே? என்று சட்டையைப் பிடிக்க வேண்டும் போலிருக்கிறது.

சன் டி.வி. திரைப்பட விமர்சன பாணியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு முடிவாக சொல்கிற பஞ்ச் வசன பாணியில் சொன்னால்

ஏய் - ஆய்.

suresh kannan

Wednesday, January 05, 2005

என் நினைப்பில் மண்ணைப் போட்ட செல்வராகவன்

கனவில் கூட வந்து மிரட்டுகிற சுனாமி அலைகளால் ஏற்பட்ட சீரழிந்தவர்களைப் பற்றின செய்திகளை தொலைக்காட்சியில் பார்க்க நேரும் போது, குறிப்பாக குழந்தைகளின் சடலங்களைப் பார்க்கும் போது கண்ணீர் பொங்குவதை தவிர்க்க முடிவதில்லை. எதிர்பாராத இந்த சோகத்தில் மறைந்து போன அனைவருக்கும் என் கண்ணீர் அஞ்சலி. இந்த சூழ்நிலையில் நம் தமிழிணைய நண்பர்கள் செய்த சேவைகள், (குறிப்பாக நண்பர் ரஜினி ராம்கி) மிகுந்த பாராட்டுக்குரியது. உடல்ரீதியாக எந்த சேவையையும் செய்ய முடியாதிருந்த சூழ்நிலையிருந்த நான், என்னால் இயன்ற பொருளாதார உதவியை நம்பகமான நிறுவனம் ஒன்றின் மூலமாக செய்து சிறிதளவு புண்ணியத்தை தேடிக் கொண்டேன்.

அலுவலகத்தில் ஏற்பட்டிருக்கிற தீவிர பணிஅழுத்தத்தின் காரணமாக இணையத்தின் பக்கம் அவ்வப்போது எட்டிப்பார்க்க நேர்ந்த போது நிறைய புது வலைப்பதிவுகளை காண நேர்ந்தது. கூடுமானவரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது பதிய வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட என் பதிவு நாகப்பட்டிணம் கடற்கரை மாதிரி வெறிச்சோடி போயிருப்பதை காணும் போது சோகமாக உணர்ந்து, இன்றைக்கு ஏதாவது எழுதியேயாக வேண்டும் என்று பல்லைக்கடித்துக் கொண்டு நேரத்தை ஒதுக்கி வந்துவிட்டேன்.

O

டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் நாளன்று (அதாவது சுனாமிக்கு முந்தைய நாள், இன்னும் ஒரு வருடத்திற்காவது இந்த வார்த்தையின் பாதிப்பு இருக்கும் போல) விடுமுறை என்பதால், தமிழ்ச்சினிமா பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டதே என்று யோசிக்கும் போது என் இல்லத்திற்கு அருகிலிருக்கிற திரையரங்கில் 'தேசம்' என்கிற, நான் பார்க்கவிரும்பிய படம் திரையிடப்பட்டிருப்பது நினைவுக்கு வர (இந்தப்படத்தைப் பற்றி இணையத்தில் யாரும் மூச்சுவிடவில்லையே? ஏன்?) அங்கே போனேன். ஆனால் நல்ல படங்கள் எல்லாம் ஒரு வாரத்திற்கு மேல் ஓடாது என்கிற நம் தமிழ்ச்சினிமா தலைவிதியின் படி அந்தப்படம் மாற்றப்பட்டு ஏதோ கச்சடாப்படம் திரையிடப்பட்டிருந்தது.

சினிமா பார்க்க என்று கிளம்பினால் கட்டாயம் ஏதாவதுதொரு சினிமா பார்த்துவிட்டே வீடு திரும்ப வேண்டும் என்கிற நம் தமிழ் வழக்கப்படி (வேறு எந்த ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்யும் போது இவ்வளவு பிடிவாதமாக செய்துவிட்டு திரும்புகிறோமா?) சற்று தூரத்தில் இருக்கிற இன்னொரு திரையரங்கிற்கு சென்ற போது 7/G Rainbow colony திரையிடப்பட்டிருந்ததை அறிய முடிந்தது. இதுவும் நான் பார்க்கவிரும்பி, விமர்சனங்களினால் தயங்கி தவறவிட்ட திரைப்படம் என்பதால் சற்று அரைமனதுடனேயே உள்ளே சென்றேன். என்றாலும் அவரது முந்தைய படமான 'காதல் கொண்டேன்' எனக்கு நம்பிக்கையளித்திருந்ததினால் மனம் தளரவில்லை.

O

இந்தக்காலத்து விடலைப் பசங்களின் குணாதியசங்களை அச்சாக பிரதிபலிக்க முயன்று அதில் சற்று வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர். அப்பன்காரனை 'கிழப்போல்ட்டு' 'பாடு' (இதில் முதலெழுத்தை சற்று மிருதுவாக உச்சரிக்க வேண்டும்) என்று அர்ச்சிப்பதில் இருந்து வேலைக்காரி துணிதுவைக்கும் போது சேலை விலகியிருப்பதை ஒளிந்திருந்து வெறித்து பார்ப்பது என ஒரு விஷயத்தையும் விடாமல் கதாநாயகன் பார்வையில் மிக உற்சாகமாக தொடங்குகிறது படம். இந்த சமாச்சாரங்கள் சற்று ஓடி களைத்த போது கதாநாயகி எண்ட்ரி.

வழக்கம் போல் கதாநாயகன் அவள் கவனத்தை கவரும் முயற்சியில் ஈடுபட அவளோ வழக்கமான கதாநாயகி போல் முதலில் சண்டை போட்டுவிட்டு அடுத்த ரீலிலிலேயே டூயட் பாடாமல் ஓடும் பேருந்தில் அவனை செருப்பால் அடிக்கிறாள். அதை வாங்கிக் கொண்டு உருக்கமாக வசனம் பேசும் நாயகன் இத்தோடு அவளை விட்டுவிட்டு உருப்படியாக வேறு வேலை ஏதாவது பார்ப்பான் என்று பார்த்தால் திரும்பவும் இவளையே சுற்றி வருகிறான். (என்ன கர்மம்டா)

when the rape is inevitable, just lay down and enjoy it என்கிற ஆதார இச்சையின் படி அவன் தொந்தரவு தாங்காமல் அவனை காதலிக்கத் தொடங்கி, அவனை உருப்பட வைத்து, தன் குடும்ப சூழ்நிலையினால் அவனை மணக்க முடியாமல் போகிவிடுமோ என்கிற காரணத்தினால், இத்தனை நாள் அவன் நாயாக தன்னை சுற்றிய காரணத்திற்காக தன்னையே அவனுக்கு ஒரு நாள் இலவசமாக வழங்குகிறாள். ஒரு விபத்தில் சிக்கி இறந்து போகிற அவளையே நினைத்து மனப்பிறழ்வடையும் நாயகனுக்கு அவள் ஆவி ரூபத்தில் (?!) அவ்வப்போது வந்து ஆறுதல் சொல்கிறாள்.

O

செல்வராகவன் இந்தப்படத்தை எடுத்திருக்கும் நேரத்தில் பரங்கிமலை ஜோதி தியேட்டர்களில் பிரத்யேகமாக ஓடும் %^*($@ படங்களை எடுத்திருந்தால் சற்று காசாவது பார்த்திருக்கலாம். ஆனால் பேரும் புகழும் கிடைக்கவேண்டுமே என்பதினால் தமிழ்ப்படமாக எடுக்க முனைந்திருக்கிறார் போலிருக்கிறது.
வழக்கமான விடலைப்பசங்களின் கலாட்டாவோடு ஆரம்பிக்கிற போதே, கதாநாயகி வந்து அவளை திருத்தி மணந்து கொள்வார் என்று நான் யோசித்து வைத்திருந்ததற்கு ஏற்பவே படத்தின் காட்சிகள் நகர்ந்தன. ஆனால் இப்படியே முடித்திருந்தால் இயக்குநருக்கு வித்தியாசமானவர் என்ற பெயர் கிடைத்திருக்காதே? எனவே நாயகி தன் கற்பை ஒரு நாள் இலவசமாக வழங்குகிறாற் போலான முற்போக்கான காட்சியை வைத்து நகர்த்தியிருக்கிறார். ஆனால் நாயகி ஆவியாக வந்து அந்த 'முற்போக்கு' பட்டத்தையும் பிடுங்கிக் கொள்ளும் போது இயக்குநர் மீது பரிதாபமே ஏற்படுகிறது.

சிறப்பம்சமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் யுவன்சங்கர் ராஜாவின் இசையை சொல்லலாம். சில பாடல்கள் (கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை) கேட்க இனிமையாக இருக்கின்றன, ஏற்கெனவே எங்கேயோ கேட்டிருக்கிறோமே என்கிற உணர்வை ஏற்படுத்தினாலும். நாயகியாக வந்த 'சோனியா அகர்வாலின்' நடிப்பு சில காட்சிகள் மிக இயல்பாக இருக்கிறது.

O

பெரும்பான்மையான தமிழ்ச்சினிமாக் குப்பைகளில் இந்தப் படத்தையும். தைரியமாகச் சேர்க்கலாம்.

suresh kannan