Wednesday, January 05, 2005

என் நினைப்பில் மண்ணைப் போட்ட செல்வராகவன்

கனவில் கூட வந்து மிரட்டுகிற சுனாமி அலைகளால் ஏற்பட்ட சீரழிந்தவர்களைப் பற்றின செய்திகளை தொலைக்காட்சியில் பார்க்க நேரும் போது, குறிப்பாக குழந்தைகளின் சடலங்களைப் பார்க்கும் போது கண்ணீர் பொங்குவதை தவிர்க்க முடிவதில்லை. எதிர்பாராத இந்த சோகத்தில் மறைந்து போன அனைவருக்கும் என் கண்ணீர் அஞ்சலி. இந்த சூழ்நிலையில் நம் தமிழிணைய நண்பர்கள் செய்த சேவைகள், (குறிப்பாக நண்பர் ரஜினி ராம்கி) மிகுந்த பாராட்டுக்குரியது. உடல்ரீதியாக எந்த சேவையையும் செய்ய முடியாதிருந்த சூழ்நிலையிருந்த நான், என்னால் இயன்ற பொருளாதார உதவியை நம்பகமான நிறுவனம் ஒன்றின் மூலமாக செய்து சிறிதளவு புண்ணியத்தை தேடிக் கொண்டேன்.

அலுவலகத்தில் ஏற்பட்டிருக்கிற தீவிர பணிஅழுத்தத்தின் காரணமாக இணையத்தின் பக்கம் அவ்வப்போது எட்டிப்பார்க்க நேர்ந்த போது நிறைய புது வலைப்பதிவுகளை காண நேர்ந்தது. கூடுமானவரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது பதிய வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட என் பதிவு நாகப்பட்டிணம் கடற்கரை மாதிரி வெறிச்சோடி போயிருப்பதை காணும் போது சோகமாக உணர்ந்து, இன்றைக்கு ஏதாவது எழுதியேயாக வேண்டும் என்று பல்லைக்கடித்துக் கொண்டு நேரத்தை ஒதுக்கி வந்துவிட்டேன்.

O

டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் நாளன்று (அதாவது சுனாமிக்கு முந்தைய நாள், இன்னும் ஒரு வருடத்திற்காவது இந்த வார்த்தையின் பாதிப்பு இருக்கும் போல) விடுமுறை என்பதால், தமிழ்ச்சினிமா பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டதே என்று யோசிக்கும் போது என் இல்லத்திற்கு அருகிலிருக்கிற திரையரங்கில் 'தேசம்' என்கிற, நான் பார்க்கவிரும்பிய படம் திரையிடப்பட்டிருப்பது நினைவுக்கு வர (இந்தப்படத்தைப் பற்றி இணையத்தில் யாரும் மூச்சுவிடவில்லையே? ஏன்?) அங்கே போனேன். ஆனால் நல்ல படங்கள் எல்லாம் ஒரு வாரத்திற்கு மேல் ஓடாது என்கிற நம் தமிழ்ச்சினிமா தலைவிதியின் படி அந்தப்படம் மாற்றப்பட்டு ஏதோ கச்சடாப்படம் திரையிடப்பட்டிருந்தது.

சினிமா பார்க்க என்று கிளம்பினால் கட்டாயம் ஏதாவதுதொரு சினிமா பார்த்துவிட்டே வீடு திரும்ப வேண்டும் என்கிற நம் தமிழ் வழக்கப்படி (வேறு எந்த ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்யும் போது இவ்வளவு பிடிவாதமாக செய்துவிட்டு திரும்புகிறோமா?) சற்று தூரத்தில் இருக்கிற இன்னொரு திரையரங்கிற்கு சென்ற போது 7/G Rainbow colony திரையிடப்பட்டிருந்ததை அறிய முடிந்தது. இதுவும் நான் பார்க்கவிரும்பி, விமர்சனங்களினால் தயங்கி தவறவிட்ட திரைப்படம் என்பதால் சற்று அரைமனதுடனேயே உள்ளே சென்றேன். என்றாலும் அவரது முந்தைய படமான 'காதல் கொண்டேன்' எனக்கு நம்பிக்கையளித்திருந்ததினால் மனம் தளரவில்லை.

O

இந்தக்காலத்து விடலைப் பசங்களின் குணாதியசங்களை அச்சாக பிரதிபலிக்க முயன்று அதில் சற்று வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர். அப்பன்காரனை 'கிழப்போல்ட்டு' 'பாடு' (இதில் முதலெழுத்தை சற்று மிருதுவாக உச்சரிக்க வேண்டும்) என்று அர்ச்சிப்பதில் இருந்து வேலைக்காரி துணிதுவைக்கும் போது சேலை விலகியிருப்பதை ஒளிந்திருந்து வெறித்து பார்ப்பது என ஒரு விஷயத்தையும் விடாமல் கதாநாயகன் பார்வையில் மிக உற்சாகமாக தொடங்குகிறது படம். இந்த சமாச்சாரங்கள் சற்று ஓடி களைத்த போது கதாநாயகி எண்ட்ரி.

வழக்கம் போல் கதாநாயகன் அவள் கவனத்தை கவரும் முயற்சியில் ஈடுபட அவளோ வழக்கமான கதாநாயகி போல் முதலில் சண்டை போட்டுவிட்டு அடுத்த ரீலிலிலேயே டூயட் பாடாமல் ஓடும் பேருந்தில் அவனை செருப்பால் அடிக்கிறாள். அதை வாங்கிக் கொண்டு உருக்கமாக வசனம் பேசும் நாயகன் இத்தோடு அவளை விட்டுவிட்டு உருப்படியாக வேறு வேலை ஏதாவது பார்ப்பான் என்று பார்த்தால் திரும்பவும் இவளையே சுற்றி வருகிறான். (என்ன கர்மம்டா)

when the rape is inevitable, just lay down and enjoy it என்கிற ஆதார இச்சையின் படி அவன் தொந்தரவு தாங்காமல் அவனை காதலிக்கத் தொடங்கி, அவனை உருப்பட வைத்து, தன் குடும்ப சூழ்நிலையினால் அவனை மணக்க முடியாமல் போகிவிடுமோ என்கிற காரணத்தினால், இத்தனை நாள் அவன் நாயாக தன்னை சுற்றிய காரணத்திற்காக தன்னையே அவனுக்கு ஒரு நாள் இலவசமாக வழங்குகிறாள். ஒரு விபத்தில் சிக்கி இறந்து போகிற அவளையே நினைத்து மனப்பிறழ்வடையும் நாயகனுக்கு அவள் ஆவி ரூபத்தில் (?!) அவ்வப்போது வந்து ஆறுதல் சொல்கிறாள்.

O

செல்வராகவன் இந்தப்படத்தை எடுத்திருக்கும் நேரத்தில் பரங்கிமலை ஜோதி தியேட்டர்களில் பிரத்யேகமாக ஓடும் %^*($@ படங்களை எடுத்திருந்தால் சற்று காசாவது பார்த்திருக்கலாம். ஆனால் பேரும் புகழும் கிடைக்கவேண்டுமே என்பதினால் தமிழ்ப்படமாக எடுக்க முனைந்திருக்கிறார் போலிருக்கிறது.
வழக்கமான விடலைப்பசங்களின் கலாட்டாவோடு ஆரம்பிக்கிற போதே, கதாநாயகி வந்து அவளை திருத்தி மணந்து கொள்வார் என்று நான் யோசித்து வைத்திருந்ததற்கு ஏற்பவே படத்தின் காட்சிகள் நகர்ந்தன. ஆனால் இப்படியே முடித்திருந்தால் இயக்குநருக்கு வித்தியாசமானவர் என்ற பெயர் கிடைத்திருக்காதே? எனவே நாயகி தன் கற்பை ஒரு நாள் இலவசமாக வழங்குகிறாற் போலான முற்போக்கான காட்சியை வைத்து நகர்த்தியிருக்கிறார். ஆனால் நாயகி ஆவியாக வந்து அந்த 'முற்போக்கு' பட்டத்தையும் பிடுங்கிக் கொள்ளும் போது இயக்குநர் மீது பரிதாபமே ஏற்படுகிறது.

சிறப்பம்சமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் யுவன்சங்கர் ராஜாவின் இசையை சொல்லலாம். சில பாடல்கள் (கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை) கேட்க இனிமையாக இருக்கின்றன, ஏற்கெனவே எங்கேயோ கேட்டிருக்கிறோமே என்கிற உணர்வை ஏற்படுத்தினாலும். நாயகியாக வந்த 'சோனியா அகர்வாலின்' நடிப்பு சில காட்சிகள் மிக இயல்பாக இருக்கிறது.

O

பெரும்பான்மையான தமிழ்ச்சினிமாக் குப்பைகளில் இந்தப் படத்தையும். தைரியமாகச் சேர்க்கலாம்.

suresh kannan

9 comments:

Anonymous said...

ஏறக்குறைய என்னுடைய பார்வையை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். நன்றி

பாலாஜி, சென்னை

By: balaji

Anonymous said...

When everybody stayed away from revealing the climax(that the heroine dies), you broke the egg:). Either way, I won't miss this movie. For watching these stereo typical movies, I will be content with watching "Indiana Jones" series again and again.

By: Raj Chandra

Anonymous said...

¿øÄ ¸¡Äõ ¿£í¸ À¼õ À¡÷ì¸ §À¡É§À¡Ð '¾¨Ä' À¼õ µ¼¨Ä. '¾¨Ä' À¼ò¨¾ À¡ò¾¢Õó¾¡ ±ýÉ ¦º¡øĢ¢ÕôÀ£í¸§Ç¡...

By: ‚¸¡óò

Vijayakumar said...

கீழ்கண்ட என் பதிவை பார்க்க...

http://halwacity.blogspot.com/2004/12/blog-post_11.html

Mookku Sundar said...

சுரேஷ்,

இது அநியாயம். கண்டிப்பாக சாதாரண குப்பை படங்களின் வரிசையில் சேர்க்கக்கூடியதல்ல 7G. படத்தில் பல காட்சிகள் யதார்த்தமாக இருக்கின்றன.
உணர்வு ரிதியாக இருக்கிறது. சாதாரண படங்கள் பேசத்தயங்கும் யதார்த்தத்தை பளீரேன பதிவு செய்திருக்கிறார். மூட் அவுட் ஆகியிருக்கும்போது பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

Anonymous said...

இறந்தவரை நினைத்து அவர் உயிருடன் இருப்பதாகக் கருதி வாழ்கிற ஒரு தீவிரமான மனநிலை பாதிப்பினை தெளிவாகச் சொல்லியிருக்கும் காட்சிகளை 'ஆவி' என்ற பிற்போக்குத்தனமான கான்செப்டுடன் சர்வசாதாரணமாக ஒப்பிட்டு எழுதிவிட்டீர்களே. எனக்கு இந்தப் படம் ஓரளவு நிறைவை அளித்தது. செல்வராகவன் பற்றிய நம்பிக்கையையும் அளித்தது.

By: Meenaks

Anonymous said...

இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் உதவிப் பொருட்களை அனுப்பி வைக்கும் பத்ரி போன்றவர்கள் மத்தியில் என்னுடைய வேலையெல்லாம் ஒன்றுமேயில்லை சுரேஷ். பாதிக்கப்பட்ட பகுதிகள் எங்கள் ஊர்ப்பக்கம் என்பதால் கொஞ்சம் தனிக்கவனம் அவ்வளவுதான். என்மீது நம்பிக்கை வைத்து பணத்தை அனுப்பிய இணைய நண்பர்களுக்கு வெறுமனே 'நன்றி' சொல்ல முடியவில்லை. வேறு ஏதாவது எனக்கு திருப்தியாக வார்த்தைகள் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

By: J. Rajni Ramki

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டங்கள் அளித்த நண்பர்களுக்கு நன்றி.

அல்வாசிட்டி விஜய்:

உங்கள் விமர்சனம் பயங்கர காட்டடியாய் இருக்கிறது. ;-)


மூக்கர்:

உங்களுடைய மற்றும் பிரகாசரின் உணர்ச்சிவசப்பட்டு பாராட்டிய விமர்சனங்களினால்தான் படத்திற்கே சென்றேன். :-)

மீனாக்ஸ்:

அவன் மனப்பிறழ்வு நிலையை அடைந்துவிட்டான் என்பதை முன்னமே கூறிவிட்டேன். என்றாலும் அந்த காட்சிகள் திறமையாக நிறுவப்படாததால் ஒரு பாமரனின் பார்வையில் அவள் ஆவி என்றே தோன்றக்கூடும்.

ரஜினிராம்கி:

தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு, தனிப்பட்ட பலர்களின் காலத்தினால் செய்யப்பட்ட உதவி மிகுந்த பாராட்டுக்குரியது.

Anonymous said...

மத்தியத்தர குடும்பங்களில் நடக்கும் சில நிகழ்வுகள் மிக இயல்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக நாயகனின் அப்பா விஜயன் பேசும் வசனங்கள்.