எச்சரிக்கை: பசு வதையைப் பற்றிய வீடியோ. மிகக் குரூரமாக உள்ளது. இளகிய மனம்
கொண்டவர்கள் பார்க்க வேண்டாம். குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்காதீர்கள்.
ஹரன் பிரசன்னா பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட இந்த வீடியோவினால் மனச்சாட்சி உசுப்பப்பட்டு நேற்றிரவு தூக்கத்தையும் நிம்மதியையும் இழந்தேன். அடிமாடுகளாக கேரளாவிற்கு கொடுமையாக கடத்தப்படும் பசுக்களைப் பற்றி அச்சு ஊடகங்களில் வாசித்திருக்கிறேன் என்றாலும் அவை குரூரமாக கொல்லப்படுவதை காட்சி ஊடகமாக பார்க்க் நேர்ந்தது இதுவே முதன்முறை.
நான் மிதமான அசைவ உணவுப்பழக்கத்தைக் கொண்டவன். என்றாலும் அசைவ உணவை நான் எந்த வகையிலும் நியாயப்படுத்தவே மாட்டேன். இதை விவாதித்து நிறுவ முடியாது. அவரவர் மனச்சாட்சிக்கு உண்டான விஷயம். அசைவ உணவு உண்ணும் வழக்கத்தில் உள்ள சமூகத்தில் பிறந்ததன் காரணத்தினாலேயே அதை நியாயப்படுத்துவது முறையல்ல. பிற உயிர்களைக் கொன்று வாழ நேரும் விலங்குகள் கூட தம்முடைய இரை மிகவும் துன்புறாதவாறு சில இயற்கையான நெறிமுறைக் கடைப்பிடிக்கின்றன. ஆனால் மனிதன் எத்தனை கொடூரமான விலங்கு என்பதை இந்த வீடியோவைப் பார்த்தால் உணரலாம். ஆனால் துன்புறுத்தாதவாறு விலங்குகளைக் கொல்வதின் மூலமும் கூட இதை நியாயப்படுத்தி விட முடியாது என்பதையும் இணைத்து யோசிக்க வேண்டியுள்ளது.
எல்லா உயிர்களும் இந்த உலகில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையுள்ளது. 'வலிமையுள்ளது எஞ்சும்' என்கிற கருத்து யதார்த்த உண்மை என்றாலும் ஒரு நாகரிக சமூகம் மற்ற உயிர்களை துன்புறுத்தாத, வாழ அனுமதிக்கிற சூழலுக்குத்தான் நகர வேண்டும். கொசு, மூட்டைப் பூச்சியையெல்லாம் நாம் சாகடிப்பதில்லையா? என்று சிலர் புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு அசட்டுத்தனமாக விவாதிப்பார்கள். நம்மைத் துன்புறுத்துவதால் நோய்களைப் பரப்புவதால் தற்காப்பிற்காக, சைவ உணவு அமையாத சூழலில், வேறு வழியில்லாமல் கொல்வது என்பது வேறு. ஆனால் மாற்று உணவிற்காக, அதன் சுவைக்காக, வேட்டையாடுவதின் மகிழ்ச்சிக்காக, ஒரு உயிரைக் கொல்வதின் மூலம் கிடைக்கும் குரூர இன்பத்திற்காக சக உயிர்களைக் கொல்வது முறையற்றது.
இந்த வீடியோ பசுவதை தொடர்பானது என்பதால் இதை இந்துத்துவ அரசியலோடு பொருத்திப் பார்க்க வேண்டாம். என்னளவில் நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. மனிதனின் பேராசைக்காக கொல்லப்படும் அத்தனை அப்பாவி உயிரினங்களுக்கும் இந்த வார்த்தைகள் பொருந்தும்.
அசைவ உணவை கைவிட வேண்டும் என்கிற தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியது இந்த வீடியோ. இந்தக் கொடுமைகள் ஏற்கெனவே நாமறிந்தவைதான் என்றாலும் ஏதாவது ஒரு புள்ளியில், பிரேக்கிங் பாயிண்டில்தானே சில முடிவுகள் நிகழும். அப்படியொன்றாக இந்த வீடியோவைப் பார்க்கிறேன்.
suresh kannan