Friday, March 23, 2012

செளமித்ர சட்டர்ஜி - தாதாசாஹேப் பால்கே விருது


இந்தியச் சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது வங்க நடிகர் செளமித்ர சட்டர்ஜிக்கு கிடைத்திருப்பது குறித்து அறிய மிக்க மகிழ்ச்சி.

சத்யஜித்ராயின் பல திரைப்படங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் அறிமுகமானது 'அபுர் சன்சார்' (1959) எனும் ரே படத்தில்தான். ரேவின் மற்றொரு திரைப்படமான 'சாருலதா'வில் இவரின் பங்களி்ப்பு குறி்ப்பிடத்தகுந்தது. தனிமையில் துயரரும் சாருலதாவின் வாழ்வில் இவரின் வருகை எப்படி புரட்டப் போடப் போகிறது என்பதை அறிமுகக் காட்சியிலேயே சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

இவருக்கு விருது கிடைத்த செய்தி குறித்து சாருலதாவாக நடித்த மாதவி முகர்ஜயிடம் கேட்ட போது "அமோலுக்கு (திரைப்பட பாத்திரத்தின் பெயர்) விருது கிடைக்கும் போது சாருலதாவிற்கு மகிழ்ச்சியாக இருக்காதா?" என்றாராம் குறும்பாய்.
 
suresh kannan

Thursday, March 22, 2012

திருகலான திரில்லர் (Kahaani)


 தொலைபேசியில் அபூர்வமாக அழைக்கும் நண்பர், வித்யா பாலனின்  'கஹானி பார்க்கத் தவறாதீர்கள். மிக நல்ல படம்" என்றார் அசரிரீ போல.

'கஹானி' மிக புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்ட ஆனால் அபத்தமான திரில்லர். பார்த்து முடிக்கும் வரையில் பார்வையாளனை திரையோடு கட்டிப் போட வைக்கும் அபாரமான திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை. அசத்தலான அந்த முடிவை முன்பே சற்று யூகிக்க வேண்டுமெனில் 'எல்லாவற்றையும் சந்தேகி' என்கிற கார்ல் மார்க்ஸை பின்பற்ற வேண்டும் அல்லது எல்லாவற்றையும் கோக்குமாக்காக யோசிக்கப் பழகியிருக்க வேண்டும். இறுதியில் பார்வையாளனை திகைக்க வைக்க வேண்டும் என்கிற இயக்குநரின் நோக்கம் வெற்றிகரமாக தற்காலிமாக நிறைவேறியிருக்கிறது என்பதைத் தவிர பிறகு நிதானமாக யோசித்துப் பார்த்தால் பல லாஜிக்கான புள்ளிகள் நெருடலாக இணைய மறுக்கின்றன. 'கொக்கு தலையில் வெண்ணையை வைத்து பிடிப்பது' என்பதான அசட்டுத்தனமே படத்தின் காண்பனுபவத்தை அரைகுறையாக்குகிறது.

இந்திய உளவுத்துறையை இத்தனை முட்டாள்தனமாக சித்தரிக்க முடியுமா என்பதுதான் பிரதானமான நெருடல். திரைப்படக் கதாசிரியர்களே யோசிக்காத பல கோணங்களில் பல பிரமிப்பூட்டும் 'வரலாற்று'  கதைகளை தினம் தினம் 'உருவாக்கும்' உளவுத்துறையினரின் சாமர்த்தியர்த்திற்கு முன்பு 'துர்கா பூஜை வீரத்திருமகள் - கர்ப்பிணி' போன்ற அபத்த ஒப்பனைகளெல்லாம் எடுபடுமா என்பது.   கணினி உபயோகம் பரவலாகி வி்ட்ட நிலையில் இன்றும் கூட அது தொடர்பான அபத்தக் காட்சிகளை "புத்திசாலித்தனமான" படங்களில் கூட காண நேர்வது சங்கடமாக இருக்கிறது. குறிப்பாக படத்தின் இறுதிக் காட்சி மகா அபத்தம். பார்வையாளனை எதையும் யூகிக்க விடாது, திரில்லருக்கான முழுமையான அனுபவத்தைத் தராமல் ஒரு பாத்திரம் மூலமாக எல்லாவற்றையும் விளக்குவதன் மூலம் பார்வையாளனின் யோசிக்கும் திறனை அவமானப்படுத்தி......ஹிட்ச்காக்கின் திரில்லர்களை யோசித்துப் பார்த்தால் இது போன்ற நெருடல்கள் பார்வையாளர்களுக்கு ஏற்படாத வகையில் கூடுமான வரையில் தவிர்த்திருப்பதை உணர முடியும். பார்வையாளன் காட்சி வடிவத்தை புரிந்து கொள்வதில் சற்று முன்னேறியிருக்கக்கூடிய சூழலில், இப்பவும் 'என்ன நடந்திச்சின்னா' என்று இழுப்பது சரியல்ல.


 மற்றபடி இந்தியத் திரைப்படங்களில் இது ஒரு சிறந்த திரில்லர் என்பதில் சந்தேகமில்லை. என்ன ஒரு கஷ்டமெனில் நாம்  அப்போது சற்று மூளைக்கு ஓய்வு தந்திருக்க வேண்டும். வித்யா பாலனுக்கு சமீபத்தில்தான் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்திருப்பதால் அவர் சிறப்பாக நடித்ததாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மற்றபடி இதில் என்னை மிகவும் கவர்ந்தது, உளவுத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் Nawazuddin Siddiqui -ன் அசத்தலான நடிப்பும் உடல்மொழியும். புதுடெல்லி, நேஷனல் ஸ்கூல் டிராமாவில் பயின்றவர். (இணைப்பிலுள்ள அவரின் நேர்காணலை வாசிக்கவும்).

கொல்கத்தா நகரமும் துர்கா பூஜை திருவிழாவும் இந்த திரில்லருடன் மிக அழகாக பின்னப்பட்டிருக்கின்றன. படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் (விஷால்-சேகர்) இந்த திரில்லருக்கு பக்க பலமாயிருக்கின்றன.  வித்யா காவல்துறை இளைஞனை மிதமாக seduce செய்யும் விதமும் இளைஞனின் கண்ணில் தெரியும் காதலும் அழகான சிறு கிளைக்கதையாக விரிகிறது. காலில் இடித்துக் கொள்ளும் அந்த  சில நிமிடக் காட்சி ஒரு கவிதை. படத்தின் துவக்கக் காட்சி படத்துடன் ஒன்றுவதற்கான ஆர்வர்த்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சுஜாய் கோஷ் இன்னமும் நம்பகத்தன்மையுடன் கூடிய 'கஹானி'யை '(கதை) உருவாக்கியிருந்தால் இது இன்னமும் மிகச்சிறந்ததொரு திரில்லராக உருவாகியிருக்கக்கூடும்.


suresh kannan

Wednesday, March 21, 2012

மீண்டு(ம்)...சற்று இடைவெளியாகி விட்டது. என்னை நான் என்னவாக நினைத்துக் கொண்டிருந்தேனோ அதற்கு முற்றிலும் எதிர்பக்கமாக நானிருக்கிறேன் என்று எனக்கு என்னையே அடையாளங் காட்டிய தருணங்கள். அகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு நல்லதொரு வடிகால் எழுத்து. மாறாக எங்கோ அடைத்துக் கொண்டு விட்டது்; முடங்கிப் போயிற்று. அதைப் ப்ற்றி எழுதுவதன் மூலமே இதைக் கடந்து வரலாம் என்று சில நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள். காய்ந்த எலும்பை கடித்து தன் குருதியை தானே ருசிக்கும் நாய் போல மஸோக்கிஸ மனம் பிரச்சினைகளிலிருந்து வரும் துன்பத்தில் ஆழந்து ருசிகண்டு விட்டது. விளைவாக வேறு எதைப் பறறியும் யோசிக்க முடியவில்லை. வரவேற்பறை சுவரில் ஒட்டப்பட்டிருந்த பாரதி வேறு ' தேடிச் சோறு நிதந் நின்று' என்று குற்றவுணர்வுள்ளாக்கிக் கொண்டிருந்தான். இளங்கலையில் எடுத்துப் படித்த உளவியல் என்னும் ஏட்டுச் சுரைக்காய் சுயபாகத்திற்கு சற்றும் உதவவில்லை.

சரி. இதைப் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில்....

விதியின் கைகளில் என்னை ஒப்படைத்து விட்ட இந்த இடைவெளி காலத்தில், "சமீபமாக ஏன் எழுதுவதில்லை?' என்று கேட்டு தினமும் ஓரிரண்டு மின்னஞ்சல்களாவது வந்துக் கொண்டேயிருந்தன. இப்போதும் தொடர்வதுதான் எனக்கே ஆச்சரியம். அந்த நட்புக் குரல்களின் கைகளைப் பிடித்தாவது சற்று சுதாரித்து எழுந்துக் கொண்டிருக்கலாம். மாறாக நான் பெரும்பாலும் எந்த ஒரு மடலுக்குமே பதிலளிக்கவிலலை. தாமாக புரிந்து கொண்டவர்கள் தவிர மற்ற ஒரு சிலர் 'தலைக்கனம்' என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கலாம். தவறில்லை. அதுவும் சற்று உண்டு.

அந்தக் கடிதங்களுக்கு பதிலளிக்க எனக்கு கூச்சமாயிருந்தது என்பதுதான் உண்மை. என் எழுத்தின் மீது நானே பெரும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் 'உங்கள் எழுத்தை ஏன் அச்சு வடிவில் கொண்டு வரக்கூடாது?' என்ற கேள்விகளெல்லாம் உள்ளூர பரிகாசம் உறைந்து போனவைகளோ என்கிற குறுகுறுப்பு எழுகிறது. (அச்சு வடிவில் வருபவைதான் சிறந்த எழுத்து என்கிற கற்பிதங்களையும் இங்கு தாண்டி வர வேண்டியிருக்கிறது).

சமீபமாக எதுவும் எழுதாத நிலையிலும் என் வலைப்பக்கத்தை தினமும் நூற்றுக் கணக்கானவர்கள் வாசிக்கிறார்கள் என்று வரும் புள்ளிவிவரங்கள் என்னை அற்ப மகிழ்ச்சியிலும் சங்டத்திலும் தொடர்ந்து எழுதாதது குறித்த குற்றவுணர்விலும் ஆழ்த்துகிறது. அபூர்வமாக நானே என் வலைப்பக்கத்திற்கு செல்லும் நள்ளிரவிலும் கூட  யாரோ ஒருவர் அதை வாசித்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டும் தகவல் என் பொறுப்பை உணரச் செய்கிறது. (அந்த ஒருவர் யாரோ அல்ல, உன்னுடைய ஐடிதாண்டா முண்டம் என்று நண்பர் சொல்வது நிச்சயம் பொய்யாகத்தானிருக்க வேண்டும்).  

ஆகவே.. நண்பர்களே...சுமாரான இடைவெளியில் கூட ஒருவரை முழுமையாக மறந்து போகக்கூடிய சாத்தியமுள்ள இந்த பரபரப்பான வாழ்வியல் சூழலில் இன்னமும் நினைவு வைத்துக் கொண்டுள்ள அன்பு உள்ளங்களுக்கு மிகப் பணிவான வணக்கம். இந்த ஆதரவுடன் மீண்டும் எழுதிப் பார்க்கலாம் என்று உத்தேசம்.

இது போன்ற கண்ணீர் சற்று கசியும் கடிதங்களை நானே முன்னர் பரிகாசம் செய்திருப்பேன். இப்போது இதுவே ஆசுவாசம் தருகிறது என்பதுதான் விந்தை.  பொதுவாக நான் நட்பை புறவயமாக பேணுவதில் அத்தனை அக்கறை கொண்டவனில்லை. என்றாலும் இந்த சிக்கலான சூழலில் சில அந்தரங்கமான நண்பர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்.
 

suresh kannan