Sunday, May 31, 2020

Tickets (2005) - ‘டிக்கெட், டிக்கெட்'




இத்திரைப்படம் மூன்று தனித்தனியான பகுதிகளைக் கொண்டது. பயணச்சீட்டு எனும் பொதுவான விஷயம் இவற்றை இணைப்பதாக இருக்கிறது. இதன்  காட்சிகள் மொத்தமுமே ஓடும் ரயிலில் நிகழ்பவை. Ermanno Olmi, Abbas Kiarostami, Ken Loach ஆகிய மூன்று இயக்குநர்களின் பங்களிப்பில் உருவானது . மூன்று பகுதிகளுமே ஒவ்வொரு நோக்கில் உணர்வுபூர்வமான விஷயங்களைக் கையாள்கின்றன.

***

முதல் பகுதி: ரோமிற்குச் செல்லும் ரயில்.  இதில் பயணம் செய்கிறார் ஒரு விஞ்ஞானி. முதியவரான அவர், தன்னுடைய பயண ஏற்பாடுகளை திறமையாகச் செய்த இளம் பெண்ணை நினைத்துப் பார்க்கிறார். அவளால் வசீகரிக்கப்படுகிறார். அவளுடன் உரையாடிய சம்பவங்கள் பகற்கனவுகளுடன் இணைந்து மனதிற்குள் விரிகின்றன.

முதல் வகுப்பில் அமர்ந்திருக்கும் இவருக்கு எதிரேயுள்ள தடுப்பிற்கு பின்னால் அமர இருக்கை இல்லாமல் பரிதவிக்கும் எளிய மக்கள். அல்பேனியாவிலிருந்து வரும் அகதிகளின் குடும்பம் அதில் இருக்கிறது. சிறிய குழந்தையுடன் ஒரு தாய். தன்னுடைய பகற்கனவுகளின் இடையே தாயையும் பாலுக்காக அழும் குழந்தையையும் கவனிக்கிறார் விஞ்ஞானி. நின்று கொண்டிருக்கும் கூட்டத்திடம் ராணுவ அதிகாரி கடுமையாக நடந்து கொள்கிறான். குழந்தைக்காக தயார் செய்யப்படும் பாலை அவன் தவறுதலாக  தட்டி விட்டு விடுகிறான். குழந்தை பசியால் அழுகிறது.

வெதுவெதுப்பான பாலை 'ஆர்டர்' பெரியவர். மற்றவர்கள்  இவரை ஆச்சரியமாக பார்க்க, மெல்ல எழுந்து தடுப்பை கடந்து சென்று பால்  கோப்பையை தாயிடம் தருகிறார்.



***

இரண்டாவது பகுதி இது. ரயில் நின்று கடக்கும் ஒரு நிறுத்தத்தில் ஏறுகிறார் அந்த மூதாட்டி. அவருடன் ஓர் இளைஞன். மகனைப் போல தோன்றுகிறான்.  ஆனால் கிழவி அந்த இளைஞனை அடிமை போல நடத்துகிறார். இளைஞன் கழிவறைக்குச் சென்றிருக்கும் நேரத்தில் எதிர் இருக்கையில் ஒருவர் வந்து அமர்கிறார். மூதாட்டி பேசிக் கொண்டிருக்கும் மொபைல் போன் தன்னுடையது என்கிறார்.  இருவருக்கும் வாக்குவாதம் நீள்கிறது. பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு கிழவியின் மீதுதான் சந்தேகம் வருகிறது.

ரயில்வே அதிகாரியிடம் முறையிடப்படுகிறது. அவர் தன் மொபைல் போனிலிருந்து எதிர் இருக்கை நபரின் மொபைலுக்கு போன் செய்ய, அதற்கும் பக்கத்து இருக்கையில் போன் அடிக்கிறது. தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கூட கேட்காமல் அந்த ஆசாமி செல்கிறார். மூதாட்டிக்கு கோபத்திற்கு இடையில் துக்கமும் பொங்குகிறது. ராணுவ அதிகாரியாக பணிபுரிந்த  கணவனின் முதலாவது ஆண்டு நினைவுதின சடங்கிற்காக அவர் சென்று கொண்டிருக்கிறார்.

மறுபடியும் இன்னொரு கலாட்டா ஆரம்பமாகிறது. மூதாட்டியும் இளைஞனும் அமர்ந்திருக்கும் இருக்கைகள், தாங்கள் முன்பதிவு செய்தது என்று கூறி இரண்டு நபர்கள் வருகிறார்கள். மறுபடியும் வாக்குவாதம். 'அந்நியன்' திரைப்படத்தின் விக்ரம் போல 'ட்ட்டிஆர்' என்று அவர்கள் கூவ, ரயில்வே அதிகாரி பஞ்சாயத்திற்கு வருகிறார். மூதாட்டியின் பயணச்சீட்டுகளை சோதித்துப் பார்த்தால் அதே இருக்கை எண்கள். ஆனால் இரண்டாம் வகுப்பிற்கானது. கிழவி எழுந்து செல்ல மறுக்கிறார். இரக்கப்படும் டிக்கெட் பரிசோதகர், முதல் வகுப்பிலேயே ஒரு வசதியான இடத்தை ஒதுக்கித் தருகிறார்.

கிழவியுடன் வந்திருக்கும் இளைஞன் ரயிலில் பயணிக்கும் ஓர் இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறான். இளைஞன் பிறந்து வளர்ந்த பிரதேசத்தைச் சேர்ந்தவள் அவள். எனவே பழைய கதைகள், இளைஞனின் காதலி தொடர்பான சம்பவங்கள் உரையாடலில் வருகின்றன. ஆனால் இளைஞனை அவ்வப்போது அதிகாரத்துடன் அழைக்கும் கிழவி, 'ஏன் கூப்பிட்டவுடன் வரவில்லை' என்று கோபித்துக் கொள்கிறாள்.

அவர்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்குகிறது. கிழவிக்கு உடைமாற்ற உதவுகிறான் இளைஞன். அவன் பொறுமையுடன் உதவினாலும் கிழவி தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டே இருப்பதால் எரிச்சல் தாங்காமல் அங்கிருந்து காணாமற் போய்  விடுகிறான். கிழவி அவனைத் தேடி அலைகிறார். தன்னுடைய சுமைகளை எப்படி இறக்குவது என தவிக்கும் அவருக்கு, முன்னர் செல்போனிற்காக சண்டை போட்ட நபர் உதவுகிறார்.

***

மூன்றாவது பகுதி: மூன்று இளைஞர்கள். ரோமில் நடக்கும் கால்பந்து போட்டியைக் காண்பதற்காக உற்சாகமாக செல்கிறார்கள். இதற்காக அவர்கள் நீண்ட காலமாக திட்டமிட்டிருக்கிறார்கள்..

அகதிக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் வழியில் தென்படுகிறான். அவனிடம் தங்கள் பயணத்தைப் பற்றி சொல்கிறார்கள். தங்களிடமிருக்கும் சாண்ட்விச்சை அவனுக்குத் தருகிறார்கள். தங்களின் இருக்கைக்கு வந்து மீண்டும் உற்சாகமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அகதிக் குடும்பம் அந்த ஒற்றை சாண்ட்விச்சை தங்களுக்குள் பங்கு போட்டு சாப்பிடுவதைப் பார்த்ததும் கருணை சுரந்து தங்களிடம் மிகுதியாக உள்ள சாண்ட்விச்சுகளை தந்து விடுகிறார்கள்.

பயணச்சீட்டு பரிசோதகர் வருகிறார். மூன்று இளைஞர்களில் ஒருவனின் டிக்கெட் காணவில்லை. தனது பாக்கெட் முழுக்க தேடுகிறான். 'இந்தப் பயணத்தை பாழடிக்கிறாயே' என்று அவர்களுக்குள் சண்டை மூள்கிறது. திரும்பி வருவதற்குள் டிக்கெட் தரவில்லையென்றால் 'போலீஸை கூப்பிடுவேன்' என்கிறார் அதிகாரி. சற்று நிதானமாக யோசித்துப் பார்க்கும் போது அகதிச் சிறுவன் அந்த டிக்கெட்டை திருடியிருப்பான் என்கிற முடிவிற்கு வருகிறார்கள்.

சற்று நேரத்திற்கு முன் இரக்கம் காட்டியே இவர்களே, அந்தக் குடும்பத்திடம் சென்று முரட்டுத்தனமாக சண்டையிடுகிறார்கள். அந்தக் குடும்பத்தின் பெண் இவர்களிடம் மன்றாடுகிறாள். தங்களின் சோகக் கதையை கண்ணீருடன் விவரிக்கிறாள். டிக்கெட்டை பறிகொடுத்த இளைஞனுக்கு பரிதாபம் உண்டாகிறது. 'உனக்கென்ன தலையெழுத்தாடா?' என்று இன்னொரு இளைஞன் கத்துகிறான்.

ரயில்  ரோம் நகரை வந்தடைகிறது. டிக்கெட் இல்லாத இளைஞனை காவல் அதிகாரிகள் பிடித்துச் செல்கிறார்கள். அகதிகளின் குடும்பம் நீண்ட காலம் பிரிந்திருந்த அவர்களின் குடும்பத்தலைவருடன் கண்ணீருடன் இணைகிறது. காவல் அதிகாரியின் பிடியிலிருந்து இளைஞர்கள் உற்சாகமாக தப்பி ஓடுகிறார்கள்.

**

விதம் விதமான மனிதர்கள், அனுபவங்கள். ஓடும் ரயிலில் நாமும் பயணம் செய்யும் அனுபவத்தை  தருகிறது இந்த திரைப்படம்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Saturday, May 30, 2020

Wolf Totem (2015) - ‘ஓநாய் வேட்டை'





ஓர் ஓநாயை வளர்ப்பதின் மூலமாக இயற்கையை புரிந்து கொள்ள முயல்கிறான் நகரத்து இளைஞன் ஒருவன். அவனது நோக்கம் நிறைவேறியதா என்பதை தத்துவார்த்தமாகவும் அரசியல் பொருளிலும் விவரிக்கிறது இந்த சீனத் திரைப்படம்.  Jiang Rong எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியிருப்பவர் Jean-Jacques Annaud. பல  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல், கம்னியூசத்தின் மீதான விமர்சனமாக கருதப்படுகிறது.

***

வருடம் 1969. பீஜிங் நகரில் இருந்து மங்கோலிய பழங்குடிகள் இருக்கும் இடத்திற்கு அனுப்பப்படுகிறான் இளைஞன் சென். சீனா உருவாக்க விரும்பிய கலாசாரப் புரட்சியின் படி  நகரத்திலிருந்து சில வருட காலத்திற்கு இடம்பெயரும் சென், பழங்குடி சிறார்களுக்கு கல்வி கற்றுத் தருவான். ஆனால் இதற்கு மாறாக பழங்குடி மக்களிடமிருந்தும், மலைப்பிரதேசத்தில் இருக்கும் ஓநாய்க்கூட்டங்களிடமிருந்தும் நிறைய விஷயங்களைக் கற்கிறான் சென்.

பழங்குடிகளின் இருப்பிடத்தை அடைந்ததும் ஊர்ப் பெரியவர், பாதுகாப்பு சாதனம் ஒன்றை சென்னுக்கு அளிக்கிறார். ஓநாய்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக உதவுவது அது. சில காலம் கழித்து குதிரை மீது தனியாகச் செல்லும் சென்-ஐ ஓநாய்களின் கூட்டமொன்று சுற்றி வளைக்கிறது. திகைத்துப் போகும் சென், பெரியவர் சொல்லித் தந்தபடி தன்னிடமுள்ள உலோகங்களை மோதச் செய்து சப்தம் ஏற்படுத்துகிறான். ஓநாய்கள் பயந்து ஓடுகின்றன. ஓநாய்களைப் பற்றி மேலதிமாக அறிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்கு உண்டாகிறது.

'ஓநாய்கள் மிகவும் கட்டுப்பாடானவை. தன் வேட்டைக்காக எத்தனை காலமானாலும் பொறுமையுடன் காத்திருக்கும். கூட்டத்தின் தலைவன் தரும் சமிக்ஞைகளின் படி போர் வியூகம் அமைத்து  தன் இரையை சுற்றி வளைத்து வேட்டையாடும். மங்கோலிய பேரரசன் செங்கிஸ்கான், குறைந்த அளவு படைவீரர்களை வைத்துக் கொண்டு உலக நாடுகளை வெற்றி கொண்டது, ஓநாய்களின் போர்த்திறனை பார்த்து கற்றுக் கொண்ட பின்புதான்.' என்கிற தகவல்களையெல்லாம் சொல்கிறார் பெரியவர்.

***

ஓநாய்களை பின்தொடர்ந்து சென்று அவைகள் வேட்டையாடி பனியில் புதைத்து வைத்திருக்கும் மான்களை பழங்குடிகள் எடுத்து வருகிறார்கள். "ஏன் எல்லா மான்களையும் நாமே எடுத்துக் கொள்ளக்கூடாது?" என்று கேட்கிறான் சென். "அவைகளின் இரையை முழுக்கவும் நாம் எடுத்து விட்டால் ஓநாய்கள் இரையைத் தேடி ஊருக்குள் வந்து விடும்' என்கிறார் பெரியவர்.  மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள எழுதப்படாத ஒப்பந்தம் இது. இதன் மூலம் இயற்கையின் சமநிலையும் பேணப்படும்.


தனக்கு கிடைக்கும் ரேடியோ பெட்டிற்காக  மீதமுள்ள மான்களை ஒருவன் அரசாங்க அதிகாரிக்கு காட்டிக் கொடுத்து விட அவர்கள் வந்து அள்ளிப் போகிறார்கள். அவற்றின் தோலிற்கு நல்ல விலை கிடைக்கும். தங்களின் இரை பறிபோன வெறுப்பில் ஓநாய்கள் கொலைவெறியுடன் காத்திருக்கின்றன.

 மேய்ப்பவர்கள் அசந்த நேரம் பார்த்து குதிரைக் கூட்டத்தை ஓநாய்கள் வேட்டையாடத் துவங்குகின்றன. சில நபர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களால் சமாளிக்க முடியவில்லை.  உயிர் தப்புவதற்காக கண்மண் தெரியாமல் ஓடும் குதிரைகள் பனி நிறைந்த ஆற்றில் மூழ்கி இறக்கின்றன. இந்த இழப்பிற்காக அரசாங்க அதிகாரி எல்லோரையும் திட்டுகிறார். ஓநாய்கள் தங்களைப் பழிவாங்கத் துவங்கி விட்டன என்பதைப் புரிந்து கொள்கிறார் பெரியவர்.


***


ஓநாய்க் குட்டி ஒன்றை வளர்ப்பதின் மூலம் அதன் இயங்குமுறையின் ரகசியங்களை புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறான் சென். தாய் ஓநாய் வெளியே சென்றிருக்கும் வேளை பார்த்து அதன் குட்டியொன்றைத் திருடி வருகிறான். எவருக்கும் தெரியாமல் அதை வளர்த்து வருகிறான். பழங்குடிகள் இந்தச் செயலைக் கண்டித்தாலும் அரசாங்க அதிகாரியின் ஆதரவு இருப்பதால் அவனை யாராலும் தடுக்க முடியவில்லை. இதற்காக ஊர்ப்பெரியவரிடம் சென் மன்னிப்பு கேட்கிறான்.

நாளாக நாளாக ஓநாய்க்குட்டி மீது அவனுக்கு அன்பு அதிகமாகிறது. ஒரு நாள் கோபத்தில் அது அவனைக் காயப்படுத்தி விடுகிறது. என்றாலும் கூட அவனால் அதை கோபிக்க முடிவதில்லை. அவனுக்குப் பிரியமான ஒரு பெண்ணின் மகனை, சென் வளர்க்கும் ஓநாய் காயப்படுத்தி விடுகிறது. சிறுவனின் உயிர் பிழைப்பதே கடினம் என்றாகி விடுகிறது. அதற்கான நவீன மருந்தை எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டு வருகிறான் சென். அவளிடம் தன் காதலையும் தெரிவிக்கிறான். 'நீ நகரத்திற்கு போய் விடுவாயே' என்று அவனுடைய காதலை மறுக்கிறாள் அவள். 'இல்லை, இனி இதுதான் என் இடம்' என்கிறான் சென்.

பழங்குடிகளின் ஆட்டு மந்தையை ஓநாய்கள் சூழ்கின்றன. மிக லாவகமாக தடுப்புச் சுவற்றைத் தாண்டி வந்து ஆடுகளை வேட்டையாடுகின்றன. சத்தம் கேட்ட ஊர்க்காரர்கள் ஓநாய்களை துரத்துகிறார்கள். ஓநாய்க்காக வைக்கப்பட்ட வெடியில் சிக்கி ஊர்ப் பெரியவர் காயப்படுகிறார்.

அந்தப் பிரதேசத்தில் உள்ள அனைத்து ஓநாய்களையும் கொன்று விட வேண்டும் என்கிற ஆவேசத்துடன் கிளம்புகிறான் அரசாங்க அதிகாரி. துப்பாக்கியும் ஜீப்புமாக கிளம்பி ஏறத்தாழ அனைத்து ஓநாய்களையும் சுட்டுக் கொல்கிறார்கள்.

சென் வளர்க்கும் ஓநாய் பெரியதாகி விடுகிறது. அவனிடமிருந்து விடுபடத் துடிக்கிறது. சென்னால் அதன் சுதந்திர உணர்வை புரிந்து கொள்ள முடிந்தாலும் அதனை விடுவிக்க முடியாமல் தடுமாறுகிறான். அவன் எங்கோ சென்று திரும்பி வரும் போது ஓநாய்இருப்பதில்லை. அவனுடைய காதலி அதை விடுவித்திருக்கிறாள். மலைப்பிரதேசத்தின் தனிமையில் ஒற்றையாக நின்று ஓலமிடும் ஓநாய் ஒன்றை கவனிக்கிறான் சென். அவன் வளர்த்த ஓநாய்தான் அது. இவனை சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டு மலைப்பிரதேசத்திற்குள் ஓடி மறைகிறது. சென் கண்ணீர் வழிய அதைப் பார்க்கிறான்.


***

பழங்குடிகள் இயற்கையோடு இயைந்து வாழத் தெரிந்தவர்கள். மனிதனும் விலங்கும் பரஸ்பரம் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்த எல்லைக்குள் வாழப் பழகுகிறார்கள். விலங்குகளின் வாழ்வையும் சுதந்திரத்தையும் அவர்கள் மதிக்கிறார்கள். சென்-ஐப் போல இயற்கையின் ஒரு பகுதியை கைப்பற்ற முடியும் என அவர்கள் கருதுவதில்லை.


ஆனால் நவீன உலகத்தின் சுயநலமும் பேராசையின் அதிகாரமும் இயற்கையின் இந்த சமனைக் குலைக்கின்றன. மனித குலத்தால் இயற்கையை எந்நாளும் வெல்ல முடியாது; புரிந்து கொள்ள முடியாது என்கிற கருத்தினை ஆழமாகப் பதிவு செய்கிறது இத்திரைப்படம்.

ஓநாய்கள் வேட்டையாடும் காட்சிகள், மலைப்பிரதேசத்தின் அழகான காட்சிகள் போன்றவை  இத்திரைப்படத்தில் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Friday, May 29, 2020

பொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்




‘சிகை’ ‘ஆர்.கே.நகர்’ போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏற்கெனவே OTT-ல் வெளியாகியிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, தயாரிப்பாளர்களின் ஆதரவு போன்ற சர்ச்சைகளைத் தாண்டி அமேஸான் பிரைமில் வெளியாகியிருக்கும் முதல் பிரபலமான திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’.

அசலான ஏற்பாட்டின் படி திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டிய இந்தத் திரைப்படம், கொரானோ பிரச்சினை காரணமாக வெளியீடு தள்ளிப் போய், ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படியும் நஷ்டத்தைத் தவிர்க்க வேண்டியும் நேரடி இணைய வெளியீடாக வந்துள்ளது.

தவிர்க்க முடியாத இந்தச் சூழலின் வாயிலாக தமிழ் சினிமாவின் ஒரு புதிய கதவு அதிகாரபூர்வமாக திறந்துள்ளது எனலாம். கொரானோ இடைவெளியில் மக்கள் ஏற்கெனவே அமேஸானிலும் நெட்பிளிக்ஸிலும் குவிந்திருக்கும் போது தமிழ் சினிமாவும் அதிலிருந்து விலகியிருக்க முடியாது. இந்தச் சந்தையின் வழியாக இனி பல்வேறு தமிழ்த் திரைப்படங்கள் OTT-ல் வெளியாகக்கூடும் என்கிற அழுத்தமாக சமிக்ஞையை தந்திருக்கிறது ‘பொன்மகள் வந்தாள்’.

ஆனால் இதன் கூடவே இன்னொரு சோதனையும் இருக்கிறது. பொதுவாக எந்தவொரு தமிழ் திரைப்படம் வந்தாலும் முதலில் அதனுடைய மொக்கையான கள்ள நகல் வெளியாகும். நல்ல பிரிண்ட் வருவதற்கு நான்கைந்து நாட்களாவது ஆகி விடும். ஆனால் ‘பொன்மகள் வந்தாள்’ வெளியான சில மணி நேரங்களுக்குள்ளாகவே பளிங்கு போன்ற பைரஸி பிரிண்ட் வெளிவந்து விட்டது.

வீட்டிற்கே சினிமாவைக் கொண்டு வந்து சேர்க்கும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அனுகூலங்களைப் போலவே அதன் தவிர்க்க முடியாத கசப்பு பக்கங்கள் இவை.

**

சரி. இத்தனை பெருமையுடன் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ ஒரு அதிரடி வெளியீடாக, கனகம்பீரமாக உள்ளே நுழைந்திருக்கிறதா என்று பார்த்தால், ஏமாற்றத்துடன் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

டிரைய்லர் கட்டில் இருந்த குறைந்த சுவாரசியம் கூட படத்தில் இல்லை. ‘கோர்ட் ரூம் டிராமா’ போல அறியப்பட்ட இந்தத் திரைப்படத்தை முழுமையாகப் பார்க்கும் போது ஸ்கூல் டிராமா போல இருக்கிறது.

இந்தத் திரைப்படம் சொல்ல வந்த ஆதாரமான செய்தி அவசியமானது என்றாலும் இழுவையான, அமெச்சூர் டிராமாவின் மூலம் இதன் காண்பனுபவத்தை மிக சலிப்பானதாக ஆக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் J. J. Fredrick.

**

ஊட்டியின் பின்னணியில் ஒரு அமைதியான, அழகான நிலப்பரப்போடு படம் துவங்குகிறது. சில துப்பாக்கித் தோட்டாக்கள் வெடிப்பதில் அந்த அமைதி கலைகிறது. ஜோதி என்கிற பெண், சைக்கோத்தனமாக குழந்தைகளைக் கடத்திக் கொல்வதாகவும், அப்படி அவர் ஒரு குழந்தையைக் கடத்திய போது தடுக்க வந்த இரு இளைஞர்களைச் சுட்டுக் கொன்று விட்டதாகவும் செய்திகள் பரபரப்பாக தெரிவிக்கின்றன. பிறகு நடந்த என்கவுண்ட்டரில் ஜோதியும் செத்து விடுகிறார்.

சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு ‘வெண்பா’ (ஜோதிகா) என்கிற வழக்கறிஞர் இந்த வழக்கைத் தூசு தட்டி எடுக்கிறார். ‘எங்கள் குழந்தைகளைக் கடத்திக் கொன்ற ஒரு பெண்ணுக்காகப் போய் வாதாடுகிறாயே” என்று ஊர் மக்கள் வெண்பாவைத் தூற்றுகிறார்கள்.

வெண்பாவின் முயற்சி வெற்றியடையாதவாறு சில நிழலான முயற்சிகள் நடக்கின்றன. பலவீனமான அரசு தரப்பு வழக்கறிஞர் மாற்றப்பட்டு, புகழ்பெற்ற, ஆனால் கிரிமினல்தனமான வழக்கறிஞரான ராஜரத்தினம் (பார்த்திபன்) வெண்பாவை எதிர்கொள்ள வருகிறார்.

யார் இந்த வெண்பா? எதற்காக அவர் 15 வருடங்கள் கழித்து இந்த வழக்கை நடத்த வேண்டும்? ஏன் அவருக்கு எதிரான முயற்சிகள் நடைபெறுகின்றன.

கோர்ட் டிராமா காட்சிகள் வழியாகவும் அதன் வெளியில் நடைபெறும் சம்பவங்களின் வழியாகவும் இதன் முடிச்சுகள் மெல்ல அவிழ்கின்றன.

**

பெண்மையத் திரைப்படங்களில் ‘ஜோதிகா’ நடிக்கிறார் என்றாலே உள்ளுக்குள் சற்று ‘கெதக்’ என்றுதான் ஆகி விடுகிறது. ராட்சசி போன்ற ஆறுதலான விதிவிலக்குகள் தவிர பலவற்றில் நம்மை பலமாக ஜோதித்திருக்கிறார் ஜோ. இதிலும் அந்த சோதனை தொடர்கிறது. ஆனால் இதற்காக ஜோதிகாவைக் குறை சொல்வதற்குப் பதிலாக அவரைச் சரியாக பயன்படுத்தாத இயக்குநர்களைத் தான் சுட்டிக் காட்ட வேண்டும்.

வெண்பாவாகவும் இன்னொரு பாத்திரத்திலும் நடித்திருக்கும் ஜோதிகா தன் பங்கையும் உழைப்பையும் இயன்ற அளவிற்கு தர முயன்றிருந்தாலும் பலவீனமான திரைக்கதை, நாடகத்தனமான காட்சிகள் போன்றவற்றால் பெரிதாக எந்தக் காட்சியும் சோபிக்கவில்லை.

பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என்று அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் கம் நடிகர்கள் இதில் இருக்கிறார்கள். ஆனால் எவருமே சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. துணை நடிகர்கள் போலவே வந்து போகிறார்கள். அநியாய விரயம்.

அதிலும் பாண்டியராஜனின் நிலைமை ரொம்பவும் மோசம். அவர் ஒரு காட்சியில் நீதிபதியின் உதவியாளர் போல இருக்கிறார். இன்னொரு காட்சியில் பார்வையாளர்களின் நடுவில் உட்கார்ந்திருக்கிறார்.

செல்வாக்கு மிக்க ஒருவரிடம் நீதிபதி பிரதாப் போத்தன் விலை போவது போல காண்பித்து விட்டு பிறகு மாற்றி விடுகிறார்கள். டிவிஸ்ட்டாம். இப்படி மொக்கைத்தனமான, எளிதில் யூகிக்க முடிகிற டிவிஸ்ட்கள் படம் பூராவும் வந்து நெளிய வைத்துக் கொண்டேயிருக்கின்றன. அதிலும் படம் ஏறத்தாழ முடிந்து நாம் கணினியை ஆஃப் செய்யலாம் என்று முடிவு செய்யும் போது கடைசியிலும் இயக்குநர் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார்.. பாருங்கள்.. முடியல.

**

ஒரு திரைப்படத்தில் casting மிக முக்கியம். கோயிஞ்சாமி போல இருக்கிற சுப்பு பஞ்சுவையெல்லாம் ஊழல் செய்கிற காவல் அதிகாரியாக கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை.

தியாகராஜனின் முகத்தில் பல நூற்றாண்டுகளாக எப்போதுமே எக்ஸ்பிரஷன் வராது. இதிலும் அப்படியே ரோபோத்தனமான வில்லத்தனத்தை செய்து விட்டுப் போகிறார்.

இந்த வரிசையில் ஆறுதலாக இருப்பவர் பார்த்திபன் மட்டுமே. அவருடைய பிரத்யேகமான பாணியில் ‘வெண்பா’ன்னு பேர் வெச்சுக்கிட்டு வெண்பா.. வெண்பா.. வா பேசிக்கிட்டே போறீங்க” என்று அவர் நக்கலடிக்கும் வசனங்கள் மட்டுமே சற்று புன்னகைக்க வைக்கிறது. அது கூட இயக்குநரைத் தாண்டி பார்த்திபனே சொல்லியதாக இருக்கக்கூடும்.

**
ஒளிப்பதிவு ராம்ஜி, எடிட்டிங் ரூபன் போன்று பலமான தொழில்நுட்பக் கலைஞர்களின் வரிசை இருந்தாலும் மொக்கையான திரைக்கதை காரணமாக படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

படத்தின் பெரும்பாலான பின்னணி ஊட்டியில் நடப்பது போல் இருந்தாலும் பல காட்சிகளை சென்னையில் படமாக்கி மேட்ச் செய்ய முயன்றிருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு பாத்திரம் ஸ்வெட்டர் போட்டு வந்தால் அது ஊட்டி என்று நாம் நம்பியாக வேண்டும் போல.

படத்தின் ஆதாரமான கோர்ட் ரூம் காட்சிகளிலும் பெரிதாக எந்வொரு சுவாரசியமும் இல்லை. அதிலும் நீதிமன்றத்திலேயே ஒருவரையொருவர் ஏக வசனத்திலும் ‘நீதான்யா. ஃபிராடு.. நீதாண்டா கிரிமினல்’ என்றெல்லாம் பேசிக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. அதிலும் ஒரு பெண் நீதிபதியை ‘இல்ல மாமி.. நான் என்ன சொல்றேன்னா” என்கிறார் பாக்யராஜ். அரசு தரப்பு வழக்கறிஞரை ‘வாங்க நல்லாயிருக்கீங்களா.. காஃ.பியா கூல்டிரிங்ஸா.. என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்காத குறையாக வரவேற்கிறார் நீதிபதி பிரதாப் போத்தன்.

படத்தின் தயாரிப்பாளர் ஜோதிகாதான். அதற்காக இரண்டு முக்கிய பாத்திரங்களிலும் அவரையே நடிக்க வைத்திருக்க வேண்டுமா என்ன? அதைச் சமாளிப்பதற்காக இறுதியில் தந்திருக்கும் டிவிஸ்ட் சகிக்கவில்லை.



**

பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைகளைப் பற்றி பேசுகிற இந்தத் திரைப்படம் சொல்கிற ஆதாரமான செய்தி முக்கியமானதுதான். ஆனால் செயற்கையான பல திருப்பங்களுடன் கொட்டாவி வரும் படி சொல்லியிருப்பதுதான் இந்தத் திரைப்படத்தை மிகச் சுமாரான முயற்சியாக ஆக்கியிருக்கிறது.

“மேடம்.. இந்தப் படத்துல நீங்கதான் சென்ட்டர் ஆஃப் அட்ராக்ஷன். படமே உங்களை வெச்சுதான் ஒடுது” என்று ஜோதிகாவிடம் இனி எந்தவொரு இயக்குநராவது கதை சொல்ல வந்தால் சூர்யாவின் குடும்பம் உஷாராகி விடுவது நல்லது. ஆம். இந்தத் திரைப்படம் ‘சூர்யா –ஜோதிகா’ தயாரிப்பு.

‘பொன்மகள் வந்தாள்’ – ‘வாடி ராசாத்தி’ என்று சொல்லி வரவேற்க வேண்டியதை ‘ஏம்மா வந்து இம்சை பண்றே’ என்று சலிப்போடு சொல்ல வைத்திருக்கிறார்கள்.



suresh kannan

The Intern (2015) - ‘அனுபவம் எனும் அற்புதம்'




பழங்கால கடிகாரத்தை உடைத்து விட்டு "பழசா...நான் கூட புதுசோன்னு பயந்துட்டேன்" என்பார் வடிவேலு ஒரு நகைச்சுவைக் காட்சியில். அவரைப் போலவே நமக்கும் பெரும்பாலான சமயங்களில் பழமையின் அருமை தெரிவதில்லை.

இதைப் போலவே வயதானவர்களின் அருமையும் நமக்குப் புரிவதில்லை. 'பெரிசு' 'ஒரே நச்சு' என்று சில வார்த்தைகளில் அவர்களை நிராகரித்து விடுகிறோம். அனுபவம் என்பது உடனே  கிடைத்து விடாத விலைமதிப்பில்லாத சொத்து. பல வருடங்களைக் கடந்த பிறகுதான் அந்தச் சொத்து கிடைக்கும். அம்மாதிரியான ஓர் அனுபவசாலி பெரியவரின் அருமையைச் சொல்லும் திரைப்படம் இது.

**

நியூயார்க்கில் வசிக்கும் பென் எழுபது வயது முதியவர். மனைவியை இழந்தவர். சுறுசுறுப்பாக இருந்து பழகியவர். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் பல்வேறு வழிகளில் பிஸியாக இருக்க முயல்கிறார். ஆனால் எல்லாமே போரடிக்கிறது. வயதான காலத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கிறார். அங்கு பணிபுரியும் எல்லோருமே பரபரப்பான இளைஞர்கள். நவீன உலகத்தின் அடையாளங்கள். பென் வயதால் பழமையானவராக இருந்தாலும் மனதால் இளையவர். எனவே நவீன விஷயங்களை உடனே கிரகித்துக் கொள்ளும் மனோபாவம்  உள்ளவராக இருக்கிறார். அவருடைய அனுபவம் மற்றும் இனிமையான சுபாவம் காரணமாக அலுவலகத்திலுள்ள பெரும்பாலோனோருக்கு அவரை பிடித்துப் போகிறது.

ஆனால் அதன் நிறுவனரான ஜூல்ஸிற்கு கிழவரைப் பிடிக்கவில்லை. பென் என்றல்ல, வயதானவர்கள் என்றாலே அவளுக்குப் பிடிக்காது, ஒரு நொடி நிற்க கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கும் சமகால இளைய தலைமுறையின் சரியான பிரதிநிதி ஜுல்ஸ். பேசுவது கூட தனியார் எப்.ஃஎம் –மின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் போல அத்தனை வேகம்.

எனவே அவளுடைய வேகத்தை மட்டுப்படுத்துவதற்காக கம்பெனியின் பார்ட்னர் ஓர் உபாயம் செய்கிறார். நமது எழுபது வயது ஹீரோவான பென்னை அவளுக்கு உதவியாளராக நியமிக்கிறார். “என்னது, இந்தப் பெரிசு எனக்கு உதவியா, என்ன விளையாடறியா?’ என்று எரிச்சலாகும் ஜுல்ஸ், வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்கிறாள்.

ஒருபக்கம் ராக்கெட் வேகத்தில் பறக்கும் இளம்பெண். இன்னொரு பக்கம் கூட்ஸ் வண்டி மாதிரி ஆனால் அறிவுபூர்வமான நிதானத்துடன் நகரும் கிழவர். இந்த சுவாரசியமான முரணால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கின்றன. ஜூல்ஸிற்கு அவசியம் தேவையான ஒரு ஸ்பீட் பிரேக்கரைப் போல அமைகிறார் பென்.

**

ஜூல்ஸிற்கு  உதவியாளர் பணி என்றாலும் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்கிறார் கிழவர். சமயங்களில் தன் அனுபவத்தின் மூலம் அவர் தரும் ஐடியாக்கள் கம்பெனிக்கு உபயோகமாக இருக்கின்றன. ஜூல்ஸிற்கு கிழவரை மெல்ல பிடித்துப் போக ஆரம்பிக்கிறது. ஆனால் தன்னுடைய விஷயத்தில் நிறைய மூக்கை நுழைக்கிறாரோ என்கிற நெருடலும் ஏற்படுகிறது.

ஆனால் ஒரு கட்டத்தில் பென் இல்லாமல் ஜூல்ஸ் நிம்மதியாக அவளுடைய பணியைச் செய்ய முடியாது என்கிற நிலை ஏற்படுகிறது. அலுவலக விஷயத்திலும் மட்டுமல்லாமல் ஜூல்ஸின் தனிப்பட்ட பணிகளிலும் கெளவரம் பார்க்காமல் உதவுகிறார் பென். ஜூல்ஸின் குழந்தையை வெளியே அழைத்துச் செல்கிறார். டிரைவர் வேலையைப் பார்க்கிறார்.

**
ஜூல்ஸ் மனதில் ஒரு பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது. அவளே எல்லா வேலைகளையும் பரபரப்பாக செய்வதால் சமயங்களில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே கம்பெனிக்கு ஒரு CEO தேவை என்கிறார் பார்ட்னர். ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பில் உருவான நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை இன்னொருவரிடம் தர வேண்டுமா என குழம்புகிறாள் ஜூல்ஸ். அதே சமயத்தில் அதை செய்யாமலும் இருக்க முடியாது.

இதே சமயத்தில் இன்னொரு பிரச்சினையும் கிளம்புகிறது. ஜூல்ஸின் கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருக்கும் விஷயம் தெரிய வருகிறது. ‘எப்போது பார்த்தாலும் கம்பெனி விஷயமாக சுற்றிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?’ அவளுடைய கணவன் தனக்காக வேறொரு ‘கம்பெனி’யைத் தேடிக் கொள்கிறான்.

**

உடைந்து போகும் ஜூல்ஸிற்கு ஆபத்பாந்தவனாக வருகிறார் பென். ஏறத்தாழ ஒரு தந்தையின் நிலையில் இருந்து அவளுக்கு யோசனை தருகிறார். ‘நன்றாக யோசி பெண்ணே.. உன் உழைப்பில், யோசனையில் உருவான நிறுவனத்தில் ஓர் அந்நியரை தலையிட விடலாமா?. உன் பணியாளர்கள் அருமையானவர்கள். வேலையைப் பகிர்ந்தளித்து விட்டு உன் சுமையைக் குறைத்து குடும்பத்தையும் சற்று கவனி. எல்லாம் சரியாகும்” என்கிறார்.

அவர் சொல்லியபடியே எல்லாம் சுபமாகிறது. ரிலாக்ஸ் ஆக உடற்பயிற்சி செய்யும் பென்னுடன் ஜூல்ஸூம் இணைந்து கொள்ளும் காட்சியுடன் படம் நிறைவடைகிறது. உதவியாளராக வந்து இணையும் பென், ஜூல்ஸ்ஸிற்கு உபாத்தியாயரான கதை இது.

**

கிழவர் பென்னாக அட்டகாசம் செய்திருக்கிறார் ராபர்ட் டி நீரோ. இத்தனை அனுபவம் வாய்ந்த நடிகர் இப்படியாரு பாத்திரத்தில் கெளரவம் பார்க்காமல் நடிக்க முன்வருவது தமிழில் நடப்பது சந்தேகமே. போலவே ஜூல்ஸ் ஆக நடித்த அன்னா ஹாத்அவேயின் நடிப்பும் அபாரம்‘ அனுபவத்திற்கு ஓய்வு கிடையாது’ எனும் அழுத்தமான கருத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அருமையானதொரு திரைப்படமாக இயக்கியிருக்கிறார் நான்சி மேயர்ஸ்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Thursday, May 28, 2020

Our Kind of Traitor (2016) - ‘கறுப்பு பண துரோகிகள்'




நம்முடைய சாதாரண உப்புமா வாழ்க்கையைத் தாண்டி நம்மைச் சுற்றி பல நிழலான காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை  நம்மால் உணர முடியாது. சர்வதேச குற்றத்தின் ஒரு சிறுஅசைவு நம் காலடியில் நடந்து கொண்டிருக்கலாம். கற்பனை செய்து கூட பார்க்க முடியாத குற்றங்களின் பனிக்கட்டி முனை. கோடிக்கணக்கான நிதி மோசடிகள், பின்னேயுள்ள பண முதலைகள், வெடிக்கும் துப்பாக்கிகள், செய்யப்படும் துரோகங்கள், கண்காணிக்கும் நிறுவனங்கள் என்று ஒரு வனத்தில் நிகழும் இரக்கமற்ற வேட்டைகள்  மெளனமாக நிகழ்ந்து கொண்டிருக்கும்.

'அது சரிய்யா.. இதையெல்லாம் எங்ககிட்ட ஏன் சொல்றே.. நாங்க ஏன் நடுராத்திரில சுடுகாட்டுக்குப் போகப் போறோம்?' என்று நீீங்கள் முனகுவது கேட்கிறது.  குற்றச் செயல்களின் மூலம் கிடைத்த பெரும்பணத்தை ஒரு ரஷ்ய மாஃபியா கும்பல், லண்டனுக்கு அனுப்பி  வெள்ளையாக்கும் சதி நடவடிக்கையின் இடையே ஒரு சாதாரண குடும்பம் தற்செயலாக மாட்டினால் என்னவாகும்?


***

கவிதைப் பேராசிரியரான பெரி லண்டனில் வசிப்பவர். மனைவி ஒரு வழக்கறிஞர். தங்களுக்குள் ஏற்பட்ட  சிறு மனஸ்தாபத்தை களைவதற்காக இருவரும் மொராக்கோவிற்கு செல்கின்றனர்.  பணக்கார ஹோட்டலில் டிமா என்கிற நடுத்தர வயது ஆசாமியை தற்செயலாக சந்திக்கிறான் பெரி. இருவரும் நண்பர்களாகின்றனர். தன் மகளின் பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கிறார் டிமா. சற்று தயக்கம் இருந்தாலும் 'ஒரு பெரிய மனுஷன் இத்தனை மதிச்சு அழைக்கிறானே' என்று செல்கிறான். அங்குதான் ஏழரை நாட்டுச் சனி ஆவேசமான பிரியத்துடன் பெரியை தழுவிக் கொள்கிறது.

டிமா ரஷ்ய மாஃபியா ஆசாமி. பெரிய பணமுதலை ஒன்றின் கணக்குப் பிள்ளை. பாவத்தில்  வந்த ரத்தப் பணத்தை வெள்ளையாக்குவது இவருடைய பணி. பெரிய முதலாளி இறந்தவுடன் சின்ன முதலாளி பதவிற்கு வருகிறார். ஈவு, இரக்கம் ஏதுமில்லாதவர். டிமாவைப்  போன்ற இன்னொரு ஆசாமியிடமிருந்து எல்லாவற்றையும் கறந்தவுடன் குடும்பத்தைச் சுட்டுக் கொள்கிறாா். அந்தக் குடும்பத்தின் மிச்சமிருக்கும் மூன்று மகள்கள் இப்போது டிமாவின் பாதுகாப்பில்.

இப்போது டிமாவிற்கும் அதே ஆபத்து ஒரு கத்தி போல தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது. அவரும் தன்னிடமுள்ள கணக்குகளை சின்ன முதலாளியிடம் ஒப்படைத்த பின்னர் கூண்டோடு கைலாசத்திற்கு அனுப்பப்படுவார். டிமாவைச் சுற்றி  சின்ன முதலாளியின் ஆட்கள். ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கின்றனர். அவர்களுக்கு தண்ணி காட்டி விட்டு பெரியைச் சந்திக்கிறார் டிமா.

தன் ஆபத்தை விளக்கி 'இந்த  மெமரி கார்டை' லண்டன் உளவுத்துறையிடம் தந்து விடு. அவர்களுக்கு புரியும். அந்தக் குழந்தைகளின் வாழ்க்கையோடு என் குடும்பத்தின் கதியும் உன் கையில்தான் இருக்கிறது. இங்கு வேறு யாரையும் நான் நம்ப முடியாது' என்கிறார்.  பெரிக்கு  இந்த ஆபத்தில் சிக்க விருப்பமில்லை என்றாலும் டிமாவின் நல்ல இயல்பிற்காக  சம்மதிக்கிறார்.

பூனை எலி ஆட்டம் ஆரம்பிக்கிறது.

***

பிரிட்டிஷ் உளவுத்துறையுடன் பேச்சு வார்த்தை நடக்கிறது. 'என்னுடைய குடும்பத்தை பாதுகாப்புடன் லண்டனுக்கு அழைத்து வருவதாக உத்தரவாதம் தந்தால்  சில வங்கி எண்களைச் சொல்வேன்' என்கிறார் டிமா. உளவுத்துறை அதிகாரியான பெக்கர் யோசிக்கிறார். அவருடைய முன்னாள் பாஸூக்கும் கூட இந்த சதியில் பங்கிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் சீரழிவதைப் பற்றி கவலைப்படாத சுயநலமி ஆசாமி. இந்தக் கூட்டத்தை எப்படியாவது அம்பலப்படுத்த வேண்டும் என பெக்கருக்கு தோன்றுகிறது.

கணக்குகளை ஒப்படைப்பதற்காக டிமாவை அழைக்கிறார் சின்ன முதலாளி. அந்த விஷயம் முடிந்ததும் குடும்பத்தோடு காலி என டிமாவிற்கு தெரியும். ஆனால் உளவுத்துறை எப்படியோ அவர்களைக் காப்பாற்றி விடுகிறது. தனியான சாகசம் மூலமாக டிமாவை பெரி காப்பாற்றுகிறான். ஆனால் இவர்கள் ஊரை விட்டை தப்பிக்க முடியாதவாறு ஒரு முட்டுக்கட்டை வருகிறது. வேறு யார்? பெக்கரின் முன்னால் பாஸ். இப்போது அரசியல்வாதியாக இருப்பதால் தன் அதிகாரத்தை உபயோகிக்கிறார்.

எனவே டிமாவின் குடும்பத்தை  ரகசிய இடத்திற்கு அனுப்புகிறார் பெக்கர். பெரியின் குடும்பமும் உடன் செல்கிறது. "நீ நம்பகத்தன்மையான ஆள்' என்று பெரியைப் பாராட்டுகிறார் டிமா. இருவருக்கும் உள்ள நெருக்கம் கூடுகிறது.

***

லண்டனுக்கு திரும்பும் பெக்கர் உயர்அதிகாரிகளிடம் கறுப்பு நிதியை வெள்ளையாக்கும் இந்த மகா சதியைப் பற்றி சொல்கிறார். இதனுடன் தொடர்புள்ள பண முதலைகளின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி வாங்குகிறார். "ஆனால் இதற்கு ஆதாரம் தேவை. டிமா வங்கி எண்கள் பற்றிய விவரங்களைத் தருவாரா? தந்தால் அவருக்கு அடைக்கலம் தரலாம்" என்கிறாார்கள்.

பேச்சுவார்த்தைக்காக டிமாவை வரச் சொல்லி தகவல் வருகிறது. கூட பெரியும் வருவதாகச் சொல்கிறான். ஆனால் உள்ளுணர்வில் ஏதோ நெருட  கடைசி நிமிடத்தில் அவனை வர வேண்டாம் என சொல்கிறார் டிமா. அவர் யூகித்தபடியே பயணிக்கும் ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறுகிறது.

எல்லாத்திட்டமும் ஃபணால் ஆகிறது. எதிரிகள் கொண்டாட்டமாகிறார்கள். பெக்கர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி டிமாவின் குடும்பத்தை லண்டனுக்கு வரவழைக்கிறார்.

பெரி கடைசி முறையாக பெக்கரை பார்க்க வருகிறான். 'டிமா இதை கொடுக்கச் சொனார்' என்று ஒரு பெட்டியைத் தருகிறான். உள்ளே ஒரு காலி துப்பாக்கி. பெக்கருக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரம் யோசித்து விட்டு துப்பாக்கியை அழுத்துகிறார். உள்ளே வங்கி எண்கள் வரிசையாக எழுதப்பட்டுள்ள ஒரு துண்டு பேப்பர் சுருளாக கிடக்கிறது.

***

புத்திசாலித்தனமான உரையாடல்களும் சாகசக் காட்சிகளும் நிறைந்துள்ள படம். பெரி, டிமா, பெக்கர் ஆகியவர்களின் நடிப்பு அபாரம். பெரி இந்தச் சிக்கலில் இறங்கும் போது நமக்கே அத்தனை பதட்டம் வருகிறது. ஒரு புத்திசாலித்தனமான திரில்லருக்கான இலக்கணத்துடன் இயக்கியிருக்கிறார் Susanna White.



(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)



suresh kannan

Wednesday, May 27, 2020

Chef (2014) - ‘கையேந்தி பவன்'





உலகத்திலுள்ள தொழில்களுள் மிகச் சிறப்பானதொன்று சமையல். இது ஒரு கலையும் கூட. மனிதனின் ஆதாரமான உணர்ச்சிகளுள் ஒன்றான பசியைப் போக்குவது. 'ஒருவரின் வயிற்றின் வழியாக அவரது இதயத்திற்கு செல்ல முடியும்' என்கிறது ஒரு பழமொழி. தம்முடைய தொழிலில் அர்ப்பணிப்புடனும்  ஆத்மார்த்தமான ஆர்வத்துடனும் ஈடுபடும் ஒரு சமையல் கலைஞனைப் பற்றிய அமெரிக்கத் திரைப்படம் இது. உணர்வுபூர்வமான அதே சமயத்தில் ஜாலியான படமும் கூட.


***

கலிபோர்னியா நகரத்திலுள்ள ஒரு பிரபல உணவகத்தின் தலைமைச் சமையற்காரர் கார்ல் கேஸ்பர். அன்றைய நாள் அவருக்கு பரபரப்பாக விடிகிறது. ஆம். உணவுகளைப் பற்றி எழுதும் பிரபல விமர்சகர் ராம்சே மிச்சல்  என்பவர் கார்ல் பணிபுரியும் உணவகத்திற்கு அன்று மாலை வரப்போகிறார். அவரது எழுத்துக்கு பலநூறு வாசகர்கள் உண்டு. எனவே தனது சமையல் திறனின் மூலம் விமர்சகரை எப்படியாவது கவர்ந்து விட வேண்டும் என்று கார்லுக்கு பயங்கர ஆர்வம் தோன்றுகிறது. தனது சகாக்களை அதற்கு தயார்ப்படுத்துகிறார். வித்தியாசமான உணவு வகைகளின் மூலம் ராம்சேவை அசத்தி விடவேண்டும் என்பதற்காக ஏற்பாடுகள் பரபரப்பாக நடக்கின்றன.

ஆனால் உணவகத்தின் உரிமையாளர் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். "தோ.. பாருப்பா.. நீ திறமையான செஃப்தான். ஒத்துக்கறேன். ஆனா உன் இஷ்டத்திற்கு மெனுவை மாத்தாதே. இது பிஸ்னஸ். இவங்களுக்கெல்லாம் நான்தான் சம்பளம் தர்றேன்" . கடுப்பாகும் கார்ல், வேறு வழியில்லாமல் வழக்கமான மெனுவை ஆனால் சிறப்பாக தயார் செய்கிறார்.


எல்லாம் முடிந்து விமர்சகரின் அபிப்ராயத்தை அவரது இணைய தளத்தில் படிக்கும் கார்லுக்கு டென்ஷன் ஏறுகிறது. கார்லின் சமையலைப் பற்றி கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறார் ராம்சே. அது மட்டுமல்ல. "வாடிக்கையாளர் திருப்பியனுப்பும் உணவையெல்லாம் கார்ல் தின்று விடுகிறார் போல" என்று  கார்லின் குண்டான உடம்பைப் பற்றியும் தனிப்பட்ட வகையில் விமர்சித்திருக்கிறார்.

***


இந்த விஷயம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவுகிறது. கார்லை  பலர் திட்டுகிறார்கள். சிலர் ஆதரவாக எழுதுகிறார்கள். 'டிவிட்டர்' என்கிற தளத்தில் அவரைப் பற்றிய நிறைய ஆபாச விமர்சனங்கள் இருப்பதை கார்லின் நண்பர்கள் சொல்கிறார்கள். இணையம் பற்றி கார்லுக்கு அதிகம் தெரியாது. எனவே தனது பத்து வயது மகனின் உதவியின் மூலம் டிவிட்டரில் உறுப்பினராகி தன்னைப் பற்றிய வசைகளை வாசிக்கிறார். மெல்ல மெல்ல அவருக்குள் சூடேறுகிறது.

தனிப்பட்ட முறையில் அனுப்புவதாக நினைத்துக் கொண்டு அவர்  விமர்சகருக்கு அனுப்பும் ஒரு செய்தி பொதுவில் சென்று சண்டையாக மாறுகிறது. 'இந்த முறை வந்து சாப்பிட்டு எழுது பார்க்கலாம்' என்று டிவிட்டரில் விமர்சகரை சவாலுக்கு அழைக்கிறார். மறுபடியும் பரபரப்பான ஏற்பாடுகள். தம்முடைய திறமையையெல்லாம் கொட்டி உணவு வகைகளை திட்டமிடுகிறார். ஆனால் மறுபடியும் உணவக உரிமையாளரிடமிருந்து முட்டுக்கட்டை. 'இங்க வியாபாரம்தான் முக்கியம். உன்னோட சவால், கலையார்வம் இதையெல்லாம் தூக்கி வெளியே போடு' என்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் முற்ற கார்ல் தனது பணியை தூக்கியெறிந்து விட்டு போகிறார்.

சவாலை எதிர்கொண்டு அன்று மாலை வரும் விமர்சகர், அதே வழக்கமான உணவு இருப்பதைப் பார்த்து விட்டு மறுபடியும் வெறுப்பேற்றுவது போல் ஒரு குறிப்பை இணையத்தில் எழுத, இதைக் கேள்விப்படும் கார்ல் உணவகத்திற்கு நேராக வந்து விமர்சகரை சரமாரியாக திட்டுகிறார். "நாங்க எவ்ள கஷ்டப்பட்டு இதையெல்லாம் தயார் செய்யறோம்னு உனக்குத் தெரியுமா?". அங்கிருப்பவர்கள் இதை வீடியோவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட கார்ல் பலராலும் நகைச்சுவையாக பார்க்கப்படுகிறார். அவரது புகழ் மங்கத் துவங்குகிறது.


***

அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நிற்கும் கார்லை அவரது முன்னாள் மனைவி, அவரது பிறந்த ஊரான மியாமி-க்கு அழைக்கிறார். இவர்களது மகனுடன் செல்வதென ஏற்பாடு. மியாமி செல்லும் கார்லுக்கு புதிய வெளிச்சம் கிடைக்கிறது. அங்கு கிடைக்கும் உதவியின் மூலம் ஒரு பழைய டிரக்கை புதிதாக்குகிறார். ஊர் ஊராக நகர்ந்து செல்லும் 'கையேந்தி பவன்'  ஒன்று தொடங்குவது என திட்டம். மகனும் இவருக்கு உதவுகிறான்.  கார்லின் பழைய சகா ஒருவனும் வந்து இணைகிறான்.

தன்னை தடைசெய்வதற்கு ஆள் யாரும் இல்லாமல் தன் சுயவிருப்பத்திற்கு ஏற்ப க்யூபாவின் பாரம்பரியமான உணவுகளை தயார் செய்கிறார். கூட்டம் வந்து அள்ளிக் கொள்கிறது. கார்லின் மகன் இதை புகைப்படமாகவும் வீடியோவாகவும் இணையத்தில் போட இவரது புகழ் பரவி அடுத்த ஊருக்கு இவர்கள் செல்லும் முன்னரே அங்கு கூட்டம் காத்துக் கிடக்கிறது. 'கற்றோர்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு' என்பது போல கார்ல் செல்லுமிடமெல்லாம் இவரது உணவிற்கு வரவேற்பு கிடைக்கிறது.

கார்லைப் பற்றி மட்டமாக எழுதிய விமர்சகரே இவரது உணவைத் தேடி வந்து சாப்பிட்டு பாராட்டுகிறார். "இப்பதான் மச்சி சூப்பர். உன் விருப்பத்திற்கு செஞ்சா எவ்ள நல்லா வருது பார்த்தியா. சரி. நான் பணம் போடறேன். ஹோட்டல் ஆரம்பிக்கலாமா?'' என்கிறார். புது ஹோட்டலில் தன் முன்னாள் மனைவியுடன் கார்ல் மீண்டும் இணையும் ஒரு கொண்டாட்டத்துடன் படம் நிறைகிறது.

***

கார்ல் ஆக அட்டகாசமாக நடித்து படத்தையும் இயக்கியிருப்பவர் Jon Favreau. இவரது மகனாக நடித்திருக்கும் எம்ஜே ஆந்தனியின் நடிப்பும் அபாரம். உணவு தயாராகும் காட்சிகள், நம் நாக்கில் நீர் ஊற வைக்கும் வகையில் அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கின்றன. 'சற்று தீய்ந்து போகும் உணவை மற்றவருக்கு ஏன் தரக்கூடாது' என கேட்கும் மகனிடம் ஒரு சமையற்காரராக அதன் பொறுப்புணர்வைப் பற்றி கார்ல் விளக்கும் இடம் சிறப்பானது.


உணவு என்பது அதன் சேர்மானங்களாலும் திறமைகளாலும் அல்ல, சமைப்பவரின் ஆன்மாவும் இணையும் போதுதான் சிறப்பானதாகிறது என்கிற கருத்தை அழுத்தமாகச் சொல்லும் திரைப்படம் இது.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Tuesday, May 26, 2020

Sully (2016) - ‘சல்லி’யின் சாகசம்





உங்கள் பணியிடத்தில் ஓர் அசாதாரணமான சிக்கல் நேர்கிறது என வைத்துக் கொள்வோம். அதை நீக்குவதற்காக பதட்டத்துடன் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறீர்கள். வெற்றிகரமாக அதை முடித்து விட்டு அந்தரங்கமாக அதன் திருப்தியை கர்வமாக உணர்கிறீர்கள். இதற்காக உங்கள் பாஸிடமிருந்து பாராட்டும் அங்கீகாரமும் கிடைப்பதற்குப் பதிலாக வேறொரு காரணத்திற்காக திட்டும் தண்டனையும் கிடைக்கிறது என்றால் என்ன செய்வீர்கள்?

ஒவ்வொரு பணியாளரும் எதிர்கொள்ள நேரும் பரிதாபகரமான சூழல் இது. விமான பைலட்டாக  42 ஆண்டுகளை ஒரு சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக கழித்த சாலி, தனது பணியின் இறுதிக்காலத்தில் இப்படியொரு சூழலை எதிர்கொள்ள நேர்கிறது. அது என்ன சிக்கல்? என்னவாகிறது அவருக்கு?

**
நியூயார்க் நகரத்திலுள்ள லாகார்டியா விமானநிலையத்திலிருந்து தனது சவாரியை துவக்குகிறார் சல்லி. விமானம் டேக் ஆஃப் ஆகிய மூன்றாவது நிமிடத்தில் பறவைகள் சரமாரியாக வந்து மோதுவதால் இஞ்சின்கள் பழுதாகின்றன. பதட்டமான சூழல். விமானத்தில் 155 பயணிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவொரு ஆபத்தும் வரக்கூடாது.

சாலி தன்னுடைய நீண்ட அனுபவத்தின் மூலம் உதவியாளரோடு அந்தச் சிக்கலை நிதானமாக கையாள்கிறார். கட்டுப்பாட்டு மையத்தை அழைத்து நிலைமையின் விபரீதத்தை சொல்கிறார். ‘ஒன்று கிளம்பிய இடத்திற்கு திரும்பவும் அல்லது அருகிலிருக்கும் ஒரு விமானநிலையத்தில் தரையிறக்கவும்’ என்று அங்கிருந்து பதில் வருகிறது.

சல்லியின் அனுபவ மூளை அவசரம் அவசரமாக சில கணக்குகளைப் போடுகிறது. ம்.ஹூம்.. அவர்கள் குறிப்பிடும் இடத்திற்குச் செல்ல நேரமில்லை. சட்டென்று முடிவெடுத்து விமானத்தை ‘ஹட்ஸன்’ ஆற்றுக்குள் இறக்குகிறார். கட்டுப்பாட்டு மையத்தில் இந்த தகவலை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைகிறார்கள். ஏனெனில் இதுவரை நீரில் தரையிறக்கப்பட்ட எந்தவொரு விமானமும் பிழைத்ததில்லை.

ஆனால் சாலி அதைச் சாதிக்கிறார். மிக மிக நிதானமாக வேகத்தைக் குறைத்து ஆற்றின் மீது இறக்குகிறார். பதட்டப்படும் பயணிகளை தைரியப்படுத்தி வெளியே பத்திரமாக போகும் குறிப்புகளை சொல்கிறார். அருகில் செல்லும் சிறிய கப்பல் ஒன்று இவர்களைின் தவிப்பை பார்த்து விட்டு உதவிக்காக வருகிறது.

விமானம் ஆற்றில் இறங்கிய செய்தி கட்டுப்பாட்டு அறைக்குள் தீப்பற்றியது போல சூழலை ஏற்படுத்துகிறது. அங்கிருந்து தகவல்கள் பறக்கின்றன. மேலும் சில கப்பல்கள் வருகின்றன. விமானத்தில் இருக்கும் அனைவரும் வெளியேறி விட்டார்களா என்பதை உறுதி செய்த பிறகே சாலி விமானத்திலிருந்து வெளியே வருகிறார். ஒரு காப்டனின் அடிப்படையான தியாகவுணர்வு இது.

**

சாலியை ஊரே கதாநாயகனாக கொண்டாடுகிறது. ஊடகங்கள் பரபரப்பாக இந்த நிகழ்வை ஒளிபரப்புகின்றன. உயிர் தப்பிய பயணிகள் தங்களின் அதிர்ஷ்டத்தை நம்ப முடியாமல் அழுது கதறுகிறார்கள்.

அப்போது கூட சாலிக்கு 155 நபர்களும் உயிர்தப்பி விட்டார்களா என்கிற எண்ணமே ஓடிக் கொண்டிருக்கிறது. ‘அதை உறுதிப்படுத்துங்கள்’ என்கிறார். “நீ செஞ்சது பெரிய விஷயம். போய் ரெஸ்ட் எடு தல.. இனி நாங்க பார்த்துக்கறோம்’ என்கிறார்கள் சக ஊழியர்கள்.

இப்படி ஒரு புறம் மக்களும் ஊடகங்களும் சாலியை ‘ஹீரோவாக’ கொண்டாடிக் கொண்டிருக்கும் போது மறுபறம் அவருக்கொரு பெரிய ஆப்பு காத்துக் கொண்டிருக்கிறது.

ஆம். தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு அவர் மீது விசாரணையை துவக்குகிறது. ‘அருகிலிருக்கும் விமான நிலையத்தில் போய் ஈசியா தரையிறங்கியிருக்கலாம். உன்னை எவன்யா போய் கப்பல் மாதிரி தண்ணில இறக்கச் சொன்னது?” என்று கடுப்பேற்றுகிறார்கள். சல்லியின் இந்த அபாரமான சாசத்தை 'சல்லி'த்தனமானது என்கிறார்கள்.
**

விமானத்தை ஒருமாதிரியாக பத்திரமாக தரையிறக்கி விட்டாலும் சாலிக்கு அது சார்ந்த உளவியல் பாதிப்பு இருக்கிறது. விமானம் கட்டிடத்தில் மோதிச் சிதறும் காட்சி மனதிற்குள் வந்து தூக்கத்திலிருந்து பதறி எழுந்து கொள்கிறார். விசாரணை முடியும் வரை வேறு நகரத்திலிருக்கும் தனது அவர் வீட்டிற்கும் செல்ல முடியவில்லை. மனைவி வேறு போன் செய்து “நீங்க ஹீரோதான். சரி. ஆனா பாவி மனுஷா.. பால் கார்டு வாங்க கூட காசில்லாம நான் அவஸ்தைப்படறத யார் கிட்ட சொல்றது?” என்கிற மாதிரி புலம்புகிறார்.

சாலிக்கு இந்த அவஸ்தைகளின் நடுவே விசாரணை தொல்லை வேறு. ‘கணினி உதவியுடன் அந்த சிக்கலான சூழலை செயற்கையாக உருவாக்கி நாங்கள் பல மாதிரியாக சோதனை செய்து பார்த்து விட்டோம். எப்படியும் ஒரு இன்ஜின் பழுதில்லாமல் இருந்திருக்கும். நீங்கள் பக்கத்திலிருக்கும் விமானநிலையத்தில் பத்திரமாக தரையிறக்கியிருக்கலாம்” என்று சாதிக்கிறார்கள்.

“என்ன சோதனையாக இருந்தாலும் நீங்கள் செய்தது செயற்கையானது. அந்தச் சிக்கலான சமயத்தில், 155 பயணிகளின் உயிர் மதிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டு மனிதனாக சிந்தித்திருக்கிறேன். இயந்திரங்களால் அது முடியாது” என்று வாதிடுகிறார் சாலி. இறுதி ரிப்போர்ட்டின் படி சாலி செய்தது சரி என்பது நிரூபணம் ஆகிறது.

**

Chesley Sullenberger  என்கிற விமான பைலட்டுக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சாலியாக டாம் ஹாங்ஸ் அட்டகாசப்படுத்தியுள்ளார். மிக மிக இயல்பான நடிப்பு. விமானம் ஆற்றில் இறங்கும் காட்சிகளும் பயணிகள் மீட்கப்படும் காட்சிகளும் அவற்றின் பதட்டத்தை நாம் உணருமாறு அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தை இயக்கியவர் 86 வயது இளைஞர் கிளின்ட் ஈஸ்ட்வுட்.

இயந்திரங்கள் எத்தனை மேம்படுத்தப்பட்டாலும் அவைகளால் மனித உணர்வுகளுக்கு இணையாக சிந்திக்க முடியாது என்கிற ஆதாரமான கருத்தை அழுத்தமாக பதிவு செய்கிறது இந்த திரைப்படம்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Monday, May 25, 2020

Taxi (2015) - 'டாக்ஸி… டாக்ஸி…'




‘இந்தக் கதை மட்டும் கிடைச்சிருச்சுன்னா உடனே பூஜை போட்டுடலாம்ஜி’ என ‘காதலிக்க நேரமில்லை’ செல்லப்பா மாதிரி நிறைய இயக்குநர்கள் அலப்பறை தருவார்கள். ஆனால் நம்மைச் சுற்றியே எத்தனையோ கதைகள் காற்றில் உலவிக் கொண்டிருக்கின்றன. கண்ணையும் காதையும் திறந்து வைத்திருந்தாலே போதும் என்பதை பல உலக சினிமாக்கள் சொல்கின்றன. அந்த வகையில் இரானிய சினிமாக்கள் முன்வைக்கும் உலகத்தின் கதைகள் மிக இயல்பானவை.

ஜாபர் பனாஹி இயக்கியிருக்கும் ‘டாக்ஸி’ திரைப்படம் அந்த வகையில் ஒன்று. சில அந்நியர்களையும் அறிந்தவர்களையும் தன்னுடைய டாக்ஸியில் ஏற்றி பயணம் செய்கிறார் இயக்குநர். அவர்களின் உரையாடல்களும் காட்சிகளும்தான் முழுத் திரைப்படமும். பெரும்பாலான காட்சிகள் காரின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் காமிராக்கள் மூலமாகவே காட்டப்படுகின்றன. இந்த உரையாடல்களின்  மூலமாக இரானிய தேசத்தின் அடக்குமுறை கலாச்சாரம், கருத்துரிமை மீதான தடை, மதஅடிப்படைவாதம், கலாச்சார காவலர்களின் அராஜகம், எந்நேரமும் கண்காணிப்பில் இருக்கும் சமூகம் போன்றவை நமக்கு புலப்படுகின்றன.

**

டாக்ஸியில் ஏறும் அவர்கள் இயல்பாக பேசத் துவங்குகிறார்கள். இளைஞன், கார் டயர்களை திருடுபவர்களைப் பற்றி திட்டத் துவங்குகிறான். “இவர்களையெல்லாம் தூக்குல போடணும் சார்.. திருட்டுப்பசங்க.. ஒண்ணு, ரெண்டு பேருக்கு மரண தண்டனை கொடுத்தாதான் மத்தவனுங்களுக்கு பயமிருக்கும்”

பின்னால் அமர்ந்திருக்கும் பெண்மணி இதை பலமாக ஆட்சேபிக்கிறார். “குற்றத்தின் காரணங்களை கண்டுபிடிக்காமல் ரெண்டு பேரை தூக்குல போட்டுட்டா  மட்டும் குற்றங்கள் குறைஞ்சுடுமா? இப்பவும் குற்றங்கள் அப்படியேதானே இருக்கு”.

இதை அவன் ஒப்புக் கொள்வதில்லை. “நீங்க என்ன வேலை செய்யறீங்க? டீச்சரா? அதான் இப்படிப் பேசறீங்க.. இப்படி செய்யாம அவங்க திருந்த மாட்டாங்க” இப்போது அந்தப் பெண்மணி கேட்கிறார். “நீங்க என்ன வேலை பாக்கறீங்க?”

டாக்ஸியிலிருந்து இறங்கிக் கொண்டே அவன் சொல்கிறான் “நானா? பிக்பாக்கெட் அடிக்கற தொழில் செய்யறேன். இருந்தா கூட கார் டயர் திருடற அளவிற்கு கேவலமானவன் இல்ல” என்ற படி சென்று விடுகிறான்.

**

விபத்தில் சிக்கிக் கொள்ளும் ஒருவனை இவரது டாக்ஸியில் ஏற்றுகிறார்கள். அவனது மனைவி ஒப்பாரி வைக்கிறாள். அடிபட்டவன் அவசரம் அவசரமாக ‘தன் உயிலை எழுத வேண்டும்’ என அடம்பிடிக்கிறான். இயக்குநரின் மொபைலில் உள்ள வீடியோ கேமிரா மூலம் அவன் சொல்வது படமாக்கப்படுகிறது. ‘எனக்குப் பிறகு என் வீடு மனைவிக்கு செல்ல வேண்டும்” பிறகு சுயநினைவை இழந்து விடுகிறான்.

மருத்துவமனைக்குள் அவனை கொண்டு செல்கிறார்கள். அவசரம் அவசரமாக திரும்பி வரும் அவனின் மனைவி வீடியோவை கேட்கிறாள். ‘அவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் இதுதான் எனது சாட்சியம்” என்கிறார். தான் பிறகு அனுப்புவதாக சொல்கிறார் இயக்குநர். என்றாலும் மறுபடியும் தொலைபேசியில் அவரை அழைத்து நினைவூட்டிக் கொண்டே இருக்கிறாள்.

**

திருட்டு டிவிடி விற்கும் ஒருவன் டாக்ஸியில் ஏறுகிறான். இயக்குநரை அடையாளங் கண்டு சிரிக்கிறான். “என்னைத் தெரியலையா சார். நான்தான் உங்க வீட்டிற்கு வந்து டிவிடில்லாம் தருவேன். உங்க மகன் கூட வாங்குவார்”. இயக்குநர் மையமாக புன்னகைக்கிறார். பிறகு அவனது வாடிக்கையாளர் வீட்டிற்கு செல்லச் சொல்கிறான். டிவிடி வாங்க வரும் வாடிக்கையாளன் இயக்குநரைப் பார்த்து ஆச்சரியமடைகிறான்.

தானும் படம் இயக்க விரும்புவதாக சொல்லி அதற்கு ஆலோசனைகள் கேட்கிறான். ‘நீயேதான் அதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்” என்கிறார் இயக்குநர். திருட்டு டிவிடி விற்கிறவன் இயக்குநரை தன்னுடைய கூட்டாளி என்பது போல் வாடிக்கையாளனுக்கு சொல்லியிருக்கிறான் என்பது தெரிகிறது. பிறகு அதை சிரித்தபடி விசாரிக்கிறார் இயக்குநர். “சார்.. நீங்க கூட இருந்ததாலதான் அவன் எல்லா டிவிடியும் வாங்கினான்”

**

இரண்டு வயதான பெண்கள் டாக்ஸியில் ஏறுகிறார்கள். பதட்டமாக இருக்கிறார்கள். என்னவென்று விசாரிக்கிறார் இயக்குநர். அவர்கள் குடுவையில் வைத்திருக்கும் மீனை கோவில் குளத்தில் மதியம் 12 மணிக்குள் போட்டு விட வேண்டும். மீனுக்கு ஏதாவது ஆகி விட்டால் அவர்களுக்கு ஏதாவது தீங்கு நடக்கும் என அச்சப்படுகிறார்கள். “சீக்கிரம் போப்பா’ என அவசரப்படுத்துகிறார்கள். வழியில் மீன் குடுவை உடைகிறது. அதை ஒரு பிளாஸ்டிக் கவரில் மாற்றித் தந்து அவர்களை வேறு காரில் ஏற்றி அனுப்புகிறார் இயக்குநர்.

**

உறவுக்கார சிறுமி இவருக்காக பள்ளியின் வாசலில் காத்திருக்கிறாள். ‘வர்றதுக்கு இவ்ள நேரமா? என்னை யாராவது கடத்திட்டு போயிருந்தா என்ன செய்யறது?” என விளையாட்டுக்கு பொரிந்து தள்ளுகிறாள். டாக்ஸியில் பயணிக்கும் போது அவளுடைய பள்ளியில் தந்திருக்கும் போட்டி ஒன்றைப் பற்றி சொல்கிறாள். ஒரு குறும்படம் எடுக்க வேண்டும். அந்தப் படத்தில் எவையெல்லாம் இருக்கக்கூடாது என்று ஆசிரியர் சொன்னதைப் பட்டியல் போடுகிறாள். மதத்திற்கு எதிரானதாக எதுவும் இருக்கக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகள். அவளுக்கு எதுவும் புரிவதில்லை.

அடுத்து, மனித உரிமை வழக்குகளை கையாளும் வழக்கறிஞர் பெண்மணி காரில் ஏறுகிறார். ஆண்கள் விளையாடும் ஒரு போட்டியைப் பார்க்கச் சென்ற காரணத்திற்காக பெண்ணொருத்தி சிறையில் இருப்பதைப் பற்றியும்  அங்கு அவள் உண்ணாவிரதம் இருப்பதைப் பற்றியும் உரையாடல் அமைகிறது.

டாக்ஸியில் எவரோ பர்ஸை விட்டுச் சென்றிருப்பதை சிறுமி சொல்கிறாள். மீன் குடுவை வைத்திருந்த முதிய பெண்மணிகளுடையது. அவர்களைத் தேடி கோயிலுக்குச் செல்கிறார் இயக்குநர். அந்த நேரத்தில் இவருடைய டாக்ஸியில் ஒருவன் காமிராக்களை திருடுவதோடு படம் நிறைகிறது.

**

இதில் நடித்திருப்பவர்கள் பெரும்பாலும் தொழில்முறை நடிகர்கள் அல்ல. பல சர்வதேச விருதுகளைப் பெற்ற திரைப்படம் இது.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Sunday, May 24, 2020

My Little Bride (2004) -'சின்னஞ்சிறு மணமகள்'




இந்த தென்கொரிய நகைச்சுவை திரைப்படத்தில் கதை என்று பெரிதாக ஏதுமில்லை.   'குஷி' திரைப்படத்தின் துவக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா அசரிரீயாக வந்து 'இதுதான் கதை' என்று ஒன்லைன் சொல்லி விட்டுப் போவார் அல்லவா, அது மாதிரியான சிக்கனமான கதை. ஆனால் குஷியைப் போலவே  ட்ரீட்மெண்ட்டில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள். தென்கொரிய திரைவரலாற்றில் அதிகம் வசூலாகி சாதனை படைத்த திரைப்படங்களில் இதுவுமொன்று.

***

Sang-min இருபதுகளில் இருக்கும் இளைஞன். பார்க்கும் பெண்களையெல்லாம் 'ஜொள்'வது அவனுடைய முக்கியமான பொழுதுபோக்கு. உடம்பு சரியில்லாத தாத்தாவை பார்ப்பதற்காக ஊருக்குத் திரும்பும் அவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. அவனை உட்காரவைத்து சாவகாசமாக தலையில் குண்டு போடும் தாத்தா சொல்வது இதுதான். "நீ Bo-eun-ஐ திருமணம் செய்து கொள்ள வேண்டும். கொரியப் போர் நடந்த போது இரண்டு குடும்பத்திற்குள்ளும் திருமண சம்பந்தம் நடக்கும் என்று நான் வாக்கு தந்திருக்கிறேன்"


Bo-eun-ம் இதைக் கேட்டு பயங்கர அதிர்ச்சியடைகிறாள்.  "தாத்தா, என்ன விளையாடுகிறீர்களா?  எனக்கு 16 வயதுதான் ஆகிறது. நான் படிக்க வேண்டியிருக்கிறது. அதிலும் போயும் போயும்...இவனைப் போய் திருமணமா?.. போ.. தாத்தா" என்று கோபத்துடன் கிளம்பி விடுகிறாள். இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக விளையாடி வளர்ந்தவர்கள் என்பதால் அவர்களிடம் அண்ணன்-தங்கை என்பதான மனோபாவமே படிந்திருக்கிறது. இருவருக்குமே இந்த திருமணத்தில் விருப்பமில்லை.

ஆனால் தாத்தா விடுவதாயில்லை. உயிருக்கு ஆபத்தாக மருத்துவமனையில் இருக்கிறேன் என்று நாடகமெல்லாம் ஆடி திருமணத்தை கட்டாயப்படுத்துகிறார். Bo-eun வேறுவழியின்றி கண்ணீருடன் திருமணத்திற்கு சம்மதிக்கிறாள்.

***


Sang-min-க்கும் இந்த திருமணத்தில் விருப்பமேயில்லைதான் என்றாலும் வேறு வழியில்லாத சூழலில் Bo-eun மீது மெலிதான காதல் கிளம்புகிறது. ஆவலுடன் தேன்நிலவுப் பயணத்திற்கு கிளம்புகிறான். ஆனால் விமானநிலையத்தில் அவனை ஏமாற்றி விட்டு Bo-eun துயரத்துடன் தன் சொந்த ஊரில் சுற்றிக் கொண்டிருக்கிறாள். இரண்டு பேரும் ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் என்றே எல்லோரும் நினைக்கிறார்கள்.

Bo-eun எங்கெங்கோ சுற்றி விட்டு நடுஇரவில் வீட்டின் முன் நின்று கொண்டிருக்கிறாள். உலக வரலாற்றிலேயே தனியாக ஹனிமூன் கொண்டாடிய Sang-min சரியாக அந்த நேரத்தில் வீடு திரும்புகிறான். சட்டென்று அவளுடைய உடையை மாற்றி விட்டு உள்ளே நுழைகிறார்கள்.  இரண்டு பேர்களின் பெற்றோர்களும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.

தனிக்குடித்தனம் துவங்குகிறது.  வெளிப்பார்வைக்கு அவர்கள் தம்பதியர்களாக இருந்தாலும் வீட்டினுள் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். தனக்கு திருமணம் ஆன செய்தி தெரிந்தால் பள்ளியில் கிண்டலடித்து தீர்த்து விடுவார்களே என்று தன் திருமண விவரத்தை எவருக்கும் தெரியாமல் ரகசியம் காக்கிறாள் Bo-eun.


***

ஃபேஸ்பால் விளையாட்டு வீரனாக இருக்கும் சக மாணவன் ஒருவன் மீது நேசம் கொள்கிறாள் Bo-eun.  உண்மையில் அவளுக்கு தனக்கு நடந்த திருமணம் என்பது ஒரு விளையாட்டு போலவே தோன்றுகிறது. Sang-min தன் கணவன் என்றே அவளுக்குத் தோன்றுவதில்லை. எனவே தன் வயதிற்கு இணையான மாணவன் அருகில் வருவதே அவளுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கிறது. ஃபேஸ்பாலுக்காக ஏங்கும் மாணவிகள் Bo-eun-ஐ பொறாமையுடன் பார்க்கிறாள். "ஏய் உனக்கென்னடி.. ஹஸ்பண்டும் இருக்காரு.. பாய் பிரண்டும் இருக்காரு. எனக்கு யாருமே இல்லை" என்று நொந்து போகிறாள் இவளுடைய தோழி.


Bo-eun-ன்  அன்பைப் பெறுவதற்காக என்னென்னவோ முயற்சிகளில் ஈடுபடுகிறான் Sang-min. எல்லாமே தோல்வியில் முடிகிறது. இதற்கிடையில் பயிற்சியொன்றிற்காக  Bo-eun பள்ளிக்கே ஆசியரராக வருகிறான் Sang-min. அவளுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.


Sang-min திருமணம் ஆகாதவன் என நினைத்துக் கொண்டு அங்குள்ள வயதான ஆசிரியை ஒருத்தி இவனை காதலுடன் துரத்துகிறாள். இது சார்ந்த குறும்பான நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


ஒரே வீட்டில் எலியும் பூனையுமாக இருந்தாலும் Sang-min-ன் நல்ல குணங்களையும் அன்பையும் மெல்ல மெல்ல புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறாள் Bo-eun.

***


வயதான ஆசிரியைக்கு உண்மை தெரிந்து போய் Bo-eu-ஐ மறைமுகமாக தண்டிப்பதற்காக, பள்ளி ஆண்டுவிழா ஏற்பாட்டை முன்னிட்டு ஒரு பெரிய சுவரை அழகுபடுத்தச் சொல்கிறாள்.  ஆனால் Bo-eun அதை தனியாளாகச் செய்து முடிக்க வேண்டும். இரவெல்லாம் உழைக்கிறாள் Bo-eun. அவளுடைய தோழியும் உதவுகிறாள். என்றாலும் அவர்கள் நினைத்தது போல் அழகாகவில்லை.


இந்த விஷயத்தை அறியும் Sang-min தன் நண்பர்களுடன் சென்று சுவரின் ஓவியத்தை ஒழுங்குபடுத்துகிறான். சிறுவயதில் தானும் Bo-eun-ம் விளையாடிய ஊஞ்சல் விளையாட்டை அழகான ஓவியமாக  வரைந்து வைக்கிறான். இதைப் பார்க்கும் Bo-eun நெகிழ்ந்து கண்ணீர் விடுகிறாள்.

ஆண்டு விழா கொண்டாட்ட நாளன்று Sang-min-ஐ உரையாடச் சொல்கிறார்கள். அப்போது குறுக்கிடும் மாணவி ஒருத்தி இவர்களின் திருமண விஷயத்தை பொது மேடையில் போட்டு உடைத்து வீடுகிறாள்.

"Bo-eun மீது எந்த தவறுமில்லை. பெரியவர்களின் கட்டாயத்தினால் அவள் என்னை திருமணம் செய்து கொண்டாள். அவளுக்குப் பிடித்தமானவர்கள் இந்தப் பள்ளியிலேயே கூட இருக்கலாம். தயவுசெய்து அவளைக் கிண்டல் செய்து அவள் படிப்பை பாழடிக்காதீர்கள்" என்று உருக்கமாக வேண்டுகிறான்.

இதைப் பார்த்து கண்ணீர் விடும் Bo-eun ஓடி வந்து அவனை அணைத்துக் கொள்ள ஒட்டுமொத்த பள்ளியே கைதட்டி மகிழ்கிறது.

***


Bo-eun -ஆக Moon Geun-young அற்புதமாக நடித்திருக்கிறார். இவருடைய குறும்பான முகபாவங்கள், உடல்மொழி அனைத்தும் நம்ம ஊர் 'ஜோதிகா'வை நினைவுப்படுத்துகிறது. Sang-min- ஆக நடித்திருக்கும் Kim Rae-won-ன் நடிப்பும் பிரமாதம். ஏற்கெனவே சொன்னபடி இதன் ரகளையான திரைக்கதைதான் இத்திரைப்படத்தின் பெரிய பலம். My Wife Is 18 என்கிற ஹாங்காங் படத்தின் ரீமேக் இது. இயக்கம் -  Kim Ho-jun.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Saturday, May 23, 2020

Instructions Not Included (2013) - 'மெக்ஸிகோவின் 'தெய்வத் திருமகள்'



தாயின் அன்பும் பாசமுமே பொதுவாக அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சினிமாவில் ஒரு தந்தைக்கும் மகளிற்கும் இடையே உள்ள அன்பை ஜாலியாகவும் நெகிழ்வாகவும் சொல்லும் மெக்ஸிகோ நாட்டின்  நகைச்சுவை திரைப்படம் இது.

**

அச்சம் என்றால் என்னவென்றே அறியக்கூடாது என்பதற்காக மலையுச்சியில் இருந்து தள்ளி விடுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை சிறுவனான வாலன்டைனுக்கு தருகிறார் அவனது தந்தை. என்றாலும் கூட அவனுக்கு உள்ளூற பல விஷயங்களில் அச்சம் இருக்கிறது.

பெயருக்கு ஏற்றாற் போல பலவிதமான பெண்களுடன் உறவிருக்கும் காதல் மன்னனாக இருக்கிறான் இளைஞன் வாலன்டைன். ஒரு நாள், அவனது அறையைத் தட்டும் ஓர் இளம்பெண், ‘உன் குழந்தையை பிடி. ‘இதோ வருகிறேன்’ என்று சென்று விடுகிறாள். பிறகு அவள் திரும்பி வருவதில்லை.

தன்னுடைய சுதந்திரத்திற்கு தடையாய் இருக்கும் அந்தப் பெண் குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று அவனுக்குத் தெரிவதில்லை. தாயைத் தேடி அவளிடம் ஒப்படைத்து விடுவோம் என்று மெக்ஸிகோவில் இருந்து லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு சட்டவிரோதமாக வருகிறான்.

**

குழந்தையின் தாயை அங்கு கண்டுபிடிக்க முடிவதில்லை.  நீச்சல் குளத்தின் அருகே சென்று விடும் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக உயரமான கட்டிடடத்தின் மேலேயிருந்து குதிக்க வேண்டிய ஒரு சூழல். தன்னுடைய தந்தை தந்த பயிற்சியை மனதில் நினைத்துக் கொண்டு எப்படியோ கீழே குதித்து குழந்தை மேகியைக் காப்பாற்றுகிறான். தனது திரைப்படங்களுக்காக ஆபத்தான சாகசக் காட்சிகளை செய்யும் ஒரு ‘ஸ்ட்ண்ட் மேனை’ தேடிக் கொண்டிருக்கும் இயக்குநர் கண்ணில் படுகிறான். உள்ளுக்குள் பயப்படுகிறவனாக இருந்தாலும் வேறு வழியில்லாமல், குழந்தையை வளர்ப்பதற்காக அந்தப் பணியில் சேர்கிறான்.

குழந்தை மேகியுடன் அவனுக்கு ஒட்டுதல் ஏற்படுகிறது. அவளுக்காக வீட்டையே ஒரு தீம் பார்க் போல மாற்றி அதிக அன்பைச் செலுத்துகிறான். அவள் தன் தாயின் பிரிவை உணரக்கூடாது என்பதற்காக, அவளுடைய தாய் ஜூலி அனுப்புவது போல பல போலியான கடிதங்களை அனுப்பி நம்பச் செய்கிறான்.

**
தாயை நேரில் காண வேண்டும் என்று மேகி அடம்பிடிக்க அவளுக்காக ஒரு நடிகையை ஏற்பாடு செய்ய அவன் முயற்சிக்கும் போது மேகியின் உண்மையான தாயான ஜூலியே அவனைத் தேடி வருகிறாள். மேகிக்கு தன் தாயைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. அவள் இதுவரை பல்வேறு ஊர்களுக்கு சென்றிருந்ததாக வாலன்டைன் சொல்லியிருக்கும் பொய்களை இவளும் இணைந்து ஒரு மாதிரியாக சமாளிக்கிறாள்.

தாயும் மகளும் பரஸ்பரம் பயங்கர அன்பைப் பொழிந்து கொள்கிறார்கள். இதற்கிடையில் ஜூலியிடம் ஓர் உண்மையைச் சொல்ல முயல்கிறான் வாலன்டைன். அவனுடைய உயிருக்கு ஆபத்தான நோய் இருப்பது போல காட்சிகள் அமைகின்றன.

மேகியைப் பிரிய முடியாமல் ஊருக்குச் செல்லும் ஜூலியிடமிருந்து வாலன்டைனுக்கு ஒரு நோட்டீஸ் வருகிறது. பிரி்த்துப் பார்த்தால் அதிர்ச்சி. மேகியை அவள் அழைத்துச் சென்று வளர்க்கவிருப்பதாக அந்த நோட்டீஸ் சொல்கிறது. “ஏன் இந்தக் கொடுமையைச் செய்கிறாய்?” என்று மன்றாடுகிறான் வாலன்டைன். ஜூலி கேட்பதாயில்லை.

வழக்கு விசாரணைக்கு வருகிறது. வாலன்டைன் ஒரு ‘ஸ்டண்ட்மேனாக’ ஆபத்தான பணியில் இருப்பதால்  நீதிமன்றத்தில் அதனை காரணம் காட்டுகிறாள் ஜூலி. தன் மகளை விட்டுப் பிரியக்கூடாது என்பதற்காக ஆபத்து அல்லாத சாதாரண பணிகளைச் செய்யவும் தயாராக இருக்கிறான் வாலன்டைன்.

**
வழக்கு ஜூலிக்கு சாதகமாக அமைவது போல சென்றாலும் தன் மகளை வளர்ப்பதற்காக தன் உயிரையும் பணயம் வைக்கத் துணிந்த தந்தையின் அன்பை கருத்தில் கொண்டு மேகி அவனிடமே வளரட்டும் என்று தீர்ப்பளிக்கிறார் நீதிபதி. வாலன்டைன் ஆனந்தக் கண்ணீரில் மூழ்குகிறான்.

இந்த தீர்ப்பினால் அதிர்ச்சியடையும் ஜூலி, மரபணு சோதனைக்காக விண்ணப்பிக்க, முடிவு வாலன்டைனுக்கு பாதகமாக வருகிறது. ஆம். அவன் மேகியின் தந்தையல்ல.

நீதிமன்றத்தின் உத்தரவுபடி ஜூலி, மேகியை அழைத்துச் செல்ல வர, அவளுடன் செல்வதற்கு விருப்பமிருந்தாலும் தந்தையைப் பிரியவே முடியாத மனநிலையில் இருக்கிறாள் மேகி. எனவே இருவரும் கட்டிடத்தின் உச்சியில் இருந்து இறங்கி தப்பி மெக்ஸிகோவிற்கு சென்று விடுகிறார்கள்.

**

தந்தையும் மகளும் மெக்ஸிகோவில் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவளைத் தேடிக் கொண்டு அங்கும் வருகிறாள் ஜூலி. வாலன்டைனால் அதுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்மையை அவள் அறிந்து கொண்டிருக்கிறாள்.

உயிருக்கு ஆபத்தான நோய் இருப்பது வாலன்டைனுக்கு அல்ல. மேகிக்கு. சிறுமியின் பரிதாப மரணத்தோடு படம் நிறைகிறது. எல்லாவித அச்சத்தையும் கடந்து விடும் பயிற்சியுடன் தன் தந்தை வளர்த்ததை அதன்பிறகு நினைவுகூர்கிறான் வாலன்டைன்.

**

உள்ளுக்குள் அச்சம் இருக்கும் வாலன்டைன் படப்பிடிப்புகளில் நிகழ்த்தும் சாகசக் காட்சிகள் நகைச்சுவையாக இருக்கின்றன. அவனுக்கும் மேகிக்குமான அன்பு பல காட்சிகளில் அற்புதமாக பதிவாகியிருக்கிறது.

மேகியாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு அபாரம். வாலன்டைனாக Eugenio Derbez சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தை இயக்கியவரும் இவரே. மெக்ஸிகோவில் அதிகம் வசூலான திரைப்படங்களில் ஒன்றாக இது அமைந்தது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Friday, May 22, 2020

Nightcrawler (2014) - 'செய்திக் கொடூரன்'





செய்திகளை பரபரப்பாக்கி முந்தித் தரும் வணிகப் போட்டிக்காக ஊடகங்கள் அறவுணர்வை இழந்து எவ்வகையான கீழ்மைகளுக்கெல்லாம் செல்லுகின்றன என்பதையும் மனிதத்தன்மையை இழக்கும் இந்த கலாச்சாரம் வளரும் பயங்கரத்தையும் முகத்தில் அறையும் கடுமையுடன் சொல்கிறது இந்த திரைப்படம்.

**

லூ ப்ளூம் ஒரு சில்லறைத் திருடன். தடுப்புக் கம்பிகள், சாக்கடை மூடிகள் போன்றவற்றை திருடி விற்று சம்பாதிப்பவன். திருடன் என்பதால் எவரும் வேலை தருவதில்லை. ஆனால் நிலையானதொரு தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்கிற வெறி அவனுக்குண்டு.

அந்தச் சிந்தனையில் அவன் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு  சாலை விபத்தையும், அதை ஒருவன் அவசரம் அவசரமாக  காமிராவில் படம்பிடிப்பதையும்  பார்க்கிறான். . என்னவென்று விசாரிக்கிறான். இம்மாதிரியான விபத்துக் காட்சிகளை, ரத்தம் வழியும் பயங்கரமான தருணங்களை படமாக்கி, அந்தக் காட்சித் துண்டுகளை செய்தி சானல்களிடம் விற்று பணமாக்க முடியும் என்று தெரிய வருகிறது.

விலையுயர்ந்த சைக்கிள் ஒன்றை திருடி விற்று தன் தொழிலைத் துவங்குகிறான். காவல்துறையினரின் உரையாடல்களை கேட்கக்கூடிய கருவி மற்றும் ஒரு காமிராவை வாங்குகிறான். முதலில் சில தோல்விகளைச் சந்தித்தாலும் இதிலுள்ள போட்டிகளையும் விதிகளையும் பிறகு மெல்ல மெல்ல அறிகிறான்.

விபத்து, குற்றம், வன்முறை நிகழும் இடத்திற்கு எவர் முதலில் விரைவாகச் சென்று அந்தக் காட்சிகளை திறமையாக பதிவு செய்கிறார்களோ அவர்களே இதில் சம்பாதிக்க முடியும். சற்று தாமதம் ஆனாலும் போச்சு. போட்டியில் எவனாவது முந்திக் கொள்வான்.

லூ இந்த வித்தையில் மெல்ல முன்னேறுகிறான். முதல் போணி. விபத்து தொடர்பான ரத்தம் ஒழுகும் ஒரு வீடியோ துண்டை எடுத்துக் கொண்டு  செய்தி சானலுக்கு செல்கிறான். நிகழ்ச்சி அதிகாரி அதை எடுத்துக் கொண்டு பேரத்திற்குப் பிறகு சொற்ப தொகையை தருகிறாள். ‘உன்னிடம் திறமை இருக்கிறது. நல்லதாக ஒரு கேமரா வாங்கிக் கொள்’.

**

வேலை தேடி அலையும் ஓர் இளைஞனை தன்னுடைய உதவியாளனாக அமர்த்திக் கொள்கிறான் லூ. அவனிடம் சாமர்த்தியமாக பேசி குறைந்த தொகைக்கு ஒப்புக் கொள்ளச் செய்கிறான்.

குற்றச் செய்திகளை அதிவேகமாக துரத்தும் இதன் வசீகரம் அவனுக்கு பிடித்துப் போகிறது. மூர்க்கமாக முன்னேறுகிறான். இதே தொழிலில் இருக்கும் ஒரு போட்டியாளன் விபத்தில் சிக்கும் போது அவனையும் வீடியோ எடுக்க லூ தயங்குவதில்லை. அந்த அளவிற்கு மனிதத்தன்மையை இழப்பவனாக மாறுகிறான். இதற்காக சட்டமீறல்களையும் சாமர்த்தியமாக செய்கிறான்.

லூ விற்கும் அவனுடைய உதவியாளனுக்கும் சம்பளம் தொடர்பாக அவ்வப்போது விவாதங்கள் நிகழ்கின்றன. அவனுக்கு ஆசை காட்டி ஒரு மாதிரியாக சமாளிக்கிறான். ‘என்னுடைய வேகத்திற்கு நீ ஈடு தந்தால் அதற்கேற்ப பணம் கிடைக்கும். வேலையை கற்றுக் கொள்”

**

ஒரு வீட்டில் துப்பாக்கிச் சப்தம் கேட்பதாக ஸ்கேனர் கருவியில் தகவல் கிடைக்கிறது. தனது காரை அதிவிரைவாக எடுத்துச் சென்று மின்னல் வேகத்தில் அந்த இடத்தை அடைகிறான். கொலையாளிகள் அப்போதுதான் வெளியேறுகிறார்கள்.

மூச்சைப் பிடித்துக் கொண்டு அந்தக் காட்சிகளை பதிவு செய்கிறான். பிறகு கொலை நடந்த வீட்டிற்குள் நுழைந்து ரத்தம் வழிய கிடக்கும் சடலங்களை வீடியோ எடுக்கிறான். இதற்குப் பிறகுதான் போலீஸே வருகிறது. அவசரம் அவசரமாக வெளியேறி விடுகிறான்.

செய்தி சானலுக்குப் போகும் வழியில் சாமர்த்தியமாக ஒரு காரியத்தைச் செய்கிறான். கொலைகாரர்களின் முகம் பதிந்திருக்கும் காட்சிகளை துண்டித்து தனியாக எடுத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை செய்தி சானலுக்கு அதிக விலைக்கு விற்கிறான். இதன் பிரத்யேகமான காட்சிகள் வேறு எந்த தொலைக்காட்சியிடமும் இல்லை என்பதால் இவனுடைய மதிப்பு உயர்கிறது.

**

வீடியோவில் தெரியும் கொலைகாரர்களின் வாகன எண்ணின் மூலம் அவர்களது முகவரியை அறிந்து வெளியே காத்திருக்கிறான். அவர்கள் கிளம்பும் போது பின்தொடர்கிறான். அவர்கள் ஒரு உணவகத்தில் இருக்கும் போது காவல்துறையினருக்கு அவர்களைப் பற்றிய தகவலைத் தருகிறான்.

போலீஸ் அங்கே வரும் போது அவர்களுக்கும் கொலையாளிகளுக்கும் மோதல் நிகழும். அதை வீடியோ எடுத்து ‘Exclusive News’ ஆக விற்பனை செய்வது அவனது நோக்கம். “இது சட்டவிரோதம்” என்று உதவியாளன் தடுக்க முயல்கிறான். லூ கேட்பதாயில்லை. ‘தான் இதற்கு ஒத்துழைக்க முடியாது” என்று உதவியாளன் பின்வாங்க முயல, அவனை மிரட்டியும் ஆசை காட்டியும் பணிய வைக்கிறான் லூ.

இவன் எதிர்பார்த்தபடியே போலிஸூக்கும் கொலைகாரர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை நடக்கிறது. கொலையாளிகள் தப்பிச் செல்ல அவர்களை காரில் வேகமாக பின்தொடர்கிறான். போலீஸூம் அவர்களைத் துரத்துகிறது. ஒரு கட்டத்தில் கொலைகாரர்களின் வாகனம் தடுமாறி விழுகிறது.

அருகில் சென்று பார்க்கும் லூ, தனது உதவியாளனை நெருங்கி வந்து வீடியோ எடுக்கச் சொல்கிறான். உள்ளே இருக்கும் கொலைகாரன் ஆத்திரத்துடன் உதவியாளனை துப்பாக்கியால் சுட பரிதாபமாக அவன் செத்துப் போகிறான். கருணையேயின்றி அவனுடைய சடலத்தையும் வீடியோ எடுக்கிறான் லூ..

**

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் இவனிடம் விசாரணை செய்கிறது. எல்லாவற்றிற்கும் சாமர்த்தியமாக பதில் சொல்லி தப்பிக்கிறான்.

மனித உயிர்களைப் பற்றியோ உணர்வுகளைப் பற்றியோ எந்தக் கவலையுமில்லாமல் பணத்திற்காக பரபரப்பு செய்திகளை நோக்கி ஓடும் இவனும் ஒரு விபத்தில் இறந்து விடுவான் என்கிற நீதிக்கதையின் முடிவை நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். யதார்த்தம் அப்படியல்ல. அவன் சில பல உதவியாளர்களோடு ஒரு செய்தி நிறுவனத்தை உருவாக்குவதோடு படம் நிறைகிறது.

**

லூ ப்ளூம் ஆக Jake Gyllenhaal அற்புதமாக நடித்திருக்கிறார். Dan Gilroy இயக்கிய இந்த திரைப்படம் ‘சிறந்த திரைக்கதைக்காக’ ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Thursday, May 21, 2020

The Fencer (2015) - 'வாள் முனையில் நிற்கும் அன்பு'





மாணவர்களுக்காக தன் உயிரையே பணயம் வைக்கத் துணியும் ஓர் ஆசிரியரைப் பற்றிய உணர்வுபூர்வமான, பின்லாந்து திரைப்படம் இது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

**

ரஷ்ய நகரான லெனின்கிராடிலிருந்து எஸ்தோனியாவிலுள்ள ஒரு சிறிய நகரத்திற்கு தனது பெயர் அடையாளத்தை மாற்றிக் கொண்டு செல்கிறான் Endel Nelis, அதற்குப் பின் துயரமான வரலாற்றுக் காரணம் இருக்கிறது.

இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த சமயம். எஸ்தோனியா, ஜெர்மனியின் ஆக்ரமிப்பில் இருந்த போது நாஜி படையால் அங்கிருந்த இளைஞர்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். அதன் பிறகு எஸ்தோனியாவை ரஷ்யா கைப்பற்றிய பிறகு ஜெர்மானிய ராணுவத்தில் இணைந்தவர்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து கைது செய்து சைபீரிய சிறைக்கு அனுப்பினார்கள். அவர்களின் கதி என்னவானது என்பது அதன் பிறகு எவருக்கும் தெரியாது. கட்டாயமாக ராணுவத்தில் இணைக்கப்பட்ட அப்பாவிகள் பழிவாங்கப்பட்டது வரலாற்றுக் கொடுமை.

**

Endel Nelis அவ்வாறான ஒரு ராணுவ வீரன். எனவே ரகசிய போலீஸ் கண்களில் படாமல் மறைந்து வாழ்வதற்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறான். அங்குள்ள பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிக்குச் சேருகிறான். அங்கு போதிய அளவில் விளையாட்டு உபகரணங்கள் இருப்பதில்லை. சிடுமூஞ்சி தலைமையாசிரியர் ‘இருப்பதை வைத்து ஏதாவது செய்’ என்று கூறி விடுகிறார்.

வாள் சண்டையில் திறமையுள்ள Endel Nelis தனிமையில் பயிற்சி செய்து கொண்டிருப்பதை ஓர் இளம் மாணவி பார்த்து விட்டு, ‘எங்களுக்கும் கற்றுத் தருவீர்களா?” என்று கேட்கிறாள். முதலில் மறுக்கும் அவன் பிறகு ஒப்புக் கொள்கிறான். அங்குள்ள பெரும்பாலான மாணவர்கள் இதைக் கற்க ஆர்வமாக முன்வருகிறார்கள்.

மெல்ல மெல்ல அவர்களுக்கு விளையாட்டு நுணுக்கங்களை பயிற்சியளிக்கிறான். அங்கு பணிபுரியும் ஓர் இளம் ஆசிரியை இந்த விஷயத்தைப் பாராட்டுகிறாள். ஆனால் தலைமையாசிரியருக்கு இது பிடிப்பதில்லை. பெற்றோர்களின் மூலமாக தடை செய்ய நினைக்கிறார். அதற்கான கூட்டத்தில் சில தயக்கங்களுக்குப் பின் பெற்றோர்களின் ஆதரவு கூடவே அவரால் எதுவும் செய்ய முடிவதில்லை.

**

இவனுடைய பின்னணி பற்றி சந்தேகம் வரும் தலைமையாசிரியர், தன்னுடைய உதவியாளரை நகரத்திற்கு அனுப்பி விசாரிக்கச் சொல்கிறார். இதற்கிடையில் அந்த ஊருக்கு Endel Nelis-ன் நண்பன் வருகிறான். “நீ முதலில் இங்கிருந்து கிளம்பு. ரகசிய போலீஸ் உன்னை தீவிரமாக தேடுகிறது. இனியும் ஒரே இடத்தில் தங்கினால் ஆபத்து” என்று எச்சரிக்கிறான்.

அவனுடன் கிளம்பி விடும் Endel Nelis ரயில் நிலையத்தில் தயங்கி, மாணவர்களைப் பற்றி யோசித்துப் பார்க்கிறான். மிக ஆர்வத்துடன் வாள் சண்டை கற்றுக் கொள்ளும் அவர்களின் முகங்கள் அவனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ‘ஆனது ஆகட்டும்’ என்று செல்லாமல் திரும்பி விடுகிறான்.

**

ஒரு நாள் மாணவர்கள் பத்திரிகை விளம்பரத்தைக் கொண்டு வருகிறார்கள். தலைநகர் லெனின்கிராடில் ‘வாள் சண்டை போட்டி’ நடப்பது குறித்தான விளம்பரம். மாணவர்கள் ஆர்வமாக ‘போகலாம்’ என்கிறார்கள். Endel Nelis தயங்குகிறான். நகரத்திற்கு சென்றால் மாட்டிக் கொள்வான். எனவே ‘நீங்கள் இன்னமும் போதிய பயிற்சி பெறவில்லை. அங்கு போட்டி கடுமையாக இருக்கும். எனவே அடுத்த வருடம் பார்க்கலாம்’ என்கிறான். மாணவர்கள் கடுமையான ஏமாற்றத்திற்கு உள்ளாகிறார்கள்.

அவர்களின் ஏமாற்ற முகங்களை சகித்துக் கொள்ள முடியாத Endel Nelis, தனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் என்று நினைத்து ‘போகலாம்’ என்கிறான்.. மாணவர்கள் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். சிறந்த நான்கு மாணவர்களை தேர்வு செய்து நகரத்திற்கு அழைத்துச் செல்கிறான்.

**

போட்டி நடக்குமிடத்திற்கு சென்ற பிறகுதான் ‘நவீன தடுப்பு உடை’ கட்டாயம் என்று தெரியவருகிறது. இவர்களிடம் அது இல்லை. அங்கிருக்கும் இதர குழுக்களிடம் கேட்டுப் பார்க்கிறான். எவரும் தருவதாய் இல்லை. இவனின் வேண்டுகோளைப் பார்த்து விட்டு ஒரு குழுவின் கோச், தாமாக முன்வந்து அந்த உடைகளை தருகிறாள்.

போட்டி ஆரம்பமாகிறது. பார்வையாளர்களின் கூட்டத்தில் ராணுவ வீரர்களும் நின்றிருக்கிறார்கள். Endel Nelis-க்கு சந்தேகம் வருகிறது.  தலைமையாசிரியர் இவனைக் காட்டிக் கொடுத்து விடுகிறார். எனவே அவனை கைது செய்து அழைத்துச் செல்ல போலீஸ் காத்துக் கொண்டிருக்கிறது. இவனுடைய மாணவர்கள் புதிய சூழலில் முதலில் தடுமாறினாலும் இவன் தரும் ஊக்கத்தினால் மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி நகர்கிறார்கள்.

போட்டியின் இடையில் அங்கிருந்து தப்பிச் சென்று விடலாமா என்று Endel Nelis யோசிக்கிறான். அதற்காக முயன்று மறுபடியும் மாணவர்களை நினைத்து தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான். வெற்றிப் புள்ளிகளை நோக்கி நகரும் மாணவர்கள், இவனைக் காணாமல் தடுமாறுகிறார்கள். திரும்பி வரும் இவனை, ஒரு சிறுமி ‘இங்கிருந்து நகரக் கூடாது’ என்று வாக்கு தரச் சொல்கிறாள்.

**

இவனுடைய குழு இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறது. பரபரப்பாக நிகழும் போட்டியில் பெற்றி பெறுகிறது. மாணவர்கள் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் போது, அவர்களின் ஆசிரியரை ராணுவம் கைது செய்து கொண்டு போவதை திகைப்புடன் பார்க்கிறார்கள்.

1953-ல் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மறைவதையொட்டி நிறைய சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். Endel Nelis விடுதலையாகிறான். மறுபடியும் அந்த ஊருக்கு திரும்பி வருகிறான். தன் காதலியுடன் அவன் இணைந்து செல்வதை மாணவர்கள் மகிழ்ச்சியும் பரவசமுமாக பார்க்கிறார்கள். Endel Nelis துவக்கிய வாள் சண்டை பயிற்சி நிலையம் இன்னமும் இயங்கும் தகவலுடன் படம் நிறைகிறது.

அற்புதமான ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கொண்ட திரைப்படம்.  Klaus Härö இயக்கியிருக்கிறார். சிறுமியின் அபாரமான நடிப்பிற்காகவே இந்தப் படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Wednesday, May 20, 2020

Rams (2015) - 'இரண்டு கிழவர்களும் சில ஆடுகளும்'




மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல் போன்ற அசைவ உணவு வகைகளைத் தாண்டி விலங்குகள், பறவைகளின் மீது பொதுவாக நகரத்து மனிதர்களுக்கு எவ்வித பந்தமும் இல்லை. ஆனால் கிராமத்து மனிதர்களால் அப்படியிருக்க முடியாது. பொருளாதாரக் காரணங்களைத் தாண்டியும் வளர்ப்பு உயிரினங்களை தங்களின் வீட்டு உறுப்பினர்களாகவே கருதுவார்கள்.

அப்படியொரு கிழவரைப் பற்றிய உணர்வுபூர்வமான திரைப்படம் இது. ஐஸ்லாந்து நாட்டுத் தயாரிப்பு. தான் வளர்க்கும் ஆடுகளை காப்பாற்ற தன் உயிரையும் பணயம் வைக்கிறார் ஒரு கிழவர்.

**

ஐஸ்லாந்து நாட்டின் ஒரு பள்ளத்தாக்கு. ஆடு வளர்ப்பு சில குடும்பங்களின் வருமானம் ஈட்டும் தொழில். அங்கு இரண்டு கிழவர்கள் அருகருகே வசிக்கிறார்கள். ராம் சகோதரர்கள். குடும்பத் தகராறு காரணமாக இருவரும் 40 வருடங்களுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. இருவருமே திருமணம் செய்து கொள்ளாத தனிக்கட்டைகள்.

சிறந்த முறையில் வளர்க்கப்படும் ஆட்டிற்கான விருது, அந்த வருடம் அண்ணனிற்கு கிடைக்கிறது. தம்பிக்கு கோபம் வருகிறது. ‘அப்படியென்ன வளர்த்து கிழிச்சிட்டான்’ என்று ரகசியமாக சென்று விருது பெற்ற ஆட்டைப் பரிசோதிக்கிறார். அதற்கு Scrapie எனப்படும் தொற்றுநோய் இருக்குமோ என சந்தேகம் வருகிறது. விலங்குகளின் மூளை நரம்புகளைப் பாதித்து மரணமடையச் செய்யும் ஆபத்தான தொற்று நோய் அது. குணப்படுத்த முடியாதது.

அந்த நோய் இருப்பது உறுதியானால் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து ஆடு வளர்ப்பாளர்களுக்கும் அது ஒரு கெட்ட செய்தி. ஏனெனில் தொற்று நோய் பரவாமல் இருக்க அரசாங்கம் அனைத்து ஆடுகளையும் கொன்று புதைத்து விடும்.

**

தம்பி கிழவருக்கு கோபம் போய் கவலை வருகிறது. இந்த விஷயம் மெல்ல பரவி அரசு தரப்பில் இருந்து வந்து பரிசோதனை செய்கிறார்கள். அந்த நோய் இருப்பது உறுதியாகிறது. ஆடு வளர்ப்பாளர்கள் அனைவரும் சோகமாகின்றனர். தம்பியால்தான் இந்தச் செய்தி வெளியே தெரிந்தது என்று அண்ணன் கிழவர் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார். தம்பி வீட்டின் நிலவறையில் பதுங்கி உயிர் தப்பிக்கிறார்.

அண்ணன் கிழவர் தன் ஆடுகளை இழக்க விரும்பாமல் கலாட்டா செய்ய போலீஸ் வந்து அழைத்துப் போகிறது. தான் வளர்க்கும் ஆடுகள், மற்றவர்களின் கையால் கொல்லப்பட விரும்பாமல் மனதை கல்லாக்கிக் கொண்டு தானே கொன்று போடுகிறார் தம்பி. அரசு மருத்துவர்கள் வந்து அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர்.

**

ஆடுகளை இழந்த துக்கம் தாங்காமல் எப்பவும் மதுவும் கையுமாக இருக்கிறார் அண்ணன் கிழவர். அவ்வப்போது தம்பி வீட்டில் வந்து புலம்புவதும் வழக்கமாகிறது. ஒருமுறை பனியில் விழுந்து கிடக்கும் அண்ணனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றுகிறார் தம்பி. இதனால் பரஸ்பர வெறுப்பு மறைந்து சற்று இணக்கம் தோன்றுகிறது. இருவருக்குள்ளான சொத்து தகராறு ஒன்றும் தீர்கிறது. என்றாலும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தம்பி கிழவர் மிக மிக ரகசியமாக செய்திருக்கும் காரியம் ஒன்றிருக்கிறது. அவர் அனைத்து ஆடுகளையும் கொல்வதில்லை. அவரின் குடும்பப் பெருமையை காப்பாற்றும் விதமாக ஆண் ஆடு ஒன்றையும் சில பெண் ஆடுகளையும் தன் வீட்டில் நிலவறையில் ரகசியமாக வளர்க்கிறார். அவற்றின் வளர்ச்சியை நினைத்து பெருமையடைகிறார். வீட்டிற்குள் எவரையும் அநாவசியமாக அனுமதிப்பதில்லை.

ஒரு நாள் அண்ணன் கிழவர் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஆடுகளைப் பார்த்து விட அவரை எச்சரிக்கிறார் தம்பி.

**

ஆடுகளை அப்புறப்படுத்தியது மட்டுமல்லாமல் அது சார்ந்த அனைத்துப் பொருட்களையும் எரிக்கச் சொல்கிறது அரசாங்கம். ஆடு வளர்க்கப்பட்ட இடங்களில் எல்லாம் மருந்து அடிக்கிறது. அந்தப் பணியைச் செல்லும் இளைஞன், தம்பி கிழவரின் வீட்டிற்கு வந்து கழிப்பறையை உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதி கேட்கிறான். அரை மனதுடன் சம்மதிக்கிறார் கிழவர்.

ஆடுகள் ஒன்றுக்கொன்று முட்டிக் கொள்ளும் சத்தமும் அவற்றின் குரல்களும் இளைஞனுக்கு கேட்கின்றன. நன்றி சொல்லி விட்டு அவசரமாக வெளியேறுகிறான். தம்பி கிழவருக்கு பயம் வந்து விடுகிறது. நேராக அண்ணன் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டுகிறார். “மிக அவசரம். நீதான் உதவ வேண்டும்”. ஆடு வளர்ப்பாளராக அண்ணனிற்கும் அதன் முக்கியத்துவம் தெரியும் என்பதால் எல்லா ஆடுகளையும் தன் வீட்டிற்குள் எடுத்துச் சென்று ஒளித்து வைக்க அனுமதிக்கிறார். அரசு அதிகாரிகள் தம்பியின் வீட்டில் சோதனை செய்ய வந்து ஆடுகளை காணாமல் திகைக்கிறார்கள்.


**

அவர்கள் மீண்டும் திரும்பி வரலாம் என்பதால் இரு சகோதர்களும் இணைந்து ஒரு முடிவு எடுக்கிறார்கள். ஆடுகளை அழைத்துச் சென்று மலைப்பகுதியில் ஒளித்து வைத்து விடலாம். பிறகு அழைத்து வரலாம் என்று தீர்மானிக்கிறார்கள். ஆனால் அது பனிக்காலம் என்பதால் அந்தப் பயணம் ஆபத்தானதாக அமையலாம். இருந்தாலும் ஆடுகளை அழைத்துக் கொண்டு இரவு நேரத்தில் கிளம்புகிறார்கள்.

வழியில் பனிப்புயல் அடிக்கிறது. வண்டி பழுதாகிறது. அடிக்கிற புயலில் கண்ணிற்கு எதுவும் தெரிவதில்லை. இடையில் தம்பி காணாமற் போகிறார். அண்ணன் கிழவர், தம்பியின் பெயரைக் கத்திக் கொண்டே தேடுகிறார். புயல் சற்று ஓய்ந்தவுடன் தம்பி ஓரிடத்தில் மயங்கி விழுந்து கிடப்பது தெரிகிறது. குளிரில் உடல் விறைத்திருக்கிறது.

பனியை வெட்டியெடுத்து அருகே ஒரு பதுங்கு குழியை அமைக்கிறார். அதன் உள்ளே தம்பியின் உடலை எடுத்துச் செல்கிறார். உடலை கதகதப்பாக்குவதற்காக ஆடையைக் களைந்து தன் உடம்புச் சூட்டை தம்பியின் உடலுக்கு பரவச் செய்கிறார். 40 வருட பகைமை அந்த அணைப்பில் மறைந்து போவதுடன் படம் நிறைகிறது.

**

அபாரமான ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கொண்ட இந்த திரைப்படம், விலங்கிற்கும் மனிதனுக்குமான உன்னதமான உறவையும் பாசத்தையும் நெகிழ்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறது. Grímur Hákonarson அற்புதமாக இயக்கியிருக்கிறார்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Tuesday, May 19, 2020

Enclave (2015) - 'ஆலய மணியும் ஒரு மணிப்பயலும்'






இனம், மதம் போன்ற காரணங்களால் பெரியவர்களுக்குள் உற்பத்தியாகும் பகைமையும் வன்மமும் சிறுவர்களின் உலகை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக விவரித்திருக்கும் செர்பிய திரைப்படம் இது.

**

Nenad பத்து வயது சிறுவன். அவன் வசிக்கும் கிராமத்தைச் சுற்றிலும்  அல்பேனியர்கள்தான் இருக்கிறார்கள். அங்கிருந்து இடம் பெயராமல் பிடிவாதமாக இருக்கும் ஒரே செர்பிய குடும்பம் இவனுடையது மட்டுமே. அல்பேனியர்களுக்கும் செர்பியர்களுக்கும் ஆகாது. கடுமையான வரலாற்றுப் பகை. தீயின் நடுவில் மாட்டிய கற்பூரத் துண்டு போன்ற நிலைமை இவனுடைய குடும்பத்திற்கு.

சிறுவனுக்கு விளையாட்டுத் தோழர்கள் எவருமில்லை. கண்டிப்பான தகப்பனும் நோய்வாய்ப்பட்டிருக்கும் தாத்தாவும் மட்டுமே. பாதுகாப்பிற்காக நிற்கும் ராணுவத்தின் பீரங்கிக்குள் ஒடுங்கி அமர்ந்து பள்ளிக்கு போய் விட்டு வருவான். வழியில் அல்பேனியச் சிறுவர்கள் பீரங்கியின் மீது உற்சாகமாக கல்லெறிவார்கள். தன் கூட வரும் பாதிரியாரிடம் விளையாடிக் கொண்டு வருவது மட்டுமே இவனுக்கு ஆறுதல்.

இவன் ஒருவனுக்காக நடத்தப்படும் பள்ளியில், ஆசிரியருக்கு வேறு இடத்தில் பணி கிடைத்துவிட கல்வி கற்கும் வாய்ப்பையும் இழக்கிறான். வீட்டிற்குள் ஆறுதலாக இருந்த தாத்தாவும் ஒரு நாள் மரணடைந்து விடுகிறார்.

**

“நீ போய் பாதிரியாரை கூட்டிக் கொண்டு வா” என்று சிறுவனை அனுப்புகிறார் தந்தை. பாதிரியாரைக் கண்டுபிடிக்க முடியாமல் அவன் திகைத்து நிற்கும் போது அல்பேனிய சிறுவர்கள் வழிமறிக்கிறார்கள். விளையாட வரச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

அதில் ஒரு சிறுவனிடம் துப்பாக்கி இருக்கிறது. அவனிற்கு செர்பியர்களைக் கண்டாலே பிடிக்காது. அவனுடைய தந்தையின் மரணத்திற்கு செர்பியர்கள்தான் காரணம் என நம்புகிறான். Nenad பீரங்கிக்குள் பள்ளி சென்று வரும் போதெல்லாம் எரிச்சலுடன் பார்ப்பது இவனுடைய வழக்கம்.

விளையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் இவர்களுக்குள் தகராறு வந்து விடுகிறது. துப்பாக்கி வைத்திருக்கும் சிறுவன், Nenad-ஐ அதிகாரத்துடன் மன்னிப்பு கேட்கச் சொல்கிறான். துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான்.

**

இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்தின் அருகே ஒரு பெரிய ஆலய மணி இருக்கிறது. செர்பிய பாதிரியார் அதை வரவழைத்திருக்கிறார். இன்னமும் சரியாக பொருத்தப்படாமல் இருக்கும் மணி அது.

துப்பாக்கிச் சிறுவன், Nenad-ஐ அந்த மணிக்குள் ஒளிந்து கொண்டு மீண்டும் விளையாட்டை துவங்கச் சொல்லி வற்புறுத்துகிறான். அவனோ ‘தந்தை தேடுவார், வீட்டிற்குப் போக வேண்டும்’ என்கிறான். ஆலய மணியின் மீது கோபத்துடன் சுடுகிறான் துப்பாக்கிப் பையன். கூட இருப்பவர்கள் பயந்து ஓடி விடுகிறார்கள்.

நாலைந்து முறை சுடுவதில், கட்டப்பட்டிருக்கும் கயிறு அவிழ்ந்து மணி கீழே விழுந்து Nenad-ஐ அப்படியே மூடிக் கொள்கிறது. உள்ளே மாட்டிக் கொள்கிறான் அவன். மணியின் மீது பட்டுத் தெறிக்கும் தோட்டாவென்று துப்பாக்கி சிறுவனின் காலில் பட்டு காயத்தை ஏற்படுத்துகிறது.

**

காலில் காயத்துடன் சாலையில் விழுந்திருக்கும் துப்பாக்கி சிறுவனை பாதிரியார் தூக்கிச் சென்று வீட்டில் ஒப்படைக்கிறார். ‘யார் உன்னைச் சுட்டது?” என்று குடும்பத்தார் ஆத்திரத்துடன் கேட்கிறார்கள். தயங்கும் சிறுவன், “ஒரு செர்பியன்” என்று கூறி விடுகிறான். மணிக்குள் மாட்டிக் கொண்ட Nenad பற்றி அவன் மூச்சு கூட விடுவதில்லை.

கோபத்துடன் கிளம்பும் அவர்கள், செர்பியர்களின் கல்லறைகளை அடித்து நாசம் செய்கிறார்கள். மணியைச் சுற்றி இருக்கும் மரச்சட்டங்களில் தீயை வைத்து விடுகிறார்கள். எரியும் தீயின் நடுவில் ஆலய மணிக்குள் அப்படியே கிடக்கிறான் Nenad.

வீட்டில் ஆயுதம் வைத்திருந்த காரணத்திற்காக Nenad-ன் தந்தையை காவல்துறை கைது செய்து கொண்டு போய் விடுகிறது. ஊரிலிருந்து வந்திருக்கும் அவனுடைய சகோதரிதான் கிழவரின் பிணத்தை அடக்கம் செய்கிறாள். எனவே Nenad காணாமல் போயிருக்கும் விஷயம் எவருக்கும் தெரிவதில்லை. பீரங்கி வண்டியின் இடுக்கிற்குள் வெளியுலகத்தைப் பார்ப்பது போலவே, மணியின் சிறிய இடைவெளியில் தெரியும் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான் Nenad.

**

மறுநாள் பொழுது விடிகிறது.

காவல்துறையினரிடமிருந்து விடுபட்ட சிறுவனின் தந்தை, ஊருக்குள் வந்தவுடன் அவனை எங்கெல்லாமோ தேடுகிறார். அவருடைய கூப்பாடு துப்பாக்கிச் சிறுவனுக்கு கேட்கிறது. மனதிற்குள் சங்கடமடைகிறான் அவன்.

மகனைக் காணாமல் தவிக்கும் தந்தையை ராணுவ பீரங்கி வழிமறிக்கிறது. ‘இதற்கு மேலும் இங்கு இருப்பது பாதுகாப்பானது அல்ல’ என்று வலுக்கட்டாயமாக அவரை அழைத்துச் சென்று விடுகிறார்கள்.

பீரங்கி வண்டி மெல்ல மறைவதை துப்பாக்கி சிறுவன் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.

**

அத்தனை பெரிய மணிக்குள் இரவெல்லாம் சிக்கித் தவிக்கும் Nenad என்னவானான்? பிழைத்துக் கொண்டானா?

ஆம். இதை முன்பின்னான காட்சிகளில் காட்டுகிறார் இயக்குநர். தாத்தாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் Nenad, பிறகு செர்பிய தலைநகரான பெல்கிரேடிற்கு இடம் பெயர்கிறான். புதிய பள்ளி, புதிய நண்பர்கள்.

‘அங்கிருக்கும் மாணவர்கள் எப்படி வேண்டுமானாலும் பழகலாம். பார்த்து நடந்து கொள்’ என்று அறிவுறுத்துகிறார் தந்தை. புதிய மாணவனைப் பற்றி ஆசிரியர் விசாரிக்கிறார். தான் முன்னர் இருந்த ஊரின் பெயரைச் சொல்கிறான் Nenad. அவனை அல்பேனியன் என்று நினைத்துக் கொண்டு ஏளனமாக சிரிக்கிறார்கள்.

**

‘உன்னுடைய சிறந்த நண்பன் யார்?’ என்கிற தலைப்பில் பாடம் நடத்துகிறார் ஆசிரியர். தன்னைக் காப்பாற்றிய துப்பாக்கி சிறுவனை நினைத்துக் கொள்கிறான் Nenad. மணிக்குள் இருந்து அவன் விடுபடும் நெகிழ்வான காட்சிகள் காட்டப்படுகின்றன.

அல்பேனியர்களின் கிராமத்தில் ‘செர்பிய’ அடையாளத்துடன் தவித்த Nenad, இடம்பெயர்ந்த போது அல்பேனியன் என்கிற தவறான அடையாளத்துடன் ஏளனப்படுத்தப்படும் போது அதை அமைதியாக ஏற்றுக் கொள்கிறான்.

மத, இன அடையாளம் முக்கியமல்ல, மனிதர்களும் நட்பும்தான் முக்கியம் என்கிற செய்தியை Nenad=ன் அமைதியான முகம் வெளிப்படுத்துகிறது.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Monday, May 18, 2020

The Kid with a Bike (2011) - 'சிறுவனும் சைக்கிளும்'






அன்பிற்காக ஏங்கும் ஒரு முரட்டுத்தனமான சிறுவனின் மன மாற்றத்தை அழகாக விவரிக்கிறது இந்த பிரெஞ்சு திரைப்படம். சிறுவனின் அற்புதமான நடிப்பு. படம் முழுவதும் நிறைந்திருக்கிறது.

**

சிறுவர்களுக்கான அடைக்கல வசிப்பிடத்தில் இருப்பவன், 12 வயது சிறில். தனது தந்தையைக் காண வேண்டும் என்று பாதுகாவலர்களிடம் அடம் பிடிக்கிறான். முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறான். சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

எவரும் கவனிக்காத ஒரு சமயத்தில் அங்கிருந்து தப்பி தன்னுடைய வீட்டிற்கு வருகிறான். அங்கு எவரும் இருப்பதில்லை. அவனுக்குப் பிரியமான சைக்கிளும் இருப்பதில்லை. அவனைத் தேடி வரும் பாதுகாவலர்கள், ‘அவனது தந்தை எங்கேயோ சென்று விட்டார்’ என்று புரிய வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அவன் நம்புவதாயில்லை.

இவனைக் கவனித்துக் கொண்டிருக்கும் சமந்தா என்கிற பெண்மணி அவனுடைய சைக்கிளை திரும்பத் தருகிறாள். சிறிலின் அப்பா அதை விற்றிருக்கிறார். ‘என் அப்பா அப்படிச் செய்ய மாட்டார். எவரோ திருடி விற்றிருக்க வேண்டும்’ என்று அப்போதும் தன் தந்தையை விட்டுத் தராமல் பேசுகிறான். திரும்பக் கிடைத்த சைக்கிளை மகிழ்ச்சியுடன் ஓட்டுகிறான். அவனுடைய உறுப்புகளில் ஒன்று போவே இணைந்திருக்கிறது சைக்கிள்.

**

மற்றவர்களுக்கு அடங்காத சிறில், சமந்தாவின் அன்பிற்கு இணங்குகிறான். “வார இறுதி நாட்களில் உங்கள் வீட்டிற்கு வந்து தங்கிக் கொள்ளட்டுமா?’ என கேட்கிறான். சமந்தா சம்மதிக்கிறாள். அங்கும் சிறிலின் பிடிவாதக் குணங்கள் தலைதூக்குகின்றன. தந்தையைக் காண வேண்டுமென்கிற ஏக்கம்தான் பிரச்சினைக்கு காரணம் என்று உணர்கிற சமந்தா, அவனுடைய தந்தையின் புதிய முகவரியைக் கண்டுபிடித்து அழைத்துச் செல்கிறார்.

ஆனால் மகனைக் காணும் தந்தை பிடிப்பில்லாமல் விலகலாகவே பேசுகிறார். ‘எப்ப என்னை வந்து கூட்டிட்டுப் போவீங்க?’ என்று சிறில் கேட்பதற்கு நேரிடையாக பதில் சொல்வதில்லை. “இயன்றால் போன் செய்கிறேன். இங்கு நானே சிரமத்தில் இருக்கிறேன். இப்ப கிளம்பு’ என்று துரத்துகிறார். பின்பு சமந்தாவை தனியாக அழைத்து ‘அவனை இனி என்னால் பார்த்துக் கொள்ள முடியாது. அவன் ஹோமிலேயே இருக்கட்டும். இதை அவனிடம் சொல்லி விடுங்கள்’ என்கிறார்.

இந்த கசப்பான உண்மையை சிறிலே நேரிடையாக தெரிந்து கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கும் சமந்தா, ‘நீங்களே அவனிடம் சொல்லுங்கள்’ என்கிறார். ‘நீ இனிமேல் என்னைத் தேடி வராதே” என்று தந்தை சொல்ல, சிறில் மனம் உடைந்து போய் அழுகிறான்.

**

தந்தையின் நிராகரிப்பின் வேதனையில் இருக்கும் சிறிலை மகிழ்ச்சிப்படுத்த தன்னால் ஆன முயற்சிகளை செய்கிறார் சமந்தா. ஆனால் இன்னமும் மூர்க்கமானவனாக மாறுகிறான் அவன்.

நிழலான காரியங்களைச் செய்யும் ஓர் இளைஞனுடன் சிறிலுக்கு பழக்கம் ஏற்படுகிறது. அவனுடைய நடவடிக்கைகள் சிறிலுக்குப் பிடித்துப் போகிறது. ‘அவனுடன் சேராதே’ என்று தடுக்கிறாள் சமந்தா. இவன் கேட்பதாயில்லை.

அந்த இளைஞன், வழிப்பறிக் கொள்ளை செய்வது தொடர்பாக சிறிலுக்கு பயிற்சி தருகிறான். சம்பவத்தை நிகழ்த்தும் நாள் வருகிறது. ஏதோ விபரீதம் என்பதை உள்ளுணர்வால் உணரும் சமந்தா, அந்த நாளின் இரவில் சிறில் வீட்டை விட்டுப் போகாமல் தடுக்க முயல, அவளை கத்தியால் காயப்படுத்தி விட்டு சிறில் ஓடிப் போகிறான்.

**

பயிற்சி பெற்றபடி மறைந்திருந்து வரும் ஆளை தலையில் தாக்க அவர் மயங்கி விழுகிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவரின் மகன் அங்கு வர, அவன் தலையிலும் ஒரு போடு போடுகிறான் சிறில். அவனும் மயக்கமாக, பணத்தை எடுத்துக் கொண்டு அந்த இளைஞனிடம் கொண்டு போய் தருகிறான்.

தாக்கப்பட்டவரின் மகன், சிறிலின் முகத்தைப் பார்த்து விட்டதால் அச்சமடையும் இளைஞன் பணத்தின் ஒரு பகுதியை இவனிடம் தந்து விட்டு ‘இதற்கு நீதான் பொறுப்பு. எவரிடமும் என் பெயரை சொல்லாதே’ என்று மிரட்டி விட்டு சென்று விடுகிறான்.

சிறில் பணத்திற்காக இந்தச் சம்பவத்தை செய்யவில்லை என்றாலும் அதை எடுத்துக் கொண்டு போய், தன் தந்தையிடம் தருகிறான். ‘என்னை ஜெயிலுக்கு அனுப்பப் பார்க்கிறாயா?” என்று பணத்தை விட்டெறிகிறார் அவர்.

**

நிலைகுலைந்து போகும் சிறில், திரும்பவும் சமந்தாவின் வீட்டிற்கு வருகிறான். அவளிடம் மனதார மன்னிப்பு கேட்கிறான். ஆனால் காவல்துறை அவனைத் தேடுவதாய் சொல்லி சமந்தா அழைத்துப் போகிறாள்.

தாக்கப்பட்ட நபருக்கும் சிறில் தரப்பிற்கும் இடையே ஓர் அதிகாரியின் முன்னால் பேச்சுவார்த்தை நடக்கிறது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை  தவணை முறையில் தந்து விடுவதாக சமந்தா சொல்கிறார். ‘தாக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேள்’ என்று அதிகாரி சொல்ல சிறில் மன்னிப்பு கேட்கிறான். ‘உங்கள் மகனிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும், அவன் வரவில்லையா” என கேட்க ‘அவன் உன்னை மன்னிக்கத் தயாராக இல்லை’ என்கிறார்.

**

மறுநாள் சைக்களில் செல்லும் சிறிலை, தாக்கப்பட்டவரின் மகன் பார்த்து விட்டு துரத்துகிறான். சிறில் பயந்து போய் ஒரு மரத்தில் ஏறிக் கொள்ள, கல்லைத் தூக்கி அடிக்கிறான். சிறில் மரத்தில் இருந்து கீழே விழுந்து விட அவன் இறந்து விட்டானோ என்று பயப்படுகிறான். ஆனால் மயக்கம் கலைந்து சிறில் அமைதியாக எழுந்து செல்வதோடு படம் நிறைகிறது.

அவன் பழைய முரட்டுத்தனமான சிறில் இல்லை என்பதை இறுதிக் காட்சி உணர்த்துகிறது. சம்பந்தமில்லாத சிறுவனுக்கு சமந்தா தரும் நிபந்தனையில்லாத அன்பு நெகிழ வைக்கிறது.

பெற்றோர்களின் பிரிவால் உரிய வயதில் அன்பும் ஆதரவும் கிடைக்காத, சிறார்கள், வன்முறையாளர்களாக பாதிப்பு அடைவதை இத்திரைப்படம் சொல்கிறது. ஆதரவற்ற சிறுவர்களை, நல்ல குடிமகன்களாக ஆக்க மேற்கத்திய நாடுகள் உருவாக்கும் சமூக ஏற்பாடுகள், நமக்கு முன்மாதிரியாக இருக்கின்றன.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

Sunday, May 17, 2020

The Pope's Toilet (2007) - 'கடவுளின் தூதரும் கழிப்பறையும்'







அண்மையில் வெளியான 'ஜோக்கர்'  திரைப்படத்தில், ஜனாதிபதி வருகையின் மூலம் ஒரு கிராமத்துப் பெண்ணின் கழிப்பறை கனவு  எவ்வாறு கலைந்து போகிறது என்பதை அரசியல் கலந்த உருக்கமாகச் சொல்லியிருந்தார்கள். இதுவும் அதைப் போன்றதொரு திரைப்படமே. 'கடவுள், மதம்' போன்ற விஷயங்கள், அன்றாட ஜீவனத்திற்கே சிரமப்படும் எளிய மக்களுக்கு என்னவாகப் பொருள் தருகிறது என்பதை உரையாடுகிறது, இந்த உருகுவே நாட்டுத் திரைப்படம். 1998-ல் நிகழ்ந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவான திரைப்படம் இது.

**

பிரேசில் எல்லையில் உள்ள  சிறிய நகரம் மெலோ. பெரும்பாலும் வறியவர்கள் உள்ள பகுதி. அங்கு சில ஆண்கள் கடத்தல் தொழில் செய்கிறார்கள். பிரேசில் நகரின் சந்தைக்குச் சென்று அன்றாட உபயோகப் பொருட்களை வாங்கி காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் கடத்தி வந்து உள்ளூர் வியாபாரிகளிடம் தந்து பணம் சம்பாதிக்கிறார்கள். சில சமயங்களில் கண்காணிப்பு அதிகாரிகளிடம் சிக்கி தங்களின் பொருட்களையும் மரியாதையையும் இழப்பதுண்டு.

இவ்வாறான கடத்தல் தொழிலுக்குச் செல்பவர்களில் ஒருவன் பெட்டோ.  போலீஸ்காரர்களின் கண்களில் தென்படாமல் காடு, மேடெல்லாம் ஒளிந்து ஒளிந்து  லொங்கு லொங்கென்று சைக்கிள்  ஓட்டி தப்புவதற்குள் அவனுக்கு முட்டி கழன்று விடுகிறது. ஒரு பைக் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறான். மனைவியிடம் காசு கேட்டுப் பார்க்கிறான்.

மகளின் படிப்புச் செலவிற்கென்று சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கும் பணத்தை அவள் தர மறுக்கிறாள். வறுமையான குடும்பம். அடிக்கடி சில்லறை தகராறுகள் நடக்கின்றன. வானொலி அறிவிப்பாளராக ஆகும் கனவுடன் இருக்கும் அவர்களது மகள், இவர்களது சண்டைகளை வெறுப்புடன் பார்க்கிறாள்.

**

இந்த நிலையில் அந்தச் சிறிய நகரத்திற்கு போப் வரவிருப்பதாக தகவல் பரவுகிறது. அவர் சுற்றுப் பயணத்தின் போது இந்த சிறுநகரத்திற்கும் வந்து உரையாற்றப் போகிறார். இந்தச் செய்தி  பெரிய பரபரப்பைக் கிளப்பி விடுகிறது. போப்பைக் காண்பதற்காக சுமார் அறுபதாயிரம் நபர்கள் வரவிருப்பதாக ஊடகங்கள் இந்த பரபரப்பை மேலும் கூட்டுகின்றன.

அந்த நகரத்தின் எளிய மக்கள், போப்பின் வருகையை முன்னிட்டு பணம் சம்பாதிக்க முடியுமா என யோசிக்கிறார்கள். இது அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிரானதுதான். ஆனால் வறுமையின் முன் என்ன செய்ய முடியும்? விதம் விதமான உணவுக்கடைகளும், கேளிக்கை விஷயங்களும் தயாராகின்றன. போப்பின் வருகை லாட்டரியில் அடித்த பம்பர் பரிசு மாதிரி அவர்களுக்கு இருக்கிறது.

***

பைக் வாங்க முடியாத எரிச்சலில் இருக்கும் பெட்டோ, மனைவியிடம் சண்டை போடுவதும், மதுவருந்துவதும் அல்லாத ஒரு நேரத்தில் சிந்தித்துப் பார்க்கிறான். 'தானும் இது போல் ஏதாவது செய்து சம்பாதித்தால் என்ன?' மெல்ல மெல்ல ஒரு யோசனை அவனுக்குள் தோன்றுகிறது. மற்றவர்கள் மாதிரி உணவுக்கடைகள் போடாமல் வருகிற கனவான்களுக்காக ஒரு கழிப்பறையைக் கட்டினால் என்ன?'

இந்த யோசனையை மனைவி, மகளிடம் பகிர்கிறான். இதற்காக கடத்தல் தொழிலுக்கு அதிக டிரிப் போக வேண்டியிருக்கிறது. போலீ்ஸ்காரர்களின் தொல்லையைத் தடுக்க, தன் கூட்டாளிகளுக்குத் தெரியாமல், தலைமை காவல் அதிகாரியிடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறான். அவர் மேற்பார்வையில் பொருட்களை எடுத்து வந்தால் அவர் கமிஷன் தருவார்.  மெல்ல மெல்ல பணம் சேர்கிறது. கழிவறை உருவாக ஆரம்பிக்கிறது.

***

கழிவறைக்கு வரும் நபர்களை எப்படி வரவேற்பது, எப்படி கட்டணம் வாங்குவது, அதிக நேரத்தை எடுத்துக் கொள்பவர்களை எப்படி நாசூக்காக வெளியே வரச் சொல்வது என்று மனைவிக்கும், மகளுக்கும் பயிற்சி தருகிறான். சிரித்தபடியே கற்றுக் கொள்கிறார்கள். வரப்போகும் பணத்தை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று குடும்பமே இன்பக் கனவில் மூழ்குகிறது.


கழிவறைக் கட்டிடம் பெரும்பாலும் உருவாகி விட்டாலும் நபர்கள் அமரும் பீங்கான் தொட்டி இன்னமும் வாங்கப்படவில்லை. இதற்கிடையில் போலீஸ்காரருடன் பெட்டோ போட்டுள்ள கள்ள ஒப்பந்தம், மனைவிக்குத் தெரிய வருகிறது. 'அவன் மூலம் சம்பாதித்த பணமா இது?' என்று திட்டுகிறாள்.

போப் வரும் கடைசி நாள். அதற்குள் எப்படியாவது தொட்டியை வாங்கி விட வேண்டும். பெட்டோ இடிந்து போய் அமர்ந்திருக்கிறான்.

***

பெட்டோவின் மனைவி, மகளின் படிப்புச் செலவிற்காக வைத்திருந்த சேமிப்பு பணத்தை தருகிறாள். சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடுகிறான்.  விடிவதற்குள் ஊர் திரும்ப வேண்டும். தொட்டியை வாங்கிக் கொண்டு சைக்கிளில் வேகமாக வரும் போது செயின் கழன்று விழுகிறது. அதையும் சமாளித்துக் கொண்டு வரும் போது தலைமை போலீஸ்காரன் வழிமறிக்கிறான். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. போலீஸ்காரன் ஆத்திரத்தில் சைக்கிளை பிடுங்கிக் கொள்கிறான்.

பெட்டோ தொட்டியை தோளில் ஏற்றிக் கொண்டு வேகவேகமாக ஓடி வருகிறான். போப் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். இவனுடைய மனைவியும் மகளும் தவிப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பெட்டோ கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஓடிவருவது தொலைக்காட்சியில் தெரிகிறது. ஒருவழியாக தொட்டியை இறக்கி பொருத்தி வைக்கிறார்கள்.

ஆனால் அதற்குள் போப்பின் உரை முடிந்து மக்கள் கலைய ஆரம்பிக்கிறார்கள். பெட்டோ ஒவ்வொருவரிடமும் சென்று 'கழிவறையை உபயோகப்படுத்த வேண்டுமா' என்று கெஞ்சுகிறான். எவரும் அதற்குத் தயாராக இல்லை. மகள் அதைப் பார்த்து அழுகிறாள்.

***

ஊடகங்கள் சொன்னபடி அதிக கூட்டம் வருவதில்லை.  உள்ளுர் மக்கள் தவிர வெளியில் இருந்து மொத்தமே நானுாறு நபர்கள்தான் வந்திருந்தார்கள். மக்கள் தயார் செய்திருந்த உணவுப் பொருட்கள் அதிகம் விற்காமல் வீணாக,  ஊரே சோகத்தில் ஆழ்கிறது. ஆனால் போப் உரையைக் கேட்க அதிக நபர்கள் வந்ததாக செய்தித்தாள்கள் சொல்கின்றன.

பெட்டோ மறுநாள் சைக்கிள் இல்லாமல் நடந்து  பணிக்குச் செல்லும் போது, அதுவரை அவனுடன் வர மறுத்திருந்த மகளும் கூட  நடந்து செல்வதோடு படம் நிறைவுறுகிறது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan