Tuesday, May 12, 2020

Close Up (1990) - 'நான்தான் மணிரத்னம்'

ஈரான் நாட்டின் திரைப்பட இயக்குநர்களுள் மிக முக்கியமானவர் அப்பாஸ் கியரோஸ்தமி. சமீபத்தில் மறைந்து போன அவரது நினைவாக அவர் இயக்கிய முக்கியமானதொரு திரைப்படமான ‘Close Up’  பற்றி பார்க்கலாம். இதன் உருவாக்க முறை மிக மிக வித்தியாசமானது.

**

உங்களுக்கு மணிரத்னம் படங்கள் மிக பிடிக்கும், ஆனால் அவரை பத்திரிகை புகைப்படங்களில்  கூட சரியாக பார்த்ததில்லை என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் பிரயாணிக்கும் போது பக்கத்தில் ஒரு நபர் உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு ‘நான்தான் மணிரத்னம்’ என்கிறார். மட்டுமல்ல அந்த அறிமுகத்தின் தொடர்ச்சியாக 'அவரது படப்பிடிப்பை உங்கள் வீட்டில் வைத்துக் கொள்வதாகவும் உங்கள் வீட்டு உறுப்பினர்களையே நடிகர்களாக பயன்படுத்துவதாகவும் சொல்கிறார். அவரது கண்ணியமான தோற்றமும் முதிர்ச்சியான நடவடிக்கைகளும் நம்பும்படியாகவே இருக்கின்றன என்றும் வைத்துக் கொள்வோம்.

நீங்கள் என்ன செய்வீர்கள்? மிகவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டு அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வீர்கள் அல்லவா? ஈரான் நாட்டில் இருந்த ஒரு குடும்பமும் அப்படித்தான் செய்தது. என்னவொன்று, மணிரத்னம் என்கிற பெயருக்குப் பதிலாக ‘மோசன் மக்மால்பஃப்’ என்று மாற்ற வேண்டும். இவர் பிரபல ஈரான் திரைப்பட இயக்குநர். ‘தி சைக்கிளிஸ்ட்’ போன்ற  திரைப்படங்களை இயக்கியவர்.

Hossain Sabzian  என்கிற நபர் பேருந்தொன்றில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது பக்கத்திலிருந்த பெண்மணி அவரது கையிலிருந்த திரைப்படப் புத்தகத்தைப் பற்றி விசாரிக்கிறார். அந்த ஆசாமி 'தான்தான் அத்திரைப்படத்தின் இயக்குநர்' என்கிறார். பெண்மணிக்கு ஆச்சரியமாகி விடுகிறது. இந்தப் பழக்கம் அவரை வீட்டிற்குள் அனுமதிக்கும் வரை செல்கிறது.

அந்தப் பெண்மணியின் மகன்களில் ஒருவர் சினிமாவில் நடிக்க விருப்பமுள்ளவர். நம் போலி இயக்குநருக்கு இது வசதியாகப் போய் விடுகிறது. எனவே ‘சூட்டிங்கை இங்கே வைத்துக் கொள்ளலாம். இவர்களையே நடிக்க வைக்கலாம்’ என்றெல்லாம் அள்ளி விடுகிறார். மட்டுமல்ல 'அவசரத் தேவைக்காக சிறிது பணம் தேவை’ என்றும் சொல்கிறார். ‘இவ்வளவு பெரிய இயக்குநர் தம்மிடம் பணம் கேட்கிறாரே என்கிற பிரமிப்பு கலந்த பிரியத்தில் அவர்களும் தருகின்றார்கள். இப்படியே சில நாட்கள் செல்கின்றன.

என்றாலும் அந்தக் குடும்பத்திலுள்ள ஓர் உறுப்பினருக்கு ‘இந்தாள் டூபாக்கூராக இருப்பாரோ’ என்று சந்தேகம் வருகிறது. மெல்ல விசாரிக்கிறார்கள். அவர் போலியான நபர் என்று தெரியவருகிறது. காவல்துறைக்கு தெரிவிக்கிறார்கள். வழக்கு பதியப்பட்டு விசாரணை நடக்கிறது.

நீதிபதி இரண்டு தரப்பிலும் விசாரிக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர் அப்பாவி என்பதை உணர்கிறார். ஆனால் 'அந்த ஆசாமி அனுதாபம் தேடுவதற்காக நடிக்கிறார் என்று அந்தக் குடும்பத்தினர் சொல்கிறார்கள்.  அந்த வீட்டில் கொள்ளையடிப்பது அவரது நோக்கமாக இருக்கலாம் என்பது அவர்களின் சந்தேகம். விசாரணையின் இறுதியில் 'அவரை மன்னிக்க உங்களுக்கு சம்மதமா?' என்று கேட்கிறார் நீதிபதி. 'அவர் இனி சமூகத்தில் நல்ல மனிதராக வாழ்வார் எனில் சம்மதம்' என்கிறார்கள்.

அவர் விடுதலையடைந்து வெளியே வரும் உண்மையான இயக்குநரான ‘மோசன் மக்மால்பஃப்' அவரை வரவேற்கிறார். இயக்குநராக நடித்தவர் இவரைப் பார்த்ததும் உடைந்து போய் அழுகிறார். அவரை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வழியில் ஒரு பூங்கொத்தையும் வாங்கிக் கொண்டு அந்தக் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்கும் நெகிழ்வான காட்சியோடு படம் நிறைகிறது.

**

இதெல்லாம் அங்கு உண்மையாக நடந்த சம்பவங்கள். போலி இயக்குநராக நடித்தவர் பிடிபட்ட வழக்கு பற்றிய விவரம் பத்திரிகையில் வெளிவந்த போது அதை வாசித்த இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தமி,  வேறொரு திரைப்படப் பணியை  நிறுத்தி விட்டு சிறைக்குச் சென்று போலி இயக்குநராக நடித்தவரைச் சந்திக்கிறார். ஆசாமியைப் பார்த்தால் அப்பாவி போல தோன்றுகிறது. அவருடைய உணர்வை படமாக்க வேண்டும் என தோன்றுகிறது.

நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதி பெற்று வழக்கு விசாரணையின் உண்மையான காட்சிகளை பதிவு செய்கிறார். மட்டுமல்ல, முன்னர் நடந்த  உண்மைச் சம்பவங்களை அப்படியே மீண்டும் காட்சிகளாக உருவாக்கி உண்மையான  நீதிமன்றக் காட்சியையும் இணைத்து திரைப்படமாக்குகிறார். இதில் கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால் போலி ஆசாமி முதற்கொண்டு புகார் தந்த குடும்பத்தினர், நீதிபதி வரை எல்லோருமே இத்திரைப்படத்தில் அவரவர் பாத்திரங்களாகவே நடித்திருக்கின்றனர். உண்மையையும் புனைவையும் மிக நுட்பமாக கலக்கும் docufiction வகையில் உருவான சினிமா இது.

உள்ளூரில் ஓடவில்லையென்றாலும் வெளிநாட்டுகளில் திரையிடப்படும் போது பல விருதுகளைப் பெற்றதோடு மகத்தான சினிமாக்களில் ஒன்றாகவும் மதிப்பிடப்படுகிறது.

**
அந்த நபர் ஏன் அப்படி போலியாக நடிக்க வேண்டும்? அவருக்கு அந்தக் குடும்பத்தினரை ஏமாற்ற வேண்டும் என்கிற நோக்கமெல்லாம் இல்லை. அவர் ஒரு திரைப்பட விரும்பி.  அதிலும் மோசன் மக்மால்பஃப் திரைப்படங்கள் என்றால் பிரியம்.

ஆனால் வறுமையான பின்னணியைக் கொண்டவர். அதன் காரணமாக மனைவியைப் பிரிந்தவர். தன்னை முக்கியத்துவமுள்ளவராக நினைப்பதற்கான சந்தர்ப்பமே அவருக்கு கிடைப்பதில்லை. இயக்குநராக நடிக்கும் போது மக்கள் பிரமித்து நோக்குவதும்  மரியாதை தருவதும் அவருக்கு பிடிக்கிறது. எனவே அப்படியே தொடர்கிறாார். ஒருநிலையில் உள்ளூர தன்னை அந்த இயக்குநராகவே நினைத்துக் கொள்கிறார். போதை மருந்து போல இந்த உணர்வு பிடித்துப் போகிறது. என்றாவது பிடிபட்டு விடுவோம் என்று தோன்றினாலும் இதிலிருந்து அவரால் விடுபட முடியவில்லை.

எந்தவொரு மனிதனும்  சமூகத்தில் தனக்கென்று ஒரு பிரத்யேக அடையாளம் வேண்டும் என நினைப்பான்; அதற்காகப் போராடுவான். ஆனால் குறுக்கு வழியில் அடைய நினைப்பவர்கள் பிரபலங்களின் அடையாளத்தோடு தங்களை இணைத்துக் கொள்வார்கள். ரசிகர் மன்றங்கள் உருவாவது முதல் பல விஷயங்கள் நிகழ்வது இதனால்தான்.

 தனிநபரின் அடையாளச் சிக்கல் சார்ந்து மிகவும் பரிதாபகரமான விஷயம் இது.(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)
suresh kannan

No comments: