Saturday, May 23, 2020

Instructions Not Included (2013) - 'மெக்ஸிகோவின் 'தெய்வத் திருமகள்'



தாயின் அன்பும் பாசமுமே பொதுவாக அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சினிமாவில் ஒரு தந்தைக்கும் மகளிற்கும் இடையே உள்ள அன்பை ஜாலியாகவும் நெகிழ்வாகவும் சொல்லும் மெக்ஸிகோ நாட்டின்  நகைச்சுவை திரைப்படம் இது.

**

அச்சம் என்றால் என்னவென்றே அறியக்கூடாது என்பதற்காக மலையுச்சியில் இருந்து தள்ளி விடுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை சிறுவனான வாலன்டைனுக்கு தருகிறார் அவனது தந்தை. என்றாலும் கூட அவனுக்கு உள்ளூற பல விஷயங்களில் அச்சம் இருக்கிறது.

பெயருக்கு ஏற்றாற் போல பலவிதமான பெண்களுடன் உறவிருக்கும் காதல் மன்னனாக இருக்கிறான் இளைஞன் வாலன்டைன். ஒரு நாள், அவனது அறையைத் தட்டும் ஓர் இளம்பெண், ‘உன் குழந்தையை பிடி. ‘இதோ வருகிறேன்’ என்று சென்று விடுகிறாள். பிறகு அவள் திரும்பி வருவதில்லை.

தன்னுடைய சுதந்திரத்திற்கு தடையாய் இருக்கும் அந்தப் பெண் குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று அவனுக்குத் தெரிவதில்லை. தாயைத் தேடி அவளிடம் ஒப்படைத்து விடுவோம் என்று மெக்ஸிகோவில் இருந்து லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு சட்டவிரோதமாக வருகிறான்.

**

குழந்தையின் தாயை அங்கு கண்டுபிடிக்க முடிவதில்லை.  நீச்சல் குளத்தின் அருகே சென்று விடும் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக உயரமான கட்டிடடத்தின் மேலேயிருந்து குதிக்க வேண்டிய ஒரு சூழல். தன்னுடைய தந்தை தந்த பயிற்சியை மனதில் நினைத்துக் கொண்டு எப்படியோ கீழே குதித்து குழந்தை மேகியைக் காப்பாற்றுகிறான். தனது திரைப்படங்களுக்காக ஆபத்தான சாகசக் காட்சிகளை செய்யும் ஒரு ‘ஸ்ட்ண்ட் மேனை’ தேடிக் கொண்டிருக்கும் இயக்குநர் கண்ணில் படுகிறான். உள்ளுக்குள் பயப்படுகிறவனாக இருந்தாலும் வேறு வழியில்லாமல், குழந்தையை வளர்ப்பதற்காக அந்தப் பணியில் சேர்கிறான்.

குழந்தை மேகியுடன் அவனுக்கு ஒட்டுதல் ஏற்படுகிறது. அவளுக்காக வீட்டையே ஒரு தீம் பார்க் போல மாற்றி அதிக அன்பைச் செலுத்துகிறான். அவள் தன் தாயின் பிரிவை உணரக்கூடாது என்பதற்காக, அவளுடைய தாய் ஜூலி அனுப்புவது போல பல போலியான கடிதங்களை அனுப்பி நம்பச் செய்கிறான்.

**
தாயை நேரில் காண வேண்டும் என்று மேகி அடம்பிடிக்க அவளுக்காக ஒரு நடிகையை ஏற்பாடு செய்ய அவன் முயற்சிக்கும் போது மேகியின் உண்மையான தாயான ஜூலியே அவனைத் தேடி வருகிறாள். மேகிக்கு தன் தாயைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. அவள் இதுவரை பல்வேறு ஊர்களுக்கு சென்றிருந்ததாக வாலன்டைன் சொல்லியிருக்கும் பொய்களை இவளும் இணைந்து ஒரு மாதிரியாக சமாளிக்கிறாள்.

தாயும் மகளும் பரஸ்பரம் பயங்கர அன்பைப் பொழிந்து கொள்கிறார்கள். இதற்கிடையில் ஜூலியிடம் ஓர் உண்மையைச் சொல்ல முயல்கிறான் வாலன்டைன். அவனுடைய உயிருக்கு ஆபத்தான நோய் இருப்பது போல காட்சிகள் அமைகின்றன.

மேகியைப் பிரிய முடியாமல் ஊருக்குச் செல்லும் ஜூலியிடமிருந்து வாலன்டைனுக்கு ஒரு நோட்டீஸ் வருகிறது. பிரி்த்துப் பார்த்தால் அதிர்ச்சி. மேகியை அவள் அழைத்துச் சென்று வளர்க்கவிருப்பதாக அந்த நோட்டீஸ் சொல்கிறது. “ஏன் இந்தக் கொடுமையைச் செய்கிறாய்?” என்று மன்றாடுகிறான் வாலன்டைன். ஜூலி கேட்பதாயில்லை.

வழக்கு விசாரணைக்கு வருகிறது. வாலன்டைன் ஒரு ‘ஸ்டண்ட்மேனாக’ ஆபத்தான பணியில் இருப்பதால்  நீதிமன்றத்தில் அதனை காரணம் காட்டுகிறாள் ஜூலி. தன் மகளை விட்டுப் பிரியக்கூடாது என்பதற்காக ஆபத்து அல்லாத சாதாரண பணிகளைச் செய்யவும் தயாராக இருக்கிறான் வாலன்டைன்.

**
வழக்கு ஜூலிக்கு சாதகமாக அமைவது போல சென்றாலும் தன் மகளை வளர்ப்பதற்காக தன் உயிரையும் பணயம் வைக்கத் துணிந்த தந்தையின் அன்பை கருத்தில் கொண்டு மேகி அவனிடமே வளரட்டும் என்று தீர்ப்பளிக்கிறார் நீதிபதி. வாலன்டைன் ஆனந்தக் கண்ணீரில் மூழ்குகிறான்.

இந்த தீர்ப்பினால் அதிர்ச்சியடையும் ஜூலி, மரபணு சோதனைக்காக விண்ணப்பிக்க, முடிவு வாலன்டைனுக்கு பாதகமாக வருகிறது. ஆம். அவன் மேகியின் தந்தையல்ல.

நீதிமன்றத்தின் உத்தரவுபடி ஜூலி, மேகியை அழைத்துச் செல்ல வர, அவளுடன் செல்வதற்கு விருப்பமிருந்தாலும் தந்தையைப் பிரியவே முடியாத மனநிலையில் இருக்கிறாள் மேகி. எனவே இருவரும் கட்டிடத்தின் உச்சியில் இருந்து இறங்கி தப்பி மெக்ஸிகோவிற்கு சென்று விடுகிறார்கள்.

**

தந்தையும் மகளும் மெக்ஸிகோவில் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவளைத் தேடிக் கொண்டு அங்கும் வருகிறாள் ஜூலி. வாலன்டைனால் அதுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்மையை அவள் அறிந்து கொண்டிருக்கிறாள்.

உயிருக்கு ஆபத்தான நோய் இருப்பது வாலன்டைனுக்கு அல்ல. மேகிக்கு. சிறுமியின் பரிதாப மரணத்தோடு படம் நிறைகிறது. எல்லாவித அச்சத்தையும் கடந்து விடும் பயிற்சியுடன் தன் தந்தை வளர்த்ததை அதன்பிறகு நினைவுகூர்கிறான் வாலன்டைன்.

**

உள்ளுக்குள் அச்சம் இருக்கும் வாலன்டைன் படப்பிடிப்புகளில் நிகழ்த்தும் சாகசக் காட்சிகள் நகைச்சுவையாக இருக்கின்றன. அவனுக்கும் மேகிக்குமான அன்பு பல காட்சிகளில் அற்புதமாக பதிவாகியிருக்கிறது.

மேகியாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு அபாரம். வாலன்டைனாக Eugenio Derbez சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தை இயக்கியவரும் இவரே. மெக்ஸிகோவில் அதிகம் வசூலான திரைப்படங்களில் ஒன்றாக இது அமைந்தது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: