Wednesday, May 13, 2020

Bridge of Spies (2015) - 'இரு உளவாளிகள்'


ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - ஜூராசிக் பார்க் மாதிரியான கல்லாவை நிரப்பும் வணிக மசாலாவையும் ஒருபக்கம் எடுப்பார். இன்னொரு பக்கம் கருப்பினத்தவர்களின் துயரத்தைப் பேசும்  The Color Purple மாதிரியான மற்றும்  யூதர்கள் வேட்டையாடப்பட்ட அவலத்தைப் பற்றிய Schindler's List  போன்ற காவிய சினிமாக்களையும் இயக்குவார். அவரது சமீபத்திய திரைப்படமான Bridge of Spies இரண்டாவது வகையைச் சேர்ந்தது.

**

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் பனிப்போர் உச்சத்தில் இருந்த காலக்கட்டம். 1957. பரஸ்பரம் உளவு பார்த்துக் கொள்வது இவர்களது முக்கியமான பொழுதுபோக்குகளில் ஒன்று.

ஒரு சுபமுகூர்த்த நாளில் அமெரிக்க நகரத்தில் ரஷ்ய உளவாளி ஒருவரை கைது செய்கிறார்கள். சாஸ்திர சம்பிரதாயப்படி சும்மா விசாரணை செய்து விட்டு மரண தண்டனையளிப்பது என்பது முன்தீர்மானமான திட்டம். போலியான சம்பிரதாயம்தான் என்றாலும் அதை செய்ய ஒரு புரோகிதர் வேண்டுமல்லவா? வழக்கறிஞராக இருக்கும் நமது ஹீரோ டாம் ஹாங்ஸை அழைக்கிறார்கள். "இதோ பாருப்பா..  இந்தாள் எதிரிநாட்டு உளவாளி. நம் ரகசியங்களை திருடியவன். இவனுக்கு மரணதண்டனை. நீ வக்கீல் வண்டுமுருகன் மாதிரி சும்மா கூட  நின்னா போதும்".

ஆனால் நம்மாள் சட்டத்தை சீரியஸாக எடுத்துக் கொள்கிற, மனச்சாட்சியின் வழி நடக்கும் பேர்வழி. உளவாளியை கைது செய்ததில் உள்ள ஓட்டைகளை நீதிமன்றத்தில் விளக்குகிறார். 'என்னய்யா.. நீ.. அத்தனை சொல்லியும்.." என்று கடுப்பாகிறார் நீதிபதி.

"சார்... அவர் உளவாளியாக இருந்தாலும் தம் கடமையை சரியாக செய்தவர். உயிர் போகும் அபாயமிருந்தாலும்  தம் நாட்டை காட்டித்தராதவர். யோசித்துப் பாருங்கள்.. நம் நாட்டிலிருந்தும்  உளவாளிகள் அங்கு சென்று கொண்டுதானே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்? மட்டுமல்லாமல் இவரை உயிரோடு வைத்திருந்தால் நல்லது. நம்மாள் எவராவது மாட்டிக் கொண்டால் அதன் மூலம் ஒரு பேரத்தை நிகழத்த முடியும்தானே?" என்று நீதிபதியிடம் தனிமையில் முறையிடுகிறார்.

என்னதான் அரசாங்கத்திற்கு ஏற்ப ஆடுகிற நீதிபதியாக இருந்தாலும் அவருக்கும் சொந்த மூளை என்றொன்று இருக்கும்தானே? எனவே மரணதண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றுகிறார். நீதிமன்றத்திலிருக்கும் மக்கள் பயங்கர எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த தண்டனையை எதிர்த்து சுப்ரீம்  கோர்ட்டிற்கு போகிறார் டாம் ஹாங்ஸ். ஒட்டுமொத்த அமெரிக்காவே இவரை வில்லனாக எரிச்சலோடு பார்க்கிறது. 'எதிரி நாட்டு உளவாளியை காப்பாற்றுவதா, மனிதனா இவன்?"

***

இந்தக் களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே அமெரிக்க உளவுத் துறை ரகசியமாக இன்னொரு விஷயத்தை செய்து  கொண்டிருக்கிறது. விமானம் ஓட்டுவதில் பயிற்சி பெற்றிருக்கும் இளைஞர்களை தேர்ந்தெடுத்து "பாருங்க பசங்களா... இந்த பிளைட்டை எடுத்துப் போய் சும்மா ஜாலியா ரஷ்யா பக்கமா பறந்து போய்  நிறைய புகைப்படங்கள் எடுத்துட்டு சமர்த்தா திரும்பி வந்துடணும். ஒருவேளை விபத்து ஏற்பட்டு மாட்டினீங்கன்னா..உயிரோட இருக்கக்கூடாது. சரியா?" என்று அனுப்புகிறது. அப்படி செல்லும் ஒரு இளைஞனின் விமானம், ரஷ்ய ராணுவத்தால் சுடப்பட்டு விபத்தாகி அவன் கீழே குதித்து விடுகிறான். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.

ஆக.. டாம் ஹாங்ஸ்ஸின் வாய் முகூர்த்தம் பலித்து அமெரிக்காவின் உளவாளியும் எதிரி நாட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறான்.  மறுபடியும் பலியாடாக இவரையே அழைக்கிறார்கள். "இந்த ரஷ்ய உளவாளியை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு நம்ம ஆளை கூட்டிட்டு வரணும். இந்த  பேரத்தை  அதிகாரபூர்வமாக, வெளிப்படையாக நிகழ்த்துவதில் நிறைய அரசாங்க சிக்கல்கள் இருக்கின்றன. எனவே நீங்க தனியாளா போய்ட்டு வாங்க. எங்க ஆளுங்க உங்க பின்னாடி இருப்பாங்க".

ரஷ்ய உளவாளியின் மீது ஏற்படுகிற நட்பு காரணமாக டாம் ஹாங்ஸ் இதற்கு ஒப்புக் கொள்கிறார். ஆனால் அங்கு சென்ற பிறகுதான் தெரிகிறது. ஒரு அப்பாவி  அமெரிக்க இளைஞனும் உளவாளி என்கிற பெயரில் பிடிபட்டிருக்கிறான்.  பெர்லின் சுவர் கட்டப்பட்டுக் கொண்டிருந்த சமயம். பொருளாதாரம் படிக்கும் மாணவனாகிய அவன், தன் காதலியை மீட்பதற்காக செல்லும் போது ஜெர்மன் ராணுவத்திடம் பிடிபட்டு விட்டான்.

***

எனவே தம் வியூகத்தை டாம் ஹாங்ஸ் சற்று மாற்றுகிறார். "அமெரிக்க உளவாளி மற்றும் மாணவன் ஆகிய இரண்டு பேரையும் விடுவித்தால்தான் ரஷ்ய உளவாளி விடுவிக்கப்படுவார்". இதற்கு அமெரிக்க உளவுத்துறையே ஒப்புக் கொள்வதில்லை. "யோவ்.. நம்ம வேலை உளவாளியை மீட்பது மட்டும்தான். மாணவன் பற்றியெல்லாம் கவலைப்பட இப்போது நேரமில்லை"

ஆனால் டாம் ஹாங்ஸ் இதற்கு ஒப்புக் கொள்வதில்லை. இரண்டு நபர்களையும் மீட்பதில் உறுதியாயிருக்கிறார். ஆனால் அது அத்தனை எளிதான விஷயமாக இருப்பதில்லை. எதிர்தரப்புகளும் தங்களுக்கு சாதகமான வகையில்தான் காய்களை நகர்த்துகின்றன. 'ஒரு நபரைத்தான் விடுவிக்க முடியும்' என பிடிவாதம் பிடிக்கின்றன.

மூன்று நாடுகள்.. அதிலுள்ள அரசியல் குழப்பங்கள்.. தயங்கி குழம்பி முடிவெடுக்கும் அதிகாரிகள். ஒரு பக்கம் தன்னையே மிரட்டும் அமெரிக்க உளவுத்துறை.. என்று பல தடைகளையும் ஒவ்வொன்றாக பொறுமையாகத் தாண்டி கடைசி நிமிடம் வரைக்கும் நீடிக்கும் டென்ஷன்களின் இடையே இரு நபர்களையும் மீட்கும் முயற்சியில் வெற்றி பெறுகிறார். ரஷ்ய உளவாளியான தம் நண்பரை டாம் ஹாங்ஸ் எதிரிகளின் நாட்டிடம் கண்கலங்க ஒப்படைப்பதோடு படம் நிறைவுகிறது.

டாம் ஹாங்ஸ் நன்றாக நடித்திருக்கிறார் என்று தனியாக ஒரு வரியில் எழுத அவசியமேயில்லை. நடிப்பு ராட்சசன் அவர். ருஷ்ய உளவாளியாக நடித்திருக்கும் Mark Rylance-ன் நிதானமான நடிப்பு அற்புதம். இதற்காக ஆஸ்கர் விருது அவருக்கு கிடைத்தது. ராஜாங்க விவகாரங்களின் இடையில் தனி மனிதர்களின் வாழ்வும் உணர்வுகளும் சிக்கித் தவிப்பதை இத்திரைப்படம் நெகிழ்வுபூர்வமானதாக சொல்கிறது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: