Tuesday, May 05, 2020

Wild Tales (2014) - காட்டுத்தனமான நகைச்சுவைக் கதைகள்




ஸ்பானிஷ் திரைப்படமான இது ரகளையான நகைச்சுவையைக் கொண்டது. தமிழ் திரைப்படங்களில் வரும் கவுண்டமணி, வடிவேல் மாதிரியானது அல்ல. ப்ளாக் காமெடி எனப்படும் இருண்மை அல்லது அவல நகைச்சுவை. திரையில் ஒரு ஆள் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் சிதற கதறிக் கொண்டிருப்பார். ஆனால் பார்வையாளரான நீங்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பீர்கள். இது என்ன குரூரம் என நினைக்காதீர்கள். ப்ளாக் காமெடியின் வகை அப்படி. சென்னை பிலிம் ஃபெஸ்டிவலில் இந்தப் படம் திரையிடப்படும் போது படம் முழுக்க  பார்வையாளர்கள் அப்படி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

இத்திரைப்படம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஆறு தனித்தனியான பகுதிகளைக் கொண்டது. அனைத்துப் பகுதிகளின் மையமே பழிவாங்குதல்தான். எம்.ஜி.ஆர், ரஜினி வகையறா  படங்களில் அவர்கள் சிறுவயதாக இருக்கும் போது  அவர்களின் கண் முன்னாலேயே வில்லன்கள் அவர்களின் பெற்றோர்களை சாகடித்ததைக் கண்டு வாழ்நாள் முழுக்க அவர்களைத் தேடி பழிவாங்குவார்களே, அப்படிப்பட்ட டைப் இல்லை. பழிவாங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு நிகழ்ந்த அற்பமான மோதல் கூட காரணமாக இருக்கலாம்.


***

முதல் கதை:

விமானம் ஒன்று புறப்படுகிறது. அழகான பெண் மாடல் ஒருத்தி அதில் ஏறுகிறாள். சக பயணியான ஒரு நடுத்தர வயது 'ஜொள்ளர்' அவளிடம் பேச்சு தருகிறார். அந்த உரையாடலின்  'பாஸ்டர்நாக்' என்கிற  முன்னாள்  காதலன் அவளுக்கு இருப்பது தெரியவருகிறது. ஆனால் அதே பாஸ்டர்நாக்தான் அந்தப் பெரியவரிடம் முன்பு இசை மாணவனாக இருந்திருக்கிறான். அவன் தயாரித்த இசைக்குறிப்பு ஒன்றை இவர் கேவலமாக நிராகரித்திருக்கிறார். இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் முன்வரிசை கிழவி ஒருத்தி எழுந்து 'என்னது பாஸ்டர்நாக்கா, அவன் துவக்கப்பள்ளியில் படிக்கும் போது நான்தான் ஆசிரியையாக இருந்தேன். ஓ.. என்ன ஒரு துஷ்டன்' என்று அலுத்துக் கொள்கிறார். இதைக் கேட்டு இன்னொரு இளைஞன் எழுகிறான். அவன் பாஸ்டர்நாக்கின் கூட படித்த மாணவன்.

விஷயம் இதுதான். அந்த விமானத்தில் பயணம் செய்யும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பாஸ்டர்நாக் எனும் நபருடன் தொடர்புடையவர்கள். வெவ்வேறு வகையில் அவனுடைய விரோதிகள். இந்த விஷயம் தெரிந்தவுடன் அவர்களுக்குள் இனம் புரியாத பதட்டம் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் விமானப் பணிப்பெண் வந்து விமானத்தை ஓட்டும் கேப்டன் அவருடைய அறையை  உள்ளே பூட்டிக் கொண்டு திறக்க மறுக்கிறார் என்று கதறுகிறாள். விமானம் பயங்கரமாக தள்ளாடத் துவங்குகிறது. ஆம். கேப்டனின் பெயர் பாஸ்டர்நாக்.

இவருக்கு உளவியல் மருத்துவம் பார்த்த ஒருவர் காக்பிட்டின் கதவை தட்டி 'உன் மனப்பிரச்சினைகளின் காரணம் உன் வளர்ப்புதான். உன் பெற்றோர்கள்தான் காரணம். அவர்களுடைய ஆசைகளையெல்லாம் உன் மீது திணித்தார்கள்' என்று கதறுகிறார். 'மருத்துவக் கட்டணத்தை உயர்த்தியது தவறுதான்' என்கிற உபதகவலையும்.

ஒரு வீட்டின் முன்பு அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு வயதான தம்பதியினரின் மீது விமானம் தாழப் பறந்து மோதிச் சிதறுவதோடு இந்தப் பகுதி முடிகிறது.

இரண்டாம் கதை:


மழை பெய்து கொண்டிருக்கும் ஓர் இரவு. அந்தக் கார் சிறிய உணவகத்தின் முன்னால் வந்து நிற்கிறது. வில்லத்தனமான தோற்றமுடைய நடுத்தரவயது நபர் இறங்கி உள்ளே வருகிறார். உள்ளே ஓர் இளம் பணிப்பெண். 'உணவருந்த நீங்கள் ஒரு நபர்தானே?' என்று விசாரிக்கிறாள். ஆனால் இவரை அடையாளம் கண்டவுடன் அவளுக்குள் பதட்டமும் கோபமும் முகத்தில் படர்கிறது. சமையல் பகுதியின் உள்ளே ஓடி வந்து விடுகிறாள். சமையல் பகுதிக்கு பொறுப்பாளராக இருக்கும் வயதான பெண் என்ன விஷயமென்று விசாரிக்கிறாள். வந்திருக்கும் நபர் ஒரு கந்துவட்டி கடன்காரன். அவனுடைய கொடுமை தாங்காமல்தான் இவள் சிறுவயதாக இருக்கும் போது இவளுடைய தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். இவளுடைய குடும்பமே அழிகிறது.

'அப்படியா? எனில் இது போன்ற நாசகாரர்கள் உலகில் வாழ தகுதியில்லாதவர்கள். இவனுடைய உணவில் எலி மருந்தைக் கலந்து விடுகிறேன். சாப்பிட்டு  சாகட்டும்' என்கிறாள் வயதானவள். இளம் பெண்ணுக்கு பயம் வருகிறது. 'வேண்டாம்' என மறுக்கிறாள். என்றாலும் வயதானவள் இவளுக்குத் தெரியாமல் மருந்தை கலந்து விடுகிறாள். வில்லன் உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவனுடைய மகன் உணவகத்தின் உள்ளே வருகிறான். அவனும் உணவை  எடுத்து சாப்பிடத் துவங்குகிறான். 'ஐயோ.. ஒரு அப்பாவியும் இதில் சாகப் போகிறானே' என்று இளம்பெண்ணுக்கு பதட்டம் வருகிறது. அங்கே சென்று உணவைப் பறிக்க முயல்கிறாள். வில்லனுக்கு கோபம் வந்து இவளை அடிக்க, வயதானவள் பின்னால் வந்து அவனைக்  கத்தியால் குத்தி கொன்று விட்டு  சிறைக்குப் போகிறாள்.


மூன்றாம் கதை:

இருப்பதிலேயே இதுதான் அதிக ரகளையானது. நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் ஓர் உயர்ரக கார். முன்னால் சென்று கொண்டிருக்கும் ஒரு பழைய டிரக் வண்டி வழி தர மறுக்கிறது. காரில் இருக்கும் பணக்காரன் எரிச்சலாகி சட்டென்று தாண்டிச் சென்று அவனை கெட்ட வார்த்தையால் திட்டி விட்டு வேகமாக சென்று விடுகிறான். ஆனால் சற்று தூரம் சென்றவுடன் டயர் பஞ்சர் ஆகி நின்று விடுகிறது.. அவன் அதை எரிச்சலுடன் ரிப்பேர் செய்து கொண்டிருக்கும் போது டிரக் வண்டி தருகிறது. அதிலிருந்து அந்த முரடன் இறங்குகிறான். இப்போது அவனுடைய முறை.  இருவரும் பரஸ்பரம் அவமானப்படுத்திக் கொள்கிறார்கள். அடித்துக் கொள்கிறார்கள். இருவரின் வண்டியுமே கவிழ்ந்து விடுகிறது. இந்த மரண கலாட்டாவின் இறுதியில் இருவருமே  இறந்து போகிறார்கள். இதை வார்த்தைகளால் படிப்பதை விட காட்சிகளாக பார்ப்பதுதான் சுவாரசியம். உருவாக்க அத்தனை சிரமமான காட்சியமைப்புகள்.

நான்காம் கதை:

பழைய கட்டிடங்களை வெடிமருந்து கொண்டு தகர்க்கும் நிபுணன் ஒருவன். பணி முடித்து மகளின் பிறந்த நாளுக்காக கேக் வாங்கச் செல்கிறான். ஆனால் வெளியில்  நிறுத்தப்பட்டிருந்த அவனுடைய காரை டிராஃபிக் துறை அள்ளிக் கொண்டு செல்கிறது. காரை மீட்க கட்டணம் செலுத்துமிடத்தில் சென்று தன் மீது எந்த தவறுமில்லை என்று வாதிக்கிறான். எந்தப் பயனுமில்லை. நேரத்திற்கு கேக் வாங்கிச் செல்லாததால் மனைவி கோபித்துக் கொள்கிறாள். 'உன்னைக் கட்டிக்கிட்டு நான் என்னத்தையா கண்டேன்' என்று புலம்பல்.

மறுநாள் அபராதக் கட்டணம் செலுத்துமிடத்தில் சென்று அங்கும் நியாயத்தை உரக்க கத்துகிறான். விவாத உணர்ச்சியில் கண்ணாடியை உடைக்கிறான். செய்திதாள்களில் அவனுடைய ரகளை பிரபலமாகிறது. அதன் எதிரொலியாக அவனுடைய பணி பறிபோகிறது. மனைவியும் விவாகரத்திற்கு விண்ணப்பிக்கிறாள். வேறொரு பணிக்கான நேர்காணலுக்கு சென்று அங்கும் ஏமாற்றப்பட்ட எரிச்சலோடு திரும்பும் போது வாசலில் கார் இருப்பதில்லை. ஆமாம்.. ஐயா.. டிராஃ.பிக் காரர்கள் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அபராத ரசீது காற்றில் படபடக்கிறது. இப்படி நடந்தால் ஒரு மனிதனுக்கு கொலைவெறி வருமா இல்லையா? ஆம் அவனுக்கு வருகிறது.

தன்னுடைய இறுதி சேமிப்பையெல்லாம் செலவழித்து வெடிகுண்டு மருந்து வாங்குகிறான். மறுநாள் பார்க்கிங் கட்டணத்திற்காக அபராதம் வசூலிக்கும் கட்டிடத்தின் ஒரு பகுதி சுக்கு நூறாகிறது.  சமூகக் கோபம் சார்ந்து இவனுடைய செயலுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கிறது. இந்தியன் தாத்தா மாதிரி  'டைனமைட்' என்று பட்டப்பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். சிறையில் இருக்கும் அவனை, மனைவியும் மகளும் சென்று சந்தித்து பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடுவதோடு இந்தப் பகுதி நிறைகிறது.

ஐந்தாம் கதை:


ஒரு பணக்கார இளைஞன் உயர்ரக காரை வீட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தி விட்டு வீட்டிற்குள் வந்து மூசுமூசுவென்று அழுகிறான். அவன் காரை வேகமாகச் செலுத்தி ஒரு கர்ப்பிணி பெண்ணை ஏற்றிக் கொன்று விட்டு ஓடி வந்து விட்டான் என்பது விஷயம். செய்தி சானல்களில் இந்த விபத்து பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. போலீசார் குற்றவாளியை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த இளைஞனின் பணக்கார அப்பா சட்டென்று யோசித்து ஒரு முடிவிற்கு வருகிறார். வீட்டின் தோட்டக்காரனை அழைத்து அந்தக் கொலையை ஒப்புக் கொள்ளச் சொல்கிறார். "உன் வாழ்நாள் முழுக்க உழைத்தாலும் கூட கிடைக்காத பணம்". பணக்காரரின் வக்கீலும் இதற்கு உடந்தை. தோட்டக்காரன் பணத்திற்கு ஆசைப்பட்டு ஒப்புக் கொள்கிறான்.

ஆனால் வீட்டிற்குள் வந்த காவல்அதிகாரி உள்ளே நுழைந்தவுடனேயே அது ஒரு செட்டப் என்பதை கண்டுபிடித்து விடுகிறார். அவரிடமும் பேரம் பேசுகிறார்கள். இடைத்தரகராக செயல்படும் வக்கீல் 'போலீஸூக்கு அதிக பணம் தர வேண்டும் என சொல்லி அதிலும் கமிஷன் அடிக்கப் பார்க்கிறார். 'அவருக்கும் ஜெயிலுக்குப் போகும் எனக்கும் ஒரே அமெளண்ட்டா? எனக்கு  ஒரு அபார்ட்மெண்ட்டும் வேணும்" என்று சந்தர்ப்பம் பார்த்து கேட்கிறான் தோட்டக்காரன். இவர்கள் செய்யும் பித்தலாட்டங்களில் நொந்து போகும் பணக்காரர் 'ஒரு டீலிங்கும் வேணாம். எல்லோரும் ஒழிஞ்சு போங்க. நான் என் பையனையே குத்தத்தை ஒப்புக்கச் சொல்றேன்" என்று அவர்களை விரட்ட முயல்கிறார். 'அய்யோ வரும் பணமும் போகிறதே" என்று எல்லோரும் பேசி குறைந்த விலை சலுகையில் டீலிங்கை முடிக்கிறார்கள்.

காவல்துறை குற்றம் சாட்டப்பட்டவரை வெளியில் அழைத்து வரும் போது விபத்தில் இறந்த கர்ப்பிணிப் பெண்ணின் கணவன் கூட்டத்திலிருந்து திடீரென வந்து கத்தியால் ஓங்கி ஓங்கி குத்துகிறான். அது தோட்டக்காரனா அல்லது பணக்காரரின் மகனா?


ஆறாம் கதை:

ஓர் அட்டகாசமான திருமண அறிவிப்பு ஏற்பாடு. கொண்டாட்டங்களும் குதூகலங்களும் ஷாம்பெயின் பாட்டில்களும் பொங்கி வழிகின்றன. சூழல்  முழுக்க உற்சாகம். மணமகன், மணமகள் இருவர் முகத்திலும் பரவசம். விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மணப்பெண் ஒரு நெருடலை உணர்கிறாள். மணமகன் ஓர் இளம்பெண்ணிடம் வழிந்து வழிந்து பேசிக் கொண்டிருக்கிறான். இவளுக்கு சந்தேகம் வருகிறது. நடனமாடிக் கொண்டிருக்கும் போது மெல்ல அவனிடம் விசாரிக்கிறாள். முதலில் மறுக்கும் அவன் பிறகு மெல்ல ஒப்புக் கொள்கிறான். இருவருக்கும் தகாத உறவு இருந்திருக்கிறது. அவ்வளவுதான்,

மணப்பெண் துயரத்தின் உச்சிக்கே சென்று அழுது கொண்டே ஓடுகிறாள்.  தற்கொலை செய்யும் உத்சேத்துடன் மொட்டை மாடிக்கு சென்று எட்டிப் பார்க்கும் போது அங்கு ஒரு பணியாள் அவளைத் தடுத்து நிறுத்தி ஆறுதல் சொல்கிறான். 'அந்த மாதிரி கபோதிகளை நீயும் பழி வாங்கு. ஏன் சாவைப் பற்றி யோசிக்கிறாய்?' என்று உபதேசிக்கிறான். அவனுடைய ஆறுதலால் மனம் மாறுகிற அவள் அவனை கட்டியணைத்து முத்தமிடுகிறாள்.

இவளைத்  தேடிக் கொண்டே பின்னால் வரும் மணமகன் இதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். பிறகென்ன ஒரே கலாட்டாதான். 'இவனை திருமணமே செய்து கொள்ள மாட்டேன்' என்று மணமகள் ரகளை செய்கிறாள். உறவினர்கள் அதிர்ச்சியுடன் பார்க்க மண்டபத்தில் உள்ள பொருட்கள் உடைபடுகின்றன. இருவருமெ ஒருவரையொருவர் பரஸ்பரம் வெறுக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் மணமகன் கேவி கேவி அழுவதைப் பார்த்து மணமகள் மெல்ல மனம் மாறுகிறாள்.

இருவரும் மறுபடியும் வெட்கம், சூடு, சொரணை ஏதுமில்லாமல் ஆவேசமாக தழுவிக் கொள்ள ஆரம்பிக்க உறவினர் கூட்டம் சங்கடத்தில் கலைகிறது. தற்காலிக கோபம் கரைந்தவுடன் பழைய அன்பு ஊற்றெடுக்கிறது என்பது இதன் நீதி.

***

இந்த ஆறு பகுதிகளையுமே காட்சிகளாக பார்ப்பதுதான் உண்மையான கலாட்டா. இதன் உள்ளடக்கம் சற்று நெருடலாகவோ நம் மரபிற்கு விரோதமாகவோ கூட தோன்றலாம். ஆனால் படம் பார்க்கும் போது நீங்கள் அவ்வாறான நெருடல் எதையும் உணர மாட்டீர்கள். மாறாக சம்பவங்களின் தரப்பில் சாய்ந்து விடுவீர்கள். அதுதான் ப்ளாக் ஹியூமரின் வெற்றி.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: