Tuesday, May 26, 2020

Sully (2016) - ‘சல்லி’யின் சாகசம்





உங்கள் பணியிடத்தில் ஓர் அசாதாரணமான சிக்கல் நேர்கிறது என வைத்துக் கொள்வோம். அதை நீக்குவதற்காக பதட்டத்துடன் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறீர்கள். வெற்றிகரமாக அதை முடித்து விட்டு அந்தரங்கமாக அதன் திருப்தியை கர்வமாக உணர்கிறீர்கள். இதற்காக உங்கள் பாஸிடமிருந்து பாராட்டும் அங்கீகாரமும் கிடைப்பதற்குப் பதிலாக வேறொரு காரணத்திற்காக திட்டும் தண்டனையும் கிடைக்கிறது என்றால் என்ன செய்வீர்கள்?

ஒவ்வொரு பணியாளரும் எதிர்கொள்ள நேரும் பரிதாபகரமான சூழல் இது. விமான பைலட்டாக  42 ஆண்டுகளை ஒரு சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக கழித்த சாலி, தனது பணியின் இறுதிக்காலத்தில் இப்படியொரு சூழலை எதிர்கொள்ள நேர்கிறது. அது என்ன சிக்கல்? என்னவாகிறது அவருக்கு?

**
நியூயார்க் நகரத்திலுள்ள லாகார்டியா விமானநிலையத்திலிருந்து தனது சவாரியை துவக்குகிறார் சல்லி. விமானம் டேக் ஆஃப் ஆகிய மூன்றாவது நிமிடத்தில் பறவைகள் சரமாரியாக வந்து மோதுவதால் இஞ்சின்கள் பழுதாகின்றன. பதட்டமான சூழல். விமானத்தில் 155 பயணிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவொரு ஆபத்தும் வரக்கூடாது.

சாலி தன்னுடைய நீண்ட அனுபவத்தின் மூலம் உதவியாளரோடு அந்தச் சிக்கலை நிதானமாக கையாள்கிறார். கட்டுப்பாட்டு மையத்தை அழைத்து நிலைமையின் விபரீதத்தை சொல்கிறார். ‘ஒன்று கிளம்பிய இடத்திற்கு திரும்பவும் அல்லது அருகிலிருக்கும் ஒரு விமானநிலையத்தில் தரையிறக்கவும்’ என்று அங்கிருந்து பதில் வருகிறது.

சல்லியின் அனுபவ மூளை அவசரம் அவசரமாக சில கணக்குகளைப் போடுகிறது. ம்.ஹூம்.. அவர்கள் குறிப்பிடும் இடத்திற்குச் செல்ல நேரமில்லை. சட்டென்று முடிவெடுத்து விமானத்தை ‘ஹட்ஸன்’ ஆற்றுக்குள் இறக்குகிறார். கட்டுப்பாட்டு மையத்தில் இந்த தகவலை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைகிறார்கள். ஏனெனில் இதுவரை நீரில் தரையிறக்கப்பட்ட எந்தவொரு விமானமும் பிழைத்ததில்லை.

ஆனால் சாலி அதைச் சாதிக்கிறார். மிக மிக நிதானமாக வேகத்தைக் குறைத்து ஆற்றின் மீது இறக்குகிறார். பதட்டப்படும் பயணிகளை தைரியப்படுத்தி வெளியே பத்திரமாக போகும் குறிப்புகளை சொல்கிறார். அருகில் செல்லும் சிறிய கப்பல் ஒன்று இவர்களைின் தவிப்பை பார்த்து விட்டு உதவிக்காக வருகிறது.

விமானம் ஆற்றில் இறங்கிய செய்தி கட்டுப்பாட்டு அறைக்குள் தீப்பற்றியது போல சூழலை ஏற்படுத்துகிறது. அங்கிருந்து தகவல்கள் பறக்கின்றன. மேலும் சில கப்பல்கள் வருகின்றன. விமானத்தில் இருக்கும் அனைவரும் வெளியேறி விட்டார்களா என்பதை உறுதி செய்த பிறகே சாலி விமானத்திலிருந்து வெளியே வருகிறார். ஒரு காப்டனின் அடிப்படையான தியாகவுணர்வு இது.

**

சாலியை ஊரே கதாநாயகனாக கொண்டாடுகிறது. ஊடகங்கள் பரபரப்பாக இந்த நிகழ்வை ஒளிபரப்புகின்றன. உயிர் தப்பிய பயணிகள் தங்களின் அதிர்ஷ்டத்தை நம்ப முடியாமல் அழுது கதறுகிறார்கள்.

அப்போது கூட சாலிக்கு 155 நபர்களும் உயிர்தப்பி விட்டார்களா என்கிற எண்ணமே ஓடிக் கொண்டிருக்கிறது. ‘அதை உறுதிப்படுத்துங்கள்’ என்கிறார். “நீ செஞ்சது பெரிய விஷயம். போய் ரெஸ்ட் எடு தல.. இனி நாங்க பார்த்துக்கறோம்’ என்கிறார்கள் சக ஊழியர்கள்.

இப்படி ஒரு புறம் மக்களும் ஊடகங்களும் சாலியை ‘ஹீரோவாக’ கொண்டாடிக் கொண்டிருக்கும் போது மறுபறம் அவருக்கொரு பெரிய ஆப்பு காத்துக் கொண்டிருக்கிறது.

ஆம். தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு அவர் மீது விசாரணையை துவக்குகிறது. ‘அருகிலிருக்கும் விமான நிலையத்தில் போய் ஈசியா தரையிறங்கியிருக்கலாம். உன்னை எவன்யா போய் கப்பல் மாதிரி தண்ணில இறக்கச் சொன்னது?” என்று கடுப்பேற்றுகிறார்கள். சல்லியின் இந்த அபாரமான சாசத்தை 'சல்லி'த்தனமானது என்கிறார்கள்.
**

விமானத்தை ஒருமாதிரியாக பத்திரமாக தரையிறக்கி விட்டாலும் சாலிக்கு அது சார்ந்த உளவியல் பாதிப்பு இருக்கிறது. விமானம் கட்டிடத்தில் மோதிச் சிதறும் காட்சி மனதிற்குள் வந்து தூக்கத்திலிருந்து பதறி எழுந்து கொள்கிறார். விசாரணை முடியும் வரை வேறு நகரத்திலிருக்கும் தனது அவர் வீட்டிற்கும் செல்ல முடியவில்லை. மனைவி வேறு போன் செய்து “நீங்க ஹீரோதான். சரி. ஆனா பாவி மனுஷா.. பால் கார்டு வாங்க கூட காசில்லாம நான் அவஸ்தைப்படறத யார் கிட்ட சொல்றது?” என்கிற மாதிரி புலம்புகிறார்.

சாலிக்கு இந்த அவஸ்தைகளின் நடுவே விசாரணை தொல்லை வேறு. ‘கணினி உதவியுடன் அந்த சிக்கலான சூழலை செயற்கையாக உருவாக்கி நாங்கள் பல மாதிரியாக சோதனை செய்து பார்த்து விட்டோம். எப்படியும் ஒரு இன்ஜின் பழுதில்லாமல் இருந்திருக்கும். நீங்கள் பக்கத்திலிருக்கும் விமானநிலையத்தில் பத்திரமாக தரையிறக்கியிருக்கலாம்” என்று சாதிக்கிறார்கள்.

“என்ன சோதனையாக இருந்தாலும் நீங்கள் செய்தது செயற்கையானது. அந்தச் சிக்கலான சமயத்தில், 155 பயணிகளின் உயிர் மதிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டு மனிதனாக சிந்தித்திருக்கிறேன். இயந்திரங்களால் அது முடியாது” என்று வாதிடுகிறார் சாலி. இறுதி ரிப்போர்ட்டின் படி சாலி செய்தது சரி என்பது நிரூபணம் ஆகிறது.

**

Chesley Sullenberger  என்கிற விமான பைலட்டுக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சாலியாக டாம் ஹாங்ஸ் அட்டகாசப்படுத்தியுள்ளார். மிக மிக இயல்பான நடிப்பு. விமானம் ஆற்றில் இறங்கும் காட்சிகளும் பயணிகள் மீட்கப்படும் காட்சிகளும் அவற்றின் பதட்டத்தை நாம் உணருமாறு அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தை இயக்கியவர் 86 வயது இளைஞர் கிளின்ட் ஈஸ்ட்வுட்.

இயந்திரங்கள் எத்தனை மேம்படுத்தப்பட்டாலும் அவைகளால் மனித உணர்வுகளுக்கு இணையாக சிந்திக்க முடியாது என்கிற ஆதாரமான கருத்தை அழுத்தமாக பதிவு செய்கிறது இந்த திரைப்படம்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

1 comment:

சிகரம் பாரதி said...

கண நேரத்து நிகழ்வுகளை எந்தவொரு செயற்கையும் ஈடுகட்ட முடியாது. படத்தை பார்க்க வேண்டும் என்று ஆவல். நேரம் அமைந்தால் பார்க்கிறேன் . ஆனால் தங்கள் எழுத்தே சிலிர்க்க வைக்கிறது. அருமை.

வலை ஓலை வலைத்திரட்டியில் தங்கள் பதிவு தானாகவே இணைக்கப்பட்டுள்ளது.

நமது வலைத்திரட்டி: வலை ஓலை