Sunday, May 10, 2020

Remember (2015) - 'கஜினி' தாத்தா
இதுவொரு வித்தியாசமான பழிவாங்கல் கதை. பழிவாங்கப் புறப்படுபவருக்கு ஏறத்தாழ எண்பது வயது. போதாதற்கு அவருக்கு Dementia எனும் மறதி நோய் வேறு உள்ளது. தள்ளாடும் வயதில் உள்ள ஒரு கிழவர் எவ்வாறு தனது எதிரியை தேடிச் சென்று கொல்ல முடியும்? அதிலும் இதன் கிளைமாக்ஸ் இருக்கிறதே.. அடடா!


நியூயார்க் நகரம். Zev Guttman எனும் முதியவர் உறக்கத்திலிருந்து விழிக்கும் போது தன் மனைவியின் பெயரைச் சொல்லி தேடுகிறார். "உங்கள் மனைவி இறந்து ஒரு வாரமாகி விட்டது. நீங்கள் மருத்துவமனையில் இருக்கிறீர்கள்' என்கிறாள் நர்ஸ். அங்கேயிருக்கும் இன்னொரு கிழவர் இவரிடம் ரகசியமாக சில உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். அதன்படி இந்தக் கிழவர் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையில் இருந்து கிளம்புகிறார்.

அவர் எங்கே போகிறார்? விஷயம் இதுதான்.

இந்த இரண்டு கிழவர்களும் யூதர்கள். இரண்டாம் உலகப் போரின் போது நாஜிகளால் யூதர்கள் பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்தப்பட்டு சாகடிக்கப்பட்டனர். இந்த இரண்டு கிழவர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சாகடித்த நாஜிக் குழுவைச் சார்ந்த நபர், தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு Rudy Kurlander என்கிற யூதப் பெயரில் வடக்கு அமெரிக்காவில் வாழ்கிறான். இதில் என்ன பிரச்சினையென்றால் அந்தப் பெயரில் நான்கு நபர்கள் இருக்கிறார்கள். அவர்களில் உண்மையான கொலைக்காரனைக் கண்டுபிடித்து இந்த மறதிக் கிழவர் கொல்ல வேண்டும். அதற்கான சகல ஏற்பாடுகளையும் அந்த இன்னொரு கிழவர் செய்திருக்கிறார். சக்கர நாற்காலியில் இருந்தபடி மருத்துவமனையிலிருந்து அவ்வப்போது குறிப்புகள் தருகிறார்.

மறதி நோய் கிழவருக்கு சமயங்களில் தாம் எதற்கு எங்கு கிளம்பியிருக்கிறோம் என்பதே மறந்து விடுகிறது. எனவே தன் கையில் அதற்கான குறிப்புகளை எழுதிக் கொள்கிறார். போகும் வழியில் ஒரு துப்பாக்கியை வாங்கிக் கொள்கிறார். வழியில்  நிறைய சிரமங்கள், இடையூறுகள். தள்ளாடி தள்ளாடி முதல் நபரை சந்தித்து துப்பாக்கியை காட்டி மிரட்டும் போது அவர் ஜெர்மானியர்தான் என்றாலும் நாஜிக் குழுவில் இருந்தவர் அல்ல என்று தெரிகிறது. சரி என்று அவரை விட்டு விட்டு அடுத்தவரை தேடிக் கண்டுபிடித்தால் அவர் பாதிக்கப்பட்ட உண்மையான யூதர் என தெரிய வருகிறது. அவரைக் கட்டிப்பிடித்து கிழவர் அழுகிறார்.

மூன்றாமவரை தேடிச் சென்று அவர் வீட்டு முன் நெடுநேரம் காத்திருந்த பின்பு ஒருவன் வருகிறான். "ஆம். அவர் எனது தந்தைதான். ஆனால் இறந்து விட்டார். சரி. வாருங்களேன். மது அருந்துவோம்" என அழைக்கிறான். உரையாடலின் போது அவன் யூதர்களை பயங்கரமாக வெறுக்கிறவன் என்று தெரியவருகிறது. இந்தக் கிழவரை 'யூதர்' என்று கண்டுபிடித்து விடும் அவன் "என்ன தைரியம் இருந்தால் என் வீட்டுக்குள்ளேயே பொய் சொல்லி நுழைவாய்?" என்று ஆத்திரத்துடன் கிழவரை தாக்குகிறான். தனது நாயை அவர் மீது ஏவி விடுகிறான். வேறு வழியில்லாத சூழலில் நாயையும் அவனையும் கிழவர் கொல்ல வேண்டியிருக்கிறது.

ஆக.. மீதமிருப்பவர் ஒருவர் மட்டுமே.


***

கடைசியில் நான்காவது நபரையும் கண்டுபிடித்து அவருடன் உரையாடுகிறார். "நீ எப்படியும் என்னைக் கண்டுபிடித்து வருவாய் என தெரியும்" என்கிறார் அந்தக் கிழவர். அவர் முன் துப்பாக்கியை நீட்டிய படி "உன் குடும்பத்தின் முன் நீ ஒழுங்காக உண்மையை ஒப்புக் கொள். உன் உண்மையான பெயர் வேறு. நீ நாஜிப் படையில் இருந்தவன். அங்கு பல யூதர்களை அநியாயமாக கொன்றிருக்கிறாய். அதனால் பாதிக்கப்பட்டவர்களில் என் குடும்பமும் உண்டு. சரிதானே, உண்மையைச் சொல்" என்கிறார். அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகிறார்கள்.

அந்தக் கிழவர் அச்சமும் குற்றவுணர்வுமாக "ஆம். சரிதான். ஆனால் நீ தேடி வந்த அந்தப் பெயர் உன்னுடையதுதானே நண்பா.. நாம் இருவரும்தானே சேர்ந்து பல யூதர்களைக் கொன்றோம். பிறகு பிரிந்து விட்டோமே, மறந்து விட்டாயா? என்றபடி துப்பாக்கியை தன்மீது படும்படி இயக்கி செத்துப் போகிறார். தன் குடும்பத்தினர் முன்னர் தாம் ஒரு முன்னாள் நாஜி என்கிற அடையாளம் வெளிப்பட்டு விட்டதே என்கிற குற்றவுணர்ச்சி அவருக்கு.

அப்போதுதான் மறதிக் கிழவருக்கு நினைவே வருகிறது. அவர் கொலைவெறியுடன் யாரைக் கொல்வதற்காக தேடிக் கொண்டிருந்தாரோ, அந்த நாஜிக் குழு நபர் வேறு யாருமல்ல, அவரேதான். இந்த உண்மை நினைவிற்கு வந்த அதிர்ச்சி காரணமாக தன்னையே சுட்டுக் கொள்கிறார்

இதன் பின்னணி என்ன?

மருத்துவமனையில் இருந்த இன்னொரு கிழவர்தான் உண்மையில் பாதிக்கப்பட்ட யூதர்.  இவரது மறதி நோயைப் பயன்படுத்திக் கொண்டு இவரை ஒரு யூதராக நம்ப வைத்து மட்டுமல்லாமல் இவரை ஓர் ஆயுதமாகவும் பயன்படுத்திய கொண்ட விஷயம் தெரிய வருகிறது.

***

மறதிக் கிழவராக Christopher Plummer அற்புதமாக  நடித்திருக்கிறார். நடுநடுங்கும் கரங்களுடன் தள்ளாடும் உடலுடனும் அவர் வேட்டைக்கு கிளம்பும் போது நமக்கே அவநம்பிக்கையாகவும் அவர் மீது பரிதாபமாகவும் இருக்கிறது. இதனாலேயே  படம் முழுவதும் விறுவிறுப்பாக நகர்கிறது.

பொதுவாகவே யூதர்கள் அதிபுத்திசாலிகள் என்பதை இந்தப் படமும் உறுதிப்படுத்துகிறது. இல்லையென்றால் நாஜியாக இருந்த ஒரு ஜெர்மானியரை யூதர் என்று நம்பவைத்து தன்னுடைய பழிவாங்கலுக்கு பயன்படுத்திக் கொள்ளும் அந்த உண்மையான யூதக் கிழவரின் மாஸ்டர் பிளான் அசத்துகிறது.

ஹிட்லரின் காலத்தில் யூதர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் தேடி தேடிக் கொல்லப்பட்டு உலகெங்கும் ஓடி மறைந்த துயர வரலாறு பல திரைப்படங்களின் மூலம் நமக்கு நினைவூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆனால் இதில் வரும் கிளைமாக்ஸ் திருப்பம் போலவே, அந்த  கொடிய வன்முறையை சந்தித்த யூதர்களே, இப்போது இஸ்ரேலின் எல்லைப்பகுதிகளில் பாலஸ்தீனியர்களின் மீது வன்முறையைச் செலுத்துவது வேதனையான சமகால வரலாறு.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)suresh kannan

No comments: