Wednesday, May 27, 2020

Chef (2014) - ‘கையேந்தி பவன்'





உலகத்திலுள்ள தொழில்களுள் மிகச் சிறப்பானதொன்று சமையல். இது ஒரு கலையும் கூட. மனிதனின் ஆதாரமான உணர்ச்சிகளுள் ஒன்றான பசியைப் போக்குவது. 'ஒருவரின் வயிற்றின் வழியாக அவரது இதயத்திற்கு செல்ல முடியும்' என்கிறது ஒரு பழமொழி. தம்முடைய தொழிலில் அர்ப்பணிப்புடனும்  ஆத்மார்த்தமான ஆர்வத்துடனும் ஈடுபடும் ஒரு சமையல் கலைஞனைப் பற்றிய அமெரிக்கத் திரைப்படம் இது. உணர்வுபூர்வமான அதே சமயத்தில் ஜாலியான படமும் கூட.


***

கலிபோர்னியா நகரத்திலுள்ள ஒரு பிரபல உணவகத்தின் தலைமைச் சமையற்காரர் கார்ல் கேஸ்பர். அன்றைய நாள் அவருக்கு பரபரப்பாக விடிகிறது. ஆம். உணவுகளைப் பற்றி எழுதும் பிரபல விமர்சகர் ராம்சே மிச்சல்  என்பவர் கார்ல் பணிபுரியும் உணவகத்திற்கு அன்று மாலை வரப்போகிறார். அவரது எழுத்துக்கு பலநூறு வாசகர்கள் உண்டு. எனவே தனது சமையல் திறனின் மூலம் விமர்சகரை எப்படியாவது கவர்ந்து விட வேண்டும் என்று கார்லுக்கு பயங்கர ஆர்வம் தோன்றுகிறது. தனது சகாக்களை அதற்கு தயார்ப்படுத்துகிறார். வித்தியாசமான உணவு வகைகளின் மூலம் ராம்சேவை அசத்தி விடவேண்டும் என்பதற்காக ஏற்பாடுகள் பரபரப்பாக நடக்கின்றன.

ஆனால் உணவகத்தின் உரிமையாளர் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். "தோ.. பாருப்பா.. நீ திறமையான செஃப்தான். ஒத்துக்கறேன். ஆனா உன் இஷ்டத்திற்கு மெனுவை மாத்தாதே. இது பிஸ்னஸ். இவங்களுக்கெல்லாம் நான்தான் சம்பளம் தர்றேன்" . கடுப்பாகும் கார்ல், வேறு வழியில்லாமல் வழக்கமான மெனுவை ஆனால் சிறப்பாக தயார் செய்கிறார்.


எல்லாம் முடிந்து விமர்சகரின் அபிப்ராயத்தை அவரது இணைய தளத்தில் படிக்கும் கார்லுக்கு டென்ஷன் ஏறுகிறது. கார்லின் சமையலைப் பற்றி கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறார் ராம்சே. அது மட்டுமல்ல. "வாடிக்கையாளர் திருப்பியனுப்பும் உணவையெல்லாம் கார்ல் தின்று விடுகிறார் போல" என்று  கார்லின் குண்டான உடம்பைப் பற்றியும் தனிப்பட்ட வகையில் விமர்சித்திருக்கிறார்.

***


இந்த விஷயம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவுகிறது. கார்லை  பலர் திட்டுகிறார்கள். சிலர் ஆதரவாக எழுதுகிறார்கள். 'டிவிட்டர்' என்கிற தளத்தில் அவரைப் பற்றிய நிறைய ஆபாச விமர்சனங்கள் இருப்பதை கார்லின் நண்பர்கள் சொல்கிறார்கள். இணையம் பற்றி கார்லுக்கு அதிகம் தெரியாது. எனவே தனது பத்து வயது மகனின் உதவியின் மூலம் டிவிட்டரில் உறுப்பினராகி தன்னைப் பற்றிய வசைகளை வாசிக்கிறார். மெல்ல மெல்ல அவருக்குள் சூடேறுகிறது.

தனிப்பட்ட முறையில் அனுப்புவதாக நினைத்துக் கொண்டு அவர்  விமர்சகருக்கு அனுப்பும் ஒரு செய்தி பொதுவில் சென்று சண்டையாக மாறுகிறது. 'இந்த முறை வந்து சாப்பிட்டு எழுது பார்க்கலாம்' என்று டிவிட்டரில் விமர்சகரை சவாலுக்கு அழைக்கிறார். மறுபடியும் பரபரப்பான ஏற்பாடுகள். தம்முடைய திறமையையெல்லாம் கொட்டி உணவு வகைகளை திட்டமிடுகிறார். ஆனால் மறுபடியும் உணவக உரிமையாளரிடமிருந்து முட்டுக்கட்டை. 'இங்க வியாபாரம்தான் முக்கியம். உன்னோட சவால், கலையார்வம் இதையெல்லாம் தூக்கி வெளியே போடு' என்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் முற்ற கார்ல் தனது பணியை தூக்கியெறிந்து விட்டு போகிறார்.

சவாலை எதிர்கொண்டு அன்று மாலை வரும் விமர்சகர், அதே வழக்கமான உணவு இருப்பதைப் பார்த்து விட்டு மறுபடியும் வெறுப்பேற்றுவது போல் ஒரு குறிப்பை இணையத்தில் எழுத, இதைக் கேள்விப்படும் கார்ல் உணவகத்திற்கு நேராக வந்து விமர்சகரை சரமாரியாக திட்டுகிறார். "நாங்க எவ்ள கஷ்டப்பட்டு இதையெல்லாம் தயார் செய்யறோம்னு உனக்குத் தெரியுமா?". அங்கிருப்பவர்கள் இதை வீடியோவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட கார்ல் பலராலும் நகைச்சுவையாக பார்க்கப்படுகிறார். அவரது புகழ் மங்கத் துவங்குகிறது.


***

அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நிற்கும் கார்லை அவரது முன்னாள் மனைவி, அவரது பிறந்த ஊரான மியாமி-க்கு அழைக்கிறார். இவர்களது மகனுடன் செல்வதென ஏற்பாடு. மியாமி செல்லும் கார்லுக்கு புதிய வெளிச்சம் கிடைக்கிறது. அங்கு கிடைக்கும் உதவியின் மூலம் ஒரு பழைய டிரக்கை புதிதாக்குகிறார். ஊர் ஊராக நகர்ந்து செல்லும் 'கையேந்தி பவன்'  ஒன்று தொடங்குவது என திட்டம். மகனும் இவருக்கு உதவுகிறான்.  கார்லின் பழைய சகா ஒருவனும் வந்து இணைகிறான்.

தன்னை தடைசெய்வதற்கு ஆள் யாரும் இல்லாமல் தன் சுயவிருப்பத்திற்கு ஏற்ப க்யூபாவின் பாரம்பரியமான உணவுகளை தயார் செய்கிறார். கூட்டம் வந்து அள்ளிக் கொள்கிறது. கார்லின் மகன் இதை புகைப்படமாகவும் வீடியோவாகவும் இணையத்தில் போட இவரது புகழ் பரவி அடுத்த ஊருக்கு இவர்கள் செல்லும் முன்னரே அங்கு கூட்டம் காத்துக் கிடக்கிறது. 'கற்றோர்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு' என்பது போல கார்ல் செல்லுமிடமெல்லாம் இவரது உணவிற்கு வரவேற்பு கிடைக்கிறது.

கார்லைப் பற்றி மட்டமாக எழுதிய விமர்சகரே இவரது உணவைத் தேடி வந்து சாப்பிட்டு பாராட்டுகிறார். "இப்பதான் மச்சி சூப்பர். உன் விருப்பத்திற்கு செஞ்சா எவ்ள நல்லா வருது பார்த்தியா. சரி. நான் பணம் போடறேன். ஹோட்டல் ஆரம்பிக்கலாமா?'' என்கிறார். புது ஹோட்டலில் தன் முன்னாள் மனைவியுடன் கார்ல் மீண்டும் இணையும் ஒரு கொண்டாட்டத்துடன் படம் நிறைகிறது.

***

கார்ல் ஆக அட்டகாசமாக நடித்து படத்தையும் இயக்கியிருப்பவர் Jon Favreau. இவரது மகனாக நடித்திருக்கும் எம்ஜே ஆந்தனியின் நடிப்பும் அபாரம். உணவு தயாராகும் காட்சிகள், நம் நாக்கில் நீர் ஊற வைக்கும் வகையில் அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கின்றன. 'சற்று தீய்ந்து போகும் உணவை மற்றவருக்கு ஏன் தரக்கூடாது' என கேட்கும் மகனிடம் ஒரு சமையற்காரராக அதன் பொறுப்புணர்வைப் பற்றி கார்ல் விளக்கும் இடம் சிறப்பானது.


உணவு என்பது அதன் சேர்மானங்களாலும் திறமைகளாலும் அல்ல, சமைப்பவரின் ஆன்மாவும் இணையும் போதுதான் சிறப்பானதாகிறது என்கிற கருத்தை அழுத்தமாகச் சொல்லும் திரைப்படம் இது.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

1 comment:

Santhosh said...

Excellent movie.. Excellent review sir!!! Don't get option to comment your post in FB and appreciate your writing.. So commenting here..